இருபத்தியோராம் நூற்றாண்டின் அழகி.!

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: July 19, 2015
பார்வையிட்டோர்: 22,342 
 

தஞ்சாவூர் ஜங்ஷனிலிருந்து மஞ்சத்திடல் செல்ல வேண்டும். அடிக்கடி செல்வது வழக்கம் வேலையொன்றுமில்லை பெரியப்பா வீடு அங்கு. எக்ஸ்பிரஸ் நிக்காது. பெரும்பாலும் நான் பேசஞ்சரில் செல்வதே வழக்கம். நடைபாதை வியாபாரிகளுக்கு டிக்கட்டே தேவையில்லை அடுத்தடுத்த ஸ்டாப்பில் ஏறி இறங்கி வியாபாரம் செய்வார்கள். கீரை விற்கும் ஆயா ஏறி இறங்கும்போதெல்லாம் டல்ஹௌசிக்கு நன்றியை சொல்வேன்.

படியிலமர்ந்து,படியில் நின்று,படியில் தொங்கி வரும் எவரையும் நான் கண்டு கொள்வதில்லை. இன்று விபத்தென்றால் அன்றாடம் பயணிக்கும் எல்லோர்க்கும் தெரிந்திருக்கும். இருந்தும் மறுநாள் தொங்கும் அறிவற்றவர்களை நினைத்து கவலைப் பட போவதில்லை. ரசனையற்ற மனிதர் என நினைக்கலாம் உண்மைதான் ‘மரணத்தை எனக்கு ரசிக்கத் தெரியாது’.

பெட்டி காலியாக இருந்தாலும் தினம் நின்றே வந்த பழக்கத்தில் உட்கார மறந்தவரை பார்த்து சிரித்திருக்கிறேன்.

நான்காவது பெட்டியில் எடுத்த பிச்சையை ஒன்பதாவது பெட்டியில் வெறுங்கை நீட்டி நிற்கும் சிறுவனுக்கு பாதியை கொடுத்து நகர்ந்த முதியவரை ரசித்திருக்கிறேன்.

சார்..வெள்ரிக்கா வாங்கி சாப்டுங்க குளிர்ச்சின்னு விற்கும் அந்த இளைஞனை திருவெறும்பூர் ஜங்கஷனில் விழி பிதுங்கிய போதையில் பார்த்து கடந்திருக்கிறேன்.

விற்காத பூக்களை “ஜங்க்ஷன் மாரியம்மனுக்கு”போட்டுவிட்டு வீடு திரும்பும் பாட்டியை பார்த்து கலங்கியிருக்கிறேன்.

ஒவ்வொரு பெட்டியிலும் வெவ்வேறு பவுடர் வாடை நுகர்ந்து முகம் சுழித்திருக்கிறேன்.

இரவுப் பயணங்களில் தின்பண்டம் திருடுபவர்களை கண்டித்திருக்கிறேன்.

இந்த ரயில் எனை ரசிக்கிறது. ரயிலை நான் ரசிக்கிறேன் வேறெந்த படி தொங்கும் ரசனையும் எனக்கு வேண்டாம்.

திருவெறும்பூர் ஜன்ஷனில் சின்னதாய் க்ரீச் சத்தத்தோடு நின்றதுபோல் மெல்ல நகர்கிறது ரயில்… இறங்குமளவுக்கு ஏறவும் செய்தனர். மெல்ல மெல்ல நகர்ந்து மிதமாய் சென்றது. பல்வேறு வண்ண தலை மற்றும் உடைகளுக்கிடையில் தனித்து தெரியும் அந்த யுவதிதான் எல்லோரின் பார்வையையும் பெற்றுக்கொண்டிருந்தாள். விரித்த கேசம், ஜீன்ஸ், வெந்தய கலரில் டாப், துப்பட்டா போடவில்லை.. இளையராஜாவையோ, ஏ.ஆர்.ரகுமானையோ காதில் திணித்து காதலித்துக்கொண்டிருந்தாள்.அவளின் அடர்த்தியான கூந்தல் ஆட்டம் போட்டுக்கொண்டிருந்தன. அவள் கேட்கும் பாடலுக்கா இல்லை மத்திய தமிழகத்தின் மென் சாரல் காற்றுக்கா எனத் தெரியவில்லை. எதுவாயிருந்தால் என்ன அழகாய் இருக்கிறது.

கேசத்தை முறுக்கி கொண்டையிட்டு கீழ் தாவாங்கட்டையை வலது தோளில் வைத்து திரும்பினால் முள்ளும் மலரும் ஷோபாவை பார்த்ததுபோல் இருக்கும். எனக்கு ஷோபா இந்த பெட்டிக்குள் அவள் யார் யாருக்கு எவளோ?

எங்கே இறங்குவாள் எனத் தெரியாது.? பெயர் தெரியாது.? அவளுக்கு திருமணம் ஆனதா தெரியாது.? யாரையாவது காதலிக்கிறாளா தெரியாது.? நான் ஏன் அவளைப் பற்றியே யோசிக்கிறேன் எதுவுமே தெரியாது.?

மஞ்சத்திடலில் இறங்கிவிட்டேன் – என்

நெஞ்சத் திடலில் அமர்ந்துவிட்டாள்.

எதிர்பாராது நான் அவளிடம் பேசி அவளும் என்னிடம் பேசினால் எனக்கு திருமணம் ஆனதை நான் சொல்வதாய் இல்லை. இனி காரணங்களற்ற பயணங்கள் அமையலாம். அவளுக்காகவே காரணங்கள் கண்டுபிடிக்கப்படலாம். அவள் தினம் வருவாளா என்பது தெரியாது.

மஞ்சத்திடலிலிருந்து தஞ்சை பயணம்….!

சன்னமாய் நாசி நுழைகிறது இதற்கு முன்பு நுகர்ந்த வாடை.. பல பவுடர்களின் புழுக்கங்கள் கடந்து வரும் அவ்வாசனையை இதற்கு முன் ரசித்து நுகர்ந்திருக்கிறேன்.எங்கிருந்து என அறிய முற்ப்பட்டதில்லை.

இளம் பச்சை நிற புடவையில் பின்னிய முடியில் எண்ணி முப்பது மல்லியை கோர்த்து தொங்கவிட்டிருக்கிறாள். அவளிடத்திலிருந்துதான் அவ்வாசனை திருவெறும்பூர் ஜங்கஷனில் நான் இறங்கத் தேவையில்லை. யாரென்ற பார்க்க எத்தனிப்பு. திரும்பியேவிட்டாள் அட ஷோபா நான் வைத்த பெயர்.

பலமுறை அவளை பார்த்துவிட்டேன். காத்திருப்புக் கட்டையில் தனியாய்த்தான் அமர்ந்திருப்பாள். காதில் சொருகியிருப்பதை வைத்து பாட்டு கேட்கிறாலேயொழிய யாரிடமும் பேசியதாய் தோன்றவில்லை, ரயில் பெட்டியின் காதலர்கள் சூழ் இருக்கைகளில் அவள் தனித்தே.!

தஞ்சாவூர் TO திருச்சி ஜன்கஷனுக்குள் அழகி போட்டி வைத்தால் அவளே முதலிடம். உலக அளவிலும் கூட…. நான் நடுவராய் இருந்தால்..

எப்படியாவது அவளிடத்தில் பேச ஆசை என்ன பேசவேண்டும் என தீர்மானித்திருக்கவில்லை. கட்டாயம் பேசவேண்டும் என முடிவெடுத்துவிட்டேன்.

இன்று திருவெறும்பூரில் இறங்குவதை ரயிலேறும் முன்பே தீர்மானித்திருக்கிறேன்.

ஷோபா அவள் அப்பாவோடு வந்திருக்கிறாள் இருவரும் எதுவும் பேசவில்லை ஆனால் அருகருகில் அடிக்கடி பார்த்து சிரித்துக்கொள்கிறார்கள். அவர் அவளின் அப்பா என்பது என் யூகமே … திருவெறும்பூரில் இருவரும் இறங்கி மருதன் தேநீர்க் கடை சந்தில் நுழைந்து மூன்றாவது மாடியிலிருக்கும் ‘தனம்’ லாட்ஜில் நின்றனர். புரிந்துவிட்டது ஷோபா பெரும் பணக்காரி அவள் பெயர் தனம்: லாட்ஜின் உரிமையாளர் அவள் அப்பா… பிசினஸ் சரியாய் போகுதா என கவனிக்க வந்திருப்பார். இதுவும் என் யூகமே..!!

நாளை கேட்கணும் நேற்று உன்னோடு வந்தது யார்? என்று.

ம் க்கும் இன்று ஒரு இளைஞனுடன் அமர்ந்திருக்கிறாள். அவளின் அண்ணனாய் இருக்கும். யூகத்தின் அடிப்படையில் உறவுகளை உருவாக்கி தேற்றிக்கொள்கிறேன். இன்றும் அதே லாட்ஜில் நுழைந்தார்கள். உறுத்துகிறது எனக்கு ஷோபா நல்லவளாய் இருக்க மனந் துடிக்கிறது. ச்சீ .. என் மனைவியை மறந்து இப்படி யோசிக்க எப்படி என்னால் மட்டும் முடிகிறதோ.?

அதொரு மென் பனி நாள் கடைசி ரயில் திருச்சிக்கு கூட்டம் அவ்வளவாய் இல்லை. இப்போது நான் பொன்மலை போவதாய்தான் இருக்கிறேன் அங்கொரு முக்கிய வேலை. ஜன்னல் கம்பிகளில் பனி படர்ந்து சில்லிட்டிருக்கிறது. கழிவறைக் கதவின் வெளிப்புறத்தில் விரல்களால் பெயரெழுதி பார்க்கும் இளைஞனை பார்த்தபடி சாய்ந்து அமர்ந்தேன். திருவெறும்பூர் ஜங்கஷனின் காத்திருப்புக் கட்டையில் தனியாய் ஷோபா…!

திருவெறும்பூரில் இறங்கிவிட்டேன்…..!!

மருதன் தேநீர்க் கடை சந்துக்குள் நுழைந்து தனம் லாட்ஜில் நானும் ஷோபாவும் நின்றுகொண்டிருந்தோம்.

அவள் இன்று அவள் சித்தப்பாவோடு வந்திருந்தாள். வழக்கம்போல் தனம் லாட்ஜில் நின்றாள். ஒருவேளை அந்த லாட்ஜை அவள் அப்பாவும், அண்ணனும், சித்தப்பாவும் சேர்ந்து அவள் பெயரில் எழுதி வைக்கலாமென…!?

என் போல் யாரேனும் ஒருவன் யூகம் வகுத்துக் காத்திருக்கலாம்.

நான் இருபத்தியோராம் நூற்றாண்டின் அழகியோடு அறை எண் ஆபத்தில் நுழைந்தேன்.

Print Friendly, PDF & Email

1 thought on “இருபத்தியோராம் நூற்றாண்டின் அழகி.!

  1. சுஜாதாவின் வரிகளை வாசிப்பது போல் ரசித்தேன்.
    நன்றி !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *