இனிமே இப்படித்தான்…

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: January 9, 2016
பார்வையிட்டோர்: 22,045 
 

ஊர் பேரைச் சொன்னவுடன் எனக்குத் தலைசுற்றியது மாதிரி இருந்தது. இந்த மாதிரி ஒரு ஊரை நான் கேள்விப்பட்டதே இல்லை. எனக்கு போஸ்டிங் கொடுக்கும் போதுதான் தெரிந்தது அது திருவண்னாமலை பக்கத்தில் இருக்கிற ஒரு கிராமம். என்னைப் பற்றி சொல்லனும்னா என் பெயர் வசந்த் சென்னை சிட்டிசன், கட்டாயமான முறையில் பி.இ படிக்கவச்சாங்க. படிச்சிட்டு சும்மா இருந்தேன் அப்புறம் பேங்க் ஆபிஸர் எக்ஸாம் எழுதி பாஸ் ஆனேன். முதல் போஸ்டிங் தான் நான் மேற்சொன்ன கிராமம், அந்த ப்ரான்ச் ரூரல் ஏரியானு சொன்னாங்க.

சும்மா ஒரு நான்கு மணிநேரம் பயணத்தில் திருவண்ணாமலையை அடைந்தேன்.. அந்த கிராமத்தைப் பத்தி சொல்லனும்னா திருவண்ணாமலைக்கு அப்புறம் இங்க தான் பஸ் நிற்கும். அது பாங்க் இருக்கறதுனாலயா இல்ல போலீஸ் ஸ்டேஷன் இருக்கறதுனாலயானு தெரியலை. இங்க அதிகமாக கரும்பு தான் பயிர் செய்றாங்க. பஸ்ல இருந்து இறங்கி ப்ரான்ச்சுக்குள் நுழைந்தேன். ஒரே கூட்டமாக இருந்தது. எனக்கு ஏன் இவ்வளவு கூட்டம்னு புரியலை.அப்புறம் தான் தெரிந்தது அது(NREGS) ஏரி வேலை காசு வாங்க வந்த கூட்டம்னு. ஏன் வரிசையில நிற்கவைக்கலையினு நினைச்சேன். இப்ப நான் வந்து நாலு மாசம் ஆகுது. இன்னும் என்னால் வரிசையில நிற்க வைக்க முடியலை. அவங்க வாயையும் மூடமுடியலை. ப்ரான்ச் எப்பவும் சத்தமாகவே இருந்தது. அதற்கிடையில் பல தடவை போன் ரிங்க் அடிக்கறதே கேட்காது.

அப்படித்தான் இந்த தடவையும் எனக்குக் கேட்கலை மேனஜர்தான் போன் எடுத்து பேசினார். பேசப்பேச அவர் என்னைப் பார்த்தார். நான் தயாராக இருந்தேன்.போனை வைத்தவர் என்னிடம் உன் அசிஸ்டண்ட் மேனேஜர் என்ன பண்றாருனு கேட்கிறாங்க அப்படினு சொன்னார். நான் அமைதியாக இருந்தேன். நீங்க உடனே கடன் கட்டாதவங்க எல்லாருக்கும் போன் பண்ணுங்கனு சொன்னார். இன்னைக்கு ஈவினிங்க்குள்ள ரிப்போர்ட் பண்ணனும்னு சொல்லிட்டார்.நானும் சரினு சொன்னேன்.

நான் கடன் கட்டாதவங்க லிஸ்ட் எடுத்தேன்.லிஸ்ட் ரொம்ப பெருசா இருந்தது.சரினு எல்லாருக்கும் வரிசையா போன் பண்ணேன்.போன் எடுத்து பேசுனவங்களெல்லாம் நான் கடனைக்கட்டுங்கனு சொல்றதுக்கு முன்னாடியே கட்டிடுறேனு சொன்னாங்க. எனக்கு ஒன்னு புரிஞ்சது நம்ம தான் பாங்குக்கு புதுசு இந்த ஊர்க்காரங்க 33 வருஷமா பேங்க்க பார்த்துட்டுருக்காங்கனு.ஆனா ஒருத்தன் மட்டும் அவன் பெயர் சுந்தரம் அவன் வாங்குனானே இவன் வாங்குனானே அவன் கிட்டலாம் வசூல் பண்ணிட்டு எனக்கு போன் பண்ணுனு சொன்னான். நான் அவன் கிட்ட இதோ பாருங்க உங்க பெயர் சிபில்ல வந்திருக்கு நீங்க எதிர்காலத்துல எந்த பேங்க் போனாலும் உங்க வோட்டர் ஐ.டி நம்பர் அடிச்சா போதும் நீங்க இங்க லோன் வாங்கியிருக்கறது தெரியும்னு சொன்னேன். அதனால் உடனே கட்டப்பாருங்கனு சொல்லிட்டு போன வச்சிட்டேன். நான் பேசினது அவனுக்கு புரிஞ்சமாதிரி தெரியல.

நான் திருவண்ணாமலையில் ரூம் எடுத்து தங்கியிருந்தேன்.என் வீட்டுப் பக்கத்துல தான் பஸ்ஸ்டாண்டு. தினமும் 8.50க்கு பஸ் வரும் அதுலதான் போவேன் . ஒரு நாள் பஸ்ஸடாண்ட்ல அவளை முதல் தடவையா பார்த்தேன். அழகா நின்னுட்டு இருந்தா. நிக்கறதுல என்ன அழகுன்னு நீங்க கேக்கலாம்.ஆனா எனக்கு அழகா தெரிஞ்சது. நான் இங்க வந்து நடந்த முதல் நல்லகாரியம் இவளைப் பார்த்ததுதான். இவளை பார்த்துகிட்டே இரண்டு வருஷம் இங்க ஓட்டிடலாம்னு நினைச்சுக்கிட்டேன். பார்க்க கொஞ்சம் ஒல்லிதான்.அவள் கண்ணு அவள் சிரிக்கும்போது சேர்ந்து சிரிக்கிற மாதிரி இருக்கும்.

அன்னைக்கு பேங்க் போன நான் சுந்தரத்திற்கு மறுபடியும் போன் பண்ணேன் எப்ப கட்டுவிங்க உங்களால எங்க மேலதிகாரிங்க எங்களை கேள்வி கேட்கிறாங்கனு சொன்னேன். அதுக்கு அவன் காசு இருக்கும் போது வந்து கட்டுறேனு சொன்னான். நான் இன்னும் மூணு வாரத்துல கட்டலையினா உங்க வீடு ஏலத்துல வந்துரும்னு சொல்லிட்டு போனை கட் பண்ணிட்டேன்.

தினமும் அவளைப் பார்க்கறதுக்காகவே கரெக்ட் டைம் பஸ்ஸ்டாண்ட்டுக்கு வந்துருவேன். சிலநேரம் நான் அவளை பார்க்கும்போது அவள் என்னைப் பார்த்திடுவாள். ஆனா ரியாக்க்ஷன் இருக்காது, ஒருநாள் நான் லேட்டா கிளம்பிட்டேன். பஸ்சை விட்டுட்டு பஸ்ஸ்டாண்ட்ல நின்னுகிட்டு இருந்தேன். அப்ப ஒரு ஆட்டோல வந்து இறங்குனவள் பஸ் போயிடுச்சானு கேட்டாள். நான் போயிடுச்சினு சொன்னவுடன் சோகமாகிவிட்டாள். நான் ஏங்க இதுக்கு இவ்வளவு சோகம் ஆகுறிங்கனு கேட்டேன். அதுக்கு வேற பஸ்ல போனா 2 கி.மீ நடக்கனும்னு சொன்னாள்.அய்யோ இளைச்சிடுவிங்கனு சொன்னேன். அவள் சிரித்தாள். சரி உங்க பெயர் என்னனு கேட்டேன்.உங்களுக்கு தெரியாதானு கேட்டாள்.தெரியும், ஆனா உங்க குரல்ல சொல்லுங்கனு சொன்னேன். திவ்யானு சொன்னாள். கவர்மண்ட் ஸ்கூல்ல சோசியல் டீச்சரா இருக்கிறதாக சொன்னாள். நான் என்ன பத்தி சொன்னேன் சரினு கேட்டுகிட்டாள். பஸ்ஸ்டாண்டுல தினமும் பேச ஆரம்பிச்சோம்.

இப்படியே ஒரு மாசம் போனது மறுபடியும் சுந்தரத்துக்கு போன் பண்ணேன் எப்ப கட்டுவிங்கனு கேட்டேன். ரொம்ப கோபமா உங்க பேங்க்ல நான் மட்டும் தான் லோன் வாங்கி இருக்கேனா எனக்கே போன் பண்ணிக்கிட்டு இருக்குறிங்கனு கேட்டான். நான் ரொம்ப அதிகமாக பேசாதிங்க இன்னும் ஒரு வாரத்துல கட்டலைனா வீட்டுக்கு நோட்டிஸ் விட்டுருவோம்னு சொன்னேன்.

ஒரு நாள் பஸ்ஸ்டாண்டில் அவளைக் காணோம். பஸ் வந்தும் நான் ஏறலை, அவள் கொஞ்சம் லேட்டா வந்தாள் பேசிக்கிட்டு இருந்தோம். அப்ப அவள் நிறைய திருத்தின பரீட்சை பேப்பர் வைத்திருந்தாள். நான் அதை வாங்கிப் பார்த்தேன் எல்லாப் பதிலுக்கும் ரைட்டு போட்டு இருந்தது.என்னங்க உங்களுக்கும் பதில் தெரியாதா எல்லாத்துக்கும் ரைட்டு போட்டுருக்கிங்கனு கேட்டேன். அதுக்கு அவள் அதெல்லாம் எனக்குத் தெரியும்னு சொல்லி பேப்பரை கொடுங்கனு வாங்கிவிட்டாள்.அப்ப நான் கேட்கிற கேள்விக்கு பதில் சொல்லுங்கனு சொன்னேன் அவளும் கேளுங்கனு சொன்னாள் சரினு ஷார்ஜகான் அப்பா பெயர் என்னனு கேட்டேன் நாளைக்கு சொல்றேனு சொன்னாள்.அப்ப பூ ஏத்திக்கிட்டு ஒரு பஸ் வந்தது கண்டக்டர்கிட்ட அவள் வண்ணிநகரம் நிற்குமானு கேட்டாள் அவர் நிற்காதுனு சொல்லிட்டார். நான் என்னங்க பூ எல்லாம் ஏத்திக்கிட்டு போறாங்க உங்களை ஏத்திக்கிட்டு போகமாட்டேங்கறாங்கன்னு சொன்னேன்.அவள் சிரித்தாள். நான் உங்க போன் நம்பர் கொடுக்க முடியுமானு கேட்டேன். அவள் முடியாது முடிஞ்சா கண்டுப்பிடிச்சிக்கங்கனு சொல்லிட்டு வந்த பஸ்ல ஏறிப் போய்விட்டாள்.

அன்னைக்கு நைட் எனக்கு அக்பர்னு ஒரு மெசேஜ் வந்தது. நான் அந்த நம்பர்க்கு போன் பண்னேன்.அவள் ஹலோனு சொல்லும் போதே அவள் தான்னு கண்டுப்பிடிச்சிட்டேன்.என்னங்க போனெல்லாம் பண்றிங்க பஸ்ஸ்டாண்டுல பேசுறது போதாதானுகேட்டாள்.உங்க விஷயத்துல எனக்கு போதுங்கிற நினைப்பே வராதுனு சொன்னேன்.அப்படியே பேசிகிட்டே இருந்தோம்.

அடுத்த நாள் பேங்க் போனவுடனே மேனேஜர் கேபினுக்கு கூப்பிட்டார்.போனேன். நீங்க போன் பண்ண ஒருத்தர் கூட வரலைனு சொன்னார். நான் என்ன அவங்களை அடிச்சா இழுத்துக்கிட்டு வரமுடியுமுனு நினைச்சிக்கிட்டு சரி சார் திருப்பியும் போன் பண்றேனு சொல்லிட்டு அந்த லிஸ்டை எடுத்தேன்.அதுல சுந்தரத்தோட பெயரைப் பார்த்தேன்.சரி இவன முதல்ல கவனிப்போம்னு அவனுக்கு போன் பண்ணேன் உங்களுக்கு கொடுத்த டைம் முடிஞ்சாச்சு உங்களுக்கு சர்பெஸி(SARFAESI) நோட்டிஸ் விடப்போறோம்னு சொன்னேன்.அவன் அப்படினா என்னனு கேட்டான்.நான் அதுக்கு அந்த நோட்டிஸ் விட்டு அறுபது நாள்ல உங்க வீட்டை வித்துடுவோம்னு சொன்னேன். அவன் நான் பாக்காத நோட்டிஸானு போனை வச்சிட்டான்.

அவளிடம் ஒருநாள் எங்க வீட்டுல பொண்ணு பார்க்கிறாங்கனு சொன்னேன்.அவள் முகம் மாறியதைப் பார்த்தேன். நான் முடியாதுனு சொல்லிட்டேனு சொன்னேன். ஏனென்று கேட்டாள்.நல்ல வரலாறு தெரிஞ்ச பொண்ணாத் தான் கல்யாணம் பண்ணிப்பேனு சொல்லிட்டேனு சொன்னேன். அவள் சிரித்தாள்.அவள் என் வேலை டெம்பரவரி தான்னு சொன்னாள்.நான் அதனால என்னனு கேட்டேன்.அதுக்கு அவள் சொல்லனும்னு தோனுச்சு சொன்னேன்னு சொன்னாள்.அவள் பஸ்சைவிட்டு இறங்கும் போது எனக்கு உன்னைப் பிடிச்சிருக்குனு சொன்னேன். யோசிக்காம அவள் எனக்கும்தான்னு சொல்லிட்டு இறங்கி விட்டாள்.

இரண்டு மாசம் எப்படி போனது என்றே தெரியவில்லை ஒரு நாள் பஸ்ஸ்டாண்டுல நின்னு பேசிக்கிட்டு இருந்தோம். அப்ப வீட்டுல சொல்லிடட்டானு கேட்டாள்.நான் சொல்லிடுனு சொன்னேன்.அதுக்கு அப்பறம் பேசவே இல்லை அவள் சந்தோஷமாக இருக்கிறாள் என்று மட்டும் தெரிந்தது.

பேங்க் போனவுடனே மேனேஜர் நோட்டிஸ் ரெடியா வைத்திருந்தார் நீங்களும் அக்ரி ஆபிஸரும் போய் சுந்தரத்தோட வீட்டுல நோட்டிஸ் ஒட்டிட்டு வாங்கனு சொன்னார். சரினு கிளம்பிப் போனோம்.சுந்தரத்தோட வீட்டுக் கதவைத் தட்டினோம் கதவு திறந்தாங்க பார்த்தால் திவ்யா நிற்கிறாள்.என்னைப் பார்த்து இங்க என்ன பண்றிங்க நான் எங்க அப்பாகிட்ட இன்னும் சொல்லல ஏன் வந்திங்கனு கேட்டாள். பின்னாடியிருந்த அக்ரி ஆபிஸர் நோட்டிஸ் ஒட்ட வந்தோம்னு சொன்னார். அதைக் கேட்டவுடன் அவள் கண் கலங்கியது. அதுக்குள்ள விஷயம் கேள்விப்பட்டு அவள் அப்பா வந்தார்.ஒட்டிடுவிங்களா ஒட்டுங்க பாப்போம் கேஸ் போடுவேன்னு சொன்னார். நாங்க எதையும் காதுல வாங்காம ஒட்டிட்டு வந்துட்டோம்.

போகிற வழியில செல்போனுக்கு ஒரு மெசேஜ் வந்தது. சாயங்காலம் பார்க்குக்கு வாங்கனு இருந்தது.சரினு பார்க்குக்குப் போனேன்.

அங்கே அவள் உட்கார்ந்திருந்தாள் என்னைப் பார்த்ததும் என்னைக் காதலிப்பீங்க, என் வீட்டையும் விற்பீங்களானு கேட்டாள். உங்க அப்பா கடன் கட்டாததற்கு நான் என்ன பண்ணுவேனு கேட்டேன்.அதுக்கு அவள் இப்ப எங்க அப்பா கட்டலைனு நோட்டிஸ் ஒட்டுனீங்க நாளைக்கு என் தங்கச்சி கல்விக்கடன் திருப்பிக் கட்டலைனு நோட்டிஸ் ஒட்டுவீங்கனு சொன்னாள்.அவளை நான் பார்த்துக்கிறேனு சொன்னேன். அவள் முறைத்தாள். உடனே லோனப் பாத்துக்கிறேனு சொன்னேன். அவள் வீட்டை ஏலம் விடுறதை உங்களால் நிறுத்த முடியாதா என்று கேட்டாள். நான் முடியாதுனு சொன்னேன். கோபமாகக் கிளம்பி போய்விட்டாள்.

.அடுத்த நாள் அவள் பஸ்ஸ்டாண்டில் நின்றுகொண்டு இருந்தாள். என்னைப் பார்த்ததும் கண்கலங்கி விட்டாள். என்னவென்று கேட்டேன்.அதற்கு அவள் எங்க மாமா அந்த லோன கட்டுறதா சொல்லிட்டார் அதுக்குப் பதிலா அந்த வீட்டை அவர் பெயருல எழுதிக்கொடுக்கனுமாம். அவர் பையனை நான் கல்யாணம் பண்ணிக்கனுமாம்னு சொன்னாள்.இது அநியாயம் நான் உங்க அப்பாக்கிட்ட பேசுறேனு சொன்னேன்.அவள் அதுக்கு வேண்டாம் எல்லாம் முடிஞ்சுபோச்சு என்ன மறந்துடுங்கனு சொல்லிவிட்டுப் போய்விட்டாள்.

அதற்கப்புறம் நான் அவளைப் பார்க்கவே இல்லை போன் செய்தேன் எடுக்கவில்லை. ஒரு மூன்று மாசம் ரொம்ப கஷ்டமாக இருந்தது. அப்புறம் கொஞ்சம் சாதாரணமானேன்.

ஒரு நாள் பஸ்ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்தேன்.அப்போது திவ்யா நிற்கிற அதே இடத்தில் ஒரு பெண் நின்று கொண்டிருந்தாள்.அவளைப் பார்த்தேன் அவளும் திவ்யா மாதிரியே அழகாக இருந்தாள் அவள் அருகே போனேன். ஹலோ, உங்க அப்பாவோட வோட்டர் ஐ.டி நம்பர் கிடைக்குமானு கேட்டேன் அவள் திருதிருனு முழிச்சுகிட்டே ஏனென்று கேட்டாள்.

நான் சிபில்(CIBIL) எடுக்கனும்னு சொன்னேன்……..

– ஆகஸ்ட் 2015

Print Friendly, PDF & Email

1 thought on “இனிமே இப்படித்தான்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *