இங்கேயும் ஒரு நிலா!

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்  
கதைப்பதிவு: February 16, 2013
பார்வையிட்டோர்: 18,137 
 

(காதலுக்காக ஏங்குவதும், காத்திருப்பதும், கிடைக்காமல் போனால் மனம் உடைந்து போவதும்…! தோல்விகள் எல்லாம் தோல்விகளுமல்ல, வெற்றிகள் எல்லாம் வெற்றிகளுமல்ல…!)

அன்று பௌர்ணமி. மொட்டை மாடியில் நின்று உன் எழில் கொஞ்சும் அழகைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்;தேன். கண்ணுக்குள் ஆயிரமாயிரம் கதைகள் சொல்லி என் கண்களுக்கு இனிய விருந்தளித்தாய். உன் பார்வையில் மயங்கி உன்னை நேருக்கு நேர் பார்க்க முடியாமல் வெட்கப்பட்டு நான் தலைகுனிந்தேன். தூரத்தில் தெரு விளக்கு அழுது வடிந்து கொண்டிருந்தது. அதைப் பார்த்ததும் மனதுக்குள் ஏதோ ஒரு இன்ப உணர்வு ஊற்றெடுத்து. என்னை அறியாமலே கையிலே இருந்த பென்சிலை எடுத்து மொட்டைமாடிச் சுவரிலே கிறுக்கினேன்.

“தலை குனிந்து நிற்கிறது
தெரு விளக்கு
வானத்தில் முழுநிலா”

“வாவ்!” என்று ஆச்சரியப்பட்டாள் என் தங்கை.
‘ஏன்?” என்று கேட்டேன்.
‘உனக்குக் கூட ஹைக்கூ எழுதவருமா சூரியா?”
‘ஹைக்கூவா? யார் சொன்னது? ஏதோ என் மனதில் பட்டதைச் சுவரிலே கிறுக்கினேன்”
“இல்லை கொஞ்ச நாளாய் நானும் பார்க்கிறேன், உன்னிலே ஏதோ ஒரு மாற்றம் தெரியுது”
“மாற்றமா? என்னிலா?”
‘ஆமாம், அடிக்கடி கற்பனையில் மிதக்கிறாய், மௌனமாய் இருக்கிறாய், மொட்டை மாடிக்கு வந்து வானத்தை வெறித்துப் பார்க்கிறாய். என்ன ஆச்சு உனக்கு? வானிலை ஆராய்ச்சியா?’
“இது நல்லதிற்கில்லை” என்பது போல என்னை ஒரு பார்வை பார்த்து விட்டு அவள் கீழே போய் விட்டாள்.

காதல் வந்தால் கவிதை வருமாமே! எனக்கும் கவிதை வரப்பார்க்கிறது. நானும் ஒரு கவிஞனா? இல்லை நான் கவிஞன் இல்லை? அப்போ நான் யார்? ரசிகனா? அப்படித்தான் நான் இதுவரை நினைத்திருந்தேன், ஆனால் அதுவும் பொய் என்று இப்போ தான் தெரிகிறது. ஏனென்றால் நான் காதலிக்கிறேனாம். யாரை? உன்னைத் தவிர வேறு யாரை என்னால்; காதலிக்க முடியும்? எத்தனை வருடமாய் உன் எழில் வதனத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அப்படி என்றால் எனக்குத் தெரியாமலே என் இதயத்தை உன்னிடம் பறிகொடுத்து விட்டேனா?

நான் சிறுவனாய் இருந்தபோது இந்த மொட்டை மாடியில் வைத்துத்தான் அம்மா எனக்கு உணவு ஊட்டிவிடுவாள். அப்போதெல்லாம் நான் சாப்பிடாமல் அடம் பிடித்தால் உன் அழகு முகத்தைக் காட்டித்தான் எனக்கு உணவு ஊட்டி விடுவாள். உன்னை எனக்கு அறிமுகம் செய்து வைத்ததே என் அம்மா தான். இப்பொழுதும் உன்னைப் பார்க்கும் போதெல்லாம் அம்மா அன்று பாடிய அந்தப் பாடல் தான் என் நினைவில் வருகிறது.

நிலா நிலா ஓடி வா
நில்லாமல் ஓடி வா
மலைமேல் ஏறி வா
மல்லிகைப்பூ கொண்டு வா!

மல்லிகைப்பூ! அதன் தூயநிறமும் மணமும் எனக்குப் பிடித்தமானது.
அதனாலேயோ என்னவோ அப்போதெல்லாம் நீ மல்லிகைப்பூ கொண்டு வருவாய் என்று நான் எதிர்பார்த்துக் காத்திருந்ததுண்டு. அப்புறம் யாராவது மல்லிகைப்பூ சூடிவந்தால் அது நீதானா என்று பார்த்து ஏமாந்து போனதுமுண்டு. தூரத்தில் மிகத் தூரத்தில் என் கைகளுக்கு எட்டாமல் என்னைப் பார்த்து நீ அடிக்கடி சிரிப்பதுண்டு. சில நாட்களில் நீ வருவதே இல்லை என்று தெரிந்த போது எனக்குப் பெரிய ஏமாற்றமாகவும் இருந்ததுண்டு. உன்னை மீண்டும் எப்போது பார்ப்பேன் என்ற ஆவலை இந்தப் பிரிவு தான் தூண்டிவிட்டதோ தெரியாது.

முதன் முதலாக பௌர்ணமி அன்று உன்னை நான் பார்த்தபோது உன் அழகிய முகம் என்னைக் கவர்ந்து இழுத்தது.
அந்த அழகிய முகமே நிரந்தரமாக என் மனதிலும் பதிந்தும் விட்டது.

‘வானமீதில் நீந்தி ஓடும் வெண்ணிலாவே- நீ தான்
வந்ததேனோ யன்னலுக்குள் வெண்ணிலாவே!

என் படுக்கை அறை யன்னலுக்குள்ளால் நீ எட்டிப் பார்த்துச் சிரிக்கும் போதெல்லாம் கறுப்பும் வெள்ளையுமாய் ஒரு நாள் தொலைக் காட்சிப் பெட்டியில் போய்க் கொண்டிருந்த இந்தப் பாடல் வரிகளின் காட்சிகள் தான் என் நினைவிற்கு வரும்.

மேகங்களோடு நீ கொஞ்சி விளையாடும்போது அந்த மேகங்களாய் நான் இருந்திருக்கக் கூடாதா என்று ஏங்குவது உண்டு. அந்த ஏக்கத்தோடு நான் உன்னைப் பார்க்கும் போதெல்லாம் நீ முகம் நாணி மேகக்கூட்டத்தில் மறைந்து விடுகின்றாய்!

நான் சொன்னால் நம்பமாட்டாய் ஆனாலும் சொல்கிறேன். உன்னை யாராவது தீண்டினால் எனக்குக் கோபம் வருகிறது.

இப்படித்தான் நீல்ஆம்ஸ்ட்ராங் உன்னைத் தொட்டபோதும் எனக்குக் கோபம் வந்தது. பக்கம் பக்கமாய் நாஸாவிற்குக் கண்டனக் கடிதம் எழுதிப் போட்டேன். எங்கேயோ ஒரு மூலையில் உன்காதலன் உனக்காகக் காத்திருக்கிறான் என்பது அவர்களுக்கும் தெரியட்டுமே என்று தான் எழுதிப் போட்டேன்.

சூரியன் இல்லாவிட்டால் உன்னிடம் ஒளி இல்லையாம். உன் முகத்தில் தெரிவது மேடுபள்ளமாம். அருகே சென்று பார்த்தால் அசிங்கமாம். எப்படி எல்லாம் இவர்கள் உன்னைப் பற்றிக் கேவலமாய்ப் பேசுகிறார்கள். பேசட்டும்! பேசுபவர்கள் பேசட்டும். உன்னைப் பார்த்து இங்கேயிருந்து இவர்கள் குரைப்பதால் நீ ஒன்றும் குறைந்து போகப் போவதில்லை!
இன்று காதலர் தினம்! உனக்காக தோட்டத்தில் இருந்து இந்த ஒற்றை ரோஜாவைப் பறித்துக் கொண்டு வந்திருக்கிறேன். இத்தனை வருடமாய் காதலர் தினத்திலன்று நான் மட்டும் தான் என் காதலை உன்னிடம் சொல்கிறேன். உனக்கேன் இது புரிய மாட்டேனென்கிறது?
ஒருவேளை நான் உன்மேல் வைத்திருப்பது ஒருதலைக் காதல் தானோ?

“வாழ்க்கைத் துணையிங்கிருக்க
ஏங்குவதா எட்டாத நிலவிற்கு
உனக்காகக் காத்திருக்கும்
இங்கேயும் ஒரு நிலா!”

படித்துப் பார்க்கிறேன். மொட்டை மாடிச்சுவரிலே மீண்டும் ஒரு பென்சில் கிறுக்கல்.

இம்முறை கிறுக்கியது நானல்ல. மதுநிலா! என் மாமன் மகள். என்னை நம்பி வந்த என் வாழ்க்கைத் துணை. இந்த சூரியாவைச் சுற்றிச் சுற்றி வளைய வரும் நிலா! காதல் வந்தால் கவிதை வருமாமே?
கேள்வியும் பதிலுமாய் அவளே கிறுக்கியிருந்தாள்.

மல்லிகைபூ வாசமும் மெட்டிச் சத்தமும் என் அருகே வந்தது. திரும்பிப் பார்த்தேன். மதுநிலா! ஏக்கத்தோடு என்னைப் பார்த்தாள். விழிகளில் காதல் பொங்கி வழிந்தது. நான் ஏக்கத்தோடு எப்படி உன்னைப் பார்ப்பேனோ, அதே ஏக்கப் பார்வை!

மொட்டை மாடியில் ஒற்றை ரோஜாவோடு தனியே நின்று உன்னோடு பேசுவதை இவள் பார்த்திருக்கலாம்.

என் நிலைமையைப் பார்த்து இவன் என்ன பைத்தியமோ என்று கணக்குப் போட்டிருக்கலாம், இல்லை அவளுக்காக நான் தனிமையிலே மொட்டை மாடியில் காத்திருப்பதாகக் கூட நினைத் திருக்கலாம்.

அவள் பார்வையில் ஒளி இருந்தது. பெயரில் நிலா இருந்தது. கூந்தலில் மல்லிகைப்பூ நிஜமாய் மணத்தது! என்னைப் போலத்தான் இவளும் காதலுக்காக ஏங்குகிறாளோ?

எனக்கு இப்போ உண்மை புரிகிறது. காதலுக்காக ஏங்குவதும், காத்திருப்பதும், கிடைக்காமல் போனால் மனம் உடைந்து போவதும்…!

தோல்விகள் எல்லாம் தோல்விகளுமல்ல, வெற்றிகள் எல்லாம் வெற்றிகளுமல்ல, எனக்குள் நானே ஆறுதல் சொல்லிக் கொள்கிறேன்.

வேண்டாம்! எனக்குக் கிடைத்த கசப்பான அனுபவம் அவளுக்கும் கிடைக்க வேண்டாம்! காதல் அன்புக்காக இனிமேல் அவளும் ஏங்க வேண்டாம்!
நீண்ட பெருமூச்சில் என் ஏக்கம் தீர்த்தேன்.

என்னை அறியாமலே கையிலே இருந்த ஒற்றை ரோஜாவை அவளை நோக்கி மெல்ல நீட்டினேன்.

அதற்காகவே காத்திருந்தது போல பளீச்சென்று முகம் மலர அந்த ரோஜாவை வாங்கித் தலையிலே சூடியவள் என் மார்பில் முகம் புதைத்து விம்மினாள்.

அவளை அணைத்து தலையை மெல்ல வருடி விட்டேன். என் கற்பனைகள் எல்லாம் அவளது கண்ணீரில் கரைந்து போயிற்று.

இத்தனை வருடமாய் எட்டாத நிலா மீது நான் வைத்திருந்த காதலை ஒரு நொடியில் ஒட்டு மொத்தமாய் இவள் வாங்கி விட்டாள்.

ஒன்று மட்டும் எனக்குத் தெளிவாகப் புரிந்தது, கட்டிய மனைவியையும் காதலியாய்ப் பார்க்கலாம்! அவளையும் காதலிக்கலாம்!

அருகே இருந்த இந்த நிலவு இத்தனை நாள் என் கண்ணுக்குத் தெரியாமல் எங்கே போயிற்று?

எனக்குள் என்னை அறியாமல் ஒரு உத்வேகம் துள்ளி எழுந்தது.

கற்பனையில் இருந்து இறங்கிவந்து நிஜமாகவே கொஞ்சம் காதலித்துத்தான் பார்ப்போமே!

மனம் நெகிழ்ந்து அவள் முகம் நிமிர்த்திப் பார்த்தேன்.

இப்போ நான் பார்ப்பது நிஜம்! என் கண்முன்னால் இவள் நிஜம்!

எனக்காக காத்திருக்கு இங்கேயும் ஒரு நிலா!

Print Friendly, PDF & Email

1 thought on “இங்கேயும் ஒரு நிலா!

  1. உருவகக் கதை பாணியில் எழுதப்பட்ட கதை. வித்தியாசமான நடையில் எழுதப்பட்ட ஒரு வித்தியாசமான காதல் கதை.
    ரசினைக்கு உரியதாக இருக்கிறது.
    வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்
    ஜூனியர் தேஜ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *