ஆதியிலொடு அன்பிருந்தது…

1
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: December 8, 2012
பார்வையிட்டோர்: 14,741 
 

”நீ நீயாக இரு!”

”இல்லை… நான் நீயாக இருக்க விரும்புகிறேன்.”

”அது சாத்தியமற்றது. போலியானது.”

”ஏன்?”

”நீ நீயாக இருக்கும்போது, என்னை அதிகம் நேசிப்பவளாகிறாய். எனக்காக மாறும்போது, நீ உள்ளிருந்து எங்கேயோ என்னை வெறுக்கத் தொடங்குவாய்.”

”உனக்காகச் சில விஷயங்களை இழக்கும்போதும், விட்டுக்கொடுக்கும்போதும், வாழும்போதும், அது எனக்கு அதீத சுகத்தை அளிக்கிறது.”

”அதைத்தான் போலியானது என்கிறேன்.”

”ஏன்?”

”ஏனென்றால், உலகத்திலேயே மிக உன்னதமான விஷயம், சுயமாக இருப்பதும் சுதந்திரமாக வாழ்வதும். ஒவ்வொரு மனிதரின் அதிகபட்சத் தேடல் அதுதான்.”

”நானும் அப்படியே வாழ்கிறேன். உன்னை நேசிப்பதும் உனக்காக என்னை மாற்றிக்கொள்வதும் எனது சுதந்திரம் இல்லையா?”

”இல்லை. அது உனக்கு நீயே விதித்துக்கொள்ளும் கட்டாயம். இந்தக் கட்டாயத்தை ஒரு கட்டளையாக நான் உனக்கு இட்டால், உனக்கு எதிரியாகிவிடுவேன். உனக்கு நீயே விதித்துக்கொள்வதால், அது உனக்குச் சுகமாகிறது.”

ஓர் ஆணிடம் இருந்து இப்படிப்பட்ட வார்த்தைகளைக் கேட்பது விநோதமாக இருக்கிறது அல்லவா? ஆனால், அவன் அப்படித்தான் இருக்கிறான். நீ நீயாக இரு எனச் சொல்லும் அளவுக்கு நான் எதையும் இழந்துவிடவில்லை. திடீர் என அதிகக் காதல்வயப்பட்டதைப்போல பிதற்றத் தோன்றியது. அதனாலேயே, அவனுக்காகச் சில விஷயங்களைச் செய்யத் தொடங்கினேன். ஆண்டாண்டு காலமாக, எல்லாப் பெண்களும் எல்லா வீடுகளிலும் செய்துகொண்டு இருப்பதுதான். அவனுக்காகச் சமைப்பது. அவனுக்குப் பிடித்ததை உடுத்திக்கொள் வது. அவனுக்குப் பிடிக்குமே என அலங்கரித்துக்கொள்வது… காத்திருப்பது… ஓடி வருவது… அவனுக்கு உறக்கம் வரும் வரை விழித்து இருப்பது. சும்மா செய்து பார்ப்போமே என்று செய்ததன் விளைவுதான் இந்த உரையாடல்.

”ஏன், என்னை உனக்கு அதிகாரியாக இருக்கப் பழக்குகிறாய்?”

”இப்படிச் செய்தால், நான் உனக்குக் கீழாகிவிடுவேனா என்ன?”

”உடனடியாக இல்லை என்றாலும், என்றேனும் ஆகிவிடுவாய்.”

”எப்படி?”

”இன்று நீயாக விரும்பிச் செய்வதை, நாளை நீ விரும்பாதபோது நான் எதிர்பார்த்தால், அப்போது நான் ஓர் அதிகாரி யைப்போல உனக்குக் கட்டளை இடுவேன். நீ அடிமையைப்போலச் செயல்படுவாய்.”

”என் அம்மாவும் பாட்டியும் அவர்களைப் போன்ற எல்லோருமே இப்படித்தானே இருந்தார்கள்… இருக்கிறார்கள். உனக்காக என் வாழ்வை வடிவமைத்துக்கொள்ளும்போது, அதில் ஒரு அதீத சந்தோஷம் கிடைக்கத்தானே செய்கிறது.”

ஜன்னல் ஓரமாக சுவரில் சாய்ந்தபடி பேசிக்கொண்டு இருந்த என் அருகில் வந்து, கழுத்தைக் கட்டிக்கொண்டான். என் கண்களை நெருக்கத்தில் பார்த்து அவன் கேட்டான், ”நிஜமாகவே இப்படி இருப்பது உனக்குச் சந்தோஷத்தைத் தருகிறதா? அப்படி எனில், அது நிரந்தமானது அல்ல. உன் அம்மாவுக்கும் பாட்டிக்கும் அது நிலையானதாக இருந்திருக்காது. அன்பு என்பது தியாகம் அல்ல. இட்டு நிரப்பும் செயலும் அல்ல. அது உணர்தலும் பகிர்தலுமான அற்புதம். என் ஷூ லேஸைக் கட்டிவிட நீ உன் கைகளை வற்புறுத்தினால், அது ஒருபோதும் ஓவியங்களைத் தீட்டும், கவிதைகளை எழுதும், சிலைகளைச் செதுக்கும் சுகத்தை உணராது. வாழ்க்கை முழுவதும் உன்னை சிறைப்படுத்திக்கொண்டு, யாரையும் நேசிக்க வேண்டியது இல்லை. உண்மையில் அன்புக்கு இன்னொரு பெயர் சுதந்திரம். நீ சுதந்திரமாக இருந்தால், சிந்தித் தால்… உன்னிடம் நிறைய அன்பு இருக்கும்.”

நான் சிரித்துக்கொண்டேன். அவன் என்னை முத்தமிட்டான். அந்த உன்னதச் சுவையில் கரைந்து, காணாமல் போய், மீண்டு வரச் சில நிமிடங்கள் ஆனது.

அவன் தர்க்கம் உண்மையானது. ஆனால், ஓர் ஆணாக இருந்தும், அவன் ஏன் என் காலணியில் நின்றுகொண்டு இருக்கிறான் என நான் யோசித்தேன். உலக இயங்கியல் விதிக்கு எதிராக எப்படிப் பிறந்தான்? அவன் என்றேனும் தன் பாலினப் பெருமையை அறிந்து இருந்தானா என எனக்கு வியப்பு எழுந்தது.

”ஆண்மையை விரும்புவது இல்லையா நீ?”

”எது ஆண்மை?” என அவன் கேட்டதும், அந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல அதைச் சுமந்துகொண்டு இருக்கும் பலரையும் நான் நினைத்துக்கொள்ள வேண்டி இருந்தது.

அந்த யோசனையிலேயே நான் வார்த்தைகளை உதிர்த்தேன். ”செருக்கு, வீரம், கர்வம், திமிர், ஆதிக்கம்… எல்லாமே தனக்குக் கீழ் என நினைத்துக்கொள்ளும் மன நிலை. இவை எல்லாம் உனக்குப் பயிற்றுவிக்கப்படவில்லையா?”

”ஏன், ஆண்மை என்பதற்கு அன்பு, கனிவு, அடக்கம், பொறுமை என அர்த்தம்கொள்ள முடியாதா?”

”நீ தவறான அர்த்தங்களைக் கூறுகிறாய். அன்பில் நெகிழ்ந்து உருகுதல் ஆண்மைக்கு இல்லை. எனக்கு என்னவோ அது எப்போதும் சூழ்ச்சிகளைச் சிந்திப்பதாகத் தோன்றுகிறது!” – அவன் கைகளில் இருந்து என்னை நான் விடுவித்து நகர்ந்தேன்.

”சரி, எது பெண்மை?” என்றபடி மறுபடியும் என்னைத் தன் பக்கம் இழுத்தான்.

இந்த முறை அவனது கழுத்தை எனது கைகள் சுற்றி வளைத்துக்கொண்டன. கனத்த நெஞ்சில் நெற்றி பதித்து, சுவாசத்தை உள்ளே இழுத்துச் சொன்னேன்…

”நான் அதை அறிந்து இருக்கவில்லை. என் உறுப்புகளை வைத்து அதற்கு ஏற்றபடி குணத்தை நான் வளர்த்துக்கொள்ளவில்லை.”

என் பதிலில் என்ன உணர்ந்தானோ, இன்னும் அழுத்தமாக அணைத்துக்கொண்டான். என் காது அருகே அவன் குரல் கசிந்தது.

”நாம் முதன்முதலில் சந்தித்தபோது, கடற் கரையில் இருந்தோம்.”

”ஆம். யாருமற்ற கடற்கரையில்…”

”உப்புத் துகள் நிறைந்து தத்தளித்தது கடல்.”

”தாழ்வாகப் பறந்து அலையைத் தொட்டபடி விளையாடின பறவைகள்.”

”நண்டுகளைப் பின் தொடர்ந்தோம்.

அப்போதுதான் நான் என் காதலைச் சொன்னேன். நீ என்ன செய்தாய்?”

”உன் கைகளை இழுத்துக்கொண்டு ஓடினேன். மணலில் கால் புதைய வெகு நேரம், வெகு தூரம். மூச்சு இரைத்து, வியர்த்து மணலில் குப்புற விழுந்து அப்படியே கிடந்தோம். நிலா நம் தலைக்கு மேல் வரும் வரை பேச்சற்று அப்படியே கிடந்தோம். மணலுக்குக் கை கால்கள் முளைத்ததைப்போல புதைந்துகிடந்தோம்.”

”அப்போது நீ பெண் எனவோ… நான் ஆண் எனவோ நான் உணர்ந்து இருக்கவில்லை. என் கைகளை இழுத்துக்கொண்டு ஓடும் உன் துடிப்பில் இந்த உலகைக் கடந்துவிடும் வேகத்தை நான் பார்த்தேன். தன் இளஞ் சிறகுகளால் வானத்தை அளக்கும் பறவையாக நீ தென்பட்டாய். இத்தனை சுதந்திரமானதொரு கால்களுக்கு என் பார்வைகூடத் தடையாக இருக்கக் கூடாது. பெண்மை பயிற்றுவிக்கப்படாத உன் சுயம் எத்தனை தீர்க்கமானது எனில், ஆண்மை பயிற்றுவிக்கப்படாத என் சுயத்தைப்போல. குழந்தைக்கு ஏது பாலினம்? நாமும் அதுபோலவே, வெறும் இரு மனிதர்கள். அவ்வளவே! எனக்கான எந்தக் குணத்தையும் நீ கொண்டு இருப்பாய். உனக்கான எந்தக் குணத்தையும் நானும்கொண்டு இருப்பேன்.”

அரவணைத்த நிலையிலேயே என்னை நகர்த்திக்கொண்டு வெளியே வந்தான். புல்வெளியில் பாதங்கள் பதிந்தன. பனித் துளியின் ஈரம் விரல் களுக்கு இடையில் சில்லிட்டுக் கசிந்தது. இத்தனை லகுவாக வருடும் கலையைக் காற்று எங்கேதான் கற்றுக்கொண்டதோ… காற்றைவிடவும் இதமாக அவனது நெருக்கம்!

”நாம் பறவைகள். விரும்பிய திசையில் பயணித்துவிட்டு அன்புக்காகக் கூடு அடைகிறோம். உன்னை நான் நினைவுகளாலேயே ஏந்திச் செல்கிறேன். வெறும் உடலாக என்னோடு உன்னை இழுத்துச் செல்வேன் எனில், அது சுமை. அந்தச் சுமை எனக்கு அன்பையும் நெருக்கத்தையும் சிதைத்துவிடும்.”

அவன் இப்படியேதான் இருக்கிறான், சிறகுகளின் அவசியத்தைச் சுட்டிக்காட்டியபடி. திசைகளையும் பறத்தலின் சுகத்தையும் பேசியபடி.

எங்கள் தனிமை மிக அழகானது. நான் இல்லாத அவனும், அவன் இல்லாத

நானுமாகத் திரியும் தருணங்களைவிடவும், நானும் அவனும் இணைந்து இருக்கும்போது நாங்கள் அனுபவிக்கும் தனிமை அத்தனை சுகமானது. இன்னும் இறுக்கமாக உள் இழுத்துக்கொள்ளும்போது, அவன் நீரில் கரையும் திடப் பொருளைப்போல என்னுள் கரைகிறான்.

ஓரிரவு…

எங்கள் அறையில் நாங்கள் படுத்துக்கிடந்தபோது, ஜன்னல் சட்டத்தில் நிலவு வந்து அமர்ந்தது. ச்ச்சூவென விரட்டினால், ஒரு பறவையைப்போல இந்த நிலா பறந்துவிடும் என்று அவன் சொல்ல, வெகு நேரம் நாங்கள் அதை விரட்டிக்கொண்டு இருந்தோம். பின் இரவு வரை நீண்ட இந்த விளையாட்டு முடிந்தபோது, எங்கெங்கும் சிதறிக்கிடந்த முத்தங்கள் வானத்தில் ஏறி நட்சத்திரங்கள் ஆகின. அப்போது நான் அவனிடம் நான் இப்படிச் சொன்னேன். ”உண்மையில் முத்தத்துக்கு வடிவம் என்று ஏதேனும் இருக்க முடியும் என்றால், அது நட்சத்திரத்தைப்போலவே இருக்கும்.”

”ஏன் அப்படி?”

”கற்பனை செய்து பார்.”

”உதடு குவிந்து மலரும்போது முத்தமும் மலர்கிறது. அது பூக்களின் வடிவ மாகவும் இருக்கலாம்.”

இதழ்களைக் குவித்துப்பார்த்து, ”இருக்கலாம்” என்றேன்.

அந்த இரவு முழுவதும் நட்சத்திரங்களாலும் பூக்களாலும் நிறைந்து தழும்பியது.

பின் ஒருநாள், நாங்கள் நதிக்கரை ஓரமாக வெகு தொலைவு நடந்துகொண்டு இருந்தோம். அந்தி சாயும்போது கீழ் இறங்கும் சூரியனின் ஒளியில் நதியின் மெல்லலைகள் தத்தளித்தன. நீரின் இருப்பு அந்தப் பகுதியையே குளிர்வித்தபடி இருந்தது. நேசிக்கிறவனோடு நடந்தபடி நதி மூலத்துக்கே போய்விட மாட்டோமா என்று எண்ணினேன். அதே கணத்தில், ”உன்னோடு நடக்கும்போது, என் கால்கள் சிறகுகளைக் கட்டிக்கொள்கிறது. அப்படியே உலகைச் சுற்றி வரலாம்போல…” என்றான்.

நதியின் மீது, அதன் அலைகள் மீது, அங்கு இருந்த மரங்கள் மீது, அதுவரை நீலம் பூசிக்கிடந்த வானத்தின் மீது, அதிலே பறந்த பறவைகள் மீது… மெள்ளப் படர்ந்த இருள் எங்கள் விழிகளை நிறைத்து, பின்னர் இதயம் வரை இறங்கி இருந்தது. என் விரல்களை அவன் பற்றிக்கொண்டு இருந்தான். சில நேரங்களில் அனிச்சையாக அழுந்தப் பிடிப்பதும் பின்னர் விடுவிப்பதுமாக இருந்தது அவனது செய்கை. இருளில் தத்தளித்தபடி கூடு திரும்பும் இரு பறவைகளைப்போல நாங்கள் இருந்தோம். ”திரும்பி நடக்கலாமா?” என்றான். ”இல்லை. இன்னும் கொஞ்சம் தூரம் நடக்கலாம்” என்றேன். கரையில் நடந்துகொண்டு இருந்த எங்களையும் சேர்த்து இழுத்தபடி நகர்ந்து கொண்டு இருந்தது நதி. இருட்டு வெளியில் வெளிர் மணலுக்கு இடையில் பெரிய பாம்பைப் போல அது ஊர்ந்து போனது.

”அன்பு பெரியதா, சுதந்திரம் பெரியதா?” என நான் கேட்டபோது, அவன் புன்னகைத்தபடி தன் கால் பெருவிரலால் நதி நீரை மெள்ளத் தொட்டு விளையாடிக்கொண்டு இருந்தான். அவனுக்குத் தெரியும் என் எல்லாக் கேள்விகளுக்குமான பதில் என்னுள்ளேயே புதைந்துகிடக்கும் ரகசியம். எனினும் அதன் தடயமே காட்டாமல், என் கேள்விகளை உள்வாங்குகையில் அவனிடம் ஒரு மிளிர்வை நான் காண்கிறேன்.

நீரில் இருந்து தன் கால்களை விடுவித்துக்கொண்டு என் அருகில் வந்தான். ”நாம் எல்லோ ரும் அன்புக்குக் கட்டுப்படுகிறவர்கள்தான். உலகின் எந்த உயிரையும்போல, எல்லாவற்றையும் அதற்காக இழக்கத் துணிகிறவர்கள்தான். ஆனால், சுதந்திரமற்று அன்பை நீட்டிக்கச் செய்ய முடியாது. அன்பா… சுதந்திரமா என்று வரும்போது, நாம் தாராளமாக அன்பை இழக்கலாம்.”

”அப்படி எனில், எந்த அன்புக்கும் எல்லை இருக்கிறது. நீ என் மீது கொண்டு இருப்பதாக நான் நம்பும் அளவற்ற அன்புக்கும்.”

”எல்லையற்றது என இங்கு எதுவுமே இல்லை பெண்ணே. நாம் நின்று இருக்கிற திசையில் அது புலப்படாமல் போகலாமே தவிர, உண்மையில் எல்லாமே எல்லைக்கு உட்பட்டது.”

”சுதந்திரத்துக்கும்தானே?”

”ம். உன்னைப் பாதிக்காத வரைதான் என் சுதந்திரம் அழகு. ஆக, அது எல்லைதானே! நாம் ஒவ்வொருவரும் அடுத்தவரின் சுதந்திரத்தைக் கொண்டாடத் தொடங்கும்போது, நம்முடையது பாதுகாப்படைகிறது!”

திரும்பி நடக்கத் தொடங்கி இருந்தோம். நதியும், எங்களின் நிழல்களும், அமைதி தழும்பும் எங்கள் மனநிலையும் அப்பொழுதை ஒரு புகைப்படத் தருணமாக என்னுள் உறையச் செய்தன.

இப்பூமியின் முதல் மனிதர்கள் நாங்களோ எனத் தோன்றியது எனக்கு. நாங்கள் ஒருவர் மீது ஒருவர் செலுத்திக்கொள்ளாத கட்டுப்பாடுகளும், ஒருவர் மீது ஒருவர் நிகழ்த்திக்கொண்டு இருக்கும் அன்பும், வனாந்திரங்களுக்குள் சுற்றி, தொலைக்கவோ சேமிக்கவோ எதுவும் அற்றுத் திரியும் நிலையும், ஒவ்வொரு நாளும் இந்த எண்ணத்தை உயிர்ப்பித்துக்கொண்டு இருந்தன.

கட்டுப்பாடுகள் அறிந்திராத ஆதி மனிதன், நிச்சயம் இவனைப்போலவே இருந்திருப்பான். அன்பு எனும் சிறையால் அவன் யாரையும் அடக்கி இருக்க மாட்டான். உயிரைப் பொருளாகப் பார்க்கும் தவறு அவனுள் நிகழ்ந்து இருக்கவே செய்யாது. விதையில் இருந்து துளிர்விடும் ஒரு செடியைப்போல, ஓட்டை உடைத்துக்கொண்டு வரும் ஒரு குஞ்சைப்போல, உதிரம் கொட்டப் பிரசவிக்கும் ஒரு விலங்கைப்போல அவன் பார்த்ததும் உணர்ந்ததும் உயிராகவே இருந்திருக்கும். அசைவும் அதில் தேக்கப்பட்ட உணர்வுகளுமாக அவன் பார்த்தது, அறிந்தது அத்தனைக்கும் வாழ்வு இருந்தது. காகிதங்களும் உலோகமும் அந்த உயிர்களின் காலடிகளில் எங்கோ ஆழத்தில்கிடந்தன. தான் உணர்ந்த வலி எல்லாவற்றுக்கும் பொது என நம்பிஇருப்பான்.

இன்று இவனும் அப்படித்தான் இருக்கிறான். உலகின் முதல் பெண்ணைப் போல என்னைக் கொண்டாடுகிறான். என்னோடு அலைகிறான். முன்பு ஒரு முறை, ஆச்சர்யம் ஒன்றைப் பரிசளிப்பதாகக் கூறி, எங்கேயெனச் சொல்லாமலேயே நெடும் பயணமாக வனாந்திரம் ஒன்றுக்கு அழைத்து வந்தான்.

சூரியன் ஒளிரும் பகலையும் இரவாக்கி விடும் வல்லமையோடு, அடர்ந்து திரண்டு இருந்தது வனம். அது வரையிலும் அப்படி ஒரு கானகத்தை நான் பார்த்தது இல்லை. பல ஆயிரம் ஆண்டுகள் பழமை யான மரங்களின் மூர்க்கமான இலைகளைக் கிழித்தால், அந்த முதிர்ச்சியில் அவை கிறீச் எனச் சத்தமிட்டன.

அவன் அத்தனை மெதுவாகவும் கவனமாகவும் நடக்க, அவ்வெளியின் புதுமையில் நான் துள்ளிக்கொண்டு இருந்தேன். என் துள்ளலின் வேகத்தில் சரசரவெனச் சத்தம் போட்டன சருகுகள்.

இலை இடுக்குகளின் வழியாக உயர இருந்து கசியும் ஒளிக் கீற்றைத் தன் கைகளில் ஏந்தினான். பின்னர், இரு கைகளையும் பரப்பி, அண்ணாந்து, கண்கள் மூடி காட்டின் பச்சை வாசத்தை உள்ளிழுத்தான். மரக்கிளையில் அமர்ந்து இருந்த என்னை நோக்கி அவனது கைகள் நகர்ந்தன. தலை அசைத்து ”வா” என்றான். பாயும் அம்பு என அவனிடம் வந்தடைந்தேன்.

”நாம் ஆடைகளைக் களைந்துவிடலாம்.”

”ஏன்?”

”நாம் இப்போது ஆதி மனிதர்கள். இங்கு இருக்கப்போகும் ஒவ்வொரு நொடியையும் நாம் அப்படித்தான் கழிக்கப்போகிறோம்.’

”உனக்கு விருப்பம் இல்லை என்றால், நாம் இலைகளால் ஆன ஆடையைத் தயார் செய்துகொள்ளலாம்.”

”எனக்குச் சிரிப்புதான் வந்தது. என்ன சொல்கிறாய்? எப்படி முடியும்?”

”முடியும்” என்றபடி, பெருத்த இலைகளையும், குறுகிய கொடிகளையும் சேகரிக்கத் தொடங்கினான். நானும் அவனோடு இணைந்தேன்.

சருகுகளின் மேல் அமர்ந்து இலைகளை இணைத்து முடிச்சிடத் தொடங்கினோம்.

ஒன்று… இரண்டு… மூன்று… தோரணம்போல அடுக்கடுக்காகத் தொங்கிய இலைகளை இடுப்பைச் சுற்றிக் கட்டிக்கொண்டபோது, அது ஆடையாகிக் கனத்தது. சிவந்து கூம்புபோல நீண்டு இருந்த பூக்களைக் கொய்து தலையில் சூடிக்கொண்டோம்.

பசி எடுத்தபோது மரங்களில் ஏறி பழங்களைப் பறித்தோம். அவன் கிழங்குகளைத் தேடி அலைந்தான். காட்டாற்றில் மூழ்கி எழுந்தோம். உயர்ந்த மரத்தின் உச்சத்தில் இருந்து தொங்கிய கொடியைப்பற்றி மேலே ஏற முயன்றோம். அது முடியாமல் போகவே, விழுதுகளைப் போன்ற அவற்றைப் பற்றி இழுத்து ஊஞ்சலாடினோம்.

”ஒரு சிறிய விதையில் இருந்துதான் இத்தனை கனமான மரம் தோன்றியது என்றால் நம்ப முடிய வில்லை”- மரத்தைச் சுற்றி வந்தபடியே நான் சொன்னேன்.

”காட்டு மரங்கள் விதைத்து வளர்வது இல்லை. சுயமாக வளர்வதாலேயே இத்தனை தீர்க்கமாக இருக்கின்றன, நம்மைப்போலவே” என்றான்.

கைகளைக் கோத்தபடி நின்றோம், நடந்தோம், கிடந்தோம். நாங்கள் எங்கு எல்லாம் இருந்தோமோ, அங்கு எல்லாம் முத்தங்கள் சிதறி வனத்தை நிறைத்தன.

”எதற்காக இத்தனையும்?” என்றேன்

”இப்போது நீ எப்படி உணர்கிறாய்?”

”பூமியின் முதல் மனித உயிராக…”

மேலே வானம் கருத்த மரங்களுக்கு இடையில் மஞ்சள் திட்டுக்களாகத் தெரிந்தது. ஏற்கெனவே வனம் இருண்டு கிடந்ததால், என்ன பொழுது என்பதை உணர முடியவில்லை.

”இப்போது என்னோடு வா… உனக்கான பரிசை நான் தரப்போகிறேன்.”

நடந்து செல்லும் இரு மரங்களைப்போல நாங்கள் நகர்ந்தோம். வனத்தின் அடர்த்தி குறைவான இடத்துக்கு வந்ததும், வெளிச்சம் உடலில் பாய்ந்தது. இள வெயிலின் அழகும் அமைதியும் பரவியிருக்க, தன் கைப்பையில் இருந்து துணியால் ஆன பெரிய முடிப்பை எடுத்து என் கையில் கொடுத்தான்.

”திறந்து பார்.”

அதனுள் ஏராளமான விதைகள். கறுத்து, வெளிறி, பழுப்பு நிறத்தில் சிறியதும் பெரியதுமாக!

அவற்றைக் கைகளால் அளந்தபோது விரல்களுக்கு இடையில் நழுவிச் சரிந்தன.

”இவை என் பயணத்தில் நான் சேகரித்த விதைகள்! இந்த மண்ணுக்கும் சூழலுக்கும் ஏற்றவையா எனப் பல முறை பரிசோதிக்கப்பட்டவை. பூமியின் முதல் மனித உயிரான நீ, உன் கைகளால் இதை இந்த வனம் முழுவதும் தூவிவிட்டு வா. இப்பூமி உள்ள வரை உன் கைகள் வழியாக விழுந்த உயிர் கம்பீரமாக நிலைத்து இருக்கட்டும்!”

– மார்ச் 2011

Print Friendly, PDF & Email

1 thought on “ஆதியிலொடு அன்பிருந்தது…

  1. அற்புதம்! அன்பையும் சுதந்திரத்தையும் பற்றிய மிகத் தெளிவான சிந்தனைகளும் கருத்துக்களும்! அன்பைப் பற்றிய முழுமையான, முதிர்ச்சி பெற்ற தெளிதல்!
    தமிழ் சினிமாவின், அன்பைப் பற்றிய அரைவேக்காட்டுத்தனமான வெளிப்பாடுகளைப் பார்த்து அலுத்துப் போயிருந்தவர்களுக்கு, இப்படி ஒரு அழகான கோணத்தில் அன்பைப் பற்றிப் படிப்பதற்கு அதிர்ஷ்டம் வேண்டும்.
    இந்த கதையை படிக்க நேர்ந்ததில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
    ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *