ஆண்குரல்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: April 2, 2021
பார்வையிட்டோர்: 4,006 
 

டெலிபோன் சில வினாடிகளுக்குச் சத்தம் செய்து விட்டு நின்றுவிட் டது. மீண்டும் இடையிடையேவிட்டு விட்டுச் சத்தம் செய்தது.

யார் இந்த நேரத்தில் இப்படிப் பேசப்போகின்றார்கள் மணிக்கூடு சரியாக எட்டுக் காட்டிற்று. உத்தியோகத்தர் நாளாந்த வேலைகளை ஆரம்பிப்பதற்கு இன்னமும் ஒரு மணித்தியாலம் இருந்தது.

வேண்டா வெறுப்பாக டெலி போன் றிரிவரை இழுத்துக் காதில் மாட்டிக்கொண்டேன்.

“ஹலோ”

‘ஹலோ” என்றேன் நான்.

“இங்கே நூறின்!”

“எப்படி உங்கள் சுகம்?”

“நல்ல சுகம், நன்றி

“நீ எங்கிருந்து பேசுகிறாய்!” சற்று உணர்ச்சியோடு கேட்டேன்.

“இந்த உலகத்திலிருந்து”

“நல்ல காலம், சந்திர மண்டலத் திலிருந்தல்லவே?”

AnKuralpic“நான் அங்கிருந்தால் கொடுத்து வைத்தவளல்லவோ” என்றவள், இதுதான் என் கடைசி வார்த்தை என்றாள். அவள் குரலில் ஏக்கம் பிரதிபலித்தது. அவ்வளவுதான் டெலிபோனும் துண்டிக்கப்பட்டுவிட்டது. பிரரையுடன் ஆசனத்தில் அமர்ந்து கொண்டேன்.

நூறினை எப்படி முதலில் சந்தித்தேன் என்று ஞாபகம் இருக்கிறது. நான் அவளை பஸ்ஸில் பலமுறை பார்த்திருக்கிறேன். ஆனால் அன்று அவள் எப்பொழுதும் காணப்படாத அழகுடன் காணப்பட்டாள். செக்கச் சிவந்த மேனி, சொண்டுக்குச் சிவப்பு, கருவண்டுக் கண்கள், இமையில் பூசிய மை இவையெல்லாம் அவளின் அழ கைப்பிரமாதமாகவும், கவர்ச்சியாகவும் ஆக்கிவிட்டன.

நாங்கள் பிரயாணம் செய்த பஸ் இடம் எதுவும் இல்லாத அளவிற்கு பிரயாணிகளால் நிறைக்கப்பட்டிருந்தது. நான் இருந்த இடத்திற்கு அருகில் அவள் நின்றிருந்தாள். பெண் என்றால் பேயும் இரங்கும் என்பார்களே அது உண்மையோ என்னவோ. நான் நெருங்கியிருந்து சிறிது இடம் கொடுத்தேன். கானலில் களைத்தவன் நிழல் கண்டால் தயங்கமாட்டானே. அதுபோல் அவளும் வேகமாகச் சென்ற பஸ்ஸின் ஆட்டத்தினால் அலைக்கப்பட்டு, அல்லற்பட்டவள் அல்லவா, உட்கார்ந்து விட்டாள். அவள் எனக்குப் பக்கத்தில் இருந்து கொண்டதால் இருவருக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது.

சந்தர்பபவசத்தால் நாம் என்ன கதைத்தோம் என்பதைச் சரியாக ஞாபகத்துக்குக் கொண்டுவர முடியவில்லை. ஆனால் தனது பெயர் நூறின் என்றும், தாபனமொன்றில் தொலைபேசி இயக்குநராக வேலை செய்வதாகக் கூறியது இப்பொழுது ஞாபகத்திற்கு வருகிறது. தன் மீது விருப்பங்கொண்டு தொடர்பை ஏற்படுத்திக் கொண்டவருக்கு முதல் சந்தர்ப்பத்திலேயே தனது உள்ளக் கிடக்கைகளை எடுத்துக் கூறிய அவள் போன்ற ஒருத்தியைக் காண்பது அரிது.

எனது டெலிபோனின் இலக்கம் நூறினுக்கு எப்படித் தெரியவந்தது? நான் பஸ்ஸில் பிரயாணம் செய்யும் போது யாருடனோ நடத்திய சிறிது சம்பாஷணையின் போது வெளியிடப்பட்டது. அவள் காதில் பட்டிருக்கும் இவையெல்லாம் என் மனக்கண் முன் தோன்றி மறைந்தன.

நான் அவளுடன் கொஞ்சம் கூடுதலாகக் கதைத்திருக்க வேண்டு மென்று விரும்பினேன். ஆனால் அதற்கிடையில் டெலிபோன் துண்டிக்கப்பட்டுவிட்டது. அதனால் நான் ஏமாற்றமும், மனக் குழப்பமும் அடைந்தேன். அவள் திரும்பவும் டெலிபோனில் பேசுவாள் என எதிர்பார்த்தேன்.

எமது ஆபீஸ் கூட்டப்படும் போது, அதனால் எழும்பிப் பறக்கும் தூசிகள், துடைக்கப்பட்ட மேசை மீது மீண்டும் சில நிமிடங்களில் படிந்தன.

நன்றாகத் திறக்கப்பட்டிருந்த யன்னல் வழியாக வந்த வாடைக்காற்று என் வாலிப மனதை வாட்டியது. அதனால் துர்நாற்றம் அங்கு இல்லாமற் போயிற்று.

மின்விசிறிகள் மிக விசித்திரமாகச் சுற்றத் தொடங்கின. மாலையில் நிறுத்தப்படும் வரையும் அவைகள் கழன்று கொண்டே இருக்கும். கிர்…. கிர் …. கிர்…. என்ற ஒரே சத்தம் அறை முழுவதும். அவசரமாக வரும் காலடிச் சத்தம் விறாந்தையில் கேட்டது. பின் படிப்படியாகக் குறைந்து விட்டது.

இன்னும் பத்து நிமிடங்களில் மேல் உத்தியோகத்தர் வந்துவிடப் போகின்றார். அதற்கு முன் அவள் மீண்டும் பேசமாட்டாள் போற் தோன்றுகிறது. நான் தான் பரிதாபத்திற்குரியவானாவேன், என்று எனக்குள் கூறிக் கொண்டேன்.

டெலிபோன் மீண்டும் அடித்தது. நான் இடத்திலிருந்து பாய்ந்தோடி றிசீவரை இழுத்து எனது காதில் வைத்தேன். “ஹலோ” என இரைச்சலோடு ஒரு ஆண் குரல் கேட்டது. ஒரு வார்த்தை கூடப் பேசாமல் படக்கென்று றிசீவரை அப்படியே வைத்துவிட்டேன் –

பியோன் இன்னமும் அறையை ஒழுங்குபடுத்திக்கொண்டேருந் தான். றேயில் பைல்கள் நிரம்புமளவிற்கு அங்கும் இங்குமாக பைல்களைப் போட்டான். இன்னமும் சில நிமிடத்தில் விரல்களின் விசையினால். பக்கக் கணக்காக எழுத்துப் பிரதிகள் அச்சிடப்போகும் தட்டச்சின் தூசிகளும் துடைக்கப்பட்டன.

திறைசேறிக் கட்டிடத்தின் இரு வாயில்களிலும் அலுவலக உத்தியோகத்தர்கள் வந்து குவிந்து கொண்டே இருந்தனர். அவர்களுடைய உதடுகளில் புன் சிரிப்பைக் காணவில். அவர்களுடைய கால்கள் தானாகவே அடியெடுத்து வைத்துக்கொண்டிருதன . திறைசேரி அறையொன்றில் அடைபட்டிருப்பது அதிகான உத்தியோகத்தர்களுக்குப் பெரும் அலுப்பும் சலிப்புமாகவிருந்தது.

மனத்தாபங்கள் அவர்களது முகங்களில் தாண்டவமாடின. வாழ்க்கை என்னும் படகை ஓட்டும் பொழுது ஏற்படுகின்ற பிரச்சினைகளுக்குப் பரிகாரம் காணாதவர்கள் அவற்றைத் தீர்ப்பதற்கான வழிவகை களெதுவுமின்றி சஞ்சலத்துடன் காணப்பட்டனர்.

பதவியாளர் அலுவலகத்துக்குள் நுழைந்ததும் உத்தியோகத்தர்கள் விறுவிறுப்பாக வேலை செய்யத் தொடங்கினர். அலுவலகத்தில் சுறுசுறுப்புக் காணப்பட்டது. பைல்கள் உள்ளேயும் வெளியேயும் நகரத் தொடங்கின. மின்விசிறியின் கிர் …. கிர்… கிர்….. என்ற தொடர்பான சத்தமும், ராப் … ராப்… டக் டக். எனத் தட்டெழுத்தச்சின் அச்சமும் மற்றைய இரைச்சலுடன் கலந்தன.

“நூறின் மீண்டும் டெலிபோனில் பேசுவாளா” ஒரு பெண் குரல் என்னுடன் கதைக்க விரும்புகிறதென்று உயர் உத்தியோகத்தர் அறிந்தால் என்னைப் பற்றி என்ன நினைப்பார். அதைப்பற்றி அவர் ஏன் ஐயம் கொள்ள வேண்டும்?

அந்தப் பெண்குரல், எனது மனைவியின்தோ, சகோதரியின்தோ. அல்லது மாமியினதோ, இல்லை சினேகிதியினுடையதாகத்தான் இருந்தாலும், என்னைப்பற்றி அவர் தவறாக விளங்கிக்கொள்வாரா?

டெலிபோன் மீண்டும் அலறியது. இம்முறை சில நிமிடங்கள் மட்டும் தான். எனது இதயம் விசையாக அடிக்கத் தொடங்கியது. எனது காதுகள் புல்லரித்தன.

உயர் உத்தியோகத்தர் கேட்கும் கருவியைத் தூக்கினார். நடுக்கத்துடன் சில வினாடிகள் கதைத்தார் – இதே போன்ற வார்த்தைகள் முன்பும் நூற்றியொரு முறை கதைத்திருப்பதை நான் கேட்டிருக்கிறேன். வாழ்க்கை என்பது நடந்தவற்றையும், சம்பவங்களையும் படம் பிடித்துக் காட்டும் ஒரு சக்கரம்.

பைல்களைப் பார்ப்பதும், குறிப்புரைகள் வரைவதும், றேயில் போடுவதுமாக நான் முழுவதும் பாடுபட்டுக்கொண்டிருந்தது, பாடிக்கொண்டு போகப் போக தொனி குறைந்து கொண்டு போகும் கிராமப்போன் தட்டுக்கள் போல பெரும் சலிப்பாக இருந்தது அலுவலக வாழ்க்கை என்பது முடிவில்லா ஒன்று எட்டு மணித்தியால் வேலை நேரத்தைக் கடத்திச்செல்வதற்கு மணிக்கூட்டிற்கு எவ்வளவு நேரம் எடுக்கிறது.

நான் யன்னல் ஊடாக வெளியே பார்த்தபோது பல மாடிகளைக் கொண்டுள்ள இன்சூரன்ஸ் கட்டிடத்தின் கோபுரம், மாலையில் அஸ்தமிக் கும் சூரிய ஒளியை எதிர்த்துக் கொண்டு கெம்பீரமாய்க் காட்சியளித்தது. பிரகாசம் பொருந்திய மத்திய வங்கிக் கட்டிடம் தனக்கு முன் தோன்றிய இன்சூரன்சுக்குச் சவால் விடுவதுபோல கெம்பீரமாக வளர்ந்து கொண்டிருப்பது என் மனச் சிந்தனையைச் சிதைத்தது. அதனால் எனது எண்ணங்கள் எல்லாம் சின்னா பின்னமாயின. என்னால் சிந்திக்கவே முடியவில்லை. காலையில் இருந்தளவு பைல்களின் அளவே எனது றேயில் மாலையிலும் நிறைந்திருந்தன. இன்று ஒரு சஞ்சலம் நிறைந்த நாள், நானே என்னை நொந்து கொண்டேன்.

இன்றுமொரு வேலை நாள் போய்க் கொண்டேயிருந்தது, அலுவலக உத்தியோகத்தர்கள் வாயில் வழியாக வெளியேறிக்கொண்டிருந்தனர்.

இன்றைய நாள் எனக்கு ஏமாற்றத்தைத் தந்த நாளாகும். காலையில் டெலிபோனில் பேசியது நூறினாக இருந்தால், எனது டெலிபோன் எண் அவளுக்குத் தெரியுமாகையால், அவள் மீண்டும் கட்டாயம் என்னுடன் டெலிபோனில் கதைத்திருப்பாள் தானே.

அதே பெயருள்ள வேறு பெண்ணாக இருக்கக்கூடுமா. அப்படியானால் டெலிபோனில் நான் கேட்ட இனிமையான மென்குரல் நூறினாக இருக்க முடியாதா அல்லது அதே பெயருள்ள அவளது இனிய குரல் போன்ற இன்னொருத்தியாக இருக்கக் கூடும், என என்னுள்ளே சிந்தித்தேன். சரி! அடுத்த நாள் காலையிலாகுதல் நூறின் குரலைக் கேட்கலாம்தானே யென்ற நம்பிக்கையுடன் எனது பைலை எடுத்துக் கொண்டு அறையைவிட்டு வெளியேறினேன், நிம்மதியற்றமனதுடன்.

– நிர்மால் சரத்சந்திரா – தமிழில் : ஐ .தி.சம்பந்தன் – அஞ்சலி மாத சஞ்சிகை – ஜூன் 1971

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *