அவளுக்கு யாரும் இணையில்லை

4
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்  
கதைப்பதிவு: February 8, 2014
பார்வையிட்டோர்: 25,648 
 

நாள்:நவம்பர் 5 2010,இடம்:கொலன் நகரம்,ஜெர்மனி.

அன்று காலை அலுவலகம் வந்ததும் காலண்டரில் தேதியை நகர்த்தினேன். முன்தினம் இரவு லீவுக்கு வருவது பற்றி அம்மாவிடம் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தது அப்போது நினைவுக்கு வந்தது.அதன்படி வரும் டிசம்பர் இறுதியில் முப்பது நாட்கள் விடுப்பில் அப்படியே பொங்கலையும் சேர்த்துக் கொண்டாடும் நோக்கில் விண்ணப்பப் படிவத்தை நிரப்பிக் கொண்டிருந்தேன்.

‘என்ன சார் காலைலயே பிஸியா? வாங்க கோப்பிக்கு போகலாம்’ என்று நாற்காலியின் பின்புறம் தட்டினாள் நந்தினி.’ஹாய்! குட் மார்னிங்!ஒன்னும் இல்ல லீவ் அப்ளைப் பண்ணப்போறேன்’ என்றேன்.

வாவ்!இந்தியா போறிங்களா? என்றவளிடம் ‘ம்… ஆமா’ என்றேன்.

கிரேட்! ‘நல்லா என்ஜாய் பண்ணுங்க’ என்று கூறிவிட்டு ‘நானும் வரலாமா?’ என்று கூறிச் சிரித்தாள்.

‘ ம்ம்ம்…தாராளமா வா போகலாம்’ என்று கூறிக்கொண்டே கோப்பையை எடுத்துக் கொண்டு அவளுடன் சென்றேன்.

நந்தினி என்னைப் போல பணி நிமித்தமாக இங்கு வந்தவள் அல்ல.இலங்கையின் மட்டக்களப்பைத் தனது பூர்வீகமாகக் கொண்டவள் சிறுவயதிலேயே தன் பெற்றோருடன் இங்கு குடியேறி வளர்ந்து பயின்று என்னுடன் பணிபுரியும் ஒரு தமிழ்க் குடும்பத்துப் பெண்.

காபியை உறிஞ்சியவள் ‘எத்தனை கிழமை போறிங்க? என்றாள்.

‘தேர்ட்டி டேஸ்’ என்றேன்.ம் அம்மா அப்பா மற்ற சொந்தம் எல்லோரையும் பார்க்கறது சந்தோசம் தானே’ என்றாள்.

‘ஹே நீயும் வா போகலாம்’ என்றேன். ‘சும்மா பகடி பண்ணாதிங்கோ ராம் என்றாள்.

‘நந்து ஐ ஆம் சீரியஸ்’… ‘சரி வாரன் ஆனால் டிக்கெட் காசு நீங்கள் தான் கட்டோணும்’ என்று சிரித்தாள்.

சரி என்று நான் ஆமோதிக்க சிறிது நேர உரையாடலுக்குப் பின் மீண்டும் பணியில் சென்று அமர்ந்தோம்.

அன்று மாலை அம்மாவிடம் பயணம் பற்றி பேசிக் கொண்டிருந்தேன்.இரண்டு ஆண்டு கழிந்து ஊருக்குப் போகும் மகிழ்ச்சி இரண்டு மாதத்திற்கு முன்பே தொற்றிக் கொண்டது.அம்மாவிடம் பேசிவிட்டு அழைப்பைத் துண்டித்த போது தான் நந்தினியின் நினைவு வந்தது.நந்தினிக்கு போன் செய்து மீண்டும் அதுபற்றி நினைவூட்ட அவள் தன் பெற்றோரிடம் ஆலோசித்துவிட்டுச் சொல்வதாக சொன்னாள்.நந்தினியை நான் வற்புறுத்தி அழைக்கக் காரணம் உண்டு.இந்தியா செல்லவேண்டும் என்பது அவளது நீண்ட நாள் கனவு.என்னிடம் பலமுறை அதை வெளிப்படுத்தியிருக்கிறாள்.வெளி நாட்டில் வளர்ந்தவள் என்றாலும் தமிழ் மீதும் தமிழ்க் காவியங்கள் மீதும் அவள் கொண்ட பற்று அளப்பரியது.அவளிடம் பொங்கி வழியும் தமிழ் மற்றும் சைவத்தின் மீதான பற்றில் நான் பலமுறை நனைந்திருக்கிறேன்.அப்பரையும் சுந்தரையும் அவள் மிகவும் நேசிக்கிறாள்.அவளைச் சுற்றி எப்பொழுதும் வட்டமிட்டுக்கொண்டிருக்கும் தமிழ் அலை அவளால் என்னையும் ஆக்கிரமித்தது.இக்காலத்துப் பெண்களுள் நந்தினி குறிஞ்சிப் பூ போன்று அரியவள்.

வார இறுதி ஆதலால் பின்காலை வரை தூங்கிக் கொண்டிருந்த என்னை நந்தினியின் அழைப்பு எழுப்பியது.பாதி கண்களை மூடியபடி போனை எடுத்து ஹலோ என்றேன்.

ஹலோ ராம் குட் மார்னிங்! அப்பாட்ட சொன்னன்…அவர் அனுமதிக்க இல்ல…என்று சொல்லி ‘சாரி ராம்’ என்றாள்.

நான் சற்று யோசித்தவாறு ‘ஓகே ஈவெனிங் நா வரேன்’ என்று சொல்லி துண்டித்தேன்.

புத்தாண்டு,பொங்கல் தினம் என சிலமுறை நந்தினி வீட்டிற்குச் சென்றிருக்கிறேன்.மாலை 5 மணி அளவில் ஒருமணி நேர பயணத்தில் நந்தினியின் வீட்டை அடைந்தேன்.காலிங் பெல்லை அழுத்தியபோது நந்தினி கதவைத் திறந்து ஹாலில் அமரச் செய்தாள்.

சமையற்கட்டிலிருந்து வெளிவந்த நந்தினியின் அம்மா ‘வா ராம்!எப்படி சுகம்?’ என நலம் விசாரித்தார்.நந்தினி டீ எடுக்க உள்ளே சென்ற வேளை ‘நேத்து நந்தினி சொன்னா,ஆனா அவட அப்பா கொஞ்சம் யோசிக்கிறார்.கொஞ்சம் நேரம் இரு அவர் இப்ப வந்திடுவார் என்றார்.டிவியின் இசைப் பாடலில் சற்று நேரம் மூழ்கினேன்.வெளியிலிருந்து வந்த நந்தினி ‘ராம் ராம் அப்பா வந்திட்டார்’ என்று சற்று பதட்டத்துடன் என்னிடம் வந்து கூறினாள்.ஹாலில் வந்து அமர்ந்தவர் என்னை நலம் விசாரித்துவிட்டு ‘ராம் உன்கூட அனுப்புறது எனக்கு ஒரு பிரச்சினையும் இல்ல.இருந்தாலும் காலம் கெடக்குற கெடையில வயசுக்கு வந்த பொண்ண எப்டி அவ்ளோ தூரம் அனுப்புறது.அவள நாங்க ஒரு நாள் கூட விட்டு பிரிஞ்சது இல்ல’ என்றார்.நந்தினி ஒரு படபடப்புடன் கைகளைப் பிசைந்தவாறு நின்று கொண்டிருந்தாள்.

‘அப்பா நா பத்திரமா கூட்டிட்டு போயிட்டு வரேன் நீங்க ஒன்னும் கவலைபடாதிங்க என்றேன்.’அப்பா தினமும் நான் உங்கட்ட Skype ல கதைப்பன்,ப்ளீஸ் பா முப்பதே நாட்கள் தான்’ என்றாள் நந்தினி.சிறிது நேரம் பதிலேதும் கூறாமல் இருந்துவிட்டு ‘ராம் எங்கட எதிர் காலத்தோட ஒற்றே நம்பிக்கை நந்தினி மட்டுந் தான்.அவளுக்கு ஒன்டுன்ன பிறகு நாங்கள் வாழ்வதில் எந்தப் பயனும் இல்லை.உன் மீது உள்ள நம்பிக்கையில் அனுப்புறன் எங்கள ஏமாத்திடாத’ என்றார்.ஓடிச் சென்று தன் அப்பாவைக் கட்டிக்கொண்ட நந்தினிக்கு கண்கள் கலங்கிற்று.

‘அப்பா எங்கள் வீட்டில் நானும் நந்தினியைப் போல ஒரே பிள்ளைதான்.ஒற்றைப் பிள்ளை பெற்றவர்களின் மனதை நான் நன்கு அறிவேன்.நந்தினியைப் பாதுகாப்புடன் அழைத்துச் சென்று வருவேன் நீங்கள் கவலைப் படவேண்டாம்’என்று கூறி விடை பெற்றேன்.

சிறிது நாட்களில் விசாவுக்கு விண்ணப்பித்து கிடைக்கப் பெற்றாள் நந்தினி.நந்தினியை அழைத்துச் செல்வதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி.வீட்டில் நான் இதைப் பற்றி கூறியபோது அவர்கள் பதிலேதும் கூறாமல் இருந்த நிலை நான் எதிர்பார்த்த ஒன்றுதான்.இருவரும் நாட்களை எண்ணிக்கொண்டே நகர்த்த பயணிக்கும் தேதியை விரைவாக எட்டினோம்.அன்று காலை புறப்பட்ட நான் நந்தினி வீட்டிற்குச் சென்று டாக்ஸியில் நந்தினியையும் அவள் பெற்றோரையும் பிக்கப் செய்துகொண்டு விமான நிலையம் சென்றோம்.செக்இன் முடிந்த பிறகு காத்திருந்த நேரத்தில் நந்தினியின் அம்மா அவளை தனியே அழைத்து எதோ சொல்லிக் கொண்டிருந்தார்.நான் அவள் அப்பாவிடம் தொலைபேசி எண்,முகவரி என எல்லாவற்றையும் மீண்டும் ஒரு முறை சரிபார்த்துக் கொள்ள வேண்டி கொடுத்தேன்.நேரம் ஆக இருவரும் செக்யூரிட்டி செக் செய்ய கிளம்பினோம்.போர்டிங் பாசுடன் சிறிதுநேரக் காத்திருப்புக்குப் பின் ஒருவழியே விமானத்தில் சென்று அமர்ந்தோம்.

விமானம் உருண்டோடி பூமிப் பந்துக்கு விடை கொடுத்த நொடியில் ‘நன்றி ராம் நீங்க மட்டும் இல்லை எண்டால் நான் இந்தியா பக்கம் போயிருக்கவே இயலாது’என்றாள்.நான் சிரித்துவிட்டு வெளியே பார்த்துக் கொண்டு வந்தேன்.படம்,சிறிது நேர உரையாடல்,சிற்றுண்டி,தூக்கம் என பத்து மணிநேர பொழுதை நடுவானில் கழித்தோம்.சென்னை விமான நிலையத்தைத் தொட இன்னும் முப்பதே நிமிடங்கள் உள்ளதாக வந்த அறிவிப்பைக் கேட்டு என்னைப் பார்த்துச் சிரித்தாள்.விமானம் தரையைத் தொடும் வேளையில் அவளது உடலில் ஏற்பட்ட சிலிர்ப்பை நான் கவனிக்கத் தவறவில்லை.சிறு குழந்தையைப் போல வெளியே எட்டி பார்த்த்கொண்டே இருந்தாள்.விமானத்தை விட்டு கீழே இறங்கும் வேளையில் ‘நந்தினி வலது காலை எடுத்து வை’ என்றதைக் கேட்டு சிரித்துக் கொண்டே எடுத்து வைத்தாள்.அங்கிருந்து ஏழு மணிநேர பேருந்துப் பயணத்தில் வழியில் கண்ட எல்லாவற்றையும் பற்றி நந்தினியிடம் சொல்லிக்கொண்டே பயணித்தேன்.நீண்ட பயணத்தில் வெகுவாக களைத்திருந்தாள் நந்தினி.மீதமிருந்த தொலைவை தூக்கம் ஆக்கிரமித்தது.தஞ்சையைத் தொடும் வேளையில் தூக்கம் களைந்து இறங்கத் தயாரானோம்.பேருந்தைவிட்டு இறங்கிய நொடியில் எதிர்புறமாக என் பெற்றோர் நின்றிருந்தனர்.

கட்டித் தழுவி அன்பு பாராட்டினாள் அம்மா.தலையைத் தொட்டு வருடிக் கொடுத்தார் அப்பா.சற்று சுதாரித்த நான் நந்தினியை அறிமுகம் செய்து வைத்தேன்.அங்கிருந்து இரண்டு மணி நேரக் கார் பயணத்தில் நந்தினியிடம் அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டுக் கொண்டே வந்தாள் அம்மா.ஒருவழியே வீட்டை அடைந்தோம்.நந்தினிக்கு தயார் செய்யப்பட தனி அறையை அம்மா கூட்டிச் சென்று காட்டினாள்.நந்தினியிடம் வீட்டிற்கு வந்தது முதல் ஒரு கூச்சமும் அமைதியும் தொற்றிக் கொண்டது.குளித்து உடை மாற்றி வரச் சொல்லி தேவையானதை நந்தினியிடம் கொடுத்தாள் அம்மா.குளித்துவிட்டு வர நான் அப்பா நந்தினி மூவரும் உணவருந்தச் சென்றோம்.மிகவும் வெட்கத்துடன் மெதுவாக சாதத்தை பிசைந்து கொண்டிருந்த நந்தினியை அம்மா ‘சும்மா கூச்சப்படாம நல்ல சாப்பிடுமா’ என்று அறிவுறுத்தினாள்.அப்பா அமைதியாய் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.சாப்பிட்டு முடிந்ததும் நான் அம்மா நந்தினி மூவரும் சிறிது நேரம் காற்றோட்டமாய் வெளியே அமர்ந்திருந்தோம்.பக்கத்துவீட்டு அக்காவின் குழந்தைகள் மாமா என ஓடிவந்து கட்டிக் கொண்டன.அவர்களிடம் நந்தினியை அறிமுகம் செய்தவேளை அம்மா அவர்களுக்கு சாக்லேட் கொடுத்தாள்.நந்தினியை உறங்கச் செல்லுமாறு அம்மா அறிவுறுத்த அவளும் ஆமோதிப்பதாக எழுந்து சென்றாள்.

ஏண்டா இந்தப் பொண்ணோட அப்பா அம்மா ஒன்னும் சொல்லலையா?

‘இல்லை’ என்றேன்.

மனசார எப்படி தான் அனுப்பி வச்சாங்களோ!
‘அம்மா… கொஞ்சம் சும்மா இரேன்,நா எப்படி உங்களுக்கோ அப்படி தான் நந்தினி அவங்க அப்பா அம்மாக்கு’ என்றேன்.
மீண்டும் ‘நல்ல புள்ளையாத்தான் இருக்கு’ என்றாள்.
அம்மா ‘நானும் போய் தூங்குறேன்’ என்று கூறிவிட்டுக் கிளம்பினேன்.ஹாலில் சென்று படுத்து கண்களை மூடிய எனக்கு நடந்ததெல்லாம் நனவா கனவா என்ற குழப்பமே வந்தது.நந்தினி நம் வீட்டில் தான் இருக்கிறாள் என்பதை எண்ணுகையில் மனம் குதூகளித்ததோடு அவளை அழைத்து வந்தது எதோ பெரும் சாதனையாகவும் எனக்குப் பட்டது.

மறுநாள் காலை சற்று தாமதமாகவே எழுந்தேன்.அதற்குள் நந்தினி எழுந்திருக்கிறாள்.அம்மாவுடன் அடுப்படியில் எதோ பேசிக்கொண்டிருந்தாள்.நான் சென்று காலைக் கடன்களை முடித்துவிட்டு வந்தபொழுது அம்மா தோசை சுட்டுக் கொண்டிருந்த மனம் ஹால் வரை பரவி இருந்தது.நேரே அடுப்படிக்குச் சென்ற சாப்பிட ஆரம்பித்தேன்.நந்தினி சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.நீண்ட நாளுக்குப் பின் அம்மா கையால் தோசை.நந்தினியைக் கூட நான் அப்பொழுது கண்டுகொள்ளவில்லை.5 தோசைகளை உள்ளே தள்ளிய பின்னரே நிமிர்ந்து பார்த்தேன்.சாப்பிட்டு இருவரும் ஹாலில் வந்து அமர்ந்தோம்.எங்கெல்லாம் நந்தினியை அழைத்துக் கொண்டு செல்வது என திட்டமிட ஆரம்பித்தேன்.இடையில் பொங்கல் மற்றும் சில உறவினர் வீட்டிற்கு நான் செல்லவேண்டி இருந்ததால் அவற்றை ஒதுக்கிய தினங்களில் திட்டமிட்டோம்.அப்படி அவளின் விருப்பத்தின் அடிப்படையில் முதலில் தஞ்சைப் பெருவுடையார்,சிதம்பரம் நடராஜர்,மதுரை மீனாக்ஷி, திருவையாறு, திருநாகேஸ்வரம், பழனி ஆகியவற்றைக் குறித்துக் கொண்டோம்.

காரிலேயே செல்வதாக முடிவு செய்தபோது,பக்கத்து வீடு கணேசன் மாமா டிரைவிங் நன்கு தெரிந்தவர் என்பதால் அவரை அழைத்துக் கொண்டுபோகுமாறு அப்பா அறிவுறுத்தினார்.இரண்டு தினங்கள் கழித்து ஓர் இளங்காலையில் பெருவுடயாரைத் தரிசிக்கப் புறப்பட்டோம்.உண்மையில் இந்த 26 வருடத்தில் 50 km தொலைவில் உள்ள பெருவுடையாரை இப்பொழுதுதான் முதலில் தரிசிக்கப் போகிறேன் என்பது நந்தினியிடம் நான் சொல்லாத உண்மை.காலைப் பத்து மணி அளவில் கோவிலுக்கு முன் காரை நிறுத்தினோம்.அதன் பிரமாண்டத்தில் சொற்களற்றுப் போய் ஆலயத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தோம்.அதன் படிகளில் கால் வைத்து ஏறும்போது அவளுக்கும் சரி எனக்கும் சரி ஏற்ப்பட்ட அதிர்வு முற்றிலும் புதுமையானது.நந்தினி ஓடிப்போய் அதன் தூண்களைக் கட்டிப் பிடித்தாள்,வருடிக் கொடுத்தாள்.மிகவும் உணர்ச்சிவயப்பட்ட நிலையில் அவளைக் கண்டேன்.உள்ளே செல்லச் செல்ல என்னையும் மறந்தாள் பின் தன்னையும் மறந்தாள்.உள்ளே சென்று ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தரிசித்துவிட்டு சுற்றினாள்.

வெளியே வரும்போது ராம்’ராஜராஜ சோழன் ஈழத்தை ஆண்டபோது தான் அவருக்கு இப்படி ஒரு கோவிலைக் கட்ட வேண்டும் என்ற எண்ணம் வந்ததாம்’ தெரியுமா உங்களுக்கு? என்றாள்.

நந்தியையே பலமுறை சுற்றி வந்தாள்.’இந்த இடத்தில் தான் அப்பொழுது 400 நடன மங்கைகளும் நடனம் ஆடி இருப்பார்கள் போலும் என்று அந்த வெளியை நோக்கி ஓடினாள் நந்தினி’.நான் கோவிலை ரசித்ததைவிட அவளது கண்களில் தெரிந்த ஆர்வத்தையும் துடிப்பையும் பெரிதும் ரசித்தேன்.கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் கோவிலில் இருந்துவிட்டு திரும்பினோம்.மிதிய உணவிற்கு மூன்று மணி அளவில் வீடு திரும்பினோம்.அடுத்து சிதம்பரம் நடராஜரை தரிசிக்க வேண்டும் என்பது அவளது விருப்பம்.

இரண்டு நாட்களுக்குப் பின் கணேசன் மாமாவின் துணையுடன் சிதம்பரம் நோக்கிப் புறப்பட்டோம்.140 km தொலைவுப் பயணம் சிற்றுண்டி தந்த மயக்கத்தில் காரில் நன்றாக உறங்கினாள் நந்தினி.கிட்டத்தட்ட 11 மணி அளவில் கோவிலை எட்டினோம்.

ராம் `சிதம்பரம் கோவிலின் சிறப்புகள் என்னவென்று தெரியுமா உங்களுக்கு?’என்றாள்.

சிறிது யோசித்தேன் வழக்கம் போல வெறுமையே மிஞ்ச உதட்டைப் பிதுக்கினேன்.

‘இது சிவனின் பஞ்ச பூதத்தைக் குறிக்கும் தலங்களுள் ஒன்று.ஒவ்வொரு கோவிலும் ஒரு பூதத்தைக் குறிக்கும்.இது ஆகாயத்தைக் குறிக்கும் தலம்.மீதமுள்ள நான்கில் திருவண்ணாமலை நெருப்பையும்,திருவானைக்காவல் நீரையும்,காஞ்சி நிலத்தையும்,காளகஸ்தி காற்றையும் குறிக்கும் வண்ணம் அமைந்துள்ளன என்றாள்.

‘ஓய் நீ இன்ன கொஞ்ச நாள்ல காவி டிரஸ் போட்டிடுவேணு நெனைக்கிறேன்’

‘ஹே அப்படி எல்லாம் இல்ல ராம்,எல்லாம் ஒரு இண்டரெஸ்ட் தான்’என்றாள்.

கூத்தாடும் தமிழ் நாயகனைக் கண்டத்தில் நானும் கொஞ்சம் ஆடித் தான் போனேன்.நடராசனின் ஆனந்தத் தாண்டவத்தையும் அவனது அங்க நிலைகள் மறைவாக உணர்த்தும் உண்மைகளையும் எடுத்துக் கூறினாள் நந்தினி.உண்மையில் தமிழையும் கலையும் இந்துத்துவத்தையும் பிரித்தறிவது என்பது இயலாத ஒன்று என உணர்ந்தேன்.அப்படியே திருவையாறும் தேவாரத்தில் பாடப்பெற்ற திருத்தலமான திருநாகேஸ்வரமும் சென்று திரும்பினோம்.நான் எனது உறவினர்கள் வீட்டுக்கு ஒரு சில நாட்கள் சென்று வந்தேன்.கிட்டத்தட்ட நாங்கள் வந்து பத்து நாட்கள் ஓடின.பொங்கலுக்கு இன்னும் ஒரு வார காலமே இருந்தது.அடுத்த எங்களது பயணம் பழனியும் மதுரையும் நோக்கி அமைந்தது.

நந்தினியோடு சேர்ந்து நானும் இப்போது தான் தமிழ் மண்ணை உற்றுப் பார்க்கிறேன்.அன்று காலை பழனிக்குச் சென்று முருகனைத் தரிசித்த அனுபவம் அந்த புத்துணர்ச்சியும் நான் வாழ்நாளில் இதுவரை அனுபவித்திராதது.

‘என்ன நந்தினி பேசாம வர்ற, பழனியோட சிறப்புக்கள் ஏதும் தெரியாத உனக்கு?’ என்றேன் சற்று கிண்டலாக.

கலகலவெனச் சிரித்தவள் ‘இருக்கு உங்கள போட்டு வதைக்க வேண்டாம் என சும்மா வாறன்’ என்றாள்.
‘ஹே பரவால்ல சொல்லு நா அப்படி ஏதும் நெனைக்கல’.

‘ம்ம்ம் சொல்லுறன்….என பழனியில் கோவிலின் கீழ் ஜீவசமாதி அடைந்த போகர் எனும் சித்தரையும் அவரது மருத்துவக் குறிப்பின் அருமைகளையும் விளக்கினால் நந்தினி.உண்மையில் அவளுடனான ஒவ்வொரு பயணமும் எனக்கு அறிவுப் பயணமாக அமைந்தது.மதுரை மீனாட்சியைத் தரிசிக்கப் புறப்பட்டோம்.

ராம் ‘எனக்கு கொஞ்சம் உடுப்புகள் வாங்கோணும் மதுரைல’என்றாள்

தரிசனத்துக்குப் பின் மதிய உணவை முடித்து அன்று மாலை வரை ராஜ்மஹால்,நல்லி என ஏறி இறங்கினோம்.நிறைய ஆடைகளை வாங்கிக் குவித்திருந்தாள் நந்தினி.நானும் என் பங்கிற்கு ஒரு பட்டுப் புடவையை வாங்கிக் கொடுத்தேன்.மாலை ஆறு மணி அளவில் மதுரையை விட்டுக் கிளம்பினோம்.

முந்தய நாள் அலைச்சலில் மறுநாள் காலை சிறிது தாமதமாகவே எழுந்தேன்.அன்று காலை நான் எழுந்தபோது அம்மா வாசலில் கோலம் போட நந்தினி அதற்கு வண்ணம் தீட்டிக் கொண்டிருந்தாள்.வீட்டில் எல்லோரும் பொங்கலுக்கான வேலையில் இறங்கினர்.நானும் என பங்கிற்கு ஒட்டடை அடிப்பதாக கம்பைத் தூக்கிக் கொண்டு அலைந்தேன்.அம்மா பழைய துணிகளை எல்லாம் எடுத்து கட்டிக் கொண்டிருக்க நந்தினி செடிகளுக்குத் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தாள்.அவள் இப்போது ஒரு சகஜ நிலைக்கு வந்திருந்தது எனக்கு மகிழ்ச்சியை அளித்தது.நந்தினி செடிகளுக்குத் தண்ணீர் பிடிப்பதையே பார்த்துக் கொண்டிருந்தேன்.என்னைக் கவனித்தவளை அம்மா உள்ளிருந்து அழைக்க சிரித்துக் கொண்டே ஓடினாள்.

அன்று பொங்கல் தினம்.காலையில் அய்யர் வந்து பொங்கலிட வேண்டிய நல்ல நேரத்தை குறித்துக் கொடுத்து அவருக்குச் சேரவேண்டிய வரும்படிகளை வாங்கிச் சென்றார்.
‘நந்தினி அங்க மாதிரி வீட்டுக்குளே பொங்கல் வைக்க மாட்டோம் இங்கே வாசலிலே தான்’

‘ஓ அப்படியா ஏன்? என்றாள்.

கதிரவனுக்குத் தானே நன்றி செலுத்துறோம்.அதெப்படி வீட்டுக்குள்ளே வைக்க முடியும்? ம்ம்ம்… இங்க கிராமத்துல வைக்கலாம்…அங்க ஜெர்மனில வச்ச அவ்ளோதான்,ஸ்னோ பொங்கல் தான்’ எனச் சிரித்தாள்.

அய்யர் சொன்ன நேரத்தில் நான் வாசலில் சிறு களிமண் மேடை அமைக்க சாணத்தில் பிள்ளையார் பிடித்து வைத்தார் அப்பா.அம்மாவும் நாந்தினியும் தாம்பூலத்தில் வழிபாட்டுப் பொருட்களுடன் வந்தனர்.தேங்காய் உடைத்து வழிபட்டு வாசலில் கோடு வெட்டினார் அப்பா.வெண்பொங்கல் பானையும் சர்க்கரைப் பொங்கல் பானையும் வைத்து அடுப்பை பற்ற வைத்தால் அம்மா.
நான் வெண்பொங்கல் பானையையும் நந்தினி சர்க்கரைப் பொங்கல் பானையையும் எரிக்க அம்மா தேங்காய் துருவிக் கொண்டிருந்தார்.காய்ந்த விறகினை எடுத்து வைக்க அடுப்பு அணைந்து புகையைக் கக்க ஆரம்பித்தது.புகையில் இரும ஆரம்பித்தவளை அம்மா வந்து விலக்கி அடுப்பைச் சரிசெய்து கொடுத்தாள்.அடுத்த வீடு வாசலில் புதிதாக திருமணம் ஆனா அண்ணனும் அண்ணியும் பொங்கல் வைத்துக் கொண்டிருந்தனர்.

‘நந்தினி முதல்ல என்னோட பான தான் பொங்கும் என்ன பெட்?
‘ஓ அப்படியா அதையும் பாப்பம்’என்று போட்டியிட்டாள்.வெண்பொங்கல் எளிதில் பொங்கிவிடும் என்பதை அறியாமல்.வெண் பொங்கல் பொங்க சிறிது நேரத்தில் நந்தினியின் சர்க்கரை பொங்கலும் பொங்கியது.அம்மா வந்து மஞ்சள் தோரணம் கட்டி இறக்கி வைத்தாள்.கதிரவனுக்குப் படைத்து மூதாதையர்களுக்குப் படைத்து உணவருந்தினோம்.வெளியில் வேப்பமர நிழலில் அமர்ந்தோம்.’ராம் இந்த பொங்கலை என வாழ்வில மறக்க இயலாது.’

ஓகே…’ஓய் வெத்திலை போடுவமா?’
ராம்’ நீங்க வெத்திலை எல்லாம் போடுவிங்களா என்ன?’

இங்க வந்து எப்பவாச்சும் நல்லா சாப்பிட்ட பாட்டியோட பைலேர்ந்து எடுத்துப் போடுவேன்.

ம்ஹும் …எனக்கு வேண்டாம் பா’என்றாள்

இரு நா எடுத்துட்டு வரேன்.

நானும் மடித்து வாயில் போட்டுக் கொண்டு நந்தினிக்கும் மடித்துக் கொடுத்தேன்.அவள் முகத்தைச் சுளித்துக் கொண்டே வாயில் போட்டு மெல்லத் துவங்கினாள்.

ஓய் ‘நல்லா நாக்கு செவந்த அவனுக்கு அவன் பொண்டாட்டி மேல நெறைய ப்ரியம் என்று சொல்லுவாங்க’ என்று நந்தினியிடம் நாக்கை நீட்டினேன்.

‘ம்ம்ம்.. நல்ல செவந்திருக்கு…’ஆனா இதுல சுண்ணாம்புதான் மேட்டர்,அது கரெக்ட் ஆ இருந்தா தான் செவக்கும்’என்றாள் புத்திசாலித்தனமாக.

‘உன் நாக்கை காட்டு என்றேன்’.சிரித்துக் கொண்டே மறுத்துவிட்டாள்.

மறுநாள் அன்று மாட்டுப் பொங்கல்.அன்று இரவு எங்களது பசு,மாமா,சித்தப்பா,பெரியப்பா என எல்லாருடைய வீட்டு மாடுகளையும் களத்தில் ஒன்றாக கட்டி பொங்கல் இட்டோம்.அன்று எல்லா உறவினர்களும் ஒன்றாக இருந்து மகிழ்ந்தோம்.நானும் என் மைத்துனர்களும் வேம்பு,ஆவரம்பு,பிரண்டை,கண்ணிபூ ஆகியன வைத்து மாலை கட்டி எல்லா மாடுகளுக்கும் அணிவித்தோம்.எண்ணெய் அரைப்பும் இட்டு வர்ணம் பூசி மகிழ்ந்தோம்.படையலுக்குப் பின் எங்கள் வீட்டுக் கன்றுக்கு பொங்கல் ஊட்டினாள் நந்தினி.அதை முழுதும் சாப்பிட்டு அவளது கையை நக்கிய கன்றை முத்தமிட்டாள் நந்தினி.மறுநாள் பொங்கல் விளையாட்டுகள் ஆரம்பமாகின.என் மைத்துனர்கள் வற்புறுத்த உரியடித்தலில் நானும் கலந்து கொண்டேன்.உரியை விட்டு நான் ஓரத்தில் நின்ற கிழவியை ஒங்க நண்பர்கள் பிடித்து கட்டை அவிழ்த்தனர்.அதைக்கண்டு விழுந்து விழுந்து சிரித்தாள் நந்தினி.

பொங்கல் முடிந்து ஒரு வாரம் வீட்டிலேயே கழிந்தது.இன்பமாக போய்க் கொண்டிருந்தது ஒவ்வொரு நாளும்.எனக்கு எதோ பரிக்காரம் இருப்பதாகவும் மேலும் குடும்பத்தில் எல்லாரும் இணைந்து ராமேஷ்வரம் செல்லத் திட்டமிட்டிருப்பதாகவும் சொன்னாள் அம்மா.அதன்படி ஓர்நாளில் ராமேஸ்வரம் புறப்பட்டோம்.எங்கள் வீட்டிலிருந்து கிழக்கு கடற்கரைச் சாலை வழி இனிதே எங்கள் பயணம் துவங்கியது.வழி நெடுக கடல் நீரும் உப்பலங்களும் தென்னை மரங்களும் நிறைந்த காட்சியில் மூழ்கினாள் நந்தினி.நான் என் அக்கா குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டு வந்தேன்.மண்டபத்தில் சிற்றுண்டியை முடித்து ராமேஸ்வரம் நோக்கி பயணித்த எங்களுக்கு பாதை விட்டு கடல் இரு புறமும் அழகே பிரிந்து கிடந்தது.பாம்பனைத் தொட்டோம்.2 km நீளமுள்ள பாலத்தை அதிசயித்துப் பார்த்தாள் நந்தினி.பாம்பனைக் கடந்த சில மணித்துளிகளில் ராமேஸ்வரம் கோபுரம் எங்கள் கண்ணில் தென்பட்டது.

ஒருவழியே கோவிலை எட்டினோம்.வண்டியை நிறுத்திவிட்டு எல்லோரும் கடலுக்கு குளிக்கச் சென்றோம்.வழியில் ஆங்கங்கே இருந்த வரலாற்றுக் குறிப்புகளை படித்துக் கொண்டே சென்றோம்.அங்கிருந்து இலங்கையின் தொலைவு மற்றும் வரலாற்றுக் குறிப்புகள் அடங்கிய கல்வெட்டுகளை நானும் நந்தினியும் நின்று பார்த்துவிட்டுச் சென்றோம்.இலங்கையின் திருகேதீஸ்வரம்.நகுலேஸ்வரம்,கோணேஸ்வரம் ஆகியவற்றுக்கும் ராமேஸ்வரத்துக்கும் உண்டான தொடர்பை அவை குறிப்பிட்டன.
மேலும் இலங்கையின் தமிழ் மன்னன் ஒருவன் அக்காலத்தில் தினம் ராமேஸ்வரத்தில் வந்து வழிபட்டுச் செல்வதற்கான அடையாளங்களையும் அவை சுட்டின.

கடல் சீற்றமில்லாமல் காலை நேரத்தில் மிகுந்த அமைதியுடன் காணப்பட்டது.நிறைய வடஇந்தியப் புனிதப் பயணிகள் எதோ மந்திரங்களை கூறிக் கொண்டே நீராடிக் கொண்டிருந்தனர்.நீருக்கடியிலிருந்து காசு பொறுக்கும் சிறுவர்கள் கூச்சலிட்டுக் கொண்டிருந்தனர்.எல்லா உறவினர்களும் கடலுக்குள் இறங்கினர்.
நந்தினி கடலையும் கண்ணுக்குத் தெரியும் அதன் தொலைவையும் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

நந்தினி’அங்க அம்மா கூட போய் குளியேன்’
அக்கரை நோக்கி வெறித்துப் பார்த்துக் கொண்டு நீருக்குள் இறங்கியவள் என்னிடம் கேட்டாள்,

‘ஏன் ராம் 16 மைல் கல் அந்தப்பக்கம் குண்டுவெடிச்சா இங்க கேட்காதா ராம்?
ஒலி நீர் வழி எளிதில் கடத்தப்படும் தானே? கேட்கவில்லையா இங்க இருக்கவங்களுக்கு என்று.கேட்டுவிட்டு நீருக்குள் மூழ்கினாள்.
எழுந்தவளின் கண்கள் கலங்கி இருந்தன.சரட்டென ஒரு சொட்டுக் கண்ணீர் கடல்நீரில் விழுந்ததை நான் கவனிக்கத் தவறவில்லை.அந்த ஒரு துளிப் பெருங்கயத்தின் நெடியில் கடலுக்கென தும்மலா வரப்போகிறது.
அந்த உப்பு நீரில் விழும் உப்பு நீரை எனைத் தவிர வேறு யார் அறிவர் அங்கே?
எனை அறியாமல் என் கண்கள் கலங்கின.தாய் அழுவதைப் பார்த்து அழும் பிள்ளை போல அவளைப் பார்த்து நானும் அழத் துவங்கியதை உணர்ந்தேன்.அவளைத் தேற்ற எனக்கு எந்த சொற்களும் அப்போது கிட்டவில்லை.கரையேறிய பின்னும் ஏதும் பேசாமல் வந்துகொண்டிருந்தாள் நந்தினி.அவளைத் தேற்றவும் தமிழினத்தின் சாபத்தைத் தீர்க்கவும் வேண்டி பர்வதவர்த்தினியிடம் மனதுக்குள் மன்றாடினேன்.மனம் நிறைய கனத்துடன்
அவளும் நானும் ராமபிரான் முன்பு நின்று கொண்டிருந்தோம்.

கோவிலை விட்டு வெளியே வந்து கொண்டிருந்தோம்.நந்தினியின் பேச்சு முழுதும் நின்று போனது.அங்கிருந்து புறப்பட்டு ராமர் பாதத்தை வணங்கச்
சென்றோம்.அந்த உயரத்திலிருந்து ராமேஸ்வரம் அழகாக காட்சி அளித்தது.

‘ராமர் இந்த உச்சியில் ஏறி நின்று தான் சீதையை தேடினாரம்.அன்று அவர் பாதம் படிந்த இடம் தான் இது.எல்லோரும் தொடாமல் கும்பிடுங்க…’என வருகின்ற எல்லோரிடமும் திரும்பத் திரும்ப கூறிக் கொண்டிருந்தார் அந்த அர்ச்சகர்.வெளியே அந்த காப்பு சுவற்றோரமாய் குடும்பத்தில் எல்லோரையும் தம்பதிகளாக நிற்கவைத்து நானும் நந்தினியும் புகைப்படம் எடுத்தோம்.வீட்டில் அக்கா எல்லோருடனும் நந்தினியை வைத்து நான் எடுத்த புகைப்படம் மிகவும் அற்புதமாக வந்திருந்தது.கீழே ஒரு பாட்டி நாவல் பழம் விற்றுக் கொண்டிருக்க என் அக்கா குழந்தைகள் கீழே இறங்கி ஓடினர்.பின் வீட்டினர் எல்லோரும் கீழிறங்கத் துவங்கினர்.

சிறிது நேரம் கடல் தாண்டி வெறித்துப் பார்த்தவள் ‘இங்கிருந்து எப்படி ராம் சீதயக் கண்டார் ராமர்?
அப்படி எண்டால் எண்ட தாத்தா,பாட்டி,பெரியப்பா,சித்தப்பா எல்லாரையும் காண இயலுமா?என்றாள் அப்பாவியாக…

‘ஓய் அது புராணம்…’ என்றேன்.
வைத்த கண் வாங்காமல் நின்றிருந்தவளின் கண்கள் நீரைச் சுரந்தன.வேறு யாரும் எங்கள் அருகில் இல்லாத நிலையில் அவள் கரங்களை இறுகப் பற்றினேன்.அந்நேரம் கீழிருந்து மற்றவர்கள் அழைக்க கிளம்புமாறு அறிவுறுத்தினேன். மனமின்றி கீழே இறங்கினாள் நந்தினி.இருந்தும் அவளது முகத்தின் கவலைக் கோடுகளை அழிக்க முற்பட்டு தோற்றுப்போனேன்.வேனில் ஏறிய சில நிமிடங்களில் அசதியில் எல்லோரும் கண் அயர்ந்தனர்.நான் முன்புறம் ஓட்டுனர் அருகே அமர்ந்திருந்தேன்.நந்தினி கடைசி சீட்டில் அமர்ந்திருந்தாள்.இமைக்காமல் அக்கரையை பார்த்துக் கொண்டே வந்தாள்.நீடித்த மௌனம் நிலைகொள்ள வீட்டை நோக்கிப் பயணிக்க ஆரம்பித்தோம்.இந்த ஒட்டுமொத்த இந்திய பயணத்தில் நான் அவளுக்கு அளித்த மகிழ்ச்சியை ராமநாத ஸ்வாமிகள் பறித்துக் கொண்டதாக எனக்குத் எனக்குத் தோன்றியது.

ராமேஸ்வரம் பயணத்துக்குப் பின் ஓரிரு நாட்களில் நந்தினி சகஜ நிலைக்குத் திரும்பினாள்.இன்னும் நாங்கள் ஜெர்மனிக்குக் கிளம்ப ஐந்து நாட்களே இருந்தன.அன்றொரு நாள் மாலை எங்களுடைய வயல்வெளிகளைச் சுற்றிப் பார்க்க நந்தினியை அழைத்துச் சென்றேன்.பால் விடும் நெற்பயின் வாசமும் ஈரப் புல்லும் என பள்ளி காலங்களை எனக்கு நினவூடியது.என் மனதில் நீண்ட நாட்களாக ஓடிக்க கொண்டிருந்த ஒரு கேள்வியை கேட்டுவிடலாம் என்ற எண்ணத்தில் துவங்கினேன்.

ஆமா நந்தினி உனக்கு எப்போ கல்யாணம்?

இப்போ இல்லை ஏன் சார் இந்த திடீர் கேள்வி?

அடுத்த கேள்விக்குத் தாவினேன்.

ஆமா நீங்க உங்க வீட்ல சொந்தத்துல தான் கல்யாணம் பண்ணுவிங்களா?

அப்படி ஒண்ணும் இல்ல.

நீ லவ் மேரேஜ் ஆ இல்ல அரேஞ் மேரேஜ் ஆ ?

தெரியல ராம்.என்றாள்.

என் பின்னே நடந்து வந்தவள் திரும்பி நின்று ‘ராம் வீட்டுக்குப் போவம எனக்கு கொஞ்சம் அலுப்பா இருக்கு’ என்றாள்.

வேறு விடயங்களைப் பேசிக் கொண்டு வீட்டை எட்டினோம்.

நாட்கள் உருண்டோடின.நாங்கள் கிளம்பும் தேதியும் வந்தது.அவளின் பெற்றோரிடம் தெரிவித்து விட்டு கிளம்பினோம்.அம்மா எல்லா கோவிலுக்கும் போயிட்டு குல தெய்வக் கோவிலுக்கு மட்டும் போகாம இருக்ககூடாது என அறிவுறுத்தினாள்.வழியில் குல தெய்வம் கோவிலுக்குச் சென்றோம்.
ஜெர்மனியை அடையும் முன் நந்தினியிடம் என் மனதில் நான் இதுவரை உங்களுக்கும் தெரியாமல் ஒளித்து வைத்த காதலை வெளிப்படுத்தி விட காளியிடம் தைரியம் வேண்டினேன்.எல்லோரும் விமான நிலையம் வந்து வழியனுப்ப நந்தினி எல்லோரிடமும் நன்றி தெரிவித்து அன்பு பாராட்டிக் கொண்டிருந்தாள்.எல்லோருக்கும் அவளது பேச்சும் மொழியும் பண்பும் போகப் போக சர்க்கரையாகப் பட்டது நான் எதிர்பார்த்ததுதான். அம்மா கொடுத்த விபூதிப் பொட்டலத்தை கையில் வைத்துக் கொண்டு விமானத்தை நோக்கிப் புறப்பட்டோம்.சிறிது உணவு உறக்கம் பிறகு சென்ற இடங்கள்,அங்கு சுட்ட புகைப் படங்களைப் பற்றி பேசிக் கொண்டும் எங்கள் பயணம் இனிதாகக் கழிந்தது.

விமானம் கொலன் நகரில் இறங்க 10 நிமிடங்களே இருந்தன.வெளியே வெப்பநிலை அப்போது -15 டிகிரி என விமானி அறிவித்தார்.என் மனம் படபடக்கத் துவங்கியது.நந்தினியிடம் சொல்லிவிடலாமா என எண்ணினேன்.வெளியே வந்து இமிக்ரேசன் முடித்து எங்கள் உடமைக்காகக் காத்திருந்தோம்.கண்ணாடிக்கு வெளியே நின்றுகொண்டு நந்தினியின் அப்பா கையசைத்தார்.நந்தினியிடம் சுட்டிக் காட்டினேன்.மலர்ந்த முகத்துடன் வேகமாகக் கையசைத்தாள் நந்தினி.

தொலைவில் என்னுடைய VIP ALFA ஓடுதளத்தில் மெதுவாக நகந்து வந்து கொண்டிருந்தது.உறுதியான மனத்துடன் பேசத் துவங்கினேன்.

நந்தினி… என்ன ராம்…

நீ..நீ எப்பவும் கூடவே இருக்கணும்னு விரும்புறேன்,இருப்பியா’ என்றேன்.
இதை அப்பொழுது சற்றும் எதிர் பாராதவள் திடுக்கிட்டாள் அமைதியானாள் சற்று நேரம்…

‘உங்க பெட்டிய எடுங்க ராம்’.

‘இத நா அப்போ வயலுக்குப் போனப்பவே சொல்லி இருப்பேன்.உங்க அப்பா என் மேல வச்ச நம்பிக்கைகாக சொல்லல…இப்போ அவர் கண் முன்னாடியே சொல்றேன்,நீ முழுசா எனக்குள்ள வந்துட்டே…என் வாழ்கையின் எல்லா நொடிகளும் நீ வேணும்… நீ இருந்தா போதும் வேறேதும் எனக்கு வேண்டாம்.உன் விருப்பத்தைச் சொல்லு..’

எனச் சொல்லி என் பெட்டியை இழுத்துக் கொண்டு சற்று தள்ளி வந்து நின்றேன்.குழம்பிய எண்ணங்களுடன் நந்தினி தன பெட்டியை இழுத்துக் கொண்டு வந்தாள்.வெளியே வந்து அவள் பெற்றோரைச் சந்தித்துப் பேசினோம்.வழியில் அவளின் வீட்டில் இறக்கி விட்டு எனது வீடு நோக்கிப் பயணித்தேன் விசக் காயினை விழுங்கியவனைப் போல.

மறுநாள் காலை ஏழுமணி.மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் விடிந்தது என் பொழுது.குளித்துத் தயாராகி அலுவலகம் சென்றேன்.சக ஊழியர்களுக்கு இனிப்பு வழங்கி பேசிக் கொண்டிருந்தேன்.மணி 9.30 .இன்னும் நந்தினி வரவில்லை.நந்தினியை அழைத்தேன்.நெடுநேரம் ஆகியும் எடுக்காததால் வீட்டு தொலைபேசிக்கு அழைக்க நந்தினியின் அம்மா எடுத்து அவளிடம் கொடுத்தார்.பயணக் களைப்பில் தனக்கு காய்ச்சல் எனவும் இன்று விடுப்பு சொல்லிவிடும்படி என்னிடம் கூறினாள்.குழப்பத்துடன் கழிந்தது என்னுடைய அன்றைய பொழுது.மறுநாள் காலை மணி 10 ஆகியும் நந்தினியைக் காணவில்லை.அவளது அலைபேசிக்கு அழைத்தேன் இணைக்கபடவே இல்லை.தொலைபேசியில் பதிலளிக்க ஆளில்லை.என் குழப்பம் அதிகமாக
என் அன்று மாலை அவள் வீட்டிற்க்குச் சென்றேன்.பூட்டி இருந்தது.பக்கத்து வீட்டில் சொன்னார்கள் அவர்கள் குடி பெயர்ந்து விட்டர்கள் என.உடனே என் அலுவலக மேலாளரை அழைத்தேன்.நேற்றே நந்தினி சில அவசர காரணங்களால் தனது ரிசைக்னேசன் கடிதத்தை மினஞ்சல் செய்ததாகச் சொன்னார்.

நா வரண்டது,நாடி தளர்ந்தது,கண்கள் இருட்டின எனக்கு…எந்த கேள்வியும் என்னுள் தோன்றாத ஒரு மந்த நிலையில் வீட்டுக்குப் புறப்பட்டேன்.கயச்ச்சலில் புலம்பும் சிறுவனைப் போல என்னை அறியாமல் ஏதேதோ உளறினேன்.

சென்று படுக்கையில் விழுந்தேன்.
கண்டிப்பாக என்னை விரும்பாமல் இருக்க வாய்ப்பில்லை.அப்படி பிடிக்கவில்லை என்றாள் நேரில் சொல்லி இருப்பாள்.வேறு யாரையும் காதலித்து இருந்தாலும் சொல்லி இருப்பாள்.இனம்,மதம்,மொழி தடையில்லை.
குணம் தடையில்லை.வேறு என்னவாக இருக்கும்?

நான் அவள் மீது நான் கொண்டது வெறும் பரிதாபக் காதல் என நினைத்தாளா?

நட்புக்குள் காதல் அவளுக்குப் பிடிக்கவில்லையா?

அவளது பெற்றோர் அவளை கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்றனரா?

என்னுடைய தேசியம் அவளைத் தடுக்கிறதா?

கேள்விகளின் எண்ணிக்கை மட்டுமே கூடுகிறதே தவிர பதில்
ஏதும் தோன்றவில்லை.

என்றாவது பதில் கிடைக்கும் அல்லது அவள் கிடைப்பாள் என்ற நம்பிக்கையுடன் வைக்கிறேன் ஒவ்வொரு நாளும் என் காலடியை…

– ஜுலை 2011

Print Friendly, PDF & Email

4 thoughts on “அவளுக்கு யாரும் இணையில்லை

  1. ஹ அருண், கதை நடை நன்று ரசிக்க முடிந்தது, நான் குறும் படம் எடுபவன் விருப்பபட்டால் உங்களது ஈமெயில் அல்லது போன் நம்பர் அனுப்பி விடவும்.

    நன்றி,
    மணிவண்ணன்

    1. நன்றி நண்பரே.. தாமதமாகத்தான் உங்களது பின்னூட்டத்தை பார்க்க நேர்ந்த்து.விருப்பமிருந்தால்
      மின்னஞ்சலில் தொடர்புகொள்ளுங்கள்

      arungandi@gmail.com

  2. அற்புதம். எளிய நடை. வாழ்த்துககள். நீங்கள் புலம் பெயர்ந்த தமிழர் தானே! எந்த ஊர் என்று அறியலாமா?

    1. ஆம் ரமேஷ். தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.
      கதையின் களமே எனதும்.. 🙂

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *