அம்பிகாபதி அணைத்த அமராவதி

2
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: August 23, 2012
பார்வையிட்டோர்: 13,127 
 

கடந்த சில நாட்களாகவே கவிச் சக்கரவர்த்தி கம்பரின் மனம் நிம்மதியை இழந்திருந்தது. காரணம், அரசனின் பார்வை தன் மகன்மீது விழுந்து அது அனலாய்த் தெறிப்பதை உணர்ந்ததினால்தான்.

‘அம்பிகாபதிக்கு என்னகுறை? அழகன், அறிவாளி. அதனால்தான் சோழசக்கரவர்த்தியின் மகள் அமராவதி கவிசக்கரவர்த்தியின் மகன் அம்பிகாபதியைக் காதலிக்கிறாள். இதிலென்ன தவறு? அரசகுமாரிகளெல்லாம் கவிஞர்களைக் காதலிப்பது ஒன்றும் நடைமுறையில் இல்லாத வழக்கம் அல்லவே? என் மகன் இளைஞன். இளம்கன்று பயமறியாததுபோல அம்பிகாபதியும் அரசகுமாரியிடம் மனம் மயங்கிக் காதலிக்க ஆரம்பித்துவிட்டான். இது அரசனுக்குப் பிடிக்கவில்லை போலும்?’

கம்பர் ஏதேதோ சிந்தித்தபடி தனது மாளிகையின் உப்பரிகையில் குறுக்கும் நெடுக்குமாய் நடக்கத் தொடங்கினார்.

உள்ளூர மனம் தவிக்கவும் செய்தார். “இராமகாதையைக் காப்பியமாகச் செய்துகொடுத்த மன்னனும் அவனது குடிமக்களும் அம்பிகாபதியின் செயலினால் என்னை வெறுத்துவிட நேரிடுமோ?’ என மனம் நினைக்க ஆரம்பித்தது.

“அரசன் மிகவும் நல்லவன். பரந்த உள்ளம் கொண்டவன். அதனாலேயே கவிகளில் அரசராக என்னை மதித்து, தனக்கு இணையாக சம அந்தஸ்தைக் கொடுத்து என்னையும் பெரிய மாளிகையில் வசிக்க வைத்திருக்கிறான்… ஆனால் மகளின் காதலில்மட்டும் அரசனுக்கு அந்தஸ்து குறுக்கிடுகிறதுபோலும்? தன் மகள் ஒரு புலவரின் மகனைக்காதலிப்பதா என் சீற்றம் கொண்டு விட்டான்.!” கம்பர் வியப்பில் வாய்விட்டே அரற்றினார்.

கம்பருக்கு அரசனின் செய்கை புதிராக இருந்தது. அப்போது…

அரசர் கம்பரை அவரது மாளிகைக்கே நேரில் பார்த்துப்பேச வந்துவிட்டான்

கம்பர் சோழசக்ரவர்த்தியை மனமகிழ்வுடன் வரவேற்றார்.

“வாருங்கள் சோழவேந்தே!”

சோழனின் விழிகள் மாளிகையில் சுற்றுமுற்றும் அலைந்துவிட்டு “கவிஞர் மட்டும் தனிமையில் இனிமை காணுகின்றீரோ? தனிமை புலவனுக்குத்தான் தேவை போலும் இளைஞர்களெல்லாம் துணையின்றி தனியாக இருப்பதே இல்லை. அப்படித்தானே?” என்று கேட்டான், இடக்காக.

“அரசே! தனிமையும் ஒரு துணைதானே? வயதான காலத்தில் சிந்திக்கத் துணையாய் இருப்பது தனிமை. நாமும் இளைஞர்களாய் இருந்துதான் இப்பொழுது முதியவர்களாய் மாறி இருக்கிறோம். அந்தந்த காலக்கட்டத்தில் ஒன்று இன்னொன்றிற்கு துணையாகிறது.” .. என்றார் சமாதானக் குரலில்.

“ஆடு தன் துணையாக யானையைத் தேடிபோகுமா என்ன? எட்டாத்தொலைவில் உள்ளதின்மீது பேராசை கொள்வது மனிதமனம் மட்டுமே என்பது விசித்திரமாக இல்லையா கவிசக்கரவர்த்தி?”

“சுற்றிவளைத்து அரசர் பேசுவதை விட்டு நேரிடையாகவே கேட்கலாமே? என்மகன் உங்கள் மகளை விரும்புவதைதானே அப்படிச் சொல்கிறீ£ர்கள்? அரசே! உயர்வுதாழ்வுகள் உண்மைக்காதலை பாதிப்பதில்லை. இதைக்காலம் சொல்லும் அரசே!”

“உண்மைக்காதலா உடற்காதலா? உமது மகனுக்கு காதலைவிடக் காமம் அதிகம். அவன் காமுகன்”

“அரசே! என்மகன்மீது நான் உயிரையே வைத்திருக்கிறேன், தயவுசெய்து அவனைப்பற்றி அவதூறாய்க்கூறாதீர்கள்.”

“உங்கள் மகன் காமுகன்தான். அதை நிரூபிக்கத்தான் இப்போது நானே உங்களைத் தேடிவந்தேன் உடனே வாருங்கள் என்னோடு.. காமமா அல்லது காதலா எது என்பதை நானே உங்களுக்குக் கண்கூடாகக் காட்டுகிறேன்.”

அரசன் கம்பரை அரண்மனை சோலைக்கு அழைத்துச்சென்றான்.

மறைவிடத்தில் இருவரும் நின்றுகொண்டனர். தொலைவில் ஒரு மரத்தடியில் அம்பிகாபதியும் அமராவதியும் சிரிக்கசிரிக்கப் பேசிக் கொண்டிருந்ததை அரசன் கைநீட்டிக் காண்பித்து .”ராமகாவியத்தில் ஒரு ராவணன் என்னும் காமுகனால் விளைந்த கொடுமையை தாங்கள் சித்தரித்திருக்கிறீர்கள். தங்கள் மகன் அவனைப் போலவே நடந்துகொள்வதை அங்கேபாருங்கள்” என்றான்.

கம்பர் ஆற்றாமையுடன்,” மன்னரே! இதில் எது காமம் என்கிறீர்கள்?” எனக்கேட்டார்.

“உங்கள் மகன், என்மகளைக் கொஞ்சிக்குலாவிக் கொண்டிருப்பதைக் கண்டுமா இப்படிகேட்கிரீர்கள் கம்பரே?”

“உங்கள் மகளும் என்மகனைக் கொஞ்சிக்குலாவிக்கொண்டு தானே இருக்கிறாள்?”

“கம்பர் மகனின் பேச்சில் காமம் நிரம்பிவழிகிறதே?”

“அரசே ! என்மகனின் பேச்சு, காமம். உங்கள் மகள் பேச்சு காதல். இதென்ன முரணான சிந்தனை? விந்தையாக இருக்கிறது வேந்தே!”

“விந்தையேதுமில்லை. அதோபாருங்கள், அவன்மேலும் பேசுவதை. அதை முழுவதும் கேட்டு உங்கள்முடிவைக்கூறுங்கள். அரசகுமாரியின் இடையையும், நடையையும் ஒருகாமுகனைப் போல அம்பிகாபதி பிதற்றுகிறான் செவி கொடுத்துக்கேளுங்கள்”

அரசன் கூறும்போது ‘இட்ட அடி நோக எடுத்த அடி கொப்பளிக்க, வட்டில் சுமந்து மருங்கசைய…’

என்று அம்பிகாபதி பாட ஆரம்பிக்கவும், அப்போது சோலைக்கு வெளியே தெருவில் ஒருகுரல்கேட்டது.

‘கொட்டிகிழங்கோ கொட்டிகிழங்கு’

கம்பர் திரும்பிப்பார்த்தார்.

கொட்டிக்கிழங்கு விற்கும் பெண்மணி நடந்துபோய்க்கொண்டிருந்தாள்.

கம்பர் சட்டென. “கொட்டிக்கிழங்கோகிழங்கென்று கூறுவாள் நாவில் வழங்கோசை வையம் பெறும்’ எனதாமே பாடிமுடித்தார்.

அரசன் திகைத்து நிற்கையிலேயே “என்மகன் அந்த கொட்டிகிழங்குவிற்றுச் சென்றபெண்ணை நோக்கிப்பாடினான் என நினைத்துக் கொள்ளுங்கள் அரசே!” என்றார்.

“கம்பரே..! அம்பிகாபதி உங்கள் மகன் என்பதால் பரிந்து பாடல் உரைத்து சமாளிக்கிறீர்கள். ஆனாலும் அவன் ஒருகாமுகன் என்பதை நான் மறுக்க இயலாது”

“அரசே! திரும்பத் திரும்ப என்மகனை இப்படிக்கூறி என் மனதை நீங்கள்காயப் படுத்த முயன்றாலும் நான் கலங்கமாட்டேன். எனக்கு இராமகாவியம்தான் தலைப்பிள்ளை. அம்பிகாபதி இளையபிள்ளை..”

“இளையமகன் உங்கள் பெயரை ஒருநாளும் காப்பாற்றப் போவதில்லை. நாளை அரசவையில் அவனுக்கு ஒரு சோதனை வைக்கத்திட்டம். அதில் அவன் வென்றுவிட்டால் பிறகு சொல்கிறேன் அவன் காமுகன் அல்ல என்று. அன்றி அவன் தோற்றால்…?”

கம்பருக்கு அதை நினைத்துகூடப் பார்க்க முடியவில்லை.

மறுநாள் மகனிடம் வாதிட்டு பார்த்தார். அவன் மனம் மாறுவதாய் தெரியவில்லை. காதலின் ஆழத்தில் அவன் புதைந்து கிடந்தான்.

“தந்தையே ! அமராவதி அரசகுமாரி என்பதால் நான் அவளைக்காதலிக்கக் கூடாதா? தமிழ் அகத்திணைக் காதலைச் சீதாபிராட்டிக்கும் ராமனுக்கும் அளித்த கவிசக்கரவர்த்தி, இப்போது அரசனின் பயமுறுத்தலில் அஞ்சி என்னிடம் காதலைக் கைவிடச் சொல்கிறீர்களே நியாயமா?”

“அம்பிகாபதி ! என் அருமை மகனே! உன் காதலை நான் மறுக்கவில்லை. ஆனால் அரசன் உன்னைக் காமுகன் என்கிறானே? ”

“காதலின் பெருமை புரியாதவர்களுக்கு காமமும் காதலும் ஒன்றுதான் தந்தையே!”

“ஆனால் உன் காதலினால் நான் உன்னை இழந்துவிடுவேனோ என்று அச்சமாக உள்ளது மகனே! நாளை அரசவையில் வைக்கும் சோதனையில் நீ வெற்றி பெறவேண்டும் …இல்லாவிடில் இல்லாவிடில்…?”

கம்பருக்குக் குரல் நடுங்கியது. புத்திரபாசத்தில் உடல் சோர்ந்து தளர்ந்தது.

சோழன் எகத்தாளமாய் கூறிப்போனதை நினைத்துப்பார்த்தார்.

“சபை நடுவே சகல அலங்காரங்களுடன் என் மகள் அமராவதி வீற்றிருப்பாள். அவளைப்பார்த்தபடியே அம்பிகாபதி நூறு ஆன்மீகப் பாடலாய்ப் பாடவேண்டும். அப்படி அவன் மட்டும் சிந்தை ஒன்றிப்பாடி முடித்தால் அவனை நான் காமுகன் என கூறுவதை நிறுத்திக்கொள்கிறேன். நிபந்தனையில் தோற்றால் உங்கள்மகன் கொலைக்களத்தில் தலைவேறு, உடல்வேறாய் சிரச்சேதம் செய்யப்படுவான். எச்சரிக்கை”

கம்பருக்குக் கண்கலங்கியது.

“நூறென்ன தந்தையே ஆயிரம்பாடலை நான் அனாயாசமாய் பாடுவேன். வீண் கவலை கொள்ளாதீர்கள்”

மகனின் துணிவான பேச்சு அவரை ஓரளவு சமாதானப் படுத்தியது.

அன்றிரவே அமராவதியிடமிருந்து அம்பிகாபதிக்கு அவளது தோழிப்பெண்மூலம் சேதிவந்தது.’ என் ஆருயிர்க்காதலரே! அரசர் வைக்க இருக்கும் சோதனைபற்றிய கலக்கம் வேண்டாம் .தாங்கள் ஒவ்வொருபாடலைப் பாடியதும் நான் சைகை செய்கிறேன். என் சைகைமுடித்து அனைத்தும் பூர்த்தியானதை நான் அடையாளம் காட்டியதும் தாங்கள் பாடுவதை நிறுத்திவிடலாம் ‘என்று தெரிவித்திருந்தாள்.

‘நூறுபாடல் இறைமீது பாடிமுடித்து வெற்றிபெற்றதும் உடனேயே அவையில் அரசன் மற்றும் அனைவரின்முன்னே என் அருமைக்காதலி அமராவதியின் அங்கலாவண்யங்களைப் புகழ்ந்து பாடி அரசனைப்பழிவாங்குவேன் என்று உன் தோழியிடம் சொல்’ என் பதில் செய்தி சொல்லி அனுப்பினான் அம்பிகாபதி.

அரசவைகூடியது.

அரசர் மற்றும் அமைச்சர்கள் கூடி இருக்க கம்பரோடு ஒட்டக்கூத்தர்போன்ற பல புலவர்கள் வீற்றிருந்தனர்.

கம்பர் கனத்த நெஞ்சுடன் அமர்ந்திருந்தார்.

அம்பிகாபதி உற்சாகமாய் கவிதை பாட ஆரம்பித்தான் அத்தனையும் முத்தான் வேதாந்தகருத்துக்கள்கொண்ட ஆன்மீகப் பாடல்களாக அமையவும் அரசவையே கட்டிப்போட்டாற்போலானது.

அமரவாதியின் முகத்தில் கணக்கற்ற மகிழ்ச்சி.

ஒன்று இரண்டு எனபாடல்களை எண்ணிக் கொண்டுவந்த அமராவதி, நூறு பாடல்கள் முடிந்ததும் நிறைந்ததென சைகைகாட்டினாள்.

அதுவரை ஆன்மீகப் பாடலைப் பொழிந்த அம்பிகாபதி சட்டென அமராவதியின் புறத்தோற்ற அழகினில் மெய்மறந்து அதைப்பற்றிப்பாடத் தொடங்கி விட்டான்.

“நிறுத்து?” என ஒட்டகூத்தர் சீறி எழுந்தார்.

கம்பர் திகைப்பும் அதிர்ச்சியுமாய் ஏறிட்டார்.

ஒட்டகூத்தர் அம்பிகாபதியை நோக்கி முதல்பாடல், மரபுப்படி காப்பு செய்யுள் ஆகிறது. ஆகவே நீ நூறுபாடல் பாடிமுடிக்கவில்லை. தொண்ணுற்றி ஒன்பது பாடல்களே பாடிமுடித்து பிறகு சிற்றின்பப்பாடலுக்கு விரைந்துவிட்டாய். நிபந்தனையில் நீ தோற்றாய்” என்று கூச்சலிட்டார்.

இதுகேட்டு நெடுமரமாய் கீழே சாய்ந்தார் கம்பர்.

விழித்தபோது அம்பிகாபதியின் குருதி கொலைக்களத்தை நனைத்திருந்த செய்தி அவருக்குக்கிடைத்தது.

புத்திரசோகத்திலிருந்தவரை ஒட்டகூத்தர் “கம்பரே, நீர் அடிக்கடிகூறுவதுபோல இனி உமதுதலைப்பிள்ளையான அந்த ராமாயணம்தான் உமக்கு கொள்ளிபோடவேண்டும்” என்று வெந்த புண்ணில் வேலைப்பாய்ச்சினார்.

கம்பர் பதட்டபடவில்லை.

“கூத்தரே ! நான் கல்நெஞ்சன். இல்லாவிட்டால் ராமகதையில் தன்மகன் காட்டிற்குப் போகும் விஷயம் கேட்டதும் உயிரைவிட்ட தசரதன் உயர்ந்தவன். ஆனால் மகன் காதலுக்காக தன் உயிரைப்பலிகொடுத்த செய்திகேட்டும் பாவி நான் உயிரோடு இருக்கிறேனே?

என்று விரக்தியாய் கூறியவர் சோகமாய்ப்பாடினார்.

பரப்போத ஞாலம் ஒருதம்பி ஆளப்
பனிமதியம்
துரப்போன் ஒருதம்பி பின் தொடரத்
தானும் துணைவியுடன்
வரப்போன மைந்தர்க்குத் தாதை பொறாது
உயிர்மாய்ந்தனன் நெஞ்சு
உரப்போ எனக்கு இங்கு இனி
யாருவமை உரைப்பதற்கே?

அமரகாதல்கள் அழிவதில்லை.

– பெப்ரவரி 09, 2006

Print Friendly, PDF & Email

2 thoughts on “அம்பிகாபதி அணைத்த அமராவதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *