கோ.புண்ணியவான்

 

கோ. புண்ணியவான் (ஆங்கிலம்: K.Punniyavaan; பிறப்பு: மே 14 1949) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவரான இவர் ஒரு தலைமை ஆசிரியராவார். மேலும் இவர் கெடா மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

1970 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகள், புதுக்கவிதைகள், கட்டுரைகள் போன்றவற்றை எழுதியுள்ளார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

சிறுகதைத் தொகுப்புகள்

  • நிஜம் (1999)
  • சிறை (2005)
  • நிறம்

பரிசுகளும், விருதுகளும்

  • டான் ஸ்ரீ ஆதிநாகப்பன் விருது – மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் (2001)
  • மலாயாப் பல்கலைக்கழகப் பேரவைக் கதைகள் போட்டியில் பலமுறை பரிசுகள்
  • மலேசிய அஸ்ட்ரோ நிறுவனத்தின் வானவில் நடத்திய சிவாஜி கணேசன் கவிதைப் போட்டியில் ரிங்கிட் 25,000.00 மதிப்புள்ள முதல் பரிசு (2002).

கோ.புண்ணியவான் – ஓர் அறிமுகம் (நன்றி – https://selliyal.com/archives/186147)

கோ.புண்ணியவான் மலேசிய இலக்கியத்தின் ஒரு குறிப்பிடத்தக்க ஆளுமை. சிறுகதை, கவிதை, நாவல், கட்டுரை, ஆய்வு எனப் பன்முகத் தளத்தில் இலக்கியம் படைத்தவர்.

தன்னுடைய இரு சிறுவர் நாவல்களுக்குப் பிறகு தன்னுடைய புதிய சிறுகதைத் தொகுப்பைக் கொண்டு வந்திருக்கிறார். கடந்த அரை நூற்றாண்டாகப் படைப்பிலக்கியத்தில் பழுத்த அனுபவம் வாய்ந்தவராகப் பல்வேறு விருதுகள், அங்கீகாரம் பெற்றவராகத் திகழ்பவர்.

சமீபத்தில் சாகித்திய அக்கேதமி தொகுத்த உலகத் தமிழ்க் கவிதைத் தொகுப்பில் இவருடைய இரு கவிதைகள் இடம் பெற்றிருப்பது அண்மையச் செய்தி. கடந்த ஆண்டு கோவை ஸ்ரீநேரு அறிவியல் கலைக் கல்லூரியில் இவருடைய சிறுகதையான ‘தரிசனம்’ பாடமாக வைக்கப்பட்டிருக்கிறது.

கோ.புண்ணியவான் 2019 ஆண்டு அவருடைய நான்காவது சிறுகதைத் தொகுப்பைக் ‘கனவு முகம்’ என்ற தலைப்பில் கொண்டு வந்திருக்கிறார்.

அதன் தொடர்பாக இளம் எழுத்தாளர் ஹரிராஸ்குமார், அவருடன் நடத்திய நேர்காணலைத் தொடர்ந்து வாசிக்கலாம்:

ஹரி: கனவு முகம் உங்களுடைய இலக்கியப் பயணத்தில் நான்காவது சிறுகதைத் தொகுப்பாகவும் 12-வது நூலாகவும் திகழ்கிறது. மலேசியாவில் வாசகப்பரப்பு கணிசமான அளவுக்கு குறைந்துவிட்ட சூழலிலும் உங்களின் நூலாக்கும் ஆர்வம் குன்றாமல் இருப்பதாகக் கருதலாமா?

கோ.புண்ணியவான்: படைப்பாளனின் ஆர்வம் தொடர் வாசிப்பிலிருந்தே துவங்குகிறது. வாசிப்பு பரவசமான மனநிலைக்கு ஆளாக்கும். வாசிப்பின் நீட்சியாகவே எழுத்தும் வருகிறது. எனவே அதே பரவசம் எழுதும்போதும் நீட்சி காண்கிறது.

ஆனால், நூலாக்குவதில் அதே பரவசம் தொற்றிக்கொள்கிறது என்று சொல்வதற்கில்லை. வாசகர் எண்ணிக்கை இறங்குமுகமாக இருக்கும் சூழலில் நூலாக்குவதில் ஒரு மனத்தடை இருக்கத்தான் செய்கிறது. ஆனாலும் எழுதிய நல்ல கதைகளை ஆவணப்படுத்தாமல் இருப்பது ஒருவகைக் குற்ற மனப்பான்மையை உண்டாக்கிக் கொண்டே இருக்கிறது.

படைப்பின் நோக்கமென்ன? படைப்பு சமகால சமூக வரலாற்றையும், படைப்பாளன் வாழ்ந்த காலத்துக்கு முன்னரான வரலாற்றையும் உள்ளடக்கியிருக்க வேண்டும். அந்த வரலாறு கதைகளில் ஊடுபாவாக இருக்கும். எனவேதான் ஆவணம் என்பது முக்கியம். சிறுகதை வெறும் புனைவு மட்டுமல்ல! எழுதி முடித்து அதனை மறந்துவிட்டு வேறு வேலையைப் பார்ப்பதற்கு! அதனைப் பதிவு செய்ய வேண்டும். நூல்கள் விற்பதற்கல்ல, வாசிப்பதற்கு என்ற காரணத்தாலும், அது அறிவுலகச் செயல்பாடு என்பதாலும் நூலாக்கம் இடைவிடாமல் நடந்தவண்ணம் இருக்கிறது.

ஹரி: இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கதைகள் யாவும் எந்தக் காலக் கட்டத்தில் எழுதப்பட்டவை?

கோ.புண்ணியவான்: இதில் 15 கதைகள் அடங்கியிருக்கின்றன. அவற்றுள் ஐந்து கதைகள் சற்றே பழைய கதைகள். எஞ்சிய பத்து கதைகள் புதியவை. ஐந்து பழைய கதைகள் வாசகர்களாலும் ஆய்வாளர்களாலும் பேசப்பட்டவை என்பதால் இந்நூலில் அவற்றை மீளுருவாக்கம் செய்திருக்கிறேன்.

ஏனைய பத்து கதைகள் நான் மிகச் சமீபத்தில் எழுதியவை. இவை சற்று முக்கியமானவை என நான் கருதியதால் இத்தொகுப்பில் இடம்பெற்றிருக்கின்றன. நான் சமீபத்தில் எழுதிய சில கதையில் அதன் தரம் சார்ந்து உவப்பை உண்டாக்கவில்லை என்பதால் அவற்றைத் தவிர்த்திருக்கிறேன்.

ஹரி: நூலில் இடம்பெற்றுள்ள கதைகள் எம்மாதிரியான கதை மாந்தர்களையும் கதைக் களத்தையும் கொண்டவை?

கோ.புண்ணியவான்: உள்ளபடியே நாம் அன்றாடத்தில் சந்திக்கும் கதை மனிதர்கள்தான் கதைக் களத்தை உருவாக்குபவர்கள். அவர்கள்தான் கதைக்கான மையப் பொருளாக இருப்பவர்கள். ஒரு கதாசிரியனுக்கு இயல்பாகவே யாரும் இதுவரைத் தொடாத ஒதுக்கப்பட்ட சமூகத்தின் மனிதர்களே மையப்புள்ளியாகத் தெரிவார்கள்.

என்னை அவ்வாறான பாத்திரங்களே தொந்தரவு செய்தன. உதாரணமாக கனவு முகம் கதையின் மையப்பாத்திரம் கணவனை இழந்தவள். அவள் கணவன் வாழும்போது அவனின் அந்நியோன்னியத்தை நேசித்தவள். அவளால் கணவனின் இறப்பை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை! அவன் இறந்தபின்னரும் அவனோடு வாழ்வதாகவே கருதுகிறாள். அப்படியே வாழவும் செய்வாள்.

இதனை அருகிருந்து பார்க்கும் பிள்ளைகளுக்கு அவளுடைய வாழ்தல் வினோதமானதாக இருக்கும். இது ஒருவகை மனநோய். இந்த அபூர்வ பாத்திர முரண்களை நான் எழுதிப் பார்க்க விரும்பினேன். அது எப்படி உருவாகியிருக்கிறது என்று வாசகர்கள்தான் சொல்லவேண்டும்.

‘சுமை; என்ற ஒருகதையில் காய்ச்சல் கண்ட மாணவனைப் பள்ளி மண்டபத் திறப்புவிழாவில் பரபரப்பாக ஈடுபட்ட தலைமை ஆசிரியரும் ஆசிரியர்களும் கவனிக்காமல் விட்டுவிடுவதால் நேரும் அசம்பாவிதம் பற்றிய கதை.

அந்நிகழ்ச்சிக்கு ஓர் அரசியல் தலைவரை வரவேற்கும் கவனக்குவிப்பில், அந்த மாணவனின் தேவை புறக்கணிக்கப்படுகிறது. இப்படி விடுபட்ட , சொல்லத் தேவையில்லாதது எனக் கருதிய பொருண்மையில் பல கதைகள் இத்தொகுப்பில் இடம்பெறுகின்றன.

ஹரி: இதற்கு முந்தைய தொகுப்பிலுள்ள கதைகளுக்கும் இந்தப் புதுத்தொகுப்பில் உள்ள கதைகளுக்கும் என்ன வேறுபாடு?

கோ.புண்ணியவான்: என்னைத் தொடர்ந்து வாசிப்பவர்கள் என் கூறுமுறையில் அல்லது கதைகளின் வைப்பு முறையில் வேறுபாட்டை உணரலாம். என் முதல் தொகுப்பான நிஜம் நூலுக்கும் இந்த என் நான்காவது தொகுதிக்கும் ஒரு பெரும் இடைவெளியைக் காட்டியிருக்கிறேன்.

முன்னர் உள்ள கதைகள் நேர்கோட்டு உத்தியில், யதார்த்தத் தொனியில் ஒலிக்கும். அவற்றுக்குத் திட்டவட்டமான முடிவு இருக்கும் அல்லது திருப்பம் இருக்கும். இத்தொகுப்பில் குறியீட்டு உத்தியைப் பயன் படுத்தியிருப்பேன், வைப்பு முறையில் இது புதிது. அதோடு என் மொழி, கதைக்கான மொழியாக நன்றாகக் கூடிவந்திருக்கும். கதைக்கான மொழி கூடிவருவது வாசகனை மிக நெருக்கமாக உணரவைக்கும். அதோடு பெரும்பாலான கதைகளின் முடிவை வாசகரிடமே விட்டிருக்கிறேன்.

ஹரி:தங்களுடைய சிறுகதைகளும், நாவல்களும் கொண்டுள்ள மொழிநடையானது உயிர்ப்பூட்டும் விதத்தில் அமைந்திருப்பது மேன்மை. அது எவ்வாறு தங்களுக்குச் சாத்தியப்படுகிறது?

கோ.புண்ணியவான்: என் வாசிப்புத்தளம் மிக விரிவானது, ஆழமானது. ஆழ உழும் நிலம் உற்பத்தியைக் கூட்டும். அதுபோலத்தான் என் வாசிப்புப் பழக்கம் என் மொழியை, என் புனைவுத் தன்மையை மேம்படுத்தியிருக்கிறது. இது தொடர் வாசிப்புப் பழக்கம் உள்ள எல்லா படைப்பாளருக்கும் கைகூடும் விடயம்தான்.

ஒரு புனைவெழுத்தாளனின் கதைவெளி சாமான்ய பார்வையாளனுக்குப் படுவதைவிட அகன்றது. சாமான்யனின் கற்பனைக் குதிரையைவிட அதிக வேகம் கொண்டது. படைப்பாளனின் அவதானிப்பிலிருந்து வளரும் படிமம், அவன் மொழி அழகியலில் வந்தடையும். நான் தொடர்ந்து 50 ஆண்டுகளுக்கு மேல் வாசித்துக்கொண்டும் எழுதிக்கொண்டும் இருக்கிறேன். என் அனுபவத் திரட்சியும் என்னை மேம்படுத்திக்கொண்டே இருந்திருக்கிறது. ஆனால் இது போதாது என்ற போதாமையும் என்னை எச்சரித்துக்கொண்டே இருக்கிறது. எனவே என் தேடலை விரிவுபடுத்தவேண்டி இருக்கிறது.

சமூகத்தின்பால் என் அவதானிப்பில் கூர்மை அடைந்திருக்கிறது. ஆகவேதான் கிட்டதட்ட அரை நூற்றாண்டு கால இடைவெளி என்னைச் செதுக்கிய சிதலங்களால் நான் மெல்ல மேம்பட்டிருக்கிறேன் என்று எண்ணுகிறேன்.

ஹரி: தொடக்க எழுத்தாளர்களுக்கு நீங்கள் யாருடைய கதைகளை வாசிக்கச்சொல்லிப் பரிந்துரைப்பீர்கள்?

கோ.புண்ணியவான்: என் தொடக்ககால வாசிப்பனுபவத்தையே இதற்குப் பாடமாக வைப்பேன். நான் சுஜாதாவிடமிருந்து தொடங்கினேன்.நம் நாட்டைப் பொறுத்தவரை சுஜாதா பொருத்தமாக அமைவார். வெகுசன எழுத்து என்று ஒரேயடியாய் இவரைப் புறந்தள்ள முடியாது. அவர் எழுத்தில் நவீனமும் இருக்கும். அவர் கூறுமுறை விறுவிறுப்பாகவும் இருக்கும். எளிய மொழியில் அசுர வேகத்தில் கதை சொல்வார். வெகுசனத்தன்மையும் கலந்திருக்கும்.

ஆனால் அவரை வாசித்தவர்கள் அங்கேயே நின்றுவிடக்கூடாது. அவரைக் கடந்து போகும் வேகம் இருக்கவேண்டும். நான் ஏன் சுஜாதாவை முன்வைக்கிறேன் என்றால் அவர், எழுத்தின் ருசியை உங்களுக்கு ஊட்டித் திணற வைப்பார். அந்த ருசி குழந்தைக்குத் தாய்ப்பாலின் ருசி மாதிரி ஒட்டிக்கொள்ளும். அதனால் புதிய எழுத்தாளன் உத்வேகம் அடைவான். பிறகு மெல்ல கந்தர்வன், தி. ஜானகிராமன், கி.ராஜநாராயணன், வண்ணதாசன், வண்ணநிலவன், ராமகிருஷ்ணன் , ஜெயமோகன், தேவி பாரதி, சுனில் கிருஷ்ணன், லட்சுமி சரவணகுமார் என நீள்கிறது என் பட்டியல்.

இவர்களில் ஜெயமோகன் சூரியன் மாதிரி மிகப்பெரிய ஆகுருதியாக வெளிச்சமிடுவார்.

ஹரி: நீங்கள் இன்றைய மூத்த படைப்பாளர்களில் ஒருவர். நவீன கதைச்சொல்லியும் கூட. நவீன இலக்கியம்; மரபான இலக்கியம் இவ்விரண்டுக்கும் உள்ள வேறுபாடு என்ன என்பதையும் விளக்கமுடியுமா?

கோ.புண்ணியவான்: மலேசிய இலக்கியப் பார்வை மடைமாற்றம் காண இது மிக ஏதுவான வினா. இங்கே தொன்னூற்றொன்பது சதவிகிதம் மரபான எழுத்து முறையை கைவிடமாட்டேன் என்று சூப்பிங்கிக்குப் பழகிப்போய் விடமுடியாத குழந்தைகள் போல அடம்பிடிக்கிறார்கள்.

மரபு என்பது நமக்கு முன்னரான படைப்பாளர்கள் என்ன பொருண்மையில் கதை சொன்னார்களோ அதனையே நூலாகப் பிடித்து பின்பற்றி எழுதுவது. இந்த வகை எழுத்தில் குடும்ப உறவின் மேன்மை, கற்பின் புனிதம், மனைவி பெண்கள் ஆணாதிக்க அதிகாரத்துக்கு ஒடுங்கிப்போதல், காதலின் தூய்மை, என அதன் விழுமியங்களையே திரும்பத் திரும்பச் சொல்லுதல் அடங்கும்.

ஆனால் ஒரு சில்லரைக் காசுக்கு இன்னொரு புறமும் இருப்பது போல வாழ்வின் இருண்ட பக்கத்தை வாசக உலகுக்கு விரித்துரைப்பதில்லை. வாசகனைத் தாய்க்கோழி அணைத்துச் உடற்சூட்டில் உவகைகொள்ளவைக்க எழுத்துவகை இந்த மரபான எழுத்து. சமூகத்தை இந்த குஷிப்படுத்தும் எழுத்து எந்தப் பாதிப்பையும் செய்துவிடுவதில்லை! விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்க்கையை எழுதவேண்டும்., கற்பு எப்போதுமே புனிதமானதாக இருப்பதில்லை, ஆணாதிக்க மரபு என்பது ஆண்களின் மேலாண்மை நிலைக்க உருவாக்கப்பட்டது, போன்ற உண்மை நடப்பை எடுத்துச் சொல்வதே நவீனம் என்றுரைக்கப்படுகிறது.

’பொன்னகரம்’ என்ற புதுமைப்பித்தனின் கதை மனைவி கணவனுக்கு கஞ்சி வாங்க ஒருவனிடம் சோரம் போக வேண்டி இருக்கும் வாழ்வின் நெருக்கடியையும் அவல நிலைமையையும் காட்டும்.

ஜெயகாந்தன் ‘தாம்பத்தியம்’ கதையில் குடியிருக்க ஒரு வீடில்லாத தெருமனிதர்களான புத்தம்புதிய தம்பதிகள் முதலிரவுக்கு ஏங்கும் அவஸ்தையையும், அவர்களைத் தவறாகப் புரிந்துகொண்ட போலீஸ் கைது செய்வதையும் சொல்வார்.

இதுபோன்ற பல கதைகள் தமிழில் எழுதப்பட்டிருக்கின்றன. இந்த வகைமை சிந்தனையையே நாம் நவீனம் என்கிறோம். நவீனம் என்பது கொச்சையான எழுத்துவகை என்று தவறாகப் புரிந்துகொண்டதால் அவ்வகை எழுத்தின்மேல் வெறுப்பை உமிழும் மலேசிய இலக்கிய உலகின் போக்கு மாறவேண்டும். எழுதாப் பொருளை எடுத்தியம்ப வேண்டும். இலக்கியம் என்பது வாழ்வின் போதாமையை, இயலாமையை, நேர்மையின்மையை, சுரண்டலைச் சொல்வதாக இருக்கவேண்டும்.

மலேசியப் பொருளாதார மேம்பாட்டு நீரோட்டத்தில் மலேசியத் தமிழர்கள் ஓரங்கட்டப்பட்டவர்கள். அவர்களின் கூலித்தொழில் வேலை வாய்ப்புகளையும் அந்நியத் தொழிலாளர்கள் பறித்துக் கொண்ட அவலம் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. தமிழர்களின் கல்வி வாய்ப்பில் கைவைப்பதால் அவர்களின் வாழ்வுநிலை நெடுங்காலமாக அடித்தட்டு நிலையிலேயே இருக்கிறது. தோட்டப்புறங்களிலிருந்து நகர்ப்புறங்களுக்கு வாழ்வாதாரம் தேடி புலம்பெயர்ந்த பலர் வாழ்வின் விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். அவர்களின் வாழ்க்கையை நம் கதைகளில் ஆழமாகக் காணமுடியவில்லை. இவ்வாறான மனிதர்களின் வாழ்வை ஆய்ந்து எழுதினால் அவை நவீனக் கதையாக இருக்கும்.

ஹரி: புத்தக வாசகர்கள் வெகுவாகக் குறைந்துவிட்டதை அறிவுலகம் உணர்கிறது. குறைபடுகிறது. இதனை எவ்வாறு நிவர்த்தி செய்யலாம்?

கோ.புண்ணியவான்: இப்போதைக்கு உள்ள வாசிப்புப் பழக்கமற்ற இளைஞர்களை முதியவர்கள் ஒன்றுமே செய்ய முடியாது. புலனம் என்ற பொழுதுபோக்கு எழுத்துக்கும், சீரியல் என்ற சீரழிவுக்கும் அடிமைப்பட்டுவிட்டார்கள். புலனத்திலும் முகநூலிலும் ஓரிரு வரிகளை வாசித்துவிட்டு புல்லரித்துப்போகும் மனிதர்களால் நூல் வாசிப்புக்கு வரமுடியாது.

பாலர் பள்ளி மாணவப் பருவத்திலேயே இதனைப் பழக்கவேண்டும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கற்பனை உலகின் அசாத்தியத்தைக் காட்டி வேரிலிருந்தே செழுமையை உண்டாக்கவேண்டும். அதுவே சிறந்த வழி.

பின்லாந்து போன்ற நாடுகள் ஏட்டுக்கல்வியை 9 வயதில் தொடங்குவதாக வாசித்திருக்கிறேன். அதற்கு முன்னரான பருவம் கைவினைக்கும் கலைக்குமானது என்று உணர்த்தியிருக்கிறார்கள். இங்கே நான்கு வயதிலேயே சோதனைக்குத் தயார் செய்ய வேண்டிய அவலம் நீடிக்கிறது. கலைக்கு இடமற்ற சூழலை உருவாக்குவதில் நம்முடைய கல்வித்திட்டத்தில் பின்னடைவைச் சந்தித்துக் கொண்டிருக்கிறோம்.

ஹரி: உங்கள் ‘கனவு முகம்’ நூல் வெளியீடு குறித்துச் சில வார்த்தைகள்.

கோ.புண்ணியவான்: இந்நூல் 15.6.2019 சனிக்கிழமையன்று மாலை 4.30க்கு சுங்கைப்பட்டாணி ஸ்ரீ சுப்பிரமணியர் சுவாமி தேவஸ்தான மண்டப மேல்மாடி நூலகத்தில் நடைபெறும்.

****

கோ.புண்ணியவானின் சிறுகதைகள் : எதார்த்தத்தின் முகம் – March 9, 2017
அ.பாண்டியன்

மலேசிய நவீனத் தமிழ் கலை இலக்கியப் படைப்புலகம் கவிதை சிறுகதை நாவல், நாடகம், கட்டுரைகள் போன்ற பல்வேறு வடிவங்களால் நிறைந்தது. ஆயினும் சிறுகதை வடிவமே இங்கே அழுத்தமான இலக்கிய நகர்ச்சியைக் காட்டுகிறது என்று துணிந்து கூறலாம். புதுக்கவிதை பலருக்கும் இலக்கியத் தூண்டல்களை உருவாக்கித் தந்தாலும் அது சிறுபிள்ளை விளையாட்டுப்போல் மெத்தனமாகப் படைக்கப்படுவதாலும் பலகீனமான சொல்லாட்சி, கருத்து வெளிப்பாடு போன்றவற்றாலும் கடந்த முப்பது ஆண்டுகளில் சொல்லிக் கொள்ளும்படி வளரவில்லை. முப்பது ஆண்டுகளுக்கு முன் ‘வானம்பாடி’ வார இதழில் வெளிவந்த தொடக்ககாலக் கவிதைகளின் தரத்திலேயே இன்றைய இளைய கவிகள் பலரும் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கின்றனர். ஏதோ ஒருவகையில் தன்னை இலக்கிய வெளியில் இணைத்துக்கொள்ளக் கிடைக்கும் எளிய அனுமதிச்சீட்டைப்போல மலேசியாவில் புதுக்கவிதை மாறிவிட்டது.

https://vallinam.com.my/version2/?p=3863

****

நான் வாழ்ந்து அனுபவித்த நிலம், மனிதர்கள் சார்ந்த ரசனை கட்டற்று காட்சியாக விரிந்துகொண்டே இருந்தது…- அகச்சுட்டு – Mar 22, 2021

மலேசியாவில் நவீன இலக்கியம் ஓர் அலையாக எழுந்தபோது அதன் தொடக்ககால எழுத்தாளர்களில் ஒருவராக கருதப்படுபவர் கோ.புண்ணியவான்.

நான்கு சிறுகதைத் தொகுப்புகள், இரண்டு நாவல்கள், ஒரு கட்டுரைத் தொகுப்பு, ஒரு கவிதை நூல், இரு சிறுவர் நாவல்கள் எழுதி நாற்பது ஆண்டுகளுக்கு மேல் இடைவிடாது செயல்படுபவர்.

கொத்தடிமை வாழ்வில் சிக்கி பின்னர் மீட்கப்பட்ட ஒரு சமூகத்தைப் பற்றிய நாவலான ‘செலாஞ்சார் அம்பாட்’ தொடர்ந்து மூன்று விருதுகள் வென்றன. அடித்தட்டு மக்கள் வாழ்வினைப் பிரதிபலித்த சில சிறுகதைகள், கவிதைகள் இன்றைக்கும் இலக்கிய விமர்சகர்களால் பேசப்பட்டு வருகின்றன. மரபான மாநுட நுகர் வாழ்விலிருந்து விடுபட்டு, புனைவுக் கலையின் உன்னதங்களைத் தரிசித்து வாழ்வின் முழுமையை அடைய விரும்பும் ஓர் ரசனையாளன் இவர். அகச்சுட்டு இணைய செய்தி பத்திரிகைக்காக எழுத்தாளர் கே.பாலமுருகன மேற்கொண்ட நேர்காணல் இது.

https://agachuddu.com/archives/7326

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *