எம்.ஏ.சுசீலா

 

​எம்.ஏ.சுசீலா-குறிப்பு
தமிழ்ப்பேராசிரியர்-பணிநிறைவு,
எழுத்தாளர்,மொழிபெயர்ப்பாளர்
www.masusila.com
3/217,கிருஷ்ணா நகர்,திருப்பாலை,
மதுரை 625014
மின் அஞ்சல் : susila27@gmail.com

எம்.ஏ.சுசீலா, மதுரை- பாத்திமாக் கல்லூரியில் தமிழ்த்துறைப் பேராசிரியராகப் பணியாற்றியவர். எழுத்தாளர்,மொழிபெயர்ப்பாளர். 1979ஆம் ஆண்டு கல்கி வார இதழ் நடத்திய அமரர் கல்கி நினைவுச்சிறுகதைப்போட்டியில் இவரது’ஓர் உயிர் விலை போகிறது’ என்னும் ஆக்கம்,முதற்பரிசு பெற, இவர் அறிமுக எழுத்தாளராக அங்கீகாரம் பெற்றார். தொடர்ந்து தொண்ணூறுக்கும் மேற்பட்ட இவரது சிறுகதைகளும்,கட்டுரைகளும் பல வார மாத இதழ்களில் வெளி வந்துள்ளன; இவரது சில கதைகள், மலையாளம்,கன்னடம் இந்தி,,வங்காளம்,ஆங்கிலம்,ஃப்ரெஞ்ச்முதலிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. பல்கலைக்கழக,கல்லூரிப்பாடத் திட்டங்களிலும் இவரது நூல்கள் இடம் பெற்றிருக்கின்றன.

  • ‘யாதுமாகி’ என்ற இவரது முதல் நாவல் வம்சி வெளியீடாக 2014 இல் வெளிவந்திருக்கிறது. அண்மையில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள அந்நாவலை எமரால்ட் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.
  • ’தடங்கள்’ என்னும் இரண்டாவது நாவல் அண்மையில்-[செப் 2020] வெளிவந்திருக்கிறது.
  • நான்கு சிறுகதைத் தொகுப்புகள், ஆறு கட்டுரை நூல்கள் இவற்றோடு பியோதர் தஸ்தயெவ்ஸ்கியின் ‘குற்றமும் தண்டனையும்'(2007 )’அசடன்’(2009) ஆகிய உலகப்பேரிலக்கியங்களையும் மற்றும் அவரது குறுங்கதைகள்[2015], நிலவறைக்குறிப்புகள் (2018), ‘இரட்டையர்’(2018 ) ஆகிய வேறு சில குறிப்பிடத்தக்க நாவல்களையும் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.
  • அண்மையில் கவிஞனின் மனைவி(2019) என்னும் மொழியாக்கச் சிறுகதைத் தொகுப்பும்,  செஹ்மத் அழைக்கிறாள் என்னும் மொழியாக்க நாவலும் (2019-ஆங்கில மூலம்;ஹரீந்தர் சிக்கா) வெளிவந்திருக்கின்றன.

’அசடன்’ நாவலின் மொழிபெயர்ப்புக்காக கனடா தமிழ் இலக்கியத் தோட்ட விருது, நல்லி-திசை எட்டும் மொழியாக்க விருது, எஸ் ஆர் எம் பல்கலைக்கழகத் தமிழ்ப்பேராயத்தின் ஜி யூ போப் விருது ஆகிய மூன்று விருதுகளை 2013ஆம் ஆண்டில் இவர் பெற்றிருக்கிறார்.

ரஷ்ய இலக்கிய மொழியாக்கப்பங்களிப்புக்காக விஷ்ணுபுரம் இலக்கிய வட்டமும் சென்னை ரஷ்ய கலாசார மையமும் [2018] இணைந்து நிகழ்த்திய பாராட்டு விழாவில் ’தஸ்தயெவ்ஸ்கியின் தமிழ்க்குரல்’ என்னும் சிறப்புப்பாராட்டு, சிறந்த தமிழ்ச் சிறுகதை எழுத்தாளருக்கான ‘அமரர் சுஜாதா விருது [தில்லி தமிழ்ச்சங்கம் – 2013], 2018 இல் மணல் வீடு இலக்கிய வட்டம் அளித்த அமரர் ராஜம் கிருஷ்ணன் வாழ்நாள் நினைவு விருது ஆகியவை இவர் பெற்றிருக்கும் வேறு சில தகுதிகள்.

www.masusila.com என்னும் சொந்த வலைத்தளத்திலும் சொல்வனம்.காம்,ஊடறு.காம்தினமணி.காம்,கனலி முதலிய இணைய இதழ்களிலும் எழுதிவருகிறார்.