மார்க்கண்டேயன் கதை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: November 27, 2021
பார்வையிட்டோர்: 35,646 
 

மிருகண்டு என்பவர் பெருந்தவ முனிவர். அவருக்கும் அவரது பத்தினியாகிய மித்ராவதிக்கும் புத்திரப்பேறு இல்லாதது பெருங்குறை. இருவரும் காசிக்குச் சென்று மணிகரணிகையில் நீராடி விஸ்வநாதரை நினைத்து தவமிருந்தனர். ஓராண்டு காலம் கடும் தவமிருந்தனர்.

தவத்தில் மகிழ்ந்து சர்வேஸ்வரன் அவர்கள் முன்தோன்றி “யாது வரம் வேண்டும்?” என்று வினவ, முனிவர் “புத்திரப்பேறு வேண்டும்” என்று வேண்டினார். அதற்கு சிவன், “நூறு வயதுவரை வாழும் புத்திரன் வேண்டுமா? அல்லது பதினாறு வயதே வாழக்கூடிய புத்திரன் வேண்டுமா? இதில் நூறு வயதுவரை வாழும் பிள்ளைக்கு ஊமை, செவிடு, முடம், வியாதி போன்ற சகலமும் இருக்கும்; ஆனால் பதினாறு வயதுவரை வாழும் புதல் வனோ மஹா அழகனாய் சகல கலைகளிலும் வல்லவனாய் இருப்பான். என்மீது மட்டற்ற பக்திகொண்டு வாழ்வான். இவர்களில் எந்தமதிரி புத்திரன் உனக்கு வேண்டும்?” என்றார்.

குறைந்த வயதுவரை வாழும் புத்திரனையே முனிவர் வேண்டினார். “தந்தேன்” என்று நல்கிவிட்டு சிவன் மறைந்தார். அடுத்த பத்து மாதத்தில் முனிவரின் பத்தினி அழகான ஆண் குழந்தை ஒன்றைப் பெற்றார். பிரம்மதேவரே வந்து குழந்தைக்கு ‘மார்க்கண்டேயன்’ என்று பெயர் சூட்டினார். குழந்தை சகல கலைகளையும் திறமையுடன் கற்றான்.

ஆயிற்று.. அவனுக்கு பதினாறு வயதும் மலர்ந்தது. மிருகண்டு முனிவருக்கும அவரது பத்தினிக்கும் இப்போது கவலை பிறந்தது. தம்பதிகள் விசனக்கடலில் மூழ்கினர். பெற்றோரின் இந்த விசனத்திற்கு என்ன காரணம் என்று புரியாமல் தத்தளித்த மார்க்கண்டேயன், காரணம் என்ன என்று பெற்றோரை துளைத்து எடுத்தான்.

அவர்களும் வேறு விவழியன்றி சிவபெருமானின் வரத்தைப் பற்றிக் கூறினார். இதைக்கேட்ட மார்க்கண்டேயன் “நீங்கள் இதற்காக துளியும் வருந்த வேண்டாம். நமச்சிவாய மந்திரமும் திருநீறும் நமக்குத் துணை. நம்மைக் காக்கும் சிவன் நம்மைக் கைவிடார். எனவே துணிவோடு இருங்கள்..” என்றுகூறி காசிக்குச் சென்று மணிகரணிகையில் நீராடி சிவலிங்கம் ஒன்றை நிறுவி நறுமலர் சாத்தி வணங்கி தவம் செய்யலானான்.

சிவபெருமான் அவன் முன் அருளித்து, “யாது வரம் வேண்டும்?” என்று வினவ, “தன்னைக் காலன் கைப்படாவண்ணம் காத்தருள்க” என்று வேண்டினான். சிவன்,”மார்க்கண்டேயா நீ பயப்பட வேண்டாம்.. அந்தகனின் பிடியிலிருந்து நம் அருள் உன்னைக் காப்பாற்றும்..” என்றுகூறி மறைந்தார்.

மார்க்கண்டேயர் தன் வாழ்நாளைப் பற்றிக் கவலைப்படாமல் சதா சிவ பூஜையில் திளைத்திருந்தார். பதினாறு ஆண்டுகள் முடிந்தது. யமதூதன் சிவ பூஜையிலிருந்த மார்க்கண்டேயனை அணுக அஞ்சி மேல் உலகு சென்று யமனிடம் விஷயத்தைக் கூறுகிறான். யமன் தன் கணக்கரான சித்திரகுப் தனை விளித்து மார்க்கண்டேயனது கணக்கைக் கூறும்படி கேட்க, “பிரபு மார்க்கண்டேயனுக்கு ஈசன் தந்த பதினாறு ஆண்டுகாலம் முடிந்தது. வி தியை வென்றவர் எவருமிலர். சிவபூஜையின் பலனாய் அவரது புண்ணியம் ஏராளமாக அதிகரித்துவிட்டது. அதனால் அவர் நமது உலகிற்கு வர நியாயமில்லை. நேராக கைலாயம் செல்லத் தயாராக இருக்கிறார்..” என்றார்.

உடனே யமன் தனது அமைச்சரான காலனை அழைத்து மார்க்கண்டேயனைப் பிடித்து வரும்படி ஆணையிடுகிறான். காலன் மார்க்கண்டேயனிடம் சென்று மிகவும் நயமாகத் தன்னுடன் வந்துவிடுமாறு அழைக்கிறான். தன்னுடன் வந்தால் அவனுக்கு யமன் இந்திரப்பதவி வாங்கித் தருவார் என்றும் ஆசை காட்டுகிறான். ஆனால் மார்க்கண்டேயனோ, “போம் ஐயா, சிவனடிக்கு அன்பு செய்தவர் இந்திரப்பதவி என்ன வேறு எந்தப் பதவியையும் விரும்பமாட்டார். போய் உம் எஜமானரிடம் சொல்லும்..” என்று கூறி வர மறுத்துவிடுகிறான்.

இதனையறிந்த யமராஜானுக்கு கடும் கோபம் வந்தது. அவனே தன் வாகனமேறி பாசக்கயிற்றை சுழற்றியபடி மார்க்கண்டேயனை அடைந்து, “என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய் நீ? ஈசனார் தந்தது உனக்கு பதினாறு வயதுதான்.. நீ புரியும் சிவபூஜை உன் பாபத்தை நீக்குமேயன்றி, நான் வீசும் பாசக்கயிற்றைத் தடுக்காது. பிறப்பு, இறப்பு எல்லாம் கமலக்கண்ணனுக்கும் உண்டு. எவர் உன்னைக் காப்பாற்ற முயன்றாலும் உன் உயிரைக் கொண்டு போகாமல் நான் திரும்ப மாட்டேன்” என்று அனல் பறக்கக் கூறினான்.

“எமதர்மராஜனே, சிவனடியார் பெருமையை நீ உணரவில்லை. முடிவு ஏற்பட்டாலும் நான் சிவபதமடைவேனே தவிர, உன்னுடன் வரமாட்டேன்” என்றுகூறி ஆலயத்தினுள் சென்று சிவலிங்கத்தை தழுவி நின்றான்.

யமனும் உள்ளே சென்று மார்க்கண்டேயனை அவன் அணைத்திருந்த சிவலிங்கத்தோடு தன் பாசக்கயிற்றை வீசி இழுத்தான். உடனே சிவபெருமான் லிங்கத்தை விட்டு வெளிப்பட்டு, “மார்க்கண்டேயா நீ அஞ்சாதே என்றுகூறி தன் இடது பாதத்தை தூக்கி யமனை உதைக்க அவன் தன் பரிவாரங்களுடன் உயிர் துறந்தான்.

சிவபெருமான் மார்க்கண்டேயனுக்கு அந்தமிலா ஆயுளை வழங்கி மறைந்தார். மார்க்கண்டேயர் மகிழ்வுடன் இல்லம் ஏகி தன் பெற்றோரிடம் நடந்ததைக் கூற, அவர்கள் சிவபெருமானின் கருணையை எண்ணி எண்ணிக் கண்ணீர் மலக்கினார்.

இது இப்படியிருக்க யமதர்மராஜன் உயிர் இழந்ததால், பூமியில் எவருக்கும் மரணமே இல்லாமல் போய்விட்டது. அதனால் மக்கள் பெருக்கம் அதிகமாகி பூமி அந்த பாரத்தால் நிலை தடுமாறியது. இதனைக் கண்ட தேவர்கள் அனைவரும் சிவபெருமானிடம் வேண்ட, அவர் யமனை உயிர்ப்பித்து அவன் தொழிலைத் தொடருமாறு பணித்தார்!!.

மார்க்கண்டேய புராணத்தில் பல தத்துவங்கள் இடம் பெறுகின்றன. மதாலசாவின் வாரலாறு இதற்கு ஒரு உதாரணம்.

மதாலசா ஒரு கந்தர்வக் கன்னியாக இருந்தாள். அவளை குவலயாச்சவன் என்ற அரசகுமாரன் மணந்தான். அவனுக்கு முடிசூட்டிவிட்டு அவனுடைய தந்தை வானப்ரஸ்தத்தை மேற்கொள்ள குவலயாச்சவன் மன்னன் ஆனான். அவனுக்கும் மதலசாவிற்கும் நான்கு மகன்கள் பிறந்தார்கள். முதல் மூன்று மகன்களுக்கும் சிறு வயதிலேயே தர்மத்தைப் பற்றியும், ஆன்ம அறிவைப் பற்றியும் மதலசா உபதேசம் செய்ய, அவர்கள் மூவரும் ஆட்சியை விரும்பாமல், கானகம் சென்று தவத்தில் ஈடுபட்டுவிட்டனர்.

நான்காவது மகன் பிறந்தபோது அவனுக்கு ‘அலர்க்கான்’ என்று மதலசா பெயரிட்டாள். “ஏன் அர்த்தமற்ற பெயரை வைக்கிறாய்?” என்று குவலயாச்சவன் கேட்டான்.

“முதல் மூன்று மகன்களுக்கும் வீரம், தோள் வலிமை, பகைவர்களை வெல்லும் தன்மை ஆகியவற்றைக் குறிப்பிடும் பெயர்களை வைத்தோம். அப்பெயர்கள் யாரைக் குறிக்கின்றன? ஆனமாவுக்கு அசைவே இல்லை; பலம் கொள்ள உடல் இல்லை; பகைவர்களும் இல்லை. அப்படியிருக்க நாம் வைத்த பெயர்கள் அர்த்தமற்றவைதானே ? நமது பிள்ளையை நாம் அழைப்பதற்காகவும், பிறர் அடையாளம் காண்பதற்காகவும் ஒரு பெயர் வைக்கிறோம். இதில் பொருத்தமோ அர்த்தமோ என்ன வேண்டிக் கிடக்கிறது?” என்று கூறினாள் மதாலசா.

அந்த நான்காவது மகனையும் ஆன்மீக வழியில் திருப்பிவிடாமல், ராஜ்யம் ஆளத்தகுதி பெற்ற ஷத்ரியனாகவே அவன் விளங்குவதற்கு உதவும் வகையில், அவனுக்கு அறிவுரை கூறி வளர்க்குமாறு கேட்டுக்கொண்டான் குவலயாச்வான். மதாலசா இதற்கு சம்மதித்து அவனுக்கு ராஜயநீதியைப் போதித்தாள். ஒரு அரசனின் கடமைகளை விவரித்துச் சொன்னாள்.

‘நாட்டு மக்கள் மகிழ்ச்சியாக இருக்க வழி செய்வதே அரசனின் முதல் கடமை. தனது அமைச்சர்களும், அதிகாரிகளும் முறைகேடாக நடப்பவர்களாக இல்லாமல் ஒரு அரசன் பார்த்துக்கொள்ள வேண்டும். எதிரிகளின் எண்ணங்களை முன்கூட்டியே புரிந்துகொள்ள திறமையான உளவாளிகளை அமர்த்த வேண்டும். நண்பர்களையும், உறவினர்களையும் கூட ஒரு அரசன் முழுமையாக நம்பிவிடக் கூடாது. சூழ்நிலைக்கு ஏற்ப கடுமையாகவும், மென்மையாகவும் நடந்துகொள்ளும் தன்மை ஒரு அரசனிடம் இருக்க வேண்டும்..

‘இல்லறத்தில் உள்ள எல்லோருமே உண்மையாக நடந்துகொள்ள வேண்டும். பிறர் பொருள் மீது ஆசைப்படக் கூடாது. யாருக்கும் துரோகம் நினைக்கக் கூடாது. சுத்தத்தைக் கடைபிடிக்க வேண்டும். விருந்தாளிகளை உபசரிக்க வேண்டும். தன்னுடைய சம்பாத்தியத்தில், நான்கில் ஒரு பங்கை சேமிப்பாக எடுத்து வைக்கவேண்டும். காலையில் தர்ம சாஸ்திரங்களைப் பற்றி நினைத்து, அவற்றை கடைபிடிக்க வேண்டும்..

‘கடுமையான வார்த்தைகளையோ, பொய்களையோ பேசக்கூடாது. தீயவர்களுடன் உறவாடக்கூடாது. உதயமாகிறபோதும், அஸ்தமனமாகிறபோதும் சூரியனைப் பார்க்கக்கூடாது. தலை சீவிக் கொள்வது, பல் தேயப்பயது, கண்ணாடியில் முகம் பார்ப்பது ஆகியவற்றை காலையில்தான் செய்யவேண்டும். மூத்தவர்களை எதிர்த்து வாதம் புரியக்கூடாது. தெருவில் செல்லும்போது அரசர்கள், பிராமணர்கள், கற்றறிந்தவர்கள், சுமை தூக்கிச் செல்பவர்கள், அங்கஹீனம் உடையவர்கள், மனநிலை சரியாக இல்லாதவர்கள், குழந்தைகள் ஆகியோருக்கு முதலில் வழிவிட வேண்டும்..

இப்படி பல தகவல்களைக் கூறுகிற மார்க்கண்டேய புராணம், பூகோள ரீதியான பல விஷயங்களையும் விவரிக்கிறது. படைப்பு பற்றியும் பல விவரங்களை இப்புராணம் சொல்கிறது. இதையெல்லாம் முழுமையாகக் கேட்டுக்கொண்டு, ஜைமினி முனிவர் தனது ஆசிரமத்திற்கு திரும்பிச் சென்றதைச் சொல்லி, இப்புராணம் நிறைவு பெறுகிறது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *