பூலோக சொர்க்கம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: March 6, 2017
பார்வையிட்டோர்: 15,035 
 

“எனக்கு இந்த ஊர் புதிதாக இருந்தது, அதனால்தான் உங்களையிங்கு வரவழைத்தேன்” என்றபடி குடும்பத்தினரை நோக்கினார் முருகர்.

“அப்படியென்ன புதுமையைக் கண்டாய்?” வினாதொடுத்தார் சிவபெருமான்.

“மக்கள் மனநிறைவுடன் வாழ்வதே இக்காலத்தில் புதுமைதானே தந்தையே.”

“கார்த்திகேயா, எங்கே உமது வாகனம்?” ஐயமுடன் வினவினார் விநாயகர்.

“அதையேன் கேட்கிறீர்கள் தமையனே, ஜூரோங் பறவைப்பூங்காவைக் கண்டுகளிக்கச் சென்றிருந்தேன். தனது இனத்தைக்கண்ட மயிலோ தாயைப் பிரிந்திருந்து கண்டுவிட்டக் கன்றுக்குட்டியைப் போலானது. அதன் களிப்பைக் கெடுக்க மனமின்றி, வானுலகம் செல்லும்வரை அங்கேயே இருக்குமாறு சொல்லி வந்துள்ளேன்”.

“அப்படியானால் உனது பயணத்திற்குச் சிரமமாக இருக்குமே குழந்தாய்?”

“பயணம் செய்ய சிரமமா…? அதுவும் சிங்கப்பூரிலா…? அந்தப்பேச்சுக்கு இங்கு இடமேயில்லை அன்னையே!”

“தந்தையே, மக்களின் நலன்கருதி, தங்களின் ஆடைக்குள் ஒளித்து வைத்திருக்கும் பாம்பைக்கூட, தேவலோகம் திரும்பும்வரை விலங்கியல்தோட்டத்தில் விட்டுவைக்கலாம்!”

“உசிதமான யோசனை” ஏற்றுக்கொண்டார் பரமசிவன்.

“முருகா, இதென்ன உனது காதுகளில் நூலைப்போல ஏதோ தொங்கிக்கொண்டுள்ளது?” ஆச்சரியத்துடன் அன்னையார்.

“வானொலியெனும் இக்கருவியிலிருந்து எந்நேரமும் மிகவும் சுவாரசியமாக நிகழ்ச்சிகளை வழங்குவதால் மலரை நாடும் வண்டுகள்போல மக்கள் ஒலி96.8ஐ நாடுகின்றனர். யானும் அவ்வண்டுகளில் ஒருவனாகிவிட்டேன்.”

“பூலோகவாசிகள் வைத்திருப்பதுபோல கைத்தொலைபேசியெனும் கருவியோயென பயந்துவிட்டேன் தனயனே!”

“வேலின்றி நீ எங்கும் செல்ல மாட்டாயே கதிர்வேலா?”

“இங்கு பாதுகாப்பிற்கு பஞ்சமேயில்லை அன்னையே, தாங்கள் அணிந்துள்ள விலைமதிப்பற்ற அணிகலன்களுடன் தன்னந்தனியாக இரவில்கூட பயணிக்கலாம்.”

“அப்படியா!” அவரது கவலை நீங்கியதைக் காட்டிக்கொடுத்தது குரல்.

தந்தையை நோக்கிய முருகர் “இங்குள்ள கல்விமுறையானது சற்றுக்கடினமாக உள்ளதால் என்போன்ற சிறுவர்கள்தான் சிரமப்படுகின்றனர்” குரலில் துன்பம் தொனித்தது.

“சிரமத்தைக் கடந்தால்தான் சிகரத்தையடைய முடியுமென்பது நீ அறிந்ததுதானே!” என்ற தந்தையின் கூற்றைத் தொடர்ந்தார் பிள்ளையார்.

“கொழுக்கட்டையின் மேலிருக்கும் கடினமானப்பகுதியை கடித்தபின்தான் உள்ளிருக்கும் பூரணத்தை சுவைக்கமுடியும், அதுபோலத்தானே தந்தையே.”

“அப்படியேதான்” ஆமோதித்தார் தந்தை.

உரையாடியபடியே மேரினாபேயை அடைந்தவர்கள் அவ்வட்டார நேர்த்தியில் ஒருகணம் சொக்கிப்போயினர்.

“செந்தோசாவில் யுனிவர்சல் ஸ்டுடியோ என்றொரு இடமிருக்கிறதண்ணா. எங்கு திரும்பினும் சாகசப்பயணம்தான், எனினும் மிகப்பெரிய ரோலர்கோஸ்டர்கள் இரண்டுள்ளன. அதில் பயணிக்கும் சில நிமிடங்களும் நம்மை உறைய வைப்பதாகவுள்ளது!”

“இதென்ன பிரமாதம், சிறுவனென்பதால் உனக்குப் பீதியாகவுள்ளது. உலகத்தையே கணத்தில் சுற்றிவந்தவனல்லவா? எனக்கு அதெல்லாம் பெரிதில்லை” பெருமிதத்துடன் பதிலளித்தார் பிள்ளையார்.

“போதும் அண்ணா சுயபுராணம், தாங்கள் சுற்றிவந்த கதைதான் இவ்வுலகிற்கேத் தெரியுமே? அங்கு வந்து பார்த்துவிட்டுச் சொல்லுங்கள்” ஞானப்பழம் கிடைக்காத வெறுப்பு குரலில் பிரதிபலித்தது.

சகோதரர்களுக்குள் கலகம் வேண்டாமெனும் நோக்கில், “கந்தா, நீ சிங்கையின் சிறப்புகளை நூலாகவே வடிப்பாய் போலுள்ளதே!” பேச்சை திசைதிருப்பினார் அன்னையார்.

“எழுத்தாற்றலை வளர்க்கும் கதைக்களத்தில் இணைந்தால் அதுவும் சாத்தியமே, செந்தமிழிங்கு சிறப்புடன் வாழ்கிறது தாயே!”

“நீ இந்தியாவிற்குச்சென்று ஏழுமலைகளையும் பார்வையிட்டு வருவதாகத்தானே கிளம்பினாய்? அப்புறம் இங்கு எப்படி…?”

“அங்கே ரூபாய்நோட்டு, ஜல்லிக்கட்டென்று பிரச்சினைகள் விசுவரூபமெடுத்துள்ளதால் பயணத்தை சிங்கை நோக்கித் திருப்பினேன். அதற்கடுத்ததாக பத்துமலை செல்லவும் எண்ணங்கொண்டுள்ளேன்.”

“அதுசரி, எங்களை அழைத்ததின் நோக்கத்தை இன்னும் நீ சொல்லவில்லையே?”

“பசுமை கொஞ்சும் சிங்கையில், என்னை வழிபடும் விசேஷமான தைப்பூசத்தை கண்டுகளிக்கவே வரவழைத்தேன்.”

“மகிழ்ச்சி!” குடும்பத்தினர் கோரசாகக் குரல்கொடுத்தனர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *