பரதனைக் காப்பாற்ற ராமனே ஏன் செல்லவில்லை?

0
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 6,513 
 

‘அடி உதவுவது போல அண்ணன் தம்பி உதவார்’ என்ற பழமொழியின் உண்மைப் பொருள், ‘திருமாலின் திருவடி நமது துன்பங்களைக் களைவது போல், அண்ணன்& தம்பிகள் போன்ற நெருங்கிய உறவினர்கள்கூட நமக்கு உதவ மாட்டார்கள்’ என்பது! இதையட்டியே நம்மாழ்வாரும் திருவாய்மொழியில், ‘துயர் அறு சுடரடி தொழுதெழு’ என்று குறிப்பிடுகிறார்.

பரதனைக் காப்பாற்றதசரதரின் மூத்த மைந்தன் ஸ்ரீராமன். மூத்தவனுக்கு முடிசூட்டுவது மரபு. எனவே, ஸ்ரீராமனுக்கு முடி சூட்ட விரும்பினார் தசரதர். உடனே குலகுருவான வசிஷ்டர் மற்றும் மந்திரிகளுடன் ஆலோசித்து, அதற்காக நல்ல நாளும் நிச்சயிக்கப்பட்டது.

இந்தச் செய்தியை எல்லையற்ற மகிழ்ச்சியுடன் கைகேயியிடம் சொல்ல ஓடி வந்த தசரதர், கைகேயியின் நிலை கண்டு சிந்தை கலங்கினார். கைகேயி தனது கூந்தலை அவிழ்த்துப் போட்டும், ஆபரணங்களை வாரி இறைத்தும், அழுக்கான ஆடையை இடையில் அணிந்தும், தனது அறையில் தரையில் படுத்து வெறித்த பார்வையுடன் காட்சியளித்தாள்.

தசரதர் அவளை நெருங்கி, கைகேயியைத் தன் மார்பில் சாய்த்து, ‘‘அன்பே, அன்பு மகன் ராமனின் முடிசூட்டு விழா எனும் நற்செய்தி கேட்டு மகிழ வேண்டிய நீ, ஏன் இப்படி அலங்கோலமாக இருக்கிறாய்? உனக்கு யாராவது தீங்கிழைத்தனரா?’’ என்றார்.

இதைக் கேட்டு அந்தப் பெண் சிங்கம் சீறி எழுந்தது. ‘‘மன்னா, யாரைக் கேட்டு இந்த முடிவு எடுத்தீர்கள்?’’ என்று கேட்டாள். தசரதர் அதிர்ந்தார்.

‘‘தேவி, ராமனிடம் பாசம் நிறைந்த நீயா இப்படிக் கேட்கிறாய்? இது மரபுதானே?’’

‘‘தெரியும் மன்னா. தாங்கள் ஒரு சூழ்ச்சிக்காரர். பரதனை மாமன் வீட்டுக்கு அனுப்பிவிட்டு, ராமனுக்கு முடிசூட்ட எண்ணும் தாங்கள் வஞ்சகர் என்பதில் சந்தேகம் உண்டோ?’’

தசரதர் சிறிது ஆறுதலடைந்தார். ‘பரதன் இல்லாமல் ராமன் முடிசூடுவதை இவள் விரும்பவில்லை போலும்!’ என்று எண்ணி னார். கைகேயியின் வஞ்சகத்தை அறியாத தசரதர், ‘‘தேவி இப்போது நான் என்ன செய்ய வேண்டும். அதைச் சொல்!’’ என்றார்.

‘‘மன்னா, ஒரு தடவை இந்திரனுக்கும் அரக்கர்களுக்கும் இடையே போர் மூண்டபோது, இந்திரனுக்கு உதவ தாங்கள் தேவலோகம் சென்றீர்கள். அப்போது தேரின் சாரதியாக நான் வந்தேன். போரில் வெற்றி பெற்ற தாங்கள் எனக்கு இரண்டு வரமளிப்பதாகக் கூறினீர்கள். அவற்றை தேவைப்படும்போது பெற்றுக் கொள்வதாகக் கூறினேன். இப்போது அந்த இரண்டு வரங்களை அளிக்குமாறு வேண்டுகிறேன்!’’ என்றாள் கைகேயி.

தசரதர், ‘‘பிரியே, இதற்கா இவ் வளவு ஆர்ப்பாட்டம்? இப்போதே தந்தேன். ராமன் மீது ஆணை. என்ன வரம் வேண்டும், கேள்!’’ என்றார்.

கைகேயி கேட்டாள்: ‘‘மன்னா, முதல் வரம் ராமன் பதினான்கு வருடம் வனவாசம் செய்ய வேண்டும். இரண்டாவது, பரதன் அயோத்தியை ஆள வேண்டும்!’’

ஆயிரம் வேல்கள் ஒரே நேரத்தில் தன் மார்பில் தாக்கியது போல் கைகேயியின் வார்த்தை கேட்டு, தசரதர் மூர்ச்சையானார். சற்று நேர ஆசுவாசத்துக்குப் பின் மூர்ச்சை தெளிந்து, கைகேயியிடம் ராமனை வனத்துக்கு அனுப்ப வேண்டாமென்று கெஞ்சினார்; மன்றாடினார்; திட்டினார். ஒன்றும் பலிக்கவில்லை. முடிவு, தந்தையின் வாக்கைக் காப்பாற்ற ராமன், மனைவி சீதை மற்றும் தம்பி லட்சுமணன் பின்தொடர, கானகம் சென்றான்.

புத்திர சோகத்தால் தசரதன் மரணத்தைத் தழுவினான். மாமன் வீடு சென்ற பரதனும், சத்ருக்கனனும் அயோத்தி திரும்பினர். நடந்தவை கேட்டு வருந்தினர். தந்தைக்கு ஈமக் கடன்களைச் செய்தனர். அரசாள விரும்பாத பரதன் ஆசான்களும், மந்திரிகளும், பரிவாரங்களும் புடைசூழ கானகம் சென்று ராமன் திருவடிகளில் வீழ்ந்து வணங்கி, ‘‘ராமா, அயோத்திக்குத் திரும்பி வந்து முடிசூட்டிக் கொள்ள வேண்டும்!’’ என்று பணிவுடன் விண்ணப்பித்தான்.

உடனே ராமன், ‘‘நம் தந்தையின் சொல்லை மீற எனக்கு விருப்பம் இல்லை. அதன்படி பதினான்கு ஆண்டுகள் வனவாசம் முடித்து, அயோத்திக்குத் திரும்பு வேன்!’’ என்று பரதனிடம் கூறினான். வேறு வழியின்றி, ராமனது பாதுகைகளைப் பெற்று, அவற்றைத் தன் தலைமேல் தாங்கி, ‘‘ராமா, நீ அயோத்திக்குத் திரும்பி வரும்வரை இந்தப் பாதுகைகளே அரசாளும். அதன் பிறகும் நீ அயோத்தி திரும்பத் தாமதமானால், பரதன் தீயில் மூழ்குவான். இது உனது பாதுகைகள் மீது ஆணை!’’ என்று சபதம் செய்தான். நாட்டுக்குத் திரும்பிய பரதன் அயோத்தியில் நுழையாமல் நகரத்தை ஒட்டிய நந்தியம்பதி கிராமத்தை அடைந்து, பாதுகைகளைச் சிங்காத னத்தில் அமர்த்தி, துறவுக்கோலம் பூண்டான். நாள்தோறும் ராமன் திருவடிகளை தியானித்தும் பூஜித்தும் ராமன் வரும் நாளுக் காகக் காத்திருந்தான்.

நேர்மைக்கும் அநியாயத்துக்கும் நடக்கும் போர் எனும் வகையில் இலங்கையில், ராம& ராவண யுத்தம் கடுமையாக நடந்தது. முடிவில் ராவணன் மாண்டான். தான் அபயமளித்த விபீஷண னுக்கு முடிசூட்டிய ராமன், சீதை, லட்சுமணன், சுக்ரீவன், அனுமன், விபீஷணன் மற்றும் எழுபதா யிரம் வானர வீரர்கள் ஆகியோருடன் புஷ்பக விமானத்தில் ஏறி அயோத்திக்குத் திரும்பினான். வழியில் பரத்வாஜ முனிவரின் ஆசிரமத்தில் இறங்கி, அவரிடம் ஆசி வேண்டி வணங்கினான். இவர்களது வருகையால் மகிழ்ந்த பரத்வாஜர், அவர்கள் அனைவரையும் விருந்து உண்ண அழைக்கிறார். அவரது விருப்பப்படி ராமன் உட்பட அனைவரும் விருந்து உண்ண அமர்ந்தனர்.

பதினான்கு ஆண்டுகள் நிறைவுபெற இன்னும் சிறிது நேரமே உள்ளது. அதுவும் விருந்தில் கழிந்து விடும் என்பதை உணர்ந்தான் ராமன். பதினான்கு ஆண்டுகள் கழிந்தும், ஸ்ரீராமன் அயோத்தி திரும்பா விட்டால் தீயில் மூழ்குவேன் என்று பரதன் செய்த சபதம் நினைவில் எழுந்தது. பரத்வாஜரின் உபசரிப்பையும் தவிர்க்காமல், பரதன் உயிரையும் காப்பாற்ற எண்ணிய ராமன், அனுமனிடம், தனது மோதிரத்தைக் கழற்றிக் கொடுத்து,

‘‘ஆஞ்சநேயா, அசோக வனத்தில் சிறைப்பட்ட சீதை, தன் உயிரை மாய்க்க முயன்றபோது, இதைக் காட்டி அவளைக் காப்பாற் றினாய். இப்போது என் அருமைச் சகோதரன் பரதன் என்னைக் காணாமல் அக்னிப் பிரவேசம் செய்ய இருக்கிறான். நீ விரைந்து சென்று அவனைக் காப்பாற்றி நான் அயோத்திக்கு வந்து கொண்டிருக்கும் சேதியை அவனுக்குச் சொல்!’’ என்று ஆணையிட்டான்.

ராமனது ஆணைப்படி அனுமன், சில நொடி களில் பரதன் முன் நின்றான். ராமன் வர வேண்டிய நேரம் தாண்டி விட்டதால், கோசலை மாதாவின் வேண்டுகோளையும் ஒதுக்கி, தீயில் குதிக்க எழும்பிய பரதனை இரு கைகளிலும் ஏந்தித் தீயைத் தாண்டி குதித்தான் அனுமன். பிறகு பரதனை வணங்கி, ராமனது மோதிரத்தை அவனிடம் அளித்து, ‘‘பரதாழ்வாரே… வெற்றியுடன் ராமன், மனைவி சீதை மற்றும் லட்சுமணனுடன் புஷ்பக விமானத்தில் தங்களைக் காண விரைந்து வருகிறார். அவர், அடியேனைத் தங்களுக்குத் சேதி அறிவிக்க அனுப்பி வைத்தார்!’’ என்று கூறி கை கட்டி, வாய் புதைத்து நின்றான்.

பிறகு ராமன் வந்தான். பரதனைக் கட்டியணைத்தான். இருவரும் ஆனந்தக் கண்ணீர் பெருக்கி மகிழ்ந்தனர். இங்கு ஒரு சந்தேகம் நமக்கு எழும். ‘பரதன் செய்த சபதம் ஸ்ரீராமனுக்கு நினைவில் உள்ளது. பதினான்கு ஆண்டுகள் முடியும் நேரம் நெருங்கி விட்டதையும் உணர்ந்த ராமன், பரத்வாஜரிடம் நிலைமையை விளக்கி, விருந்தைப் பின்னொரு தடவை ஏற்பதாகக் கூறி, தானே நேரில் வந்து பரதனை மனங்குளிரச் செய்திருக்கலாமே?’ என்று. இதற்கான விடையை, திருமந்திரத்தில் கூறுகிறார் திருமூலர்.

அப்பனை நந்தியை ஆரா வமுதினை, ஒப்பிலி வள்ளலை ஊழி முதல் வனை

எப்பரிசாயினும் ஏத்துமின், ஏத்தினால், அப்பரிசு ஈசனருள் பெறலாமே…

ஊழிக் காலத்திலும் அழியாதிருந்து உலகத்தையும், அதிலுள்ள உயிர்ப் பிராணிகளையும் படைத்துக் காக்கும் ஈரேழு உலகுக்கும் தலைவனான கடவுளை எந்த உருவில் வழிபடுகிறோமோ, அதே உருவில் தோன்றி நமக்கருள்வான் என்பது இந்தச் செய்யுளின் கருத்து. ராமனது திருவடிகளைத் தாங்கும் பேறுபெற்ற பாதுகைகளை, ராமனாகவே கருதி வழிபட்டான் பரதன். எனவே, அப்படிப்பட்ட பரதனின் உயிர் காக்க, இறைவன் திருவடி உருவில்தானே வர வேண்டும்? அனுமனுக்கு ‘சிறிய திருவடி’ என்றும் பெயர் உண்டு.

எனவே, ராமனின் திருவடிகளை அலங்கரித்த பாதுகைகளை பூஜித்து வந்த பரதனைக் காப் பாற்ற, ராமன் தன் பக்தனான சிறிய திருவடி என்னும் அனு மனை அனுப்பினான் என்பது திருமூலரது கருத்து.

நாகை முகுந்தன் சொற்பொழிவில் கேட்டது.

– கல்யாணபுரம் ஸத்யமூர்த்தி (ஜூலை 2007)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *