தியானத்திற்கு ரெடியா?

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: April 6, 2019
பார்வையிட்டோர்: 78,232 
 

(தியானம் – 3)

“பரங்கி மலையை, பத்து நிமிட நேரம் என் தோளில் சுமந்து காட்டுகிறேன்” என்று சவால் விட்டான் ஒரு பலசாலி பயில்வான், தன் திரண்ட முஷ்டிகளை தட்டிய படியே. சுற்றி நின்றவரிடம் அசால்டாக கேட்டான் “ என்ன பந்தயம் ? என்னால் சுமக்க முடியவில்லை என்றால், நான் ஒரு லக்ஷம் ரூபாய் கொடுக்க தயார்! சுமந்து காட்டினால், ஒரு லக்ஷம் கொடுக்க நீங்க தயாரா?”

யாரும் அவனை நம்பவில்லை. இது முடியாத காரியம், , நடக்கிற காரியம் இல்லை, ஏமாற்று வேலை என எல்லாரும் அவனை எள்ளி நகையாடினார்கள்.

விடவில்லை அந்த பலசாலி பயில்வான். மீண்டும் ஆணவமாய் சவால் விட்டான். “மீண்டும் சொல்கிறேன் ! பரங்கி மலையின் பளு தாங்காமல், நான் கீழே விழுந்தால் , நான் ஒரு கோடி ரூபாய் தருகிறேன். ஆனால், பரங்கி மலையை என் தோள்களில் சுமந்து காட்டினால், நீங்கள் ஒரு லக்ஷம் ரூபாய் சன்மானமாக கொடுத்தால் போதும். இது என் பல பரிட்சை.! என் திறமையை நிரூபிக்க ஒரு சவால் ! அவ்வளவுதான்!”. என அறிவித்தான்.

யாரும் முன் வரவில்லை. கடைசியில் ஒரு பத்து பேர், பந்தயத்தில் கலந்து கொண்டனர். என்ன தான் ஆகிறது என்று பார்த்து விடுவோமே ! போனால் ஒரு லக்ஷம் , வந்தால் ஒரு கோடி.! அவர்களுக்கு தெரியும், வெற்றி அவர்களுக்கு தான். அதில் சந்தேகமே இல்லை ! வருவதை விடுவானேன்?

பயில்வான், ஒரு விடுமுறை நாளை குறிப்பிட்டான். அந்த நாளில் காலை சரியாக 8.00 மணிக்கு, மலையை சுமந்து காட்டுகிறேன் என்றான். செய்தீ, காட்டுத்தீ போல ஊரில் பரவியது.

குறிப்பிட்ட நாளும் வந்தது. காலை 8.00 மணி. மெட்ரோ ரயில், பஸ், ஆட்டோ, ஷேர் ஆட்டோ ,மின்சார ரயில் வண்டி என்று பயணித்து, மக்கள் பரங்கி மலை அடிவாரத்தில் திரண்டனர். யார் ஜெயிக்கிறார்கள் என பார்க்கலாம் ? பயில்வான், ஒரு சின்ன கல்லின் மீது அமர்ந்து இருக்க, அவனது அடியாட்கள், சரியான தடியாட்கள், அவனது திரண்ட கொழு கொழுகை, கால்களுக்கு எண்ணெய் போட்டு மசாஜ் செய்து கொண்டிருந்தார்கள்.

நேரம் போய்க் கொண்டே இருந்துது. மக்கள் கூட்டம் இன்னும் திரண்டது. மணி 8.30. பயில்வான் அமர்ந்த படியே இருந்தான். மணி 9.00 தாண்டியது. ஆனால், பயில்வான் மலையை தூக்கவே இல்லை. அப்படியே அமர்ந்திருந்தான், கூடியிருந்த மக்கள் பொறுமையை இழக்க ஆரம்பித்தனர். ‘இன்னும் மலையை பெயர்க்கவே ஆரம்பிக்கவில்லையே! எப்போது சுமந்து காட்டுவான், இந்த பயில்வான்?’

கூட்டத்தில் ஒருவன், ஒரு லக்ஷம் பந்தயம் கட்டியவன், பொறுமையை இழந்து, எழுந்து பயில்வானை கேட்டான் “மணி 9.30 ஆகப்போகிறது! ஏன் சும்மா உக்கார்ந்து இருக்கீங்க? எப்போ மலையை சுமந்து காட்டுவீங்க, பயில்வானே ?”

அதற்கு மிக பொறுமையாக , பயமேயில்லாமல் பயில்வான் பதில் சொன்னான். :” நானும் சுமக்கத் தயார், ஆனால், நீங்கள் யாரும் இந்த மலையை தூக்கி என் தோளில் வைக்க வில்லையே ? நீங்க எல்லாரும் சேர்ந்து இந்த மலையை தூக்கி என் முதுகில் வையுங்கள். அதை நான் அரை மணி நேரம் கூட சுமக்க தயார் அதுதானே பந்தயம் ?“

கூடியிருந்த மக்கள் வாயடைத்து நின்றனர்.

( Courtesy : Swamy Harshanandaji Maharaj speech in English on “ Patanjali Yoga Sutras”)

***

அது போல தான் தியானமும். சொல்வது எளிது. செய்வது கடினம். அயராத உழைப்பை தேவை. மன அமைதி தேவை.

தியானம் சொல்லித்தருகிறேன் என்றுசொல்வது எளிது. ஆனால் செய்வது கடினம். அதற்கு , முதலில் நாம் உடலாலும், சுவாசத்தாலும் , மனதாலும் வலிமை கொள்ள வேண்டும். அதற்கு தேவை பதஞ்சலி முனிவரின், ஆசனாக்கள் மற்றும் பிராணாயாமம். பிறகு, அதில் வெற்றி பெற்ற பின், தியானத்திற்கு நம்மை தயார் பண்ணிக் கொள்ளலாம்.

அப்போது தான் , மனைதை , அதன் எண்ணங்களை அடக்க முடியும். பதஞ்சலி முனிவர் சொன்னது இதுதான் “ யோகா ! சித்த விருத்தி நிரோதா ” . யோகாவின் குறிக்கோளே , மனதின் எண்ண விருத்திகளை அடக்குவதற்காகத்தானே !

நாம் , நதியின் இந்த கரையிலிருந்து அக்கரைக்கு செல்ல வேண்டுமெனில், நதியை நாம் தான் கடக்க வேண்டும். அதற்கான முயற்சி மேற்கொள்ள வேண்டும். வேறு யார் கடந்தாலும், நாம் அக்கரைக்கு போய் சேர முடியாது. அதேபோல், “ நான் யார்?” என தெரிந்து கொள்ள வேண்டுமெனில், நாம் தான் சுய முயற்சி செய்ய வேண்டும்.

உண்மையில் யோகா என்றால், உடல், மனம், ஆத்துமா இவை மூன்றையும் இணைக்கும் ஒரு செயல். இதற்கு உதவி செய்யும் கருவி தான், பதஞ்சலி முனிவர் எழுதிய “அஷ்டாங்க யோக சூத்திரங்கள்”. எட்டு பாகம் அல்லது அங்கம் கொண்ட 196 யோக சூத்திரங்கள். யோகாவில் ஏழாவது படி தான் தியானம். அதை அடைய (1)யம, (2)நியம, (3)ஆசனம், (4)பிரணாயாமம், (5)பிரத்யஹாரா, (6)தாரணா ஆகிய படிகளை தாண்ட வேண்டும் .

பதஞ்சலி சொல்படி, நமக்கு முதலில், யம நியம எனும் சுய கட்டுப்பாடு வேண்டும். அஹிம்சை, சத்தியம், திருடாமை, பிறன்மனை விரும்பாமை, பிறர் பொருளை அபகரிக்காமை, உடல் பேணல், போதும் என்ற மனது, மனக் கட்டுப்பாடு, நல்ல புத்தகம், நல்லவர் நட்பு, இறை உணர்வு போன்றவை இதில் அடக்கம்.

பின்னர், உடல் உறுப்புகளுக்காக, ஆசன பயிற்சி , மூச்சு பயிற்சிக்காக பிரணாயாமம். இதற்கு பிறகு, நமது இந்திரியங்களை கட்டுப் படுத்தி, உலக சிற்றின்பங்களை துறந்து, வெளிமுகப் பார்வையை உள்முகமாக திருப்புவது பிரத்யஹாரா ( U – Turn ) 180 டிகிரி டர்ன். இதற்குப் பிறகே தியானத்திற்கு வர முடியும். ஆசை, கோபம், நோய், நொடி, காமம் இவைகளை துறக்கவே இந்த முதல் ஐந்து படிகள் (அங்கங்கள்).

இதை தாண்டியே, அந்தரங்கம் எனும் தாரணா, தியானா, சமாதி எனும் மூன்று அங்கங்கள் பற்றி பதஞ்சலி சூத்திரங்கள் சொல்கின்றன.

***

இன்னொரு குட்டிக் கதை.

மகா பாரதப் போர். குருக்ஷேத்திர போர்க்களத்தில், கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு பகவத் கீதையை உபதேசம் செய்கிறான். கேட்டுக் கொண்டிருந்த அர்ஜுனனுக்கு ஒரு சந்தேகம்.

“ கிருஷ்ணா! நீ என்னமோ கர்ம யோகம், சாங்க்ய யோகம், ஞான யோகம், தியானம் என்று என்னென்னமோ சொல்லி, அலை பாயும் என் மனதை அடக்கு அடக்கு என்கிறாய். ஆனால், இந்த பாழாய் போன மனது மட்டும் அடங்க மாட்டேன் என்கிறதே ! காற்றில் பறக்கும், இலைசருகு போல அங்கும் இங்கும் அலை பாய்கிறதே! இதை எப்படி அடக்குவது ?”

அதற்கு கிருஷ்ணன் சொல்கிறான் “ உண்மை தான் அர்ஜுனா! இந்த மனதை அடக்குவது என்பது கடினம் தான். ஆனால் முடியாததல்ல. அதற்கு தேவை, மீண்டும் மீண்டும் மனந்தளராத பயிற்சி (அப்பியாசம் ), அது மட்டும் போதாது, வைராக்கியம் வேண்டும், வெற்றி பெறும் மன உறுதிவேண்டும்.

***

சொல்லி முடித்தான் என் நண்பன் விஷ்வா. “இப்போது சொல், முரளி, நீ ரெடியா தியானத்திற்கு ? “

நான் சொன்னேன் “ நான் ரெடி”

“அப்படியென்றால், குதிக்க தயாராக இரு. நாளை பார்ப்போம் “- என்ற படியே விடை பெற்றான் விஷ்வா.

“இரு இரு விஷ்வா ! இந்த தியானத்தால் என்ன பலன்? அது என்ன என்று மட்டும் சொல்லேன் ? “

“நிறைய இருக்கு ! முக்கியமாக, மன அழுத்தம் குறையும், மலர்ந்த முகம், சீரான நாடி துடிப்பு, சீரான ரத்த ஓட்டம் கிடைக்கும். வாழ்நாள் அதிகரிக்கும் !“

“அப்படியா?” – நான் எனது முகவாய்க் கட்டையில் கை வைத்தேன்

விஷ்வா தொடர்ந்தான் “உனக்கு தெரியுமா , நமது எண்ணங்கள், சிந்தனைகள், ஒரு நாளைக்கு எவ்வளவு என்று ?”

“தெரியாதே?” – உண்மையை ஒப்புக் கொள்வதில் எனக்கென்ன வெட்கம்? .

விஷ்வா “ விஞ்ஞான பதிவின் படி, பொதுவாக மனிதரிடம், ஒரு நாளைக்கு அறுபதாயிரம் முதல் எழுபதாயிரம் எண்ண ஓட்டங்கள் ஏற்படுகின்றன . அதாவது ஒரு நிமிடத்திற்கு சுமார் நாற்பது எண்ணங்கள்.

அது போல, நமது ஸ்வாசம் ஒரு நிமிடத்திற்கு 20 முதல் 40 முறை இழுத்து விடப்படுகிறது. விஞ்ஞான அறிக்கை படி, நாம் மெளனமாக இருக்கையில், இருபதும், பேசுகையில் முப்பதும், கோபத்தின் வசத்தில் இருக்கையில் நாற்பதுக்கு மேலும் ஸ்வாசம் இழுத்து விடுவது வேறு படுகிறது.

“ அப்படியா?” என்றேன் நான். எனக்கு தெரிந்ததெல்லாம் அந்த வார்த்தை ஒன்று தான் .

விஷ்வா தொடர்ந்தான் “ஆனால், தியானம் செய்கையில் , சுவாசம் பத்து அல்லது அதற்கு கீழ் ஐந்து வரை குறைந்து விடுகிறது. உனக்கு தெரியுமா முரளி, எண்ணங்களுக்கும் , முச்சு விடுவதற்கும் நேரடி சம்பந்தம் இருக்கிறது. அதனால், மூச்சு வேகம் குறைய குறைய , மனதின் எண்ணங்கள் நிமிடத்திற்கு நாற்பதிலிருந்து பத்தாக குறைந்து விடுகிறது. ”

(courtesy : Ben Prabhu speeech in Hindi on Dhyana)

“ஸ்வாசத்தின் எண்ணிக்கை குறைய குறைய , முதலில், நமது மனதின் கழிவு எண்ணங்கள் , கோபம், அகங்காரம், பயம் போன்றவை நம்மை விட்டு விலகுகிறது. அடுத்த படியாக, எதிர்மறை எண்ணங்கள் நம்மை விட்டு விலகுகிறது. இது போதாதா, நாம் நிம்மதியாக வாழ ! சந்தோஷமாக வாழ! இன்னும் நிறைய லாபங்கள் இருக்கிறது, நான் பின்னால் சொல்கிறேன் “ முடித்தான் விஷ்வா.

“வாவ் ” என்றேன் நான். “ அப்போ , இந்த இரத்த அழுத்தம், சர்க்கரை, அர்திரிடிஸ் போன்ற வியாதியெல்லாம் குறையாதா ? குறையும்னு சொன்னாங்களே ?“

“நிச்சயமாக குறையும் ! அதில் என்ன சந்தேகம் ? மனம் சாந்தியானாலே போதுமே, சைக்கோ-சோமோடிக் நோய்கள் (Psychosomatic diseases ) என்னும் மனம் சார்ந்த உடல் உபாதைகள் குறைய, விலக ! ஆனால், iஇந்த மாதிரி நோய்க்கு டாக்டர் அட்வைஸ் படி தான் நடக்கணும். ‘நான் யோகா பண்றேன் ! தியானம் பண்றேன்’ னு சொல்லிக்கிட்டு , நீயா மெடிஸினை நிறுத்திடக்கூடாது. என்ன ? “- என்றான் விஷ்வா. அவன் பயம் அவனுக்கு.

” சரி நான் வரேன் முரளி. பின்னால் பார்க்கலாம் “ – விஷ்வா விடை பெற்றான். நான் எதிர் பக்கம் நடையை கட்டினேன் !

****

(courtesy ” google”)

ஆசிரியர் குறிப்பு :

நடைப் பயிற்சி, ஜாகிங், சைக்கிளிங், உடல்பயிற்சி, ஸ்விம்மிங், டென்னிஸ் போன்ற விளையாட்டு , , பிட்னெஸ் ஜிம் போலத்தான் யோகாவும் ( ஆசன மற்றும் பிராணாயாமம் ) . உடலை பாது காக்க, உடலுக்கு ஊட்டம் கொடுக்க, இதுவும் ஓர் வழி, அவரவர் விருப்பத்திற்கேற்ப !

யோகாவில் ( ஆசன மற்றும் பிராணாயாமம் ) இரண்டு வருடமாக,நான் பார்த்தது ,

(1 ) நண்பர்களுடன் சேர்ந்து ஒரு மணி நேர இனிமையான கூட்டு , பகிர்தல் , நட்பு .

(2)எளிதான உடல் பயிற்சியுடன் சேர்ந்த மூச்சு பயிற்சி,

(3) சுவாச ஒழுங்கு நேர்படுத்துதல் ,

(4)ஒவ்வொரு உறுப்புகளுக்கும் ஒரு எளிதான பயிற்சி ,

(5 )ஜிம்மை போல, டென்னிஸ் போல, ஸ்விம்மிங் போல் இல்லாமல், நமது பர்ஸை அவ்வளவாக கடிக்காத ஒரு ஆரோக்கிய செலவு ( செலவு கம்மி என நினைக்கிறேன் !) .

(6 )இது மட்டுமல்லாமல்,ஆசன மற்றும் பிராணாயாமம் , யோகாவின் மூன்றாம் மற்றும் நான்காம் படி. த்யானம் செய்ய ஆரம்பிக்க உதவும் படி! சொல்லப் போனால், பிராணாயாமம், தியானம் செய்ய நம்மை தயார் படுத்துகிறது. தியானத்தின் ஆரம்பம் இங்கே என்றே சொல்ல வேண்டும் . மேலே பார்த்த பரங்கி மலை பயில்வானை போல, ஏமாற்றாத யோகா வகுப்புகளில் சேரலாம். வகுப்பு பிடிக்க வில்லை எனில் விலகிக் கொள்ளுங்கள். சாய்ஸ் உங்களுடையதே !

எனது இந்த கதை /கட்டுரை தியானம் பற்றி மட்டுமே ! மற்றவை ஜஸ்ட் போனஸ்!

Print Friendly, PDF & Email

1 thought on “தியானத்திற்கு ரெடியா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *