தம்பிகளைத் திரும்பப் பெற்ற தருமன்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 8,624 
 

தம்பிகளைத் திரும்பபாண்டவர்கள் வனவாசத்தில் இருந்த போது கடுமையான தாகத்தால் தவித் தனர். நீர் இருக்கும் இடம் தேடிச் சென்ற சகோதரர்களை நீண்ட நேரமாகியும் காணாததால் தவித்தார் தருமன். துரியோதனன் வேண்டிக் கொண்டதன் பேரில் பாண்டவர்களைக் கொல்வதற்காக யாகம் நடத்தி அதன் மூலம் ஒரு பூதத்தை வரவழைத்து, ஏவி இருந்தார் காளமா முனிவர்.

இதை உணர்ந்த பகவான் கண்ணன், ‘பாண்டவர்களைக் காக்குமாறு’ எமதர்மனிடம் வேண்டிக் கொண்டார். எமதர்மனும் அதற்கு ஒப்புக் கொண்டான். கவலையின் மிகுதியால், தண்ணீருக்காகச் சென்ற தன் தம்பியரைத் தேடிப் புறப்பட்டார் தருமன். நச்சுப் பொய்கை ஒன்றின் அருகில் அவர்கள் இறந்து கிடப்பதைக் கண்ட தருமன் கலங்கி, மயக்க முற்று விழுந்தார். பின்னர் தெளிந்து எழுந்தார்.

அப்போது யட்சன் வடிவம் தாங்கிய எமதர்மன் குரல் கொடுத்தான்:

‘‘எனது பேச்சைக் கேட்காததால், உன் சகோதரர் களுக்கு ஏற்பட்ட கதி இது. அதே தவறை நீயும் செய்யாதே. என் கேள்விகளுக்கு முதலில் பதில் சொல்லிவிட்டு உனது தாகத்தை தீர்த்துக்கொள்!’’

‘‘சரி, உன் கேள்விகள் என்ன?’’ _ தருமன் கேட்டார்.

‘‘பூமியைக் காட்டிலும் கனமானது?’’

‘‘கருவில் குழந்தையைத் தாங்கும் தாய்!’’

‘‘வானத்தைக் காட்டிலும் உயர்ந்தவன்?’’

‘‘தந்தை.’’

‘‘காற்றைவிட விரைவாகச் செல்வது?’’

‘‘மனம்.’’

‘‘புல்லினும் அற்பமானது?’’

‘‘கவலை.’’

‘‘தூங்கும்போதும் கண்களை மூடாமல் இருப்பது?’’

‘‘மீன்.’’

‘‘பிறந்தும் அசையாதது?’’

‘‘முட்டை.’’

‘‘வெல்ல முடியாத விரோதி?’’

‘‘கோபம்.’’

‘‘செல்வங்களில் சிறந்தது?’’

‘‘மக்கட் செல்வம்.’’

‘‘வெளியூருக்குப் போகிறவர் களுக்கு உதவுவது?’’

‘‘வித்தை.’’ ‘‘வீட்டில் இருப்பவனுக்குத் தோழன்?’’

‘‘மனைவி’’

‘‘நோயாளிக்குத் தோழன்?’’

‘‘மருத்துவர்’’

‘‘சாகப்போகிறவனுக்கு நண்பன்?’’

‘‘தானம்.’’

‘‘தவம் என்பது?’’

‘‘தனக்குரிய கடமையைச் செய்வதே.’’

‘‘எதை விட்டால் மனிதன் செல்வனாகிறான்?’’

‘‘ஆசையை!’’

‘‘உலகத்தில் எது பெரிய ஆச்சரியம்?’’

‘‘தினமும் ஆயிரக்கணக்கானவர் கள் இறப்பதைப் பார்த்தும், தாங் கள் மட்டுமே இந்த உலகில் என்றும் நிலைத்திருக்கப் போகிறோம் என்று நினைக்கிறார்கள் மக்கள். இருக்கக் கூடிய இந்தக் குறுகிய காலகட்டத்தில் கொள்ளை ஆசைகளுடன் போராடுகிறார்களே… இதுவே ஆச்சரியமானது.’’

தருமனின் பதில்களால் திருப்தியடைந்த யட்சன், ‘‘உன் சகோதரர்களில் ஒருவன் பிழைத் தெழுவான். உனக்குப் பிரியமான வனைச் சொல்!’’ என்றான்.

தருமன் ஒரு கணம் யோசித்தார்: ‘‘நகுலன் பிழைத்து எழ அருள் புரிய வேண்டும்!’’ எனக் கேட்டார்.

யட்சன் வியப்படைந்தான். ‘‘பேராண்மை பெற்ற பீமன், வில் வித்தையில் ஈடு இணையற்ற அர்ஜுனன் ஆகியோரை விட்டு விட்டு நகுலன் வேண்டும் என்கிறாய். அதனால் உனக் கென்ன நன்மை? முடியாது. வேறு யாரையாவது கேள். உயிர்பெற்று எழச் செய்கிறேன்!’’ என்றான் யட்சன்.

தருமனோ, ‘‘என் தந்தைக்கு குந்தி, மாத்திரி என்று இரு மனைவியர். குந்திக்கு நான் ஒரு மகன் இருக்கிறேன். அதேபோல் மாற்றாந் தாயான மாத்திரிக்கு ஒரு மகனாவது வேண்டும். இல்லையானால் உலகம் என்னைப் பழிக்கும். அதனால்தான் நகுலனைச் சொன்னேன்!’’ என்றான்.

தருமனின் பதிலால் வியப்பு அடைந்த எமதர்மன், தன் உண்மை வடிவில் தோன்றினான்:

‘‘குமரா! என் அருளால் பிறந்த உன்னைக் காணவும், உன் குணத்தைச் சோதிக்கவுமே இவ்வாறு செய்தேன். நீதி, நேர்மை தவறாத உன் குணம் என்னை ஈர்த்தது. எனவே, உன் எல்லா சகோதரர்களுக்கும் உயிர் கொடுக்கிறேன்!’’ என்ற எமதர்மன் அவ்வாறே செய்தான். சகோதரர் கள் அனைவரும் உயிர்த்தெழுந்த காட்சியைப் பார்த்துப் பெரிதும் மகிழ்ந்தான் தருமன்.

– ராணிமணாளன், கிருஷ்ணகிரி-1 (டிசம்பர் 2006)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *