கிளி ரூபத்தில் கவி பாடிய அருணகிரிநாதர்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: January 18, 2013
பார்வையிட்டோர்: 12,698 
 

பஞ்ச பூதத் தலங்களுள் அக்னித் தலமான திருவண்ணாமலையை பிரபுடதேவராயன் எனும் மன்னன் ஆட்சி செய்த காலம்.

ஒரு நாள், சபையில் அமைச்சர்கள் புடை சூழ வீற்றிருந்தான் மன்னன். அப்போது, மன்னனின் நெருங்கிய நண்பனும், ஆஸ்தான பண்டிதனுமான சம்பந்தாண்டான் அங்கு வந்தான். சமண கவியான சம்பந்தாண்டான் மந்திர சாஸ்திரங்கள் கற்றறிந்தவன்; தேவி உபாசகனும்கூட. அவனை மகிழ்ச்சியுடன் வரவேற்றான் மன்னன்.

கிளி ரூபத்தில் கவி பாடிய அருணகிரிநாதர்தனது ஆசனத்தில் அமர்ந்த சம்பந்தாண்டான் மெல்லிய குரலில், ”மன்னா, நண்பன் என்ற முறையில் உங்களிடம் ஒரு விஷயத்தைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஆனால்…” என்று நிறுத்தியவன், மன்னனின் முகத்தை ஏறிட்டான்.

”சம்பந்தாண்டாரே… எதுவாயினும் தயங்காமல் சொல்லுங்கள்!” என்றார் மன்னர்.

சம்பந்தாண்டான் தொடர்ந்தான்: ”மன்னா! சமீப காலமாகத் தங்களுடன் நட்புறவாடி வரும் அருணகிரியைப் பற்றி தங்களது அபிப்ராயம்?”

அந்தப் பெயரைக் கேட்டதும் மன்னனின் முகத்தில் பிரகாசம்!

”அருணகிரியார் மிகப் பெரிய ஞானி. அவருக்கு, முருகப் பெருமான் தரிசனம் தந்தது, வேலாயுதத்தால் அவர் நாவிலே ஆறெழுத்து மந்திரத்தை எழுதி முத்தமிழைப் புகட்டியது, ‘சும்மா இரு சொல்லற…’ என்று மௌனோபதேசத்துடன் ஜபமாலையும் தந்தருளியது… அப்பப்பா, அருணகிரியாரின் வாழ்வில் எத்தனை அற் புதங்கள்?!

எல்லாவற்றுக்கும் மேலாக முருகப் பெருமான், ‘முத்தைத் தரு’ என்று முதலடி எடுத்துக் கொடுத்து, அருணகிரியாரை பாமாலை இயற்றுமாறு பணித்தாரே… அந்த அருளாடலை நினைத்தால், என் உள்ளம் சிலிர்க்கிறது!” – பரவசத்துடன் விவரித்தான் மன்னன்.

இதைக் கேட்டதும் சம்பந்தாண்டானது மனதுக்குள் பொறாமைத் தீ கொழுந்து விட்டு எரிந்தது. ‘அருணகிரியால், மன்னரிடம் நமக்கு இருக்கும் செல்வாக்கு குறைந்து போகுமோ!’ என்று பயந்தான். எனினும், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் தொடர்ந்தான்:

”தாங்கள் கூறுவது முற்றிலும் உண்மை. அருணகிரியார் சர்வ வல்லமை பொருந்தியவரே. ஆனாலும்…”

”ஆனாலும்… என்ன? சொல்ல வந்ததை தயங்காமல் சொல்லுங்கள்!” – மன்னனின் குரலில் சலிப்பு!

”வேறொன்றுமில்லை… அட்டமாஸித்திகளும் கை வரப் பெற்ற அருணகிரியாரைப் பற்றி நாம் மட்டுமே பேசிக் கொண்டிருந்தால் போதுமா? அவரது புகழை உலகம் போற்றும்படி செய்ய வேண்டும் என்பதே இந்த சிறியவனின் ஆசை. இதைப் பற்றியே சொல்ல வந்தேன்” அழகுற பொய்யுரைத்தான் சம்பந்தாண்டான்.

இதைக் கேட்டதும் மன்னனின் முகத்தில் மலர்ச்சி!

”சம்பந்தாண்டாரே உமக்கு எவ்வளவு உயர்ந்த எண்ணம்! அருணகிரி என்கிற சூரியனுக்கு மேலும் ஒளியூட்டிப் பார்க்க ஆசைப்படுகிறீர், அப்படித்தானே? சரி, அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்பதையும் தாங்களே கூறிவிடுங்கள்!” என்றான் உற்சாகத்துடன்.

இதைத்தானே சம்பந்தாண்டானும் எதிர்பார்த்தான். அவர், மெள்ள தனது திட்டத்தை செயல்படுத்த ஆரம்பித்தான்…

”மன்னா! பாரிஜாதம் என்ற அபூர்வ வகை மலர் ஒன்று உண்டு. கற்பக வனத்தில் மட்டுமே கிடைக்கக் கூடிய இந்த மலரை, நம்மைப் போன்றவர்கள் எடுத்து வருவது இயலாத காரியம். ஆனால், அருணகிரியாருக்கு அது வெகு சுலபமாயிற்றே! பாரிஜாதத்தை அவர் கொண்டு வந்து விட்டால், இந்த உலகமே அருணகிரியா ரின் மகிமையை அறிந்து போற்றுமே!” என்றான் சூழ்ச்சியுடன்.

அவனது வஞ்சகத்தை அறியாத மன்னனும் அருணகிரியாரைச் சந்தித்து, தனது விருப்பத்தை எடுத்துக் கூறினான். ”முருகப் பெருமானது திருவருள்படி நடக்கட்டும்” என்ற அருணகிரியார் பாரி ஜாதத்தைக் கொண்டு வர சம்மதித்தார்.

பிறகு, திருவண்ணாமலை ஆலய கோபுரத்துக்குச் சென்று தியானத்தில் ஆழ்ந்தார் அருணகிரியார். சற்று நேரத்தில் கண் விழித்தவர் எதிரில் இறந்து கிடக்கும் ஒரு கிளியைக் கண்டார். ‘கந்த வேளுடன் ஐக்கியம் ஆவதற்கான வேளை வந்து விட்டது’ என்று உணர்ந்தார்.

பிறகு, தனது உடலை கோபுரத்தில் கிடத்திய அருணகிரிநாதர், ‘கூடு விட்டுக் கூடு பாய்தல்’ எனும் கலையின் மூலம் கிளியின் உடலில் புகுந்தார். அங்கிருந்து கற்பகக் காட்டை நோக்கிப் பறந்தார்.

இந்தச் சூழலைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டான் சம்பந்தாண்டான். ஆலய கோபுரத்தில் கிடக்கும் அருணகிரியாரது உடலை மன்னன் உட்பட அனைவருக்கும் காட்டினான். மேலும், ”அருணகிரியார், தன்னால் பாரிஜாத மலரைக் கொண்டு வர முடியாது என்று கருதினார் போலும்! அதை வெளியில் சொல்ல வெட்கப்பட்டு தன்னையே மாய்த்துக் கொண்டு விட்டாரே!” என்று நீலிக்கண்ணீர் வடித்தவன், உடலை தகனம் செய்யும்படி மன்னரிடம் வேண்டிக் கொண்டான்.

அருணகிரியாரது இழப்பைத் தாங்க முடியாமல் கதறியழுதான் மன்னன். தொடர்ந்து, சம்பந்தாண்டான் கூறியபடி தகனக் கிரியை களையும் செய்து முடித்தான். அருணகிரியாரது உடல் எரிந்து சாம்பலானது! (பார்வை இழந்த பிரபுடதேவ ராய மன்னன் மீண்டும் பார்வை பெறும் பொருட்டே அருண கிரியார் பாரிஜாத மலரைத் தேடிச் சென்ற தாக வேறொரு கதையும் உண்டு.)

பாரிஜாத மலர்களோடு கிளி வடிவில் திரும்பி வந்த அருணகிரியார் கோபுரத்தை அடைந்தார். அங்கு தம் உடலைக் காணாது திகைத்தார். பிறகு, ஞான திருஷ்டியால் நடந்ததை அறிந்தவர், கிளி வடிவிலேயே மன்னனிடம் சென்று பாரிஜாத மலர் களைக் கொடுத்தார்.

உண்மையை உணர்ந்த மன்னன் கதறினான். ‘மிகப் பெரிய பிழையைச் செய்து விட்டேனே’ என்று வருந்தினான்.

”வருந்தாதே மன்னா… எல்லாம் முருகவேளின் விருப்பம்! இன்னும் சிறிது காலம் இந்த உருவத்திலேயே இருப்பேன். உனக்கு மட்டும் புரியும்படி உன்னோடு உரையாடுவேன்!” என்று அவனைத் தேற்றிய அருணகிரியார், மீண்டும் கோபுரத்தை அடைந்தார். அதன் பிறகு, அவர் (கிளி உருவிலேயே) பாடி அருளியதே கந்தரனுபூதி.

‘தன் வினை தன்னைச் சுடும்!’ என்பது போல், தேவி உபாசகனான சம்பந்தாண்டானின் அழிவு, தேவியாலேயே நிகழ்ந்தது என்பர். சில காலங்களுக்குப் பின்னர், மன்னன் பிரபுடதேவ ராயனும் இறந்து போனான்.

அதன் பிறகு, கிளி வடிவில் இருந்த அருணகிரியார், தன் இனத்துடன் கயிலாய மலைக்குப் பறந்து சென் றார். அங்குள்ள கந்தகிரி சிகரத்தை அடைந்தவர் ‘ஞானானுபூதி’ பாடினாராம் (ஞானானுபூதி என்பது பன்னிரண்டு விருத்தங்களின் தொகுதி). பின்னர் முருகப் பெருமான், அந்தக் கிளியை ஏற்று தனது தோளில் வைத்துக் கொண்டதாகக் கூறுவர்.

முருகப் பெருமானுடன் மட்டுமல்ல… திருப்புகழ், கந்தரனுபூதி, கந்தரலங்காரம், வேல் விருத்தம், சேவல் விருத்தம் மற்றும் மயில் விருத்தம் முதலான பாடல்கள் மூலம் இன்றும் நம்மோடு வாழ்கிறார் அருணகிரியார்!

– ஜூலை 2008

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *