இந்த இருவரில் யார் என் மனைவி?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 7,815 
 

உத்தமமான சிவாசார்யரான தேவசர்மா, கயிலைவாச னான உமையரு பாகனை வழிபட்ட தீவிர பக்தர். அவருக்குத் திருமணம் நடந்தது (மணப் பெண்ணை விமலா என்றும், அவள் தங்கையைக் கமலா என்றும் வைத்துக் கொள்வோம்).இந்த இருவரில்

திருமணத்தின்போது, விமலாவின் வயது எட்டு. உலக அனுபவம் இல்லாத சிறுமியாக இருந்தாலும், தன் கணவனின் பக்தியிலும், சிவத் தொண்டிலும் பெருமைப்பட்டாள். இரண்டு மாதங்கள் கடந்தன. தேவசர்மா, ஸ்தல யாத்திரை செல்லத் தீர்மானித்தார்.

மனைவியை மாமனார் வீட்டில் விட்டு விட்டுக் கிளம்பினார் தேவசர்மா. ஊர் ஊராகச் சென்று இறைவனின் அருள் கோலங்களை தரிசித்த தேவசர்மாவின் ஸ்தல யாத்திரை பன்னிரண்டு ஆண்டுகள் தொடர்ந்தது. விமலா பருவம் எய்தினாள். அழகும், இளமையும் ததும்பும் அவளுக்கு இப்போது வயது இருபது. விமலாவின் சகோதரி கமலா, தோற்றத்தில் விமலா வைப் போலவே இருப்பாள். இதை வைத்து ஒரு திருவிளையாடல் நிகழ்த்த திருவுள்ளம் கொண்டார் இறைவன்.

விமலாவுக்குப் பெரியம்மை வந்தது. அதன் காரணமாக அவளது அழகு பறிபோனது. மேனியெங்கும் அம்மைத் தழும்புகள் பளிச்சிட்டன.

இந்த நிலையில் தேவசர்மா ஊர் திரும்பினார். பன்னிரண்டு வருடங்களுக்குப் பிறகு, மனைவியைப் பார்க்கும் ஆர்வம். மாமனாரும் மற்றவர்களும் ஆவலுடன் வரவேற்றார்கள். விமலாவும் கணவரை வரவேற்று வணங்கினாள்.

‘‘யார் இந்தப் பெண்?’’ & கேட்டார் தேவசர்மா.

‘‘என்ன இப்படிக் கேட்கிறீர்கள்? இவள்தான் உங்கள் மனைவி விமலா. பெரியம்மை பாதித்ததால் இப்படி உருக் குலைந்து விட்டாள்!’’ என்று எல்லோரும் ஏகக் குரலில் பதில் சொன்னார்கள். தேவசர்மா நம்பவில்லை. ‘எட்டு வயதில் விட்டு விட்டுப் போன என் மனைவி இப்போது இருபது வயது அழகுத் தேவதையாக இருப்பாள் என்று எண்ணினால், யாரோ ஓர் அவலட்சணத்தைக் கொண்டு வந்து மனைவி என்கிறார்களே!’ என்று நினைத்த அவர், அதிர்ச்சியும் அருவருப்பும் அடைந்தார். அதே நேரம் தேவசர்மாவின் மைத்துனியான கமலா அழகுப் பதுமையாக அங்கு வந்தாள். துள்ளினார் தேவசர்மா, ‘‘ஹ§ம்! ஏமாற்றுகிறீர்களா? இதோ வருகிறாளே, இவள் தான் என் மனைவி!’’ என்று கத்தினார்.

எல்லோரும் திடுக்கிட்டார்கள். ‘‘ஐயா! நீங்கள் சொல்வது தவறு. இவள் உங்கள் மைத்துனி. உங்கள் மனைவியும் இவளும் ஒரே ஜாடையில் இருப்பதால், நீங்கள் தடுமாறுகிறீர்கள். உண்மையில் அவள்தான் உங்கள் மனைவி!’’ என்றார்கள். தேவசர்மா இதை ஏற்கவில்லை.

‘‘எல்லோரும் என்னை ஏமாற்றுகிறீர்கள். நான் உங்களை நம்பத் தயாரில்லை. எல்லோரும் ஸ்வாமி சந்நிதிக்குப் போவோம். என் மனைவி யார் என்பதை ஸ்வாமியே சொல்லட்டும். இல்லா விட்டால், நான் மறுபடியும் ஸ்தல யாத்திரை கிளம்பிவிடுவேன்!’’ என்று நிபந்தனை விதித் தார். எல்லோரும் ஒப்புக் கொண்டு, ஸ்வாமி சந்நிதியை அடைந்தனர்.

‘‘முழு முதற் கடவுளே! இங்கு இருக் கும் இரு பெண்களில் என் மனைவி யாரென்று அறிய முடியவில்லை. என் துயரத்தைத் தீர்த்தருள வேண்டும்!’’ என முறையிட்டார் தேவசர்மா.

அம்பிகையுடன் ரிஷப வாகனத்தில் தரிசனம் தந்தார் சிவபெருமான். தேவ சர்மாவின் மைத்துனியைச் சுட்டிக் காட்டி, ‘‘அன்பனே! அவளல்ல உன் மனைவி. இவளே உன் மனைவி!’’ என்று விமலாவைச் சுட்டிக் காட்டினார். அத்துடன், ‘‘தேவசர்மா! இதோ, எதிரில் இருக்கும் சிவ புஷ்கரணியில் உன் மனைவியை நீராடச் சொல்!’’ என்று கூறி மறைந்தார். எல்லோரும் சிவ புஷ்கரணியில் நீராடினார்கள். என்ன அதிசயம்! விமலா வின் அலங்கோல வடிவம் நீங்கி, அழகுத் தேவதையாக வெளிப்பட்டாள்! ‘அவள் அல்ல, இவளே உன் மனைவி’ என இறைவனே சுட்டிக் காட்டியதால் அன்று முதல் அந்தத் தலம் ‘அவளிவநல்லூர்’ (அவள்+இவள்+நல்லூர்) என்று அழைக்கப்பட்டது. தானே சாட்சியாக நின்று, வழக்கைத் தீர்த்து வைத்ததால், இந்தத் திருத்தலத்தின் இறைவன், ‘சாட்சிநாதர்’ என்று அழைக்கப்படுகிறார்.

தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலூகாவில், சாலிய மங்கலம் ரயில் நிலையத்தில் இருந்து வடகிழக்கே சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது இந்தத் தலம். சிவ பெருமான் தரிசனம் தந்து, சாட்சி சொல்லி அருள் புரிந்த நாள், ‘தை அமாவாசை’. அதை முன்னிட்டு ஆண்டுதோறும் தை அமாவாசையன்று இங்கே பிரதான உற்சவம் வெகு விமரிசையாக நடைபெறுகிறது.

– ஜனவரி 2006

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *