கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: August 4, 2014
பார்வையிட்டோர்: 27,826 
 

”யோவ் பிரானே வெளியே வாருமைய்யா!”

கர்ணகடூரமான அந்தக் குரல், கவண்கல் போல் அந்தக் காணியின் வெளியெங்கும் மோதியது. அதுவரை கேட்டுக்கொண்டிருந்த பறவைகளின் ஒலிகள் அடுத்த சில நொடிகளுக்கு நிசப்தமாகி மீண்டபோது அவை தாறுமாறான கீச்கீச்சுகளுடன் சிறகடிக்கும் படபடப்பொலிகளாக மாறியிருந்தன. பச்சை போர்த்த மர உச்சிகளின் மேல் இளநீல வெளியில் பறவைகள் விரிந்து சிதறின.

காலை அப்போதுதான் மெதுவாகப் பரந்து கொண்டிருந்தது.

ஆதியமலப் பிரானய்யங்கார் என்கிற திருவடிப்பிள்ளை ஊருக்கு ஒதுக்குப்புறமான அந்தக் காணியில் அமைந்திருந்த மண் குடிலின் உள்ளிருந்து வாசலுக்கு வந்தார்.. நெற்றியில் திருமண், காதுகளில் துளசி இலைகள். மிகவும் மெலிந்த தேகத்தில் கண்கள் மட்டும் தீர்க்கமான தெளிவுடன் இருந்தன. கருமையான உடலில் எளிய பருத்தி வெள்ளை அங்கவஸ்திரம்.

அவரை அழைத்த காளிங்கன் கட்டுமஸ்தான உடலுடன் கையில் வேலுடன் நின்றிருந்தான். அச்சுத ராமராயரின் அந்தரங்கச் சேவகன். விஜயநகர வீழ்ச்சிக்குப் பிறகு தென்பாண்டி மண்டலத்தில் சிற்றரசர்களாகக் கோலோச்சும் பல நாயக்க தளபதிகளில் அச்சுத ராமராயர் முக்கியமானவர். அவர் ஆள் அனுப்பியிருக்கிறார் என்றால் விஷயம் முக்கியமானதாக இருக்க வேண்டும்.

”வரவேணும். அடியேன் குடிலுக்கு எழுந்தருளியது அடியேன் பாக்கியம். இப்போதான் நித்யானுஸந்தானத்தை முடிச்சேன். ஒரு நிமிஷம் இருங்கோ. தீர்த்தமும் துளசி பத்ரமும் வாங்கிக்கோங்கோ…”

இடைமறித்தான் காளிங்கன்.

“விளையாடுகிறீரா? தொழுவக்குடிகளை தர்மானுசாராங்களுக்கு எதிராக கலகம் விளைவிக்கத் தூண்டியிருக்கிறீரென்று உம்மை உடனடியாக அழைத்து வர ஆணையாகியிருக்கிறது ஓய். பிராமணர் என்று கூடப் பார்க்காமல், உடனே வராவிட்டால் பிணைத்து அழைத்து வரவும் உத்தரவாகியிருக்கிறது.”

பிரானய்யங்காருக்குப் புரிந்தது. திருமலையாப்பிள்ளை விவகாரம் வெளியிலே வந்து விட்டது. எம்பெருமான் விளையாடுகிறான்.

”இதோ வருகிறேன். சொந்த சக்தியிலேயே வந்துவிடுகிறேன். உங்களுக்கு ஏன் சிரமம்? விண்ணகர அமுதத் தடாகம்தானே”

“ஓம்” என்று உறுமியபடி குதிரையில் தாவி ஏறினான் அவன்.

தென்னந்தோப்புகள் ஊடே பாம்பாக நெளிந்த பாதைகள் வழியாகவும் பின்னர் மாட்டுவண்டித் தடத்தின் செம்புழுதித் தடவீதி வழியாகவும் குதிரையைப் பின்தொடர்ந்து நடந்தார், பிரானய்யங்கார்.

விண்ணகர அமுதத் தடாகம்.

அமுதத் தடாக மண்டபம் வந்துசேரும் போது முன்மதியம் வந்து வெயிலேற ஆரம்பித்துவிட்டது.

அமுதத் தடாகம் வழக்கம் போலவே வறண்டு இருந்தது.

கருடன் அமுதத்தைக் கொண்டு இந்த வழியாக ஆகாய மார்க்கமாக வருகின்ற போது இந்திரன் கருடன் மீது வஜ்ஜிரத்தை வீசினான். வஜ்ரம் வருகிறதைக் கண்ட கருடன் உடனே விஷ்ணுவை தியானம் செய்ய, விஷ்ணு அவனுக்காக எழுந்தருளி வஜ்ராயுதம் அவனுடைய சிறகில் ஒரு தூவலை மட்டுமே விழும்படியாகச் செய்தருளினார். அது சமயம் அமிர்த கலசம் சிறிதே அசைய அதிலிருந்து ஒரு துளி இங்கு விழுந்து ஒரு தடாகமாகி விட்டது. ஆகா இனி உலகில் சாவே இல்லாமல் ஆகிவிடுமே என்று கருடன் மீண்டும் விஷ்ணுவை வேண்ட அந்தத் துளி மீண்டும் அப்படியே அமிர்த கலசத்துக்குள் போய் விட்டது. அன்றிலிருந்து எத்தனையோ மழை வந்தாலும் இந்தத் தடாகம் வறண்டேதான் இருக்கும். பெருமாள் நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கிறான். அவன் திருநாமம் புள்ளுக்கருளிய ஸ்ரீ தேவி பூதேவி சமேத புள்ளியூர் விண்ணகர நம்பி..

தடாகத்தின் கிழக்குப் பகுதியில் அந்தக் கல்மண்டபம் இருந்தது. அதற்கு வெளியே ஐவர் குடை பிடிக்க, அந்த நிழலில் அந்தணாளர்கள் கூட்டமாக நின்று கொண்டிருந்தனர்.

அவர்களுக்கு சிறிது தூரத்தில் மரியாதையுடன் அகத்துடையார்கள் நின்று கொண்டிருந்தார்கள். அவர்களுக்கும் இரு சேவகர்கள் குடை பிடித்துக் கொண்டிருக்க, பெரும்பாலானோருக்கு அந்த நிழல் போதுமானதாக இல்லாமல் வெயிலுக்கும் நிழலுக்குமாக முண்டியடித்துக் கொண்டிருந்தனர்.

பதினாறு கல்தூண்களிலும் கருடன் கலசத்துடன் வரும் காட்சிகளும் இந்திர கர்வ பங்கமும் காட்டப்பட்ட அமுதத் தடாக மண்டபத்தில் மையமாக பட்டு ஜரிகை போர்த்திய மர ஆசனம் போடப்பட்டு அதில் அச்சுத ராமராயர் அமர்ந்திருந்தார். அவருக்குப் பின்னால் மண்டபத்துக்கு வெளியே இருபது வீரர்கள் பூரண ஆயுததாரிகளாக நின்றுகொண்டிருந்தார்கள். சற்று தொலைவில் ஒரு வெள்ளைக் குதிரையை இரு சேவகர்கள் பிடித்துக் கொண்டிருந்தார்கள். அச்சுத ராமராயருடன் புள்ளியூர் நம்பி விண்ணகர தலைமை பட்டரும் வந்திருப்பது தெரிந்தது. சிவப்பான உடலில் உயர்தரப் பட்டு அங்கவஸ்திரம் பூணூலுக்கு மேலாகப் படர்ந்து, வெயிலில் இங்கு வரை பிரகாசித்தது.

அச்சுத ராமராயருக்கு ஐம்பது வயதிருக்கலாம். கட்டுமஸ்தான உடலில் ஆங்காங்கே விழுப்புண் தழும்புகள். உடலின் மீது பட்டு அங்கவஸ்திரம் அநாவசியமாகக் குறுக்காகக் கிடந்தது. தங்க ஆபரணங்கள் மின்னின. நெற்றியில் திருமண் தீர்க்கமாக இருந்தது. கண்கள் குறுகி ஏறக்குறைய கோடுகளாக மாற அவர் பிரான்னய்யங்கார் வருவதையே கூர்மையாகப் பார்த்துக் கொண்டிருந்தார்.

மண்டபத்துக்கு வெளியே ஒரு மரத்தூண் ஏற்படுத்தி அதில் இருபத்தைந்து வயதான ஓர் இளைஞன் கட்டப்பட்டிருந்தான். அவன் தலையில் புழுதி படித்திருந்தது. உடலெங்கும் ஆங்காங்கே தோல் உரிந்து தொங்கிக் கொண்டிருந்தது. அழுக்கான ஒரு கோவணத்தைத் தவிர வேறெந்த ஆடையும் அவன் அணிந்திருக்கவில்லை. அருகே புளியம் விளாறுகளுடன் வீரர்கள் நின்று கொண்டிருந்தனர். அவ்விளாறுகளில் ஆங்காங்கே சதைத் துணுக்குகள் ஒட்டியிருந்தன.

பிரானய்யங்காரைக் கண்டவுடன் அந்த இளைஞனின் தலை ஒரு நொடி நிமிர, இருவர் கண்களும் சந்தித்தன. மீண்டும் அவன் தலை தொய்ந்து கவிழ்ந்தது. அந்த இளைஞன் முகத்தில் ஒரு குறும்புத்தனமான புன்னகை தவழ்வதாகத் தோன்றியது அவருக்கு.

பிரானய்யங்கார் கண்களில் நீர் நிரம்பியது

காளிங்கன் கல்மண்டபத்துக்கு வெளியே நின்று அரைவரை குனிந்து, “திருமேனி திருவுளப்படி ஆதியமலப் பிரான்னய்யங்காரை அழைத்து வந்திருக்கிறேன். அடியேன்.” என்று தண்டம் சமர்ப்பித்தான்.

அதைப் புறக்கணித்து பிரானய்யங்காரின் வணக்கங்களை எதிர்பார்த்து அச்சுத ராமராயரின் முகம் உயர்ந்த போது-

பிரானய்யங்கார் அந்த இளைஞன் முன்னாக சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கிக் கொண்டிருந்தார்.

பிராமணர்கள் நின்ற பகுதிகளிலிருந்து ‘ஹா ஹா’காரங்கள் வெளியாயின. ‘குலத்துரோகி’ என ஒரு பருமனான வயோதிக பிராமணர் சப்தமாகவே சொன்னார். அவர் காதுகள் சிவந்து வெடவெடத்தன. தொடர்ந்து ‘நீசன்’, ’பாஷாண்டக்காரன்’ என வசைகள், வாய்க்களுக்குள் ஒலிக்க ஆரம்பித்தன. ஆனால் அவை அச்சுத ராமராயர் காதுகளில் விழும்படியான உத்தேசத்துடன் கூறப்பட்டன.

அச்சுத ராமராயரின் முகத்திலும் சினம் படர்ந்து. ஆனால் ஒரே நொடிக்குள்ளாக அது வெளிக்குத் தெரியாமல் அடங்கியது. என்ன இருந்தாலும் பிராமணர். ஆத்திரம் கொண்டால் கதை வேறுமாதிரி ஆகிவிடும். இன்றில்லாவிட்டாலும் இன்னொரு நாள். அவர் கண்கள் இப்போது அகத்துடையார்கள் பக்கமாகச் சென்றது.

அகத்துடையார்கள் கண்களில் வெறி உக்கிர உச்சமாகத் தாண்டவமாட அவர்கள் தங்களை கஷ்டப்பட்டு அடக்குவது தெரிந்தது. அச்சுத ராமராயரின் முகம் உடனடியாக திருப்தி அடைந்து, முகத்தில் புன்முறுவலின் முதல் வரி தொடங்கி, அதுவும் அடங்கியது. கற்சிலைக்கொப்ப அவர் அமர்ந்திருந்தார்.

பிரானய்யங்கார் மண்டபத்துக்குள் காலடி வைக்க முற்பட்ட போது காவலன் வேல் அவரைத் தடுத்தது.

”அங்கேயே நிற்க வேணும். நீர் மண்டபத்துக்குள் பிரவேசிக்குமளவு ஆசாரசீலரல்ல ஆசாரஹீனராகிவிட்டீர் என்பது இவ்விண்ணகர பூசுரர்களான வேத விற்பன்னர்கள் அபிப்பிராயம்!” என ஓர் அதிகாரி சொன்னார். பிராமணர்கள் கூட்டத்திலிருந்து ஆமோதிக்கும்விதமாக ஒலிகள் கிளம்பின. பிரானய்யங்கார் எவ்வித மாற்றமும் காட்டாத முகத்துடன் அக்கல்மண்டபத்தின் வெளியிலேயே நின்றார்.

வெயில் சுட்டெரிக்க ஆரம்பித்தது.

அச்சுத ராமராயரின் குரல் கேட்டதும் அங்கிருந்த அத்தனை ஒலிகளும் அடங்கின.

”பிரானய்யங்கார் நீர் உயரிய பிராமணோத்தமர்களின் குலத்தில் வந்தவர். உம்முடைய பாட்டனார் வைணவ திவ்யக் கிரந்தங்களுக்கு அருளிய பாஷ்யங்கள் இன்றும் பிரசித்தம். நீரும் சிலகாலம் முன்னால்வரை மிகுந்த ஆசாரசீலராகவே இருந்திருக்கிறீர். அப்படி இருக்க நீர் சாதியனுஷ்டானங்களை மீறி இப்படி மிலேச்சரினும் கீழாக, தொழுவக்குடிகளுடன் சல்லாபித்தமைக்கும் அவர்களை இவ்விண்ணகரத்துக்குள் பிரவேசிக்கச் செய்தமைக்கும் என்ன நியாயம் சொல்லப் போகிறீர்?”

பிரானய்யங்கார் அமைதியாகச் சொன்னார்- “பாகவத நியாயம்”

“அதென்ன நியாயம்?” கேலியாக எழுந்தது ராயரின் குரல், “திலகாஷ்ட மகிஷ பந்தனமா?”

எழுந்து அடங்கிய சிரிப்புக்கனைப்புகள்.

அவருக்கு பின்னால் பட்டரும் அவருடன் நின்றிருந்த சில பிராமணர்களும் ஏதோ குசுகுசுவென பேசிக்கொண்டு மீண்டும் நிமிர்ந்து பிரானய்யங்காரைப் பார்த்தனர்.

”யதிகட்கெல்லாம் தலைவனாம் உடையவரும் ஆழ்வார்களும் காட்டிய நியாயம்”

பட்டர், அச்சுத ராமராயரிடம் தலைகுனிந்து வாய்பொத்தி ஏதோ முணுமுணுத்தார்.

”பிரானய்யங்காரே! எதுவானாலும் நீர் பிராமணர். எனவே இனி விண்ணகர பூசுரர்களான வேத வித்துகள் உம்மை விசாரிப்பார்கள். யாம் இறுதித் தீர்ப்பை மட்டுமே வழங்குவோம்!” என்று கூறிய அச்சுத ராமராயர், நாடகம் பார்க்கும் ஓய்வுத்தளர்ச்சியுடன் ஆசனத்தில் சாய்ந்தார். பட்டர் முன்னகர்ந்தார்.

“இதோ இக்கம்பத்தில் கட்டப்பட்டிருப்பவனை உமக்குத் தெரியுமா?”

“ஆம்”

“யார் இவன்? இவன் குலமென்ன?”

“என் ஆச்சாரியர். எம்பிரான் மார்பில் திகழும் தாயாரின் புதல்வர் இவர். திருக்குலத்தார்..”

மீண்டும் முணுமுணுப்புக்கள் எழுந்தன. புருவங்கள் நெரிந்தன. ”இந்தக் கோடாலி காம்பைக் கல்லாலடித்து…” என்கிற வார்த்தைகள் தெளிவாகக் கேட்டன. அச்சுத ராமராயர் மட்டுமே அமைதியாக இருந்தார்.

பட்டர் கேட்டார், “இதற்கு என்ன சாஸ்திர சம்மதம்?”

“ஆழ்வார்கள் மூலம் எம்பிரான் சொன்னது.”

“என்ன ஓய் கதை விடுகிறீர்,,,”

“இழிகுலத்தவர்களேனும் எம்மடியார்களாகில்
தொழுமினீர் கொடுமின் கொண்மினென்று நின்னொடுமொக்க
வழிபடவருளினாய்போல் மதிள்திருவரங்கத்தானே…”

“ஓஹோ அப்படிப் போகிறதா கதை… அதனால்தான் இழிகுலத்தானிடம் போனிரோ!”

“ஸ்வாமி தவறாகப் புரிந்து கொண்டீர்… அதனால்தான் இழிகுலத்தானான என்னை எம்மனார் ஏற்றுக்கொண்டு பழமையான வைணவக் கிரந்த இரகசியங்களை அருளிச்செய்தார்.”

கொப்பளிக்கும் அக்னித் தடாகத்தில் பெரும் பாறாங்கல் விழுந்தது போல வெறுப்பலைகள் அனலாகப் பரவின. “டேய்…!.” பட்டர் மரியாதை, போலி பவ்யம், நிதானமெல்லாம் விட்டு கோபத்தால் தீப்பிழம்பெனப் படபடத்தார்.

“நீ பிறந்ததால் தானடா இந்த வேதோத்தமர்களின் குலம் இழிகுலமாகிவிட்டது. வேத அந்தணர்களையா இழிகுலம் என்றாய்?”

“பகவத்பாகவத சேஷத்வத்துக்கு அநுகூலமான ஜன்மமே உத்க்ருஷ்ட ஜன்மம் என்பது அங்ஙனமல்லாதது நிக்ருஷ்டம் என்பதும் நிச்சயிக்கப்பட்டதல்லவா ஸ்வாமி…”

பட்டருக்கு சட்டென ஒன்று புரிந்தது.

நடப்பது விசாரணையல்ல. இவனது துன்மித்தக் கருத்துகளை பரப்ப இதனை அவன் பயன்படுத்துகிறான் துஷ்டன். மகா துஷ்டன். மிகவும் சாமர்த்தியமாக அமைதி குலையாமல் எதிர்கொள்ள வேண்டும். தன் வைராக்கியத்தின் கடைசித் துளியையும்விட்டு, ஆத்திரத்தை உள்ளிழுத்து வெளிக்கு அணைத்தார்.

தன்மேல் வரவழைத்துக் கொண்ட சாந்த பாவனையால் உடல் சிறிது நடுங்க அமைதி ததும்பும் குரலில் சொன்னார், “பிரானே நீர் கிரந்தங்களையும் திருமாலைகளையும் இஷ்டப்படி வியாக்யானம் செய்யக் கூடாது. கொடுமின் கொண்மின் என்றால் பகவத் ஞானத்தை அபேஷித்துக் கேட்டால் கொடுங்கோள் என்னும் ப்ரஸாதிக்கில் ப்ரஸாதராங்கோள் என்றுதான் சொல்லியிருக்கிறதே அன்றி அவாளகத்துக்குச் சென்று ஜலத்தை கொள்ளச் சொல்லவில்லை காணும். அத்துடன் தொழுவக்குடி சென்று அவன் உண்ட சேடத்தை உண்டீரென்றும் கேட்டோம். நாளைக்குக் ’கொடுமின் கொள்மின்’ என்னதால் பொண் கொடுக்கவும் சொன்னான் நம் நம்பி என்பீரோ?”

இம்முறை வெறுப்பு கலந்த இகழ்ச்சியான சிரிப்பலைகள் வெளிப்படையாகவே எழுந்தன.

“ஸ்வாமி பெண்ணும் ஜலமும் போஜனமும் பகவத் ஞானத்தைக் காட்டிலும் உயர்ந்ததோ?.. அதனை அவரிடமிருந்து பெறலாமென்னால் விவாஹ சம்பந்தம் கொடுத்தலும் கொள்ளலும் என்ன தவறு? ஆம் ஸ்வாமி, அடியேன் அவருடைய திருமாளிகையில் உண்டேன்.

போனகம் செய்த சேடம்
தருவரேல் புனிதமன்றே

என அவர் சேடத்தையே நான் உண்…”

”இனியும் என்ன வேண்டியிருக்கிறது?” சட்டென ஆசனம் விட்டு எழுந்தார் அச்சுத ராமராயர். அது டக டகவெனும் சத்தத்துடன் பின்னகர்ந்தது. “ஆனால் பிராமணனாகப் பிறந்துவிட்ட இந்த பாஷாண்டியைக் கொல்ல ஆணையிட்டு நான் ப்ரம்மஹத்தி கொள்ளத் தேவையில்லை. பட்டரே.. ஏற்கனவே என் புத்திரன்.வேறு…” என்று சொல்லவந்ததை நிறுத்திவிட்டு…

வேகமாக நடந்து தன் புரவியில் ஏறித்தட்டினார். புரவி நடன மாதுவின் அரங்க வருகை போல் மெல்ல சிங்காரமாக நடந்தது. குடைகளை ஏந்தியவாறு சேவகர் நடந்தனர். மெதுவாக அவர் சென்று மறையும்வரை அங்கு எதிர்பார்ப்புகள் கலந்த கனமான ஓர் அமைதி நிலவியது.

ஏதோ ஆணைக்குக் காத்திருந்தது போல விண்ணகர ஆலய மணி முழங்கியது.

பட்டர் கண்ணசைத்தார்.

அகத்துடையார்கள் அந்த இளைஞனை வெறியுடன் முரட்டுத்தனமாக இழுத்தார்கள். சதையில் கயிறுகள் இன்னும் நெறிந்து இரத்தம் சன்னமாகத் தெறித்தது. எவனோ வாளால் பிணைத்திருந்த கயிறுகளை அசிரத்தையாக வெட்டினான். அதில் அந்த இளைஞனின் கருந்திரளான சதைத்துண்டு ஒன்றும் சேர்ந்து வெட்டுப்பட்டு வீழ்ந்தது. ஏற்கனவே புழுதி அடர்ந்து படிந்த உடலிலிருந்து தாரளமாகவே வெளிவந்த இரத்தம், உடற்புழுதியிலும் தரைப்புழுதியிலுமாகப் படர்ந்து நிதானமாகப் பெருக, அவனை தரதரவென வீதியுடன் சேர்த்து இழுத்துச் செல்ல ஆரம்பித்தனர். வீதியெங்கும் ரத்தம் சிதறிச் சிதறித் தெறித்தது.

இப்போது பிராமணர்களின் கும்பல் பிரான்னய்யங்காரைச் சூழ்ந்தது. இளைஞனான ஓர் அந்தணன் அவரை அடிவயிற்றில் கால் முட்டியால் ஓங்கி உதைத்தான். அவர் அப்படியே முன்பக்கமாகச் சரிந்தார். ஒரு வயதான பிராமணர் அவர் முதுகில் காறித்துப்பிவிட்டு அகன்றார். சிறிது தொலைவிலிருந்து ஒரு சிறுவன் ஒரு கல்லைத் தூக்கி அவர் மீது எறிந்தான். அது அவர் கண்ணில் பட்டு அவர் கண் உடனே கலங்கி இரத்த நிறமானது, அவர் கண்ணைப் பற்றியபடி கீழே மல்லாக்க விழுந்தார். கற்கள் இப்போது சரமாரியாக அவர் மீது விழ ஆரம்பித்தன.

-0-

நேற்றைய மழைநீர் எங்கும் போகாதபடி ஊரின் அனைத்துப் பகுதிகளிலும் ஆக்கிரமிப்புக் கட்டிடங்கள் தெருவெல்லாம் சாக்கடையாக்கியிருந்தன. பழமையான ஊர் என்பதற்கு அந்தக் கோயில் கோபுரம் மட்டுமே சாட்சியாக இருந்தது. ஆனால் கோயில் சுவர்களில் ஷகீலாவின் அனுபவங்களும், வியாதிஸ்தர்களை சொஸ்தப்படுத்தும் கன்வென்ஷன்களும், புரட்சி அண்ணன், புரட்சி அக்கா, புரட்சி அய்யா இன்னபிறப் புரட்சியினர் அனைவரும் அவரவர் சின்னங்களும் ஒட்டியும் தொங்கியும் நிரப்பியிருக்க, அவர்களை சமதர்ம சமபாவ அத்வைதானுபவ பாவனையுடன் ஒரு கோமாதா இலாவகமாகக் கிழித்து உண்டு கொண்டிருந்தாள். ஆங்காங்கே அவள் போட்ட சாணியும் மழைநீருடன் கலந்து சின்னச் சின்ன குட்டைகளாகத் தேங்கியிருந்தன.

கோயில் கல்வெட்டுகளைப் பாதுகாக்கும் ஒரு தன்னார்வக் குழுவில் உறுப்பினனாக இந்த ஊருக்கு வர வேண்டியதாயிற்று. இக்குழுவுக்கு நிதியுதவி அளிக்கும் ஓர் அமெரிக்கத் தமிழர், இந்த ஊர்க்காரராம். புள்ளூர் விண்ணகரம். நாயக்கர்கள் காலத்தில் இந்த ஊர் பிரசித்தி பெற்றிருக்கிறது. காலை முழுவதும் கோயிலில் சுவர் சுவராக கல்வெட்டுக்களைத் தேடிப் பார்த்து அவற்றைப் பிரதி எடுத்து, படித்து முடித்தோம்.

உட்பிரகாரச் சுவரில் பதிந்திருந்த ஒரு கல்வெட்டு என்னை ஏனோ மிகவும் கவர்ந்தது. அதன்மீது அடித்து வைத்திருந்த ட்யூப் லைட்டையும் சுவிட்ச் போர்டையும் எடுத்து வைக்க ஆலய அதிகாரிகளிடம் சண்டை போட வந்தது காரணமாக இருக்கலாம். பிறகு சாய பேப்பரை மேலே வைத்து, ஹேர் பிரஷ் கட்டையால் டக டக வென அடித்தபோது. கொஞ்சம் கொஞ்சமாக வார்த்தைகள் தெளிவாக ஆரம்பித்தன.

வெள்ளை மீசை ஊடாக “தமிழ்தான்” என்றார் கல்வெட்டாராய்ச்சியாளர், ராகவ நிலவன். அவர் கண்களும் மூக்கும் யாருடனாவது சண்டை போட ஏதாவது காரணத்தைத் தேடுவது போல் இருந்தன. ஏற்கனவே ஆலய அதிகாரிகளுடன் அவர் போட்ட சண்டையில்தான் ட்யூப் லைட்டையும் சுவிட்ச் போர்டையும் கழற்றி வைத்திருந்தார்கள். ஐம்பது வயதைக் கடந்திருந்தாலும் பதின்மச் சிறுவனின் ஆர்வத்துடன் அக்கல்வெட்டை அவர் படிக்க ஆரம்பித்தார். நான் எழுதிக் கொண்டேன்.

வறண்டிருந்த அமிர்த புஷ்கரணியிலெ மீண்டும் அமிர்த வர்ஷம் பெய்விக்கச் செய்து தம்மெய் மீதுண்ட சாத்துக்கள் பெருமாள் தாமுண்ட திருச்செயல் கண்டு புவனமுழுதாண்டான் தர்ம ராஜ்ஜிய பரிபாலன சக்கரவர்த்தி அச்சுத ராமராயர் மாப்பும் கோரி பெருமாளுக்கும் பிரானாழ்வானுக்கும் திருக்குடியாழ்வானுக்குமாக வரியிலியாக விட்டுக் கொடுத்த நில [இங்கே கல்வெட்டு சிதைந்திருக்கிறது]

சூரிய சந்திராதியோர் உள்ள பரியந்தம் இந்த அமிர்த புஷ்கரணியிலெ பாகவத தர்மத்தை அனுசரிக்கிறவரெல்லாருமா நிக்ருஷ்ட ஜந்மத்தால் வரும் தோஷம் மறுவலிடாதபடி ஸ்நானம் செய்து நம்பியை தரிசிக்க ஆக்ஞையிட்டு [மீண்டும் சிதைவு]

அந்த விசித்திரமான வார்த்தைகள் ஒருவிதக் கவர்ச்சியுடன் எனக்குள் சென்றுவிட்டன. அதென்ன நிக்ருஷ்ட ஜந்மம்? தாழ்த்தப்பட்டவர்களைத்தான் அப்படிச் சொல்லியிருக்க வேண்டும். ஆனால் இங்கு ஓர் அதிசயமே, இந்தக் கோயிலில் பல நூற்றாண்டுகளாக தாழ்த்தப்பட்டவர்கள் என சொல்லப்படுவோருக்குத்தான் புஷ்கரணியில் முதல் நீராடும் உரிமையே உள்ளது என்கிறார்கள். ஆனால் ஏன் எதற்கு என்பதற்கான காரணங்கள் தெரியவில்லை.

அன்று மதியம் ‘ஆரியபவன் உயர்தர சைவ சாப்பாடு’ ஹோட்டலில் சாப்பிடும் போது ராகவ நிலவன் சில ஊகங்களை வைத்தார்.

ஆர்காடு-பாளையக்காரர்கள் போரின் போது இங்கு படையெடுத்து வந்த ஒருவன்- சந்தா சாகிபோ கான் சாகிபோ, கோயில் பொன் சிலைகளை படை தேடியிருக்கிறான். ஆனால் பெருமாள் சிலையை இங்குள்ள தொழுவக்குடிகள் எனும் சாதியினரும் பிராமணர்களும் சேர்ந்து ஆரல்வாய்மொழிக் கணவாய்க்குள் சென்று மறைத்து வைத்தார்களாம். அதனையடுத்து இங்குள்ள அத்தனை பிராமணர்களையும் அவன் கொன்றுவிட்டான் என்பது தொழுவக்குடி சமுதாய மக்களிடம் வழங்கிவரும் கதையாம்.

”ஆதி.நல்லசிவம், இது தொழுவக்குடி மக்கள் தங்கள் சமுதாய நிலையை உயர்த்திகிட உருவாக்கின கதைங்கிறார். ஆனா ஒண்ணை யோசிச்சு பாக்கணும்….” என்று நிறுத்தினார் நிலவன்.

புளிக்குழம்புக்காக உள்ளங்கையைக் குவித்தார். அதில் ஊற்றிய புளிக்குழம்பை அப்படியே உர்ரென உறிஞ்சிக் குடித்ததை ஆச்சரியமாகப் பார்த்தார் பரிமாறுபவர். மறுபடி வேண்டா வெறுப்பாக சாதத்தில் குழம்பை ஊற்றினார்.

“ஏன் அகத்துடையார்களை விட்டுகிட்டு தொழுவக்குடிகளும் பிராமணர்களுமா சேர்ந்து பெருமாள் சிலையைக் கடத்தணும்? இந்த இரண்டு சாதிகளுக்கும் இங்க என்ன உறவு இருந்திருக்கும்? ஒருவேளை இந்தப் பெருமாளை காப்பாத்துனத்துக்காகத்தான் இவுங்களுக்கு குளத்துல முதல் மரியாதை கிடைக்குதோ? என்னெல்லாம் கேள்வி வருது பாருங்க…”

1990-களில் தென் மாவட்டங்களிலெல்லாம் தலித்துகள் மீது ஆதிக்க சாதியினர் தாக்குதல் நடத்தியபோது இந்த ஊர் மட்டும் சாதி மோதல்கள் இல்லாத அமைதிப் பூங்காவாக இருந்தது எனக்கு நினைவுக்கு வந்தது.

மாலை, மற்றவர்கள் கோயிலில் சாமி கும்பிடப் போய்விட்டார்கள். எனக்கோ பெரிதாக சாமி நம்பிக்கை இல்லாததுடன், இளையராஜா மெட்டு போல அந்தக் கல்வெட்டு வார்த்தைகளே எனக்குள் சுழன்று கொண்டிருந்தன.

கோயிலின் வெளிகோபுரத்தைத் தாண்டி, அசிரத்தையாக கால்போன போக்கில் நடந்து கொண்டிருந்தேன். நேற்றைய மழை இன்று விட்டிருந்தாலும் சிறு தூறல் இருக்கத்தான் செய்தது.

அந்தக் குளத்தில் நீர் நிரம்பி இருந்தது.

அதனையொட்டி இருந்த கல்மண்டபத்தில் நியான் விளக்கில் சங்கும் சக்கரமும் நாமமும் போட்டு ஓம் நமோ நாராயணா என்று வைத்திருந்தார்கள். அங்கிருந்து கோயிலுக்கான பாதையில் போடப்பட்ட ஆற்று மணல் ஈரமாக இருந்தது.

இரவு மெதுவாக மேலெழ ஆரம்பித்திருந்தது. நான் எத்தனை நேரம் இருந்தேனோ தெரியவில்லை. மண்டபத்தில் வந்து கொண்டிருந்த ‘சில்’ காற்றில் தூங்கி விட்டிருந்திருப்பேன் என்றுதான் நினைக்கிறேன்.

“என்னாதிது ஏந்துங்கோ ஏந்திருங்கோ” என்ற குரல் கேட்டு எழுந்தேன். எதிரே ஒரு பிராமணர் நின்று கொண்டிருந்தார். முகத்தில் முதுமையின் வரிகள்- சுருக்கமா தழும்பா என்று சொல்ல முடியாத சில வரிகள். ஆனால் அவை அந்த முகத்தை விகாரப்படுத்தாமல் அழகாக்குவதை உணர்ந்தேன். அந்தக் கண்களில் ஒரு தளர்ச்சி இருந்தது. உடலிலும் ஒரு சோர்வு… கைகளில் மடித்த வாழை இலையில் பிரசாதம் இருப்பது தெரிந்தது. “என்ன பிரானாழ்வார் மண்டபத்திலேயே தூங்கிண்டிருக்கேள்… உள்ளே போய் பெருமாள சேவிக்கலை?”

“இல்லை சாமி நம்பிக்கை பெரிசா இல்லை” என்றவன் அந்தப் பெயர் என் பிரக்ஞையைத் தாக்க “ஆமா மண்டபத்துக்கு என்ன பெயர் சொன்னீங்க சாமி” என்றேன்

“பிரானாழ்வார் மண்டபம்” என்றார் அவர், “ரொம்ப பேருக்குத் தெரியாது… ‘திருக்குடியடிப்பொடி பிரானாழ்வான் மண்டபம்’ அப்படீன்னு சொல்லுவா.. .ம்ஹூம் இன்னும் எத்தனை நாளோ எம்பெருமானே..”

“என்ன எத்தனை நாளோ…”

”இல்லை… லோகத்துல சமஸ்த மனுஷாளும் குரோதங்கிற விஷம் போய் உண்மையான அமுதம் அவா அவா மனசுல பொங்கிறது வரைக்கும் சுத்திண்டு இருன்னுட்டானே அவன். அவன் மனசுல எப்ப இரக்கம் வருமோ..” இப்போது அவர் கண்கள் விண்ணகர விமானத்தை நோக்கிச் சென்றது.

கொஞ்சம் லூஸோ என்று தோன்றியது, இந்த நேரத்தில் இங்கே இதனிடம் தனியாக மாட்டிவிட்டோமோ என்கிற அச்சமும் வந்தது. கூடவே ஒரு மரியாதையையும் மன அமைதியையும் என்னால் உணர முடிந்தது.

“சரி சாமி இப்ப ஒரு பேரு சொன்னீங்களே”

“திருக்குடியடிப்பொடி பிரானாழ்வான் மண்டபம்”

”எப்படி இந்த பேரு வந்தது சாமி? ஏதோ தொண்டரடிப்பொடியாழ்வார் பேரு போல இருக்கு?”

”தொண்டரடிப்பொடி ஆழ்வார் இல்லை. அவருக்கு ரொம்ப காலம் பின்னாடி நடந்த கதை… கேட்குறேளா…”

அவர் ஒரு கதையைச் சொல்ல ஆரம்பித்தார். அந்த பெயர் வந்த கதை. நேரம் போவதே தெரியாமல் நான் கேட்க ஆரம்பித்தேன்.

“…அவா கல்லை எறிய எறிய அவர் நாராயணன் பெயரையே சொல்லிண்டிருந்தாராம். அவரோட குருவான திருமலையாப்பிள்ளையை வெளியே கொண்டுபோய் கொல்லப் போயிருக்கா… அப்ப ஐதீகம் என்னன்னா… பெரிய திருவடி அங்கே பிரசன்னமானாராம்… அவாளெல்லாம் திருமலையாப்பிள்ளையை அப்படியே விட்டுட்டு பயந்து ஓடிட்டாளாம். ஆனா பிரானய்யங்காரை கல்லாலயே அடிச்சுக்கொன்னுட்டா… அன்னைக்கு பட்டர், பூஜைக்காக நம்பியைப் போய் பார்த்தப்ப அங்கே அவருக்கு இவா எங்கெல்லாம் அவரைக் கல்லால அடிச்சாளோ அங்கெல்லாம் காயமாம். அது போக திருமலையாப்பிள்ளையைக் கட்டினது போலவே அவரோட மேனியெல்லாம் கயிறு தடம் காயமா இருந்துதாம்.

எல்லாரும் அதிர்ந்துட்டா. அச்சுத ராமராயருக்கு சொல்லி அனுப்பியிருக்கா. அங்கே அவரோட ஏக சீமந்த புத்திரன் கையை காலை இழுத்துண்டு கிடக்கிறானாம். எல்லோரும் திருமலையாப்பிள்ளை கால்லயே போய் சரணாகதின்னு விழுந்துட்டா.

அவர் ஒண்ணும் பேசலையாம் நேரே வந்தார். பிரானய்யங்கார் தேகத்தைத் தூக்கிண்டு நேரே ஒண்ணும் ஆரண்டையும் பேசாம பெருமாள் கிட்டயே போனாராம். போய் எட்டுப் பாட்டு பாடினாராம். “அஷ்ட காதை”ன்னு பேரு. இப்ப அந்தக் கிரந்தமே எங்கேருக்குன்னு தெரியலை… பொக்கிஷங்களை இழக்கிறதும் மறக்கிறதும் நமக்கொண்ணும் புதுசில்லையே… ஹெ ஹெ… ஆங்… அப்ப என்னாச்சு.. .உடனே ஒரு பெரிய மழை பெஞ்சதாம்.

கூடவே அசரீரி கேட்டதாம் “புஷ்கரணியில இருக்கிறது அமிர்தமேதான். இப்ப பிரானய்யங்காரோட தேகத்தோட திருமலையாப்பிள்ளை அந்தக் குளத்துக்குப் போகட்டும் அப்படீன்னு கேட்டுதாம். அப்படியே திருமலையாப்பிள்ளை, பிரானய்யங்கார் தேகத்தை எடுத்துண்டு போனார். குளத்துல இறங்கவும், இதுவரை நிரம்பவே செய்யாத குளம் ரொம்பிடுத்தாம். அதுவும் அமிர்தம். அது மேலே பட்டதுமே பிரானய்யங்கார் எழுந்துட்டாராம். திரும்பவும் ஒரு அசரீரி கேட்டுச்சாம். “இதில ஒவ்வொரு வருஷமும் சித்திரை மாசம் முதல் நாள் திருமலையாப்பிள்ளையும் அவரோட குலத்தினரும் இறங்கின பிறகுதான் வேதியர்கள் இறங்கணும்.”

வழக்கான ஸ்தல புராணம். இங்கே எப்படியோ வழக்கொழிந்து இந்தக் கிழத்துக்கு மட்டும் தெரிந்திருக்கிறது போலும். ஏதோ ஒரு வரலாற்றுக் கரு… முதலில் இருந்த சுவாரசியம் குறைந்து கொண்டே வந்து வழக்கம்போல கருடன் பெருமாள் அசரீரி வருகிற விஷயம் போலெல்லாம் வந்ததும், பெருமாள் வந்தாரோ இல்லையோ, போன தூக்கம் எனக்கு ஓடி வந்து விட்டது. கொட்டாவியை கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டேன். அவர் என்னுடைய அசிரத்தையின்மையை வகை வைக்காமல் தொடர்ந்தார்,

“அச்சுத ராமராயர் தன்னோட பிள்ளையையும் இங்க எடுத்துண்டு வந்தாராம். திருமலையாப்பிள்ளை கைல கொடுக்க அவர் அவனைத் தன் கையாலயே தூக்கி குளத்து நீரில் ஸ்நானம் செய்விச்சாராம். உடனே சரியாயிடுத்தாம். அச்சுத ராமராயர் இனி என்னென்னைக்கும் நிக்ருஷ்ட ஜந்மத்தால் வரும் தோஷம் மறுவலிடாதபடி எல்லாரும் இங்கே ஸ்நானம் செய்ய ஏதுவா நிலமெல்லாம் விட்டு வெச்சார்”

அந்த வார்த்தைகள் என்னை மீண்டும் தாக்கி என் தூக்கக் கலக்கத்தை அடியோடு நீக்கின.. அதென்ன நிக்ருஷ்ட ஜந்மம்? தாழ்ந்த சாதியா? கேட்டுவிட்டேன்.

அவர் சிரித்தார். “இல்லை. இது சாதாரண வைணவ பரிபாஷைதான்… சாதி கர்வம்தான் அது. தான் உயர்ந்த சாதியில் பிறந்தவன் அப்படீன்னு நெனைக்கிறது… சரி இதோ இந்தத் தூண் சிற்பத்தைப் பாருங்க… இது எம்மனார் திருமலையாப்பிள்ளை என்கிற திருக்குடியாழ்வார்.. இங்க கொஞ்சம் தள்ளி வந்து பாத்தேள்னா… இந்தத் தூண்லே… இதுதான் பிரானாழ்வான் என்றார்…”

நியான் வெளிச்சம் சிவப்பு நீலமெல்லாம் கலந்து அடிக்க நான் தூண்களின் கீழே செதுக்கப்பட்ட சிற்பங்களைப் பார்க்க ஆரம்பித்தேன்… திருக்குடியாழ்வான் கைக் கூப்பி நின்றார். இளம் உருவம். மேலே கருடாழ்வார் அமிர்த கலசத்துடன் நின்றார். அடுத்து பிரானாழ்வார்.

அந்தச் சிற்பத்தைப் பார்த்த என்னுள் கண் வழியே இறங்கிய அதிர்ச்சி என் உடல் முழுவதும் கடுங்குளிராகப் பரவியது. என் இதயம் நின்று துடித்ததை நான் முழுமையாக உணர முடிந்தது.

அதில்…

அதிலிருந்த முகம்

நெற்றியிலும் முகங்களிலும் கல்லடித்த தழும்புகள் வரிவரியாக அப்படியே வடித்திருந்தான் எவனோ பெயரறியாத சிற்பி.

ஆம் தழும்பேதான். எனக்குச் சுருக்கென்றது.

தழும்புகள்தான் அவை.

முதுமையின் சுருக்கு வரிகளல்ல.

தழும்புகள்..

அப்போது அவர்

அது…

அந்தப் பிராமணர்…. அவர்தான்….

நான் நடுக்கத்துடன் நிமிர்ந்து பார்த்தேன்.

நியான் ஒளி தவிர்த்து இருள் முழுமையாக இருந்த அந்த மண்டபத்தில் என்னைத் தவிர யாருமின்றி ஓர் அமானுஷ்ய தனிமை என்னைச் சூழ்ந்தது.

எதிரே மண்டபத்துக்கு வருவதற்கு இருந்த அந்த ஒரே பாதையின் ஈர மணற் பரப்பில் என்னுடைய காலடித்தடங்கள் மட்டுமே இருந்தன

– மே 2011

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *