அட்சய திருதியையும் அன்னதானமும்!

0
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: January 21, 2013
பார்வையிட்டோர்: 9,211 
 

அட்சய திருதியை! சித்திரை மாதம், வளர்பிறை திருதியையில் வரும் இந்த நாளில்தான் உலகைப் படைத்தான் பிரம்மன். கண்ணனின் அருளால் குசேலன், குபேரன் ஆனதும், சூரியதேவனின் அருளால் பாஞ்சாலிக்கு அட்சய பாத்திரம் கிடைத்ததும் இந்த நாளில்தான்!

‘அட்சயம்’ என்றால் அழியாதது; அள்ள அள்ளக் குறையாதது என்று பொருள். இந்த நாளில் செய்யும் புண்ணிய காரியங்க ளுக்கான பலன்கள் மென்மேலும் பெருகுமாம். அதிலும்… இந்த நாளில் அன்னதானம் செய்வது வெகு சிறப்பு! அப்படியென்ன மகிமை அன்னதானத்துக்கு?

அட்சய திருதியையும் அன்னதானமும்!சத்தியபுரி எனும் ஊரில், சிவாலயத்தை நிர்வகித்து வந்த அடியவர் விஸ்வநாதர். இவர் பிறந்ததுமே… ‘இவருக்கு குழந்தை பிறந்ததும் துறவறம் மேற்கொள்வார்’ என்றனர் ஜோதிடர்கள். மணமான பிறகு மனைவி- மகனுடன், அடியவர்களுக்கு அன்னதானம் அளித்து வந்தார் விஸ்வநாதர். ஒரு நாள், சிவனார் தன்னை அழைப்பதாகக் கனவு கண்டவர், துறவறம் பூண்டார்; மனைவி மற்றும் மகன் குணசீலனிடம் விடைபெற்று, காசிக்குச் சென்றார். பிறகு கணவர் விட்டுச் சென்ற அன்னதானப் பணியை மனைவி தொடர்ந்தாள். ஒரு நாள் மகன் குணசீலன், “தினமும் அன்னதானம் செய்கிறாயே… ஏன்? இதனால் எதிர்காலத்தில், ஏழை ஆகி விடுவோமே!” என்றான். அவனிடம், “காரணம் தெரியாது. அன்னதானத்தில் உன் தந்தைக்கு அதீத விருப்பம் உண்டு” என்றாள்.

இதையடுத்து, தவம் செய்து அன்னதான பலனை அறிவது என முடிவு செய்து, அன்னையின் அனுமதியுடன் வனத்துக்குப் புறப்பட்டான் குணசீலன்.

வழியில்… பசியால் வருந்திய வயோதிகர் ஒருவருக்குத் தன்னிடம் இருந்த உணவை அளித்து விட்டு, பயணத்தைத் தொடர்ந்தவன் அந்திவேளையில் காட்டில் வேடன் ஒருவனைக் கண்டான். “இரவில் காட்டில் தனியே இருக்கக் கூடாது” என்று குணசீலனைத் தன்னுடன் அழைத்துச் சென்றான் வேடன். மிருகங்களால் ஆபத்து நேரக் கூடாது என்பதற்காகப் பெரிய மரம் ஒன்றின் கிளைகளில் பரண் அமைத்து, மனைவியுடன் வசித்து வந்தான் வேடன்.

அவனின் மனைவி பொல்லாதவள். குணசீலன் பசியுடன் இருந்தபோது, அவனுக்கு உணவு தர மறுத்தாள். என்றாலும், தன் பங்கில் பாதியை குணசீலனுக்குத் தந்தான் வேடன். உண்டு முடித்ததும், மனைவிக்கும் தனக்கும் இடையில் குணசீலனைப் படுக்க வைத்தான். இதற்கும் மனைவி சம்மதிக்கவில்லை. எனவே, தானே நடுவில் படுத்துக் கொண்டான். அவள் உறங்கியதும், குணசீலனை மீண்டும் தங்களுக்கு நடுவே படுக்க வைத்துவிட்டு, தானும் உறங்கிப் போனான்.

இடையில் கண் விழித்த வேடனின் மனைவி, ஓரத்தில் படுத்திருக்கும் கணவனை குணசீலன் எனக் கருதி பரணிலிருந்து தள்ளி விட்டாள். கீழே விழுந்து, மயங்கிக் கிடந்த வேடன், மிருகங்களுக்கு இரையானான். விடிந்ததும் உண்மையை அறிந்து வருந்தியவள், தானும் உயிர் நீத்தாள்.

மனம் கலங்கி பயணத்தை தொடர்ந்தான் குணசீலன். வழியில் ஒரு குடிசை! வாசலில் ஊன்றுகோலுடன் நின்றிருந்த முடவன் ஒருவன், “எங்கு செல்கிறாய்?” என்று கேட்டான். தனது தவ நோக்கத்தைத் தெரிவித்தான் குணசீலன். உடனே முடவன், “தம்பி… ஏனோ எனக்குப் பசியே எடுப்பதில்லை; கடவுளிடம் இதுகுறித்துக் கேள்” என்றான். “ஆகட்டும்” என்று கூறி பயணத்தைத் தொடர்ந்த குணசீலன், அடுத்து நல்ல பாம்பு ஒன்றைக் கண்டான். “எனக்குப் பார்வை தெரியவில்லை. காரணத்தைக் கடவுளிடம் கேட்டுச் சொல்” என்றது பாம்பு. “நிச்சயம் சொல்கிறேன்” என்றவன், அடுத்து மாமரம் ஒன்றைக் கண்டான். “என்னிடம் நிறைய பழங்கள் இருந்தாலும் புழு-பூச்சிகள் வந்து விடுவதால், எவருமே அவற்றை சீண்டுவதில்லை. இதன் காரணத்தைக் கேளேன்” என்றது மாமரம். இதையும் ஏற்ற குணசீலன், அருகில் இருந்த மலையுச்சிக்குச் சென்று தவத்தில் ஆழ்ந்தான். ஒரு நாள் அவன் முன் தோன்றிய ஒரு தேவதை, “என்ன வரம் வேண்டும், கேள்” என்றாள்.

அன்னதானம் செய்வதற்கான பலன் குறித்து விளக்கும்படி அவளிடம் வேண்டினான். உடனே தேவதை, “இன்னும் 10 மாதங்கள் கழித்து

உங்கள் நாட்டு அரசனுக்கு ஆண் குழந்தை பிறக்கும். அதன் உடல் தரையில் படுவதற்குள், தங்கத் தாம்பாளத்தில் ஏந்த வேண்டும். பிறகு, அந்தக் குழந்தையிடம் உனது கேள்வியைக் கேள்; விடை கிடைக்கும்!” என்றாள். பிறகு… முடவன், பாம்பு, மாமரம் ஆகியோரது பிரச்னைகளுக்கான காரணத்தையும் தேவதையிடம் கேட்டறிந்தான். தனக்கென எதுவும் கேட்காதவனை மகிழ்ச்சியுடன் ஆசீர்வதித்து மறைந்தாள் தேவதை!

மன நிறைவுடன் ஊர் நோக்கிப் பயணித்த குண சீலன், முதலில் மாமரத்தைக் கண்டான். “போன ஜென்மத்தில் கருமியாக இருந்த நீ, உனது செல்வத்தை தங்கக் கட்டிகளாக மாற்றி புதைத்து வைத்தாயாம்! அந்தப் புதையலில் இப்போது மரமாகி நிற்கிறாய். எனவேதான் உனது காய்-கனிகள் புழு- பூச்சி

களுடன் இருக்கின்றன!” என்று தேவதை கூறிய தைத் தெரிவித்தான். உடனே மாமரம், அந்தப் புதையலை அவனிடமே தந்தது.

புதையலுடன் புறப்பட்டவன், அடுத்து பாம்பை சந்தித்தான். “உன் தலையில் இருக்கும் நாக ரத்தினத்தை, எவருக்கேனும் கொடுத்தால் உனக்குப் பார்வை கிடைக்குமாம்!” என்றான். உடனே நாக ரத்தினத்தைக் கக்கி அவனிடம் கொடுத்த பாம்பு, மீண்டும் பார்வை பெற்றது. அடுத்து முடவனை சந்தித்தவன், “நீங்கள் கற்ற கலையை, பிறருக்கு போதிக்காததே பசியின்மைக்குக் காரணமாம்!” என்றான். உடனே முடவன், தனக்குத் தெரிந்த கலைகளை குணசீலனுக்குக் கற்றுக் கொடுத்தான்! பிறகு ஊர் திரும்பிய குணசீலன், தங்கக் கட்டிகள் மற்றும் ரத்தினங்களை தாயாரிடம் வழங்கினான்.

அரசனின் மனைவிக்குப் பிரசவ நாள் நெருங்கியது. அரண்மனைக்கு விரைந்த குணசீலன், மன்னரிடம் நடந்ததை விவரித்தான். தேவதை கூறியபடி… குழந்தை பிறந்ததும் தங்கத் தாம்பாளத்தில் ஏந்தச் செய்தான். பிறகு, “அன்னதானப் பலனைக் கூறுவாயாக!”

என்று குழந்தையிடம் கேட்டான்.

தேவதையின் அருளால் அந்தக் குழந்தைக்கு முற்பிறவி ஞாபகம் வந்து, “நான்தான் உன்னை காட்டில் சந்தித்த வேடன். உனக்கு உணவு கொடுத்த பலனால், ராஜகுமாரனாகப் பிறந்திருக்கிறேன். உணவு கொடுத்ததைத் தடுத்த என் மனைவி, பன்றியாகப் பிறந்திருக்கிறாள்” என்றது!

அன்னதானத்தின் மகிமையை அறிந்து மெய்சிலிர்த்த குணசீலன், தனது வாழ்நாள் முழுவதும் அன்னதானத்தைத் தொடர்ந்தான்!

– பத்மா வெங்கட்ராமன், சென்னை-28 (மே 2009)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *