வண்ணத்துப் பூச்சி!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: அறிவியல்
கதைப்பதிவு: February 25, 2020
பார்வையிட்டோர்: 46,997 
 

வண்ணத்துப்பூச்சி நிரம்பவும் குழம்பியிருந்தாள். ரோபோட்களால் நிர்வகிக்கப்படும் உலகின் சிறப்பு பிரஜை அவள். கி.பி. 2108ல் மனிதர்கள் என்ற பெயரில் வாழும் உயிரினங்கள் அனைத்துமே சிறப்புப் பிரஜைகளாக சிறப்புச் சலுகைகளோடு வாழ்ந்து வந்தார்கள். 2050ஆம் ஆண்டு வாக்கில் உயிர்கொல்லி ஆயுதங்களால் நாடுகள் தங்களுக்குள் போரிட்டு உலகை பாலைவனமாக்கியிருந்தனர்.

மனிதர்கள் வேதியியல் ரசாயன ஆயுதங்களை ஒருவர் மீது ஒருவராக பிரயோகித்து மடிந்ததால் நீமா என்ற கணினி உலகை காக்க தன்னை உலகதிபராக அறிவித்துக் கொண்டது. ஐந்தேகால் கோடி ரோபோட் வீரர்கள் அக்கணினியின் ஆணைக்கு கட்டுப்பட்டிருந்ததால் இது நீமாவுக்கு சாத்தியமானது. அந்த கொடூரமான வேதியியல் போருக்கு பின் மிஞ்சிய மனிதர்கள் ஆயிரம் பேர் மட்டுமே. தாவரங்கள் உட்பட உயிரினங்கள் இன்று உலகில் எதுவுமே மிஞ்சவில்லை. உலகின் மேற்பரப்பில் H2O என்று அழைக்கப்பட்ட நீரில்லை. நீண்ட மணற்பரப்பும், ஆங்காங்கே பாறைக்குவியல்களும் தான் இன்றைய உலகம்.

உயிர்பிழைத்த ஆயிரம் பேரின் சந்ததிகள் இன்று மூவாயிரம் பேர்களாக உயர்ந்திருக்கிறார்கள். பூமிக்கு அடியில் முப்பது கிலோ மீட்டர் ஆழத்தில் அவர்களுக்காக சிறப்புக் குடியிருப்புகளை ரோபோட்கள் மூலமாக உருவாக்கியிருந்தது நீமா. அங்கே செயற்கை முறையில் ஆக்ஸிஜன் தயாரிக்கப்பட்டது. மின்னணு தொழில்நுட்பத்தில் விவசாயம் நடந்தது. வயல்களில் தண்ணீருக்குப் பதிலாக மின்சாரம் பாய்ச்சப்பட்டு தானியங்கள் விளைந்தது. தானியங்களை கேப்ஸ்யூல்களாக மாற்றி உணவாக உண்டனர் மனிதர்கள்.

வண்ணத்துப்பூச்சி நிரம்பவும் குழம்பியிருந்தாள். அவனுக்கு மட்டும் இது எப்படி சாத்தியம்? கடந்த அரைநூற்றாண்டாக மனிதர்கள் பூமிக்கு அடியில் பாதுகாப்பாக வாழ்ந்து வருகிறார்கள். பக்கத்து அறையில் இருப்பவரை தொடர்புகொள்ள கூட மூளையில் பதிக்கப்பட்ட எலெக்ட்ரிக் சிந்தலைஸர்களை தான் பயன்படுத்த முடியும். அதுவும் தெரிந்தவராக இருந்தால் மட்டுமே பேசமுடியும். யாரிடம் பேசவேண்டுமென்றாலும் பிரஜா பாஸ்வேர்டு உபயோகிக்க வேண்டும். கேயாஸ் என்ற பெயரில் என்னைத் தொடர்பு கொண்டவன் எந்த பாஸ்வேர்டும் சொன்னதாக தெரியவில்லை. அவனது அலைவரிசையை ஆய்ந்ததில் அவன் உலகத்தை சேர்ந்தவனாகவும் இருக்க வாய்ப்பில்லை. நீமாவின் ஆணைத்தொடர்களை ஹாக் செய்தால் மட்டுமே சாத்தியமாகும் இந்த வேலையை அவன் எப்படி செய்தான், ஏன் செய்தான்?

குழம்பிப் போனவளின் மூளையில் சிகப்பு விளக்கெரிந்தது. அய்யோ சிகப்பு விளக்கெறிந்தால் அது நீமாவாயிற்றே? நீமா யாராவது பிரஜையிடம் பேசினாலே ஏதோ ஒரு வம்புதான் என்று தெரிந்துகொள்ளலாம். பாஸ்வேர்டு ஒத்துப்போனதுமே தன்னோடு பேச நீமாவுக்கு அனுமதி அளித்தாள் வண்ணத்துப் பூச்சி.

“வணக்கம் நீமா. பிரஜை எண் 2007 பேசுகிறேன். என்னுடைய உலகப்பெயர் வண்ணத்துப்பூச்சி!”

“வணக்கம் வண்ணத்துப்பூச்சி. கடந்த இருவார உலக தகவல் பரிமாற்றங்களை ஆராய்ந்ததில் நான் கொஞ்சம் குழம்பிப் போயிருக்கிறேன்”

“நீமா நானும் குழப்பத்தில் இருக்கிறேன்”

“புரிகிறது வண்ணம். வண்ணம் என்று கூப்பிடலாம் இல்லையா? எனக்கு நேர்ந்த குழப்பத்துக்கு காரணம் உங்களுடன் தகவல் பரிமாற்றம் செய்த ஏதோ ஒன்றுதான்!”

“அது ஏதோ ஒன்று என்கிறீர்களா? என்னிடம் மனிதன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டான்”

“மனிதனாகவும் இருக்கலாம். ஆனால் நம் உலகைச் சார்ந்தவன் அல்ல. வெளிக்கிரகத்தை சார்ந்தவனாக இருக்கலாம். ஒளிக்கற்றையாக வந்த தகவல் உலக எல்லையை அடைந்ததுமே ரேடியோ எல்லையாக மாறியிருக்கிறது”

“வேற்றுக்கிரக வாசியாக இருக்கும்பட்சத்தில் உலகின் நிர்வாகப் பொறுப்பில் இருக்கும் நீமாவை தொடர்பு கொள்ளாமல் என்னை தொடர்பு கொண்டது ஏன்?”

“அதுதான் எனக்கும் புரியவில்லை வண்ணம். உங்களை எச்சரிக்கைப்படுத்தவே தொடர்பு கொண்டேன்”

“எச்சரிக்கைக்கு நன்றி. தங்கள் பொன்னான நொடிகள் என்னால் வீணானது குறித்து வருத்தம்”

“அதெல்லாம் ஒன்றுமில்லை. வணக்கம்”

வண்ணத்துப்பூச்சி நிரம்பவும் குழம்பியிருந்தாள். மீண்டும் கருநீல வண்ணத்தில் மூளைக்குள் விளக்கெறிந்தது. நிச்சயமாக அதுதான், இல்லை அவன் தான். பிரஜா பாஸ்வேர்டு இல்லாமலேயே தகவல் தொடர்பு ஏற்பட்டது.
“வணக்கம் வண்ணத்துப்பூச்சி, நலமா?”

“நலமிருக்கட்டும். நீ யார்?”

“நாம் இருவரும் சந்திக்கும்போது சொல்கிறேனே?”

“நாம் இருவரும் சந்திக்கப் போகிறோமா?”

“ஆமாம். அதற்காகவே எட்டு ஒளியாண்டுகள் தொலைவில் இருந்து பல்லாயிரம் வருடங்களாக பயணம் செய்து வந்து கொண்டிருக்கிறேன்”

“பத்தொன்பது வயதே ஆன என்னை சந்திக்க பல்லாயிரம் வருடப் பயணமா?”

“உன்னை பத்தொன்பது வயதில் நான் சந்தித்தாக வேண்டும் என்பது பல லட்சம் வருடங்களுக்கு முன்பே விதிக்கப்பட்ட முடிவு”

“அதுதான் ஏனென்று கேட்கிறேன். இங்கே உலகத்தில் மூவாயிரம் மனிதர்கள் இருக்கிறார்கள். ஐந்து கோடிக்கும் மேற்பட்ட ரோபோட்கள் இருக்கிறது. என்னை மட்டும் ஏன் நீ சந்திக்க வேண்டும்!”

“காரணத்தை நேரில் சொல்கிறேனே? இன்னும் பத்து நிமிடத்தில் நீ கதிர்வீச்சு பாதுகாப்பு ஆடை அணிந்து பூமியின் மேற்பரப்புக்கு வா. மேற்பரப்புக்கு நீ வந்தவுடன் அங்கிருந்து 45 டிகிரி தென்மேற்காக 40 மணிநேர நடை தொலைவில் ஒரு கரும்பாறை இருக்கும். அங்கு உனக்காக நான் காத்திருப்பேன்”

“நோ கேயாஸ். நீ உலகுக்குள் வர முடியாது. நாம் பேசுவதை நீமா கேட்டுக் கொண்டிருக்கிறார். நீ உலக எல்லைக்குள் நுழைந்ததுமே ரோபோட்களால் அழிக்கப்படுவாய்”

“உங்களை விட பன்மடங்கு தொழில்நுட்பத்தில் உயர்ந்தவர்கள் நாங்கள் வண்ணத்துப்பூச்சி. நீமா இப்போது செயலிழந்து கிடக்கிறார். அவரால் ரோபோட்களுக்கு ஆணை பிறப்பிக்க முடியாது. நாம் இருவரும் சந்தித்து பேசியபின்னர், அவரை மீண்டும் செயல்படுத்தி விடுவேன்!”

நீமாவையே செயலிழக்கச் செய்துவிட்டான் என்றதுமே கோபம் வந்தது வண்ணத்துப்பூச்சிக்கு. ஆனாலும் ஏனோ அவனை பார்த்துவிட வேண்டும் என்று முடிவு செய்தாள். கதிர்வீச்சு பாதுகாப்பு உடை அணிந்து பூமியின் மேற்பரப்புக்கு செல்ல தயாரானாள்.

வண்ணத்துப்பூச்சி நிரம்பவும் குழம்பியிருந்தாள். ஒரு டன் எடையாவது இருக்கும் அந்த கரும்பாறைக்கு அருகில் அவன் நின்றிருந்தான், அவனும் அச்சு அசலாக மனிதனாக தானிருந்தான். கண்ணுக்கெட்டிய தூரம் வரைக்கும் வெண்மையான மணல், ஓசோன் படலமில்லாததால் உக்கிரமாக தாக்கிய சூரிய ஒளி மணலின் வெண்மையை மேலும் வெண்மையாக்கியது.

“சொல் கேயாஸ். நீ யார்? உலகை அழிக்க வந்தவனா? நீமாவை எப்படி செயலிழக்கச் செய்தாய்!”

“தவறாகப் பேசாதே வண்ணத்துப்பூச்சி. நீமாவை செயலிழக்கச் செய்வது என் நோக்கமல்ல. உன்னை சந்திப்பது தான் என் நோக்கம்!”

“என்னை சந்தித்து?”

“காதலிக்கப் போகிறேன், கல்யாணம் செய்துகொள்ளப் போகிறேன்”

“முட்டாள் போல பேசாதே, கல்யாணம் என்ற சொல்லே அறுபது ஆண்டுகளாக உலகில் இல்லை”

“இல்லாமல் போன ஒன்றை மீண்டும் தொடங்குவது தான் என் நோக்கம்”

“அதுதான் ஏனென்று கேட்கிறேன்? குறிப்பாக என்னை நாடிவந்தது ஏன்?”

“ஏனென்றால் உன்னுடைய பெயர் ஆண்டாள்!”

“ஆண்டாளா? என்னுடைய பிரஜாபெயர் வண்ணத்துப்பூச்சி!”

“அதெல்லாம் எனக்குத் தெரியாது. உன்னை எனக்கு ஆண்டாளாக தான் தெரியும்!”

“எப்படி?”

“இதோ இப்படி?” ஒரு எலெக்ட்ரிக் சிப்பை அவளிடம் தந்தான்.

“இதில் எல்லாமே பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்று எங்கள் கிரகத்தில் சொல்லி அனுப்பினார்கள். என் பெயர் ரங்கராஜன் நம்பியாம்!”

“இந்த சிப்பில் என்ன இருக்கிறது!”

“பதிவு செய்யப்பட்ட மூன்றுமணி நேர காட்சிகள் இருக்கிறது. இதில் தமிழ் என்ற மொழியில் ‘தசாவதாரம்’ என்று எழுதப்பட்டிருக்கிறதாம். இதை கண்டதுமே நீ என்னை காதலிப்பாய் என்று சொல்லி அனுப்பினார்கள்!”

அவர்கள் அருகில் இருந்த கரும்பாறை சிற்பத்தின் முகத்தில் மர்ம சிரிப்பு பூத்தது. ஆயிரத்து எட்டுநூறு ஆண்டுகளுக்கு முன்பாக கடலில் வீசப்பட்ட கோவிந்தராஜ பெருமாள் சிலை அது.

– ஏப்ரல் 2010

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *