கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: அறிவியல்
கதைப்பதிவு: February 10, 2020
பார்வையிட்டோர்: 33,991 
 

வீட்டில் அசோக்கும் அவன் அம்மாவும் டிவியில் ஒளிபரபாகிக்கொண்டு இருந்த அந்த பரபரப்பு செய்தியை மும்முரமாக பார்த்துகொண்டு இருந்தனர். அவர்கள் மட்டுமல்ல மொத்த உலகமும் அந்த செய்தியை ஆர்வத்தோடும், அதிசயத்தோடும், ஆச்சர்யத்தோடும் பார்த்துகொண்டு இருந்தனர்.

அந்த செய்தி, அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு ‘நாசா’ வும், ரஷியாவும் இணைந்து விண்வெளியில் ஐ.எஸ்.எஸ். என்னும் சர்வதேச விண்வெளி நிலையத்தை 1998-ம் ஆண்டு நிறுவின. இந்த சர்வதேச விண்வெளி மையத்தில் வீரர்கள் தங்கி இருந்து ஆராய்ச்சிப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சர்வதேச விண்வெளி மையத்தை வணிக ரீதியில் பயன்படுத்தவும், விண்வெளி வீரர்கள் லாபம் சார்ந்த ஆராய்ச்சிப்பணியில் ஈடுபடவும் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு ‘நாசா’ இதுவரை தடை விதித்து இருந்தது. அதே ‘நாசா’, இப்பொழுது சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சுற்றுலா பயணம் மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கி உள்ளது.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஒரு இரவு தங்குவதற்கு ‘நாசா’ 35 ஆயிரம் டாலர் (சுமார் ரூ.24½ லட்சம்) வசூலிக்கும். விண்வெளி சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யும் பயண நிறுவனம், ஒவ்வொருவரும் பயண கட்டணமாக கிட்டத்தட்ட 60 மில்லியன் டாலர் (சுமார் ரூ.420 கோடி) கொடுத்து முதல் விண்வெளி சுற்றுலாவிற்காக விண்ணபித்து தேர்ந்து எடுக்கப்பட்ட ஆறுபேருடன் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் எனும் விண்கலம் புறப்பட தயாராக உள்ளது. விண்கலம் புறப்படுவதற்கான கவுண்டவுன் தொடங்கி கடைசி 30 நிமிடத்தை எண்ணிக்கொண்டு இருந்தது

இந்த மகத்தான சாதனைக்கு வித்திட்டவர்களையும், மற்றும் ஏற்கனவே விண்வெளி ஆராய்ச்சியில் சாதித்தவர்களை பற்றியும் “ விண்வெளியில் கடந்தகால வரலாறு” என்னும் தலைப்பில் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டு இருந்தது.

விண்வெளிப் பயணம் இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வெற்றிகரமாக நடைபெற்றது. ஆனால் அதற்கான முயற்சிகள் முற்பகுதியிலேயே தொடங்கிவிட்டன. நிலவில் முதன் முதலாகக் கால் வைத்தவர்கள் அமெரிக்கர்கள் என்று எல்லோருக்கும் தெரியும். விண்வெளியிலே முதன் முதலில் பறந்தவர்கள் சோவியத்து நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதும் நமக்குத் தெரியும். ஆனால் இவர்களுக்கெல்லாம் முன்னோடி ஜெர்மனி என்பது இன்னமும் உலக வரலாற்றில் சரியாக பதிக்கப்படவில்லை.

ரைட் சகோதரர்கள் 1903-ஆவது ஆண்டில் விமானம் பற்றிய முயற்சிகளிலே ஈடுபட்டார்கள். 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே அந்த முயற்சிகள் நடைபெற்று வெற்றி பெற்றுக் கொண்டிருந்தன. ஆனால் விமானங்களுக்கும் ராக்கெட்டுக்குமான அடிப்படை வேறுபாடு யாதெனில் விமானங்கள் காற்று மண்டலத்துக்குள்ளே பறக்கின்றன. ராக்கெட்டுகள் காற்று மண்டலத்தைக் கீறி வெளியில் பிரபஞ்சத்துக்குப் போகின்றன. இதுதான் அதனுடைய அடிப்படையான வேறுபாடு.

ஜெர்மன் நாட்டைச் சார்ந்த எருமன் என்கிற ஒரு விஞ்ஞானிதான் முதன் முதலாக ராக்கெட் பற்றிய சிந்தனையை வெளியிட்டார். 19-ஆம் நூற்றாண்டினுடைய இறுதியிலேயே அந்தச் சிந்தனைகள் வெளிப்பட்டன. ஆனாலும் அதற்கான முயற்சிகள் 1920-களிலே தான் நடைபெற்றன. முதன் முதலாக ஜெர்மன் நாட்டைச் சார்ந்த ஒரு ராக்கெட் 1000 மீட்டர் அதாவது 3000 அடிக்குச் செங்குத்தாக மேலே எழுந்தது. அதுவரையிலே விமானம் என்பதெல்லாம் ஊர்ந்து, ஓடி, எழுந்து, பறப்பது, அதுதான் விமானத்தினுடைய அடித்தளம்.

ஆனால் ராக்கெட் என்பது நின்ற இடத்திலிருந்து செங்குத்தாக வானை நோக்கிப் பறப்பது. அப்படி முதன் முதலில் பறந்த ராக்கெட் ஜெர்மனியிலேயிருந்துதான் பறந்தது. அது 1931. பிறகு மெல்ல மெல்ல அந்தத் தொழில் நுட்பம் அங்கே வளர்ந்தது. ஹிட்லர் அந்த நாட்டுக்கு அதிபரானதற்குப் பிறகு ராக்கெட் தொழில் நுட்பத்தை வளர்ப்பதற்கு அவர் பேருதவிகளைச் செய்தார். அவருடைய நோக்கம் வேறாக இருக்கலாம். ஆனாலும் அந்த விஞ்ஞான வளர்ச்சிக்கு அவர் பேருதவிகளைச் செய்தார்.

ராக்கெட் தாக்குதலை முதன் முதலில் நடத்திய நாடு ஜெர்மனிதான். ஹிட்லர் அதிபராக இருக்கிறபோது இங்கிலாந்து நாட்டின் மீது அந்த தாக்குதல் நடைபெற்றது.

ஆனால் இரண்டாவது உலகப்போரில் ஜெர்மனி தோற்றதற்குப் பிறகு, அமெரிக்கர்களும் சோவியத்து நாட்டைச் சார்ந்தவர்களும் அந்தத் தொழில் நுட்பத்தைக் கையிலெடுத்துக் கொண்டார்கள். சோவியத்துதான் இரண்டாவது உலகப்போரின் இறுதியில் ஜெர்மனியை வெற்றி கொண்டது. அங்கே போன சோவியத்து விஞ்ஞான அறிஞர்கள் வீட்டோ என்கிற ராக்கெட்டையும் அதனுடைய தொழில் நுட்பங்களையும் கைப்பற்றித் தங்கள் நாட்டுக்குக் கொண்டு வந்தார்கள்.

பிறகுதான் சோவியத்திலே விண்வெளி ஆய்வகம் வளர்ந்தது. அதைப் போல ஜெர்மன் நாட்டிலே இந்த ஆய்வுகளில் ஈடுபட்டிருந்த விஞ்ஞானிகள் சிலர் உலகப் போரினுடைய தோல்விக்குப் பிறகு அமெரிக்காவிலே குடி புகுந்தார்கள். அவர்கள் தான் அமெரிக்காவிலே இந்த விண்வெளி ஆய்வை வளர்த்தார்கள்.

எனவே சோவியத்தில் வளர்ந்தது ஜெர்மினியிலே தொடங்கிய ஆய்வு; அமெரிக்காவிலே உருவானது ஜெர்மனியில் இருந்து போன விஞ்ஞானிகள் கொண்டுபோன ஆய்வு. ஜெர்மனி தான் அதனுடைய அடித்தளமாக இருக்கிறது. ஆனாலும்கூட அவற்றைப் பயன்படுத்தி சோவியத்தும் அமெரிக்கர்களும் மிகப்பெரிய வெற்றியை இந்த அறிவியல் உலகத்திலே, விண்ணியல் உலகத்திலே அடைந்திருக்கிறார்கள். அதை மறுக்க முடியாது.

வரலாற்றிலே நாம் குறித்துக்கொள்ள வேண்டிய ஒரு சில நாட்கள் உண்டு. 1957-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 4-ஆம் தேதி, அது தான் முதன் முதலாக விண்வெளியில் ஒரு ராக்கெட் சீறிப் பாய்ந்த நாள். ரஷ்யாதான் அதை அனுப்பிற்று ஸ்புட்னிக்-1 என்று அதற்குப் பெயர்.

அந்த ஏவுகணைதான் முதன்முதலாக பூமியைச் சுற்றி வந்தது. அதே ஆண்டு நவம்பர் மாதம் அந்த ஏவுகணைக்குள்ளே ஒரு நாயை வைத்து அனுப்பினார்கள். ‘லைக்கா’ என்று அந்த நாய்க்குப் பெயர். ஆனால் மூன்று வாரத்திற்குப் பிறகு அந்த ஏவுகணையும், அந்த நாயும் அப்படியே எரிந்துபோய் விட்டன. எனினும் அந்த முயற்சி ஒரு பெரிய வெற்றி பெற்றது.

பிறகு நான்கு ஆண்டுகள் ஆயிற்று, 1961-இல் மறுபடியும் சோவியத்து ஸ்புட்னிக்-2 என்கிற இன்னொரு ஏவுகணையை அனுப்பியது. முதன் முதலாக ஒரு மனிதனை விண்ணிற்கு அனுப்பினார்கள். அவர் பெயர் யூரிகாரின்.

அதற்குப் பிறகு 62-ஆவது ஆண்டு விண்வெளியிலே மிதந்துகாட்டிய முதல் பெண்மணி வாலன்டினா. இந்த பெண்மணி தான் முதன் முதலாக வான்வெளியிலே மிதந்து பத்திரமாக பூமிக்குத் திரும்பியவர்.

சோவியத்துதான் விண்வெளி ஆய்விலே இப்படிப்பட்ட முயற்சிகளிலே முதல் வெற்றி பெற்றது. ஆனாலும் நிலவில் போய் கால்வைத்த பெருமை அமெரிக்கர்களுக்கு வந்து சேர்ந்தது. அடுத்தடுத்த முயற்சிகளிலே அவர்கள் இருந்தார்கள். அன்றைக்கு அந்தத் தொழில் போட்டி என்பது தொழில் நுட்பப் போட்டியாக, விண்வெளி ஆய்வுப் போட்டியாக அடிமெரிக்காவுக்கும், சோவியத்துக்கும் இடையிலே நடைபெற்றுக் கொண்டிருந்தது. இறுதி வெற்றியை அமெரிக்கர்கள் பெற்றார்கள்.

1969-ஆம் ஆண்டு ஜுலை மாதம் 20-ஆம் தேதி மனித வரலாற்றில் மறக்க முடியாத ஒரு நாள். முதன் முதலாக நிலவில் மனிதன் கால் வைத்தநாள் அது. நீல் ஆர்ம்ஸ்ட்ராங்க், ஆல்ட்ரின், மைக்கேல் கால்விண் என்கிற மூன்று பேர் அந்த ஏவுகணையிலே பயணம் செய்தார்கள். ஜுலை மாதம் 24-ஆம் தேதி அவர்கள் பூமிக்குப் பத்திரமாகத் திரும்பி வந்து விட்டார்கள் என்பது தான். இது விண்வெளி ஆய்விலே மகிப்பெரிய வெற்றிப்படி என்று கருதப்படுகிறது.

உலகத்தினுடைய மிகப்பெரிய வெற்றியாக, விஞ்ஞானத்தினுடைய மிகப்பெரிய வெற்றியாக அது அமைந்தது.

2001-ம் ஆண்டு அமெரிக்க தொழில் அதிபர் டென்னிஸ் டிட்டோ ரஷியாவுக்கு 20 மில்லியன் டாலர் (சுமார் ரூ.140 கோடி) கொடுத்து விண்வெளி பயணம் மேற்கொண்டார். அவருக்கு பின் இதுவரை ஆறு பேர் விண்வெளி சுற்றுலா சென்றுள்ளனர்.

நீண்ட இடைவெளிக்கு பின் இப்பொழுது ஆறு பேர் கொண்ட குழு தனியார் நிறுவனம் மூலம் முதன் முறையாக விண்வெளிக்கு சுற்றுலா செல்ல தயாராக உள்ளனர். இவர்கள் ஆறுபேருக்கும் கடந்த ஆறுமாதமாக தனியார் நிறுவனம் பல மருத்துவ பரிசோதனைகளும், 10 கிலோ ஆக்சிஜன் சிலிண்டரை கட்டிக் கொண்டு வாயால் சுவாசித்தபடி கடலுக்குள் நீந்தி மேற்கொள்ளும் ‘ஸ்கூபா டைவிங்’, மற்றும் விண்வெளியில் நேரம் கணக்கிடுதல், ராக்கெட் பூமியை வந்தடையும் போது பாராசூட் மூலம் தரையை நோக்கி குதிக்கும் ‘ஸ்கை டைவிங்’, விண்வெளியில் இருக்கும் போதே ஆக்சிஜன் சிலிண்டர் காலியானால் அதை கண்டறியும் பயிற்சி, “செண்டர் பியூஸ்” என்ற ராக்கெட்டில் பயணிக்கும் வேகத்துக்கு ஈடான வினாடிக்கு 7.9 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் பயிற்சி, ராக்கெட் தரை யிறங்கும் போது உரிய இடத்தில் இறங்காமல் வனப்பகுதியில் இறங்க நேரிட்டால் அங்குள்ள வன விலங்குகளிடம் இருந்து தற்காப்பது, வனப்பகுதியில் திசைகள் கண்டறிதல், துப்பாக்கி சுடுதல் போன்ற பயிற்சிகள் அளிக்கபட்டுள்ளன.

கவுண்டவுன் நேரம் முடிந்து விண்கலத்தை சுமந்து கொண்டு ராக்கெட் விண்ணில் சீறி பாயத்தொடங்கியது. விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்தனர். முதல் முறையாக ராக்கெட் புறப்படுவது முதல் விண்வெளி ஆராய்ச்சி நிலையம் சென்றடையும் வரை அனைத்தும் நேரலையில் ஒளிபரப்ப பட்டன. விண்கலம் முதலில் அடிவளிமண்டலத்தை கடந்து வெப்பமடுக்கு மண்டலத்தை அடைந்தது அடுத்து இடைவளிமண்டலத்தை கடந்து கார்மன் கோடு எனப்படும் துருவ ஒளிப்பகுதியை கடந்து வெப்ப மண்டலத்தை அடைந்து இறுதியாக புரவளிமண்டலத்தை அடைகிறது. பின்பு வேகமாக சுத்திகொண்டு இருக்கும் விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தின் சுற்றுவட்ட பாதையில் வந்து இணைய சற்று அருகில் விண்கலம் சுற்றி வருகிறது.

திடீரென நேரலை நிறுத்தபட்டு விளம்பரம் ஒளிபரப்பபடுகிறது. அசோக் அவன் அம்மாவை பார்க்க,

அம்மா :- என்னப்பா இப்டி திடீர்னு கட் பண்ணிட்டாங்க..?

அசோக் :- நானும் உன் கூடதான இருக்குறேன்.. அங்க சிக்னல் ஏதும் கட் ஆகிருக்கும்.. கொஞ்ச நேரம் வெயிட் பண்ணு…

அம்மா :- சரி நேரமாகிடுச்சு.. நீ கடைக்கு போய் காலியாகுறதுக்குள்ள தோச மாவு வாங்கியாந்துரு..

அசோக் :- இருமா என்னனு பாத்துட்டு போயிறேன்…

அம்மா :- நீ இத பாத்து என்ன பண்ண போற..?

அசோக் :- திங்க கிழமை நீ சீரியல் பாக்குறப்ப இத நான் கேட்கவா…

அம்மா :- சரிப்பா கோபபடாத.. மாவு காலியாகிடும்ல அதான் சொன்னேன்..

அவர்கள் பேசிகொண்டிருந்த போதே ‘’முக்கிய செய்தி’’ விண்வெளி சுற்றுலா சென்ற விண்கலத்தை எதோ ஒரு மர்ம பொருள் தாக்க நெருங்கி வந்துகொண்டு இருக்கிறது என ஒளிபரப்பினர்.

அம்மா :- அய்யய்யோ மேல மோதுனா செத்துருவாங்களா..?

அசோக் :- ஆமா..

அம்மா :- பேசாம இங்கயே இருந்துருக்கலாம்ல துட்டு நெறையா இருக்குனு இப்ப அங்க போய் சாக போறானுங்க.. எல்லாரும் கீழ செத்து மேல போவாங்க இவனுங்க மேலே செத்து கீழ வர போறாங்க.. சரி மோத வர்றது என்னவா இருக்கும்ப்பா…?

அசோக் :- ஏதாவது எறி நட்சத்திரமா இருக்கலாம்.. இல்ல செயல் இழந்த ராக்கெட், விண்கலத்தோட பாகமா இருக்கலாம்.. இல்ல அங்க ஆராய்ச்சிக்கு அனுப்புன நாய் லைக்காவோட ஆவியா இருக்கலாம். அதுவும் இல்லனா ஏலியனா கூட இருக்கலாம்..

அம்மா :- இதெல்லாம் உனக்கு எப்படி தெரியும்..?

அசோக்:- எல்லாம் புத்தகங்களையும், கதைகளையும் படிச்சு தெரிஞ்சுகிட்டது தான்..

அம்மா :- கதையிலையுமா இதெல்லாம் சொல்றாங்க..

அசோக் :- ஆமா.. எனக்கு அறிவியல் கதைனா ரொம்ப பிடிக்கும்.. விரும்பி படிப்பேன்.. அதுமூலமா நிறைய கத்துகிட்டேன்.. ஏன் இப்ப நடக்குற இந்த சம்பவத்தை கூட நா கதையா படிசிருக்குறேன்..

அம்மா :- என்னப்பா சொல்ற..

அசோக் :- ஆமா மா.. ஒரு கதைல இதேமாதிரி விண்வெளி சுற்றுலாவுக்கு போனவங்க விண்கலத்துமேல திடீர்னு ஏதொ ஒன்னு மோதிரும். மோதினதுக்கு அப்புறம் அது என்னனு பார்த்தா அது ஒரு விண்வெளி வீரரின் இறந்த உடல்.. உடனே அங்கிருந்து பூமிக்கு தகவல் குடுக்குறாங்க.. எல்லா நாட்டுக்கும் தகவல் போகுது. விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் இருந்தவங்கள அந்தந்த நாடும் தொடர்பு கொள்றாங்க. விண்வெளி ஆராய்ச்சி நிலையத்துல எல்லாரும் பத்திரமா இருக்குறாங்க. அப்ப இந்த இறந்த உடல் யாருதுன்னு எல்லாருக்கும் ஒரே குழப்பமா இருக்கு.

கடந்த அரை நூற்றாண்டில், சுமார் 30 விண்வெளி வீரர்கள் ஆபத்தான விண்வெளி பயணங்களுக்கு பயிற்சி அளிக்கும்போது தங்களது உயிரை இழந்துள்ளனர். ஆனால் இந்த உயிரிழப்புகளில் பெரும்பாலானவை நிலத்திலோ அல்லது பூமியின் வளிமண்டலத்திலோ நிகழ்ந்தன. கோர்மன் லைன் என்று அழைக்கப்படும் இடத்தின் எல்லையில் சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் நிகழ்ந்தவை ஆகும்

இதுவரை விண்வெளியில் இறங்கிய சுமார் 550 பேரில், மூன்று பேர் மட்டுமே அங்கு உயிரிழந்துள்ளனர் . அவர்கள் மூவரும் சோவியத் யூனியனை சேர்ந்தவர்கள். அவர்கள் இறந்த வருடம் 1971 . ஆனா அந்த உடலை பார்தால் இறந்து ஐம்பது வருடம் கடந்ததை போன்று தெரியவில்லை. இறந்து சில வருடங்களே ஆனதுபோன்று தெரிகிறது. அதுவுமில்லாமல் விண்வெளியில் யாரேனும் இறந்தால் அவர்கள் உடலை திரும்ப பூமிக்கு கொண்டு வர மாட்டார்கள்.

இறந்தவரை விண்கலத்திலேயே லாக்கரில் வைக்கவும் இயலாது, ஏனெனில் அது சக வீரர்களை மனதளவில் மற்றும் உடலளவில், மிகவும் பாதிக்கும்.விண்வெளியில் கல்லறை ஒன்றை வடிவமைப்பது பல மில்லியன் டாலர்கள் செலவாகும் . அதுமட்டுமின்றி இறந்தவர் இறந்தவர்தான், மறுபடி ஒரு விண்கலம் அவரது உடலை பூமிக்கு கொண்டு வருவதற்குள் அவரது, பாதிக்கும் மேற்பட்ட உடல் அழிந்து போயிருக்கும் எனவே பாடி பேக் முறையில் அதாவது விண்வெளியில் இறந்தவர் உடலை ஒரு பையில் ‘ஜிப்’ (Zip) செய்ய வேண்டும், பின்பு அதை விண்வெளியில் உறைய வைத்து, சிறுசிறு துகள்களாகும் வரையிலாக (பவுடர் போல் ஆகும் வரையிலாக ) வைப்ரேட் செய்ய வேண்டும்.எந்த விதமான பொருளும் விண்வெளிக்குள் செலுத்தப்பட கூடாது. அவைகள் சுற்று வட்டப்பாதையில் இருக்கும் பிற விண்வெளி பொருட்களின் மீது மோதி செயலிழக்க செய்யக்கூடும்.

இறுதியாக அந்த உடலை விண்வெளி வீரர்கள் சோதனை இடுகிறார்கள். அப்பொழுது அந்த உடல் ஒட்டியுள்ள உடையின் உள்ளே சிறிய அமெரிக்க கொடி பொறித்த பேட்ஜ் இருப்பதை பார்த்து நாசாவுக்கு தகவல் தெரிவிக்குறார்கள். நாசா எங்கள் வீரர் இல்லை என மறுக்கிறது. ஏனென்றால் விண்வெளியில் சோவியத் ஒன்றியத்தை போல ஒருமுறை கூட அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா தனது விண்வெளி வீரரை உயிரிழக்க செய்ததில்லை என்று இதுவரை தக்கவைத்துள்ள அந்த வரலாற்று பெருமை, வரலாற்று சாதனை அதை விட்டு போய்விடும். எனவே பஹிரங்கமாக மறுத்தது மட்டுமல்லாமல் உலக நாடுகளின் கவனத்தை தன்மீதிருந்து திசை திருப்ப தனது சாட்டிலைட் மூலமாக விண்வெளி ஆராய்ச்சி மையத்தை குண்டுகளால் தாக்கி ஏலியன் தாக்கியது போல் ஒரு பரபரப்பு செய்தி அறிக்கையை வெளியிட்டது. அணைத்து நாடுகளும் அந்த பிரச்சனையை மறந்துவிட்டு ஏலியனை பற்றி பேச துவங்கி விட்டனர். நாசாவும் அந்த விசயத்தை அப்படியே மூடி மறைத்துவிட்டது.

அம்மா :- கதைமாதிரியே தெரியலையேப்பா.. நீ சொல்லும்போதே உண்மையில் நடந்தமாதிரில இருக்கு… யாரு எழுதுன கதைப்பா இது..

அசோக் :- ஜானி jjp னு ஒருத்தரும்மா..கதை பேரு “ லைக்கா” ..விண்வெளிக்கு முதல் முதல்ல ஒரு நாயை அனுப்பி மனித ஆராய்ச்சிக்கு பலி குடுத்தாங்கள்ள அந்த நாயோட பேருதான் தலைப்பு..

அம்மா :- யாரு.. எப்ப பாத்தாலும் இந்த அமானுஷ்யம் … ஆவி .. ஏலியன்னு எழுதுவானே அந்த தம்பியா …

அசோக் :- ஆமாம் மா.. உனக்கு எப்படி தெரியும்..

அம்மா :- நானும் இந்த சிறுகதைகள்.காம் லையும், பிரதிலிபிலயும் அந்த தம்பி எழுதுன நாலு, அஞ்சு கதைய படிச்சிருக்குறேன். எப்ப பாத்தாலும் ஆவி.. ஏலியன்னு எழுதுறதுனால இப்ப படிக்குறது இல்ல..

அசோக் :- எப்ப பார்த்தாலும் சமையல் குறிப்பே பாத்துட்டு இருந்தும் உனக்கு போர் அடிக்குதா இல்லல .. அதே மாதிரி ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ரசனை இருக்கு.. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ஜானரில் கதை படிக்க பிடிக்கும் அதேபோல எழுதுபவருக்கும் ஒவ்வொரு ஜானரில் எழுத பிடிக்கும்..

அம்மா :- ஒருவேள நீ சொன்ன கதைல நடந்தமாதிரி ஏதும் உண்மையா நடந்திருக்குமோ…?

என சொல்லியவாறு டிவியை பார்கிறார். விண்கலம் மீது ஏதோ ஒன்று மோதியது என்று அதே செய்தியை பிரேக்கிங் நீயூஸ் என பிரேக் இல்லாமல் திரும்ப திரும்ப போட்டுகொண்டு இருக்கிறார்கள் .

அசோக் :- ஆமா மா .. எது உண்மை … எது பொய்யின்னு ஒரு சில நேரம் நம்மள அறியாம நம்பிடுறோம் .. ஒருசிலர் நம்மள பொய்ய உண்மைன்னு நம்ப வச்சிருறாங்க.. உண்மைய பொய்யின்னு நம்ப வச்சிடுறாங்க..

அம்மா :- சரி நீ புலம்பாம போய் மாவு வாங்கிட்டு வா டைம் எட்டாகுது மாவு தீர்ந்திட போகுது..

அசோக்:- அமேரிக்கா நிலவுல கால் வைச்சத ஒரு சில நாடுகள் இன்னும் உண்மைன்னு நம்பல .. ஆனா நாம நீல் ஆம்சஸ்டார்ங் தான் முதன் முதலில் கால் வைத்தார்னு நம்பிகிட்டு இருக்குறோம்..

என தொடர்ந்து புலம்பியவாறு அசோக் செருப்பை போட்டுவிட்டு கடைக்கு கிளம்பி போனான்.

அசோக் வெளிய சென்ற சிறிது நேரத்தில் டிவியில் அடுத்த முக்கிய செய்தி ஒளிபரப்பானது. அதை அசோக்கின் அம்மா சற்று கலக்கத்துடன் பார்த்துகொண்டு இருந்தார்.

அந்த செய்தி “ விண்வெளி சுற்றுலா சென்றவர்களின் விண்கலத்தை ஏலியன் தாக்கியது ”

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *