நான் சாமியாகப்போகின்றேன்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: அறிவியல்
கதைப்பதிவு: November 25, 2016
பார்வையிட்டோர்: 12,768 
 

இருளைத்தோற்கடிக்க தன் கதிர்க்கால்களால் நட்சத்திரம் ஒவ்வொன்றையும் நசுக்கிக்கொண்டு நடந்துவந்தது சூரியன். அடித்த அலாரத்தை அழுப்புடன் அடித்து அணைத்துவிட்டு தூக்கத்தைத்தொடர்ந்தான் நிலவுக்கண்ணன். நல்லவேளை அலைபேசி அழைப்புமணி அவன் தூக்கத்தை மீண்டும் களைத்தது. தெரியாத இலக்கத்தில் இருந்து வந்த அழைப்பினைப்பார்த்ததும் “ஆகா யாரோ ஒரு பெண்தான் தன் அழகில் மயங்கி அழைக்கிறாள் ..” என்ற ஒரு சாதாரண ஆணின் சந்தோஷத்துடன் தூக்கம் களைந்தவனாய் எழுத்தவனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.அழைத்தது ஒரு தவறி வந்த அழைப்பு. அதுவும் ஒரு ஆணின் அழைப்பு.

நிமிர்ந்து நேரத்தைப்பார்த்தான். காலை எட்டுமணிக்கு இன்னும் பத்து நிமிடமே இருந்தது. வேலைக்குப்போகவேண்டிய நேரம் எட்டுமணி. பரவாயில்லை இன்னும் பத்து நிமிடம் உள்ளதுதானே, சரியாக ஒன்றரை நிமிடத்தில் காலைக்கடனுடன் குளித்தும் முடித்துவிட்டான்.

இன்னொரு அரை நிமிடத்தில் துவட்டி, ஆடை அணிந்து வேலைக்குச் செல்ல ஆயத்தமாகிவிட்டான். அவன் ஆயத்தமாக மொத்தமாக எடுத்த இரண்டு நிமிடங்களில்
கண்ணாடிமுன் நின்றுகொண்டு தன் குறும் தாடியைத் தடவி “நீ சயன்டிஸ்டா,,, உன் தாடியே சொல்லுது நீ சயன்டிஸ்தானடா…” என்று வடிவேல் பாணியில் தனக்குத்தானே சொல்லிக்கொள்ள எடுத்த பதினைந்து செக்கனும் அடங்கும்.

7.50 யிற்கு எழும்பி 7.52 யிற்குள் ஆயத்தமாகி மிச்சமிருந்த எட்டு நிமிடத்தில் வீதியில் கிடைத்த சந்துபொந்தெல்லாம் மோட்டர் பைக்கை விட்டு சரியாக எட்டுமணிக்கு வேலைக்கு வந்து சேர்ந்துவிட்டான் நிலவுக்கண்ணன்.

அவன் சரியாக எட்டுமணிக்கு வந்து சேர்ந்தபோது ஏற்கனவே தன் ஆராய்ச்சியை ஆரம்பித்திருந்தார் சக்திசிருஷ்டன். சக்திசிருஷ்டனிடம்தான் அசிஸ்டென்டாக வேலை செய்கிறான் நிலவுக்கண்னன். சக்தி சிருஷ்டன் என்பது அவருக்கு அவராகவே வைத்துக்கொண்ட பெயர். அவரது உண்மையான பெயர் யாருக்கும் தெரியாது.தான் சக்தியையே படைக்கப்போவதாகச் சொல்லி அந்தப்பெயரை வைத்துக்கொண்டார்.

சக்தியப்படைப்பதற்கான அவரது ஆராய்ச்சிகளை பல ஆண்டுகளாக நடத்திக்கொண்டிருக்கின்றார்.

சக்தியை ஒரு வடிவத்தில் இருந்து இன்னொரு வடிவத்துக்கு மாற்றலாமேயொழிய‌ சக்தியை ஆக்கவோ அழிக்கவோ முடியாது என்பதுதான் அறிவியலின் போக்கையே மாற்றிய முக்கியமான கண்டுபிடிப்பு.அது பல பரிசோதனைகள்மூலம் நிரூபிக்கப்பட்டும் உள்ளது. ஆனால் அது பொய், சக்தியை உருவாக்கலாம் என்பதுதான் சக்திசிருஷ்டனின் வாதம்.

ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்ட ஒன்றை பிழை என்று மக்களை ஏமாற்றுவதாக சக்திசிருஷ்டன் மீது பல விஞ்ஞானிகள் குற்றம்சாட்டினர்.ஆனால் சக்தி சிருஷ்டன் எந்த விஞ்ஞானியின் கருத்தையும் கவனத்தில் கொள்ளவே இல்லை.

அவன் தன் கருத்துக்களை மக்களிடம் நேராகவே சொன்னான். இதுவரை தன் ஆராய்ச்சியில் பெற்ற முடிவுகளையும் மக்களிடம் கொண்டு சேர்த்தான். அவனது கருத்துக்கள் சரியானதாகவே மக்களுக்குப்பட்டது. மக்களும் அதை ஏற்றுக்கொன்டனர். சக்தி சிருஷ்டன் என்றோ ஒரு நாள் சக்தியைப்படைத்துவிடுவான் என அவனுக்கு உலகம் பூராகவும் இருந்து பல சாதாரண மக்கள் ஆதரவளித்தனர்.

சக்தி சிருஷ்டனின் ட்டுவிட்டரை பல கோடி மக்கள் பின்தொடர்கிறார்கள். அவரது கருத்துக்களைத் தாங்கிய சொற்பொழிவு வீடியோக்களையும் பல கோடி மக்கள் பார்த்துள்ளார்கள்.

அறிவியல் ஞானிகளின் எதிர்ப்பையெல்லாம் தாண்டி, மக்களின் பேராதரவுடன் சக்தியைப்படைக்கப்போகும் தன் ஆராய்ச்சியை வெற்றிகரமாக நடத்திக்கொண்டிருக்கின்றான் சக்தி சிருஷ்டன்.

…………………………………………..

சக்தி சிருஷ்டனின் இந்த ஆராய்ச்சிக்கு எடுபிடியாக சேந்தவன் தான் நிலவுக்கண்ணன். ஆனால் வெளியில் தன்னை உதவி விஞ்ஞானி என்றுதான் சொல்லிக்கொள்வான்.தன்னை ஒரு விஞ்ஞானி என்று உலகம் நம்ப வேண்டும் என்பதற்காக சினிமாப்படங்களில் வருகின்ற விஞ்ஞானிகள் போல குறும்தாடியெல்லாம் கஷ்டப்பட்டு மெயின்டெயின் பண்ணுறான் நிலவுக்கண்ணன்.

வேலைக்கு அடித்துப்பிடித்து எட்டுமணிக்கு வந்தாலும், அங்கே ஏற்கனவே சக்திசிருஷ்டன் தன் ஆராய்ச்சியைத் தொடங்கியிருந்ததால் என்ன வேலை செய்வதென்று தெரியாமல் சக்தி சிருஷ்டன் பக்கத்தில் அமர்ந்துகொண்டான்.சக்தி சிருஷ்டனோ நிலவுக்கண்ணன் வந்ததைக்கூடக் கவனிக்காமல் ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கியிருந்தான்.அவன் எதிரே மின்குமிழ் போன்ற அமைப்பினுள் ,புகை இல்லாமல் நெருப்பு எரிந்துகொண்டிருந்தது. இது சம்பந்தமாகத்தான் சக்தி சிருஷ்டன் ஆழந்த சிந்தனையில் இருக்கவேண்டும் என்று நினைத்துக்கொண்ட நிலவுக்கண்ணன் அந்த மின்குமிழ் போன்ற அமைப்பையே வைத்தகண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தான்.இதிலிருந்துதான் புது சக்தி உருவாகப்போகின்றதோ என்ற எதிர்பார்ப்பு அவன் கண்களில் பிரகாசமாகத் தெரிந்தது.

அப்போது வாசல் காவல் காரன் வந்து நிலவுக்கண்ணனிடம் “ஐயாவைப்பார்க்க கொஞ்சம் பேர் வந்திருக்காங்க “பவ்யமாகச் சொல்லிச் சென்றான்.

நிலவுக்கண்ணன் வெளியே வந்து பார்த்தான். ஒரு பாடசாலையில் இருந்து கொஞ்சப் பிள்ளைகளும்,சில ஊடகவியளாளர்களும் வந்திருந்தார்கள்.
“ஐயா ஆழ்ந்த ஆராய்ச்சியில் இருக்கிறார் ஆராய்ச்சி முடிந்த்தும் ஐயாவுடன் பேசலாம் அதுவரை காத்திருங்கள்” சொல்லிவிட்டு உள்ளே சென்றான்.

சரியாக ஒரு மணி நேரத்தின் பின் எல்லோரும் உள்ளே அழைக்கப்பட்டார்கள்.

பாடசாலை மானவர்கள் எல்லோரும் பவ்யமாக சக்திசிருஷ்டன் முன் நின்றிருந்தனர்.எல்லோர் கண்ணும் அவர் முன்னிருந்த அந்த மின்குமிழ் போன்ற அமைப்பின் மேலேயே இருந்தது. ஊடகவியளாளர்கள் சக்தி சிருஷ்டனின் அனுமதியுடன் சில போட்டோக்களை எடுத்துவிட்டு சில கேள்விகளைக்கேட்கத் தொடங்கினர்.

ச”க்தியை ஆக்கவோ அழிக்கவோ முடியாது என்று பல வழிகளில் நிரூபிக்கப்படிருக்கும்போது என்ன அடிப்படையில் நீங்கள் சக்தியை உருவாக்கலாம் என்று நினைக்கின்றீர்கள்?” கேட்டான் ஒரு ஊடகவியளாளன்.

சக்திசிருஷ்டன் சிரித்துக்கொண்டே “தம்பி இந்த உலகத்தைப்படைத்த சக்தி எது?”

“கடவுள்”

“அந்தக்கடவுள் எனும் சக்தியைப்படைத்தது யார்?”

“அது வந்து…. கடவுள் சக்தி மிக்கவர் அவரை ஆக்கவோ அழிக்கவோ முடியாது”

“பார்த்தியா நீதான் இப்போது சக்தியை ஆக்கவோ அழிக்கவோ முடியாது என்று நிரூபிக்கப்பட்டுள்ளதாக சொல்லி என்னிடம் கேள்விகேட்டாய், ஆனால் இப்போ கடவுள் சக்தி மிக்கவர், அவரின் சக்தியை ஆக்கவோ அழிக்கவோ முடியாது என்கிறாய் ”

சக்திசுஷ்டனின் இந்தப்பதிலில் மிரண்டுபோன அந்த ஊடகவியளாளன் திரும்பிக் கேள்வி கேட்கவேயில்லை.

ஆனால் அசராத இன்னொரு ஊடகவியளாளன் கேட்டான்,
“நான் கடவுள் நம்பிக்கை இல்லாதவன்.இந்த உலகத்தைக் கடவுள் படைக்கவில்லை, தூசு துணிக்கைகள் எல்லாம் கோடிக்கணக்கான வருடங்கள் சேர்ந்து இந்த பூமியை உருவாக்கியது. அதற்கான சக்தி சூரியனில் இருந்து கிடைக்கின்றது. சூரிய சக்திதான் இந்த பூமியின் சக்தியாக மாறியிருக்கின்றது, அப்படித்தான் உலகத்தின் ஒவ்வொரு சக்தியும் இன்னொரு சக்தியில் இருந்துதான் உருவாகியுள்ளதாக விஞ்ஞானபூர்வமாக நிருப்பிக்கப்பட்டுள்ளதே” சக்தி சிருஷ்டனைப்பார்த்துக்கேட்டான்.

“வெரிகுட் தம்பி, நீ சொல்லுவதும் சரிதான் ,விஞ்ஞானம் சூரிய சக்தியில் இருந்துதான் பூமி உருவானதாகச் சொல்கிறது, சூரிய சக்தி மரத்தை உருவாக்கலாம், உயிரினத்தை உருவாக்கலாம் ,எப்படிக்காற்றை உருவாக்கும்?” பதிலுக்குக்கேட்டான் சக்தி சிருஷ்டன்.

“இதில் என்ன ஆச்சரியம்? மரம் உருவானால் காற்று வரும்தானே?” கொஞ்சம் நமட்டுச் சிரிப்புடன் சொன்னான் கேள்விகேட்ட ஊடகவியளாளன்.

“ஆனால் காற்று இல்லாமல் மரம் வளராது தெரியுமா? காபனீர் ஒக்சைட்டு இல்லாமல் எந்த மரமும் ஒக்ஸிசனை உருவாக்காது தெரியுமா? ஆகவே மரம் உருவாக முன்னமே காபனீர் ஒக்சைட்டு கலந்த காற்று எனும் சக்தி உருவாகி இருக்கவேண்டும் இல்லையா?”

இப்போது அந்த ஊடகவியளாளனும் அமைதியாகிவிட்டான்.

“இப்போது என்முன்னே இருக்கும் மண்னெண்ணெய் விளக்கைப்பாருங்கள்.எல்லா மண்ணெண்ணெய் விளக்கும் எரிவதற்கு மண்னெண்ணெயுடன் ,ஒக்ஸிசனும் தேவை.

ஆனால் நான் உருவாக்கியிருக்கும் இந்த விளக்குக்கு காற்று தேவை இல்லை, அதாவது மன்ணெண்யை எனும் எரிசக்தியை மட்டும் பயன்படுத்தி காற்று இல்லாமல் வெளிச்சத்தையும்,வெப்பத்தையும் உருவாக்க முடிந்திருக்கு.இன்னும் கொஞ்ச நாளிலேயே அந்த மண்னெண்ணய் கூட இல்லாமல் என்னால் வெளிச்சத்தையும்,வெப்பத்தையும் உருவாக்க முடியும்.மற்ற விளக்குகள் போல இந்த விளக்கில் புகை வரவே வராது. புகை ஒரு சக்தி எரிந்து மிச்சமாகி திண்மமாகிப்போன ஒரு மாற்றுச் சக்தி.அந்தச் சக்தியின் உருவாக்கத்தையும் இந்த விளக்கில் தடுத்திருக்கின்றேன்.”

எல்லோரும் இப்போது அந்த விளக்கை உற்றுப்பார்த்தார்கள். உண்மைதான் மின்குமிழ் போன்ற அந்த விளக்கினுள் இருந்த கொஞ்சம் மண்னெண்னெயில் அந்த விளக்கு பிரகாசமாக எரிந்துகொண்டிருந்தது. சக்திசிருஷ்டன் சொன்னபடி அதனுள்ளே காற்றுப்போக வழியே இல்லை,புகையும் வரவில்லை. நிலவுக்கண்ணனுக்கும் அதன் பின் தான் அந்த விள‌க்கின் மகத்துவம் புரிந்தது.

எல்லோரும் சக்தி சிருஷ்டனை வாழ்த்திவிட்டு வெளியேறினர்.மாணவர்கள் அவனது காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றுச் சென்றனர்.

அந்த விளக்கின் கீழே கண்ணாடியினாலான இரண்டு மயிர்த்துலைக்குழாய்களில் ஒன்று காற்றை உள்ளே செலுத்திக்கொண்டிருந்தது,இன்னொன்று எதிரான அமுக்கத்தை பயன்படுத்தி புகையை உடனுக்குடன் அகற்றிக்கொண்டிருந்தது யார் கண்ணுக்கும் தெரிய வாய்ப்பில்லை.அவ்வளவு சிறிய மயிர்த்துலைக்குழாய்கள் நுணுக்குக்காட்டியால் பார்த்தால் மட்டுமே தெரியும்.

நிலவுக்கண்ணன் ஆச்சரியத்துடன் கேட்டான்,
“ஐயா நீங்கள் சக்தியை உருவாக்கி என்ன செய்யப்போகிறீர்கள்.?”

“சாமியாகப்போகின்றேன்” என்றுவிட்டு ஹாஹா என்று சிரித்தார் சக்தி சிருஷ்டன்.

ஊடகவியாளளர்களும் ,மாணவர்களும் சக்திசிருஷ்டன் சாமியாரின் ஆச்சிரமத்தின் வாசலைக் கடந்து பயபக்தியுடன் வெளியேறிக்கொண்டிருந்தனர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *