கிரக பிரவேசம்

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: அறிவியல்
கதைப்பதிவு: August 28, 2014
பார்வையிட்டோர்: 29,132 
 

காலை 7 மணி, சூரியக் கதிர்கள் அந்த வீட்டின் ஜன்னல் உள்ளே பிரவேசித்தது. அக்கதிர்கள், விமல் முகத்தில் பட்டும் அவன் எழுந்திருக்கவில்லை. இன்னும் போர்வையை இழுத்து மூடிக்கொண்டு தூங்கினான்.

சூலமங்கள சகோதரிகளின் முருகன் பக்தி பாடலான ‘கந்தச்ஷ்டி கவசம்’ ஸ்பிக்கரில் ஒலித்துக் கொண்டிருந்தது. சாம்ராணி புகை, அந்த வீட்டில் முழுவதும் வியாபித்து, மனம் வீசிக்கொண்டிருந்தது. அப்புகை, மேல்மாடியில், விமல் படுத்துக்கொண்டிருந்த அறைக்கும் சென்றது.

அப்புகை, அவன் போர்வையிலும் நுழைந்து, அவன் சுவாசத்தில் கலந்து, கண்களை அடைந்தது. சூரிய ஒளிப்பட்டும் விழிக்காத அவனின் கண்கள், சாம்ராணி புகையினால் விழித்தது. அவன் போர்வையை விலக்கிக்கொண்டு மாடிப்படியில் இருந்து இறங்கிக்கொண்டே…

“அம்மா… அம்மா, கஃபி வேணும் ” என்றான்.

விமல் அம்மா, குளித்து ஈரத்தலையுடன் துளசி மாடத்தை சுற்றிக் கொண்டிருந்தார். விமல், அங்கு பாடிக்கொண்டிருந்த பாடலை நிறுத்தினான்.

“ஏய், ஏண்டா அதை நிறுத்துற” என்றாள் அம்மா,

“அம்மா… கஃபி, வேணும்மா..”

“தரேன், போய் வாய் அலம்பிட்டு வா, ஆமா, நேற்று நீ எப்ப வந்த.. சாப்டியா..!? தினமும் இப்படி நேரம் கழிச்சு வரதே உனக்கு பொழப்பா போச்சு, உனக்கு ஒரு கால்கட்டு போட்டாத்தான் சரிப்பட்டு வரும்“

“அம்மா சீக்கிரம் போடும்மா.. இன்னும் எவ்வளவுக்கு நாள்தான் ருசியே இல்லாத சாப்பாடு சாப்பிடுவது”

“ரொம்ப திமீருடா உனக்கு..“ என்றாள்.

விமல் தந்தை நல்லாசிரியர் விருது பெற்றவர். அவர் பணியில் இருந்து ஒய்வுப்பெற்று இரண்டு வருடம் ஆகிறது. விமல், அவர்களுக்கு ஒரே மகன். இவன் ஐ.ஐ.டியில் ஏரோனட்டிகல் இஞ்சினிரிங் படிப்பு முடித்து. ஒரு வருடம் மேல் ஆகிறது. அவன் அப்போதே கேம்பஸ் இண்டர்வில் தேர்ச்சிப் பெற்றான். வெளிநாட்டில் வேலை, நல்ல சம்பளம் ஆனால் அவன் அவ்வேலையில் சேரவில்லை. அவனுக்கு இந்திய விண்வெளித் துறை, இஸ்ரோவில் பணிச் செய்வதே அவன் விருப்பமாக இருந்தது. இஸ்ரோவில் விண்ணப்பித்து ஆறு மாதம் ஆகிறது. விண்வெளி சம்பந்தமாக பல ஆய்வுக் கட்டுரைகள் எல்லாம் எழுதிருக்கிறான். அது இந்தியாவின் பிரபல அறிவியல் பத்திரிகையில் வெளிவந்திருக்கிறது. விமல் புரபோசர் சேவியர், அவனின் அனேக விஞ்சான ஆய்வுக்கு உதவியாக இருப்பவர். இருவரும் விண்வெளி ஆய்வில் மிகவும் ஆர்வம் உள்ளவர்கள். அதுவும் செவ்வாய் கோளைப்பற்றி இவர்களின் ஆய்வு மிக விரிவானது. வருங்காலத்தில் செவ்வாயில் மனிதர்கள் வாழும் சுழல், நிச்சயம் உருவாகும். இதைப்பற்றிய ஆய்வில் இருவரும் ஆர்வமுடன் பங்கேற்றனர். அதன் சம்பந்தபட்ட கட்டுரைகளும் எழுதி வந்தார்கள்.

அன்று வழக்கம் போல் புரபோசர் வீட்டில் விஞ்சான் ஆய்வு மேற்க்கொண்டு, இரவு, நேரம் கழித்தே விட்டிற்கு வந்தான். வீட்டில் இன்னும் விளக்கு எரிந்துக் கொண்டிருந்தது. இவன், பைக்கை அனைத்துவிட்டு, கேட்டை திறந்து, பைக்கை உள்ளே தள்ளிக் கொண்டு போனான். விமல் வரும் சத்தம் கேட்டு, அவன் அம்மா வீட்டின் வெளியே இருக்கும் விளக்கை போட்டார்.

“ஏண்டா, என்னடா இது. மணி பன்னிரெண்டு ஆகுது. பேய் உலாத்துற நேரத்துக்கு இப்படி வர.. நேரத்துக்கு வந்தாத்தான் என்ன…!”

“இல்லம்மா.. புரோபசர் வீட்டில்தான் இருந்தேன். சில ரிசர்ச் அதான் லேட் ஆகிடுச்சு..”
“சரி, கை கால் அலிம்பிட்டு வா சாப்பிடலாம்“
“நீ சாப்பாடு எடுத்து வைம்மா.. இதோ வந்துடுரேன்” என்று சொல்லி, வீட்டின் உள்ளே சென்றான்.

“டேய் விமல், இன்னிக்கு நானும் உங்க அப்பாவும் ஒரு பொண்ணு பார்த்தோம். அவளுக்கும் செவ்வாய் தோஷமாம். உன் தோஷமும் சொன்னோம். அவங்களும் சரி என்று சொல்லிட்டாங்க.. ‘நாங்க மாப்பிளையை வர வெள்ளிக்கிழமை வந்து பார்கிறோம்ன்னு… சொன்னாங்க.. வர வெள்ளிக்கிழமை எங்கையும் போயிடாதே.. பொண்ணு போட்டோவ, உன் ரூம்ல, டேபில் மேல வச்சுருக்கேன். போய் பார்த்து சொல்லு”

“அம்மா, என்னம்மா நீ, இன்னும் எனக்கு வேலையே கிடைக்கல, அதுகுள்ள கல்யாணம் பேசி முடிவுபண்ற..”

“டேய், உனக்கு செவ்வாய் தோஷம்டா, உனக்கு யாருடா பொண்ணு கொடுப்பா… அந்த பொண்ணுக்கும் அதே தோஷம். பொருத்தம் எல்லாம் சரியாக இருக்கு. அதுவுமில்லாம.. அந்த பொண்ணு பார்க்க மகாலஷ்மியாட்டும் இருக்காடா.. இதவிட உனக்கு வேற பொண்ணு கிடைக்காது.” என்று அவங்க சொல்ல, அவன் பதில் ஏதும் சொல்லாமல் நின்றுக்கொண்டிருந்தான்.

மேலும் அவன் அம்மா சொன்னாள்:

“டேய் நான் சொல்ல மறந்துட்டேன், இன்னிக்கு உனக்கு ஒரு லெட்டர் வந்துருக்குடா.. அதையும் உன் ரூம்லதான் வச்சுருக்கேன்”

“எம்மா, இத நீ முதல்ல சொல்லக் கூடாதா” என்று சொல்லி வேகமாக மாடிப்படி ஏறிப்போனான்.

அறை கதைவை திறந்தான். அந்தப் பெண்ணின் புகைப்படம் மேலேயே அந்த உரையிட்ட கடிதமும் இருந்தது. அந்த பெண்ணின் புகைப்படம் பார்த்து கொண்டே கடிதத்தை எடுத்தான். அப்புகைப்படம் அவன் பார்வையில் தலைக்கீழாக இருந்தது. அதைப் பார்த்துக்கொண்டே கடிதத்தை பிரித்தான். அவன் ஆசைப்பட்டது போலவே இஸ்ரோவில் இருந்து வேலைக்கான நேர்முக அழைப்புக் கடிதம். விமல் மிகவும் உற்சாகமடைந்தான். அவன் உற்சாகத்திலே அந்த புகைப்படத்தையும் எடுத்துப் பார்த்தான். சிரித்த அந்த பெண்ணின் முகம், வசிகரிக்கும் அவள் கண்கள். அக்கண்கள் இவனிடம் அவள் காதலை சொல்லியது. இவன் அப்பெண்ணின் படத்தைப் பார்த்துக்கொண்டே மெல்ல சிரித்தான். இதை மட்டும் அம்மாவிடம் சொல்லினால் நிச்சயம் அவள் இப்படிதான் சொல்லுவாள்.

“எல்லாம் பொண்ணு பார்த்த நேரம்டா உனக்கு வேலைக்கான இன்டர்வியும் வந்திருக்கு, அவளே உனக்கு மனைவியாய் வந்தால், உன் வாழ்கை நல்லா இருக்கும்டா..” என்று நினைத்துக்கொண்டே.. படி இறங்கி, அம்மாவிடம் விசயத்தை சொன்னான்.

அவன் நினைத்தது போலவே அம்மா அதையே சொன்னாள். இவன் சிரித்துக்கொண்டே,

“அம்மா எனக்கு பசிக்கல நான் தூங்கப்போறேன் என்று சொல்லிக்கொண்டு மறுபடியும் மாடிப்படி ஏறி, அறைக்கு போனான். புத்தக அலமாரியில் இருந்த ஒரு புத்தகத்தை எடுத்து அதைப் படித்துக் கொண்டே படுக்கையில் சாய்ந்தான்.

ஐந்து பேர் கொண்ட குழு, நேர்முக தேர்வு நடத்தியது. இவனின் ஆய்வுக் கட்டுரை எல்லாம் அவர்களில் ஒரு சில பேர் படித்திருகிறார்கள். அதை விமலிடமும் கேட்டு, அவர்கள் உறுதிப்படுத்திக் கொண்டார்கள். இவனின் பதில் அவர்களுக்கு நம்பிக்கையை எற்படுத்தியது. அவனின் வேலையும் உறுதிச் செய்யப்பட்டது. இன்னும் இரண்டு நாள் கழித்து வேலையில் சேர வேண்டும். அவன் மிக ஆவலாக இருந்தான்.
அமெரிக்காவுக்கு முன் இந்தியா செவ்வாய்க்கு மனிதர்களை அனுப்பவேண்டும். அதற்கான விரிவான செயல் திட்டம் இஸ்ரோவின் தலைவரால், இந்திய அரசாங்கத்திடம் வழங்கப்பட்டது. அதற்காக நிதி 500 கோடியும் அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்டது.

இஸ்ரோவில், செவ்வாய்க்கு ஆள் அனுப்பும் ஆய்வுக் குழுவில் விமல் இணைந்தான். அவ்வாய்வகத்தில் 300 அடி நீளம் கொண்ட, 5.5 மில்லியன் பவுண்ட எடைக் கொண்ட விண்கலம், 100 டன் எடைப் பொருட்களை தாங்கி செல்லும் அளவில் அது தயாராகிக்கொண்டிருந்தது.

“விமலின் செவ்வாய் கிரகத்தைப் பற்றிய ஆய்வுத் தகவல், அதைப்பற்றிய அவனின் புரிதல் மற்றும் இளம் விஞ்சானி. அதனால் விமலை அனுப்புவதே சரியாக இருக்கும்” என்று இஸ்ரோ தலைவர், அவர் குழுக்களிடம் சொல்லிக் கொண்டிருந்தார். இதை அவர், இந்திய அரசாங்கத்திடமும் முறைப்படி தெரிவித்தார்.

இஸ்ரோ தலைவர் அறையில் விமல்,

“சார் என்ன நீங்க தேர்ந்தெடுத்ததற்கு ரொம்ப தேங்கஸ், உங்க நம்பிக்கையை நான் நிச்சயம் நிறைவேற்றுவேன்.”

“விமல், நீ மட்டும் மார்ஸுக்கு போவப் போறதில்லை உன்னுடன் சேர்ந்து ஒரு ரோபோவும் வரப் போகிறது. அது ஜப்பானில் தயாராகிவிட்டது. வந்துவிடும். அது இல்லாம சில செயற்கை முறையில் சில செடிகள் இங்கு வளர்த்து ஆய்வு செய்திருக்கோம். அது முழு வெற்றிப் பெற்றது. அதையும் நீ, அங்கு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். ஏனென்றால் செவ்வாயில் நீர் இருந்தற்கான தடையம் உள்ளது” என அவர் சொல்லும்போதே…

அறையின் கதவு தட்டப்பட்டது. ஒரு பெண் நேராக வந்து தலைவரை பார்த்து சல்யூட் அடித்து நின்றாள். தலைவர் விமலிடம் திரும்பி,
“விமல் ஷி இஸ் நான்சி. இவர்தான் உங்களுடன் வரப்போகிறாள்”

“சார் நீங்க ரோபோ வருவின்னிங்க..”

“ஆமா, ரோபோதான் வரும்.”

“அப்போ எப்படி சார், இந்த பொண்ணு…“ என்றான்.
இதைக் கேட்டு தலைவர் சிரித்தார்.

“விமல், இந்த நான்சிதான் ரோபோ, ஜப்பானின் நீயூ டெக்னாலஜி, விண்வெளிக்காக பிரித்தியோகமாக இது உருவாக்கபட்டது. உனக்கு இது ரொம்ப உதவியாக இருக்கும்” என்றார்.

விமல், நான்சியை பார்த்தான்.

“சார், இதை ரோபோன்னு சொல்லவே முடியாது சார், அப்படியே இருவது வயசு பொண்ணு மாதிரியே இருக்கு” என்றான்.

நான்சி, “ஹெலொ..” என்று சொல்லிக் கொண்டே விமலிடம் கையை நீட்டியது.

விமலும் “ஹெலொ..” என்று சொல்லிக்கொண்டு கைக்கொடுத்தான். அதன் கை உணர்வற்று இருந்தது. அது, அவனின் கையை அழுத்தியது. அவன், வலிதாங்காமல் கையை உதறினான். விமல், வலியுடனே அதை உற்று நோக்கினான்.

ஸ்ரீஹரிகோட்டா சதீஸ் தவான் விண்வெளி மையம். 60 மணி நேரம் முன்பே கவுண்டவுன் தொடங்கிவிட்டது. இந்தியாவிலே தயாரிக்கபட்ட கிரையோஜெனிக் இஞ்சின். இந்த இஞ்சின் கொண்ட ராக்கெட், புவி வட்டப் பாதை வரை செல்லும். பின் விண்கலத்தின் மோட்டார் இயங்கி, செவ்வாய் வட்டப் பாதையில், விண்கலத்தை கொண்டு செல்லும். எரி பொருள் சிக்கன நடவடிக்கைகாக, இந்த செயல்முறை திட்டம்.

“மேக மூட்டம் அதிகமாக உள்ளது. இன்னும் 12 மணி நேரத்தில் அவை சரியாகும்” என்ற இந்திய வானிலை அறிக்கையின் செய்தி தலைவர் கையில்… மங்கள்யானில் பொருத்தப்பட்ட மார்ஸ் எக்சாஸ்பியரிக் காம்போசிஷன் அனலைசர் என்ற சூற்று சுழல் ஆய்வு கருவி, மார்ஸ் கலர் கேமரா, ஸ்பேட்டோ மீட்டர், ஆண்டனாக்கள் மற்றும் சோலார் பேனல்கள். போன்ற கருவிகள் எல்லாம் அதில் பொருத்தப்பட்டது.

இந்திய ஜானதிபதியின் வாழ்த்து மடலும், பிரதமரின் பாராட்டு செய்தியும், இஸ்ரோ தலைவர் மற்றும் அவரின் குழுவை உற்சாகப்படுத்தியது.

“இந்திய அரசும், மக்களும் ஆவலுடன் எதிர்பார்த்த, மிகப் பெரிய திட்டம். இத்திட்டம் முழுமைப் பெற்றால் செவ்வாயில் இறங்கிய முதல் மனிதன் ஒரு இந்தியனாகத்தான் இருப்பான். அதுவும் அவன் ஒரு தமிழனாக இருப்பான். இது இந்தியாவுக்கே மிகப் பெருமையான விஷயம். அதைப் பெருமைப்படுத்த போறவர். இந்த விமல் என்கிற இளம் விஞ்சானி மற்றும் நான்சி என்ற ரொபோவும்” என்று இஸ்ரோ தலைவர், பத்திரிக்கையாளர் சந்திப்பில் விமலையும் நான்சியும் அறிமுகப் படுத்தி பேசிக்கொண்டிருந்தார்.

பல கேமராக் கண்கள் விமலையே படம் பிடித்து தள்ளியது. இவன் இப்போழுதே செவ்வாயில் இறங்கியதுபோல் கற்பனையில் மிதந்தான்.

இந்தியாவின் அத்தனை தொலைக்காட்சி சேனல்களிலும் விமலின் முகமே காட்டிக்கொண்டிருந்தது. அவன் நான்சியுடன் கை அசைத்துக் கொண்டே பி.எஸ்.எல்.வி ராக்கெட்டில் ஏறினான். கவுண்டவுன் ஐம்பதை நெறுங்கிக் கொண்டிருந்தது.
“ஆர் யு ஓகே விமல்” என்ற செய்தி கட்டுப்பாட்டு அறையில் இருந்து வந்த்து..

“ஐயேம் ஒகே சார்” என்றான்.
“5…4…3…2…1..0..” அனல் கக்கி கொண்டு விண்ணில் சீறிப்பாய்ந்தது பி.எஸ்.எல்.வி ராக்கெட்.

கட்டுப்பாட்டு அறையில் நிசப்த மௌனம். ராக்கெட் பாதை மாறாமல் அதே நேர்க்கோட்டில் செல்கிறது. இன்னும் அரை மணி நேரத்தில் அது புவி வ்ட்டப் பாதையில் சென்றுவிடும்.

கட்டுப்பாட்டு அறையில் பெருத்த கரவோலி, ராக்கெட் புவிவட்ட பாதையில் சென்றுவிட்டது. அது தன் இலக்கை நோக்கி சென்றுக்கொண்டிருக்கிறது. ஒருவரை ஒருவர் கைக்கொடுத்துக் கொண்டு, ஆரத்தழுவிக் கொண்டார்கள். தலைவர், தொலைப்பேசியில், பிரதமடன் வாழ்த்தை பகிர்ந்துக்கொண்டிருந்தார்.

விமல், ராக்கெட்டின் செயல் வேகத்தை கண்கானித்துக் கொண்டுருந்தான். நான்சி, அவளுக்கு பூமியில் இருந்து வந்த கட்டலைப்படி செயல்பட்டுக் கொண்டிருந்தது.

செவ்வாய் வட்டப்பாதையில், விண்கல மோட்டர், செயல்பட ஆரம்பித்தது. அது செவ்வாய் கோளை நெருங்கிக் கொண்டிருந்தது. சூரியனின் நான்காவது கோள். அது இரண்டு நிலவு கொண்டது. அதன் மேற்பரப்பில் இரும்பு ஒட்சைட்டு உள்ளது. அதனாலே அது செந்நிறமாக உள்ளது. கார்பன் டை ஆக்சைடு 95 சதவீதம் உள்ளது.

புழுதிப் பறக்க விண்கலம் செவ்வாயில் தரை இறங்கியது. விமல், முதல் காலடி எடுத்து வைத்தான். இந்திய தமிழனின் முதல் காலடித்தடம். அதை கேமரா படம் பிடித்து பூமிக்கு அனுப்பியது. பாதுகாக்கபட்ட கவசத்துடன் விமல் செவ்வாயில் நடந்து சில ஆய்வுகள் செய்தான். மண்ணில் சில மாதிரிகளை சேகரித்தான். விண்கலதிற்கு திரும்பினான். கொண்டுவந்த மாதிரிகளை அவன், பரிசோனைக்கு உட்படுத்தி ஆய்வுச் செய்துகொண்டிருந்தான் அப்பொழுது நான்சி, விமல் கையை பிடித்தது. அது முன் போல், இப்போது உணர்வற்று இல்லை. அது மிக மிருதுவாக இருந்தது. அவன், திரும்பி நான்சியை பார்த்தான். நான்சியின் பார்வை, அவன் உடலில் ஒருவித சிலிர்பூட்டியது. நான்சி, அவனைக் கட்டித் தழுவியது. அவன் சந்தேகம் வந்தவனாய்,

“எனக்கு செவ்வாய் தோஷம் நீ செத்துவிடுவாய்..” என்றான்.

இதை கேட்டு அது சிரித்தது.

“அடேய் பைத்தியேமே.. செவ்வாயில் இருந்துக் கொண்டு செவ்வாய் தோஷம் என்கிறாய்” என்று அது சொல்ல..

அவன் மௌனமானான்.

பின், நீண்ட நேரத்திற்கு அங்கு இருவரின் பேச்சின் குரலே எழவில்லை..

விமல் ஆய்வுக்காக, அம்மா வீட்டில் வளர்த்த துளசிச் செடியை, பாதுகாக்கப்பட்ட ஒரு குடுவையில் வைத்துக்கொண்டு, அதை எடுத்துக்கொண்டு விண்கலத்தை விட்டு வெளியே வந்தான். அதை செவ்வாயின் மண்ணில் சில பரிசோதனை இடையில், அதை நட்டான். அங்கு இரு நிலவின் வெளிச்சம், செவ்வாயின் இருளைப் பகலாக்கியது.

நான்சி, “விமல், விமல்…” என்று சொல்லிக் கொண்டே, கையில் ஒரு குழந்தையுடன் வெளியே வந்தது.

இதைப்பார்த்து திடுக்கிட்டு அதிர்ந்தான். குழந்தையின் முகம், விமலின் முக சாயலுடனே இருந்தது. ஆனால் உடல், இயந்திர உடலாய் இருந்தது.

அதிர்ச்சியில் மிரண்ட அவனிடம், நான்சி சொன்னது.

“விமல், இது நம் குழந்தை, செவ்வாயில் மனிதனும், இயந்திரமும் பெற்றெடுத்த முதல் குழந்தை. நம் குழந்தையே இந்த கிரகத்தின் சக்கரவர்த்தி. இந்த உயிரே இக்கிரகத்தின் புதிய தொடக்கம்.” என அது சொன்னதும்.
அக்குழந்தை, நான்சி கையில் இருந்து நழுவி, கீழே குதித்தது. மேலும் ஆச்சரியமாக அது நடக்கவும் ஆரம்பித்தது. அது விமலை நோக்கி,

“அப்பா, அப்பா…” என்று சொல்லிக் கொண்டே ஓடி வந்தது. இதைக் கேட்டு விமல்,

“…ப்பே” என்று அலறி அடித்துக்கொண்டு படுக்கையில் இருந்து எழுந்து உட்கார்ந்தான்.

கனவு கலைந்தது. மிரட்சியுடன் அவன், அந்த அறையே உற்று நோக்கினான். இவன் படித்த ‘செவ்வாயில் மனிதனின் வாழ்க்கை’ என்ற நாவலின் சில பக்கங்கள் காற்றில் ஆடிக்கொண்டிருந்தது.

“பூமியை மனிதன் நாசம் செய்யாமல் இருந்தாலே, இக்கிரகமே மனிதனுக்கு ஆரோகியமானது..” என்று நினைத்துக்கொண்டே, மீண்டும் படுக்கையில் சாய்ந்தான்.

Print Friendly, PDF & Email

1 thought on “கிரக பிரவேசம்

  1. ஐ.ஐ.டி.யில் ஏரோநாட்டிக்ஸ் என்ற துறையே கிடையாது! அடுத்து எல்லாமே கனவு என்று முடிப்பது ஹைதர் காலத்து உத்தி. இதையெல்லாம் பிரசுரிக்க வேண்டுமா? தரத்துக்கு அளவுகோல் எதுவும் இல்லையா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *