உபக்கிரகம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: அறிவியல்
கதைப்பதிவு: August 2, 2012
பார்வையிட்டோர்: 25,240 
 

ட்டாபிராமன் தினம் போல் சாயங்காலம் நடப்பதற்குக் கிளம்பினார். ரிட்டயர் ஆனதிலிருந்து அது இப்போது பத்து வருஷமாகிறது. அதிக நாள்கள் இந்த வாக் தவறினதில்லை. பட்டாபிராமன் நிறைய நாள் வாழ்ந்திருக்க விரும்பினார். தினசரி மூன்று மைல் நடந்தால் நிறைய நாள் வாழலாம் என்று டாக்டர் சொன்னார். ரீடர்ஸ் டைஜஸ்ட்டில் படித்தார். டவுனுக்கு வெளியே வந்து மைதானத்துக்குக் குறுக்கே நடந்து, சன்னமாக மேலே ஏறி இறங்கும் ஹை கிரவுண்ட் பகுதியில் நடந்து செல்வது அவருக்கு மிகவும் விருப்பம்.

அவர் செல்லும் சமயத்தில் அவரைத் தவிர வேறு ஒருவரும் இருக்க மாட்டார்கள். தனக்குத்தானே இரைந்து பேசிக்கொள்ளலாம். அவர் மனைவி, மகள், மகன் எல்லோரும் சுத்தமாக அவர் இறப்பதற்காகக் காத்திருக்கிறார்கள் என்று சில சமயம் அவருக்கு வரும் சந்தேகங்களைஎல்லாம் தனக்குத்தானே வாதப் பிரதிவாதம் செய்துகொள்ளலாம். மேலும், பச்சைப் புல்வெளியில் மெத்துமெத்தென்று நடப்பது அவருக்குப் பிடிக்கும். தன் சென்ற காலத்தை அசைபோட்டுக்கொண்டே டிராஃபிக் பயமில்லாமல் உத்தமமான தனிமையில் நடக்கலாம். நடந்து சென்றுகொண்டு இருந்தார்.என்றும் போல் மாலை. என்றும் போல் ஐந்து பதினெட்டு. என்றும் போல் கழுத்தைச் சுற்றி மஃப்ளர். கையில் வாக்கிங் ஸ்டிக், காலில் கான்வாஸ் ஷூக்கள். என்றும் போல் தனக்குள் பேச்சு.ஆனால், என்றும் போல இல்லாமல் இன்று ஒரு விநோதம் நடந்தது. சமீபத்திய மழையில் பளீர் என்று பச்சை நிறைந்துவிட்ட அந்தப் பிரதேசத்தில் நடந்துகொண்டு இருந்தபோது ‘விஷ்’ என்று உயரே அவர் பின்னே ஒரு சத்தம் கேட்டது. அந்தச் சத்தத்தை அவர் முதலில் கவனிக்கவில்லை. அதன்பின் அந்தச் சத்தத்தில் அதிகரித்த புதுமை அவர் கவனத்தை நிச்சயம் ஈர்த்தது. அந்த ‘விஷ்’ஷை சரியாக விவரிக்க, மொழியில் வார்த்தை இல்லை. உடலைச் சிலிர்க்கவைக்கும் சத்தம். திரும்பிப் பார்த்தார். ஒன்றும் தெரியவில்லை. மேலே பார்த்தார். திடுக்கிட்டார்.ஆகாயத்தில் சுமார் முந்நூறு அடி உயரத்தில் பளபளக்கும் ஒரு கோளம் மெதுவாகத் தனக்குத்தானே சுற்றிக்கொண்டு ஒரு மெல்லிய சரிவில் இறங்கிக்கொண்டு இருந்தது. துல்லியமான கோளம். பளபளக்கும் உலோகம். சற்று நீளம் கலந்த உலோகம் போல் தெரிந்தது. அதில் ஜன்னல் போல் ஒரு பக்கத்தில் அம்பர் வர்ணத்தில் விளக்கு பளிச் பளிச்.ஆனால், என்றும் போல இல்லாமல் இன்று ஒரு விநோதம் நடந்தது. சமீபத்திய மழையில் பளீர் என்று பச்சை நிறைந்துவிட்ட அந்தப் பிரதேசத்தில் நடந்துகொண்டு இருந்தபோது ‘விஷ்’ என்று உயரே அவர் பின்னே ஒரு சத்தம் கேட்டது. அந்தச் சத்தத்தை அவர் முதலில் கவனிக்கவில்லை. அதன்பின் அந்தச் சத்தத்தில் அதிகரித்த புதுமை அவர் கவனத்தை நிச்சயம் ஈர்த்தது. அந்த ‘விஷ்’ஷை சரியாக விவரிக்க, மொழியில் வார்த்தை இல்லை. உடலைச் சிலிர்க்கவைக்கும் சத்தம். திரும்பிப் பார்த்தார். ஒன்றும் தெரியவில்லை. மேலே பார்த்தார். திடுக்கிட்டார்.பட்டாபிராமன் பிரமித்துத் தன் கைத்தடியை நழுவவிட்டு, ‘ஆ’ என்று பார்த்துக்கொண்டு இருக்க… அந்தக் கோளம் அவருக்கு முன் மெதுவாகச் சரிந்து சுமார் முந்நூறு அடி தள்ளி ஜம்மென்று இறங்கியது. இறங்கும்போது பெரிதாகச் சுவாசம்விட்டது ரூஉம் ரூஉம் ரூஉம் என்று ஒரு ஒலி தொடர்ந்து கேட்டது. அதன் இருபுறங்களிலும் கிளை போல் இரண்டு கால்கள் புட்டுக்கொண்டு வெளிவர… அதன் விர்ர் சற்று அதிகமாக… அந்தக் கால்கள் மெத்தென்று புல்வெளியில் பட்டு அழுத்த… ஒரு குலுக்குக் குலுக்கிவிட்டு உருண்டை ஸ்திரமாயிற்று. அதன் காற்றுச் சத்தம் இப்போது சீராகக் கேட்டது.அந்தக் கோளம் சுமார் நாற்பதடி அளவு இருந்தது. அமைதியாக அப்படியே நின்றது. நிச்சயம் அந்த வடிவத்தைப் பட்டாபிராமன் நிஜ வாழ்க்கையிலோ, சினிமாவிலோ, பார்த்ததில்லை. கண்ணாடியை எடுத்துத் துடைத்துப் போட்டுக்கொண்டு பார்த்தார். முதலில் அதை ஏர்ஃபோர்ஸ்காரர்கள் பரிசோதிக்கும் விமானம் என்று நினைத்தார். ஆனால், விமானம் அவ்வளவு உருண்டையாக இருந்து பார்த்ததில்லை. அவர் ரிட்டையர்டு ஜட்ஜ். இருந்தும் அவருக்குத் தெரிந்திருந்த ஆதார விஞ்ஞானத்தில்கூட அந்த வடிவத்தில் எந்தச் சாதனமும் பறக்க முடியாது என்பது தெரிந்தது. ‘பின் இது என்ன?’சுற்றிலும் பார்த்தார், யாரையாவது கூப்பிடலாமா என்று. ஒருவரும் இல்லை. அவருக்குச் சற்றுப் பயமாக இருந்தது. இருந்தும் இது என்ன என்று தெரிந்துகொள்ள இருந்த ஆர்வம் அவரை அங்கேயே நிற்கவைத்தது.

இப்போது அந்தக் கோளத்தில் ஒரு கதவுச் சுளை திறந்து உள்ளே இருந்து நாக்கு நீட்டுவது போல் ஒரு ஏணி போன்ற வஸ்து வெளியே வந்து, தரையைத் தொட்டது. பட்டாபிராமன், மார்பு மிக வேகமாக அடித்துக்கொள்வதை உணர்ந்தார். ஏணி வழியாகக் குதித்துக் குதித்து ஒன்று இறங்கி வந்தது. அது என்றுதான் அதைச் சொல்ல முடியும். நிச்சயம் மனித உருவம் இல்லை. கிட்டத்தட்ட வர்ணித்தால் விளம்பரத்துக்குப் பெரிதாக வைத்திருப்பார்களே ஃபவுண்டன் பேனா எட்டு அடி பேனா அதைப் போன்ற வஸ்து குதித்துக் குதித்துத் தரையில் வந்து ஏதோ கார்ட்டூன் படங்களில் வருவது போல ஒரு தடவை ஆடிவிட்டு நின்றது. சற்று நேரத்தில் மற்றொரு பேனா வடிவம் குதித்துக் குதித்துக் குதித்து இறங்கியது.

முதலில் வந்த அதன் அண்ணனுடன் அருகில் நின்றது. பட்டாபிராமன் தன் கைத்தடியை எடுத்துக்கொண்டு ஓட நினைத்தார். அப்போது…

”பூமி மனிதரே, நாங்கள் நண்பர்கள்” என்று ஆங்கிலத்தில் குரல் கேட்டது. அங்கிருந்துதான் வந்தது. குரல் ஏதோ ஜலதோஷம் பிடித்த கம்ப்யூட்டரின் குரல் போல் இருந்தது. அதில் மனிதத்துவம் இல்லை. செயற்கையாக இருந்தது. ஏற்ற இறக்கங்கள் இல்லாமல் ஒரே சீராக… ஒரே லெவ லில் இருந்தது. பட்டாபிராமன் அசந்து போனாலும் அவர் முதல் ஆசை ஓடுவதில்தான் இருந்தது. யாராவது கூட இருந்தால் பரவா யில்லை. கொஞ்சம் தைரியமாக இருக்கலாம்.

அறுபத்து மூன்று வயதில் ஓடுவது எப்படி? விரைவாக நடக்கலாம். விரைவாக நடந்தார்.

”பயப்படாதீர்கள், இங்கே வாருங்கள்” என்றது ஃபவுண்டன் பேனா. பட்டாபிராமன் ஓடத் துவங்கிவிட்டார்.

”பூமி மனிதரே, பயப்படாதீர். நாங்கள் துன்பம் தர மாட்டோம். நாங்கள் நட்புக்காக வந்திருக்கிறோம். வாருங்கள், உள்ளே வாருங்கள். தயவுசெய்து வாருங்கள். வந்தே தீருங்கள். வருகிறீர்களா? வந்துவிடுகிறீர்களா?”

பட்டாபிராமன் சற்றுத் தயங்கினார். திறந்திருந்த கதவின் உள்ளே வர்ண வர்ண விளக்குகள் தெரிந்தன. அந்த இரண்டு பேனா நண்பர்களும் அப்படியே நின்றுகொண்டு இருக்க… அவர்களைப் பார்த்தால் அடிக்கடி வந்திருப்பவர்களைப் போலத் தோன்றவில்லை. பட்டாபிராமன் கொஞ்சம் கிட்டத்தான் போய்ப் பார்க்கலாமே என்று மூன்று தப்படி முன் வந்தார்.

”நல்லது நண்பரே! அருகில் வாரும்.”

பட்டாபிராமன் மெதுவாக அதை நோக்கி வந்தார்.

முப்பது நிமிஷம் கழித்து பட்டாபிராமன் மெயின் ரோடில் மிக வேகமாக நடந்து சென்றுகொண்டு இருந்தார். டவுனுக்குப் போகிற வாகனங்கள் எல்லாவற்றையும் நிறுத்த முயற்சி செய்துகொண்டு இருந்தார். ஒரு லாரிக்காரன் நிறுத்தினான். பஸ் ஸ்டாண்டு வரை கொண்டுவிடுவதாகச் சொன்னான். லாரியில் ஏறிக்கொண்டார். லாரிக்காரன் சற்றுத் தண்ணியில் இருந்தான். அது பட்டாபிராமனுக்குத் தெரிந்திருக்கவில்லை. ”நான் இப்ப என்ன பார்த்தேன் தெரியுமா?”

”சாமி?” என்றான்.

”நான்… இப்ப… வெளி உலகத்து மனுசங்க வந்து இறங்கறதைப் பார்த்தேன். மைதானத்திலே இறங்கியிருக்காங்க… வேற உலகம்.”

”அப்படியா! அங்கெல்லாம் சர்க்கரை என்ன விலை விக்குதாம்?”

”அவுங்க மனுஷங்க இல்லை. வேறு மாதிரி ஆசாமிங்க.”

”எவன் அய்யா இப்ப மனுசன்? நீ மனுசனா சொல்லு. நான் மனுசனா! எவன் மனுசன்? எல்லாரும் திங்கறாங்க.”

பட்டாபிராமன் மேலும் லாரி டிரைவரைப் புரியவைக்க முயற்சிக்கவில்லை. அவருக்கு நேரம் குறைவாக இருந்தது. அவர்கள் சரியாக ஒரு மணி நேரம் காத்திருப்பதாகச் சொன்னார்கள். பட்டாபிராமனுக்கு வேறு சிலரைக் கூட்டிவந்து அந்த அதிசயத்தைக் காட்ட ஆவலாக இருந்தது. யாரைக் கூப்பிடுவது? தன் மகளைக் கூப்பிடலாம். அப்புறம் ஊருக்குப் பிரபலஸ்தர் யாராவது உடனே வருவதாக இருந்தால் கூப்பிடலாம். பத்திரிகைக்காரனைக் கூப்பிடலாம். ரிப்போர்ட்டர் சாமராவ் சிட்டி கிளப்பில் சீட்டாடிக்கொண்டு இருப்பான். அவனுக்கு டெலிபோன் செய்யலாம். அப்புறம் போலீசுக்குச் செல்ல வேண்டும். இப்போதே செல்லலாமா? அவர்கள் வருவதற்கு நேரமாக்குவார்கள். முதலில் ஓர் ஐந்து ஆறு பேரைக் கூட்டிச் செல்லலாம். காரை எடுத்துக்கொள்ளலாம்.

ஓட்டமும் நடையுமாக வீட்டுக்கு வருவதை, என்ன அய்யர் இப்படி ஓடறது என்று கோபாலன் நாயர், கடையிலிருந்து வியந்தான். வீட்டுக்கு வந்ததும் ”ரேவதி ரேவதி” என்று மகளைக் கூப்பிட்டார். ரேவதி ஃபெமினா படித்துக்கொண்டு இருந்தாள். சோம்பல் முறித்துக்கொண்டு வந்தாள்.

”என்ன அப்பா?”

”உடனே காரை எடு. மாடியில் கேமரா ஃப்ளாஷெல்லாம் எடுத் துக்கொள்.”

”என்ன விஷயம்?”

”ரேவதி! சம்திங் எக்ஸைட்டிங்! நான் உனக்கு ஒன்று காட்டப்போகிறேன். ஊருக்கு வெளியே மைதானத்தில் புல்வெளியில். காரைச் சீக்கிரம் எடு!”

பட்டாபிராமனின் மனைவி வந்தாள். ”கார் எதுக்கு இப்போ? இன்னிக்கு டவுன் ஹால்ல எம்.டி.ராமநாதன் கச்சேரி. ஏன் அப்படி இரைக்கிறது உங்களுக்கு? ஓடினேளா?”

பட்டாபிராமன் டெலிபோனை நோக்கி ஓடினார். விர் விர் விர் என்று சிட்டி கிளப் நம்பரைச் சுழற்றினார். மகளும் மனைவியும் அவரையே பார்த்துக்கொண்டு நின்றார்கள்.

”என்னப்பா?”

”என்னன்னா?”

”விண்வெளியில் ஒரு உபக்கிரகத்திலிருந்து புதிய ஆசாமிகள் வந்து இறங்கியிருக்கிறார்கள்.”

அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள். ”ஹலோ சிட்டி கிளப்! நான் பட்டாபிராமன் பேசறேன். சாமராவ் ப்ரிட்ஜ் ரூமில் சீட்டாடிக்கொண்டு இருப்பார். ரொம்ப அவசரம். அவரைக் கூப்பிட வேண்டும்.”

”நீங்கள் என்ன பேத்தறேள்? உடம்புகிடம்பு சரியா இல்லையா?”

”ரேவதி, போ சீக்கிரம்! கேமராவை எடுத்துக்கொண்டு வா.”

”எதுக்கப்பா?”

”ஹலோ… ஹலோ சாமராவ்! நான்தான் பட்டாபிராமன். உனக்கு ஒரு பெரிய ஸ்கூப்.

சாமராவ்! சரியாகக் கேள். தி கிரேட்டஸ்ட் ஸ்கூப் இன் தி ஹிஸ்டரி ஆஃப் ஜர்னலிசம். ஸ்பேஸ் இல்லை ஸ்பேஸ், விண்வெளி? அதிலிருந்து சில பேர் வந்து நம் ஊருக்குப் பக்கத்திலே வந்து இறங்கி இருக்கா. ஒரு கப்பல்ல… இன்னும் அங்கேயே இருக்கா. ஒரு மணி நேரம் இருக்கப்போறா. இங்கிலீஷ்ல பேசறா. ட்ரான்ஸ்லேட்டிங் மிஷின் வெச்சிருக்கா. என்னோட பேசினா. எட்டு பேர் இருக்கா. நம்ம மனுஷாள் மாதிரி இல்லை. ஏதோ ஒரு உருண்டையா, நீளமா தடி மாதிரி. என்னது… நானா..? நான் குடிக்கலை சாமராவ்! டோண்ட் பி சில்லி. நான் சீரியஸாதான் பேசறேன்… ப்ரிட்ஜா? உன் ப்ரிட்ஜைக் கொண்டு உடைப்பிலே போடு. சாமராவ் நான் எப்பவாவது உன்கிட்ட ஜோக் பண்ணி இருக்கேனா? அவாளை இருக்கச் சொல்லிட்டு வந்திருக்கேன். இருக்கேன்னு சொல்லி இருக்கா. நீ அங்கேயே இரு. நான் வந்து உன்னை பிக்அப் பண்ணிக்கிறேன். நான் கேமரா கொண்டுவரேன். பிரஸ் ஆளு, அதனாலேதான் உன்னைக் கூப்பிடறேன். ரெடியா இரு. பத்து நிமிஷத்திலே வந்துடறேன்.”

டெலிபோனை வைத்துவிட்டு மூச்சு வாங்கினார்.

”என்னடி ஆச்சு இவருக்கு இன்னிக்கு?”

”இரும்மா. அப்பா என்ன பார்த்தீங்க நீங்க?”

”எங்கே கேமரா, சீக்கிரம் கொண்டு வா!”

”என்னப்பா இது?”

”நான் இத்தனை நேரம் கத்தறேனே புரியலை? வெளி உலகத்திலிருந்து சில பேர் மைதானத்திலே வந்து இறங்கி இருக்கா. நான் பார்த்தேன். கண்ணாலே பார்த்தேன். அதுக்கு உள்ளே போனேன்.”

”எதுக்கு உள்ளே?”

”அவா உருண்டையா ஒரு கப்பல்லே வந்து இறங்கினா. அதுக்குள்ளே போனேன். ஆச்சர்யம்! எங்கே இந்த ரவி? அவனையும் அழைச்சுண்டு போகலாம்.”

”என்னடிது? இந்த மாதிரி இவர் பேசினதே இல்லையே? ஏன்னா… இன்னிக்கு மாத்திரை சாப்பிட்டேளா?”

”சே! என்ன நீங்க டயத்தை வேஸ்ட் பண்ணிண்டு… நான் சொல்றதை நீங்க நம்பலையா? நான் பார்த்ததை நீங்க நம்பலையா?”

”அப்பா! நீங்க சொல்றது ரொம்பக் குழப்பமா இருக்கு.”

”குழப்பமெல்லாம் தீர்ந்தே போய்டும். நீ காரை எடு. நீங்க நம்பறது கஷ்டமாத்தான் இருக்கும். ஒரு தடவை பார்த்துட்டா தெளிவாயிடும். அதனாலதான் நான் வேகுவேகுன்னு ஓடி வந்தேன். நான் மட்டும் பார்த்துச் சொன்னா ஒருத்தரும் நம்பமாட்டா. கூட ஒரு அஞ்சாறு பேருக்குக் காட்டணும்னுட்டு… காரை எடு, காரை எடு.”

”வெங்கடேசப் பெருமாளே! இவருக்கு என்ன ஆய்டுத்து.”

”இந்தா புலம்பாதே! ரேவதி நீ இப்ப..” அவளை அவர் பார்த்த பார்வையில் அசாத்தியக் கோபம் இருந்தது.

ரேவதி முகத்தில் கலவரத்துடன் ஷெட்டை நோக்கிச் சென்றாள்.

சிட்டி கிளப் வாசலில் தொடர்ந்து ஹாரன் அடித்துப் பார்த்தும் சாமராவ் வராதிருக்க, பட்டாபிராமன் அலுப்புடன் உள்ளே சென்று சாமராவ் சீட்டாட்டத்திலிருந்து கையைப் பிடித்து இழுத்தார்.

”பட்டாபி சார், ஆர் யூ சீரியஸ்?”

”டோண்ட் பி சில்லி! கம் மேன்… நான் காட்டுறேன்.”

‘ஏதாவது ஜோக்காக இருந்தால் சொல்லிவிடுங்கள். நீங்கள் டெலிபோனில் சொன்னது பாதி புரியவில்லை. ஏதோ விண்வெளி அப்படி இப்படி என்று…”

”சாமராவ் உனக்குக் கண் இருக்கா? பார்த்தா புரியுமா! வா காட்டறேன்! இதை முதல்ல ரிப்போர்ட் பண்ணா ஓவர் நைட் யு வில் பி ரிச் மேன்! அதிர்ஷ்ட தேவதை. அவங்க காத்திருக்காங்க. வா!”

தரதரவென்று வாய் திறந்த சாமராவை காரில் தள்ளி அடைத்தார். ”ராஜரத்தினம் வந்திருகானா?”

”இருக்கார்.”

”கூப்பிடு அவனை! இரு. நானே இழுத்துண்டு வரேன். ஒரு அஞ்சு பேராவது பார்க்கலாம்…”

காரில் சாமராவ், ”மாமி என்ன இது! மாமா இப்படிப் பேசறார். கேமராவை வேற எடுத்துண்டு வந்திருக்காரே!”

”என்னமோ திடீர்னு இப்படி ஆய்டுத்து. பாயைப் பிராண்டறார். கேட்டா சிங்கம் மாதிரி சீறறார்.”

‘அம்மா சும்மா இரு. அம்மா, அப்பா எதையோ வினோதமாப் பார்த்திருக்கார். இல்லைன்னா இப்படி எல்லாம் செய்யவேமாட்டார். என்னதான்னு பார்க்கலாமே?”

”அறுபத்து அஞ்சு, அறுபத்து ஆறு வயசிலே இப்படித்தான் சித்தப்பிரமை ஆய்டும்னு பட்டு சொன்னா. அவளாம்படையான் திடீர்னு நடு ராத்திரியிலே எழுந்து கோலம் போட்டாராம்! யாராவது சூனியம் வெச்சுட்டாளா என்ன?”

”சும்மா இரும்மா! அப்பாவுக்கு அதெல்லாம் ஒண்ணும் இல்லை.”

ஆச்சர்யம் மிகுந்த ராஜரத்தினத்தைத் தரதர என்று கையில் ஷூக்களுடன் இழுத்து வந்து காரில் அடைத்து, ”ரேவதி! ஓட்டு!” என்றார் பட்டாபிராமன்.

அவர்கள் அந்த இடத்தை அடைந்தபோது சூரியன் அஸ்தமித்திருந்தான். மைதானம் துல்லியமாக இருந்தது. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை காலியாக இருந்தது. காணோம்!

பட்டாபிராமன் ”இங்கேதான். இங்கேதான்! எனக்கு நன்னா ஞாபகமிருக்கு. மூணாவது மைல் கல்லிலேதான் திரும்பினேன். இங்கேதான்… இங்கேதான்” என்றார்.

”இங்கேதான். என்ன?”

”இங்கேதான் இறங்கி இருந்தது.”

”என்ன?”

”அந்தக் கப்பல்.”

”பட்டாபி சார்.”

”வெங்கடேசப் பெருமாளே!”

”அப்பா, என்னப்பா ஆச்சு உங்களுக்கு?”

”பட்டாபி! எதுக்காக என்னை இங்கே கூட்டியாந்தேன்னு சொல்லவே இல்லையே!”

”பட்டாபி சார்! கப்பலா? விண்வெளிக் கப்பலா?”

”சூனியம்வெச்சுட்டா, சூனியம்வெச்சுட்டாளே!”

”இங்கேதான் பார்த்தேன், சாமராவ், மேலேருந்து வந்து உஷ்ஷ்ஷ்னு சத்தம் போட்டு இறங்கித்து. இரண்டு கால் வந்தது. கதவு திறந்துண்டது. இரண்டு பேர் இறங்கினா. என்னைக் கூப்பிட்டா. நான் உள்ளே போனேன். உள்ளே சேப்பு, பச்சை, மஞ்சள் எத்தனை விளக்குகள்? மிஷின் மாதிரி பேசினா, சினேகிதமா பேசினா, இன்னும் ஒரு மணி நேரம் இருக்கோம். வேற யாரையாவது கூட்டிண்டு வான்னு சொன்னா. மணி என்ன ஆச்சு? ஆறு இருவதுதானே ஆறது, அதுக்குள்ளே போய்ட்டாளா? என்னண்டை இருக்கேன்னு சொன்னாளே! இதே இடத்துல இறங்கின முத்திரை தெரியறதா பார்க்கலாம் சாமராவ் போ பார்க் கலாம். சாமராவ்… ராஜரத்தினம்… ரேவதி…” அவர்கள் நால்வரும் அவரையே பார்த்துக்கொண்டு இருந்தார்கள்.

அடுத்த சில தினங்களில் பட்டாபிராமன் மிகவும் அல்லல்பட்டார். திரும்பத் திரும்ப அவர் அன்று மாலை பார்த்த காட்சியை விவரிக்க விவரிக்க, கேட்ட ஒவ்வொருவரும் அவரை ஒருவிதமாகப் பார்க்க ஆரம்பித்தார்கள். பட்டாபியின் மனைவி அடிக்கடி ”நீங்க படுத்துக்குங்கோ, படுத்துக்குங்கோ” என்று சொல்லிவிட்டு வெங்கடேசப் பெருமாளை ரகசியமாக விளித்தாள். பட்டாபிராமன் ‘ஹிந்து’வுக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பினார். தான் பார்த்த காட்சியை விவரமாக வர்ணித்திருந்தார். அந்தக் கடிதம் பிரசுரமாகவில்லை.

அவர் தெருவில் போகும்போது அவருக்குப் பின்னே சிலர் முணுமுணுக்க ஆரம்பித்தார்கள். ”திடீர்னு இந்த ஆளுக்கு இப்படி ஆய்டுத்து, போன வாரம் வரை நல்லாத்தான் இருந்தார்… என்னவோ முனி அடிச்சிருக்கு” ரவியும் ரேவதியும் ஒரு டாக்டரை வரவழைத்தார்கள். ”சும்மா பேசுவதற்கு” என்றார். டாக்டர் அவருடன் பேசிவிட்டு வெளியே போகும்போது ”இது கொஞ்சம் சீரியஸ் கேஸ். ஷாக் கொடுக்க வேண்டும். மெட்றாசுக்கு அழைத்துக்கொண்டு போங்கள். டாக்டர் சக்ரபாணிக்கு ஒரு லெட்டர் கொடுக்கிறேன்” என்று சொன்னது பட்டாபிக்குக் கேட்டது.

ஒருவர்கூட நம்பவில்லை. பட்டாபிக்கு உள்ளூர சோகமும் மறுபடி அந்தப் பயமும் ஏற்பட்டது. இனிமேலும் இதைப்பற்றிப் பேசினால் எல்லோரும் சேர்ந்துகொண்டு தன்னைப் பைத்திய ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்துவிடுவார்கள் என்கிற பயம். பட்டாபி தன் டயரியில் ‘நான் பார்த்தேன், நான் பார்த்தேன்’ என்று நூறு தடவை எழுதி அதை ஒளித்துவைத்துக் கொண்டார்.

மத்திய சர்க்காரின் டிபார்ட்மென்ட் ஆஃப் ஸ்பேசுக்கு ஒரு கடிதம் எழுதினார். பதில் வரவில்லை. எப்பொழுதும் அதைப் பற்றி சிந்தித்தவராகச் சாப்பிடும்போதோ, பேப்பர் படிக்கும்போதோ, திடீரென்று நிறுத்திவிட்டுத் தூரப் பார்வை பார்க்கலானார். தினசரி வாக் போவதை நிறுத்திவிட்டார்.

அன்று மாலை அவர் வீட்டில் சில புதிய காரியங்கள் நடந்தன. குண்டுக் கொட்டைப்பாக்கு மாலை அணிந்து, ஒரு சாஸ்திரி வந்து கூடத்தில் கம்பளத்தை விலக்கி சுள்ளிகள் அமைத்து, நெருப்புப் பற்றவைத்து, பக்கத்தில் அனுமார் படம் வைத்து, பால், புஷ்பம், மாதுளம்பழம், ஊதுவத்தி, சாம்பிராணி எல்லாம் சேர்த்துப் புகை போட்டு மந்திரங்கள் ஓத ஆரம்பித்தார். மாடியிலிருந்து இறங்கி வந்த பட்டாபிராமன் தன் மனைவியைக் கூப்பிட்டு ”என்னடி இதெல்லாம்?” என்றார்.

”பூஜைன்னா!”

”என்ன பூஜை? எதுக்குப் பூஜை?”

”அனுமார் பூஜை. காத்துக் கருப்பு அண்டாம இருக்கறதுக்கு.”

”ஒரு தாயத்துப் போட்டுண்டா உங்களைப் புடிச்ச ப்ரம்மஹத்தி விலகிப்போய்டும்.”

சாஸ்திரி அவரைச் சந்தேகப் பார்வை பார்த்துக்கொண்டு மந்திரம் ஓதிக்கொண்டு இருந்தார்.

”யாருக்கு ப்ரம்மஹத்தி? எனக்கு ஒண்ணும் இல்லை. உங்களுக்கு எல்லாம்தான் ப்ரம்மஹத்தி! உனக்கு, ரேவதிக்கு, ரவிக்கு, ராஜரத்தினத்துக்கு, சாமராவுக்கு, இந்தக் குடுமி சாஸ்திரிக்கு…”

சாஸ்திரி, ”மாமி கைல கண்டதை எடுத்து அடிச்சுறப் போறார். தள்ளி வாங்கோ” என்றார்.

பட்டாபிராமன், சாஸ்திரியைக் கூடம் பூராவும் ஓட ஓடத் துரத்த, அவர் கச்சம் அவிழ்ந்துபோய் வெளியே ஓட, வீட்டு வாசலில் பெரிய கூட்டம் கூடிவிட்டது.

மாடிக்குச் சென்ற பட்டாபிக்கு உடல் நடுங்கியது. ”என்னை நானே அழித்துக்கொள்ளக் கூடாது. இவர்கள் எல்லோரும் சேர்ந்து என்னைப் பைத்தியமாக அடிக்கிறார்கள். எதனால்? நான் அந்தச் சம்பவத்தைப்பற்றிப் பேசுவதால். பட்டாபி மறந்து போ! சாதாரணமாக இரு. இயல்பாக இரு. அதைப்பற்றிப் பேசவே பேசாதே. நினைக்காதே.”

பட்டாபி தன் மப்ளரைக் கழுத்தில் சுற்றிக்கொண்டார். கான்வாஸ் ஷூக்கள் அணிந்துகொண்டார். கைத்தடியை எடுத்துக்கொண்டார். கீழே மனைவியும் பெண்ணும் பயந்து நிற்க, எப்போதும் செல்வது போல ”ரேவதி! நான் வாக் போய்ட்டு வரேம்மா” என்று சொல்லிக்கொண்டு பத்து நாளாக விட்டுப்போன தன் சாயங்கால வாக்கிற்குக்கிளம்பி விட்டார்.

இயல்பாக நடந்து சென்றார். எவரையும் பொருட்படுத்தவில்லை. எப்போதும் போல் மூன்றாவது மைல் கல்லில் திரும்பி, அந்தப் புல்வெளியில் நடந்தார். சற்று நிம்மதி ஏற்பட்டது. இந்த இடத்தில்தான். இதே இடத்தில்தான். போன வாரம் அது வந்து இறங்கியது. சே, அதைப் பற்றி நினைக்காதே! பொய், பார்த்தது பிரமை. அது ஒரு மாயக் காட்சி, மறந்து போ! மறந்து போ!

அப்போது வானத்தில் விஷ் என்று சத்தம் கேட்டது. பட்டாபி திகைத்து மேலே பார்த்தார். அதேதான்! அதே கோளம். தனக்குத்தானே சுற்றிக்கொண்டு அவருக்கு எதிரே முன்னூறு அடி தூரத்தில், புல்வெளியில் இறங்கியது. முன் போல் அதில் கதவு பிரிந்து ஒரு ஏணி இறங்கி ஒரு ஃபவுண்டன் பேனா வடிவில் ஓர் ஆசாமி குதித்துக் குதித்து இறங்கி, ”பூமி மனிதரே வணக்கம்! இங்கே வாருங்கள்!” என்றது.

பட்டாபி திரும்பிப் பார்க்காமல் அந்த இடத்தைவிட்டு ஓடினார்!

——————————————————————————————-

இந்தக் கதை சுஜாதாவின் விஞ்ஞானச் சிறுகதைகள்
தொகுப்பில் 30-வது கதையாக இடம் பெற்றுள்ளது.
எழுதிய வருடம் : 1984

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *