இரும்பு பட்டாம் பூச்சி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: அமானுஷம்
கதைப்பதிவு: February 14, 2016
பார்வையிட்டோர்: 43,932 
 

இரவு மணி 2

ஊசி குத்துவது போல உடலுக்குள் புகுந்து வெளிவந்து கொண்டிருந்தது குளிர்…எங்கும் இருட்டு… ஷிப்ட் முடிந்து சாப்பாட்டு பேக்கும் , சின்ன டார்ச்சுமாக, வீடு நோக்கி நடக்க துவங்கியிருந்தான் செல்வராஜ்….உடன் வந்த சிலர், அவரவர் பாதையில் பயணிக்க, செல்வராஜ் வீடு இருக்கும் பகுதிக்கு, அவன் மட்டுமே செல்லும் தனி காட்டு ராஜாவின் பயணம் அது… அந்த ஏரியாவில் இருந்து அவன் மட்டும் தான் நைட் ஷிப்ட் வேலைக்கு வருகிறான்…

நண்பர்கள் உடன் வந்த வரை குளிர் வெறுங்குளிராக இருந்தது….அவரவர் கலைந்து தனியாக நடக்க ஆரம்பிக்கையில், குளிர் வெவ்வேறு ஞாபகங்களை நடுங்கிக்கொண்டே ஞாபகப்படுத்திக் கொண்டிருந்தது…..

“செல்வராசு, உங்க தாத்தா ஒரு முறை இதே மாரிதான், நைட் வேல முடிஞ்சு ஒத்தையா வந்தாக… அப்போ , அத்தனை அழகா ஒரு பொண்ணு, மல்லிகை பூவும், செண்டு வாசனையுமா ஜல்லு ஜல்லுனு, நடந்து போயிருக்கா …. இவுகளுக்கு ஒரே டவுட்டு…யார்டா, நமக்கு தெரியாம இவ்ளோ அழகா நம்மூர்ல ஒருத்தின்னு, அவள நெருங்க, வேக வேகமா நடந்துருக்காக….

அவளும், தொனைக்கு ஒரு ஆள் இருந்தா நல்லது தானன்னு நெனைச்சாலோ என்னவோ, நடந்தவ, கம்முனு நின்னுருக்கா… கிட்ட போன இவுக, ஏய் , ஏய்… பொண்ணு, யாரு இந்த நேரத்துல…. அப்டீன்னு சொல்லிட்டே அவள தாண்டி முன்னால போய் நின்னுருக்காக … அவ்ளோதான், மனுஷன் நடுங்கி, பேச்சு வராம, தலை தெறிக்க ஓடி வந்து பத்து நாள் ஆஸ்பத்திரில கிடந்து செத்து பொழைச்சாக..ஏனா ……..?

அந்த அழகிக்கு பின்னாலதான் பொம்பள ஒடம்பு…. முன்னால வெறும் ஓட்டை…….”

நினைவுகளை என்ன செய்தும் அடக்க முடியவில்லை…. அவைகள் தன் பேய் கைகளையும், கால்களையும்,நாக்கையும் நீட்டி ஞாபகங்களை கிளறியபடியே இருக்க, செல்வராஜுக்கு கால்கள் நடுங்க தொடங்கின…காற்றும் குளிரும் புதுக்கதைகள் சொல்லிக்கொண்டிருந்தன…. ஒற்றையடி பாதை.. ஒரே ஒரு வெளிச்சம் .. தூரத்தில் மினுங்கிக்கொண்டிருக்க…… திக் திக் இன்னும் அதிகமானது…ஏழாம் நம்பர் முக்கில் ஒற்றை தீபம் எரிகிறதென்றால், ஐயோ , கடவுளே……. என்ன செய்வேன்…..

இன்று யாரோ ஒருவருக்கு பேய் ஓட்டியிருக்கிறார்கள்..அதனின் தொடர்ச்சி தான் இந்த ஒற்றை விளக்கு….நடை தாறுமாறாக போனது. நினைவுகளும் தான்…. ஒரு முறை கறி வாங்கி வந்த மாமாவை வீடு வரை விரட்டி வந்து மிரட்டிய மோகினியின் கதையும் ஞாபக கிணற்றில் இருந்து பூதமாக கிளம்பியது…. பேசாமல் பின்னால் திரும்பி பேக்டரிக்கே போய் விடலாமா…..

யோசித்தவன் சட்டென திரும்பும் யோசனையை கைவிட்டான்… செல்வராசு, எப்பவுமே, நைட் நேரத்துல தனியா நடக்கறப்போ, சட்டுன்னு திரும்பி பாத்திரக்கூடாது, கொள்ளிவாய் பிசாசு பின்னால வந்தாலும் வரும்.. ஏன்னா இந்த பூலோகம் மனுசங்களுக்கு மட்டும் படைக்கல…. அமானுஷ்ய சக்திகளுக்கும், பில்லி சூனியத்திற்கும், மொட்ட மோகினிகளுக்கும், சங்கிலி முனிகளுக்கும், ரத்தக்காட்டேரிகளுக்கும் சேர்த்தே படைக்கப்பட்டது தான்….

பாட்டியின் குரல் பாடாய் படுத்தியது….. ஆனால் அவளே ஒரு தப்பிக்கும் யோசனையும் சொல்லியிருந்தாள்…. ஒருவேளை பேயிடம், அது எந்த பேயாக இருந்தாலும், மாட்டிக்கொண்டால் கால் பெரு விரல் கொண்டு,நின்றபடியே உன்னை சுற்றி ஒரு வட்டம் வரை.. வட்டம் தாண்டிய பேய்களை ரத்தம் கக்க செய்யும் சக்தி அந்த வட்டத்திற்கு உண்டு…அது சூரியனை பிரதிபலிக்கும் மந்திரம். கொஞ்சம், தைரியம் வந்தது. கடைசி ஆயுதம் கொண்டு எப்படியும் உயிரைக் காப்பாற்றி விடலாம் என்ற நம்பிக்கை துளிர் விடும் போது, ஊர்க்கோடி முக்கை தாண்டும் மணித்துளி…..உறைந்து விடத் துடிக்கும் காலமும் உடலும், கரைந்து காணாமல் போக துடிக்கும் உயிரும் உலகமும்.. பார்க்காமல் இருக்க முடியவில்லை. கடைக்கண்ணில் தொடக்கி, நன்றாகவே பார்த்து விட்டான்.ஆம், கண்டிப்பாக சற்று முன் நடந்த மந்திர தந்திர வேலைக்கான அத்தனை சாட்சியும், கொத்து முடியோடு, எலுமிச்சை மாலையோடு, ஒற்றை விளக்கு பல் காட்டி சிரித்தது….இதய துடிப்பை துல்லியமாக கேட்க முடிந்தது…..நெஞ்சை ஒரு கையால் பிடித்தபடியே, வேக வேகமாய் நடந்தான்…..

பின்னால் வரும் ஒருவரை அல்லது ஒன்றை அவனால் உணர முடிந்தது அல்லது உணருவது போல ஒரு நம்பிக்கை அல்லது அவ நம்பிக்கை.. திரும்பி பார்க்க கூடாது.. நடையை கூட்டினான்…முன்னால் ஒரு பனிமூட்டம் விலகி கொண்டே இருப்பது போன்ற உணர்வு.. பாட்டியின் கதைகளில் ஒன்றாக இருக்கட்டும் என்றே வேண்டிக்கொண்டான்….பன்றிகளின் சத்தமும், சேவல்களின் கத்தலும், பனி விழும் இரவை பறையடித்து எழுப்பிக்கொண்டிருந்தது…..

தட்டினான்…தட்டினான், தட்டி…..

அதான் வரேன்ல, என்ன அவசரம் என்றாள் அம்மா, கதவை திறந்தபடியே…..

உனக்கென்ன தெரியும், சாமத்துல தனியா நடந்து பாரு .. என்றபடியே….

அப்பாடா…. என்ற பெருமூச்சுடன் உள்ளே புகுந்தவன் கதவை வேகமாய் அடைத்தான்…. அதற்குள் அம்மா அவளின் அறைக்குள் புகுந்திருக்க…. கடவுளுக்கு நன்றி சொல்லி கை கூப்பி கும்பிட முனைகையில், யாரோ கதவை தட்டினார்கள்..

சட்டென கதவு நோக்கி திரும்பியவன் கதவின் தட்டப்படும் அதிர்வையும் அதிர்வுக்கு தகுந்தாற்போல முன் பின் தன்னை தளர்த்தும் தாள்பாளையும் வெறித்துப்பார்தபடியே….

திக் திக், பக், பக், லப் டப்,லப் டப், லபக் லபக்…….

எச்சில் விழுங்கி கொண்டே வராத வார்த்தைகளை இடுக்கி போட்டு இழுத்து “யா…….ரு…… யாருங்க ……..” என்றான் மெதுவாக……
கதவு தொடர்ந்து தட்டப் பட்டுக் கொண்டே இருக்க, ஒரு தைரியத்தை வரவழைத்துக் கொண்டவன், எல்லா சாமிகளையும் வேண்டிக் கொண்டு தாழ்பாளை தொட முனைந்தான்…

கரகரப்பான குரலில், “செல்வராசு, இன்னைக்கு தப்பிச்சிட்ட… மாட்டுவ…. ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்……………………………….” என்று ஒரு அணத்து அணத்தி விட்டு அடங்கியது கதவுக்கு பின்னால்…..

அடுத்த நொடி……. செல்வராஜ்… அம்மா அறையில் கிடந்தான்.. பேச்சு மூச்சு இல்லை, நடுக்கம்…..நடுக்கம்…..நடுக்கம்…….நடுக்கம்…….. நிலை குத்திய பார்வையில் பேய்கள் நிறைந்து கிடந்தன……

“உங்களோட, அல்லது உங்க பாட்டி சொன்ன கதைகளுக்கான, அன்றைய கிளைமாக்ஸ் தான் உங்க பின்னால வந்ததா நீங்க நம்பர,அந்த பேய்.. கதவை தட்டினதும், வசனம் பேசியதும். ஏன்னா, கதவு தட்டப்பட்டதும், வசனம் பேசியதும் உங்களுக்கு மட்டும் தான் கேட்டிருக்கு… அதே வீட்ல இருந்த உங்க அம்மாக்கு கேக்கல…அப்போதான் கதவ திறந்த உங்க அம்மா அதுக்குள்ள தூங்கியிருக்க முடியாது….ஆக, உள்ளுக்குள்ள இருந்த பேய் பயம் கை கால் முளைச்சு, சரியான நேரம் பார்த்து தன்னை வெளிப் படுத்தியிருக்கு.. எதுக்குமே ஒரு முடிவு வேணும் இல்லையா…அந்த முடிவு தான் கதவுக்கு பின்னால பேய் பேசினதா நீங்களே கற்பனை பண்ணிகிட்ட அந்த கிளைமாக்ஸ் சீன் ….பூமி தோன்றின காலத்துல இருந்து எத்தன பேர் தற்கொலை பண்ணியும், கொலை செய்யப்பட்டும், விபத்துகளாலும் செத்து போயிருக்காங்க.. உங்க கருத்துப்படி,அவுங்க அத்தன பேரும் பேயா சுத்தராங்கனு எடுத்துக்க முடியமா….மனித உடல் என்பது ஒரு இயந்திரம்…. இதயமே அதனின் பிரதான இயங்கு சக்தி.. அதன் இயக்கம் நிற்கும் போது அந்த இயந்திரம் நின்று விடுகிறது.. அணுக்கள் அதற்கு மேல் தன்னை தற்காத்து கொள்ள இயலாமல் மெல்ல மெல்ல அழியத் துவங்குகிறது….அதுவரை இருந்த ஞாபங்கங்கள் மறையத் துவங்குகையில் அதை மரணம் என்கிறோம் . மாண்டவரை புதைக்கவோ, எரிக்கவோ செய்து விடுகிறோம்…

ஒரு பிரிந்த உயிர் வேறு ஒருவரை பிடிக்கும் என்றால், ஏன் அது தன்னுடைய உடலையே மீண்டும் பிடிப்பதில்லை?….”

மனோதத்துவம், தத்துவங்களில் கொஞ்சம் கொஞ்சமாக செல்வராஜுக்கு தன்னம்பிக்கை முளைக்க ஆரம்பித்திருந்தது… உடல் நலமும், மன நலமும் தேறிக் கொண்டு வந்தது.பேயே முன்னால் வந்தாலும், உட்கார்ந்து நலம் விசாரிக்கும் அளவுக்கு மனம் திடமாகி இருந்தது. இன்னும் சொல்லப் போனால் பேய்களின் உலகம் பற்றிய ஆர்வம் மேலோங்கி இருந்தது. அது நிஜமா , கற்பனையா என்பதை அறிந்து கொள்ளும் ஆர்வம் ஏற்பட்டு இருப்பதை ஆக்கப்பூர்வமாக எடுத்து கொண்டான் …

ஒரு வாரத்திற்கு பின்……
ஒரு விடுமுறை நாள்…..

ஆற்றில் தூண்டிலிட்டு அமர்ந்திருந்தான், தனிமையில் தவம் செய்வது போல.. கானல் நீரால் காட்சி பிழைகளை சுமந்து கொண்டிருந்த கண்களை ஒரு முறை கசக்கி கொண்டான். தூண்டிலில் சட்டென கூடிய கனத்தை உணர்ந்தபடியே, தண்ணீருக்குள் உற்று பார்த்தான்…கண்கள் மூடிய நிலையில் ஒரு பெண்ணின் முகம். தாமரை பூவாய் மலர்ந்து மிதந்தது. இன்னும் ஆழமாக பார்த்தான். அவனுள் பயம் துளியேனும் இல்லை. யாரிவள், வெறும் முகத்தோடு மிதக்கிறாள்… என்றபடியே அவளை வெளியே இழுக்கும் முயற்சியில் நீரில் கை வைக்க, சட்டென கண்கள் திறந்து மெல்ல மூழ்கி போனாள் …..

ஒருவேளை தேவதை என்பவள் இப்படித்தான் இருப்பாளோ… அல்லது மோகினியா….. அப்பப்பா…… எத்தனை அழகு….. பேய் அழகு என்பது இது தானா ………கற்கண்டு கண்கள், ஒற்றை மூக்குத்தியில் உயிரை இழுக்கும் உத்சவம், நெல்லிக்கனி அடக்கிய கன்னங்களில் கள் எடுக்கும் தண்ணீர்…..மிதக்கும் இலை ஒன்று, தடவி தந்த முத்தத்தில் பூத்திட்ட இதழ்களா? நெளிந்த அலையில் நிலவென்று எண்ணத் துடிக்கும் நெற்றியில் கற்றை முடி ஒதுக்கிய அலையை என்ன சொல்ல….. பேயாய் இருந்தாலும் அவளை அறியாமல் விட முடியாது…….

மறுநாளும் காத்திருந்தான்….

முகமோடு உடலும் நனைத்திருந்தது. இரு மலை கட்டிக்கொண்டு மிதந்தாளோ, கொடி என்று வளைத்து பிடித்து கரையில் இழுத்து போட வாய்ப்புள்ள இடை கொண்டவள்… தொடை வரை மேல் ஏறிய புடவையில் சூரியனின் வெளிச்சமென வண்ணம் என அறிந்த கண்ணில் காதல் கசிய, காமம் நிறைந்தது…….
யாரிவள்….

கண்ணதாசனின் கோப்பைகளில் நிறைந்தவளா… பல்லவன் சிற்பத்தை கடத்தி செல்கையில் தடுமாறி தண்ணீரில் விழுந்திட்ட பொற்சிலையா?
தூண்டில் போட்டவனே அகப்பட்டுக் கொண்ட கவித்துவம்…. ஆம் துடிக்கத்தான் செய்கிறான்….. தூண்டிலிட்டவன்…..

பெயர் என்ன?

சிரித்தபடியே மூழ்கி போனாள் ….

விடிய காத்திருந்தான் செல்வராஜ்…
விடிந்ததும் காத்திருந்தாள் கனகா…

சுற்றும் முற்றும் பார்த்தான்.. அனல்காற்று நீர்ப்பரப்பின் மேலெங்கும் மினுமினுத்தது. கண்ணுக்கெட்டும் தூரம் வரை ஆறும், ஆறு சார்ந்த காலமும். சூடான காற்றும், சுவையான காட்சியும்…

நெருங்கினான். நெருங்கினான்..

ஆம், முகம் காட்டியவள் இன்று முழுதும் காட்டிக் கொண்டு, அவன் அமரும் இடத்தில் அமர்ந்தவண்ணம் காத்துக்கொண்டிருந்தாள்..உற்று நோக்கின் அது ஒரு ஓவியமெனவே தோன்றும். ஓவியத்திற்குள் சில நேரம் நுழைந்து விடும் ஓவியனைப் போல, அவன், அவளருகே அமர்ந்தான். முழுமையான ஓவியம்… காண ஆளில்லாமல் கரையோடு காற்றில் நிறைந்து கிடந்தது…..

அவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள்…. தூண்டிலுக்கு வேலை இல்லை..

மீன்கள் வாழ்த்தி சென்றன …முகமும் முகமும் பார்த்துக் கொண்டேயிருக்க அங்கே யுகங்கள் கடக்க தயாராயின, ஒரு காதலும் காதலால் நிரம்பிய காமமும்…..
மிதந்து கொண்டிருந்த தூண்டிலை மெல்ல தடவிப் பார்த்த மீன் ஒன்று விசும்பிய படியே சில நினைவுகளை அசை போடத் துவங்கியது…..

மார்பில்லாதவள், என்ற கேலியும் கிண்டலும், தாழ்வு மனப்பான்மையின் உச்சிக்கு இழுத்துக் கொண்டு போய் தற்கொலையில் விழ செய்த கதையை ஊர் அறியும்….. கனகா, பிணமான விதமும் மூன்று நாள் கழித்து மிதந்த கணமும் நான் அறிவேன்……

அழகுக்கும் அன்புக்கும் ஏங்கிய கனகாவின் கனவை யாரறிவார்?

மீன் நீந்தியபடியே நினைத்துக் கொண்டு மறைந்தது……..

இக் கதையை நன்கு அறிந்த நான் ஒன்று சொல்கிறேன்…..

ஆஸ்பத்திரியில் இருந்து வெளியே வந்த செல்வராஜ், அன்றே அவனின் மாமா வீட்டிற்கு சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டான்…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *