அமாவாசை இரவில்..!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: அமானுஷம்
கதைப்பதிவு: October 25, 2016
பார்வையிட்டோர்: 45,549 
 

நான் நகரத்தின் நெரிசலை கடக்கும் போது வழக்கத்தை விட நேரமாகியிருந்தது. எல்லாம் என் மனைவியால் தான்! வீட்டிற்கு சென்றவுடன் தெளிவாக (சற்று காட்டமாகவும் தான்) சொல்லிவிட வேண்டும் இது எனக்கு சரிவராது என்று! பின்னே அவனவன் ஆபீஸ் முடிந்து அலுத்து சலித்து வந்தால் இவளது நாயை ஆஸ்பதிரிக்கு கூட்டிச்செல்ல வேண்டுமாம்!

என் வீடு நகரத்தை விட்டு சற்று தள்ளி ஒரு பதினைந்து கிலோமீட்டர் தூரத்தில் இப்போது தான் வளர்ந்து வரும் குடியிருப்புப் பகுதியில் இருந்தது. ஆறு மணிக்கு அலுவலகத்தை விட்டு கிளம்பினால் நகர நெரிசலை தாண்டி நான் வீடு போய் சேர ஏழரை ஆகிவிடும். இதில் இன்று இந்த நாய் வேலை வந்து இப்போது மணி ஒன்பதை நெருங்கிக்கொண்டிருந்தது.

எனக்கு பொதுவாகவே நாய்கள் அவ்வளவாக பிடிக்காது. அதிலும் வீட்டில் பிராணிகள் வளர்ப்பது அறவே பிடிக்காது. என் மனைவி எனக்கு நேர் எதிர். நாய் பூனை என்று ஒன்றையும் விடமாட்டாள். இத்தனை நாளாக அவளது நாய் ஆசைக்கு தடைபோட்டு வந்தேன். ஆனால் என்றைக்கு ஊருக்கு வெளியில் வீடுகட்டி குடிவந்தோமோ அன்றே துவங்கிவிட்டாள், அக்கம்பக்க்ம் வீடு கிடையாது அங்கொன்றும் இங்கொன்றுமாய் தான் வீடுகள், எனவே வீட்டின் பாதுகாப்பிற்கு நாய் வேண்டுமென்று! வசமாக மாட்டிக்கொண்டுவிட்டேன். அவள் வீட்டில் தனியாக இருக்கிறாள்! இப்போது மறுத்தால் அவள் பாதுகாப்பில் அக்கறையில்லாதது போலல்லவா ஆகும்! சரி என்றுவிட்டேன், வேறு வழி?. ஆனால் வீட்டில் அது வளர்கிறதே தவிர நான் அதை அதிகம் கண்டுகொள்வதில்லை. இன்று அதற்கும் வேட்டு! எதோ தடுப்பூசி போடவேண்டுமாம், ஆஸ்பதிரிக்கு அழைத்துச்செல்லவேண்டும் என்றாள்! நீண்ட நேர வாக்குவாதத்திற்குப் பிறகு வழக்கம் போல் அவள் தான் வென்றாள். காலையே என்னுடன் அதை அழைத்து சென்று, என் அலுவலகத்தின் அருகில் இருக்கும் அவள் தோழி வீட்டில் விட்டுவிட்டு மாலை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று திரும்புவது என்று முடிவானது.

பசி வயிற்றை கிள்ளியது. எல்லாம் இந்த நாயால் தான். திரும்பி அதை ஒரு முறை முறைத்துவிட்டு காரை வேகமாக செலுத்தினேன். இப்போது என் கார் நகரைத் தாண்டி இருபுறமும் புளிய மரங்கள் சூழ்ந்த சாலையில் சென்று கொண்டிருந்தது. இன்னும் இருபது நிமிடங்களில் ஆங்காங்கே வீடுகள் தெரிய எங்கள் குடியிருப்பு வந்துவிடும்.

‘சடக்’ வண்டி ஒரு குலுங்கு குலுங்கி நின்றது.

அட இதுவேறா? மீண்டும் ஸ்டார்ட் செய்ய முயன்றேன். ம்ஹூம்! ஒரு முறை உறுமிவிட்டு அமைதியானது. அடுத்தமுறை உறுமல் கூடயில்லை. இறங்கி சென்று பானட்டை திறந்து பார்த்தேன். எனக்கு தெரிந்த சொற்ப விசயங்கள் சரியாக இருப்பது போல் தான் தெரிந்தது. மீண்டும் ஒரு முறை முயன்று பார்த்தேன். பயனில்லை. வேறு வழியில்லை நடராஜா சர்வீஸ் தான்! காரை லாக் செய்துவிட்டு திரும்பினேன். காரின் விளக்கு அணைந்தபின் தான் இருள் உறைத்தது. என்ன இவ்வளவு கும்மிருட்டாயிக்கிறதே என்று யோசனையோடு நாலடி நடந்தபின் தான் அன்று அமாவாசை என்று நினைவு வந்தது! அடக்கடவுளே! மீண்டும் காருக்கே செல்வோமா என்று தோன்றியது. வேண்டாம் எப்படியும் சிறிது தூரம் சென்றால் குடியிருப்பு பகுதியில் தெருவிளக்குகள் இருக்கும். தைரியமாக நடையை துவங்கினேன். அடடே! சற்று தூரம் சென்ற பிறகு தான் நாயை காரில் விட்டது நினைவு வந்தது. இவ்வளவுக்கும் காரணம் அந்த சனியன் தான். இந்த இருளில் திரும்பி சென்று அதை அழைத்துக்கொண்டு செல்லவேண்டுமா? காலை பார்த்துக்கொள்ளலாம் என்று முடிவெடுத்து முன் வைத்த காலை பின் வைக்காமல் நடையைத் தொடர்ந்தேன். இருளிற்கு கண்கள் ஓரளவிற்கு பொருந்தியிருந்தாலும் அதிக பயனில்லை. குத்துமதிப்பாகத்தான் நடக்க வேண்டியிருந்தது. மொபைல் போன் வெளிச்சத்தில் நடக்கலாமே! அட இவ்வளவு நேரம் இது தோன்றாமல் போனதே என்று எண்ணியவாறு பாக்கெட்டை தொட்டவுடன் தான் போனை காரிலேயே விட்டது நினைவு வந்தது! கையில் போனில்லை என்றவிடன் உள்ளே எச்சரிக்கை மணி அடித்தது. திரும்பி சென்று எடுக்கலாமென்று திரும்பினால் எவ்வளவு தூரம் வந்திருக்கிறேன் என்று தெரியவில்லை. காரை சரியாக சென்றடையாவிட்டால் என்ன செய்வது என்ற யோசனையில் முன்னும் பின்னும் திரும்பியதில் இப்போது முன் செல்லும் பாதை எது வந்த வழி எது என்பதே குழம்பியது! இருளில் இந்த குழப்பமும் சேர்ந்து கொள்ள சட்டென்று வியர்த்துவிட்டது. இப்படி இங்கேயே நிற்பதால் பயனில்லை என்று ஒருவாறு தைரியத்தை வரவழைத்துக்கொண்டேன். ஏதாவது ஒருபுறம் நடப்போம் வீடு வந்தால் சரி, இல்லையேல் காரை அடைந்தால் காரிலேயே இரவை கழித்துவிடலாம் என்று முடிவெடித்துக்கொண்டு பின்புறம் திரும்பி நடந்தேன்!

எதை எதையோ யோசித்துக்கொண்டு நடக்க, திடீரென்று எனக்கு அந்த உணர்வு ஏற்பட்டது! என்னை யாரோ தொடர்வது போல்! சே! மை இருட்டில் தனியாக நடந்தால் இது மட்டுமா தோன்றும் என்று எண்ணி அந்த உணர்வை அலட்சியம் செய்ய முயன்றேன், ஆனால், அது இன்னும் வலுபெற்றது. நான் மட்டும் தனியாக இல்லாதது போல் ஒரு உணர்வு. “யாரது” என்றேன். என் குரல் எனக்கே பாவமாக கேட்டது. சுற்றி நிசப்தம். இரவின் குளிரிலும் எனக்கு லிட்டர் லிட்டராக வியர்த்தது. இந்த இரவில் தனியாக நடக்க முடிவெடுத்தது பெரிய பிசகு! குறைந்தபட்சம் அந்த நாயையேனும் அழைத்து வந்திருக்கலாம். இப்போது அதெல்லாம் யோசித்துப் பயனில்லை. சட்டென்று நடையை நிறுத்தி பின்புறம் திரும்பிப்பார்த்தேன் இருளில் ஏதேனும் வடிவம் கூடவா தெரியாது? ஒன்றுமில்லை. ஒருவேளை இது நம் கற்பனைதானோ என்று தேற்றிக்கொண்டு இன்னும் வேகமாக நடந்தேன்.ஆனால் அந்த உணர்வும் தொடர்ந்தது. அதற்கு காரணமும் விளங்கியது. ஏதோ ஒரு ஓசை! நடையின் வேகத்தை கூட்டிக்கொண்டே உற்று கவனித்தேன். அது மனிதனின் காலடி ஓசைபோல் தோன்றவில்லை.அதை எனக்கு விவரிக்கத்தெரியவில்லை. ஆனால் அந்த ஒலி என்னை தொடர்ந்தது. என் இதயம் இப்போது இருமடங்கு அடித்துக்கொண்டது. கிட்டத்தட்ட வியர்வையில் குளித்திருந்தேன். எனக்கு இதுவரை அமானுஸ்ய விசயங்களில் நம்பிக்கை கிடையாது. ஆனால் அவரவரே அனுபவிக்காத வரை எவரும் நம்புவதில்லை என்று என் அம்மா சொல்லுவாள். யார் யாரோ சொன்ன திகில் விசயங்களெல்லாம் அனியாயமாய் நினைவுவந்தது. ஒருவேளை ‘அது’ எல்லாம் உண்மை தானோ என்று எண்ணும்போதே முதுகுத்தண்டு சில்லிட்டது! இத்தனை யோசனையிலும் நான் நடையை நிறுத்தவில்லை. கால்கள் வலியெடுக்க மூச்சுவாங்க சற்று நின்றேன்.அப்போது தான் அது நிகழ்ந்தது! என் முதுகில் ‘எதுவோ’ சட்டென்று மோதியது!

அவ்வளவுதான் இழுத்துப்பிடித்திருந்த தைரியமெல்லாம் பறக்க தலைதெறிக்க ஓடத்துவங்கினேன். ஒரு யுகமாய் தோன்றிய ஓட்டத்திற்கு பின் சட்டென்று தொலைவில் எங்கள் குடியிருப்பின் தெருவிளக்குகள் தூரத்து வெளிச்சமாய் கண்ணில் பட்டது. திரும்பிப்பார்க்கலாமா என்று ஒரு கனம் தோன்றினாலும் பயம் வென்றது. வெளிச்சத்தை அடையும் வரை திரும்பிப் பார்ப்பதில்லை என்ற உறுதியோடு இன்னும் வேகமாக ஓடினேன். நான் ஒளியை நோக்கி பாதி தூரம் கடந்திருந்த போது சட்டென்று எல்லா விளக்குகளும் அணைந்துபோனது! பவர் கட்! எனக்கு மயக்கமே வந்துவிடும் போலிருந்தது. இத்தனையும் சொல்லி வைத்தாற் போல ஒன்றாக நடக்கிறதென்றால் தற்செயலாய் நடப்பதாக தோன்றவில்லை! ஏதாவது ஒரு வீட்டை அடைந்துவிட மாட்டோமா என்ற பிரயாசையில் நிற்காமல் ஓடினேன்! அதை மனதில் வைத்து ரோட்டை விட்டு இறங்கி குறுக்கில் ஓடினேன்! சற்று தூரத்தில் எதிலோ இடித்து கீழே விழுந்தேன் தெரு விளக்கு கம்பம் போலும். கரன்ட் வந்துவிடக்கூடாதா என்று வேண்டிக்கொண்டு தொடர்ந்து ஓடினேன். இவ்வளவிலும் ‘அது’ விடாமல் துரத்துவதை என்னால் உணரமுடிந்தது. என் உடல் தளர்ந்துக்கொண்டே வருவது தெரிந்தது. உதவி என கத்தலாமா என்று முயன்றேன். தொண்டையைத் தாண்டிக் குரல் வரமறுத்தது. ஐயோ வேகம் குறைகிறதே என்று எண்ணிக்கொண்டிருக்கும் போதே நான் கீழே விழுந்தேன். என் மீது ‘அது’ விழுந்து என்னை அமுக்கியது! தப்பிக்க முயற்சி செய்யென்று மூளை சொன்னது. ஆனால் உடல் ஒத்துழைக்க மறுத்தது! என் கழுத்துப்பக்கம் எதுவோ கிழிப்பது தான் கடைசியாய் நினைவிருந்தது.

யாரோ என்னை உலுக்க மெதுவாக கண்ணை திறந்தேன். வெளிச்சம் கண்களை கூசியது! விழிகளை இறுக மூடி மீண்டும் திறந்தேன். என்னை சுற்றி கூட்டம். என்னைக் காப்பாற்றிவிட்டார்களா? என் மனைவிக்கு சொல்ல வேண்டுமே என்று பதறுவதற்குள் அருகில் என் மனைவி தெரிந்தாள். அழுத விழிகளோடு என்னை முறைத்தாள். பாவம் பயந்துவிட்டிருப்பாள். உயிரோடு இருப்பது வேறு ஆச்சரியமான இன்பமளிக்க, “சுபா..” என்று என் மனைவியின் கைகளைப் பற்ற போனேன். சட்டென்று கையை தட்டிவிட்டு கோபமாகக் கேட்டாள், “என்னாச்சு உங்களுக்கு? ஏன் இப்படி நம்ம வீட்டு வாசல்ல படுத்திருக்கிங்க?” என்று.

“என்னது?” அதிர்ந்துபோய் அருகில் நின்றவரை விலக்கிவிட்டுப் பார்த்தேன். என் வீட்டின் கேட் இரண்டடி தொலைவில் இருந்தது.

“ராத்திரியெல்லாம் கரன்ட் இல்ல உங்கள வேறக் காணோம் நான் தனியா கொழந்தைய வச்சுக்கிட்டு தவிச்சுப்போயி உங்க ஃப்ரெண்ட்ஸ்கெல்லாம் போன் பண்ணிகிட்டு உக்காந்திருக்கேன். நீங்க என்ன பண்ணிட்டு இப்படி ரோட்டுல விழுந்து கிடக்கறிங்க? கார எங்க விட்டிங்க?” என்று பொறிந்துத் தள்ளினாள்.

இவள் இப்போது என்ன சொல்ல வருகிறாள்? அடிப்பாவி ரோட்டில் விழுபவர்களெல்லாம் குடித்துவிட்டு தான் விழவேண்டுமா? சுற்றி இத்தனைப்பேரிருக்க என்ன பேச்சுயிது? வேகமாக நடந்ததை விளக்கிவிடும் நோக்கத்தில் நான் பேச முற்பட்டபோது ஏதோ தோன்ற என் பக்கத்தில் பார்த்தேன். என் மனைவியின் நாய் கண்களை மட்டும் நிமிர்த்தி என்னைப் பார்த்தது!

சட்டென்று எனக்கு எல்லாம் புரிந்தது. இந்த நாய்க்கு பயந்துதான் நான் நேற்று இரவு தலைத்தெறிக்க ஓடியிருக்கிறேன்! இதை காரில் அல்லவா விட்டேன்? ஒருவேளை நான் பானட்டைத் திறந்து ஆராயும் பொழுதே இதுவும் இறங்கியிருக்க வேண்டும். அது தெரியாமல்.. சே!

“விடும்மா! உள்ள கூடிட்டுப் போ!” என்று சமரசதுக்கு வந்தார் பக்கத்துவீட்டுக்காரர்.

மௌனமாக எழுந்து உள்ளே சென்றேன். கழுத்துப்பக்கத்தில் நாயின் நகம் கீறிய இடம் வலித்தது!

[ பின்குறிப்பு: இப்போதும் என்னைப்பார்க்கும் போதெல்லாம் நக்கலாக சிரிக்கும் பக்கத்துவீட்டுக்காரரைத் தான் என்ன செய்வதென்று தெரியவில்லை! ]

– ஜூன் 2014

Print Friendly, PDF & Email

0 thoughts on “அமாவாசை இரவில்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *