ஸிஸ்டம் ஃபெயிலியர்!!!!!

5
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: September 24, 2015
பார்வையிட்டோர்: 22,819 
 

பாகம் – 1

எமலோகம்.

சித்ரகுப்தன் தலையைக் குனிந்துகொண்டு மிகவும் சோகமாக உட்கார்ந்து கொண்டிருந்தார்.

எமதர்மன் அதைப் பார்த்துவிட்டு, “என்ன, சித்ரகுப்தா, ஏன் இப்படி உட்கார்ந்திருக்கிறாய்? ஆபீஸ் நேரத்தில் இப்படி வேலை செய்யாமல் உட்கார்ந்திருக்கிறாய். இன்றையக் கணக்கெல்லாம் எழுதி முடித்துவிட்டாயா?” என்றார்.

“இல்லை, ப்ரபோ,”

“ஏன்? என்னாயிற்று?”

சித்ரகுப்தன் மௌனமாக தன் வலதுகைக் கட்டைவிரலைத் தூக்கிக் காட்டினார்.

“என்ன, கையில் கட்டு, சித்ரகுப்தா?”

“நகச்சுற்று, ப்ரபோ”

“நமது எமலோக வைத்தியரிடம் காட்டினாயா”

“என்ன சொன்னார்?”

“அவர் தன்வந்திரியிடம் போய்க்காட்டு. புண் செப்டிக் ஆகியிருக்கிறது என்று சொல்லிவிட்டார்.”

“போனாயா?

“இல்லைப் ப்ரபோ, அவர், ஏதோ கான்ஃப்ரன்ஸ் என்று சிவலோகம் போயிருக்கிறாராம்.”

“என்ன இது, சித்ரகுப்தா? நீ எழுதவில்லையென்றால் ஏகப்பட்ட கணக்கு சேர்ந்துபோகுமே” என்று கவலையுடன் கேட்டார்.

இருவரும் கவலையுடன் யோசனையில் ஆழ்ந்தனர்.

திடுமென்று சித்ரகுப்தன், “ப்ரபோ, எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. அப்படி செய்தால் என்ன?”

“என்ன யோசனை?”

“கையில் எழுதுவதினால்தானே இந்தப் பிரச்னை? நாம் ஏன் பூலோகத்தில் இருப்பதுப் போல் இதையெல்லாம் கம்ப்யூட்டர் வைத்துச் செய்யக்கூடாது.”

“செய்யலாம்தான். ஆனால் பிரம்மதேவர் அதற்குச் சம்மதிக்க வேண்டுமே?”

“நாம் வேண்டுமானால் முதலில் சரஸ்வதி தேவியிடம் இதைப் பற்றிச் சொல்லி, அவரைவிட்டு பிரம்மதேவரிடம் சொல்லச்சொல்வோம்.”

“ம்ம்ம்……….அதுவும் நல்ல யோசனைதான்.” மேலும் அதைப்பற்றி சிறிதுநேரம் விவாதித்தனர். “சரி வா. நாம் இருவரும் போய்ப் பார்த்துவிட்டு வருவோம்.”

பிரம்மலோகம்

அன்று சரஸ்வதிபூஜை தினமென்பதால் பூலோகத்தில் எல்லோரும் சரஸ்வதிதேவியைத் துதிபாடி ஆயுதபூஜை செய்துகொண்டிருந்த நேரம். அதனால் தேவியும் நல்ல புன்னகையுடன் மகிழ்ச்சியோடு வீணை வாசித்துக்கொண்டிருந்தார்.

எமதேவனும் சித்ரகுப்தனும் தேவிக்கு ‘வந்தனங்கள்’ என்றனர்.

“என்ன விஷயம், எமதேவா? அதிசயமாக என்னைக் காண வந்திருக்கிறீர்கள்.”

எமதேவர், சற்றுத் தயக்கத்துடன், “உங்களால் ஒரு காரியம் ஆகவேண்டும் தேவி”

“அதானேப் பார்த்தேன். வேலையில்லாமல் இங்கு வரமாட்டீர்களே என்று நினைத்தேன். சொல்லுங்கள், என்ன விஷயம்?”

எமதேவரும் சித்ரகுப்தனும் விவரித்தார்கள்.

“அதைப் பற்றின ப்ராஜக்ட் ரிப்போர்ட் எல்லாம் தயாராக வைத்திருக்கிறீர்களா?”

“எல்லாம் தயாராக வைத்திருக்கிறோம் தேவி.”

“அப்பொழுது வாருங்கள். இப்பொழுதே பார்த்துவிடலாம்” என்று பிரம்மதேவரிடம் சரஸ்வதிதேவி இருவரையும் அழைத்துச்சென்றார்.

பிரம்மதேவர் யோகநித்திரையில் ஆழ்ந்திருந்தார். தேவியார், லேசாக குரலெழுப்பினார். “பிரபோ”…….கண்விழித்தவர், “என்ன தேவி?” என்றார். “இவர்கள் இருவரும் தங்களைப் பார்க்க ஒரு நல்ல யோசனையுடன் வந்திருக்கிறார்கள்.” அதில் நல்ல என்ற சொல்லுக்கு தேவி கொடுத்த அழுத்தத்தை உணர்ந்த பிரம்மதேவர் இவர்கள் இருவரும் வந்துள்ள விஷயமாக தான் மறுதளிக்க முடியாது என்பதை உணர்ந்து பெருமூச்சு விட்டார்.

“என்ன, சொல்லு, எமதேவா.”

அவர்கள் சொன்னவுடன், “எல்லாம் சரிதான். அதையெல்லாம் யார் அமைத்துத் தருவார்கள்?”

“பிரபோ, பூலோகத்திலிருந்த ஸ்டீவ் ஜாப் என்பவர் இப்பொழுது இங்கிருக்கிறார். அவர் பூலோகத்தில் செய்தது பாவமா, புண்ணியமா என்ற விசாரணை நடந்துகொண்டிருப்பதால் இப்பொழுது எங்கள் கஸ்டடியில்தான் இருக்கிறார். அவரிடம் கேட்டதில் அவர் எல்லாம் அமைத்துக்கொடுப்பதாகச் சொல்லியிருக்கிறார். அவருக்கு பூலோகத்தில் மென்பொருள் வல்லுனர்கள், அங்கு அதிகப்பட்ச மன அழுத்தத்தினால் அவர்கள் விதி முடியும் முன்னரே இங்கு வந்துவிட்டவர்கள் உதவியாக இருப்பார்கள்.”

“சரி, அந்தக் கோப்பை என்னிடம் கொடுத்துவிட்டுச் செல்லுங்கள். நான் சற்று நேரத்தில் சிவபெருமானிடமும் விஷ்ணுவிடமும் கையெழுத்து வாங்கிவைக்கிறேன். நீங்கள் வேலையை ஆரம்பியுங்கள்” என்றார் இயலாமையுடன்.

தேவலோகத்தின் ஒரு நாள் என்பது பூலோகத்தில் ஒரு வருஷம்.

பிரம்மதேவனின் உத்தரவு கிடைத்தவுடன் சிறிது நாழிகையில் பிரம்மலோகமும் எமலோகமும் கணிணி மயமாகின. பூலோகம் பற்றிய தகவல்கள் எல்லாம் மென்பொருள் வல்லுனர்களை வைத்துக்கொண்டு கணிணியில் ஏற்றப்பட்டன. எமதூதர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு ஆப்பிள் ஃபோன் கொடுக்கப்பட்டது. அதன் மூலமாக எமலோகத்திலிருந்து வரும் குறுஞ்செய்தியின்படி உயிர்கள் பறிக்கப்பட்டன.

பிரம்மலோகத்திலும் பிறக்கப்போகும் ஜீவன்களில் ஒரு சிப் பொருத்தப்பட்டது. பிரம்மலோகத்திலிருந்து வரும் உததரவுக்கேற்ப குழந்தைப்பிறப்பு நடந்தது.

எல்லாம் செவ்வனே நடந்து வந்தது.

ஒரு நாள் சித்ரகுப்தன் அலறியபடியே எமலோகத்தில் நுழைந்தான். “பிரபோ, மிகப்பெரிய விபரீதம் நடந்துகொண்டிருக்கிறது. தாங்கள் என்னை மன்னிக்கவேண்டும்”

எமதேவர், “ஒன்றும் புரியாமல் என்ன விபரீதம்? சீக்கிரம் சொல்” என்றார் பதறியபடி.

“ஸிஸ்டம் ஃபெய்லியர் பிரபு. பூலோகத்தில் பிறப்பு, இறப்பு எல்லாம் நின்றுவிட்டது.”

பாகம் – 2

“இதிலென்ன விபரீதம் சித்ரகுப்தா? ஸ்டீவ்ஜாப்பைக் கூப்பிட்டுச் சரி செய்யவேண்டியதுதானே”

“இது ஏதோ புது வைரSaஸாம். அந்த வைரஸை அழிக்கமுடியவில்லை. புது ஆண்டிவைரஸ் செய்ய எப்படியும் நமது நாள் கணக்கில் ஒரு நாள் ஆகுமாம். அதுதான் ப்ரபோ, இப்பொழுது பிரச்னை.”

“அதிலென்ன பிரச்னை?”

“நமக்கு ஒருநாள் என்பது பூலோகவாசிகளுக்கு ஒருவருடம், ப்ரபோ”

எமதேவர் “அதனால்?” என்று கேட்டார் சிறிது கவலையுடன்.

சித்ரகுப்தன், தயங்கியபடி, “ப்ரபு, பூலோகத்தில் நமது செயல்பாடுகள் எல்லாம் ஒரு வருடத்திற்கு நின்றுவிடும். அதனால் பூலோகக் கணக்குப்படி ஒரு வருடத்துக்கு இறப்பும், குழந்தைப்பிறப்பும் இருக்காது. கருவிலிருக்கும் குழந்தை வெளியில் வர இருவருடங்களாகும். இறப்பும் இருக்காது.”

“நிலைமை மிகவும் விபரீதமாகிக் கொண்டிருக்கிறது பிரபு.”

அதே சமயம் “நாராயணா, நாராயணா” என்றபடியே நாரதர் பதட்டத்துடன் வந்தார்.

“வாரும் நாரதரே.” என்று வரவேற்றார் எமதேவர். “அமருங்கள்” தன் கவலையை மறைத்துக்கொண்டு உபசரித்தார்.

“அமருவது இருக்கட்டும். இப்பொழுது பூலோகத்தின் நிலைமை தெரியுமா?”

“பூலோகத்தில் எல்லோரும் கதறும் குரல் கேட்கிறதா?”

“என்ன ஆயிற்று?” என்று தெரியாததுப்போல் சித்ரகுப்தன் கேட்டார்.

“என்ன ஆயிற்றா? கர்ப்பிணிகள் பிரசவிக்காமல் வலியில் அலறுகிறார்கள். விதி முடிந்தவர்கள் உயிர் பிரியாமல் துன்பத்தில் கத்துகிறார்கள். “

எமதேவர், நாரதரிடம் விவரத்தைக் கூறினார்.

“நீங்கள்தான் இதற்கு ஒரு தீர்வு சொல்லவேண்டும் நாரதரே.”

“என்ன செய்யலாம்? சிவனிடம் போனால் கோபத்தில் நெற்றிக்கண்ணைத் திறந்து விடுவார். ஒரே வழிதான் இருக்கிறது. பிரம்மதேவருடன் போய் விஷ்ணுவிடம் முறையிடுவோம். வாருங்கள்.” மூவரும் துரிதமாகக் கிளம்பினார்கள்.

பிரம்மதேவனுடன் வைகுண்ட்த்தை அடைந்தார்கள்.

பெருமாள் பாவம் நல்ல உறக்கத்தில் இருந்தார்.

பிரம்மன் நாரதரைப் பார்த்து கண்ணசைத்தார். நாரதர், “நாராயணா, நாராயணா” என்று மெதுவாக குரலெழுப்பினார்.

கண்விழித்தப் பெருமாள், “என்ன நாரதா, எல்லோரும் சேர்ந்து வந்திருக்கிறீர்கள். என்ன விஷயம்?”

“அனாதரட்ஷகா, நீங்கள்தான் எல்லோரையும் ரட்க்ஷிக்கவேண்டும் ப்ரபோ” என்று எமதேவர் கதறினார்.

“ஏன்? என்ன ஆயிற்று?”

நடக்கும் நிகழ்ச்சிகளை கூறிவிட்டு, நீங்கள்தான் ஒரு உபாயம் செய்து எல்லோரையும் காப்பாற்ற வேண்டும், ப்ரபோ” என்றார் நாரதர்.

“ம்ம்ம், இப்படி ஒவ்வொரு முறையும் ஏதேனும் தவறு செய்துவிட்டு இங்கு வருகிறீர்கள்.”

“நீயே சரணம் கேசவா” என்றனர் எல்லோரும் கோரஸாக.

“தங்களால் மட்டுமே அந்த வைரஸை அழிக்கமுடியும். நாராயணா” நாரதர்.

“எப்படி அழிப்பது?”

அதுவரை மௌனமாக இருந்த பிரம்மதேவர், “நாராயணா, உங்கள் சக்ராயுதத்தை ஏவுங்கள், அது ஒன்றே சாத்தியம்” என்றார்.

அதன்படி விஷ்ணு தனது ஒரு கையிலிருந்து சுதர்சனசக்ரத்தை ஏவினார். சக்கரம் அவர் கையிலிருந்து சுழன்றபடியே நொடியில் பிரம்மலோகத்தின் கம்யூட்டரின் டிவிடி இயக்கியில் போய் அமர்ந்தது.

அது உள்ளே போய் பொருந்திய சிறிதுநேரத்தில் கம்ப்யுட்டரில் சில ஃபைல்களும், ஃபோல்டர்களும் திறந்தன. மறைந்தன. இதுமாதிரி அடுத்தடுத்து சிறிது நேரம் ஓடியது. திடுமென்று கம்ப்யூட்டர் ரிபூட்டாகி எந்தச் சிக்கலும் இல்லாமல் வேலைச் செய்யத்தொடங்கியது.

டிவிடி இயக்கியிலிருந்து சுதர்சனசக்கரம் சுழன்றபடியே பெருமாளின் கைவிரலில் வந்து அமர்ந்தது.

அங்கு கூடியுருந்த எல்லோரும் பரவசமாக “ஓம் நமோ நாராயணாய” என்று துதித்தனர்.

பிரம்மதேவரும், எமதேவரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

எல்லா வேலைகளும் சரியாக நடக்கத்தொடங்கின.

Print Friendly, PDF & Email

5 thoughts on “ஸிஸ்டம் ஃபெயிலியர்!!!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *