Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

விழுந்தபின் மனமே, விசனம் கொள்ளாதே..

 

யார் வேண்டுமானாலும் விழலாம். நான்கூட சமீபத்தில் விழுந்தேன். பூமிக்கு ஆகர்ஷண சக்தி அதாவது ஈர்ப்பு சக்தி உள்ளவரை விழுவதைப் பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம் – நமக்கு அந்தப் பாக்கியம் கிடைக்குமோ கிடைக்காதோ என்று அவசரம் வேண்டாம். முந்துதல் வேண்டாம். அவரவர் முறை வரும்போது கட்டாயம் பூமி விழவைக்கும்.

திருப்பதியிலே பிரசாத அண்டா வற்றவே வற்றாததுபோல எத்தனை ஆயிரம் பேர் இருந்தாலும் தாராளமாக விழலாம்.

ஓசோனுக்கு ஓட்டை விழுவதுபோல, பூமியின் இழுக்கும் சக்திக்கு ஓட்டை விழுந்து அதன் ஆகர்ஷணம் குறைந்து விடுமோ, நாம் விழாமலிருந்து விடுவோமோ என்ற பரபரப்பே வேண்டாம்.

விழுந்தபின் மனமேஎன்னைப்போல் வாசற்படி அருகே முண்டி அடித்து முன்னேற பிரத்தியேக முயற்சி ஏதும் செய்ய வேண்டியதில்லை. சொல்லப் போனால் விழுவது என்பது மிகச் சுலபமான ஒரு காரியம். சில காரியங்களைச் செய்வதற்கு யோசனை செய்யவேண்டி துளி நேரமாவது மூளையைக் கசக்கிக் கொள்ள வேண்டும். ஆனால் விழுவதற்கு எந்த முன் யோசனையோ மூளை கசக்கல்களோ, பிரத்தியேகமாக எந்தக் குருவிடமோ போய்ப் பாடம் படித்து வரவோ வேண்டுமென்கிற அவசியமோ கிடையாது. விழ வேண்டியவர்களிடம் ஒரு சுதந்திர உணர்வு உண்டு. இந்தப் பரந்த பூமியில் அவர்கள் எங்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும், எவரையும் கேட்டுக் கொள்ளாமலே ஏன், தங்களையேகூடக் கேட்டுக் கொள்ளாமல் விழலாம்.

சமீபத்தில் நான்கூட ஒரு நாடக விழாவுக்குச் சென்று விழுந்துவிட்டு வந்தேன். நாடகத்தில் கடைசி ஸீன் பாக்கி இருக்கும்போது வெளியேற முயன்று, அரங்கத்தின் இருட்டு, என் கண்ணின் ரெட்டினாக் கோளாறு, காட்ராக்ட் போன்ற கண் சம்பந்தப்பட்ட கோளாறுகளின் கூட்டுச் சதியால் “தடால்’ என்று படி அருகே இரண்டு சுற்றுச் சுற்றி குப்புற விழுந்துவிட்டேன். அதற்கான இட வசதியும், சுவர் மூலையும் எனது அதிருஷ்டத்தால் கடவுள் அருகே வைத்திருந்தார். என்னைத் தூக்கி நிறுத்தவும் நிறைய ஆட்கள் இருந்தனர். விழுந்த ஸ்தலத்தில் உடனே மாமூலாக சில அவசர உத்தரவுகளை எல்லோரும் இடுவது வழக்கம்தானே? சிகிச்சை முறையிலும் புதுமை ஒன்றும் இராது. விழுந்த ஆசாமியை நாற்காலியில் உட்கார வைப்பது, தண்ணீர் அல்லது அவர் அதிர்ஷ்டக்காரராயிருந்தால் சோடா தருவது, முகத்தில் தண்ணீர் தெளிப்பது, கும்பலை விலக்கி காற்றோட்ட வசதி செய்வது, விசாரணையைத் துவக்குவது…

சிலர் துணிச்சலாக அவரது மார்பை நீவி விடுவது -சட்டையையைத் தளர்த்துவது, ùஸல்லைத் தேடுவது, சட்டைப் பையிலுள்ள நோட்டு சில்லறைகளைக் கீழே கொட்டி ஓட வைப்பது, விழுந்தவரின் அதிர்ஷ்டப்படி ஆட்டோ அல்லது அதிர்ஷ்டமிருந்தால் புண்ணியவான் யாருடைய காரோ ஏற்பாடு செய்வது.

எனக்கும் எல்லாம் நடந்தது. நான் விழுந்தது ஒன்றும் பெரிய விஷயமல்ல. நகரில் பரபரப்பு ஏற்படுத்தக்கூடியதும் அல்ல. ஆகவே பேப்பரை அனாவசியமாகப் புரட்ட வேண்டாம். விழுவது பெரிய விஷயமே அல்ல. அமெரிக்க ஜனாதிபதி யாரோ ஒருத்தர் விமானகூடத்தில் கால் சற்று இடறி முழுசாகக்கூட விழாமல் அரை விழு விழுந்ததற்கே ஜனாதிபதியாக அவர் பதவி வகிக்க லாயக்கானவரா இல்லை, தேக ஆரோக்யமற்றவர் என்ற கேடகிரியில் தள்ளப்பட வேண்டியவரா என்று கமிட்டி போட்டு ஆராயத் தொடங்கி விட்டார்கள். இந்தியராகிய நாமெல்லாம் ஸ்பிரிட்டைப் பார்க்கிறவர்கள். வயசோ, தேக ஆரோக்கியமோ, ஒழுக்கக் குறைவோ நமக்கு முக்கியமல்ல. தொண்ணூறு வயசானாலும் கொஞ்சம் மூளையோடு துளி அறிவோடு ஸ்பிரிட்டாகப் பேசுகிறவரையிலும் குறைந்தபட்சம் தன் கட்சிக்குத் தோதாகப் பேசுகிறவரையில்,அவர் எத்தனை தடவை விழுந்து வாரினாலும் அவர் நமது தலைவரே. இந்தியராகிய நாம் அரசியல் நடத்துகிறோமே தவிர, அடிமாட்டு வியாபாரமல்ல. அடிபட்டவுடன் துரத்திவிடுவது நமது பாரதப் பண்பாடல்ல. நூறு வயசானாலும் தலைவர் தலைவரே.

மேல் நாடுகள் எப்படியோ போகட்டும், எனது சொந்த விழுகையைப் பற்றி இன்னும் கொஞ்சம் சொல்ல வேண்டியுள்ளது. விழுவது எளிது. ஏனெனில் அதில் நம்ம வேலை அதிகம் இல்லை. படிகள், இருட்டு, சறுக்கக் கூடிய ஈரம், அரை உலர்ந்த பழத்தோல், சிறிதே சிறிது நீட்டிக் கொண்டு இருக்கும் நாற்காலியின் ஏதாவது ஒரு முனை, சோப்பு நீர் போட்டு மாப் செய்யப்பட்ட (தாகக் கூறப்படும்) மொûஸக் தரை, கரை கிழிந்து தொங்கும் வேட்டி. இவ்வளவுமோ இவற்றில் ஏதாவது ஒன்றிரண்டோ இருந்தால் போதும் நாம் விழுவதற்கு.

எளிய பத்ரம் புஷ்பம் பலம தோயத்தில் பகவான் திருப்தி அடைந்துவிடுவதாகக் கீதையில் பகர்ந்துள்ளது பொய்யே அல்ல. அது மாதிரி ஒரு சாதாரணக் கிழிசல் நுனி அல்லது சற்றே தலை தூக்கிய கால்மிதி, இரண்டு பொட்டு எண்ணெய் (எந்த எண்ணெயாகவும் இருக்கலாம் என்பது அவன் அளித்த சலுகை) – அப்படி எதுவுமே கிடைக்கவில்லையென்றால் துளி தோயம், அதாவது தண்ணீர் – அதைக்கூட நீங்களே கொண்டு வந்து தரையில் கொட்டிவிட்டு வழுக்கி விழ வேண்டிய அவசியமில்லை.

வேலைக்கார ஆயா தேய்த்த பாத்திரத்தைக் கூடையில் போட்டு எடுத்து வரும்போது கொஞ்சம் சொட்ட வைத்தாலும் போதும். நாம விழுவதற்காக யாரும் எந்தவிதமான பிரத்தியேக சிரமமும் படத் தேவையில்லை.

ஆறுமாத சிசுகூட காலை நீட்டிப் படுத்துக்கொண்டே நம்மை வீழ்த்தலாம். நாம் விழுவது நம் கையில் இல்லை. (காலிலும் இல்லை)

மறுபடி சப்ஜக்டிலிருந்து இடறி எங்கே விழுந்துவிட்டேன்.

நான் சொல்ல விழுந்தது என்னவென்றால் ஸôரி, சொல்ல வந்தது என்னவென்றால் யாருக்கும் விழுவது சுலபம், ஆனால் அதைப் பற்றிப் பிறருக்குச் சொல்லுவதுதான் மகா கஷ்டம் என்பதைக் கூறிக் கொள்ள ஆசைப்படுகிறேன்.

விழாவில் அரை இருட்டில் விழுந்து விட்டேனா… அது ஒரு குறுகிய வட்டத்துக்குத்தான் தெரியும் என்று நினைத்திருந்தேன். ஆனால் பல ஆந்தைக் கண்ணர்களுக்குத் தெரிந்திருக்கிறது. நாடக விழா முடிய இரவு மணி பதினொன்றாகி விட்டது. காலையிலிருந்து எனக்கு விசாரணை போன்கள் வரத் தொடங்கிவிட்டன.

நான் விழுந்த வைபவத்தை நானே சொல்லிக்கொள்ள அலுப்பாக இருக்கும் என்று எண்ணி (எல்லாம் அனுபவம்தான்) மனைவியிடம் அந்தப் பிரசார் பாரதியை ஒப்படைத்துவிட்டு “அக்கடா’ என்று வீட்டில் சாய்ந்து கிடந்தேன். மனைவி சமையலைக் கவனிப்பாளா? எனது விபத்தை விமரிசனம் செய்வாளா? பாவம் அவளும் மனுஷிதானே! அரசியலில் முழுநேரத் தொண்டர்களாக இருந்தாலும் அவர்களுக்கும் சில சமயம் அலுப்பும் களைப்பும் ஏற்படத்தானே செய்கிறது.

போணி செய்த முதல் போனை மனைவி என்னிடம் தந்தாள். அவர் எனக்கு உதவி செய்யும் ஆடிட்டர். “”அடடா நீங்க விழுந்ததை நான் பார்க்கவேயில்லை சார்” என்றார் வருத்தத்துடன்.

“”அதுக்கென்ன சார் இன்னொரு தரம் விழுந்தாப் போச்சு” என்று அவரைச் சமாதானப்படுத்தினேன்.

சற்று நேரத்தில் மேலும் சில கால்கள்.

“”மாமா விழுந்துட்டாராமே”

கேட்கும்போதே எங்களுக்கெல்லாம் உடனே ஏன் சொல்லவில்லை? என்று குற்றம் சாட்டுவது போன்ற அதட்டல் குரலில் ஒலிக்கும்.

மனைவி பாடுதான் கஷ்டம். கேட்கிறவர்களுக்கெல்லாம் பொறுமையாக விவரிக்க வேண்டியிருந்தது.

“”ஆமாம். நன்னாத்தான் நடந்திண்டிருந்தார். எப்படியோ படி தடுக்கி… ”

எதிர் பார்ட்டி அதிகப்படியான இன்ட்ரெஸ்ட் காட்டுவது உண்டு. “”வேஷ்டிகூடத் தடுக்கிவிட்டிருக்கும். ரத்த காயம் ஒண்ணுமில்லையே” என்பார்கள் அக்கறையாக.

அப்பாவியான வேஷ்டிமீது நம் கண்ணெதிரிலேயே பழிபோடுவார்கள்.

“எப்படி விழாமலிருப்பது?’ என்பதைக் கற்றுத் தர ஒரு தனியார் டுடோரியல் கல்லூரி தி. நகரில் ஒதுக்குப்புறமான ஒரு தெருவிலுள்ள ஒரு வீட்டின் மூன்றாவது மாடியில் இயங்கி வருகிறது. (பலபேருக்குத் தெரியாது. அதுவும் நல்லதற்கே. அந்த டிரெய்னிங் சென்ட்டர் மூன்றாவது மாடியிலிருப்பதால் அதற்கு ஏறும்போதோ இறங்கும்போதோ சராசரியாக வாரம் நாலு விழுதல்கள் சம்பவிக்கின்றன.)

விழுவதற்கு முக்கியக் காரணம் கண் பார்வையின் கோளாறுதான் என்கிறார்கள். மூக்குக் கண்ணாடி அணியாதவர்களைவிட அணிபவர்களே அதிகம் விழுகிறார்கள். அவர்கள் மட்டுமல்ல, அவர்கள் அணியும் கண்ணாடியும் கீழே விழுகிறது என்றும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

பார்வையில் தூரப் பார்வை, கிட்டப் பார்வை என்று இரு ரகம் உண்டு. (சோதிடக்காரர்கள் சொல்லும் குரு பார்வை, சனி பார்வை, சுக்கிரன் பார்வையெல்லாம் நான் எடுத்துக் கொள்ளவில்லை.)

பார்வைக் கோளாறுக்குக் கண்ணாடி பிரிஸ்கிரைப் செய்கிறார் டாக்டர், அவரது தொண்டு அத்துடன் முடிகிறது. கண்ணாடிக் கடைக்காரர் தன் சேவையைத் தொடர்கிறார். டாக்டர் எழுதித் தந்தபடி தயாரித்துத் தந்துவிடுகிறார்.

மறந்து வாழ ஒன்று நினைத்து வாழ ஒன்று மாதிரி பார்க்க ஒரு கண்ணாடி படிக்க ஒரு கண்ணாடி என்று வைத்துக்கொள்ளலாம். தப்பே இல்லை. ஆனால் ஒரு கண்ணாடியை மேய்ப்பதே கஷ்டமான காரியம். அதைத் தேடவே ஆயுள் பற்றாது. இரண்டு கண்ணாடி வைத்துக்கொண்டு தேடி அலைவது வாழ்க்கையையே வெறுக்கச் செய்துவிடும். ஆகவே நாம் ஒருவர் நமக்கு ஒருவர் என்று ஒற்றைக் கண்ணாடியுடனேயே விழுவோமாக. எனது கண்டுபிடிப்பு ப்ளஸ் சொந்த அனுபவம்.

பை போகல் கண்ணாடிதான் பெரும்பாலோரை வீழ்த்துகிறது.

மேல் பாதியில் தூரத்திலுள்ளதைப் பார்க்கலாம். கீழ்ப் பாதியில் படிக்கலாம்.

இரண்டையும் பிரிக்கும் கோட்டு வழியே பெரும்பாலோனோரின் விழி. ஆகவே இரண்டும் கெட்டானாகப் பார்த்து “தொபுகடீரென்று’ விழுகிறோம்.

“விழுவது எழுவதற்கே’ என்று சுவாமி விவேகானந்தர் கூறியுள்ள வீர வசனத்தையும் நினைவில் கொள்ளலாம்.

- டிசம்பர் 2011 

தொடர்புடைய சிறுகதைகள்
"சாமீய்! சாமீய்!" என்ற குரல் விடிகாலை ஐந்து மணிக்கு அப்புசாமியை எழுப்பியது. குரலிலிருந்து ஆசாமி யார் என்று சீதாப்பாட்டிக்குத் தெரிந்துவிட்டது. அப்புசாமியை எழுப்பினாள், "எழுந்திருங்கள். அவர் வந்திருக்கிறார்...குட் காட்! ஒன் ஆப்டர் ஒன்னாக எத்தனை போர்வை? சீக்கீரம் எழுந்து முகம் கழுவிக்கொண்டு போய் உட்காருங்கள்," ...
மேலும் கதையை படிக்க...
கிளிண்டனை வரவேற்கிறார் அப்புசாமி
''அடியே கிழவி! இதெல்லாம் அபூர்வம்டி. பேப்பரிலே கொட்டை எழுத்திலே போட்டிருக்கானே. உன் காடராக்ட் கண்ணுக்குத் தெரியலையா? இருபத்திரண்டு வருஷத்துக்கு அப்புறம் நம்ம இந்தியாவுக்கு வர்றார்டி அமெரிக்க ஜனாதிபதி!'' அப்புசாமி மனைவியிடம் மன்றாடிக் கொண்டிருந்தார். ஆந்திரா மஹிளா மண்டல் என்ற சமூக அமைப்புடன் சீதாப்பாட்டிக்கு ...
மேலும் கதையை படிக்க...
விடாப்பிடி
"எனக்கு ஏதாவது லெட்டர்ஸ் உண்டா?" என்று அப்புசாமியைச் சீதாப்பாட்டி விசாரித்தாள். அவர் ஒரு இன்லண்ட் லெட்டரைத் தப்பாகக் கிழித்துவிட்டு, எதை, எந்தப் பகுதியோடு இணைப்பது என்று தெரியாமல் விழி பிதுங்கிக் கொண்டிருந்தார். "எப்போதும் உங்களுக்கு 'ஹேஸ்ட்' தான். இப்படி தாறுமாறாகவா கிழிப்பது?" என்று அதை ...
மேலும் கதையை படிக்க...
கனவுமாமணி அப்புசாமி
அப்புசாமி இரண்டு மூன்று நாளாகவே மனைவியைப் பலவிதமான கோணங்களில் எட்ட இருந்து ரகசியமாகவும் வெளிப்படையாகவும் கவனித்துக் கொண்டிருந்தார். "வாட் ஹாப்பண்ட் டு யூ... ரெண்டு நாளாக உங்கள் பார்வையே சரியில்லை. எதையோ பார்த்துப் பயந்துகிட்ட மாதிரி முழிக்கிறீர்கள ?" என்றாள் சீதாப்பாட்டி. "என்னவாவது ...
மேலும் கதையை படிக்க...
"என்ன ஓர் அலட்சியமிருந்தால் நீ இப்படிச் செய்து இருக்கவேண்டும்? அதை எத்தனை வருஷமாக வைத்திருக்கிறேன் தெரியுமா? உன்னுடைய டைஜஸ்ட் பத்திரிகைகளைப் பதிலுக்குப் பதில் நான் இதே பாய்லரில் போட்டுச் சுடச்சுட வெந்நீர் காயவைத்துக் குளிக்கவில்லையானால் என் பெயர் அப்புசாமி இல்லை" என்று ...
மேலும் கதையை படிக்க...
கிராப் மகோத்ஸவம்
கிளிண்டனை வரவேற்கிறார் அப்புசாமி
விடாப்பிடி
கனவுமாமணி அப்புசாமி
அப்பளம் சதுரமானது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)