வாஷிங்டனில் திருமணம்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: January 26, 2022
பார்வையிட்டோர்: 11,715 
 

(1999ல் வெளியான தொடர்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 1 | அத்தியாயம் 2 | அத்தியாயம் 3

“பிள்ளைக்கு ஒரு கார், பெண்ணுக்கு ஒரு கார். தவிர, கல்யாணச் செலவுக்கென்று பத்து லட்சம் டாலரைத் தனியாக ஒதுக்கி வைத்துவிட்டார்களாம்” என்று பல் முப்பத்திரண்டும் தெரியக் கூறினாள் பெண்ணின் தாயார் விசாலம்மாள்.

“பெண்ணுக்கு நகை நட்டெல்லாம் செய்து போடுகிறார்களாமா?” என்று விசாரித்தாள் அபயாம்பாள் அத்தை.

“இருபத்திரண்டு கேரட் தங்கமாகவே நமக்கு வேண்டியதைக் கொடுத்து விடுகிறார்களாம். இஷ்டமான நகைகளைச் செய்து கொள்ளலாம். ஆனால் ஒரு கண்டிஷன்! எல்லா நகைகளையும் அமெரிக்காவிலே தான் செய்ய வேண்டுமாம். நகை செய்வதை ராக்ஃபெல்லர் மாமி நேரில் பார்க்க வேண்டுமாம்” என்று பெண்ணுக்குத் தகப்பனார் அய்யாசாமி கூறினார்.

“இதென்னடா சங்கடம்? நகைகளை நம் ஊரிலேயே செய்து எடுத்துக் கொண்டு போனால் என்னவாம்?” என்று கேட்டாள் பாட்டி.

“அவர்கள் இவ்வளவு பணம் செலவழித்து இந்தக் கல்யாணத்தை நடத்துவதே நம்மவர்களின் கல்யாணத்தில் உள்ள வேடிக்கையெல்லாம் பார்க்கத்தானே? நமக்கு ஒரு கவலையும் இல்லை. சம்பந்தி வீட்டுக்காரர்களைப் போல் ‘ஜாம் ஜாம்’ என்று அமெரிக்கா போய்விட்டு வரவேண்டியதுதான்” என்றார் அய்யாசாமி!

“பேஷ்! நம்ம ருக்குவின் அதிர்ஷ்டமே அதிர்ஷ்டம்! அவள் கழுத்தில் மூன்று முடிச்சு விழப் போகிறதா என்று கவலைப் பட்டுக் கொண்டிருந்தேன். அவளுக்கானால் அதிர்ஷ்டம் இப்படி அடித்திருக்கிறது!” என்று சொல்லி மகிழ்ந்தாள் பாட்டி.

“பிள்ளையைப் பார்த்தாயாடா? கண்ணுக்கு லட்சணமாயிருக்கிறானா?” ருக்குவின் அத்தை கேட்டாள்.

“அதற்காகத்தானே டெல்லிக்குப் போய் வந்தேன். ராஜா மாதிரி இருக்கிறான், பெயரும் ராஜா தான். டெல்லி செக்ரடேரியட்டில் தான் வேலை. எண்ணூறு ரூபாய் சம்பளம். கும்பகோணம் மூர்த்தியின் மாப்பிள்ளைக்குச் சிநேகிதனாம். அமெரிக்காவிலுள்ள மூர்த்தியின் மூலமாகத்தான் இவ்வளவு ஏற்பாடுகளும் நடந்திருக்கின்றன” என்றார் அய்யாசாமி.

“ஓகோ! அப்படியா சங்கதி! கல்யாணத்தை அமெரிக்காவிலே நடத்தணும் என்கிறார்களே, அதை நினைக்கிறபோதுதான் கொஞ்சம்…” என்று இழுத்தார் பெண்ணுக்கு மாமா.

“அதனால் என்ன? ராக்ஃபெல்லர் சம்சாரம் இந்த விஷயத்தில் ஒரே பிடிவாதமாக இருக்கிறாளாம். அவளுடைய நாத்தனார் கும்பகோணம் மூர்த்தியின் மகளுக்கு நடந்த கல்யாணத்தைப் பார்த்துவிட்டுப் போய், மிஸஸ் ராக்ஃபெல்லரிடம் கதை கதையாக அளந்து விட்டிருக்கிறாள். அதைக் கேட்டு விட்டு ராக்ஃபெல்லர் சீமாட்டி, ‘அந்த மாதிரி கல்யாணம் ஒன்றை உடனே அமெரிக்காவில் நடத்திப் பார்க்க வேண்டும். அதற்காக எவ்வளவு செலவானாலும் சரி’ என்று ஒற்றைக் காலில் நிற்கிறாளாம். அதை முன்னிட்டுத்தான் இவ்வளவு ஏற்பாடும்” என்றார் அய்யாசாமி.

“அமெரிக்காவிலே போய்க் கல்யாணம் செய்வதென்றால், இங்கிருந்து நாம் அத்தனை பேரும் போயாக வேண்டுமே! சம்பந்தி வீட்டுக்காரர்கள் எங்கே தங்குவது? நாமெல்லாம் எங்கே தங்குவது?” என்று அடுக்கினாள் அத்தை.

“அதிருக்கட்டும்; அப்பளம் எங்கே இடுவது?” என்று கவலைப்பட்டாள் பாட்டி.

“அதுவும் அமெரிக்காவிலேதான் இடணுமாம். ஒரு லட்சம் அப்பளம் இட்டாகணும். கைமுறுக்கு ஐம்பதாயிரம், பருப்புத் தேங்காய் பத்தாயிரம்…” என்றார்

“அம்மாடி! இவ்வளவுக்கும் இடம் ஏது? யார் செய்யப் போகிறா?” “அப்பளம் இடுவதற்கென்று அமெரிக்காவிலே ஒரு பெரிய கட்டடத்தையே காலி செய்து கொடுத்து விடப் போகிறார்களாம். அந்தக் கட்டடத்தின் மொட்டை மாடியிலே எத்தனை லட்சம் அப்பளம் வேண்டுமானாலும் உலர்த்திக் கொள்ளலாமாம். நூறு பாட்டிமார்களும், நூறு சமையல்காரர்களும் முன்னாடியே புறப்பட்டுப் போக வேண்டியிருக்கும். அப்பளம் இடுவதையும், ஜாங்கிரி சுற்றுவதையும் அமெரிக்கா பூராவும் டெலிவிஷன் மூலமாகக் காட்டப் போகிறார்களாம். அது மட்டுமில்லை, கல்யாணக் காட்சிகள் முழுவதுமே டெலிவிஷனில் காட்டுவதற்கு ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறார்களாம்” என்றார் அய்யாசாமி.

“கும்பகோணம் கொடிக்கால் வெற்றிலை, பந்தக்கால், தென்னங்கீற்று, வாழை மரம், நுகத்தடி, அம்மிக்கல், ஆட்டுக்கல் இவ்வளவும் போயாக வேண்டுமே” என்றார் பெண்ணின் மாமா.

“அதைப் பற்றியெல்லாம் நமக்கென்ன கவலை? அடுத்த வாரத்திலிருந்து தினமும் ஒரு ஸ்பெஷல் ப்ளேன் மெட்ராஸுக்கும் அமெரிக்காவுக்கும் பறந்தபடியே இருக்கும், அதில் யார் வேண்டுமானாலும் போகலாம், வரலாம். எத்தனை சாமானை வேண்டுமானாலும் ஏற்றி அனுப்பலாம்” என்றார் அய்யாசாமி.

“சரி, அடுத்தாற் போல் நாமெல்லாம் என்ன செய்யணும் இப்போ? அதைச் சொல்லு…” என்றார் மாமா.

“அடுத்த ஞாயிற்றுக்கிழமை ஸ்பெஷல் ப்ளேன்லே அமெரிக்காவுக்குப் புறப்படணும், டெல்லியிலேருந்து பிள்ளைக்கு மாமாவும், மாமியும் வருகிறார்கள். அவர்களும் நம்மோடு பம்பாயில் சேர்ந்து கொள்வார்கள்…”

“நாம் என்றால் யார் யார்?” என்று கேட்டார் மாமா.

“அம்மாஞ்சி வாத்தியார், சாம்பசிவ சாஸ்திரிகள், பனாரஸ் பாட்டி, (காசிக்கு மூன்று முறை போய் வந்ததால் ஏற்பட்ட காரணப் பெயர்!) பெண்ணுக்கு அத்தை, அம்மா, அப்பா எல்லாரும் தான். டெல்லியிலுள்ள என் மருமான் பஞ்சுவும் வருகிறான். அவன் தான் நமக்கெல்லாம் லீடர். ஏற்கெனவே அவன் இரண்டு முறை அமெரிக்கா போய் வந்திருக்கிறான். இங்கிலீஷ் ரொம்ப நன்றாகப் பேசுவான். நாம் எல்லோரும் நியூயார்க், வாஷிங்டன் இரண்டு நகரங்களையும் சுற்றிப் பார்த்துவிட்டு கல்யாணத்துக்கு ஏற்ற இடம் எது என்பதை முடிவு செய்ய வேண்டும். அவ்வளவு தான்” என்றார் அய்யாசாமி.

“அம்மாஞ்சி வாத்தியார் எதுக்குடா? அது அசட்டுப் பிசட்டுன்னு உளறிக் கொண்டிருக்குமே…” என்றார் மாமா.

“அதெல்லாம் தான் தமாஷ்! அம்மாஞ்சி முக்கியமா வரட்டும். சாம்பசிவ சாஸ்திரிகளும் அம்மாஞ்சியும் ரொம்ப சிநேகம். இரண்டு பேரும் லௌகிகம் தெரிந்தவர்கள். சைக்கிள் விடத் தெரிந்தவர்கள். அம்மாஞ்சி வாத்தியாருக்கு இங்கிலீஷ் சினிமான்னா ரொம்பப் பைத்தியம். இங்கிலீஷ் கூடச் சுமாராகப் பேசுவார். அதோ அவர்கள் இரண்டு பேருமே வருகிறார்கள். வாங்கோ அம்மாஞ்சி! வாங்கோ சாஸ்திரிகளே! இப்பத்தான் உங்க இரண்டு பேரையும் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம்” என்றார் அய்யாசாமி.

“எங்களைப் பற்றியா? என்ன விசேஷமோ?” என்று கேட்டார் அம்மாஞ்சி,

“நீங்க இரண்டு பேரும் அடுத்த ஞாயிற்றுக்கிழமை அமெரிக்காவுக்குப் புறப்படறதுக்கு ரெடியா இருக்கணும்?”

“அமெரிக்காவுக்கா? நாங்களா? என்ன இப்படி திடீர்னு ஹைட்ரஜன் குண்டைத் தூக்கிப் போடுகிறீர்கள்?” அம்மாஞ்சி வாத்தியார் கேட்டார்.

“நிஜமாத்தான் சொல்றேன். என் பெண் ருக்மிணியின் கல்யாணம் அமெரிக்காவிலே நடக்கப் போகிறது.”

“அதென்ன அப்படி?”

“அம்மாஞ்சி! உமக்கு ராக்ஃபெல்லரைத் தெரியுமோ?”

“எனக்கு அவரைத் தெரியும். அவருக்கு என்னைத் தெரியாது. ஒருமுறை அவரை ‘மீட் பண்ணி ஒரு ‘எய்டு’ கேட்கணும்னு ஆசை…”

“மிஸஸ் ராக்ஃபெல்லரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீரா?”

“சரியாப் போச்சு, கோடீசுவரப் பிரபுவின் சம்சாரமாச்சே! அரசப்ரதட்சணத்துக்கு ஒரு தடவை 108-‘டிஸோட்டோ ‘ கார் வாங்கிக் கொடுத்தாளாம். அது மட்டுமா? ஒரு லட்சம் டாலர் செலவழிச்சு ரிஷிபஞ்சமி விரதம் எடுத்துக் கொள்ளப் போவதாகக் கேள்வி. தங்கத்தாலே கோதுமை பண்ணி வைதிகப் பிராமணர்களுக்கு அள்ளி அள்ளிக் கொடுக்கப் போகிறார்களாம்.”

“பேஷ்! இந்த நியூஸெல்லாம் உமக்கு யாரய்யா சொன்னது….?”

“இதெல்லாம் ஒருத்தர் சொல்லணுமா, என்ன? ஒரு யூகம் தான். நாம் சொன்னா நியூயார்க் டைம்ஸிலே போடறான்!”

“என் பெண் கல்யாணத்தைக் கூட அந்த அம்மாள் தான் செய்து வைக்கப் போகிறாள். நீங்க ரெண்டு பேரும் என்னுடன் புறப்படணும்…”

“தயாராகக் காத்துண்டிருக்கோம். ராக்ஃபெல்லர் சம்சாரம் நடத்தற கல்யாணம்னா சாமான்யமா? கொடுத்து வைக்கணுமே. பூரி தட்சணையை டாலர் டாலரா அள்ளி வீச மாட்டாளோ?”

“வைதிகப் பிராமணர்கள் வெளிநாட்டுக்குப் போவதென்றால் யோசிப்பார்களே… உங்களுக்கு அதெல்லாம்…” என்று இழுத்தார் அய்யாசாமி.

“அந்தக் காலத்திலே பரம வைதிகரான மாளவியாஜியே லண்டனுக்குப் போய் வந்தாரே… அவரை விடவா நாமெல்லாம் ஒசத்தி?”

“இங்கிலீஷ் பாஷை தெரியாதே உங்களுக்கு. அமெரிக்காவில் கஷ்டப்பட மாட்டீர்களா?”

“பாஷை தெரியல்லேன்னா நமக்கென்ன கஷ்டம்? நாம் பேசற பாஷை அமெரிக்காளுக்குப் புரியாது. அதனாலே, கஷ்டப்படப் போறவா அவாதானே?”

“சரி, வாத்தியாரே! அப்படின்னா பிரயாணத்துக்கு ரெடியா இருங்கோ …” “ஸண்டே மார்னிங் ஸெவன் தர்ட்டிக்கா ப்ளேன்?” அம்மாஞ்சி கேட்டார், “அமெரிக்கா என்றதுமே இங்கிலீஷ் பிரவாகமா வரதே!” என்றார் அய்யாசாமி. “ஃபுல் ஸூட்டே தைத்துப் போட்டுக் கொண்டு வரப் போறேனே…!” என்றார் அம்மாஞ்சி.

“சே சே அப்படியெல்லாம் வேஷத்தை மாற்றிடாதீங்கோ. யார் யார் எப்படி இருக்கிறோமோ, அப்படியேதான் போகணும். நம்மையெல்லாம் நம் நாட்டு உடையிலே பார்க்கத்தானே ஆசைப்படுவா?”

“சாஸ்திரிகள்னா ‘பேர் பாடி’யாவா போறது? அட்லீஸ்ட் லால் பகதூர் சாஸ்திரியாட்டம் ஒரு ஷெர்வானியாவது தைத்துப் போட்டுக் கொள்கிறேனே….?”

“சொல்றதைக் கேளும். நீர் இப்போது இருக்கிறபடியேதான் வரணும்… தெரிந்ததா?… போய் வாரும்.”

பெண் வீட்டுக்காரர்கள் (ருக்குவின் தம்பி வெங்கிட்டு உள்பட), பிள்ளை வீட்டுக்காரர்கள், டெல்லி பஞ்சு எல்லோரும் பம்பாய் விமான நிலையத்தில் குறிப்பிட்ட நேரத்தில் வந்து கூடிவிட்டார்கள்,

டெல்லி பஞ்சு எல்லோரையும் விமானத்தில் ஏற்றிவிட்டு, தானும் ஒரு ஸீட்டில் அமர்ந்து கொண்டான்.

அம்மாஞ்சி வாத்தியார், சாம்பசிவ சாஸ்திரிகள் இருவரும் விமான பெல்ட்டை இறுக்கிப் போட்டுக் கொண்டு கண்ணாடிப் பலகணி வழியாகக் கீழே பூமியைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். பனாரஸ் பாட்டி ஜப மாலையை எடுத்து உருட்டினாள். விமானம் உயரத்தில் கிளம்பியது. ஏர்ஹோஸ்ட்டஸ் வந்து எல்லோருக்கும் பெப்பர் மிண்ட்டும் லவங்கமும் வழங்கினாள். வெங்கிட்டுவுக்கு ஆகாசப் பிரயாணம் ஒரே இனிப்பாயிருந்தது.

அந்த ஆரணங்கையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த அம்மாஞ்சி, “அப்ஸரஸ் மாதிரி இருக்காளே?” என்றார்.

“ஆகாசத்திலே பறக்கிறவர்கள் கந்தர்வப் பெண்கள் மாதிரி இருப்பது சகஜம் தானே?” என்றார் சாஸ்திரிகள்.

“சரி, வாத்தியாரே! அப்படின்னா பிரயாணத்துக்கு ரெடியா இருங்கோ …” “ஸண்டே மார்னிங் ஸெவன் தர்ட்டிக்கா ப்ளேன்?” அம்மாஞ்சி கேட்டார், “அமெரிக்கா என்றதுமே இங்கிலீஷ் பிரவாகமா வரதே!” என்றார் அய்யாசாமி. “ஃபுல் ஸூட்டே தைத்துப் போட்டுக் கொண்டு வரப் போறேனே…!” என்றார் அம்மாஞ்சி.

“சே சே அப்படியெல்லாம் வேஷத்தை மாற்றிடாதீங்கோ. யார் யார் எப்படி இருக்கிறோமோ, அப்படியேதான் போகணும். நம்மையெல்லாம் நம் நாட்டு உடையிலே பார்க்கத்தானே ஆசைப்படுவா?”

“சாஸ்திரிகள்னா ‘பேர் பாடி’யாவா போறது? அட்லீஸ்ட் லால் பகதூர் சாஸ்திரியாட்டம் ஒரு ஷெர்வானியாவது தைத்துப் போட்டுக் கொள்கிறேனே….?”

“சொல்றதைக் கேளும். நீர் இப்போது இருக்கிறபடியேதான் வரணும்… தெரிந்ததா?… போய் வாரும்.”

பெண் வீட்டுக்காரர்கள் (ருக்குவின் தம்பி வெங்கிட்டு உள்பட), பிள்ளை வீட்டுக்காரர்கள், டெல்லி பஞ்சு எல்லோரும் பம்பாய் விமான நிலையத்தில் குறிப்பிட்ட நேரத்தில் வந்து கூடிவிட்டார்கள்,

டெல்லி பஞ்சு எல்லோரையும் விமானத்தில் ஏற்றிவிட்டு, தானும் ஒரு ஸீட்டில் அமர்ந்து கொண்டான்.

அம்மாஞ்சி வாத்தியார், சாம்பசிவ சாஸ்திரிகள் இருவரும் விமான பெல்ட்டை இறுக்கிப் போட்டுக் கொண்டு கண்ணாடிப் பலகணி வழியாகக் கீழே பூமியைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். பனாரஸ் பாட்டி ஜப மாலையை எடுத்து உருட்டினாள். விமானம் உயரத்தில் கிளம்பியது. ஏர்ஹோஸ்ட்டஸ் வந்து எல்லோருக்கும் பெப்பர் மிண்ட்டும் லவங்கமும் வழங்கினாள். வெங்கிட்டுவுக்கு ஆகாசப் பிரயாணம் ஒரே இனிப்பாயிருந்தது.

அந்த ஆரணங்கையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த அம்மாஞ்சி, “அப்ஸரஸ் மாதிரி இருக்காளே?” என்றார்.

“ஆகாசத்திலே பறக்கிறவர்கள் கந்தர்வப் பெண்கள் மாதிரி இருப்பது சகஜம் தானே?” என்றார் சாஸ்திரிகள்.

“எல்லோரும் குளித்து விட்டு வாருங்கள். எங்க வீட்டுக் ‘குக்’கை இங்கே அழைத்து வந்திருக்கிறேன். உங்களுக்காக இட்டிலி காப்பி தயாராகிக் கொண்டிருக்கிறது” என்றாள் மிஸஸ் மூர்த்தி.

”டூத் பேஸ்ட் வேண்டுமா சாஸ்திரிகளே?” என்று கேட்டான் சமையல் சங்கரன்.

“பேஸ்ட்டெல்லாம் எதுக்கு? வேஸ்ட்! நான் கையோட ஒரு கட்டு ‘பானியன் ஸ்டிக்’ கொண்டு வந்திருக்கிறேன்” என்றார் அம்மாஞ்சி.

“பானியன் ஸ்டிக் என்றால் என்னய்யா?” என்று கேட்டார் சாஸ்திரிகள்.

“நீர் ஒரு மடிசஞ்சி! ‘பானியன் ஸ்டிக்’ என்றால் ஆலங்குச்சி!” என்றார் அம்மாஞ்சி.

“நான் ‘ஹாட்வாட்டரில் குளிக்கப் போகிறேன்” என்று தனக்குத் தெரிந்த இங்கிலீஷைச் சொன்னார் சாம்பசிவ சாஸ்திரிகள்.

“நான் ஜில்லுன்னு ‘ஷவர்லே குளிக்கப் போகிறேன்” என்று சொல்லிக் கொண்டு போன அம்மாஞ்சி, ஷவரில் போய் நின்று குளிக்கத் தொடங்கினார். குளிர் தாங்காமல் போகவே, “இது ஷவர் பாத் இல்லே … ஷி ஷி ஷிவர் பாத்” என்று நடுங்கியபடியே திரும்பி வந்தார்.

“இன்று ஈவினிங்கே நாம் எல்லோரும் வாஷிங்டன் போகிறோம். கல்யாணம் நடத்துவதற்கு வாஷிங்டன் நகரம் தான் ஏற்ற இடம். அந்த நகரில் ‘பொடொமாக் ரிவர்’ ஓடுகிறது. ரோடுகள் விசாலமாயிருக்கின்றன என்று மிஸஸ் ராக்ஃபெல்லர் சொல்லுகிறார்” என்றான் டெல்லி பஞ்சு.

“அயம் விசேஷஹ! எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது. நியூயார்க் ரொம்ப நெரிசலாயிருக்கு, வாஷிங்டனுக்கே போய்விடலாம். நதி தீரத்திலே அமைந்திருக்கிற நகரம்னா சொல்லணுமா என்ன? பாலிகை விடறதுக்கும் ஸ்நானபானத்துக்கும் சௌகரியமா இருக்குமே…” என்றார் சாஸ்திரிகள்.

“ஏண்டாப்பா, காவிரிக் கரை மாதிரி படித்துறை இருக்குமோ?” என்று கேட்டாள் அத்தை .

“இல்லைன்னா கட்டிக் கொடுக்கச் சொன்னா போச்சு! இதென்ன பிரமாதம்?” என்றார் மூர்த்தி,

“அப்பளம் இட்டு உலர்த்துவதற்கு நல்ல மாடியா வேணுமேடா!” என்று கவலைப்பட்டாள் பனாரஸ் பாட்டி,

“நீங்க வாஷிங்டனுக்கு வந்து பாருங்கோ பாட்டி! அங்கே உங்களுக்கு எந்தக் கட்டடம் சௌகரியமா இருக்கும்னு பார்த்துச் சொல்லுங்கோ. அதைக் காலி பண்ணிக் கொடுத்து விடச் சொல்கிறேன்” என்றார் மூர்த்தி,

“ரொம்ப உயரமான கட்டடமா இருந்தா அடிக்கடி மொட்டை மாடிக்குப் போறதுக்குக் கஷ்டப்படுமே…”

“அதைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம். அப்பளம் இட்டு முடிக்கிற வரை தனி ‘லிஃப்ட்’ வேலை செய்யும். அந்தக் கட்டிடம் பூராவையும் அப்பள டிபார்ட்மெண்டுக்காகவே ஒதுக்கிவிடச் சொல்லுகிறேன், போதுமா?”

“எதேஷ்டம்…” என்றாள் பாட்டி,

அன்று மாலையே திருமண கோஷ்டியை ஏற்றிச் சென்ற விமானம் வாஷிங்டனை நோக்கிப் பறந்தது. பால்காட் லல்லிதான் ஏர்ஹோஸ்ட்டஸ்!

“வாஷிங் சோடாவுக்கு எத்தனை மணிக்குப் போய்ச் சேரும்டி?” என்று லல்லியைக் கேட்டாள் பாட்டி.

லல்லி சிரித்துவிட்டு, “வாஷிங் சோடா இல்லை பாட்டி! வாஷிங்டன்! பார்த்துண்டே இருங்கோ, இன்னும் கொஞ்ச நேரத்திலே தெரியப் போகிறது!” என்றாள்.

எல்லோரும் கண்ணாடி ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தார்கள்,

வாஷிங்டன் நகரம் தெரிந்தது.

“அதோ உயரமாகத் தெரிகிறதே! அது என்ன?” என்று கேட்டாள் அத்தை,

“அதுதான் வாஷிங்டன் மானுமெண்ட். ஞாபகார்த்த ஸ்தூபி. 555 அடி உயரம்” என்றாள் லல்லி.

“பென்சிலைக் கூராகச் சீவிக் குத்திட்டு வைத்திருக்கிற மாதிரியல்லவா கட்டி வைத்திருக்கிறார்கள்?” என்றாள் பாட்டி,

“மொட்டையாகக் கட்டியிருந்தால் அப்பளம் உலர்த்த உதவுமே என்று பார்க்கிறாயோ?” என்று கேட்டார் அம்மாஞ்சி.

– தொடரும்…

– வாஷிங்டனில் திருமணம், முதற் பதிப்பு: அக்டோபர் 1999, நர்மதா பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *