Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

வாங்கய்யா வாட்ச் மேனய்யா!

 

இன்னும் கொஞ்ச நாள் போனால் வேலைக்காரர்களே கிடைக்க மாட்டார்கள்; சமையல்காரர்கள் அகப்பட மாட்டார்கள்; டிரைவர்களைப் பார்க்கவே முடியாது… இப்படியெல்லாம் ஒரு பயம் பரவிக்கொண்டு இருக்கிறது.

எங்கள் அடுக்கக வாட்ச்மேன், டியூட்டி என்று எது ஒன்றும் குறிப்பாகப் பார்த்ததாகக் கூற முடியாது. ‘உளன் எனின் உளன்; இலன் எனின் இலன்’ என்று பக்தர்கள் கடவுள் பற்றிக் குறிப்பிடுவது போல, எங்கள் வாட்ச்மேனும் இருக்கிறானென்றால் இருக்கி றான்; இல்லையென்றால் இல்லை!

எங்கள் குடியிருப்பைத் தவிர, அவன் இன்னும் பல இடங்களில் வியாபித்துக்கொண்டு இருப்ப தைக் கண்டவர் விண்டனர். உடனடியாக ஒரு என்கொயரி கமிட்டி நியமிக்கப்பட்டு அவனை விசாரித்ததில், “பிசாத்து நீங்க கொடுக்கிற 1,500 ரூபாய்க்கு எவன் டூட்டி பார்ப்பான்? இப்பல் லாம் ரேட்டு 3,000. தெரியுமில்ல? நான் அம்புட்டு பங்களாக் கள்லேயும் விசாரிச்சுட்டேன். 3,000 தர்றதாயிருந்தால் டூட்டி பார்க்கறேன்’’ என்று உறுதியாகக் கூறியவன், மறுநாளே வேறு பங்களாவில் வேலையில் சேர்ந்து விட்டதாகச் சொல்லிக் கணக்கு தீர்த்துக்கொண்டு போய் விட்டான்.

பற்பல செக்யூரிட்டி சர்வீஸ் விளம்பரங்களைப் பார்த்து, போன் மூலம் தொடர்புகொண்டு புது வாட்ச்மேன் தேடியதில், 4,000 சம்பளத்துக்குக் குறைவாக ஆளே கிடையாது என்று தெரிந்தது. அந்த நாலிலும், சர்வீஸ் நடத்துகிற ஏஜென்ஸிக்கு ஒண்ணரை போக, மீதி இரண்டரைதான்

வாட்ச் மேனுக்கு! ஆனால், ஏஜென்ஸியே காக்கி டிரெஸ், டார்ச்லைட், விசில், குறுந்தடி எல்லாம் தரும். கரெக்டா எட்டு மணி டியூட்டி ஆனதும், ரைட் ராயலா போய்க்கினே இருக்கலாம்.

வருஷத்துக்குப் பத்து நாள் லீவ், அரைமாச போனஸ்… ‘இத்தனை வசதியும், சம்பளமும் தருவதாக இருந்தால், நானே வாட்ச்மேனாக வரத் தயார்’ என்று பல குடித்தனங் களிலிருந்து வயசாளிகள் வீறு கொண்டு கிளம்ப, அவர்களை அடக்கப்பட்ட பாடு பெரும் பாடாகிவிட்டது.

அடுத்த இரண்டு மாசம், அடுக்க கம் எந்தவிதப் பாதுகாப்புமின்றி இருக்கும்படி ஆயிற்று. சோதனையாக அடுக்கக இன்சார்ஜின் சைக்கிளே திருட்டுப் போய்விட்டது. ‘உடனடியாக செக்யூரிட்டி போட்டே தீரவேண்டும்’ என்று கூச்சல் போட்டு, தனியார் அகப்படுவார்களா என்று ஆளாளுக்கு விசாரித்துச் சொல்லும் படி உத்தரவிடப்பட்டது.

சட்டங்கள், நிபந்தனைகள், தகுதிகள் எல்லாம் தாராளமாகத் தளர்த் தப்பட்டன. காவலர் ஹேண்டிகேப் டாக இருக்கலாம்; தொண்டுக் கிழவராக இருக்கலாம்; ஸ்டூலில் உட்காரக் கூடிய அளவுக்கு உடம்பில் தெம்பு இருந்தால் போதுமானது. பார்வை கூட, பகலில் பசுமாடு தெரிகிற அளவுக்கு இருந்தால் யதேஷ்டம்! யாராவது அசல் மனிதர்கள் வந்தால் தடுத்து நிறுத்தி, ‘நீங்க யாரைப் பார்க்கணும்?’ என்று கேட்பது மட்டுமே வேலை. மற்றபடி, சாக் கடை அடைத்துக்கொண்டால் குத்த வேண்டியது இல்லை. புடவை, பக்கெட், சைக்கிள், மோட்டார் எது காணாமல் போனாலும், சம்பளத்தில் பிடிக்கப்பட மாட்டாது.

இத்தனை சலுகைகளும் அறிவித்த பிறகு, 2,000 சம்பளத்துக்கு ஒரு கிழவ னார் வந்து சேர்ந்தார். நடை, பார்வை எதுவும் சரியில்லை. இப்பவோ எப்பவோ கண்டிஷனில் தேகம். பல் மட்டும் உதிராமல் இருந்தது ஒரு ப்ளஸ் பாயின்ட்.

‘புது வாட்ச்மேன் போட்டாச்சு!’ என்ற செய்தி, காட்டுத் தீ போல அடுக்ககத்தின் அத்தனை ஃபிளாட்டுக்கும் பரவி விட்டது. அவரைப் பார்க்க வேண்டுமென்ற ஆவலில், ஒவ்வொரு குடித்தனக்காரர் களும் ஏதோ ஒரு சாக்கு வைத்துக்கொண்டு இறங்கி வந்து, அவரைத் தரிசித்துச் சென்றனர். வேலைக்காரி வைத்துக்கொள்ளாத 6&ம் நம்பர் மாமி, மிஞ்சுவதை இனி கீழே கொட்டுவதற்குப் பதிலாக வாட்ச்மேனுக்குத் தரலாம் என்று சந்தோஷப்பட்டார்.

டியூட்டியில் சேர்ந்த இரண்டாம் நாளே, பெரியவர் வரத் தாமதமாயிற்று. அவருடைய பிள்ளை (பச்சைப் பசேல் பெயின்ட் அடித்த) சைக்கிளில் வந்து, ‘‘அப்பா மேல ஆட் டோக்காரன் இடிச்சுட்டான். ஆஸ்பத்திரிக்கு இட்டுக்கினு போயிருக்காங்க. ரெண்டு நாள்ல டூட்டிக்கு வந்துடுவார். வேற ஆள் போட்டுராதீங்க’’ என்று சொல்லிவிட்டுப் போனான்.

‘‘ஆட்டோ மோதினது வெறும் எபிஸோடா, நிஜமா? எந்த ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்குன்னு சொன்னானா?” என்றார் 2&ம் நம்பர், ஆபீஸ§க்குப் புறப்பட்டுக்கொண்டே!

‘‘ஏன், நீர் வந்து அதை விசாரிக்கிறது! எல்லா எழவுக்கும் இன்சார்ஜ் மண்டையத்தான் உருட்டணுமா?’’

“ஆபீஸ§க்கு டயமாகிறது. உங்களாட்டம் ரிட்டயர்ட் ஃபெல்லோவாக இருந்தால், சாவகாசமாக விசாரிச்சிருப்பேன்’’ என்று நறுக்கென்று நடையைக் கட்டியது நம்பர் 2.

‘‘ஃபெல்லோகில்லோன்னெல்லாம் பேசாதீர்! மைண்ட் யுவர் வேர்ட்ஸ்!’’ என்று இன்சார்ஜ் கத்தினார்.

ஆபீஸ்காரர் விடுவாரா? “ஸ்கெலிட் டனையெல்லாம் வாட்ச்மேன்னு சேர்த்துட்டு, வாய் வேறயா உமக்கு? உம்ம இத்துப்போன சைக்கிள் அதிகபட்சம் பத்து ரூபாய்க்குப் போயிருக்குமா? அது காணாமல் போனதும், என்னவோ கோஹினூர் வைரமே திருட்டுப் போயிட்டாப் பலே, காவலுக்கு என்ன அவசரம்? மீட்டிங் போட்டு வேறு இன்சார்ஜ் செலக்ட் பண்ணணும்னு எல்லாரும் பேசிட்டிருக்கிறது தெரியுமா உமக்கு?’’

‘‘தாராளமா! பெரிய ஜனாதிபதி போஸ்ட் பாரு! சாக்கடை அடைச் சிட்டா உங்க பாட்டனா வந்து அள்றான்? நான் அள்றேன்யா, நான் அள்றேன்! தெரியுமா உமக்கு?’’

‘‘ஃப்ளாஷ் நியூஸ்ல போட்டாங்க, பார்த்தேன்!” என்று நக்கலாகச் சொல்லிவிட்டுக் கிளம்பிச் சென்றார் ஆபீஸ்காரர்.

ராத்திரி ஏழு மணிக்கு டெரஸில் அவசர மீட்டிங் நடைபெறும் என்று சுற்றறிக்கை விட்டார் இன்சார்ஜ். தான் இன்சார்ஜ் பதவியை உடனடியாக ராஜினாமா செய்துவிட்டதாகவும், வேறு யாரையாவது தேர்ந் தெடுத்துக்கொள்ளும்படியும் கோரியிருந்தார்.

இரவு ஏழரை மணி சுமாருக்குக் குடித்தனக்காரர்கள் கூடினர். இன்சார்ஜின் ராஜினாமாவை சபை ஏற்றுக் கொண்டது.

காலையில் நடந்த அசம்பாவித சண்டைகளுக்கு அவரவர் மன்னிப்பு கேட்டுக்கொண்டனர். 12&ம் நம்பரில் உள்ள ஜர்னலிஸ்ட் கம் துணுக்கு எழுத்தாளர் ஒரு யோசனை தெரிவித்தார்…

‘‘இன்சார்ஜ் ராஜினாமா செய்து விட்டதால், இனி வீட்டில் சும்மா தான் இருப்பார். அவரே ஏன் ஹானரரி செக்யூரிட்டியாக வேலை பார்க்கக் கூடாது? யாரோ ஒரு புதுமுகத்தை நியமிக்கிறதுக்குப் பதிலா, நம்ம இன் சார்ஜ் சார்னா விழிப்பு உணர்ச்சி யோடு அக்கறையா, பொறுப்பா வேலை பார்ப்பார். அவர் பதவி பழைய மாதிரியே ‘இன்சார்ஜ்’னு இருந் துட்டுப் போகட்டும். மாசம் 2,500 அவருக்கு ஒரு சாலிட் வருமானம் தானே?’’

இன்சார்ஜ் கண நேரம்கூடத் தாமதிக்காமல் ஒப்புக்கொண்டு விட்டார்.

சபை இனிமையாகக் கலைந்தது. இன்சார்ஜுக்குக் கூடுதலான பட்டம் கிடைத்தது; பணம் கிடைத்தது. வெறும் இன்சார்ஜ், செக்யூரிட்டி இன்சார்ஜ் ஆகிவிட்டார்.

- 19th செப்டம்பர் 2007 

தொடர்புடைய சிறுகதைகள்
பக்கத்து வீட்டில் ஒரு புரொபசர் இருந்தார். புரொபசர்னா புரொபசரே அல்ல; அசிஸ்டென்ட் லெக்சரர் & ஒரு தனியார் கல்லூரியில்! சென்னையிலிருந்து ரெண்டு பஸ் பிடித்து, ரெண்டு மணி நேரம் பிரயாணம் செய்தால், அவரோட காலேஜ் இருக்கிற கிராமம் தெரியும். அப்புறம் பொடி ...
மேலும் கதையை படிக்க...
ஆறாத சுடச்சுட பொங்கலை ஆற அமர அமர்ந்து அப்புசாமி ஒரு வாய் எடுத்துச் சுவைத்திருப்பார். "ஸைலேன்ஸ்!" என்ற மாபெரும் கத்தல் அவரைத் தூக்கிவாரிப்போட வைத்தது. அவரை என்பதைவிட அவர் கையிலிருந்த பொங்கலை. அவருக்கு ஏற்பட்ட அதிர்ச்சியில் பொங்கல் பொட்டலம் துள்ளி மண்ணில் விழுந்து ...
மேலும் கதையை படிக்க...
'கொல்லன் பட்டறையில் ஈக்கு என்ன வேலை?' என்று சீதாப்பாட்டியின் கண்கள் அப்புசாமியை வினவின எரிச்சலுடன். வேறொன்றுமில்லை. அப்புசாமி வழக்கமாகத் தான் படிக்கும் தமிழ் தினசரியைப் படிக்காமல் ஆங்கிலப் பேப்பரைத் தரையில் தாள் தாளாகப் பரத்திக் கொண்டு அதன் மேலேயே ஏறக்குறைய தவழ்ந்தவாறு ...
மேலும் கதையை படிக்க...
காசியை எப்படி நான் வெறுப்பேன்? அவனது முழுப் பெயர் தெரிந்த பின்னும்கூட நான் விரும்பவே செய்தேன். என் சர்க்கரைக்கட்டி, என்னைக் கடைத்தேற்ற வந்த கடவுள் என்றுகூட நினைத்துக் கொண்டேன். கம்ப்யூட்டரில் ஹோம் பேஜ் எதனாலோ சுருங்கித் தொலைத்து நாலு பக்கமும் வெள்ளை வெளேர் ...
மேலும் கதையை படிக்க...
அடிக்கடி காணாமல் போகும் (ஆனால், அடிக்கடி கிடைத்துவிடும்) பொருள்களில் மூக்குக் கண்ணாடிக்குத்தான் முதலிடம். பெரும்பாலான நடுத்தர வயதுக் கணவன்மார்கள், தொலைந்துபோன தங்கள் மூக்குக் கண்ணாடிகளைத் தாங்களே தேடிக்கொள்ள வக்கத்து, வெட்கமில்லாமல் பெண்டாட்டிமார்களின் உதவியை நாடுவார்கள். அப்போது, மனைவியின் மூடு நன்றாக இருந்தால்--தான் ஆச்சு! ‘இங்கேதானே ...
மேலும் கதையை படிக்க...
புரொபசர் சகல சந்தேக நிவாரணி!
அதிரடிக் குரலோன் அப்புசாமி
சிதெய்ங் அப்புங்சாம்ங்
மாறாதவர்கள்!
தேடுங்க… தேடுங்க… தேடிக்கிட்டே இருங்க!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)