வடம் பிடிக்க வாங்க ஜப்பானுக்கு!

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: September 5, 2021
பார்வையிட்டோர்: 18,928 
 

அத்தியாயம்-7 | அத்தியாயம்-8
புள்ளி சுப்புடு பரம திருப்தியோடு ஏப்பம் விட்டுச் கொண்டு வந்தார். 1

“அரண்மனை சாப்பாடு ரொம்ப பலம்போல இருக்கு!” என்றார் மனோரமா.

“ஆமாம்; மனுஷனுக்குச் சாப்பாட்ல கிடைக்கிற திருப்தி வேற எதுலயும் கிடைக்காது. எடைக்கு எடை பொன்னை அள்ளிக்” கொடுங்க. போதும்னு சொல்லமாட்டான். மண்ணை அளந்து கொடுங்க–அதிலும் திருப்தி ஏற்படாது. சாப்பாடு ஒண்ணுலதான் திருப்தி ஏற்படும். ‘போதும் போதும். வயிறு நிரம்பிட்டுது. இனி வேண்டாம்’ என்பான். நம்பூதிரி கதை தெரியுமா உங்களுக்கு?” என்று கேட்டார் புள்ளி.

“தெரியாதே!”

“நம்பூதிரி – ஒருத்தர் விருந்துக்குப் போயிருந்தார். வயிறு கொண்ட மட்டும் சாப்பிட்டார். திருப்தியாயிட்டுது. அந்த நிறைவில் ‘இனிமே சொத்து பத்தெல்லாம் எதுக்கு? அதான் திருப்தியாயிட்டுதே, போதும்’னு சொல்லி தன் சொத்தை’ யெல்லாம் மத்தவங்களுக்கு ‘வில்’ எழுதி வச்சுட்டார்.”

“அப்புறம்?”

“அப்புறம் என்ன? மறுபடி ராத்திரி பசி எடுத்ததும் மனசு மாறிப் போச்சு; ‘வீல்’லை கேன்ஸல் பண்ணிட்டார்”

“இந்த ஜப்பானைப் பார்க்கப் பார்க்க எனக்கு இங்கயே நிரந்தரமா குடியேறிடலாம் போலிருக்கு” என்றார் விழா வேந்தன்,

“கொடியேற்றம் ஆயிட்டுது. இப்பு மெதுவா குடியேற்றத்துக்கு அடி போடறீங்களா?”ன்று கேட்டார் மனோரமா.

“ஜப்பான்ல ஒரு சதுர அடி நிலம் அம்பதாயிரம் டாலர் விலையாம்!” என்றார் புள்ளி.

“அப்படின்னா, இப்ப அம்பதாயிரம் டாலர் சொத்துக்கு நான் அதிபதி!” என்றார் விழாவேந்தன்.

“எப்படி?”

“நான் இப்ப நிக்கற இடம் ஒரு சதுர அடி. நான் இங்கே நிக்கறவரைக்கும் இந்த இடம் எனக்குத்தானே சொந்தம்!”

“ஒரு இஞ்ச்’ நிலத்தைக்கூட வீணாக்காமல் எங்க பார்த்தாலும் பயிர் பண்ணியிருக்கான் ஜப்பான்காரன்” என்றார் புள்ளி.

“இது ரொம்ப சின்ன நாடு. இதுல எங்க பார்த்தாலும் மலை. மிச்சம் இருக்கிற துளியூண்டு இடத்துல குடியிருக்க வீடு, கார் போக ரோடு, ரயில்வே லைன், தொழிற்சாலை, கோயில், ஆறு, காடு மேடு இதெல்லாம் வேற. இவ்வளவும் போக பயிர் பண்றதுக்கும் இடம் இருக்கே, அதான் அதிசயம்!”

VadamPidikka-pic7“இன்னொரு அதிசயம்! ஜப்பான்ல எப்பவுமே அரிசிக்குப் பஞ்சம் கிடையாது. ‘தி ஜாப்னீஸ் பீபிள் வில் நெவர் ஸ்டார்வ்’னு பெருமையாச் சொல்லிக்கிறாங்க.”

“பணப் பஞ்சம், சாப்பாட்டுப் பஞ்சம் இரண்டும் இல்லாத இந்த நாட்டில ஒரே ஒரு பஞ்சம்தான். அது இடப் பஞ்சம்!”

“நம் நாட்டில இடத்துக்குப் பஞ்சம் இல்லே. மிச்ச ரெண்டுக்கும்தான் திண்டாட்டம்!” என்றார் புள்ளி.

“ஒண்ணு செய்யலாமா? கொஞ்ச காலத்துக்கு இந்த ஜப்பான்காரங்களை இண்டியாவில் குடியேறச் சொல்லிட்டு நாம ஜப்பானுக்கு வந்துரலாமா?” என்று கேட்டார் விழா வேந்தன்.

“ஏன்? ஜப்பான் நல்லாயிருக்கிறது உங்களுக்கெல்லாம் பிடிக்கலையா?” என்று கேட்டார் மனோரமா.

“எவ்வளவு முன்னேறினாலும் ஜப்பானியர் ‘தங்களுடைய பழமைச் சின்னங்களை மட்டும் மறப்பதில்லை”

“அது மட்டுமில்லே. நன்றி பாராட்டுவதிலும் இவங்களை யாரும் மிஞ்சிட முடியாது. நாம் வள்ளுவர் குறளைச் சொல்லி, நன்றி பற்றி வாய் கிழியப் பேசுவோம். எல்லாத்துக்கும் ‘தாங்க்ஸ்’னு சுலபமா ஒரு வார்த்தையைச் சொல்லிட்டுப் போயிடுவோம். நம் நன்றியெல்லாம் வாயோடு சரி. காரியத்துல ஒண்ணும் இருக்காது.. ஜப்பான்காரங்க அப்படியில்லை. அவங்களுக்கு நன்றி உணர்வு ரத்தத்தில ஊறிப் போயிருக்கு. அதுக்கு அடையாளமாத்தான் இந்த ஊர்ல நாய்க்கு ஒரு சிலையே செஞ்சு வெச்சிருக்காங்க.”

“காய்க்குச் சிலையா? அது எங்கே?” என்று வியந்தார் நன்னன்.

“நான் உங்களையெல்லாம் இப்பவே ஷிபுயா ஸ்டேஷனுக்கு அழைச்சிட்டுப் போய் அந்த நாய்ச் சிலையைக் காட்றேன் வாங்க” என்று கூப்பிட்டார் திருக்குறள் ஷோஜோ.

“ரைட் கைவசம் பூமாலைகள் கூட நிறைய இருக்கு. இப்பவே போய் அந்த நாய்ச் சிலைக்கு ஆளுக்கொரு மாலை போட்டுட்டு வந்துருவோம், வாங்க” என்றார் நன்னன்.

“மாலை போடறப்போ போட்டோ எடுக்கணுமே” என்றார் விழாவேந்தன்.

“புள்ளி சுப்புடு வராரே! அவர் எக்ஸ்பர்ட் போட்டோ கிராபர் ஆச்சே!”

VadamPidikka-pic8“நாய்க்கு மாலை போடுவதா? அது சரியா இருக்குமா” என்று கேட்டார் மனோரமா.

“நம் நாட்டில் ஜுனகாத் மகாராஜா நாய்க்குக் கலியாணமே செஞ்சுவெச்சார். நாம மாலை போடக் கூடாதா?” என்று கேட்டார் புள்ளி.

“அது நாய்க்குப் போடும் மாலைன்னு ஏன் நினைக்கணும்? நன்றி உணர்வை மதித்துப் போடும் மாலைன்னு நினைக்கக் கூடாதா?” என்றார் நன்னன்.

“ஒன்றே சொன்னார் நன்னன். அதுவும் நன்றே சொன்னார் மன்னன்” என்று தம் தமிழ்ப் புலமையைக் காட்டினார் திருக்குறள் ஷோஜோ!

“நம் ஊரில் நன்றி கெட்ட மனுசங்களுக்கே மாலை போடறாங்களே! அதைவிட நன்றியுள்ள நாய்க்கு மாலை போடறது தப்பா?” என்று கேட்டார் முத்து. * எல்லோரும் ஷிபுயா ரயில் ஸ்டேஷனுக்குப் போய், அந்த நாய்ச் சிலைக்கு மாலை போட்டபின், அந்தச் சிலைக்குப் பக்கத்திலேயே நின்று போட்டோ எடுத்துக்கொண்டார்கள், – “நாயின் முகத்தில் ஒரு சோகம் தெரிகிறதோ அந்த சோக பாவத்தைச் சிலையில் எப்படித்தான் கொண்டு வந்தார் களோ!” என்று வியந்தார் கணபதி ஸ்தபதி.

“எதையோ பறிகொடுத்த மாதிரி முகத்துல ஒரு சோகம்!” என்று பரிதாபப்பட்டார் மனோரமா.

“ஆமாம்; அந்த நாயின் எஜமானர் ஒரு புரொபஸர். அவர் இறந்து இன்றோடு அறுபத்தஞ்சு வருஷம் ஆகுது. பாவம். இந்த நாய்க்கு அப்ப இரண்டரை வயது தான்” என்றார் புள்ளி சுப்புடு.

“அது சரி, சிலையை இந்த ஸ்டேஷன் வாசலில் கொண்டு வந்து வெச்சிருக்காங்களே, அதுக்கு என்ன காரணம்?”

“அந்த புரொபஸர் தினமும் இந்த ஸ்டேஷனுக்கு வந்து தான் ரயிலேறுவார். காலைல எட்டு மணிக்கு இங்க ரயில் ஏறி யுனிவர்ஸிடிக்குப் போவார். அப்புறம்’ சாயந்திரம் அஞ்சு மணிக்குத் திரும்பி வருவார். காலையில் வீட்டிலிருந்து அவரோடு துணைக்கு வரும் அந்த நாய் அப்புறம் சாயந்திரம் அவர் யுனிவர்ஸிடியிலிருந்து திரும்பி வர வரைக்கும் இங்கேயே காத்துக் கிடக்கும்.”

“த்ஸொ, த்ஸொ!” என்றார் நன்னன்.

“த்ஸொ, த்ஸொன்னாதீங்க! இதோ இங்க கீழே நிக்குதே ஒரு நாய், அது வாலாட்டுது!!” என்றார் மனோரமா.

“அப்புறம்?” என்று சவாரசியமாய்க் கேட்டார் முத்து.

“அப்புறம் என்ன? ஒரு நாள் யுனிவர்ஸிடிக்குப் போன புரொபஸர் திரும்பி வரவேயில்லை. மாரடைப்பு காரணமா யுனிவர்ஸிடியிலேயே இறந்து போயிட்டார். அவரை அங்கேயே அடக்கம் செய்துட்டாங்க. அந்தச் செய்தியை நாய்க்குச் சொல்லுவார் யாருமில்லை. எ ஜமானனைக் காணாத ‘ச்சிகோ’ங்கற இந்த நாய் ஸ்டேஷன்லயே வெகுநேரம் வரை பட்டினியோடு காத்திருந்துவிட்டு சோகத்துடன் வீட்டுக்குத் திரும்பிச் சென்றது. மறுநாள் எஜமானன் இல்லாமலே காலை எட்டு மணிக்கு வழக்கம்போல் வந்து மாலை ஐந்து மணிவரை காத்திருந்துவிட்டு திரும்பிச் சென்றது. இப்படியே பத்து வருட காலம், அது உயிரோடு இருந்தவரை தினமும் வந்து போய்க் கொண்டிருந்தது. எஜமானரைப் பிரிந்த அந்த சோகம்தான் அதன் முகத்தில் தெரிகிறது. அதற்குத்தான் இங்கே சிலை வைத்திருக்கிறார்கள்” என்றார் ஷோஜோ. “அடடா, இப்படி ஒரு நாடா!” என்று வியந்தார் நன்னன்.

“நான் கூட ஒரு நாய் வளர்த்தேன். அதுவும் தின மும் நான் ஆபீஸுக்குப் போறப்பல்லாம் தெருக்கோடி வரை என் கூடவே வந்து வழி அனுப்பும்” என்றார் புள்ளி சுப்புடு.

“தெருக்கோடி வரைக்கும் தரனா? அப்புறம் பஸ் ஏறிடுவீங்க போலிருக்கு” என்றார் மனோரமா.

தெருக்கோடியில ஒரு வெத்தலை பாக்குக் கடை இருக்கு. அங்கே ‘அதுக்கு தினமும் ஒரு பொரை பிஸ்கட் ‘வாங்கிப் போடுவேன். அதுக்காக வரும். அதைச் சாப்பிட்டுட்டு அங்கிருந்து திரும்பி ஓடிப்போயிடும்!”

“தேவலையே! வீட்டுக்கே போயிருமா?”

“எங்க வீட்டுக்குப் போகாது. அடுத்த வீட்ல போய்ப் படுத்துக்கும்”

“பொரைக்கு உங்க கூட வரும். காவலுக்கு அடுத்த வீட்டுக்குப் போயிருமா? நன்றி இடம் மாறிப் போச்சு போலிருக்கு” என்றார் மனோரமா.

“நன்றியாவது, மண்ணாவது, அதெல்லாம் ஒண்ணும் கிடையாது. அடுத்த வீட்ல பெரிய வேப்ப மரம் இருக்கு. வேப்ப மரத்து நிழல்ல சுகமா படுத்துத் தூங்கறதுக்காக அங்கே ஓடிப் போயிடும். அவ்வளவு சயநலம்” என்று முடித்தார் புள்ளி.

***

பல நாட்கள் பென்னட் சுறுசுறுப்போடு இயங்கினான். அடிக்கடி அகிஹாபாரா (எலெக்ட்ரானிக் கொத்தவால் சாவடி) போய் தனக்குத் தேவைப்பட்ட நுட்பமான கருவிகளை வாங்கி வந்தான். ,டிராயர் முழுதும் அவை நிரம்பிக்கிடந்தன. இரவில் வெகு நேரம் கண் விழித்து அவற்றை ஒன்றுக்கொன்று பொருத்திப் பார்ப்பதும் பிரித்துப் பார்ப்பதுமாக இருந்தான்.

ஒருநாள் டெலிபோன் செய்து “ஜார்ஜ்! அதைச் செய்து முடித்துவிட்டேன். வந்து பாரு” என்றான்.

மேனஜ மீது கன கச்சிதமாக ஒரு பெட்டி உட்கார்ந்திருந்தது.

ஏழு அங்குல ஐந்து அங்குல அளவுகள். மூடியை மட்டும் திறந்து காட்டினான்.

பென்னட்டின் மூளையைத் திறந்து காட்டினாற் போல இருந்தது. அத்தனை ஒயர்களும் இணைப்புகளும் உள்ளே நுணுக்கமாகப் பரவியிருந்தன.

“இதை அப்படியே தேர் அச்சுக்கட்டையிலே வச்சுட, வேண்டியதுதான். ‘வெரி ஸிம்பிள்!” என்றான் பென்னட்.

“என்ன செய்யும்?” என்றான் ஜார்ஜ்.

“ரிமோட் கண்ட்ரோல் இருக்கு. தூரத்திலிருந்தே விசையை அமுக்கினால் போதும்.”

“அப்போ வெடிக்குமா?”

“ஆமாம்! மேல்புறமா வெடிக்காது. நேர் முன்புறமா, வெடிக்கும் பயங்கரம்! முப்பது நாற்பதடிக்கு உள்ளவங்க எல்லாரும் க்ளோஸ்!”

“ஐயோ”

“என்ன ஐயோ? இந்த வேலைக்கு வந்தா ‘ஐயோ’க்களை மறந்துட வேண்டியது தான். தெரிஞ்சுதா! பிரெஞ்ச் பிரசிடெண்ட் வரது நிச்சயமாயிட்டுதா?”

“கிஜிமாவிடம் கேட்டேன் உறுதி ஆயிட்டதாச் சொன்னாள். தேதி மட்டும் நிச்சயமாகலையாம்!”

“அவரைத்தான் குளோஸ் பண்றோம்”

திடுக்கிட்டான் ஜார்ஜ்.

“அவரையா!”

“ஆமாம்!. அதுக்குத்தான் ஒண்ணரை மில்லியன் டாலர் கூலி”

ஜார் ஜின் மனம் பரபரத்தது!

பிரெஞ்சு பிரசிடெண்ட்தான் இப்போதைய இலக்கு என்று தெரிந்துவிட்டது. அவரைத் தீர்த்துவிட்டால் நல்ல வருமானம் கிடைக்கப் போகிறது.

வருமானத்தை எடுத்துக்கொண்டு சொந்த ஊர் போகலாம் ஹோனோலூலு அல்லது லா வேகாஸ் போய் உல்லாச விடுமுறை அனுபவிக்கலாம்!

“ஏன், பாஸ். இது வெறும் ‘டைம்-பாம்’தானே? இதுக்கா இத்தனை நாள் சிரமப்பட்டீங்க?”

“டைம்-பாம் மட்டுமில்லை! ஆளைப் பார்த்து ஃபோகஸ் பண்ணிக்கொள்ளக் கூடிய ஸென் ஸார் உண்டு!”

“அப்படியா”

“பிரெஞ்ச் பிரஸிடெண்ட் முகத்தை இது அடையாளம் கண்டுபிடிக்கும். கண்டுபிடிச்சவுடனே நம்ம கையிலே இருக்கிற ரிமோட் கருவியிலே பச்சை விளக்கு எரியும்! நாம்ப உடனே ட்ரிகரை அழுத்த வேண்டியது தான் நேரே பிரஸிடெண்ட் மார்பிலே இந்தக் கருவி குண்டைப் பாய்ச்சிடும்…”

“பிரமாதம் பாஸ்!”

“இப்போ அதைத் தேரிலே வெச்சாகணும்! தேர் அடிப் பாகங்களை நீ விஸ்தாரமா போட்டோ எடுத்து வந்தது ரொம்ப நல்லதாப் போச்சு! அந்தக் கருவியை தேரில் எங்கே வைக்கணும் தெரியுமா? இத பார்…”

பெரிய சைஸ் போட்டோக்களில் ஒன்றை எடுத்துக் காட்டி “இதுதான் அச்சு ஓடற ‘பீம்’, எவ்வளவு பெரிய மரக்கட்டை பாரு! இந்தியா, பர்மா, தாய்லாந்திலேதான் இதெல்லாம் கிடைக்கும். இந்த இடத்திலே தான் நீ இந்தக் கருவியை வைக்கிறே.”

அந்த இடத்தைக் காண்பித்தான்.

“பாஸ்! தேர்ப் பக்கம் இனி போகவே முடியாது. நேத்து கொடியேற்றத்துக்காக விட்டாங்க, அவ்வளவுதான். அதோடு சரி. அங்கே பலத்த பந்தோபஸ்து போட்டாச்சு!”

“மடையா! என் கிட்டே வந்து காது குத்தறயாக்கும்! இன்னிக்கு அந்த இடத்தில் பிரஸ்மீட் இருக்கு! தேருக்குப் பக்கத்திலயே வச்சிருக்காங்க. டீ ஸ்காக்ஸ் உண்டு.”

“ஆமாம், பாஸ்!”

“ஜார்ஜ்| நீ இன்று பிரஸ் பிரதிநிதியாகத்தான் போறே, கிஜிமா தயவிலே! தெரிஞ்சுக்க, இதுக்குத்தான் உன்னை கிஜிமாவோடு சிநேகம் வச்சுக்கும்படி சொன்னேன். ஜாலியா லவ் பண்ணி, கல்யாணம் கட்டிக்கிட்டு இங்கே ஜப்பான்லே உட்கார்ந்துடலாம்னு நினைக்காதே!”

ஜார்ஜின் அடி வயிறு கலங்கியது. ஏற்கெனவே தேரின் அடிப்பகுதிகளைப் போட்டோ எடுப்பதைப் பார்த்து கிஜிமா கேள்வி கேட்டிருக்கிறாள். லேசா ஒரு சந்தேகம் இருக்கலாம். ‘என்ன ஜார்ஜ்! வெறும் அச்சுத் தண்டையும் அடிப்பகுதியையும் போட்டோ எடுத்துக்கிட்டிருக்கீங்க’

இப்போது பிரஸ்மீட்டில் கலந்துகொண்டு அப்படியே தேருக்கு அடியில் போய் இந்தக் கருவியைப் பொருத்துவ தென்றால்…

“ஜார்ஜ்! இப்பத்தான் நீ ரொம்ப உஷாரா வேலை செய்யணும். உன் திறமையை இதில்தான் பார்க்கப் போகிறேன். உம்; புறப்படு. உடனே போய் கிஜிமாவைப் பார்த்து பிரஸ் பாஸ் வாங்கிக்கொள். போய்க் காரியத்தை முடி. கமான்” என்றான் பென்னட்.

பென்னட் உத்தரவைத் தட்டமுடியாமல் “இதோ பாஸ்” என்றான்!

***

‘பிரஸ் மீட்’ முடிந்து கருகரு இருட்டில் ஜார்ஜ் அறைக்குத் திரும்பும்போது, பென்னட் தீவிரமான கவலையுடன் நாற்காலியில் சாய்ந்திருந்தான்.

செய்தியைச் சொன்னால் பென்னட்டுக்குக் கோபம் வந்து விடும் என்று அஞ்சினான் ஜார்ஜ். ஆனாலும் சொல்லாமலிருக்க முடியவில்லை.

எதிரில் மெள்ள, நிழலாக நின்று, மெலிதான குரலில் “பாஸ்” என்றான்.

பென்னட் பேசவில்லை. இரண்டாம் முறை அழைத்ததும் ‘ஹூம்’ என்றான் பலவீனத்தில்.

“ஸாரி ரொம்ப வருத்தப்படறேன். என்னாலே முடியாமல் போச்சு!”

பென்னட் பேசவில்லை. அப்படியே உட்கார்ந்திருந்தான்.

ஜார்ஜுக்குப் பதட்டம் எடுத்தது. நிற்க முடியவில்லை. என்ன நடக்குமோ என்று பயம் உள்ளே நெருப்பைக் கொட்டியது.

லேசாக ஒரு மௌன அடி வைத்து முன்னால் வந்தான். முன்னிலும் மெலிதாக “ஸாரி, பென்னட் முடியாமல் போச்சு” என்றான்.

பென்னட் மெதுவாகத் தலையைத் தூக்கினான். அவன் பார்வையைச் சந்திக்கும் தைரியம் இன்றி தலையைக் கவிழ்த்துக் கொண்டான் ஜார்ஜ். கண்களில் கலக்கம்.

“பரவாயில்லை; வருத்தப்படாதே. இன்னொரு வழி இருக்கிறது” என்றான் பென்னட்.

ஜார்ஜ் அந்த பதிலை எதிர்பார்க்கவில்லை. “வருத்தப் படாதே ஜார்ஜ்! நீ எவ்வளவோ முயற்சி பண்ணினே! ஆனா வைக்க முடியலை! அதற்குச் சரியான சந்தர்ப்பம் கிடைக்கலே. எனக்கு எல்லாம் தெரியும். அந்த கிஜிமா துறுதுறுன்னு உன்னையே கவனித்துக் கொண்டிருந்தாள், இல்லையா?”

ஜார்ஜால் நம்பக்கூட முடியவில்லை, ‘பென்னட் குரலா அது? அவனா இப்படிப் பேசுகிறான்? இத்தனை சமாசாரங்களும், எப்படித் தெரிந்தன இவனுக்கு!’

“பயப்படாதே! சமயத்திலே சந்தர்ப்பம் அப்படித்தான் எதிரிடையா அமையும். அதற்காகச் சோர்ந்துவிடக் கூடாது. உடனே தீவிரமாச் சிந்தித்து ஒரு வழி கண்டுபிடிச்சுடலாம். இப்போ எனக்கு ஒரு விஷயம் சொல்லு!… பிரஸ்மீட் முடிஞ்சப்புறம் யாரிட்டியோ பேசிட்டிருந்தியே, அது யார்!”

ஜார்ஜின் முகம் லேசாக மலர்ந்தது..”அது அந்த இந்தியக் குழுவோடு வந்துள்ள ஆளுங்க! ஏதோ புள்ளின்னு பேர் சொல்றார்”

“கையிலே காமிரா வச்சுட்டுப் பேசிட்டிருந்தார், அவர் தானே!”

“ஆமாம் பாஸ்! என் காமிராவைப் பார்த்து விசாரிச்சான்! பதில் சொன்னேன். காமிராக்களைப் பத்தி நிறையத் தெரிஞ்சு, வச்சிருக்கான். நாளைக்குக் கூட்டத்திலே வர்ற வெளிநாட்டுத் தலைவர்கள் அத்தனை பேரையும் போட்டோ எடுக்கப் போறதாச் சொன்னான்.”

“ஓ! எப்படி, எங்கிருந்து எடுக்கப் போறானாம்?”

“தேர் மேலேயே ஏறி நின்னு எடுக்கப் போறானாம். இண்டியன் பார்ட்டியில முக்கியமான ஆளாத் தெரியுது”.

“அப்படியா?”

“ஆமாம்! தேர்த் தட்டிலே நிற்கிறதுக்கு அவங்க எல்லாருக்குமே பர்மிஷன் இருக்காம்.”

பென்னட் அடுத்த கணம் ஆழ்ந்த யோசனையுடன் முன்னும் பின்னும் நடக்க ஆரம்பித்தான்.

பெரிய திட்டத்திற்கான யோசனை அது என்பது ஜார்ஜுக்குப் புரிந்துவிட்டது.

பதினைந்து நிமிடத்திற்கெல்லாம் மேஜைமீது போய் உட்கார்ந்த பென்னட் மீண்டும் அந்த எலக்ட்ரானிக் கருவிகளை ஆராயத் தொடங்கினான்.

– தொடரும்…

முதற் பதிப்பு – ஜனவரி 1991

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *