வசூலான வாடகை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: April 16, 2021
பார்வையிட்டோர்: 2,725 
 

கதை கேட்க: https://www.youtube.com/embed/JL8ZLhE7PjU

(1964ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

வாசகர்களுக்கு

இருபத்தைந்து ஆண்டுகளுக்குமுன் நான் எழுத் துலகில் ஈடுபட்ட காலத்தில் எழுதிய கதைகள் சில மெளனப் பிள்ளையார் என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிடப்பட்டது. இப்போது அதையே திரு.கோபுலுவின் அற்புதமான சித்திரங்களுடன் இரண்டாம் பதிப்பாக மங்கள நூலகத்தார் கொண்டு வந்துள்ளார்கள். திரு. கோபுலுவுக்கும் மங்கள நூலகத்தாருக்கும் என் நன்றி. இந்தப் புத்தகத்தில் அடங்கியுள்ள கதைகளைச் சமீபத்தில் ஒரு முறை படித்துப் பார்த்தேன். சில இடங்களில் இவ்வளவு நன்றாக எழுதியிருக்கிறோமே ? என்றும், சில இடங்களில் இந்தக் கதையை இப்போது எழுதியிருந்தால் இன்னும் நன்றாக எழுதியிருக்கலாம் என்றும் தோன்றியது. இப்புத்தகம் முதன் முறை வெளியானபோது இதைப் படித்த ரசிகமணி டி. கே. சி. அவர்கள் என் எழுத்துத் திறமையைப் பாராட்டி மிக அருமையான கடிதம் ஒன்று எழுதியிருந்தார்கள். எதிர் காலத்தில் நான் ஒரு சிறந்த நகைச்சுவை ஆசிரியராக விளங்குவேன் என்றும் அந்தக் கடிதத்தில் அவர்கள் என்னே வாழ்த்தியிருந்தார்கள். இச்சமயம் அவரை நினைவு கூர்ந்து அஞ்சவி செலுத்துகிறேன்.
மயிலாப்பூர்
சாவி
14-4-1964

வசூலான வாடகை

“இரண்டு பெரிய அறைகள், ஒரு கூடம் இந்தத் தாழ்வாரத்திலும் பாதியை நீங்கள் உபயோகித்துக் கொள்ளலாம். வாடகை பன்னிரண்டு ரூபாயாகிறது. இந்தத் தெருவில் இவ்வளவு மலிவாக வேறு எங்குமே இடம் கிடைக்காது” என்று சபாபதி அய்யர் வருபவர்களிடம் சொல்லிச் சொல்லிப் பாடமாய்ப் போன மேற்படி வார்த்தைகளை அன்று புதிதாக வீடு பார்க்க வந்தவரிடமும் ஒப்பித்தார்.

“ஒஹோ ! இந்தச் சமையலறையில் புகை போகாது போலிருக்கே? ரேழி அறையில் வெளிச்சத்தைக் காணாமே? காற்றும் வராதோ? கொடி கட்டுவதற்கு வசதி இல்லையே? வாடகை என்ன சொன்னீர்கள் ? பன்னிரண்டு ரூபாயா? அப்பாடா! தனி வீடு பார்க்கலாம் போல் இருக்கே! துவையல் அரைக்க வேண்டுமென்றால் அம்மியைக் காணோம். எனக்குத் துவையல் என்றால் உயிராக்கும்! இந்த வீட்டுக்குக் குடி வந்தால் துவையல் சாதத்தை விட்டு விடணும் போலி ருக்கு ! குழாயில் மணிக்கு எத்தனை படி ஜலம் சொட்டும்?” என்று வந்தவர் கேள்விமேல் கேள்வியாகக் கேட்டுச் சபாபதி அய்யரின் இடுப்பை ஒடித்தார்.

சபாபதி அய்யர் இதற்கெல்லாம் சளைக்கவில்லை. இவரைப் போல் அவர் எத்தனையோ பேர்களைப் பார்த்திருக்கிறார். “அதெல்லாம் இல்லைங்காணும்! ஜன்னலைத் திறந்து விட்டால் போதும். காற்று சிண்டைப் பிய்த்துக் கொண்டு, போகும்” என்றார்.

Vasoolana Vadakaiஅவர் அப்படிச் சொல்லி முடிப்பதற்குள் வந்தவர் தமது தலையைத் தடவிக் கொண்டார். நல்ல வேளையாகத் தமக்கு வழுக்கைத் தலை என்று ஞாபகம் வந்ததும் சந்தோஷப்பட்டுக் கொண்டார்!

சபாபதி அய்யர் மேலும், “புகை போகவா இடமில்லை? கரியடுப்பில் சமைத்துக் கொள்கிறவர்களுக்குத்தான் இங்கே வாடகைக்கு விடுகிறது. எல்வாருக்கும் பொதுவாகப் பின் கட்டில் ஓர் அம்மி இருக்கிறது. அங்கே போய் உமக்கு வேண்டிய துவையலை அரைத்துக் கொள்ளும்” என்றார்.

இரண்டு பேரும் பேசி ஒரு முடிவுக்கு வந்த பிறகு சபாபதி அய்யர் வீடு பார்க்க வந்தவரிடமிருந்து ‘ அட்வான்ஸ்’ பணம் பன்னிரண்டு ரூபாயை வாங்கிக் கொண்டார். முன் பணம் கொடுத்துவிட்டுப் போன சங்கர ராவும் முதல் தேதி யன்று சக குடும்ப சமேதராய்ச் சபாபதி அய்யர் விட்டில் கிரகப் பிரவேசம் செய்தார்.

சபாபதி அய்யர் வீட்டில் மூன்றுமாத காலமாகக் காலி பாய்க் கிடந்த பாகம் இப்போது வாடகைக்கு விட்டாயிற்று. அவரது தம்புலிங்கத் தெரு 78-ம் நெம்பர் வீட்டிலிருந்து இனி மாதம் பிறந்தால் முழுசாக 65 ரூபாய் வாடகை கிடைத்து விடும்.

கடந்த ஆறு மாதத்துக்கு முன்பு வரையில் சபாபதி அய்யர் மேற்படி வீட்டில் தான் குடியிருந்தார். அப்போதெல் வாம் அவர் சர்க்கார் உத்தியோகத்தில் இருந்தார். மாதச் சம்பளம் 150 ரூபாய் கிடைத்தது. அவர் இப்பொழுது பரிடையர்’ ஆகிவிட்டதால் பென்ஷன் பணத்தை வைத்துக் கொண்டு குடும்பச் செலவு போக, பாங்கியில் பணம் போட்டு வைக்க முடியாதாகையால், தம்முடைய வீட்டை வாட கைக்கு விட்டு விட்டுக் கோடம்பாக்கத்தில் தமக்காக 26

சலில் ஒரு தனி வீட்டைப் பார்த்துக் கொண்டார். தம்முடைய வீட்டிலிருந்து வந்த வாடகை 65 ரூபாயில் 27 ரூபாய் போலுைம் மிச்சப் பணம் லபந்தானே? இந்த உத்தேசத்தோடுதான் அவர் கோடம்பாக்கத்துக்குக் குடி போனர்.

சென்ற மூன்று மாத காலமாக, சபாபதி அய்யர் வீட்டில் ஒரு பாசம் காலியாகவே இருந்ததால் மாதம் பன்னிரண்டு ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறதே என்று அவர் நினைத்துக்கொண் மருந்து சமயத்தில்தான், சங்கர ராவ் அந்த பாகத்தை வந்து பிடித்துக் கொண்டார். ஆனால் குடி வந்து மாதம் இரண் டாகியும் ஒரு தம்படி.கூட, அவர் வாடகை கொடுக்கவில்லை.

வீட்டுக்காரர் ஒரு மாதம் பொறுத்தார் ; இரண்டுமாதம் காத்திருந்து பார்த்தார் ; மூன்றாவது மாதம் சங்கர ராவுக்கு ஆள் அனுப்பினார். சரியான பதில் கிடைக்காததால் கோடம்பாக்கத்திலிருந்தபடியே ராவுக்கு ஒரு கடிதமும் எழுதினார். அதற்கும் சரியான பதில் இல்லாமற் போகவே, சபாபதி அய்யருக்கு அசாத்தியக் கோபம் வந்துவிட்டது. கோடம்பாக்கத்திலிருந்து புறப்பட்டு வந்து சங்கர ராவைக் கண்டு கண்டிப்பாகப் பேசினார். சங்கர ராவ் சாவதானமாக, “உம்முடைய பணம் எங்கேயும் போய்விடாது. பெட்டியில் இருக்கிற மாதிரி நினைத்துக்கொள்ளும். அடுத்த மாதம் எப்படியும் கொடுத்து விடுகிறேன்” என்று சமாதானமாகப் பதில் சொல்லி அனுப்பினார்.

இதற்குள் வெயில் காலம் வந்து விட்டதால் சபாபதி அய்யருக்குக் கோடம்பாக்கத்தில் வசிக்க முடியவில்லை. வெயில் தீக்ஷண்யம் அங்கே பொறுக்க முடியாமல் இருந்தது. வாடகை கொஞ்சம் அதிகமானாலும் பாதகமில்லை என்று பூந்தமல்லியில் வீடு பார்க்க ஆரம்பித்தார்.

அநேக தெருக்களைச் சுற்றிப் பல வீடுகள் ஏறி இறங்கின பிறகு, கடைசியாக ஒரு வீடு அவர் மனத்துக்குப் பிடித்தமா யிருந்தது. வெளித் தாழ்வாரத்து ஜன்னல் கம்பிகளில் கட்டப்பட்டிருந்த ‘டுலெட்’- போர்டைக் கவனித்தார். “முப்பது ரூபாய் வாடகை. முழு விவரத்திற்கு ஜார்ஜ் டவுன் தம்புலிங்கத் தெரு 78-ம் நெம்பர் வீட்டில் விசாரிக்கவும்” என்று அதில் விவரம் கொடுக்கப்பட்டிருந்தது.

அதைக் கண்டதும் சபாபதி அய்யருக்கு ஒன்றும் புரியவில்லை. “தம்புலிங்கத் தெரு 78-ம் நெம்பர் வீடு நம்முடைய தல்லவா? அங்கே யாரை விசாரிப்பது? ஒரு வேளை அங்கே குடியிருப்பவர்களின் சொந்தக்காரர்கள் அல்லது சிநேகிதர் களின் வீடா யிருக்குமோ?” என்று யோசித்துப் பார்த்தார். உடனே கிளம்பிச் சென்று தம் வீட்டில் விசாரித்ததில் அது சங்கரராவுடைய வீடு என்று தெரிந்தது.

சொந்த வீட்டை வாடகைக்கு விட்டுவிட்டுத் தான் ஒண்டுக்குடித்தனம் செய்து கொண்டிருந்தார் சங்கர ராவ், அவருக்கு வேலை வெட்டி கிடையாது. மனைவி வகையில் வந்த அந்த வீடு அவருக்குச் சொந்தமா யிருந்தது. பத்துப் பன் னிரண்டு ரூபாயில் கூட்டுக் குடித்தனம் இருந்துகொண்டு சொந்த வீட்டு வாடகைப் பணத்தைக் கொண்டு காலக்ஷேபம் பண்ணலாமல்லவா? அந்த உத்தேசத்துடன் தான் சங்கர ராவ் பூந்தமல்லியிலிருந்த தமது வீட்டில் ‘டு லெட்’ போர்டைத் தொங்கவிட்டு, ஜார்ஜ் டவுனுக்குக் குடி வந்து சேர்ந்தார். மேற்படி வீடு அதுவரையில் காலியாகவே இருந்ததால்தான் சங்கர ராவால் அவர் குடியிருந்த வீட்டு வாடகையைக் கொடுக்க முடியவில்லை .

இந்த விவரங்களை யெல்லாம் தெரிந்து கொண்ட பிறகு சபாபதி அய்யர் சங்கர ராவையும் அழைத்துக்கொண்டு பூந்தமல்லிக்குப் போய் அந்த வீட்டைத் திறக்கச் சொல்லி வீடு பூராவும் பார்வையிட்டார். சங்கர ராவ், “மொத்தம் ஆறு அறைகள். இது கூடம். இந்தத் தாழ்வாரம் பூராவை யும் உபயோகித்துக் கொள்ளலாம். இதோ பார்த்தீர்களா பேஷான அம்மி! குழாயில் பாருங்கள், ஜலம் நீர்வீழ்ச்சி மாதிரி கொட்டுகிறது. துணி உலர்த்தக் கொடி எவ்வளவு சௌகரியமா யிருக்கிறது, பாருங்கள். வாடகை முப்பதே ரூபாய்தான். இந்தப் பக்கத்தில் இவ்வளவு மலிவாக வேறு வீடே கிடைக்காது” என்று சபாபதி அய்யர் தனக்கு முன்பு ஒப்பித்த பாடத்தை இப்போது திருப்பிச் சொன்னார் சங்கர ராவ்.

“அதெல்லாம் சரிதாங்காணும். இந்தச் சமையலறையில் புகைபோக இடமில்லையே?” என்று சபாபதி அய்யர் கேட்டார்.

“புகையா? அடுப்பு மூட்டி இங்கே சமையல் செய்யக் கூடாது. கரியடுப்பில்தான் சமையல் நடக்கணும். காற்றைப் பார்த்தீர்களா? எவ்வளவு கணக்காக வீசுகிறது இங்கே?” என்று குத்தலாகச் சொன்னார்.

இருவரும் ஒருவிதமாகப் பேசி முடித்ததும் சங்கர ராவ் சபாபதி அய்யரிடமிருந்து முன்பணமாக ஆறு ரூபாய் வாங்கிக் கொண்டார். ஏனென்றால், சங்கர ராவ் சபாபதி அய்யருக்கு இரண்டு மாத வாடகை பாக்கி தரவேண்டி யிருந்ததல்லவா? அந்தப் பாக்கி போக ஆறு ரூபாயே கொடுத்தார் சபாபதி அய்யர்.

சங்கர ராவ் சமயத்தை நழுவவிடாமல், “பார்த்தீராங் காணும்? உம்முடைய பணம் எங்கேயும் போய்விடாது. பெட்டியில் இருக்கிற மாதிரி நினைத்துக்கொள்ளும் என்று சொன்னேனே! நான் சொன்னபடியே இப்போது பிடித்துக் கொண்டீரல்லவா?” என்று இடித்துக் காண்பித்தார்.

– மௌனப் பிள்ளையார், இரண்டாம் பதிப்பு: ஏப்ரல், 1964, மங்கள நூலகம், சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *