லிண்ட்சே லோஹன் W/o மாரியப்பன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: September 2, 2012
பார்வையிட்டோர்: 13,231 
 

ஆதினத்தின் கனவுகளில் மட்டும்தான் சிவபெருமான் வருவார் என்று நீங்கள் நினைத்தால் அதற்கு நானும் மாரியப்பனும் ஜவாப்தாரியாக முடியாது. மாரியப்பனின் கனவில் வந்த சிவபெருமான் பேசாமலாவது போய் இருக்கலாம் ஆனால் ”நீ முயற்சி செய்தால் லிண்ட்சே லோஹனுக்கு கணவனாக வாழ்க்கைப்படலாம்” என்று லிட்டர்கணக்கில் பெட்ரோலை ஊற்றி கொளுத்திப்போட்டுவிட்டார். பெட்ரோல் விலை லிட்டருக்கு வெறும் 27 ரூபாயாக இருந்த 2002 ஆம் ஆண்டில்தான் மாரியப்பனுக்கு இந்தக் கனவு வந்தது.

அதற்கும் இரண்டரை வருடங்களுக்கு முன்பாக வள்ளியாம்பாளையத்தில் இருந்து எண்ணெய்த் தலையும் ரப்பர் செருப்புமாக இன்ஜினியரிங் கல்லூரியில் சேர்வதற்காக மாரியப்பன் வந்தபோது எனக்கு அறிமுகம். நான், மாரியப்பன், தனேஷ், சந்திரசேகர் ஆசாத் என நான்கு பேரும் விடுதியின் ஒரு அறையில் அடைக்கப்பட்டோம். ஒரு தகர பெட்டியும் அதன் மீது வைத்துக்கட்டிய தலையணையுமாக வந்த மாரியப்பன் எங்களோடு ஐக்கியமாகிவிட்டான். தமிழ் மீடியத்தில் படித்து 1031 மதிப்பெண் வாங்கிய தெனாவெட்டு இருந்தாலும் தும்மினால் கூட ஆங்கிலத்தில் தும்மும் கோபிலா, பூரணி ராமச்சந்திரன் போன்ற பெண்களைக் கண்டால்தான் நடுங்கிக் கொண்டிருந்தான். ஆரம்பத்தில் கணக்கு பேராரசிரியை ராஜேஸ்வரி கூட அவனை இளக்காரமாகத்தான் பார்த்தார். தேர்வு என்று வந்துவிட்டால் ஒரு பத்தியாக இருந்தாலும் அல்லது முழு புத்தகமாக இருந்தாலும் விடிய விடிய முக்கி வீங்கிய கண்களும் திரும்பத் திரும்பச் சொல்லும் உதடுகளுமாக தேர்வு அறைக்கு வந்து ஒரு எழுத்து பிசகாமல் வினாத்தாளில் வாந்தியெடுத்துவிடுவான். தினமும் ஹிண்டு பேப்பரில் இடம்பெறும் சிக்கலான ஆங்கில வார்த்தைகளுக்கு அகராதி வைத்து அர்த்தம் கண்டுபிடித்து அதையும் மனப்பாடம் செய்து இரண்டாம் வருடம் முடியும் போது வகுப்பில் செமினார் எடுக்கும் அளவிற்கு வளர்ந்தவன் மீது வகுப்பில் எல்லோருக்கும் மரியாதை வந்தது.

தமிழ் சினிமாவையும் இதே அளவில் மனப்பாடம் செய்து வைத்திருப்பான். மனோகரா படத்தில் சிவாஜி பேசிய வசனமாக இருந்தாலும் சரி லொள்ளு சபா மனோகரின் இழுத்து பேசும் வசனமாக இருந்தாலும் சரி மனப்பாடமாகச் சொல்லுவான். மாரியப்பனுக்கு ஒரு பாலிசி உண்டு. அது நடிகைகளை கவர்ச்சியாகப் பார்க்கக் கூடாது என்பது. நடிகைகளின் ’இன்னபிற சமாச்சாரங்கள்’ தனது மனப்பாடம் செய்யும் திறமையை சிதறடித்துவிடும் என்பது அவன் நம்பிக்கை. நடிகைகள் கவர்ச்சியாக வரும் போதோ அல்லது பாடலின் போதோ கண்களை மூடிக் கொள்வான். இப்படி நிஜமான நல்ல சாமியாராக இருந்தவன் ஒரு சமயம் டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் அரைகுறை ஆடையுடன் இருந்த லிண்ட்சேவை பார்த்துவிட்டு எங்களிடம் விசாரிக்க ஆரம்பித்தான். விசாரிப்போடு நிறுத்திக் கொள்வான் என்று நம்பிக்கொண்டிருந்த எங்களின் நினைப்பில் புல்டோசரை வைத்து மண் அள்ளிப்போடும் விதமாக லிண்ட்ஸே நடித்திருந்த “ஃப்ரீக்கி ப்ரைடே” படத்திற்கு போகலாம் என்று நச்சரிக்க ஆரம்பித்தான். ஒரு நாள் நச்சரித்தால் தொலைந்து போகட்டும் என்று விட்டிருக்கலாம். ஒவ்வொரு நாளும் நச்சரிக்க ஆரம்பித்தான். படம் ஓடிய 21 நாட்களும் யாரையாவது துணைக்கழைத்துக் கொண்டு படத்திற்கு போய் வந்தான்.

சிவபெருமானே சொல்லிவிட்டதால் தனது காதல் தெய்வீகக் காதல் என்று சொல்லித்திரிந்தவன் லிண்ட்சேவுக்கு தினம் குறைந்தது 20 இ-மெயிலாவது கல்லூரி நூலகத்தில் இருக்கும் கம்ப்யூட்டரில் இருந்து அனுப்ப ஆரம்பித்தான். பல இமெயில்கள் “unnai paarkamal sethuviduven” என்று தங்கிலீஷிலும் கூட இருக்கும். அனேகமாக லிண்ட்சே டென்ஷன் ஆகியிருக்கக்கூடும் “Nice” என்று ஒற்றைச் சொல்லை ரிப்ளையாக அனுப்பித் தொலைத்துவிட்டாள். அந்த இமெயிலை பார்த்துவிட்டு மாரியப்பன் எட்டிக்குதித்ததில் இரண்டு கம்ப்யூட்டர்கள் கீழே விழுந்து நொறுங்கிப்போயின, தன்னை திருமணம் செய்து கொள்ள சம்மதம் என்று அவள் பதில் அனுப்பியிருப்பதாகச் வள்ளியாம்பாளையம் முழுவதுமாகச் சொல்லிவிட்டான்.

நான் கல்யாணம் செய்தால் அது லிண்ட்சே லோஹனைத்தான் என்று ஒன்றரை மாதங்களாக எங்களின் உயிரையும் இன்ஸ்டால்மெண்டில் எடுத்துக் கொண்டிருந்தான். ”மாரியப்பன் கம்ப்யூட்டரில் பேசியே வெள்ளைக்காரியை கட்டிக்கப் போறானாம்” என்று அவனின் ஊர் முழுக்க டமாரம் அடித்தார்கள். அவனது அப்பா வெளியே காட்டிக்கொள்ளவில்லையென்றாலும் அம்மாவுக்கு வானம் கீழே வந்துவிட்டது. வறட்டி தட்டக்கூட நிலாவுக்கு போகணும் போல இருந்தது அவளுக்கு. தன் மருமகளின் படம் என்று வீட்டிற்குள் லிண்ட்சேவின் படத்தை ப்ரேம் அடித்து மாட்டிவிட்டார்கள். இந்த விபரீதங்களை எல்லாம் பார்த்த எங்களுக்கு கிட்டத்தட்ட ஜன்னிக்காய்ச்சல் வந்துவிட்டது.

பகீரத முயற்சிகள் ஒரு பக்கம் இருந்தாலும் அவன் வளாகத் தேர்வில் டிசிஎஸ்ஸில் வேலை வாங்கினான். பிறகு அவன் அமெரிக்காவும் போய்விட்டதாகக் கேள்விப்பட்டேன். அப்புறமாக தொடர்புகளற்று இத்தனை வருடங்களாக அவனை மறந்திருந்தேன். நேற்று ஃபேஸ்புக்கில் ”லிண்ட்சேதாசன்” என்ற நபரிடம் இருந்து நட்பு அழைப்பு வந்திருந்தது, ஃபுரொபலைத் தேடிப்பார்த்ததில் லிண்ட்சேவுடன் எடுத்துக்கொண்ட ஏகப்பட்ட படங்களை அப்லோட் பண்ணியிருந்தான். அத்தனையிலும் சாட்சாத் மாரியப்பன். சாட் செய்ததில் இந்தியாவில்தான் இருப்பதாகவும் அடுத்த வாரக்கடைசியில் அமெரிக்கா போவதாகவும் சொல்லியிருந்தான். மேற்படி விவகாரங்களை முழுவதுமாக விசாரிக்கவில்லை.

இடையில் வந்த சனிக்கிழமை வள்ளியாம்பாளையம் போயிருந்தேன். இப்பொழுது வள்ளியாம்பாளையத்தில் மிகப்பெரிய வீடு அவர்களுடையதுதான். ”பங்களா பண்ணாடி” என்று உள்ளூரில் மாரியப்பனை அழைக்கிறார்கள். நான் போயிருந்த போது அவனது அம்மா சுவற்றில் வறட்டி தட்டி அசிங்கப்படுத்திவிடுவதாகத் திட்டிக் கொண்டிருந்தான். இப்பொழுது கூட லிண்ட்சே சமையலறைக்குள் இருந்து வந்துவிடுவாள் என நம்பிக் கொண்டிருந்தேன். இருடா மனைவியை அழைக்கிறேன் என்று சொல்லிவிட்டு மாரியப்பன் உள்ளே போனான். என்னவோ தெரியவில்லை மாரியப்பனின் மனைவியாக லிண்ட்சேவாக மட்டுமே இருக்க வேண்டும் என்று விரும்பினேன். அவர்கள் வருவதற்குள் வெளியே வந்துவிட்டேன். லிண்ட்சே லோஹனுக்கு திருமணம் ஆகிவிட்டதுதானே?

– மே 25, 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *