ரோடுஸென்ஸ்

 

‘ரோடுஸென்ஸ்’ என்பது, இப்படிப் போனால் இந்த இடத்தில் ஆபத்து வரும் என்று முன் கூட்டியே தெரிந்து கொண்டு அந்தப் பக்கமாகப் போகாமல் இருப்பதுதான். வண்டியோட்டக் கற்றுக் கொடுக்கும் குரு, ‘மோட்டாரை ஓட்டப்போகும் ஏ ஆத்மாவே! நீ எத்தனை காலம் ஆபத்து வரும் என்று பயந்த வண்ணம் இருக்கிறாயோ, அதுவரை உனக்கு ஆபத்தே கிடையாது. எந்த நிமிஷத்தில், நமக்கு ஆபத்தே இல்லை’ என்று தைரியம் கொள்கிறாயோ, அப்போது அருகாமையிலேயே அது காத்திருக்கிறது’ என்று சொல்லிக் கொடுப்பார்.ரோடுஸென்ஸ்

“வீட்டிலே சொல்லிக் கொண்டு விட்டு வந்தாயோ?” என்று மயிரிழையில் தப்பிய ஆசாமியைப் பஸ்-கண்டக்டர்கள் கேலி செய்வதை நாம் கேட்டிருக்கிறோம். இதில் வேடிக்கை ஒன்று உண்டு. எவன் ஒருவன் வரும்போது வீட்டில், “நான் போய் வருகிறேன். தெருவெல்லாம் பஸ்ஸ¤ம், லாரியும், மோட்டாருமாக ஓடிக் கொண்டிருக்கின்றன. திரும்பி வந்தால் தான் நிச்சயம்” என்று சொல்லிக்கொள்கிறானோ, அவன் தவறாமல் வீடு போய்ச் சேருவான். சொல்லிக் கொள்ளாமல் வந்து, அவன் கண்ணை மூடிக்கொண்டு குறுக்கே போகிற போதுதான் ஆபத்தெல்லாம் சம்பவிக்கிறது.

ரோடுஸென்ஸ்2

அப்புறம், மாட்டுக்காரர்கள் இருக்கிறார்கள். இருபத்தைந்து மாடுகளைத் தெருவின் குறுக்கே ஓட்டுகிறார்கள். வேகமாக வரும் மோட்டாருக்கு(மோட்டாரையும் வைத்துக் கொண்டு வேகமாகவும் போகாவிட்டால் என்ன உபயோகம்?) இந்த மந்தைகளும், – அவைகளும் கேவலம் வெறும் மாடுகளானாதால் தானோ என்னவோ – துளியாவது சுறுசுறுப்புக் காட்டாமல் அலட்சிய பாவத்துடன் குறுக்கே நகர்கின்றன. மோட்டார் ஓட்டுபவர் மோட்டாரை நிறுத்தி விட்டு, ஏதாவது ஜபம் தெரிந்தவராக இருந்தால் அதைச் செய்யலாம், அல்லது ஒரு சிறு தூக்கம் கூடப் போடலாம் வேறு வழியில்லை.

இதெல்லாம்விட ஆபத்தானது ஒன்று உண்டென்றால், அது சைக்கிளில் வரும் ஆசாமிதான். ‘சைக்கிள் என்பது ஏழையின் வாகனம்’ என்று பெயர் பெற்றுப் பல பணக்காரர்களாலும் உபயோகப்படுத்தப்படும் ஒரு வண்டியாகும். இதன் வேகம் மனுஷனுடைய வேகத்தைவிட அதிகமாக இருப்பதால் அதி சீக்கிரமாக மோட்டாரின் குறுக்கே வருகிறது, நெடுக்கே ஓடுகிறது. சில சமயம் போட்டியும் போடுகிறது. மோட்டார் நுழையக் கூடாத இடுக்கு தென்பட்டால் அதில் பெருமையுடன் புகுந்து காண்பிக்கிறது எனவே, மோட்டாரின் முதல் பெரும் சத்ருவாகிறது.

சைக்கிள் காரனைப்போல் மோட்டாருக்குத் தெருவில் ஆபத்து வேறெதுமில்லை. “நான் மந்திரியானால் சைக்கிளைத் தெருவில் விடக் கூடாதென்று சட்டம் போடுவேன்!” என்று கார் ஓட்டுபவர் ஓயாமல் கூச்சல் போட்டுக் கொண்டிருக்கிறார்.

இவரை மந்திரியாக்காமல் இருக்கவேதான் போலீஸ்காரர்கள் தெரு முனங்கில் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள் போலிருக்கிறது! தவிர இரு புறங்களிலிருந்து வரும் வண்டிகளில் எது முன்னால் போவது எது பின்னால் போவது என்பதை வண்டிக்காரர்கள் தங்களுக்குள் தீர்த்துக்கொள்ளத் தொடங்கினால் ரகளை ஏற்படும். ஆகையால், போலீஸ்காரரே அவர்களிடையே தீர்ப்பைச் செய்து வைக்கிறார் இதனால் யமன் ஜாப்தா வளராமல் இருப்பதும் உண்மை.

ரோடுஸென்ஸ்3போலீஸ்காரர் இல்லாத ரஸ்தா சந்திப்பாக இருந்தால், அதை நம் ஜனங்கள் சும்மா விட்டுவிடுவதில்லை. உள்ளூர்ப் பிரமுகர்களில் நாலைந்து பேருக்கு மாலை வேளையில் விருதா காலட்சேபம் செய்ய அந்த ஜங்க்ஷன்தான் சிறந்த ஸ்தலமாக அமைகிறது. தலைக்கு மேல் கை கோத்துக் கொண்டும், இடுப்பின் கீழ் கைகளைச் சேர்த்துக் கொண்டும் அவர்கள் அங்கே நின்று உலகப் பெரும் பிரச்னைகளைப் பேசித் தீர்த்துக் கொள்வார்கள். மோட்டார் வந்தால் அதைப் பார்ப்பார்களேயொழிய அசைந்து கொடுக்க மாட்டார்கள். ‘சரிதான் சிலை போல் நிற்கிறார்களே என்று சுற்றிப்போகும் போது யாராவது ஒருவர் மட்டும் அந்தக் கும்பலிலிருந்து பிரிந்து தாம்பூலம் துப்ப வந்து, மோட்டார் வண்டி ஓட்டுபவரைத் திணற வைப்பார்.

இதைவிடத் தமாஷ் நடுத் தெருவில் கடக்கும் இரு ஆப்தர்கள், ‘பூம் பூம்’ என்று சப்தம் கேட்டவுடன் ஒருவர் வடக்கிலும் ஒருவர் தெற்கிலும் ஓடுவார்கள். அவர்கள் மட்டும் ஓடினால் நடுவில் வழி ஏற்பட்டுச் செளகரியமாக வண்டி போய் விடுமே! அதுதான் இல்லை. அவரும் அவர் நண்பரும் ஓருயிரும் ஈருடலுமாகப் பழகுகிறவர்கள்ஆயிற்றே. ஆகையால், கோத்த கையை விடாமல் இவர் அவர் கையைப்பற்றி வடக்கு நோக்கியும், அவர் இவர் கையைப் பற்றித் தெற்கு நோக்கியும் இழுப்பார்கள். காட்சியே காட்சி, வாஞ்சையே வாஞ்சை! ஏ ரோட்ஸென்ஸே! உன் பாச்சா இவர்களிடம் பலிக்கவே பலிக்காது!

பாதசாரி தெருவோடு பத்திரிக்கை படித்துக் கொண்டு போகலாம், ஆனால் மோட்டார் ஓட்டுபவருக்கு அந்த சுகம் ஒரு நாளும் கிட்டாது. ஏனெனில், அவர் அப்புறம் வெகு காலம் அந்த மோட்டாரில் இருக்க முடியாது, ஆஸ்பத்திரியில் தான் கண் விழிக்க வேண்டும்.

அதற்காக மோட்டாரில் உட்கார்ந்தவுடன் எதையும் பாராமல் கண்ணை மூடிக்கொள்வதிலும் உபயோகம் இல்லை. அதுவும் ரோட்ஸென்ஸ் ஆகாது. ஒரு தகரவளையம் தெருவின் குறுக்கே ஓடி வந்தால், இரண்டு விநாடிக்கெல்லாம் அதைத் துரத்திக் கொண்டு ஒரு சின்னப் பயலும் பின் தொடர்வான் என்று எதிர்பார்க்க வேண்டும்! தெருவில் வளைவுகள் எங்கே, மெள்ளமாகப் போக வேண்டிய ஸ்தலம் எது, குறுக்கு ரஸ்தாக்கள் வருவது எங்கே என்று அடையாளங்கள் போட்டிருக்கிறார்கள். இவைகளைக் கவனித்து நடப்பதும்கூட ‘ரோட்-ஸென்ஸ்’ தான்.

இந்த இடங்களில் பாதசாரிகளாகச் செல்பவர்களும்கூட சர்வ ஜாக்கிரதையுடன் நடந்து கொள்ள வேண்டும். அதுவும் ரோட்-ஸென்ஸ்…

யாரோ “இதெல்லாம் நான்ஸென்ஸ்” என்று சொல்வது காதில் படுகிறது. அது பற்றிப் பரவாயில்லை. அதோ பின்னால் ‘ஹாரன்’ சப்தம் கேட்கிறது. தெருவில் படித்தது போதும், ஜாக்கிரதையாகப் போங்கள்! 

தொடர்புடைய சிறுகதைகள்
சுப ஜனனம் இன்று காலை ஏழு மணிக்கு ராவ் பகதூர் ராஜாராமின் மனைவியார் ஸ்ரீமதி மீனாட்சி பாய்க்கு ஒரு புருஷப் பிரஜை ஜனனமாகியிருக்கிறது. தாயும் சிசுவும் §க்ஷமமாக இருக்கிறார்கள் என்று உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் அறிவிக்கப்படுகிறது. நர்ஸ் தேவை குழந்தைகளைப் பராமரிக்க அநுபவமுள்ள நடுத்தர வயதுள்ள நர்ஸ் ...
மேலும் கதையை படிக்க...
அட நாராயணா!
காலையில் நான் பேப்பர் படிக்க உட்காருவதும், "ஸார்!" என்று கூப்பிட்டுக் கொண்டு அடுத்த வீட்டு நாராயணசாமி ஐயர் வருவதும் சரியாக இருக்கும். ஆசாமி வந்து விட்டால் நான் பேப்பர் படித்தாப் போலத்தான்! அவர் கையில் அதைக் கொடுத்து விட்டுச் 'சிவனே' என்று ...
மேலும் கதையை படிக்க...
என்னுடைய நண்பர் ஒருவர் பத்திரிகாசிரியராக இருக்கிறார். அவருக்கு வந்த கடிதம் ஒன்றை நான் பார்க்க நேர்ந்தது. முன் பின் பார்த்திராத யாரோ ஒருவர் விகடத் துணுக்கு ஒன்றை அனுப்பி, "தயவு செய்து இதைப் பிரசுரிக்க வேணும்; அதற்காக என் ஆயுள் பூராவும் ...
மேலும் கதையை படிக்க...
நாகப்பனுடைய தொழில் பகிரங்கமாகச் சொல்லிக் கொள்ளக் கூடியதுமல்ல; நாலு பேர் அறியச் செய்யக் கூடியதுமல்ல, அவன் செய்தது திருட்டுத் தொழில். அவனுடைய ஆயுளில் எத்தனையோ பொருள்களை எவ்வளவோ சிரமப்பட்டுக் களவாடியிருக்கிறான்; ஆனால் அவனுடைய மனைவியின் இதயத்தைக் கொள்ளை கொள்வது மட்டும் அவனுக்கு அசாத்தியமாகவே ...
மேலும் கதையை படிக்க...
காதல் போயின்…
மல்லா ராவ் மூக்குப் பொடியை உறிஞ்சும் சப்தம் கேட்டவுடனேயே, ரசமான ஒரு விஷயமும் செவிக்கு எட்டும் என்று விரைவில் ஊகித்துக் கொண்டேன். அதைத் தொடர்ந்து அவர் பின் கையைக் கட்டிக் கொண்டு உலாவவே, பேர்வழி பலமாக எதற்கோ அஸ்திவாரம் போடுகிறார் என்று ...
மேலும் கதையை படிக்க...
விளம்பர வாழ்க்கை
அட நாராயணா!
எனது மனமார்ந்த நன்றி
நாகப்பன்
காதல் போயின்…

ரோடுஸென்ஸ் மீது ஒரு கருத்து

  1. சதீஷ் says:

    எளிய நடையில் இல்லை. ஆனால் ரசிக்க முடிந்தது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)