ராஜாராணியும் அக்பர்ஷா சிகரெட்டுகளும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: January 29, 2012
பார்வையிட்டோர்: 8,801 
 

ஏலேய் வெங்கிடு! என்று தட்டியில் கட்டிய முன் கதவை லொடக்கென்று தள்ளி முன் வாசல் வந்து நின்றான் ராஜாராம். வெங்கிடுவின் மணிக்கட்டை பிடித்து இழுத்து, தன் உள்ளங்கையைப் பிரித்துக் காட்டினான்.

வெங்கிடுசாமிக்கு ராஜாராம் கையில் இருந்த பொருளைப் பார்த்தவுடன் ஆச்சரியத்திலும், சந்தோஷத்திலும் முதுகுத்தண்டு சில்லென்று ஆனது. அம்மா பார்க்குமுன் அவனை அப்படியே நெட்டித் தள்ளி கொண்டு தண்ணீர் தொட்டிக்கு அருகே வந்து, எப்படிரா மாப்ள கிடைச்சுது? என்று ஆச்சரியம் குறையாமல் கேட்டான். ஒன்றுமே சொல்லாமல், முன் வாசற்படியையே பார்த்துக் கொண்டு வெங்கிடுவைப் பார்த்து நமுத்தலாய் சிரித்து கண் அடித்தான் ராஜாராம்.

ராஜாராமுக்கு எப்பவுமே இப்படி ஒரு பழக்கம், வெங்டுவையும், உப்பிலியையும் வியப்பில் ஆழ்த்த இது போல் ஒரு காரியத்தை செய்து விட்டு அதை மேலும் சிறப்பாக்க இது போல கண்ணடித்து அதை ஒரு சாதனை அந்தஸ்திற்கு உயர்த்துவான். அவன் கையில் இருந்தது இரண்டு அக்பர்ஷா சிகரெட்டுகள், திருவண்ணாமலையில் தண்ணீர் தூக்கியதற்கு கிடைத்த காசில் தங்கையாவிடம் சொல்லி வைத்து வாங்கியதாகச் சொன்னான்.

திருவண்ணாமலை ஒரு மலை மேலுள்ள பெருமாள் கோவில், சரியாக செதுக்காத படிக்கட்டுகளில் செங்குத்தாக இருக்கும், சனிக்கிழமை தோறும் பக்தர்களின் வரவு அதிகம் இருப்பதால், அவர்களின் புழக்கத்திற்கு ஊரில் இருக்கும் இளந்தாரிகள் தண்ணீர் குடங்களில் தூக்கி சுமப்பவர்களுக்கு புளியோதரையுடன் கொஞ்சம் சில்லறையும் கொடுப்பது வழக்கம். ராஜாராம் அப்படி சம்பாதித்த காசில் தான் இந்த சிகரெட்டுகளை வாங்கியிருக்கிறான். அவன் உள்ளங்கை பிசுபிசுப்பில் கொஞ்சம் கசங்கி, புகையிலைத் துனுக்குகள் பிதுங்கி ரகசியமாக வெங்கிடுவைப் பார்த்து சிரிப்பது போல் இருந்தது.

வெங்கிடசாமியும், ராஜாராமும், உப்பிலியும் தான் உயிருக்குயிரான கூட்டாளிகள். ஓரே தெருவில் வசிக்கும் இவர்கள் மூவர் மட்டும் வேறு எந்த கூட்டாளிகளுடனும் சேராமல், எல்லா நல்லது, கெட்டதுகளிலும் தப்பாமல் பங்கு கொண்டு, அதில் கிடைக்கும் சந்தோஷ துக்கங்களை பகிர்ந்து கொள்வார்கள் . மூவரும் ஒரு வகையில் சொந்தம் கூட, வெங்கிடுவும் உப்பிலியும் பங்காளிகள், ராஜாராம் மட்டும் சம்பந்தகாரர் வகை, வெங்கிடுவும் உப்பிலியும் ராஜாராமை மாப்ள! என்று தான் அழைப்பது வழக்கம்.

இதில் ராஜாராம் ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். இவர்கள் இருவரும் சின்ன பத்து படித்துக் கொண்டு இருந்தார்கள். ஆனாலும் இவர்களின் வயது தான் அவனுக்கு. ஒரு வருசம் அவனுக்கு சின்ன அம்மை வந்தபோது பள்ளிக்கு வராமல் இருந்து அப்படியே ஒரு வருசம் கழிஞ்சு போச்சு. இவர்கள் மூவருமே சி.எம்.எஸ். என்ற ஒரு கிறித்துவப் பள்ளிக்கூடத்தில் தான் படித்துக் கொண்டு இருந்தார்கள்.

பள்ளிக்கூடத்தில் யூனிஃபாரம் வெள்ளைச்சட்டையும், நீலக்கலர் டவுசரும் தான். ஆனால் ராஜாராம் பெரும்பாலான சமயங்களில் 4 முழ வேட்டிதான் கட்டி வருவான். வாரத்தில் 3 நாள் யூனிஃபாரம் கட்டாயம் போட்டு வரவேண்டும். அவங்க அப்பா அவனுக்கு எடுத்துக் குடுத்த டவுசரு கிழிஞ்சுட்டதால, அடுத்த வருசம் வாங்கி தர்ரேன்னு சொல்லிட்டார், வேற வழியில்லாம வேட்டி கட்டிதான் வந்து கொண்டிருந்தான். ஆனா ஹெட்மாஸ்டர் ஆரோக்கியசாமி சார் அவனை யூனிஃபாரம் போடாம கண்ணுல படும்போதெல்லாம் அடிப்பார், அதுவும் அவருடைய அறைக்கு கூட்டிட்டுப் போயி, கையை மணிக்கட்டோடு பிடித்து கொண்டு கையை லூசா விடச்சொல்வார். லூசா விட்டவுடன், புறங்கை மொலிகளில் படுமாறு கையை அவருடைய மேசை முனையில் அடிப்பார், உயிர் போயிட்டு வரும். இது தாங்க முடியாம அவன் பள்ளிக்கூடத்துக்கு போக மாட்டேன் என்று அடம் பிடிக்க, அவன் அப்பா வந்து பேசிப்பார்த்தும் அவரு ஒத்துக்கல.

வெங்கிடுவுக்கும், உப்பிலிக்கும் ரொம்ப பாவமா இருக்கும், ஆனா இவங்க ரெண்டு பேருக்கும் கூட ஒரே ஒரு டவுசர் தான் இருந்தது, அதுலயும் பித்தான் போயி, அண்ணாக்கயிறைத் தான் தூக்கி போட்டு, கிழிசலை மறைக்கும் ஒட்டுத்துணியில், (யூனிஃபாரமுக்கு ஒவ்வாத சிகப்பு கலரில்) கிழிசலை மறைத்து சமாளிக்கிறார்கள். ஒரு வழியா குசு வாத்தியார் தான் அவனுக்கு ஒரு டவுசர் வாங்கி குடுத்தார்.

குசு வாத்தியார் தான் எங்கள் பள்ளிக்கூட டிராயிங் மாஸ்டர். குசு வாத்தியாருக்கு அந்தப்பெயர் வந்ததற்கு வேறு எந்தவிதமான சொல்லமுடியாத அல்லது நகைப்புக்குரிய காரணங்கள் எதுவும் இல்லை. அவருடைய பெயர் தான் அதற்கு காரணம், கு. சுந்தரமூர்த்தி என்கிற அவர் பெயர் சுருங்கி குசு என்றானது. அதுக்கு அவர், பிள்ளைகளின் டிராயிங் நோட்டுகளில் குசு என்று கையெழுத்திடுவதும் ஒரு காரணம். கடைசி வரை அவர் அதை மாற்றிக் கொள்ளவே இல்லை.

அவருக்கு ராஜாராமை ரொம்பப் பிடிக்கும். அதற்கு காரணம் அவனுடைய ஓவியம் வரையும் திறமை. யாரைப்பார்த்தாலும் அச்சு அசலா வரைவான்.. அவன் வீட்டில், அவன் வரைந்த தாகூர், ராட்டையில் நூல் கோர்க்கிற மாதிரி காந்தி, காமாட்சி அம்மன் கோயில் கோபுரம், குளிர் மாமலை வேங்கடவான்னு அடிக்கடி புலம்பும் கிழவி, காரவடை சுப்பு, டெய்லர் சித்தப்பா (முறுக்கிய மீசையும் தாடியுமாக), ஆராய்ச்சிப்பட்டித் தெருவில் பிறக்கும் எல்லா குழந்தைகளையும் குளிப்பாட்ட வரும் தாயம்மாக்கிழவி, ராணி டீச்சர் என்று கையில் சிக்கும் எல்லோரையும் வரைந்து தள்ளுவான்.

ராஜாராமை பக்கத்து ஊர் பள்ளிக்கூடங்களில் நடக்கும் ஓவியப்போட்டிகளுக்கு எல்லாம் கூட்டிச் சென்று, அவனும் அவ்வப்போது பரிசுகள் வாங்கி வருவதனால் அவனுக்கு எது வேண்டுமானாலும் செய்வார் “பார்த்தீங்களாடா! நா வளர்த்த பய! இவன் தாம்லே நம்ம வாரிசு!” என்று பெருமையாகச் சொல்வார்.

மூவரும் மேலும் நெருக்கமானதற்கு இன்னொரு முக்கிய காரணம், கபடி தான்.. மூவருமே கபடி டீமில் இளையவர் பிரிவில் இருந்தார்கள். நிறைய ஊர்களுக்கு போட்டிகளுக்காகவும், பக்கத்து ஊர் திருவிழாக்களில் நடக்கும் கபடி போட்டிகளுக்காகவும், அவங்களோட பி.டி. வாத்தியார் அவர்களை அழைத்துச் செல்வது வழக்கம்.

இருதயராஜ் வாத்தியார் தான் கபடிக்கும், ஹாக்கிக்கும் சிறப்பு பயிற்சி கொடுப்பவர். இருதயராஜ் வாத்தியாரை, எல்லோரும் அண்ணே! என்று தான் கூப்பிடுவார்கள். அவருக்கும் அது தான் பிடிக்கும். பள்ளிக்கூடத்தின் முன்னாள் மாணவர்கள் அங்கு மாலை உடற்பயிற்சிக்காக வருவதுண்டு, அவர்கள் படிக்கிற காலத்தில் இருதயராஜ் வாத்தியார் இதே பள்ளிக்கூடத்தில் சீனியராகப் படித்ததால் அவர்கள் அண்ணே என்று கூப்பிட அதன் பிறகு எல்லோருமே அப்படியே கூப்பிட ஆரம்பித்தார்கள். அவரை அண்ணே! என்றால் தான் பல பேருக்குத் தெரியும் பள்ளியில்.

இருதயராஜ் அண்ணன் சினிமா நடிகர் எஸ்.வி.ரங்காராவ் மாதிரி சிறிது முன் வழுக்கையுடன், உள்ளடங்கிய வாயுமாக, உயரமாக சிரித்த முகத்துடன் தான் எப்போதும் இருப்பார். அவர் குரல் ரொம்ப வசீகரமாக இருக்கும். நன்றாக பாடவும் செய்வார். திருச்சி லோகநாதன் போலவே பாடுவார். மந்திரிகுமாரியில் வரும் வாராய் நீ வாராய் பாடல் அவரின் பிரத்யேகப்பாடல். அவர் பாடும் போது சில இடங்களில் திருச்சி லோகநாதன் போலவே இருக்கும். ஊரார் உறங்கையிலே உற்றாரும் தூங்கையிலே என்ற பாடல் கணக்கு டீச்சர் ரமாதேவி கடந்து போகும் போது, மிகத் தனிவான குரலில் கிசுகிசுப்பாகப் பாடுவார்.

ரமாதேவி டீச்சரின் வீடும், இருதயராஜ் அண்ணன் வீடும் குலாலர் தெருவில் அடுத்தடுத்து இருந்தது. ரமாதேவி டீச்சரின் கணவர் தாயில்பட்டி அரசுப் பள்ளிக்கூடத்தில் தமிழ் வாத்தியாராக இருக்கிறார். ஞாயிற்றுக்கிழமை மாத்திரமே ஸ்ரீவில்லிக்கு வருவது வழக்கம். ரமாதேவி டீச்சருக்கு ஜெயந்தி என்றொரு மகள் இருக்கிறாள், குலாலர் தெருவிலேயே இருக்கும் ஒரு பள்ளியில் படிக்கிறதாக, அதே தெருவில் வசிக்கும் சுப்புராஜ் சொல்வதுண்டு. இருதயராஜ் அண்ணனுக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை, அவர் வீட்டில் அவருடைய அம்மாவும் அவரும் மாத்திரமே, அவங்க அப்பா பனையேறி, ஒரு முறை பனை மரத்தில் அவர் ஏறியிருந்த போது மின்னல் அடித்து மரத்தோடு கருகி விட்டார். அந்த இடம் மொட்டப்பத்தான் கிணறுக்கு போகும் வழியில் தான் இருக்கு ஒரு முறை கூட்டாளிகளுடன் சென்பகத்தோப்பு போகும்போது சுப்புராஜ் தான் காட்டினான். நாலைந்து மரங்கள் அதனுடன் சேர்ந்து எரிந்து போயிருந்தது.

இருதயராஜ் அண்ணன் வீட்டிற்கும் ரமாதேவி டீச்சர் வீட்டிற்கும் ஒரு முழம் தான் இடைவெளி இருக்கும். அதிகாலையில் இருதயராஜ் அண்ணன் மொட்டை மாடியில் நின்று கர்லாக்கட்டை சுத்துவதாகவும், பஸ்கி எடுப்பதாகவும், புரிந்தும் புரியாததுமான கதைகளை சுப்புராஜ் சொல்வதுண்டு, அவனுடைய வீடு ரமாதேவி டீச்சரின் வீட்டுக்கெதிரே இருந்ததால் எங்களால் அதை நம்ப போதுமான நியாயம் இருந்ததாகவே பட்டது.

முதலில் வெங்கிடுவுக்குத் தான் சிகரெட் பிடிக்க வேண்டும் என்ற ஆசை வந்தது. எங்க வகுப்பில் படிக்கும் பொட்டலம் பெருசு தான் அவனுடைய ஆசைக்கு தூண்டுகோலாய் இருந்தான். பொட்டலம் பெரிசின் நிஜப்பெயர் சங்கரன். அவனுடைய வீடும் வெங்கிடுவின் தெருவில் மகாலிங்கம் அண்ணாச்சி கடைப்பக்கத்தில் தான் இருந்தது. வெங்கிடுவுக்கு அவனை சுத்தமாய்ப் பிடிக்காது, இவர்கள் எல்லோரையும் விட உயரமா, தாட்டியா ஒரு பெரிய ஆம்பிள போல இருப்பான். வகுப்பிலேயே 3 வருசமாக இருக்கான், கடேசி பெஞ்சில் உட்கார்ந்து கொண்டு இருப்பான். அவன் வரலேன்னாக்கூட யாரும் அவன் இடத்தில் உட்காருவது கிடையாது அவனோட கூட்டாளிகள் எல்லாம் ஊருனிப்பட்டித் தெருவில் இருக்கும் பயலுக தான். இவன் எப்போதும் பெரிய பத்து படிக்கிற ராஜு, மாடசாமியுடனே தான் சுற்றுவான். வகுப்பில் இருக்கும் மீனாட்சி சுந்தரம் தான் அவன் கூட இருப்பான் கடேசி பெஞ்சில். எப்பப் பார்த்தாலும் அவனை அடிச்சுட்டு, கைய முறுக்கிட்டே இருப்பான். அவன் வாங்கி குடுக்கிற தீனிக்காகத் தான் அவன் எவ்வளவு அடிச்சாலும் அவன் கூடவே இருப்பான். அவனுக்கு பொட்டலம் பெருசுன்னு பேர் வந்ததுக்கு காரணம் அவன் எப்பப்பார்த்தாலும் டவுசர் பாக்கெட்டுக்குள்ளயே கைய விட்டு நோண்டிக்கிட்டே இருப்பானாம். அதனால சிதம்பரம்னு அப்போ அவனுக்கு ஏழாம் வகுப்பு வாத்தியாரா இருந்தவர், இவன் பன்றதப் பார்த்து தான் அவனுக்கு பொட்டலம் பெருசுன்னு பேர் வைச்சதா பெரிய கிளாஸ் பசங்க சொல்ல கேட்டிருக்கேன். ஒரு சண்டியர் மாதிரித்தான் திரிவான் எப்போதும், அவங்க அப்பாவையே போட்டு அடிச்சிருக்கான் ஒரு முறை.

அவன் இப்படி சண்டியர் மாதிரி திரியிறதுக்கு அவங்க அப்பா கூட ஒரு காரணம் என்று வெங்கிடுவின் அம்மா சொல்ல கேட்டிருக்கிறான். அவனுடைய அப்பா மதுரையில் அப்போ டிவிஎஸ் பஸ்ஸில் டிரைவராக ஓடிக்கொண்டிருந்தார். மாதத்திற்கு ஒரு முறையோ அல்லது ரெண்டு முறையோ தான் வருவார்.. பொட்டலம் பெருசின் தாய் மாமா, அவன் அம்மாவின் தம்பி நாகராஜன், இவர்கள் வீட்டில் இருந்து தான் வேலைக்கு போய் வந்தான். அவன் தங்கநகை வேலை செய்து வந்தான். சில வேலைகளுக்கு உள்ளூரில் வசதி இல்லாததால், மதுரையில் குடுத்து வேலையை முடித்து கொண்டு வருவது அவன் வழக்கம். அப்படி ஒரு அமாவாசை நாளில் அவன் மதுரைக்கு போக வேண்டியிருந்தது. அன்று அவன் மதுரைக்கு போனபோது அவனுடைய மாமாவும் இன்னொரு சிவத்த பொம்பிளையுடனும், குழந்தையுடனும் பாண்டி கோயில் பஸ்ஸில் ஏறுவதற்கு நின்றபோது அந்த பெண் குழந்தை அவன் மாமாவை அப்பா என்றது. நாகராஜன் இதை இன்னும் விசாரிக்க இரண்டு நாள் தங்கி முழு விவரத்தையும் அறிந்த போது தான், அவனுடைய மாமாவுக்கு மதுரையில் ஒரு குடும்பம் இருப்பது தெரிய வந்தது. அவர் ஊருக்கு வந்தபோது பெரிய பிரச்னையாகி, பொட்டலம் பெருசும் அவனுடைய அப்பாவை அடித்து அவரும் அந்த நாளில் இருந்து ஊருக்கு வருவதே இல்லை. நாகராஜன் தான் தன் அக்காவின் குடும்பத்தை பார்த்துக் கொள்வது. பொட்டலம் பெருசும் கொஞ்ச நாளில் தங்க நகை வேலைக்கும் சென்று விடுவான் என்பதால் தான் அவன் படிப்பைப் பற்றியோ, அவனுடைய பெரிய மனுஷ நடவடிக்கைகளோ யாருக்கும் ஒரு பொருட்டாய் இருந்ததில்லை. ஒரு நாள் அவன் பள்ளிக்கூட மைதானத்திற்கு பின்னால் இருக்கும் ஊருனிக்கு அருகே இருக்கும் ஒரு முள்ளு முருங்க மரம் பக்கத்துல, செல்லப்பன் அண்ணனுடன் நின்று சிகரெட் பிடித்துக் கொண்டிருந்ததை பார்த்தான் வெங்கிடு. அவன் இடது கையில் சிகரெட் பிடித்துக் கொண்டு, சிகரெட்டுக்கு வலிக்காமல் ஒரு சிநேகமாய் தட்டி, மேல் நோக்கி புகைவிடுவது ரொம்ப அழகாக இருந்தது. செல்லப்பன் அண்ணன் அவ்வளவு ஈடுபாடுடன் சிகரெட் பிடிக்கவில்லை, அவர் தீவரமாக அவனிடம் ஏதோ பேசிக்கொண்டிருந்தார். பொட்டலம் பெருசு இவனைப் பார்த்து அங்கிருந்த படியே சிகரெட்டை இவனை நோக்கி நீட்டினான். இவனும் ஆசையுடன் வேண்டாமென்று ஓடி வந்து விட்டான். அன்று சாயந்திரமே வெங்கிடு இதை உப்பிலியிடமும், ராஜாராமிடமும் சொல்லி, எப்படியாவது சிகரெட் பிடிக்க வேண்டும் என்ற இவனுடைய ஆசையையும் கூறினான்.

உப்பிலி கொஞ்ச நேரம் யோசிப்பது போல் பாவனை செய்து ஒரு யோசனை சொன்னான். பப்பாளிக்குச்சியும், ஆமனக்கு குச்சியும் பத்தவைச்சு இழுத்தா சிகரெட் போலவே புகை வரும் என்றும் இதை வக்கீல் குமாஸ்தா கணேசன் சொன்னதாகக் கூறினான். அதை செயல்படுத்த சனி, ஞாயிற்றுக்கிழமைகள் தான் தோதாய் இருக்கும். எப்போதும் சனி, ஞாயிறுகளில் ஒரு வேப்பங்குச்சியையோ அல்லது அரிசி மில் கருக்கையோ எடுத்துக்கொண்டு, ஒரு துண்டை தோளில் மாட்டிக்கொண்டு கொல்லைக்கு போய்விட்டு அப்படியே மொட்டப்பத்தான் கிணற்றில் குளித்து விட்டு வருவது எங்களுடைய வாடிக்கை. இனிமேல் மொட்டப்பத்தான் கிணற்றிற்கு போகிற வழியில் இருக்கும் தேரியப்ப நாடார் ரோஜாத்தோட்டத்திற்கு அருகில் இருக்கும் ஆமனக்கு தோட்டத்தில் இருந்து குச்சிகளை பொறுக்கி புகைக்க தீர்மானித்து, உடனே செயல்படுத்தவும் செய்தார்கள். முதலில் நிறைய இருமலும், புகையும் வந்தது கொஞ்சம் கொஞ்சமாக இருமாமல் புகைக்கப் பழகியது. ஆனாலும் இதில் என்ன அப்படி சுவாரசியம் இருக்கிறது மூவருக்குமே விளங்கவில்லை. யாரிடமும் கேட்கவும் பயம், அதனால் சிகரெட் பிடித்தே ஆகவேண்டும் அதைப்பற்றி தெரிந்து கொள்ள, அதன் ருசி அறிய நாளுக்கு நாள் ஆசை அதிகமானது. இதைப்பற்றி அடிக்கடி பேசிக்கொண்டிருப்பதும், ஆத்துக்கடையில் சிகரெட் பிடிப்பவர்களை ரகசியமாக பார்த்து ரசிப்பது என்று ஆசையை அது இன்னும் வளர்த்து விட்டது.

அப்போது தான் ராஜாராம் கையிலிருந்த சிகரெட்டுகள் வெங்கிடுவுக்குள் ஒரு விவரிக்க முடியாத பயத்துடன் கூடிய சந்தோஷத்தைக் கொடுத்தது. இதை உப்பிலியிடம் சொல்லிட்டயா என்று கேட்டதற்கு அவன், அம்மாவுடன் இடைய பொட்டல் தெருவில் இருக்கும் வனராஜா தீப்பெட்டி ஆஃபீஸ் சென்றுள்ளதாகக் கூறினான். முதலில் அவன் அங்கு தான் போயிருக்க முடியும், வேண்டும். உப்பிலியின் வீட்டை தாண்டி தான் ராஜாராம் இவன் வீட்டிற்கு வரவேண்டும், அதனால் அங்கு தான் முதலில் சென்றிருப்பான். தெருவில் இருக்கும் பெரும்பாலான பெண்கள் தீப்பெட்டி ஒட்டுவதிலும், ஊதுபத்தி உருட்டுவதிலும் தங்களுடைய நேரத்தை கழிப்பதுடன் ஓரளவு காசும் சம்பாதிக்கவும், கணவன்களுக்கு, அப்பா, அண்ணன்களுக்கு தெரியாமல் காசு சேர்ப்பதிலும் ரொம்பவும் கருத்தாய் இருப்பார்கள். ஏதாவது ஒரு வீட்டில் ஒரு 10 பேர் வரை கூடி மொத்தமாக கட்டுகள் வாங்கி தீப்பெட்டி ஒட்டி பணத்தை பிரித்துக் கொள்வார்கள். வாரம் ஒரு முறை நோட்டில் எழுதியிருக்கும் கணக்கின்படி காசு வாங்கிக் கொள்வார்கள். ஊதுபத்தி உருட்டுவதில் பெரும்பாண்மை இல்லாவிட்டாலும், குறைந்த அளவு பெண்கள் ஈடுபட்டு இருந்தார்கள். தீப்பெட்டி ஒட்டுவதில் வரும் அளவு இதில் காசு இல்லை என்றாலும், இவ்வளவு செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இல்லாததால், ஊதுபத்தி உருட்டுவதும் நடக்கிறது அங்கங்கே! இந்த சேமிப்பில் இருந்து தான் அவர்களின் சினிமா செலவுக்கும், பண்டிகை, திருவிழா சமயங்களில் அலங்கார பொருட்கள், குஞ்சலங்கள், வளையல், கொலுசு என்று வாங்கவும், சீட்டுப்போடுவதிலும், சந்தா கட்டுவதிலும் செலவு செய்வார்கள். உப்பிலியும் சனிக்கிழமை சாயந்திரங்களில் அவன் அம்மாவுடன் எப்போதாவது செல்வதுண்டு. அங்கு அவனுடைய வனஜா சின்னம்மா வீடு இருக்கிறது, அவங்க அம்மா அவனை அங்க கூட்டிப்போயிட்டா என்ன செய்வது என்று இவனுடைய பயத்தைச் சொன்னதும். ராஜாராம், நான் போய் கூட்டிட்டு வந்துடறேன்! என்று நம்பிக்கை அளித்தான். மூன்று பேரும் சொந்தம் என்றாலும், உப்பிலியும், வெங்கிடுவும் ஒரே குலசாமி கும்பிடறதால அவங்க அப்பாவும், இவனோட அப்பாவும் இவர்களைப்போலவே கூட்டாளிகள். அதனால் ஒரு வேளை எக்குத்தப்பா மாட்டிகிட்டா கொஞ்சம் பிரச்னையின் தீவிரம் குறையலாம் என்ற நம்பிக்கையில் உப்பிலியின் கூட்டு அவசியமாய் இருந்தது வெங்கிடுவுக்கு.

ராஜாராம் அவனுடைய திட்டத்தைக் கூறினான். அதாவது மூவரும் அரசமரம் பிள்ளையார் கோவிலில் 5 மணிக்கு மேல சந்தித்து அங்கிருந்து கனபதி டாக்கீஸில் படம் பார்த்துக் கொண்டே இதை முடிச்சிடலாம்னு சொன்னதில் இவனுக்கு சம்மதம் இல்லை. தேரியப்ப நாடார் ரோஜாத்தோட்டத்துக்கே போய் விடலாம் என்று சொல்ல அதை ராஜாராம் மறுத்துவிட்டான். ரொம்ப இருட்டாயிடும் இப்பவே 4 மணிக்கு மேல ஆயிட்டிருக்கும், இன்னும் உப்பிலியும் வர அரைமணி நேரமாயிடும். இருட்டுல சிகரெட் பத்தவைச்சா தான் எல்லாருக்கும் தெளிவாத் தெரியும், யாரோ திருட்டுதனம் செய்வது மாதிரி. கொட்டாயி தான் வசதி, தரை டிக்கெட்ல போய் ஒக்காந்துட்டா நிறைய பேர்ல நம்மளும் இருப்போம். அதனால் தனியா யாருக்கும் தெரியாதுன்னு சொல்லி தைரியம் சொன்னான். அவன் சொல்வதில் நியாயம் இருந்ததாகவே பட்டது வெங்கிடுவுக்கு. என்ன இருந்தாலும் சிகரெட் கொண்டு வந்தவன் எங்க போய் அதப்பிடிக்கனும்னு சொல்றது வாஸ்தவமாகத் தான் பட்டது, அவனுக்கு அந்த உரிமை இருக்கு என்று சமாதானம் சொல்லிக் கொண்டான் வெங்கிடு.

சொன்னமாதிரி உப்பிலியை அழைத்துக் கொண்டு, ராஜாராம் அரசமரம் பிள்ளையார் கோவிலுக்கு வந்து விட்டான். இவனைப்பார்த்தவுடனே..
ஏலேய் வெங்கிடு! பாத்தியா மாப்ள சாதிச்சுட்டான்னு என்னை கட்டி பிடிச்சுக்கிட்டான். இன்று வழக்கத்திற்கு அதிகமாக மூவருக்குள்ளும் ஒரு பிரியம் வழிந்தது. மூவருமே ஆத்துக்குள்ள இருக்கும் டீக்கடையில் கோஸ் போண்டா வாங்கிக் கொண்டு தியேட்டரை நோக்கி விரைந்தார்கள். டிக்கெட்டுக்கு உப்பிலி காசு கொடுப்பதாகச் சொன்னதால், வெங்கிடு வச்சிருந்த காசில் கோஸ் போண்டா வாங்கிக் கொண்டார்கள். ராஜாராம் சிகரெட் கொண்டுவந்ததால் அவனை ஏதும் செலவு செய்ய விடவில்லை இவர்கள் இருவரும். கனபதி டாக்கீஸில் என்ன படம் என்று கூடத் தெரியாது, ராஜாராமிடம் இவன் கேட்ட போது ராஜாராணி என்ற சிவாஜி கணேஷனின் படம், கருணாநிதி வசனத்தில் வந்த படம். சிவாஜி கணேசன் சாம்ராட் அசோகனாய் பேசிய வசனம் படத்தின் சிறப்பம்சம். வெங்கிடுவுக்கு எம்.ஜி.ஆர் தான் பிடிக்கும், ஆனால் உப்பிலிக்கும், ராஜாராமிற்கும் சிவாஜி என்றால் உயிர். ஒரு ரசிகர் பேரவையில் உறுப்பினர்கள் கூட. ஆக கனபதி டாக்கீஸை தவறுக்கு முதல் களமாய்ப்போனதில் எந்தவித ஆச்சரியமும் இல்லை. 3 தரை டிக்கெட் எடுத்துக் கொண்டு மூன்று பேரும் கொட்டாயிக்குள் நுழைந்தார்கள். ஏற்கனவே நல்ல இருட்டு தட்டி விட்டது.

உள்ளே நுழைந்தவுடன் மணலை அள்ளி குமித்து ஒரு திட்டு போல செய்து கொண்டான் இவன். இவனை விட அவர்கள் இருவரும் கொஞ்சம் உயரம் என்பதால் அவர்களுக்கு மண் மேடு தேவைப்படவில்லை. ஒரு அரை மணி நேரம் போகட்டும் அப்புறம் பத்தவைக்கலாம் என்று, உப்பிலி சொல்ல, ராஜாராம் இவனை நோக்கி தீப்பெட்டி கொண்டு வந்தியான்னு கேட்க இவனுக்கு அப்போது தான் தீப்பெட்டி கொண்டு வரச்சொன்னது ஞாபகம் வந்தது. கொண்டு வர மறந்துட்டேன்னு தலையைச் சொரிய, என்னடா இவண்ட்ட போய் சொல்லிருக்கே! இவ சரியான குண்டி மறந்த பய நக்கலடித்தான் உப்பிலி. தீப்பெட்டி கொண்டு வராததால் இவனையே போய் முன்னால் பீடி குடித்துக் கொண்டிருந்த ஆளிடம் கேட்கச் சொன்னார்கள். உப்பிலி இதை ரகசியமாக அடிக்குரலில் கேளுடான்னு இவனை விலாவில் இடித்தான். இவனுக்கு முன்னாடி குற்றாலத்துண்டில் முக்காடு போட்டு உட்கார்ந்து கொண்டு சுவாரசியமாக பீடி பிடித்துக் கொண்டு இருந்த அவரின் தோளைத் தொட்டு “அண்ணாச்சி கொஞ்சம் தீப்பெட்டி குடுக்குகீகளா? என்றதும் முழுதும் திரும்பாமல் கையை மட்டும் பின்னால் நீட்டி தீப்பெட்டியைக் கொடுத்தார் அந்த அண்ணாச்சி. தீப்பெட்டியை வாங்கியதும் ஒரு குச்சி மட்டும் இருப்பதைக்கண்டு, அண்ணாச்சி ஒரு குச்சி தான் இருக்குன்னு சொல்ல, அதுக்கு அவரு, என்னலே கொட்டாயவா கொளுத்தபோறீக! அது போதாதா என்று எரிந்து விழுந்தார், சிவாஜி கணேசனின் வசனத்தை கவனிக்க விடாத கடுப்பில். குரல் பரிச்சயமானதாக இருப்பதை இவன் யோசிப்பதற்குள், உப்பிலி தீப்பெட்டியை, குடுலே! நான் கொளுத்துதேன்னு பிடுங்கி கொண்டான். அணுபவமின்மையும், ஆர்வக்கோளாறும் சிகரெட்டைப் பற்ற வைக்கும்முன் அனைந்து விட, ஏகக் கடுப்பான ராஜாராம் உப்பிலியின் பொடனியில் பட்டென அடித்தான். என்னலே பன்றது…சிகரெட்ட கையில வைச்சு உருட்டிகிட்டு ஈரமாக்கிட்ட அதனால தான் என்னால கொளுத்தமுடியலன்னு அவனும் எகிற..வேறு வழியில்லாமல் தீப்பெட்டி தந்த பெரிசிடமே நெருப்பு கேட்கலாம் என்று கேட்க, அவரும் தாராளமாக திரும்பி பீடியைக் கடைசி இழு இழுத்துவிட்டுக் குடுத்தார். வாங்கின நெருப்பு இவனுக்கு கொள்ளியாகப் போனது உரைக்கும் முன்னே,முக்காடு போட்ட, தீப்பெட்டி குடுத்த பெருசு இவனைத் தெளிவாக வெங்கிடுசாமி! என்று அடையாளம் கண்டு கொள்ள, அந்த குழப்பக்குரல் அடையாளம் இவன் மாமாவாகிப் போக, வெளிச்சத்தில் மூவரையும் வெளியே வரவைத்து, உப்பிலி, ராஜாராமை சுத்தமாக அடையாளம் கண்டுகொண்டு, சினிமா பார்க்காமலே வீட்டுக்கு அனுப்பி விட்டார் இல்லை ஓடுங்கடா வீட்டுக்குன்னு துரத்திவிட்டார், சிகரெட்டுகளை பிடுங்கிக் கொண்டு. இவனும் இதுக்குதான் கொட்டாயிக்கெல்லாம் வேண்டாம்னு நினைச்சேன், மடவார்வளாகத்திற்கு எதிராக இருக்கும் மண்டபம் தான் நல்ல இடம்னு என்று ஏதோ உளறி வைத்தான். அப்பாவின் கையில் திருக்கை மீன் முள்ளும், புளிய விளாறும் ஞாபகத்தில் மிரட்ட, உப்பிலியும், ராஜாராமும் எதை நினைத்து மிரண்டு நின்றார்களோ, இவனுக்கு அழுகை வந்து விட்டது, இவனைப்பார்த்து அவர்கள் இரண்டு பேரும் அழுது விட்டார்கள். எதுக்கு அழுகை வந்தது பயத்திலா அல்லது சிகரெட் பிடிக்க முடியவில்லையே என்ற ஆதங்கத்தினாலா என்று தெரியவில்லை இன்றுவரை.

மாமா இதை யார் வீட்டிலும் ஏன் சொல்லவில்லை என்று அவர் சாவுக்கு போயிருந்த போது கேட்க வேண்டும் என்று தோன்றியது வெங்கிடுவுக்கு.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *