Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/content/42/10186442/html/index.php:2) in /home/content/42/10186442/html/wp-content/themes/Clipso/functions.php on line 189
Sirukathaigal - Sirukathai - Short Stories in Tamil

ரஸகுல்லா + நெய் ரோஸ்ட் = கோவிந்து!

 

கான்ஃபரன்ஸ் ஹால் களை கட்டியிருந்தது.

அட்டெண்டர் முருகன் ஒரு மணி நேரத்துக்கு முன்னதாகவே இரண்டு ஏ.சி.க்களையும் ஆன் செய்து, ரூம் ஸ்ப்ரே பீய்ச்சி, ஹாலை மல்லிகையாய் மணக்கச் செய்திருந்தார். மேனேஜர் அஷ்டாவதானம், வந்ததும் வராததுமாக “மினிட்ஸ் கிளார்க் எங்கேப்பா?” என்று பரபரப்புடன் கேட்டார்.

“அடியேன் இங்கே இருக்கேன்! ” பவ்யமாக எழுந்து, உடலை வளைத்துப் பணிவுடன் பதிலளித்தான் கங்காதரன். கூட்டத்தில் பேசப்படும் விஷயங்களைக் குறிப்பு எடுப்பதுடன், கூட்ட அறிவிப்பு, கூட்டத்துக்கு வருபவர்களுக்கு ஸ்நாக்ஸ், காபி ஏற்பாடு எல்லாம் இவன்தான்.

“யோவ் மினிட்ஸு, பசி வயத்தைக் கிள்றது. வழக்கமா வாங்கிண்டு வர்ற பிஸ்கட், சமோஸா வேணாம். அங்கீதா ஓட்டல்ல முறுகலா நெய் ரோஸ்ட் சாம்பார், மெதுவடை, அதுக்குத் தேங்காய்ச் சட்னி, பொதினாச் சட்னின்னு மெனு போடுப்பா. இன்னிய மீட்டிங்கின் அஜெண்டா மூளைக்கு நெறய வேலை கொடுக்கப் போவுது… மனுஷாளுக்குத் தெம்பு வேணுமில்ல?” என்றார் அஷ்டாவதானம்.

“நல்லாச் சொன்னேள் ஸார்!” ஜால்ரா சவுண்டில் சிரித்தார் அக்கவுண்டண்ட் ஆராவமுது.

“கூட்டத்தை ஸ்டார்ட் செய்துடலாமா?”

“மேனேஜர் ஸார், ஒரு விஷயம்! மீட்டிங்குக்கு எல்லாரும் டாண்ணு ஆஜராயிட்டா. ஆனா நம்ம ஸ்டோர்ஸ் அசிஸ்டெண்ட் கோவிந்து மட்டும் இன்னும் வரல்லே. ஆபீஸ் ஆர்டர் எதையும் அவர் மதிக்கிறதேயில்லை…” என்று குமுறலுடன் கூறினார் உதவி மேலாளர் வரதாச்சாரி.

“யோவ் வரது, நான்தான்யா கோவிந்துவை மீட்டிங்குக்குக் கூப்பிட வேணாம்னு மினிட்ஸ் கிளார்க்குக்கு உத்தரவு போட்டேன். இன்னிக்கு மீட்டிங்கோட அஜெண்டாவே கோவிந்துதான், தெரியுமோல்லியோ?” கான்ஃபரன்ஸ் ஹாலே அதிர்ந்தது. “நெஜமாவா ஸார்?” நாலா பக்கமிருந்தும் கேள்விகள், இராமர் விடுத்த கணைகளாய் மேனேஜர் அஷ்டாவதானத்தை நோக்கிப் பாய்ந்தன.

“அதிலென்னய்யா ஒங்களுக்கு டவுட்டு? நாளுக்கு நாள் கோவிந்துவைப் பத்தின கம்ப்ளையிண்ட்ஸ் வரத்து ஜாஸ்தி ஆகிண்டே போறது. பீயிங் ஹெட் ஆஃப் ஆபீஸ் நான் நடவடிக்கை எடுக்கணுமா, வேணாமா? ஹெட்டாபீஸ்லேர்ந்து நம்ம ஜி.எம். அடுத்த வாரம் விஸிட் வர்றார். அவராண்ட கோவிந்துவைப் பத்தின எல்லாச் சமாச்சாரத்தையும் புட்டுப் புட்டு வெச்சு அந்தப் படவாவை, கண்காணாத ஏரியாவுக்குத் தூக்கி வீசிப்புடறதா நான் டெசிஷன் எடுத்துப்புட்டேன்!”

கோவிந்துவை டிரான்ஸ்ஃபர் செய்வது நடக்கிற காரியமா? இன்றைய கூட்டத்தில் தன்னைப் பற்றிப் பேசினார்கள் என்கிற விவரம் தெரிந்தால்கூட, கோவிந்து விஸ்வரூபம் எடுத்து அனைவர் கண்களிலும் விரல் விட்டு ஆட்டி விடுவானே… – பயம் அவர்களின் கண்களில் ஸ்பஷ்டமாகத் தெரிந்தது.

மீட்டிங் ஆரம்பமாயிற்று.

எடுத்த எடுப்பிலேயே சூடாகப் பேசினார் அழகுராஜ். கம்பெனி உற்பத்தி செய்யும் பீங்கான் பொருட்களை லாரிகள் மூலம் ரெயில்வே ஸ்டேஷனுக்கு அனுப்பி, அங்கிருந்து சரக்கு ரெயிலில் பிற மாநிலங்களூக்கு சப்ளை செய்யும் டிரான்ஸ்போர்ட் இன்சார்ஜ் இவர்.

“நம்ம ப்ராடக்ட்ஸை ஏற்றி ரெயில்வே ஸ்டேஷனுக்குக் கொண்டு போகக் காண்ட்ராக்ட எடுத்த லாரி ஓனர்ஸ்கிட்டே இருந்து ஏகப்பட்ட புகார் வருது. கோவிந்து அவங்ககிட்டே மாமூல் கேக்கறாராம். கொடுக்கலைன்னா காண்ட்ராக்டை ரத்து செஞ்சுடுவதாக மட்டுமில்லே, அவங்க பேமெண்ட்டையும் நிறுத்திப்புடுவதாக மிரட்டறாராம்!”

“பேமெண்டை நிறுத்த கோவிந்து யார்? நான் தானே பேமெண்ட் இன்சார்ஜ்?” என்று அழாக் குறையாகச் சொன்னார் அக்கவுண்டண்ட் ஆராவமுது.

கோவிந்துவோட வண்டவாளத்தை எல்லோரும் விலாவாரியாச் சொல்லுங்கோ. அதையெல்லாம் ஜி.எம். வர்றச்சே போட்டுக் கொடுத்துடலாம் என்றார் மேனேஜர்.

“ஸார்.. அப்பிடித்தான் காண்ட்ராக்டர் கந்தமாறன் கோவிந்துவுக்கு மாமூல் கொடுக்க மாட்டேன்னு மறுத்திருக்கார். நீர் கொடுக்கவே வேணாம்னு சொல்லிச் சிரிச்சார் கோவிந்து. அந்தச் சிரிப்புக்கு அர்த்தம் என்னன்னு பின்னால்தான் தெரிஞ்சுது. காண்ட்ராக்டருக்குப் போய்ச் சேர வேண்டிய பேமெண்ட் செக்கைத் தவறுதலா அனுப்பற மாதிரி கோயமுத்தூர் பிராஞ்சுக்குப் போகிற தபால்களோட வெச்சு அனுப்பிட்டார். அது கோயமுத்தூர் பிராஞ்சுக்குப் போய், செக் யாருடையதுன்னு தெரியாம ரொம்ப நாள் குழம்பி, அப்புறம் நம்ம ஆபீசுக்குத் திருப்பியனுப்பிச்சாங்க. பெரிய தொகை. ரெண்டு மூணு மாச டிலேவுக்கு அப்புறம் தான் காண்ட்ராக்டருக்குக் கெடைச்சுது. ஏன்யா அதைக் கோயம்புத்தூர் பிராஞ்சுக்கு அனுப்பினேன்னு அப்ப இருந்த மேனேஜர் கேட்டார். கோவிந்து சிரிச்சுகிட்டே பை ஓவர்ஸைட்டுன்னு அலட்சியமாச் சொல்றார் ஸார்!” என்றார் ஒருவர்.

“என்னய்யா அக்கிரமமா இருக்கு?” என்றார் மேனேஜர்.

“ஒருதடவை கோவிந்துவை விஜிலன்ஸில் பிடிச்சுக் கொடுத்துடலாம்னு காண்ட்ராக்டர் ஒருத்தர் திட்டம் போட்டார். மின்னாடியே லஞ்ச ஊழல் தடுப்பு அலுவலகத்துக்குப் போய் கோவிந்து மேல் புகார் கொடுத்தார். ஆயிரம் ரூபாய் நோட்டில் அவங்க கெமிக்கல் பவுடர் தடவிக் கொடுக்க, அதை கோவிந்துகிட்டே போய் நீட்டினார் காண்ட்ராக்டர். கோவிந்து தன் மேஜை டிராயரை இழுத்து அதில் போடும்படிச் சொன்னார். ஆபீசுக்கு வெளியே வந்து அந்தக் காண்ட்ராக்டர் சைகை காட்ட, வாசலில் காத்திருந்த விஜிலன்ஸ் அதிகாரிகள் ஆபீசுக்குள் திபு திபுன்னு நுழைஞ்சு கோவிந்துவை வளைச்சுகிட்டாங்க.

கோவிந்துவின் மேஜை இழுப்பறையில் லஞ்சமாகக் கொடுக்கப்பட்ட ஆயிரம் ரூபாய் அவர் கை படாமல் இருந்துச்சு. இதை எனக்குத் தெரியாமல் அந்தக் காண்ட்ராக்டர் என் மேஜைக்குள் போட்டிருக்கார். என்னை மாட்டி விடணும்னு சதித்திட்டம் போட்டு அவர் இப்படிச் செஞ்சிருக்கார். இதுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை! என்று சொல்லி, கோவிந்து சுலபமாகத் தப்பி விட்டார்.”

“அட!”

“ஆமா ஸார். அதுக்கப்புறம் கோவிந்து உஷாராகி, பணத்தை ஆபீசுக்கு உள்ளே வெச்சு வாங்கறதேயில்லை. ஒவ்வொருத்தர் கிட்டேயும் ஒவ்வொரு இடத்துல வெச்சு வாங்குவார். எந்த இடம்கிறதைக் கடைசி நிமிஷம் வரை மர்மமாகவே வெச்சிருப்பார்!”

“ஸார், அவர் பணம் கேக்கறதே அதுல மேலிடம் வரைக்கும் பங்கு வெட்ட வேண்டியிருக்குன்னு சொல்லித்தான். சரிதான். மேனேஜருக்கும் பங்கு போவுதுன்னு நினைச்சித்தான் காண்ட்ராக்டர்கள் பணம் அழுவுறாங்க தெரியுமா?” என்று சொன்னாள் ஸ்டெனோ ஜெஸ்ஸி.

மேனேஜர் அலறினார். “ஐயோ, நான் ஒரு பைசாவைக் கூடக் கண்ணால் பாக்கலியே! அந்தப் படுபாவி அப்பிடியா சொல்றான், கடங்காரன்!”

“அது மட்டுமில்லே ஸார்! ஒங்களுக்கு ஸ்காட்ச் விஸ்கி, மட்டன் பிரியாணி, சிக்கன் குருமா வாங்கித் தரணும்னே ஒரு பார்ட்டிகிட்டே துட்டு வாங்கியிருக்கார்னா பார்த்துக்குங்களேன்!” என்று போட்டுக் கொடுத்தார் பர்ச்சேஸ் கிளார்க் வைத்தி.

“என்னது? என்னது? நான் சுத்த வெஜிடேரியனாச்சே? குடி பக்கம் தலைவெச்சுக் கூடப் படுக்க மாட்டேனே?” என்று அலறி அஷ்டாவதானம் மயக்கம் போட்டு விழுந்த நொடியில், நெய் மணக்க சூடான மசால் தோசை, மெதுவடை வகையறாக்களை அட்டெண்டர் முருகனும் அவருடைய சகாவும் எடுத்துக்கொண்டு கான்ஃபரன்ஸ் ஹாலில் பிரவேசித்தனர்.

***

பாக்கு பொட்டலம் ஒன்றைப் பிரித்து வாயில் போட்டுக் கொண்டான் கோவிந்து. பக்கத்து ஸீட் ஆராவமுதுவைப் பார்த்து, “ஏன்யா ஆராமுது, மீட்டிங், கீட்டிங்கெல்லாம் அமர்க்களப் படறதே, என்ன விஷயம்?” என்று வாயைக் கிளறினான்.

“ஐயோ நேக்கு ஒண்ணுமே தெரியாது, ஆளை விடும்யா கோவிந்து!”

“அட, நீர் சொல்லாட்டிப் போமேன்! என்னை ஒதுக்கிட்டு மீட்டிங் போட்டா அதுக்கு அர்த்தம் தெரியாத மடையனா நான்? போய்யா போ! என்னைத் தண்ணியில்லாக் காட்டுக்குத் தூக்கியடிக்க சதித் திட்டம்தானேய்யா போட்டீங்க?”

திடுக்கிட்டு கோவிந்துவைப் பார்த்தார் ஆராவமுது. “யட்சிணி வேலையான்னா இருக்கு. எப்பிடிய்யா கண்டுபிடிச்சீர்?” என்று வியப்பு காட்ட, கோவிந்துவின் முகம் மாறியது.

“அப்ப அதுதான் விசயமா? குன்ஸாவா ஒரு குண்டைப் போட்டுப் பார்த்தேன். நீர் ஒத்துக்கிட்டீர். நான் உண்டு, என் வேலையுண்டுன்னு ஒரு மூலைல தேமேன்னு கெடக்கேன். என்னை ஏன்யா விரட்டப் பாக்கறீங்க? நான் யாருக்கு என்ன கெடுதல் செஞ்சேன்?”

“போட்டு வாங்கிட்டானே பாவி!” தன்னையே நொந்து கொண்டார் ஆராவமுது. கடகடவென்று சிரித்த கோவிந்து, ஆராவமுதை அருகில் அழைத்தான். “ஒரு ரகசியம். அதை ஆரிட்டயும் நீர் சொல்லப்படாது, சரியா?”

ஆராவமுதுக்கு உடம்பு சில்லிட்டது. தன்னை மறந்து கோவிந்து அருகில் போனான்.

“யோவ், எனக்கு இந்த ஸ்டோர்ஸ் அசிஸ்டெண்ட் வேலையே பிடிக்கலைய்யா. எப்பப் பார்த்தாலும் கான்ட்ராக்டர் பீப்பிள்கிட்டே மல்லுக்கு நிக்க வேண்டியிருக்கு. ஆபீஸ்ல இருக்கறவங்களுக்கு நான் நிறைய குறுக்கு வழில சம்பாதிக் கிறேனோன்னு சந்தேகம், பொறாமை! எப்பிடிடா இந்தப் பிடுங்கல்லேருந்து தப்பிக்கறதுன்னு குழம்பிண்டிருந்தேன். நீங்க எல்லோருமா மீட்டிங் போட்டு எனக்கு விடுதலை வாங்கிக் கொடுக்கத் திட்டம் போட்டிருக்கீங்க என்கிறதைக் கேக்கவே சந்தோஷமா இருக்கு. எதுக்குய்யா மீட்டிங், கீட்டிங்? என்னண்டே சொல்லியிருந்தா எனக்கு இந்த ஸீட் வேணாம், இந்த ஊர் வேணாம்னு எழுதிக் கொடுத்திருபேனேய்யா?”

ஆராவமுது தன் கையைக் கிள்ளிப் பார்த்துக் கொண்டான்.

“சரி, சரி, நான் சொன்னதை நீர் யார்கிட்டயும் உளறி வெய்க்காதீர். அப்புறம் கோவிந்துவுக்கு ஸ்டோர்ஸ் அசிஸ்டெண்ட் வேலை பிடிக்கலையா? அப்பிடின்னா அவனை அந்த ஸீட்டுலயே நிரந்தரமா உக்காத்தி வெச்சுட வேண்டியதுதான்னு முடிவு பண்ணி, மறுபடியும் ஒரு சதியாலோசனைக் கூட்டம் போட்டுடப் போறீங்க…” நமுட்டுச் சிரிப்பொன்றை உதிர்த்தான் கோவிந்து.

சரியாக ஒரு சுபயோக சுப நாளில் ஹைதராபாத் ஹெட் ஆபீஸிலிருந்து ஜெனரல் மேனேஜர் திரிசங்கு, குடும்ப சகிதம் வந்து சேர்ந்தார். அவர் ஃபிளைட்டில் வருவதாக முதலில் வந்த தகவலின்படி ஏர்போர்ட்டுக்கு மாலைகளுடன் போன அஷ்டாவதானம் கோஷ்டிக்குப் பலத்த ஏமாற்றம். எக்ஸ்பிரஸ் டிரெயினில் ஜி.எம். வந்து இறங்கி கம்பெனி கெஸ்ட் ஹவுஸுக்குப் போய் விட்டார். அப்புறம் ஹைதராபாத்துக்கு போன் போட்டுத் தகவல் தெரிந்து, கெஸ்ட் ஹவுஸுக்கு ஓடிப்போய் மரியாதை செய்துவிட்டு ஆபீசுக்குத் திரும்பினார்கள்.

மறுநாள் ஆபீசுக்கு வந்தார் ஜி.எம். திரிசங்கு. தொடர்ந்து இரண்டு நாட்கள் இன்ஸ்பெக்ஷன். எல்லாச் சடங்குகளையும் முடித்துவிட்டுக் கிளம்புவதற்கு முன்னால், கிரீவன்ஸ் மீட். இது ஒரு சம்பிரதாயச் சந்திப்பு. அலுவலகத்தில் உள்ளவர்கள் ஜி.எம்.மைச் சந்தித்து நேரடியாகத் தங்கள் குறைகளைத் தெரிவிப்பது வழக்கம்.

மேனேஜர் அஷ்டாவதானம் தலைமையில் ஒரு கூட்டம், ஜி.எம். திரிசங்குவைச் சந்தித்து, கிட்டத்தட்ட 30 நிமிடங்களுக்கு மேல் கோவிந்து மேல் புகார் காண்டம் வாசித்தனர்.

ஜி.எம். முகத்தில் கறுமை படிந்தது.

“கோவிந்துவை வேற பிராஞ்சுக்கு மாத்திப்புட்டா பிரச்னை தீர்ந்துடும் சார்! நம்ம ஆபீஸ் பேரு கெட்டுடும்னு ஸ்டாஃப் எல்லாம் பயப்படறா…” என்றார் மேனேஜர் அஷ்டாவதானம்.

“ஓ.கே. என்கிட்டே பிரச்னையை விட்டுட்டீங்கள்ல, கவலையே படாதீங்க. நான் அதைப் பாத்துக்கறேன்..” என்றபடியே எழுந்து கைகூப்பினார் ஜி.எம்.

எல்லோரும் வாசல் வரை சென்று வழியனுப்ப ஜி.எம். ஏறிய கார் புறப்பட்டது.

கார் கண்ணுக்கு மறைந்ததும் மேனேஜரின் கையைப் பிடித்து எல்லோரும் குலுக்கினார்கள். சூப்பர் சார்! கலக்கிட்டீங்க போங்க! என்று சிலாகித்தார்கள்.

“நா என்னய்யா செஞ்சேன்? ஒங்க எல்லோர் கருத்தையும் ஜி.எம். கவனத்துக்குக் கொண்டு போனேன். தட்ஸ் ஆல்! அந்தப் படவாவுக்கு டிரான்ஸ்ஃபர் ஆர்டர் ரெண்டு மூணு நாள்ல வந்துடும். ஒரு விஷயம். இந்த ரெண்டு நாளாக் கோவிந்து லீவு போட்டுட்டுத் தொலைஞ்சது நமக்கு நல்லதாச்சு. தோ பாருங்கய்யா, அவனோட டிரான்ஸ்ஃபர் ஆர்டர் வந்ததும் எனக்கு அங்கீதா ஓட்டல்ல ரஸ குல்லாவும் நெய் ரோஸ்ட்டும் கம கமன்னு ஸ்ட்ராங் காப்பியும் வாங்கிக் கொடுத்துக் கவனிச்சுப்பிடணும், தெரியுமோல்லியோ?”

“ஜமாய்ச்சுப்புடறோம் ஸார்! வெற்றிப் புன்னகை பளிச்சென்று பிரகாசிக்க, கோரஸ் பாடினார்கள் அவர்கள்.”

இரண்டு நாள் ஓடியது.

லீவிலிருந்து திரும்பிய கோவிந்து, மேனேஜர் அஷ்டாவதானத்தைத் தேடிப் போனான். ஒடிசல் தேகத்தை வளைத்து இரு கைகளையும் மார்புக்குக் குறுக்கே கட்டிக்கொண்டு பவ்யமாக நின்றான்.

“ஸார் என்னை மன்னிக்கணும். ஜி.எம்.ஸார் நம்ம ஆபீசுக்கு இன்ஸ்பெக்சன் வந்தப்ப நான் லீவு எடுத்துகிட்டது தப்புத்தான். ஆனாலும் பெருந்தன்மையோடு நீங்க லீவு கொடுத்தீங்க. ரொம்பத் தேங்க்ஸ் சார். இந்த உதவியை நான் என்னிக்கும் மறக்கவே மாட்டேன்!”

“இது என்னய்யா பெரிய விஷயம்? போய் வேலையைப் பார்!” என்ற மேனேஜர், “படவா, வேஷமா போடறே? ஒனக்கு இருக்குடா… நானாடா ஸ்காட்ச் விஸ்கி குடிக்கிறவன்? நானாடா மட்டன் பிரியாணியும் சிக்கன் குருமாவும் வாங்கிச் சாப்பிட்டேன்? படுபாவி!” என்று மனசுக்குள் திட்டித் தீர்த்தார்.

பூனை போலத் தன் ஸீட்டுக்குத் திரும்பினான் கோவிந்து.

பிற்பகலில் ஹெட் ஆபீசிலிருந்து ஃபேக்ஸில் வந்து விழுந்தது ஒரு ஆர்டர். ஸ்டெனோ ஜெஸ்ஸி உற்சாகத் துள்ளலுடன் அதை எடுத்துக்கொண்டு மேனேஜர் இருக்கைக்கு ஓடினாள். “ஸார், ஹெட் ஆபீசிலிருந்து கோவிந்துவுக்கு ஆர்டர் போட்டுட்டாங்க.இதோ..” என்று நீட்ட, மேனேஜர், “ஒழிஞ்சானா பாவி!” என்றபடி, ஆர்டரைக் கையில் வாங்கி, அதைப் படிக்க மூக்குக் கண்ணாடியைத் தேடி எடுத்தார்.

கோவிந்துவுக்குத் தகவல் காதில் விழுந்தது. சோகத்துடன் தலை குனிந்தபடி எழுந்தவன், நேரே அட்டெண்டர் முருகனிடம் ஏதோ பேசியபடி வாசலை நோக்கி நடந்தான்.

ஏனைய அலுவலர்கள் மேனேஜரின் டேபிளை நோக்கிப் பாய்ந்தார்கள். “வெறும் டிரான்ஸ்ஃபர் தானா? இல்லை சஸ்பென்ஷனும் உண்டா? கோவிந்துவை எந்த ஊருக்குத் தூக்கியடிச்சிருக்காங்க?”ஆவலுடன் மேனேஜர் முகத்தைப் பார்த்தார்கள்.

இந்த நேரத்தில் மேனேஜரின் மேஜை மீதிருந்த போன் ஒலித்தது. எடுத்துக் காதில் வைத்தவர் சடாரென்று எழுந்து நின்று பவ்யமாகப் பேச ஆரம்பித்தார்.

“எஸ் ஸார்! எஸ் ஸார்! ஓ.கே.ஸார்!” என்று ஐந்து நிமிடங்கள் இதையே ஜெபம் மாதிரி சொல்லிக் கொண்டிருந்தார். பேசி முடித்துத் தொப்பென்று இருக்கையில் விழுந்தார். முகத்தில் அதீத வியர்வை.

வந்தது ஹெட்டாபீஸ் போன் கால்; பேசியவர் ஜி.எம். திரிசங்கு.

“மிஸ்டர் அஷ்டாவதானம், நான்தான்யா திரிசங்கு பேசறேன். நான் சென்னை ஆபீசுக்கு இன்ஸ்பெக்சன் வரப் போறேன்னு ஒரு மாசம் முன்கூட்டியே டூர் புரோக்ராம் போட்டு அனுப்பினேன். நான் ரெயில்ல வரேனா, ஃப்ளைட்டுல வரேனாங்கறதைக் கூட கன்ஃபர்ம் செய்துக்காம, நீங்களா என்னை ரிஸீவ் பண்ண ஏர்போர்ட்டுக்கு ஓடினீங்க. ஆனா நம்ம சென்னை ஆபீசிலிருந்து ஒரே ஒருத்தர், அதான்யா நீங்கள்லாம் குத்தம் சொன்னீங்களே, அந்த ஸ்டோர்ஸ் அசிஸ்டெண்ட் கோவிந்து, மின்னாடியே ஹெட்டாபீசுக்கு போன் போட்டு விசாரிச்சுத் தெரிஞ்சுகிட்டு, ரெயில்வே ஸ்டேஷனுக்குக் கரெக்டா வந்து ஒத்தை ஆளா என்னையும் என் ஃபேமிலி மெம்பர்ஸையும் ரிஸீவ் பண்ணினார் தெரியுமா? அவரே கார் ஏற்பாடு செஞ்சு, லக்கேஜை ஏற்றி, எங்களைக் கெஸ்ட் ஹவுசுக்கு அழைச்சுகிட்டுப் போனார். நான் சென்னையில் இருந்த ரெண்டு நாளும் என் ஒய்ஃப், குழந்தைகளை எம்.ஜி.எம்., சினிமா, பீச்சுன்னு பல இடங்களுக்கு கூட்டிட்டுப் போய் எண்டர்டெய்ன் பண்ணினார். நீங்க எல்லோரும் அவரைப் பற்றி லஞ்சப் புகார் சொன்னீங்க. ஒங்க எல்லோரைப் பற்றியும் அவர்கிட்டே விசாரிச்சப்ப, எல்லோருமே ரொம்ப நல்ல வங்கன்னு பெருந்தன்மையா சர்ட்டிபிகேட் கொடுத்தார். அவர் லஞ்சம் வாங்கறார்னு சொன்னீங்களே, நீங்க ஆபீஸ் மேனேஜர் தானே? கோவிந்துவுக்கு இதுவரைக்கும் ஒரு ஷோ காஸ் நோட்டீஸாவது கொடுத்ததுண்டா? அவரைக் கண்டிச்சதுண்டா? புத்திசாலித்தனமா வேலை செஞ்சு பேர் வாங்கற ஆள்னா ஒங்களுக்கு எளக்காரம், வயத்தெரிச்சல்! நம்ம ஆபீஸ்லயே வெரி சின்சியரா வேலை செய்யற ஒர்த்தர் கோவிந்து தான்னு எனக்குத் தெரிஞ்சுடுச்சு. அது சம்பந்தமா ஒரு ஆர்டர் ஃபேக்ஸில சித்த மின்னே அனுப்பியிருக்கேன். படிச்சுப் பாருங்க. இனிமேலாவது கோள் மூட்டற வேலையை விட்டுட்டு ஒழுங்கா எல்லாரும் ஆபீஸ் வேலையைப் பாருங்கய்யா!”

எரிச்சலுடன் பார்வையைத் திருப்பி, ஃபேக்ஸ் செய்தியைப் படித்தார். அந்த ஃபேக்ஸில் வெடிகுண்டுதான் வந்திருந்தது.

கன்னியாகுமரி கிளை அலுவலகத்துக்கு அஷ்டாவதானத்தை மாற்றியிருந்தார்கள். கோவிந்துவுக்கு சீனியர் டெபுடி மேனேஜராகப் பதவி உயர்வு அளித்திருந்ததுடன், புது மேனேஜர் வரும் வரை ஆக்டிங் மேனேஜர் பொறுப்பில் கோவிந்து நியமிக்கப் பட்டிருப்பதாகவும் ஆணையில் கூறப்பட்டிருந்தது.

ஃபேக்ஸ் ஆர்டரைத் தன் மேஜையைச் சூழ்ந்து நின்றிருந்தவர்களிடம் நீட்டினார் அஷ்டாவதானம்.. அவர்கள் அதை வாங்கி மௌன அஞ்சலியைப் போல ஓசையில்லாமல் படித்தார்கள்.

“ரஸகுல்லா, நெய் ரோஸ்ட், டிகிரி காப்பி எல்லாம் உங்களுக்குத்த்கான்.. சாப்பிடுங்க… நம்ம ட்ரீட்தான்! ” உரக்கக் குரல் கொடுத்து, அலுவலகத்தின் அமைதியைக் கலைத்தது, கோவிந்துவின் உற்சாகமான குரல்.

(ஆனந்த விகடன் தீபாவளி மலர்) 

தொடர்புடைய சிறுகதைகள்
``நீட்டு கையை!'' பாலா பயந்தபடி கையை நீட்ட, படீரென்று பிரம்பால் ஒரு அடி. இடது கையை நீட்டச் சொல்லி இன்னொரு அடி. பாலாவின் கண்களில் மளுக்கென்று நீர் கோர்த்துக் கொள்ள, தான் ஏன் இப்படி நடந்து கொள்கிறோம் என்று தன் மீதே ஆத்திரம் எழுந்தது ...
மேலும் கதையை படிக்க...
இரண்டு தினங்களாக விடாமல் பெய்த மழை மனமிரங்கிக் கடந்த அரை மணி நேரமாக சிறு தூறலாக மாறியிருந்ததை வரவேற்றான் சங்கர். சே, இதென்ன போர்! தொடர்ந்த மழையின் ஓயாத ஓசை, பகலிலும் இருள் கவ்வினாற்போன்ற சோம்பல் சூழ்நிலை, தெருவில் முழங்கால் நீரில் சளக், ...
மேலும் கதையை படிக்க...
``நட, ஸ்டேஷனுக்கு! பெருமாள்சாமி முதலியாருக்கு அவமானமும் வேதனையும் தின்றன. ``காலையில் யாருடைய முகத்தில் முழிச்சேன்?'' யோசித்துப் பார்த்தார். ``இன்னாய்யா நா சொல்றேன், நின்னுகிட்டே இருக்கே? பொடரியில நாலு உட்டு இழுத்துட்டுப் போகணுமா?'' போலீஸ்காரர் உறுமினார். அந்த உறுமலில் முதலியார் அதிர்ந்து போனார். உள்ளூருக்கு அவர் ராஜா. ...
மேலும் கதையை படிக்க...
‘என் இனிய தோழருக்கு, நான் உங்களை பலமுறை பார்த்தும், பேசியும் இருக்கிறேன்... ஆனால், கடந்த ஞாயிற்றுக்கிழமை சந்தித்தது என் வாழ்க்கையில் மிகப்பெரியதொரு திருப்பம் என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால் நான் பல குழப்பங்களும், பிரச்சனைகளும் சந்தித்திருந்த தருணம் அது. மேலும் ஒரு வாரமாக ...
மேலும் கதையை படிக்க...
ஊரின் நுழைவாயிலிலேயே கன்னியாத்தா கோயிலின் வடபுறம் துவங்கி பனங்காடு என்று சொல்லப்படும் மலையடிவாரத்து நெழலிக்கரை வரை நல்லமுத்துக் கவுண்டரின் பூமிதான். பாதிக்கு மேல் பண்டம் பாடிகள் மேய்க்கிற வறண்ட பூமியானாலும், மிச்சமிருந்த பூமியில் நல்ல விளைச்சல் காணும். கன்னியாத்தா கோயிலை ஒட்டியிருந்த ...
மேலும் கதையை படிக்க...
சாலை ஓரத்தில் ஒரு அடி உயரத்துக்கு கம்பு ஒன்றை நட்டு, வலை ஒன்றைப் பொருத்தி இருபுறங்களிலும் முளைக்குச்சிகளை இறுக்கிக் கட்டினான் நாச்சான். பிறகு மெல்ல நடந்து யானை படுத்திருப்பதான தோற்றம் கொடுத்திருந்த மலைப் பாறையில் ஏறி உட்கார்ந்து மடியிலிருந்த பீடிக்கட்டை எடுத்தான். ...
மேலும் கதையை படிக்க...
ரவுண்டானா தாண்டியிருந்த ஒரு கம்ப்யூட்டர் பயிற்சி மையத்துக்கு முன்னால் அந்த விபத்து நடந்தது. இரண்டு மோட்டார் சைக்கிள்கள். முன்னால் போனதைப் பின்னால் சென்றது மோதியதில், முன்னது மூன்று குட்டிக்கரணம் போட்டது. பம்பர் வளைந்து ஹெட்லைட் உடைந்து சிதறியது. பின்னாலிருந்த டேஞ்சர் லைட்டும் உடைந்து ...
மேலும் கதையை படிக்க...
`என்ன கொடுமை சார் இது?' - சினிமாவில் ஓர் நகைச்சுவை நடிகர் சொல்லும் வசனம் இது. அதை நானும் சொல்ல நேரும் என்று கனவிலும் நினைக்கவில்லை... பேருந்து செல்லும் மெயின் ரோடில் இருந்த பழக்கடைக்காரரிடம், ``சார், இங்கே ஒரு மசால்வடை, பஜ்ஜி விக்கிற ...
மேலும் கதையை படிக்க...
காரை ஷெட்டில் விட்டுவிட்டு ஆனந்தர் மெல்ல நடந்து பங்களாவுக்குள் நுழைந்தபோது, பாலகாண்டம் நடந்து கொண்டிருந்தது. சோபாவில் அமர்ந்து மெய்மறந்து செவியுற்றுக் கொண்டிருந்த அவர் மனைவி பாலம்மாளையோ, அடக்க ஒடுக்கமாக நாற்காலியில் அமர்ந்து மிகவும் இலயிப்போடு எஜமானியம்மா வுக்கு இராமாயணம் படித்துச் சொல்லிக் ...
மேலும் கதையை படிக்க...
முன் மண்டையில் இரத்தம் பீறிட்டு நெற்றி, முகம், கன்னம் யாவும் வழிய வழிய அந்தப் பதினைந்து வயதுச் சிறுவனை சாம்பலான் தூக்கி வந்து டாக்டர் வீட்டு வராந்தாவில் இருந்த பெஞ்சில் கிடத்திவிட்டு, ``சாமி! சாமி!'' என்று உரக்கக் கூவினான். அவன் கூச்சலினால், டாக்டர் ...
மேலும் கதையை படிக்க...
நெஞ்சில் ஒரு முள்
மழையில் ஓர் கிழவர்!
செல்வாக்கு
உறவு சொல்ல ஒரு கடிதம்!
நரிகள்
வேட்டை
தீர்ப்பு
மசால்வடையும் ஒரு சொகுசுக்காரும்
இராமர் பதித்த அம்பு!
புயலில் சில தனி மரங்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)