யோக நாயகி

 

‘யோகநாயகி’ என்றதும் சாண்டில்யனின் குதிரைகள் குளம்பொலி கேட்கும் சரித்திர நவீனம் என்று சபலப்பட்டு வருபவர்கள் சற்றே விலகுங்கள்.

இந்த யோகநாயகிக்குக் கொச்சையாகப் பலவித நாமாவளிகள் உண்டு. உதாரணத்துக்குச் சில… குருட்டாம் போக்கு அதிர்ஷ்டம், சுக்ரதசை, அடிச்சுது ஜாக்பாட், அவள் காட்டுல மழை…!

யோகநாயகி நம்மைப் பாசத்தோடு ஒரு முறை பார்த்துவிட்டால் போதும்… நமது வாழ்க்கை திடீரென்று சுபிட்சமாகிவிடும். நமக்கே தெரியாமல் ஆடு துறையில் ஒரு திடீர் அத்தை முளைத்து, தனது நாலு வேலி நிலத்தையும், பம்ப் செட், டிராக்டர் சகிதமாக நம்மீது எழுதி வைத்துவிட்டு பாத்ரூமில் வழுக்கி விழுந்து மண்டையைப் போடுவாள்.

யோகநாயகியின் அன்புக்குப் பாத்திரமானால் வழக்கமாக ஒரு மணி சாவகாசத்துக்கு ஒரு முறை வரும் நாற்பத்தி மூன்றாம் நம்பர் (அதுவும் டிரைவரே நின்று கொண்டு ஓட்டும் அளவுக்குக் கும்பல் பிதுங்கி வழியும் ) பஸ்கூட ஒரே சமயத்தில் நான்கு, ஐந்தாக வரும்…

அதே சமயம் நாயகிக்குப் பிடிக்காதவர்கள் பஸ் ஸ்டாண்டுக்கு வந்து நின்றால் கப்பல் ஆகாயவிமானங்கள் கூட ஒருவேளை பஸ் ஸ்டாண்டுக்கு வரலாம். ஆனால், சத்தியமாக நாற்பத்தி மூன்றாம் நம்பர் பஸ் வராது.

இவ்வளவு ஏன்? யோகநாயகியின் அருள் இருந்ததால் தான் விஞ்ஞானி நியூட்டனின் தலையில் ஆப்பிள் விழுந்தது; அவரும் புவியீர்ப்புத்தன கோட்பாட்டைக் கண்டுபிடிக்க முடிந்தது.

சிந்தித்துப் பாருங்கள். அன்று நியூட்டனின் தலையில் ஆப்பிளுக்குப் பதிலாகத் தேங்காய் விழுந்திருந்தால் விஞ்ஞானமும் போயிருக்கும்; விஞ்ஞானியும் போயிருப்பார்!

தனக்குப் பிடித்தவர்களுக்கு யோக நாயகியாகவும், பிடிக்காதவர்களிடம் சோக – நாயகியாகவும் காட்சியளிக்கும் இவளுடைய அருள் இல்லாமல் ஆஃப்டர் ஆல் பென்சில் கூடச் சீவ முடியாது!

யோகநாயகி அருள் இருந்தால் ஒரே சீவலில் பென்சிலின் ஊக்கு கூராக வெளிப்படும். இவளுக்குப் பிடிக்காதவர்கள் சீவினால் பென்சில் புழுக்கையாக ஆகி, இனியும் சீவினால் பென்சிலைப் பிடித்துக்கொண்டிருக்கும் விரல்களைத்தான் சீவ வேண்டும் என்ற நிலைக்கு அவர்களைக் கொண்டு விட்டுவிடுவாள்.

எனது உறவினர் ஒருவர் இருக்கிறார். அவரைத் துரதிர்ஷ்ட சாம்ராஜ்யத்துக்கு தளபதியாகப் போடலாம். நமகெல்லாம் விரலில் நகச்சுத்து வந்தால்…. ஒரு எலுமிச்சம் பழத்தை விரலில் தொப்பியாக வைப்போம்; ஓரிரு நாட்களில் குணமாகும்.

உறவினருக்கு போன வருடம் ஒரே சமயத்தில் நான்கு விரல்களில் நகச்சுத்து வந்து மூன்று மாதங்கள் மனிதரைப் பாடாய்ப்படுத்தியது.

இதில் வயிற்றெரிச்சல் என்னவென்றால், நகச்சுத்து வந்த நான்கு விரல்களில் ஒரு விரல், இவர் இதுநாள் வரை அதிர்ஷ்டம் என நினைத்துக்கொண்டிருக்கும் ஆறாவது விரல்…. கடைசியில் வீட்டில் ஊறுகாய் போட வாங்கி வைத்திருந்த அத்தனை எலுமிச்சம் பழங்களையும் விரலுக்கு ஒன்றாகத் தினமும் சொருகிக்கொண்டு மூன்று மாதங்களும் தவில் வித்வான் போலத் தோற்றமளித்தார்.

பாவம், மனிதருக்கும் யோகநாயகிக்கும் ஆயிரக்கணக்கான கி.மீ. தூரம்! அலுவலகத்தில் ஆறு மணி நேரமும் மாடாக உழைத்துவிட்டு அசதியைப் போக்கிக்கொள்ள ஐந்து நிமிடம் ஹாய்யாக உட்காரும் நேரம் பார்த்து இவரது மேலதிகாரி வந்து எரிந்து விழுவார். அலுவலக நேரத்தில் நாற்காலியில் தளர்வாகச் சாய்ந்து அமர்ந்து சிற்றின்பம் கண்டதற்காக மெமோ’ கிடைக்கும்.

ஏனோ தெரியவில்லை. இவர் எப்பொழுது பஸ்ஸில் ஏறினாலும் யார் காலையாவது தெரியாத்தனமாக மிதித்து விடுவார்…. அதுவும் பாதி நேரங்களில் இவர் மிதித்த பாதத்துக்குச் சொந்தக்காரர் ‘கிங்காங்’, தாராசிங்’ போல இருப்பார்கள். அவர்கள் இவரை முறைத்துப் பார்த்துவிட்டு, “நான் திருப்பி மிதித்தால் தாங்குவியா… சின்ன பையா..? காலை மிதிக்கும் கெட்ட பழக்கத்துக்கு இன்றோடு முழுக்குப் போட்டு விடு” என்று உபதேசம் செய்து விட்டுவிடுவார்கள்.

அவர்களைச் சொல்லியும் குற்றமில்லை. இவர் என்ன ராமபிரானா… பாதம் பட்டவுடன் அகல்யை வெளிப்பட?!

ஒரு நாள் விட்டு ஒரு நாள் எல்லோர் வீட்டுக் குழாய்களிலும் கார்ப்பரேஷன் தண்ணீர் வருகிறது என்றால், உறவினர் வீட்டுக் குழாயில் அந்த ஒரு நாளிலும் தொடர்ந்து வராமல் தண்ணீர் ஒரு மணி நேரம் விட்டு ஒரு மணி நேரம் வரும்.

துரதிர்ஷ்ட ம் இவரை இப்படித் துரத்தித் துரத்தி அடித்தது. யோகநாயகி ஏனோ இவரை மட்டும் எப்பொழுதும் மாறுவேடத்தில் சோதித்துக் கொண்டிருக்கிறாள். உறவினர் எது செய்தாலும் தவறாகவே முடியும். இவர் எவ்வளவுதான் ஜாக்கிரதையாகப் போட்டிருந்த பனியனைக் கழற்றினாலும் எப்படியோ ஏதாவது ஒரு இடத்தில் கிழிந்து விடுகிறது…

உச்சக்கட்ட துரதிர்ஷ்டத்துக்கு உதாரணமாக உறவினர் என்றால்… யோகநாயகியை இடுப்பில் வைத்துக்கொண்டு அதிர்ஷ்ட சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பவர் எனது பெரியப்பாவின் நெருங்கிய நண்பரான பலசரக்குக் கடை முதலாளி – பஞ்சாபி இனத்தைச் சேர்ந்தவர். திலக்ராஜ் என்று ஆரம்பித்து வளரும் இவரது பெயரை எழுத ஆரம்பித்தால் கன்னியாகுமரிக் கோயிலில் தான் முடியும்….. கூப்பிடுவது திலக். மனிதருக்குப் பெயரிலேயே ‘லக்’ சுபாவமாக அமைந்திருக்கிறது!

பஞ்சாபில் ரொட்டியும் சப்பாத்தியும் தின்று கொண்டிருந்தவர், சென்னையில் தற்போது பல இடங்களில் பலசரக்குக் கடைகள் வைத்து நமக்கு அரிசியும் அஸ்காவும் வழங்குகிறார்… ஏதோ ஒரு சக்தியால் (யோகநாயகி..!) உந்தப்பட்டு இவர் காரியங்கள் செய்வதையோ, முடிவுகள் எடுப்பதையோ பார்த்தால் நமக்குக் குருட்டாம்போக்குத்தனமாகத் தெரியும். கடைசியில் பார்த்தால் இவர் நம்மை ஆச்சரியப்படுத்திக் குபேரனாவார்.

ஏதோ நெருடுகிறதே என்று இவர் பல்லைக் குத்திப் பார்த்தால் நெருடியது தங்கத் துகள்களாக இருக்கும். அப்படி ஒரு அதிர்ஷ்டம் திலக்ராஜுக்கு.

அதிர்ஷ்டச் சின்னங்கள் இவர் மேனியில் அனாயாசமாகப் பரவி இருக்கும். உடம்பில் நிறைய மச்சங்கள் இருந்தால் அதிர்ஷ்டசாலி என்பார்கள் இவருக்கு மச்சங்களுக்கு நடுவே சிறிது உடம்பு தெரியும். ஒரு நாள் ஐம்பது வயதில் தனக்குக் கடைவாயில் சிங்கப் பல் முளைத்திருப்பதை இவர் எனது பெரியப்பாவிடம் கூறிவிட்டு வாயைப் பிளந்து அதைக் காட்டவும் செய்தார். ”அடேய் திலக்! உனக்கு இருக்கிற அதிர்ஷ்ட த்துக்கு வாயிலே சிங்கப் பல் என்ன ….. சிங்கமே எட்டிப் பார்த்தாலும் ஆச்சரியப்படறதுக்கில்லை” என்று சொல்லி என் பெரியப்பா பொக்கையாகிக் கொண்டிருக்கும் தனது வாயை நினைத்துப் பொறாமையில் வெம்பினார்.

இப்படியாக யோகநாயகி பஞ்சாபிப் பலசரக்குக் கடைக்காரரின் ஆசைநாயகியாகத் திகழ்கிறாள்.

“அதெல்லாம் சரி சாமி! இந்த யோகநாயகியை வசியப்படுத்துவது எங்ஙனம்?” என்று நீங்கள் கேட்பது என் காதில் விழுகிறது.

‘ஏன் சார்! சகல சௌபாக்கியங்களும் அருளக்கூடிய யோகநாயகியை வசப்படுத்தும் விதங்கள் தெரிந்திருந்தால் நான் இந்நேரம் உங்களிடம் சம்பாஷித்துக்கொண்டா இருப்பேன்? நாயகியின் அருளால் ஒரு ரூபாய்க்கு ஓபிராய் ஷெராட்டனை விற்க வந்த கனவானிடம் பேரம் பேசி எட்டணாவுக்கு வாங்கிக் கொண்டிருப்பேன். வெள்ளை மாளிகையின் வராந்தாவில் அமெரிக்க ஜனாதிபதி ரீகனோடு பேசிக் கொண்டிருப்பேன்.

அட்டன்பரோ காந்தியின் அகில உலக டிஸ்டிரிபியூட்டராக ஆகியிருப்பேன்.

யோகநாயகியை வசியப்படுத்துகிற வழி தெரியமாட்டேன் என்கிறதே! அபிஷேகப் பிரியனாக இருப்பதால் பரமேஸ்வரனைப் பால், தயிர், நெய்யால் மூழ்கடித்து வரம் வாங்கிவிடலாம். அலங்காரப் பிரியனாக இருப்பதால் நாராயணனை ஆழ்வார்கள் பாடியவண்ணம் அலங்கரித்துப் பல்லக்கில் வைத்து ‘கண்ணாடி காட்டி’ கேட்டதைப் பெற்றுவிடலாம்.

என்ன செய்தால் யோகநாயகி திருப்தி அடைவாள் என்றே சொல்ல முடியாத நிலை!

காரணம், அவளுக்கு ரூபம் கிடையாது. குணங்கள் கிடையாது …. அதனால், கோவிலும் கிடையாது.

‘கால நேரம் சேரும்போது கழுதை வந்து மறித்தாலும் காரியங்கள் நடக்குமடா சுருட்டு சுந்தரம் பிள்ளை!’ – கவிஞரின் அர்த்தமுள்ள வார்த்தைகள் நினைவுக்கு வருகின்றன…

காலமும் நேரமும் சேர்ந்து நமக்கு அருள்பாலிக்க, யோகநாயகி வரும் வேலையை எண்ணிக் காத்திருப்போமாக!

- ஃபைவ் ஸ்டார் பலகாரக்கடை!, விகடன் பிரசுரம் 

தொடர்புடைய சிறுகதைகள்
மகாபாரதம் படித்தவர்களுக்குத் தெரிந்திருக்கும். அதில் ஒரு கட்டத்தில் கிருஷ்ணரைக் கட்டிப் போடுவதற்காகக் கயிற்றோடு வந்த சகாதேவனின் தலை சுற்றும்படி பார்த்த இடத்திலெல்லாம் பரந்தாமன் தெரிந்தானாம். அதுபோல , கொஞ்ச காலமாகவே சென்னையில் எந்த மூலை முடுக்குக்குச் சென்றாலும் எனக்கு சிலுக்கு ஸ்மிதாதான் ...
மேலும் கதையை படிக்க...
'அவரோட ராத்திரிகள்' - இந்தத் தலைப்பைப் படித்துவிட்டு ஐ.வி.சசியின் அவளோட ராத்திரிகள் மலையாள அடல்ட்ஸ் - ஒன்லியின் சாயலை எதிர்பார்த்து விகல்பமான எண்ணத்தோடு வாசிக்க வருபவர்கள் ஏமாற்றமடைவீர்கள். தலைப்பில் உள்ள அவர் மயிலாப்பூரில் உள்ள எங்களது காலனியில் முன்பு குடியிருந்த திருவாளர் ரங்கபாஷ்யம்தான். ...
மேலும் கதையை படிக்க...
இந்த சென்னை மாநகரத்தின் சாலைகளில் கார், மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர் போன்ற வாகனங்களின் மீது ஏறி விரைந்து செல்லும் கனவான்களே! பாதசாரிகளைப் பழுதாக்காமல், கோழி, வாத்து, நாய் போன்ற வாயில்லா ஜீவன்களின் இறைச்சியை சாலை நடுவே பரிமாறாமல், பயபக்தியோடு சர்வ ஜாக்கிரதையாக ...
மேலும் கதையை படிக்க...
பொமரேனியன், ராஜபாளையம், அல்சேஷன், ஆதிசேஷன், அனந்தசேஷன் - என்று செல்லமாக வளர்ப்பவர்கள் இந்தக் கட்டுரையைப் படித்துவிட்டு, நாய்களின் மீது துவேஷம் காட்டிய என் போன்றோர் மீது தயவுசெய்து பழக்கதோஷத்தில் பாயாதீர்கள் ! தெருவில் செல்லும்போது எதிரில் வரும் நாய், நான் உனது தோழன்' ...
மேலும் கதையை படிக்க...
அன்புள்ள மாண்புமிகு முதலமைச்சருக்கு ... அன்றாட வாழ்க்கையில் அல்லல்படும், அவதிப்படும்....ஏன், சுத்தமாகச் சொல்லப்போனால் லோல்படும் ஆயிரக்கணக்கான மத்யவர்க்க மக்கள் (ஆலோசகர்கள் வைத்துக்கொண்டு வரி ஏய்ப்பதற்கு வசதி இல்லாத ஓரளவு வருமானம் வாங்குபவர்கள் ....) சார்பாக அடியேனின் தெண்டம் சமர்ப்பித்த விஞ்ஞாபனம். நலம். நலமறிய ...
மேலும் கதையை படிக்க...
ஆந்திர குருட்சேத்திரத்தில் தெலுங்குதேச மன்னர் கலியுகக் கிருஷ்ண பரமாத்மா என்.டி.ராமா ராவ் அவர்கள் தெலுங்குதேச ஊழியர்களுக்காக அரசியல் கல்லூரி ஒன்று ஆரம்பிக்கவேண்டும்' என்று திருவாய் மலர்ந்தருளியிருப்பதாகச் செய்திகள் வந்திருக்கின்றன. ராமராவ்காருவின் மேற்கூறிய ஆசை அகில இந்திய ரீதியில் செயலாக்கப்படவேண்டிய விஷயம் என்று தோன்றுகிறது. ...
மேலும் கதையை படிக்க...
'ஆதிபராசக்தி' படம் பார்க்கப் போவதாக வீட்டில் அண்டப்புளுகு புளுகிவிட்டு 'அனிமல்ஸ் அண்ட் செக்ஸ் லைஃப்' - விலங்குகளின் விரகதாப வாழ்க்கையை விவரிக்கும் சினிமாவை நைட் ஷோ பார்த்து விட்டு நண்பர்களுடன் ராஜகுமாரி தியேட்டரைவிட்டு வெளியே வந்தேன். தங்களது அந்தரங்க வாழ்க்கையை அம்பலமாக்கிய சினிமாவை ...
மேலும் கதையை படிக்க...
ஊதல், உறிஞ்சுதல், உமிழ்தல் என்று மூன்று வகையாகக் கெட்டப் பழக்கங்களை நமது முன்னோர்கள் வகுத்திருக்கிறார்கள். ஊதல் - அதாவது புகைப் பிடித்தல். இழுக்கயிழுக்க இன்பம் இறுதிவரை பாலிஸியில் சிகரெட்டின் ஃபில்டர் பகுதி வரும் வரை இழுத்து.... இதற்கு மேலும் இழுத்தால் புகைக்குப் பதிலாக ...
மேலும் கதையை படிக்க...
சர்வாதிகாரி ஹிட்லர் எழுதியதாகச் சொல்லப்பட்ட உலகெங்கும் பரபரப்பு உண்டாக்கிய - ரகசிய டயரிகள் கடைசியில் போலி என்று நிரூபிக்கப்பட்டது உங்களுக்குத் தெரிந்ததே... ஆதாரம்: சர்வதேச செய்திப் பத்திரிகைகள். இதிகாச, புராண, சரித்திர பிரபலஸ்தர்களின் பர்சனல் டயரிகளை நான் படித்துப் பார்த்தது உங்களுக்குத் தெரியாததோ! ஆதாரம்: விடியற்காலையில் ...
மேலும் கதையை படிக்க...
'காயமே இது பொய்யடா' என்ற சித்தர் வாக்குக்கு ஒரு சிறு மாற்றம் தேவை. 'காயமே இது பச்சோந்தியடா!' நீங்க பாட்டுக்கு, காயம் என்றவுடன் படை, சொறி, சிரங்கு , பர்னால், ஜெர்மெக்ஸ் என்று போய்விடாதீர்கள். நான் கூறுவது செந்தமிழ் காயம். அதாவது, உடம்பு! ...
மேலும் கதையை படிக்க...
சிலுக்காணத்தம்மன்!
அவரோட ராத்திரிகள்!
நில் கவனி-கிழவி
நாய் வில்லர்கள்!
அன்புள்ள முதலமைச்சருக்கு…
பாலிடிக்ஸ் ப்ளஸ் டூ!
அனிமல்ஸ் ஒன்லி
மேனரிஸம்
க்யூவில் வந்தவர்கள்
ஊட்டி வரை உளவு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)