Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

யார் புத்திசாலி?

 

அலுவலகத்தின் ஒட்டு மொத்த பார்வையும் ஒரே நேரத்தில் ஈர்க்கக் கூடிய ஆற்றல் அவளிடம் அப்படி என்ன இருக்கிறதெனத் தெரியவில்லை. அவள் என்னவோ பார்ப்பதற்கு சுமாரான அழகோடுதான் இருக்கறாள். சரி………சரி…… நான் பொய் சொல்ல மாட்டேன். (மானசீகமாக சத்தியம் செய்து கொண்டு 2 மாதங்கள் ஆகிறது. எல்லாவற்றிற்கும் காரணம் அந்த சத்திய சோதனை புத்தகம்தான்) அவள் சற்று கூடுதலான அழகோடுதான் இருக்கிறாள். அதற்காக ஒட்டு மொத்த அலுவலகமும் அவள் காலடியில் விழுந்துவிட வேண்டுமா என்ன?. அனைவரும் தன்னைப் பார்த்து ரசிக்கிறார்கள் என்கிற கர்வம் அவளது முகத்தில் அப்பட்டமாகத் தெரிகிறது. என்னவொரு கர்வமான நடை அது. அதை கூட கவனிக்கமல், அவளது கர்வத்தைக் கண்டு கோப்படாமல், இதோ அருகில் இருக்கிறானே வெட்கங்கெட்ட கணேஷ், (எனதுஅலுவலகத் தோழன்) அவளை அப்படி முறைத்துப் பார்க்கிறான். நீங்கள் கவனித்திருப்பீர்களா? இல்லையா? என்று எனக்குத் தெரியாது. ஆனால் நான் கவனித்திருக்கிறேன். ஆண்கள் தங்கள் சூழ்நிலையை மறந்து, வெட்கமில்லாமல் சைட் அடித்துக் கொண்டிக்கும் பொழுது ஒரு சிரிப்பு சிரிப்பார்கள் மென்மையான அந்த அசிங்கமான சிரிப்பிலேயே தான் ஒரு அடிமை என்பதை வெளிப்படுத்திவிடுவார்கள். பின்னொருநாள் ஆன்மீகம் பற்றி ஏதாவது அவர்களிடம் கேட்டால் தெரியும், விவேகானந்தரைப் பற்றி வாய் சுளுக்க சுளுக்க பேசுவார்கள்.

அந்த கணேஷ் மட்டுமா அப்படி. இந்த அலுவலகமே அப்படித்தான். அவளை சைட் அடிப்பதில், அலுவலகத்தின் ஒரு நிமிடம் வீனாய் போவது தினசரி நடைபெறும் கூத்து.

அன்றொரு நாள் அவளைக் கவனித்தேன், வெள்ளை உடையில் தேவதையைப் போல் மிதந்து வந்து கொண்டிருந்தாள்……..ஓ…………. கடவுளே தேவதை என்றா சொன்னேன். மன்னித்து விடுங்கள். அவள் வெள்ளை உடையில்; பிசாசைப் போல் நடந்து வந்து கொண்டிருந்தாள். அவள் உதட்டோரத்தில் தான் எப்படியொரு எக்காளப் புன்னகை. வழக்கம் போல் கணேஷ் வலிந்து கொண்டிருந்தான். அவனுக்கு தன்மான உணர்வே இல்லை. அவன் மட்டுமில்லை. அலுவலகமே அவளை நிமிர்ந்து பார்த்துக் கெண்டிருந்தது. நான் மட்டும் கணிணியை விட்டு பார்வையை திருப்பாமல் உட்கார்ந்திருந்தேன். பின் எப்படி அவள் வெள்ளை உடையில் வந்த விஷயம் உனக்குத் தெரியும் என்று நீங்கள் கேட்பது எனக்குப் புரிகிறது. ஏதோ கொட்டாவி விட்டுக் கொண்டே ஏதேச்சையாக திரும்பிப் பார்க்கையில் என் கண்ணில் பட்டவிஷயம் அவ்வளவுதான் வேறொன்றுமில்லை.

வந்தவள் அப்படிய போக வேண்டியதுதானே. என்னிடம் வந்து பேனா கேட்கிறாள் வருகை பதிவெட்டில் கையெழுத்திட. அந்த குளிரூட்டப்பட்ட அறையிலும் கணேஷின் சூடான பெருமூச்சை என்னால் உணர முடிந்தது. ஐயோ……… அந்த மூச்சுக் காற்று அவள் மேல் பட்டுவிடப் போகிறது. என்கிற பயத்தில் அவளை எனது இடது புறமாக வந்து பேனாவை வாங்கிக் கொள்ளச் செய்தேன். இந்த கணேஷ் இருக்கிறானே. ஒரே நிமிடத்தில் அவளை அசுத்தப்படுத்திவிடுவான். அவளுக்கெங்கே இது புரியப் போகிறது. ஆள்தான் வளர்ந்திருக்கிறாளே தவிர அறிவே இல்லை.

அவனை மனதிற்குள்ளாக திட்டிக் கொண்டே பேனாவை கொடுத்த போது, அவளது மென்மையான விரல் என் மேல் பட்டது. குணா படத்தில் கமல் கதாநாயகியிடம் லட்டு வாங்கும் போது பாடிய பாடல் எதற்கு நியாபகம் வந்தது என்று எனக்கே தெரியவில்லை. அன்று முழுவதும் அந்த பாடலைத்தான் பாடிக் கொண்டிருந்தேன். அந்த பாடல் அபிராமி அந்தாதி பாடல் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். ஒரு வேலை பக்தி உணர்வாகக் கூட காரணமாக இருக்கலாம் அந்த பாடலை பாடியதற்கு. ஏனெனில் சமீபத்தில்தான் நான் ராமகிருஷ்ணபரமஹம்சரைப் பற்றி படித்திருந்தேன். பக்தி உணர்வின் மேல் பெரிய மதிப்பே ஏற்பட்டுவிட்டது எனக்கு. பாருங்கள் நான் உண்மையை பேசுவதால் எவ்வளவு பிரச்சனை வந்து சேர்கிறது எனக்கு.

அந்த திமிர் பிடித்த வெள்ளைப் பிசாசு என் கைகளைத் தீண்டியது எனக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை. கடவுளே…….. அவள் என்னையும் மயக்கப் பார்க்கிறாள். அவளிடம் ஜாக்ரதையாக இருந்திருக்க வேண்டும். அவள் என்னுடைய பேனாவை கேட்ட போது நான் கவனிக்காதது போல் இருந்திருக்க வேண்டும். மடத்தனமாக நடந்து கொண்டேன். இந்த அலுவலகம் என்னையுமல்லவா அவர்களுடைய லிஸ்டில் சேர்த்துக் கொண்டிருக்கும். இந்த கணேஷ் வேறு ‘யூ டூ புரூட்டஸ்” என்பது போல் பார்த்துக் கொண்டிருக்கிறான். சே………… என்னவொரு சத்தியசோதனை.

நான் எழுந்துசென்று வாஷ்பேஷினில் எனது கைகளை சுத்தம் செய்து கொண்டேன். இப்போது அந்த பாடலை முனுமுனுத்துக் கொண்டுதானிருந்தேன் ‘பார்த்தவுடன் பார்த்த………….”. இந்த உண்மையை ஒத்துக் கொள்ள என்னைத் தவிர வேறு யாருக்கும் தைரியம் இல்லை. பிறகு எனது இந்த கர்வமான ஸ்டேட்மென்ட் குறித்து கோபப் பட வேண்டாம். நான் என்னும் எனது கர்வத்தை ஒழிக்க இப்பொழுது தான்; நான் படாதபாடு பட்டுக் கொண்டிருக்கிறேன்.

நான் எழுந்து சென்று விட்டதால் அவள் அந்த பேனாவை மாலை வேளையில்தான் திருப்பிக் கொடுத்தாள். அப்பொழுதும் அவள் எனது கைகளை தீண்டிவிட்டுதான் சென்றாள். நான் எத்தனை முறைதான் எனது கைகளைக் கழுவுவது. பெதுவாகவே பெண்கள் தங்களது சிறிய சிறிய செயல்களின் மூலம் எப்பேர்பட்ட எண்ணங்களை உருவாக்கி வைக்கிறோம் என்பதை உணர்ந்துகொள்வதே இல்லை. சாதாரணமாக அவள் தீண்டிவிட்டு சென்று விடுகிறாள். ஏதோ நானாய் இருக்கப் போய் பரவாயில்லை வேறு யாராவது, அவ்வளவு ஏன் அந்த கணேஷாய் இருந்திருந்தால் மனதிற்குள் என்ன என்ன கற்பனைகளை செய்வான். அறிவு கெட்டவள், வாய்வரை வந்துவிட்டது அந்தவார்த்தை. பின் நாகரீகம் கருதி என்னை நானே கட்டுப் படுத்திக் கொண்டேன்.

அன்றிரவு என் மன சஞ்சலத்தால் தூங்கவே முடியில்லை. கணேஷை பத்தாவது முறையாக கழுத்தை நெறித்து கொன்று கொண்டிரு;தேன். பின் அவன் ஏன் அப்படி பார்த்தான் அவளை மானங்கெட்டவன். அவனை நல்லவன் என்றல்லவா நினைத்தேன். அவனது தங்கையிடம் எப்படி ஒரு அண்ணனாக நடந்து கொண்டேன் நான். அதுபோல் அவனும் நடந்துகொள்ள வேண்டியது தானே. கணேஷின் தங்கை ரம்யா, அண்ணா……… என்று ஓடிவந்து என் மடியில் உட்கார்ந்த பொழுது. அதிர்ச்சியில் நான் கணேஷை பார்த்து இவ்வாறு கூறியிருந்தேன்.

‘உனக்கு 4ம் வகுப்பு படிக்கிற தங்கச்சி ஒருத்தி இருக்கான்னு ஏன்டா இவ்வளவு நாளா சொல்லல”

அவனுக்கும் மானம், வெட்கம் இதர விஷயங்கள் எல்லாம் இருக்கிறது என்பதை இந்த சம்பவத்தை வைத்துதான் தெரிந்து கொள்ள வேண்டியதிருக்கிறது. அவன் எப்படி சொல்வான் தன் தந்தை ஒரு லேட் பிக்கப் என்று.

பிறகு இரவு தூக்கத்தின் அவசியம் கருதி என்னை நானே சமாதானப்படுத்திக் கொள்ள வேண்டியிருந்தது இவ்வாறு.

பொதுவாகவே ஆண்கள் நாக்கை தொங்க விட்டுக் கொண்டுதான் அலைவார்கள். பெண் தான் சூழ்நிலைக்குத் தகுந்தாற் போல் நடந்து கொள்ள வேண்டும். கணேஷை குற்றம் சொல்லி என்ன செய்வது.

கணேஷை மீண்டும் நான் நண்பனாக்க முயற்சி செய்து கொண்டிருந்தேன். இந்த ட்ரிக்கை ஏதோ ஒரு ஆங்கில புத்தகத்தில் நான் படித்திருந்தேன். அந்த புத்தக ஆசிரியரை பார்த்தால் கண்டிப்பாக இதை சொல்லியே ஆக வேண்டும். இந்த ட்ரிக்கால் எந்தவித பிரயோஜனமும் இல்லையென்று.

இரவு தூக்கம் முழுவதையும் தொலைத்துவிட்டு அவள் மேல் வளர்த்துக் கொண்ட அதீத வெறுப்புடன் அடுத்த நாள் அலுவலகத்துக்குள் நுழைந்தேன். என் பரம விரோதி (நேற்று முதல்) கணேஷை முறைத்துப் பார்த்தேன். அந்த கோபத்திலும் எனக்குள் ஆச்சரியத்தை வரவழைத்த அந்த விஷயம் என்ன தெரியுமா?. அவன் தன் சட்டை பாக்கெட்டில் 4 பேனாக்களைசொருகி வைத்திருக்கிறான். என்னுடைய அந்த பேனா எனது பேண்ட் பாக்கெட்டில்தான் இருந்தது. யாரும் கவனிக்காத ஒரு நேரத்தில் அதையெடுத்து எனது சட்டைபாக்கெட்டில் சொருகிக் கொண்டேன். நல்லவேளை யாரும் பார்க்கவில்லை. படபடப்பில் எனது இதயத்துடிப்பு எனக்கு நன்றாக கேட்டது.

அந்த குட்டிபிசாசு இன்று ஜீன்ஸ் டிசர்டில் வந்திருந்தாள். ஐய்ய்ய்ய்யோ என்ன அழகு………சீ….சீ…………. என்ன கன்றாவிஇது. எனக்கு மட்டும் சக்தியிருந்தால் கணேஷை குருடாகப் போக சபித்திருப்பேன்.அவளது ரோஜா இதழில் இருந்து சிந்திய புன்னகை. சீ……சீ…. அதில்தான் எவ்வளவு கர்வம். அவளது அழகான நடை சீ……..சீ……..அதில்தான் எவ்வளவு ஆணவம். ஏன் இந்த பெண்கள் இப்படியிருக்கிறார்கள். ஏன் இவர்கள் ஆண்களைப் போல் உடை அணிய நினைக்கிறார்கள். தமிழர்களுக்கென்று ஒரு பாரம்பரியம் இருக்கிறது. அதை நமது பெண்கள் காப்பாற்றவில்லையென்றால் வேறு யார் காப்பாற்றுவார்கள். சேலை வியாபாரிகளைப் பார்த்தால் பாவமாகத் தெரியவில்லையா? அவர்கள் எல்லாம் பிழைப்புக்கு வேறு என்னதான் செய்வார்கள். என்னைக் கேட்டால் தாவணி அணிந்து வரும் பெண்ணுக்குத்தான் முதல் மதிப்பெண் கொடுப்பேன். அவளுக்கு இந்த நீலக்கலர் ஜுன்சும், வெள்ளை நிற டி சர்ட்டும் நன்றாகவே இல்லை. அவள் கருப்பு நிற ஜுன்சை பற்றி யோசித்திருக்கலாம்.

ஆனாலும் இந்த சீப் என் காதருகே வந்து காட்டுத் தனமாக கத்தியிருக்க வேண்டாம், வேடிக்கை பார்க்காமல் வேலையை பார் என்று கத்துவதற்கென்றே ஒருவனுக்கு சம்பளம் கொடுத்து வைத்திருக்கிறார்கள் இங்கு, அவன் காதோரமாக வந்து கத்தி கத்தி, எனது ஒரு காதே மந்தமாகிப் போனது. அவனுக்கு எனது இடது காதின் மீது அப்படி என்ன பொறாமையோ?

நேரம் மறக்கச் செய்யும் அனைத்தும் ஒரு வகையில் தியானம் என்று எதிலோ படித்த நியாபகம். என் அலுவலகத்தில் அப்படித்தான் தோன்றுகிறது. காலை வந்தது தான் நியாபகம் இருக்கிறது. அதற்குள்ளாக மதியமாகிவிட்டது. ஆனால், இதனால்தான் என்னால் நம்பமுடியவில்லை, எனது அலுவலகத்தை ஒரு தியான மண்டபத்தோடு ஒப்பிடுவதா? அதற்கு வாய்ப்பே இல்லை. இந்த இடம் நிச்;சயமாக ஒரு தியான மண்டபமாக இல்லாமல் இருப்பதற்கு என்னால் உறுதியான மூன்று உதாரணங்கள் கொடுக்க முடியும். ஒன்று கணேஷ், இரண்டு அந்த மடையன் அந்த சீப், மூன்று அந்த அந்த……. அவள்தான்… தியானம் குறித்து நிறைய முரண்பாடுகள் தோன்றிக் கொண்டிடுதானிருக்கிறது. சிறிது நாள் நிறுத்தி வைக்க வேண்டும் சரியான புரிதலுக்காக.

உணவு இடைவேளை:

இனிப்பை ஈ மொய்ப்பது போல, அவள் அமரும் இடத்தைச் சுற்றி அத்தனை பேரும் அப்பிக் கொண்டு அமர்ந்திருந்தார்கள் என்னைத் தவிர. நான் சற்று தள்ளி அமர்ந்திருந்தேன் சுதந்திரமாக . ஐயோ. நான் ஏன் நிமிர்ந்து பார்த்தேன் என்று எனக்கே தெரியவில்லை. நான் அவ்வாறு செய்யாமல் இருந்திருந்தால் அவள் என்னைக் கடந்து சென்றிருப்பாள். இப்பொழுது பாருங்கள் எனக்கு நேரமே சரியில்லை. ஆனால், இதில் ஒரு குரூரமான சந்தோஷம், அவர்கள் அனைவரின் முகத்திலும் பூசப்பட்ட கரி. என் மனமே நிம்மதியாய் போய் விட்டது போங்கள். ஆனால் மூஞ்சியில் காரியே துப்பினாலும் இந்த கணேஷ் திருந்த மாட்டான். நேராக எழுந்து வந்தான். அவனது அவலமான தயிர் சாதத்தை அவளிடம் கொடுத்து விட்டு, அவளது பிரெட் ஆம்லெட்டை எடுத்து சென்று விட்டான். அவள் தான் கர்ண பரம்பரையாயிற்றே, வாரி வழங்கிவிட்டாள். எனக்கு ஏன் மூச்சு வேகமாக வருகிறது என்று தெரியவி;லை. கோபப்பட்டால் இதயத்திற்கு நல்லதில்லை என 10, 15 முறை எனக்கு நானே சொல்லிக் கொள்ள வேண்டியிருந்தது. பின் அந்த அசிங்கமான செயலை நானும் செய்து விட்டேன்.

‘அபி, எனக்கு தயிர் சாதம்னா ரொம்ப பிடிக்கும். இந்தாங்க என்னோட லெமன் சாதம்”

என்னுடைய இதயவலியை கணேசுக்கு டிரான்ஸ்பர் செய்துவிட்டு, முழுங்கிக் கொண்டிருந்தேன், எனக்கு பிடிக்காத தயிர்சாதத்தை. இந்த பெண்களுக்கு புரிவதேயில்லை, தன்னிடம் மோசமான எண்ணத்துடன் அணுகும் ஆண்களை அவர்கள் அறிந்து கொள்வதேயில்லை. எல்லா ஆண்களிடமும் பத்தாம் பசலித்தனமாக பழகிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை ஒவ்வொரு முறையும் யார் வந்து காப்பாற்றிக் கொண்டிருப்பார்கள். தன்னுடைய அன்பையும், நம்பிக்கையையும் ஜாக்கிரதையாக வைத்துக் கொள்ள வேண்டும் பெண்கள். மேலோட்டமாக யாரிடமும் பழகிவிடக் கூடாது. இதையெல்லாம் அந்த மரமண்டையிடம் நான் எப்படி சொல்வது. அவள் மேல் எனக்கிருக்கும் அக்கரை கூட அவள் மேல் அவளுக்கில்லையே.

கணேஷின் மேல் என் தெறிநிலை அதிகரித்துக் கொண்டேயிருந்தது. எனக்குள்ளிருந்து 2 பேர் கிளம்பிவிட்டார்கள். ஒருவன் வழக்கம் போல் அலுவலக வேலையை பார்த்துக் கொண்டிருந்தான். அது அவ்வளவு முக்கியமில்லை. எனது அலுவலக வேலையெல்லாம் அரைத்தூக்கத்தில் நடந்தேறிவிடும். என்னுள இன்னொருவன் கணேஷை வேவு பார்த்துக் கொண்டிருந்தான். அவனது தெறிநிலைதான் 99 சதவீதம். கணேஷ் அல்லையில் சொறிந்து கொண்டதைக் கூட அவன் கவனிக்கத் தவறவில்லை.

சரியாக 3.05 கடந்து 45 விநாடிகளில் அவன் டெலிபோனை எடுத்து என்ன பேசிக் கொண்டிருந்தான் தெரியுமா?

‘அபி ஈவ்னிங் என் கூட காப்பி சாப்பிட வர்றிங்களா?”

ஐய்ய்ய்ய்யோ…… ஏன் என் கையில் ஒரு பிஸ்டல் இல்லை. பேசாமல் அமெரிக்காவில் பிறந்திருக்கலாம். அங்குதான் கைத்துப்பாக்கிகள் சுலபமாக கிடைக்கும். இவனையெல்லாம் தலையில் சுடக்கூடாது. கணுக்காலில் ஆரம்பித்து கொஞ்சம் கொஞ்சமாக மேலே வர வேண்டும். இவன் அடங்கவே மாட்டானா? என்ன செய்வது. திவிரமாக என் மூளை யோசிக்க ஆரம்பித்தது.

மறுபடியும் என் காதருகே அந்த கொடூரமான குரல். அது என் அன்பான சீப்தான். அவர் மட்டும் இறந்த பின் நரகத்திற்கு வருவாரேயானால். நான் அந்த கடவுளிடம் இதைத்தான் கேட்பேன். அந்த எண்ணெய் சட்டியில் மனிதர்களை போட்டு பொறிக்கும் வேலையை எனக்கு கொடுங்கள், அதோ வரிசையில் என்னுடைய சீப் நிற்கிறார் என்று. எனக்கு உண்மையான சொர்க்கம் அங்குதான் கிடைக்கும். கடவுள் உண்மையில் புத்திசாலியானால் இதை புரிந்து கொள்வார்.

நான் எவ்வளவு முக்கியமான சிந்தனையில் இருக்கிறேன். அவளை எப்படியாவது காப்பாற்றியாக வேண்டுமே. என்ன செய்வது. அலுவலக இடைவேளையில் கொடுக்கப்படும் டீயில், கணேஷின் டீயி;ல் பேதி மாத்திரையை கலந்து விடலாமா? அல்லது அவளது தந்தை மௌண்ட் ரோட்டில் அடிபட்டு கிடக்கிறார் என்று போன் செய்து சொல்லிவிடலாமா? அல்லது வாடகை காரில் அபியை கடத்தி விடலாமா? அய்யோ…….. ஒன்றுமே புரியவில்லையே.

முதலில் மனம் நிதானமடைய வேண்டும். பிறகுதான் நல்ல நல்ல யோசனைகள் எல்லாம் தோன்றும். எவ்வளவு நாள் தியானம் செய்திருக்கிறேன். இந்த நேரம் பார்த்து காலை வாரி விடுகிறதே. படபடப்பு அதிகரித்துக் கொண்டே இருக்கிறதே. அடியே அபி உன்னைச் சொல்லனும்டி, உன் ஆறாவது அறிவை அலுவலகத்தில் உபயோகப்படுத்த மாட்டவே மாட்டாயா? உன்னையெல்லாம் என்ன செய்வது.

அது ஏன் அவசர காலத்தில் கடிகாரம் இவ்வளவு வேகமாக ஓடுகிறது என்று தெரியவில்லை. அதற்குள்ளாக சிப்ட் முடிந்துவிட்டது. வேகமாக ஓடிச்சென்று அபியை பிடித்துக் கொண்டேன்.

‘ஹாய் அபி”

‘ஹாய்”

‘ம்…… அபி (தயங்கியபடி) அபி என்னோட பைக் பிரேக் டவுன் ஆயிடுச்சு, என்ன ட்ராப் பண்ண முடியுமா? பிளீஸ்”

அவள் தான் கர்ண பரம்பரையாயிற்றே வேறு என்ன சொல்லப் போகிறாள்.

‘ஷ்யர், பிளீஸ் கம், ஆனா போறவழில ஒரு காபி சாப்ட்டு போவோம் ஓகே”

போற வழில விஷமே குடிச்சாலும் பரவால்ல அது அந்த கணேஷ் கூட இல்ல என் கூடத்தான் இருக்கணும். அவளது ஸ்கூட்டிபெப்பின் பின்னே நான் உட்கார்ந்த பொழுது கணேஷின் முகம் போன போக்கை பார்க்க வேண்டுமே. அவன் சரியான மடையன். டக்கென் எதுவும் தோன்றவில்லை போல. அவன் கூறுகிறான் அபியிடம், அவன் வண்டியும் பிரேக் டவுனாம். அபி என்ன கூறினாள் தெரியுமா?

‘ஒரு ஆட்டோ புடிச்சு வந்துருங்க கணேஷ்”

ஹைய்யோ இப்பதான் அபி நீ புத்தசாலி, என்று என் மனதிற்குள்ளாக கூறிக் கொண்டேன்.

இன் காபி ஷாப்:

அந்த ஹோட்டல் வாசலில் நின்று கொண்டிருந்த முரட்டு மீசை ஆசாமி தலையை தாழ்த்தி வெல்கம் சொல்லிக் கொண்டிருந்த பொழுது கேப்பில் ஓடிச் சென்று அபிக்கு கதவை திறந்து விட்டேன். ஆளை மயக்கும் அப்படியொரு சிரிப்பை அவள் உதிர்த்தாள். அறையின் இருளான ஒரு இடத்தில் மங்கிய விளக்கொளியில் அவளின் அழகான முகத்திற்கெதிரே நானும், என் (அழகான) முகத்திற்கெதிரே அவளும் உட்கார்ந்தோம். என்னவொரு ரம்மியமான சூழ்நிலை, மேகத்தில் மிதப்பது போலிருந்தது. அவள் ஒரு காபி ஆர்டர் செய்தாள். உங்களுக்கு.. என்று தெற்றுப்பல்தெரிய அழகாகக் கேட்டாள். எனக்கு சில்லுன்னு ஒரு பியர் என்று வாய்வரை வந்துவிட்டது. இது போன்ற சூழ்நிலைகளில் நான் பியர் தான் குடித்திருக்கிறேன். நான் என்ன செய்வது. ஒரு வழியாக சமாளித்து சில்லுன்னு பிட்சா என்று கூறிவிட்டேன். அவள் அழகாக சிரித்தாள்.

‘சில்லுன்னு பிட்சாவா, என்னாச்சு உங்களுக்கு”

இன்னும் என்ன ஆக வேண்டும், உளறலை கட்டுப்படுத்தாவிட்டால் அசிங்கமாய் போய்விடும் என்கிற ஒரே காரணத்தால் அவலட்சணமாக சிரித்து வைத்தேன்.

நிம்மதியாய் உட்கார்ந்து 2 நமிடங்கள் கடக்கவில்லை. வேர்க்க விறுவிறுக்க ஓடி வந்தான் அந்த கணேஷ். அந்த ஏஃசி அறையிலும் அவனுக்கு வேர்த்துக் கொட்டியது. ஆட்டோவில் வந்தானோ ஓடி வந்தானோ? யாருக்குத் தெரியும். கண்கள் இரண்டையும் அகல விரித்தபடி எங்கள் இருவரையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தான். அப்படியே அந்த கண்ணாம்முழி இரண்டையும் தோண்டி எடுத்தால் என்ன? என்று தோன்றியது எனக்கு. அவன் தனக்கு ஒரு காபியை ஆர்டர் செய்து கொண்டான். நான் மட்டும் பேரராக இருந்திருந்தால் அந்த காபியில் சயனைடை கலந்திருப்பேன். வழக்கமாக அவன் காபி குடிக்கும் பொழுது, ஒருவித ஒலி எழுப்புவான். அது குக்கா குடிக்கும் போது ஏற்படும் ஒலியை போன்று இருக்கும். ஆனால் இப்பொழுது, அவன் ஏன் இப்படி நடிக்கிறான். சரியான நாடகக் காரன், ஏதோ பிரிட்டிஷ் பிரபு வம்சத்தைச் சேர்ந்தவன் போல அந்த காபியை மோந்து பார்த்துக் கொண்டிருக்கிறான் 15 நிமிடங்களாக. அவன் அவளை பார்த்துக் கூறுகிறான்.

‘அபி உங்களுக்கு இந்த, ஜுன்ஸ், டி.சர்ட் ரொம்ப நல்லாருக்கு”

அவள் கேட்டாளா? ம், அவன் எல்லை மீறிப் போகிறான். ஸ்டார் ஹோட்டல்களில் கட்டிபுரண்டு சண்டையிட்டு கொண்டால் சட்டப்படி என்ன தண்டனை கிடைக்கும் என்பது மட்டும் தெரிந்தால் வசதியாக இருக்கும். நம்ம ஊர் பெண்களும் தான் இருக்கிறார்களே. ஒரு ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் வந்து, அக்கா நீங்க அழகா இருக்கீங்கன்னு சொன்னா கூட முகம் சிவந்து வெட்கப்படுகிற பெண்களாகத்தானே இருக்கிறார்கள். யார் பாராட்டினால் வெட்கப்படவேண்டும், யார் பாராட்டினால் கோபப்பட வேண்டும் என உட்கார வைத்து டியூசனா எடுக்க முடியும். கடினமான சிந்தனைக்குப் பின் அவன் தலையில் ஒரு இடியை இறக்கலாம் என்கிற முடிவுக்கு வந்தேன்.

‘கணேஷ் நெக்ஸ்ட் வீக் உன் சிஸ்டர். அதாண்டா நம்ம அபிக்கு பர்த்டே. பார்டிக்கு நம்ம ஆபிஸ்ல இருந்து எல்லோரும் வர்றாங்க நீயும் வர்றலடா மச்சான”

அவன் கண்களில் இருந்து தீப்பொறி பறந்தது. என்னை எரித்து விடுவது போல் பார்த்தான். அபி கலகலவென சிரித்தாள். என் மனம் குளிர்ந்து போனது. அபி சிரிப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் ஒரு விஷயம் கூறினாள். அதைக் கேட்டபின் நான் இருந்த இடம் அருகில் உள்ள புகழ்பெற்ற மருத்துவமனை, கணேஷோ அதே மருத்துவமனையில் ஐ.சி.யூ வில் இருந்தான். அப்படி என்ன சொன்னாள் தெரியுமா?

(கன்டினியுட்டி)

அவள் கலகலவென் சிரித்துக் கொண்டே கூறினாள்.

‘அன்னைக்கு என்னோட பர்த்டே மட்டும் அல்ல. என்னோட நிச்சயதார்த்தமும் அன்னைக்குத்தான். மை வுட்பி அமெரிக்காவுல வொர்க் பண்றாரு.”

மயக்கம் தெளிந்தபின் நான் கூறிய வார்த்தைகள்

‘அபி…… நீ உண்மையிலேயே புத்திசாலிதான்……….. இல்லை, இல்லை, நீ மட்டும் தான் உண்மையில் புத்திசாலி………. இல்லை, இல்லை, உன்னை தவிர புத்திசாலி யாருமேயில்லை”

கணேசுக்கு இன்னும் மயக்கம் தெளியவில்லை. அவனைக் கடவுள் காப்பாற்றுவார்.

(நீதி: பொறந்தா அமெரிக்காகாரனா பொறங்கப்பா) 

தொடர்புடைய சிறுகதைகள்
1 தந்தை தனது 5 வயது குழந்தையிடம் 2 கையில் பிராகரஸ் ரிப்போர்ட் 3 பயந்து போன மனநிலையில் குழந்தை கண்ணன் 4 அவன் அமர்ந்த நிலையில் ஏதோ ஒரு இயற்கை காட்சியை படமாக வரைந்து கொண்டிருந்தான். இயற்கை தனது அபரிமிதமான ஆற்றலை வெளிப்படுத்த தேர்ந்தெடுப்பது குழந்தைகளை, ...
மேலும் கதையை படிக்க...
‘டிக்கெட் எடுக்க காசில்லன்னா என்ன மயிருக்கு நீயெல்லாம் பஸ்சுல ஏர்ற, வக்கில்லன்னா நடந்து போக வேண்டியதுதான. நான் போற ரூட்டுலன்னு தேடிப்பிடிச்சு வருவிங்களாடா?. தினசரி உன்ன மாதிரி ஆட்களோட போராடுறதே என்னோட பொழப்பா போச்சு. உன்னையெல்லாம் பாத்தாலே தெரியுது. என்னைக்காவது ஏத்தாம ...
மேலும் கதையை படிக்க...
காற்றை கிழித்துக் கொண்டு தன்னை நோக்கி பறந்து வந்து கொண்டிருந்த அந்த பொருளை பார்க்கும் பொழுது செத்தோம் என்று தான் நினைத்தான் சிவராமன். கிட்டத்தட்ட 2 வருட ப்ராக்டிஸ் என்றாலும் எல்லா முறையும் தப்பித்து விட முடியுமா என்ன? அப்பொருள் அருகே ...
மேலும் கதையை படிக்க...
தலைமுடியில் நரை விழுவது குறித்து சந்தோஷமடையும் மனிதன் இந்த ஊரிலேயே ஒரே ஒருவன் என் நண்பன் முருகன்தான். வெள்ளை நிறத்தில் அப்படியொரு ஈர்ப்பு ஏற்படும் வகையில் அவனை ஏங்க வைத்து விட்டது அவனது தோலின் நிறம். அவன் இருளில் நடந்து வரும் ...
மேலும் கதையை படிக்க...
சத்தம் வராமல் ஓட்டின் மேல் ஏறி நடந்து செல்லும் கலையை அவன் பூனையிடமிருந்துதான் கற்றுக் கொண்டான். ஒவ்வொரு முறையும் பாதம் பதியும் வரை கவனம் வேண்டும். தனது வீட்டில் ஓடுகளை பரப்பி வைத்து அதன் மீது ஏறி நடந்து அவன் பயிற்சி ...
மேலும் கதையை படிக்க...
அநாகரிகமான விவகாரம்
காயடிக்கப்பட்ட கோபங்கள்
மனைவி
கருப்பு வெள்ளை
திரு. திருடர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)