முகநூலும் முத்துலட்சுமியும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: February 24, 2021
பார்வையிட்டோர்: 8,838 
 

அன்று மத்தியானம் பொழுதே போகாது, முகநூலுக்குள் நுழைந்தாள் அமிர்தா.

பழைய கதைதான். தங்களுடைய குடும்பத்தோடு இணைந்த புகைப்படம், உறவினரின் அறுபதாவது அல்லது எண்பதாவது பிறந்தநாளை ஒட்டி நடத்திய விழா.

இதெல்லாம் முன்னேபின்னே பார்த்தறியாத `நண்பர்’களுக்காக.

பிடிக்கிறதோ, இல்லையோ, எல்லாவற்றையும் அவர்களும் பாராட்டிவைப்பார்கள். அப்போதுதானே, நாளைக்கு அவர்கள் எதையாவது வெளியிடும்போது பிறர் புகழ்வார்கள்!

பேசத் தெரிந்தவுடன் பாடும் குழந்தையின் மழலைப் பாட்டைக் கேட்டதும், `இவ்வளவு சிறு வயதிலேயே ஒரேயடியாகக் கொண்டாடினால், உலகமே தனக்காகத்தான் இயங்குகிறது என்பதுபோல் கர்வப்பட்டு, யாரையும் மதிக்காமல் போய்விடாதா!’ என்று யோசனை போயிற்று அமிர்தாவுக்கு.

சலிப்புதான் வந்தது. `இவர்களுக்கெல்லாம் எங்கிருந்து இவ்வளவு நேரம் கிடைக்கிறது?’ என்று, பொறாமையுடன் கலந்த ஆச்சரியம் எழ, கணினியில் தான் பார்த்துக்கொண்டிருந்த வேலைக்குத் திரும்ப ஆயத்தம் செய்தபோதுதான் அந்த கடிதம் கண்ணில் பட்டது.

`ஒரு வேண்டுகோள்,’ என்று ஆரம்பித்திருந்தாள் முத்துலட்சுமி என்று யாரோ ஒருத்தி.

ஏதாவது பண உதவியோ? இந்தக் கஷ்டகாலத்தில்தான் பலருக்கும் வேலை போய்விட்டதே!

சுவாரசியம் எழ, அமிர்தா படித்தாள்.

நூற்றுக்குமேற்பட்டவர்கள், `உங்கள் நண்பராக விரும்புகிறேன்’ என்று எனக்கு எழுதுகிறீர்கள் — அனுதினமும்.

அந்தவார்த்தைக்கு உங்களுக்கு அர்த்தம் தெரியுமா? அழகான வார்த்தையைக் கொச்சைப்படுத்தாதீர்கள்.

அத்துடன் முடித்திருந்தாள்.

அப்படி என்ன நடந்திருக்கும் அந்த – அவள் பெயர் என்ன? –ம்.. முத்துலட்சுமிக்கு?

அவளை நேரில் பார்த்துக் கேட்டால் தனக்கு நல்லதொரு சமாசாரம் கிடைக்குமே என்ற ஆசை எழுந்தது அமிர்தாவுக்கு.

அவளுடைய தொலைபேசி எண் கிடைத்தது. தன் ஃப்ரெண்டா அவள்?

எப்போதோ, `முப்பது வயதுக்கு மேலிருக்காது’ என்று, அவளுடைய புகைப்படத்தைப் பார்த்துவிட்டு, தானும் அவளுடைய நட்பை நாடியிருக்கிறோம்! வேடிக்கைதான்!

முத்துலட்சுமியை அழைத்தாள். பதிலுக்குப் பேசியவள் குரல் கரகரப்பாக இருந்தது.

தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டாள் அமிர்தா.

சிறிது நேரம் பேசிவிட்டு, “இதே ஊரிலதானே இருக்கே? நேரிலேயே வாயேன்!” என்று முத்துலட்சுமி அழைத்தபோது, ஒருமாதிரி இருந்தது அமிர்தாவுக்கு. எவ்வளவு மரியாதைக்குறைவாகப் பேசுகிறாள்!

மரியாதையெல்லாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்க இது சமயமில்லை என்று மறுநாளே அவளைச் சந்திக்கப் போனாள்.

“வாம்மா. அமிர்தாதானே? டி.வியில ஒன்னை நிறையப் பாத்திருக்கேன்,” என்று வரவேற்ற மாதுவுக்குக் குறைந்தபட்சம் எழுபது வயதாவது இருக்கும். கூடவே, “நான்தான் முத்துலட்சுமி,” என்று அறிமுகப்படுத்திக்கொண்டாள்.

அமிர்தா அடைந்த அதிர்ச்சி முகத்தில் தெரிய, முத்துலட்சுமி மாமி சிரித்தாள்.

“நீ என்னை எதிர்பாக்கலே, இல்லே?” என்றவள், “என்ன செய்யறது? பொண்கள் இளவட்டமா இருந்தாத்தானே மத்தவா கண்ணிலே படறது!” என்று தன் பொய்யை ஒத்துக்கொண்டாள்.

“இங்க, வீட்டில, நாங்க ரெண்டே பேர். தினம் வெளியே போக முடியறதா! பொழுது போகணுமே! அதான், ஃபேஸ்புக்கில சேர்ந்தா, நாலு பேரைத் தெரிஞ்சுக்கலாம்னு தோணித்து”. பேசுவதற்கு யாரும் கிடைக்காமல் இருந்தவளுக்கு நேரிலேயே, அதுவும் பிரபலமான ஒரு பெண்ணைப் பார்த்ததும் குஷியாகிவிட்டது. படபடவென்று கொட்டினாள்.

அதற்கு மேலும் தாக்குப்பிடிக்க முடியாது, “அது ஏன் அப்படி எழுதியிருக்கீங்க? யாராச்சும் தொந்தரவு பண்ணினாங்களா?” என்று கேட்டாள் அமிர்தா.

“அதை ஏன் கேக்கறே!” என்று அங்கலாய்த்தாள். “ராத்திரி பத்து மணிக்கு எந்தத் தடியனோ ஃபோன் பண்றான், நீங்க ரொம்ப அழகா இருக்கீங்கன்னு. அவங்கிட்ட சொல்ல முடியுமா, முக அழகைப் பாத்து நட்பு வரதில்லேடான்னு?”

“சரியாச் சொன்னீங்க!” என்று ஊக்கினாள் அமிர்தா.

“எங்காத்துக்காரரோ சந்தேகப் பேர்வழி. `அர்த்த ராத்திரியில எவன்கூடப் பேச்சுன்னு?’ கேட்டா? அதான் ஃபோனை பட்டுனு வெச்சுட்டேன்!” பெரிதாகச் சிரித்தாள்.

“மழை காலத்திலே காளான் மொளைச்சமாதிரி, சில நாளிலேயே நூத்துக்கணக்கில ஃப்ரெண்ட்ஸ். அவா அத்தனை பேருக்கும் காலை வணக்கம், இரவு வணக்கம்னு சொல்லிண்டே இருக்கணும்னா எப்படி? எனக்கு வேற வேலையே கிடையாதா?”

முதியவளைப் பேசவிட்டு, அமிர்தா மௌனமாக இருந்தாள். தான் ஊக்குவிக்காவிட்டாலும் அவள் பேசுவதை நிறுத்தப் போவதில்லை என்று அதற்குள் புரிந்திருந்தாள்.

“ஒரு நாளைக்கு நாப்பது பேருக்குப் பிறந்தநாளாம். நான் HAPPY BIRTHDAY சொல்லி என்ன ஆகப்போறது!”

“நானே பேசிண்டு இருக்கேனே! நீ என்ன விஷயமா என்னைப் பாக்க வந்தியோ!” என்று சற்று நிறுத்தினாள் முத்துலட்சுமி.

“சும்மாத்தான், மாமி!”

காபி குடித்துவிட்டுத்தான் போகவேண்டும் என்ற அன்புக் கட்டளையை மறுக்கத் தோன்றவில்லை அமிர்தாவுக்கு.

சமையலறையில் உரையாடல் தொடர்ந்தது.

“அன்னிக்குப் பாரு, ஒருத்தன் அவனோட போட்டோ அனுப்பியிருந்தான். எப்படிங்கிறே? மேலே சட்டை போடாம, என்னமோ அழகுப்போட்டிக்குப் போஸ் குடுக்கிறமாதிரி. அது அவனோட போட்டோவாகவே இருக்காது. எவனோடதையோ எடுத்து, என்னை இம்ப்ரெஸ் பண்ண அனுப்பியிருக்கான். எதுக்கு? நாளைக்கு, `நீயும் இந்தமாதிரி ஒண்ணு அனுப்பேன்,’னு கேக்கத்தான்!”

தழைந்த மார்பகத்துடன் இருக்கும் இந்த முகநூல் சிநேகிதியைப் பார்த்து அவன் எவ்வளவு அதிர்ச்சி அடைவான்! சிரிக்காமலிருக்கப் பாடுபட்டாள் அமிர்தா.

“இவருக்கு நான் படறபாடு புரியறதா! `ஒனக்கென்ன! புதுசு புதுசா, நிறைய ஃப்ரெண்ட்ஸ்!’ அப்படின்னு என் வயத்தெரிச்சலைக் கொட்டிக்கிறார்”.

அதற்கு மேலும் தாக்குப்பிடிக்க முடியாது, கலகலவென சிரித்தாள் அமிர்தா.

தன் மனதில் இருந்ததையெல்லாம் இன்னொரு ஆத்மாவுடன் பகிர்ந்துகொண்டுவிட்ட நிம்மதியில், மாமியும் சிரித்தாள்.

அடுத்த வாரம், `தெரிந்த முகமாக இருக்கிறதே!’ என்று பார்த்தாள் அமிர்தா.

அதன் கீழ்: முத்துலட்சுமி என்னும் எனது இன்றைய போட்டோ இது. என் வயது எழுபத்தைந்து.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *