Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

மறந்து போச்சு

 

“டேய் பாரதி! நேத்து உனக்கு எவ்வளவு தடவை ஃபோன் பண்ணேன், நீ எடுக்கவே இல்லை. திரும்பவும் நீ எனக்கு கால் பண்ணவும் இல்லை. அடிக்கடி நம்பரை மாத்தினா எப்படிடா உன்னைக் கூப்புடுறது?” புலம்பினான் ஜெகன்.

இதுதான் பாரதியோட பிரச்சனை. தன்னிடம் ஏற்கனவே மொபைல் ஃபோனும் அதில் நல்லா வேலை செய்யும் சிம் கார்டும் இருப்பதையே மறந்து புதிதாக மற்றொரு ஃபோனும் சிம் கார்டும் வாங்குவான். ஏதோ வருடத்திற்கு ஒருமுறை வாங்கினால்கூட பரவாயில்லை, ஆனால் அடிக்கடி வாங்கினால் ….?

அவனைப் பற்றி நீங்கள் இன்னும் நிறைய தெரிந்து கொண்டால்தான் நானும் கதையை மேற்கொண்டு நகர்த்த முடியும்.

பள்ளி, கல்லூரியில் படிக்கும்போது பாரதிக்கு ஞாபக மறதியோ, இல்லை வேறு எந்தப் பிரச்சனையோ இருந்ததில்லை. ஓஹோவென்று படிக்கவில்லை என்றாலும் நல்லாவே படித்தான். குருட்டு மனப்பாடம் செய்யாமல் பாடத்தை நன்றாக ஞாபகம் வைத்து படித்தான். கல்லூரி படித்து முடிக்கும் முன்பே வேலை கிடைத்தது. சாதுவாக வேலைக்குப் போக ஆரம்பித்தான். வார இறுதியில் நண்பர்களுடன் நன்றாக ஊர் சுற்றுவான், அவன் தன்மையாக நல்ல விதமாக பழகியதால் பள்ளியிலிருந்து இப்போது வரைக்கும் நிறையப் பேருக்கு அவனைப் பிடிக்கும், அதனால் அவனுக்கு எப்போதும் நிறைய நண்பர்கள். தப்பு நடக்கும் எல்லா இடத்திலும் இருப்பான், ஆனால் எந்தத் தப்பும் பண்ண மாட்டான்.

ஐந்தாறு வருடங்கள் கடந்தன. நன்றாக வேலை செய்து அலுவலகில் நல்ல பேர் எடுத்தான். அவனுக்கு கல்யாணத்திற்கு பெண் பார்க்க ஆரம்பித்தார்கள். அப்பொழுதுதான் ஒரு நாள் திடீரென அவனுக்கு மொபைல் ஃபோன் பற்றிய விஷயங்கள் மட்டும் கொஞ்சம் கொஞ்சமாக மறக்க ஆரம்பித்தது. எங்கேயாவது ஃபோனை வைத்துவிட்டு தேடுவான். மற்ற விஷயங்கள் எல்லாமே ஞாபகம் இருந்தது, ஆனால் மொபைல் ஃபோன் பற்றிய விஷயங்கள் மட்டும்தான் மறந்தது. இதனால் அவன் மிகவும் பயந்துவிட்டான். உடனே நரம்பியல் மருத்துவரிடம் போனான்.

அவர் அவனை சில பரிசோதனைகள் செய்து பார்த்தார். “பாரதி! கோடிக்கணக்கான ஜனங்கள்ல ஒருத்தருக்குதான் இந்தப் பிரச்சனை வரும். சாதாரணமா சொன்னா ‘செலக்டிவ் அம்னீசியா’ மாதிரி. இது உங்களுக்கு மொபைல் ஃபோன் சம்பந்தமா வந்திருக்கு, அவ்வளவுதான். பயப்படும்படியா ஒண்ணும் இல்லை. ஆனா ரொம்ப கவனமா இருக்கணும். நீங்க எங்கேயும் ஃபோனை வெச்சிடுவீங்க. உங்ககிட்ட ஃபோன் இல்லைன்னு நெனச்சிகிட்டு திரும்பத் திரும்ப ஃபோன் வாங்கிட்டே இருப்பீங்க. உங்க ஃபோன் உங்க கண்ணு முன்னாடியே இருந்தாலும் காணோம்ன்னு தேடுவீங்க. இப்படி விதவிதமான பாதிப்புகள் இருக்கும். நான் கொடுக்கும் மாத்திரைகளை மறக்காம சாப்பிடுங்க, போகப் போக எப்படி முன்னேற்றம் தெரியுதுன்னு பாக்கலாம். ஒரு சந்தோஷமான விஷயம், இந்த மறதி உங்களுக்கு மொபைல் ஃபோன் சம்பந்தமா மட்டும்தான் இருக்கும், மத்தபடி எல்லாம் சாதாரணமாதான் இருக்கும்” என்றார்.

அவர் சொன்ன மாத்திரைகளை ஒழுங்காகச் சாப்பிட்டான். ஞாபக சக்தியை அதிகரிக்கும் மனப் பயிற்சிகளைச் செய்தான் – ஆனால் போன ஜென்மத்து ஞாபகங்கள் திரும்ப ஆரம்பித்ததால் அப்பயிற்சிகளை நிறுத்திவிட்டான். அவனது இந்தப் பிரச்சனையால் அவன் நண்பர்கள்தான் அதிகம் சிரமப்பட்டார்கள். நாளைக்கொருமுறை புதுப் புது சிம் கார்ட் வாங்கிக் கொண்டே போனால் அவர்களால் அவனைத் தொடர்பு கொள்ள முடியவில்லை.

தன்னுடைய இந்தப் பிரச்சனை சரியாகும்வரை கல்யாணம் வேண்டாம் என்று அவனது பெற்றோர்களிடம் சொல்லிவிட்டான்.

சில நண்பர்களிடம் இந்தப் பிரச்சனையைப் பற்றி அவன் பேசும் போது தொலைக்காட்சியில் வேலை செய்யும் ஒருவனுக்கு விஷயம் கசியவே, பாரதி இந்தியப் பத்திரிக்கை உலகில் ஒரே ராத்திரியில் உலகப் புகழ் பெற்றான். ‘நாங்களா? நீங்களா?’ எனும் நிகழ்ச்சியில் அவனுடைய பிரச்சனை பற்றி பெரிய விவாதமே நடந்தது – மொபைல் ஃபோன் இல்லாமல் நம்மால் உயிர் வாழ முடியுமா? முடியாதா? என்று. அது போதாதென்று இணையத்தில் அவனைப் பற்றி மீம்ஸ் போட்டுத் தாக்கி கலாய்த்து விட்டனர்.

அவனது முகநூல், டிவிட்டர், வாட்ஸ்அப் மற்றும் பல இணைய/அலைபேசி செயலிகள்/கணக்குகள் எல்லாமே அவனுடைய மொபைல் ஃபோனுடனும் அவன் எண்ணுடனும் சேர்ந்து இருந்ததால், அவன் அடிக்கடி புதுப் புது கணக்குகள் உருவாக்கிக் கொண்டே போனான். இதில் காமெடி என்னவென்றால், ஒவ்வொரு முறை முகநூலிலோ டிவிட்டரிலோ அவன் பெயரில் புது கணக்கு உருவாக்கும்போதும் ஏற்கனவே அவன் பெயரிலேயே நிறைய கணக்குகள் இருந்ததைப் பார்த்து, அதுவும் எல்லாவற்றிலும் அவன் புகைப்படமும் இருக்கவே, கொந்தளித்தான். தனது புகைப்படத்தைத் திருடி யாரோ போலி கணக்குகள் உருவாக்கியிருப்பதாக நினைத்து, காவல்துறையிடம் புகார் கொடுக்கப் போனான். அவன் நண்பர்கள் விஷயம் தெரிந்து அவனைத் தடுத்து நிறுத்தினார்கள். அதைச் சொல்லியே அவனை மரண ஓட்டு ஓட்டுவார்கள் – “இவனே நிறைய கணக்குகள் உருவாக்குவானாம், இவனே இவனோட புகைப்படங்கள் எல்லாம் போடுவானாம், அப்புறம் இவனே காவல்துறையிடம் போய் புகார் பண்ணுவானாம். ஏண்டா! காவல்துறைய என்ன அகா துகான்னு நினைச்சியா?”. பாரதியும் சிரித்துக்கொண்டே அவர்கள் ஓட்டுவதை கேட்டுக் கொள்வான்.

அவ்வப்போது டாக்டரைச் சந்தித்துக் கொண்டே இருந்தான். அவரும் அவனை ‘நன்றாக வைத்து செய்தார்’. சாதாரண வியாதி இருந்தாலே நிறைய பரிசோதனைகள் எடுக்க வைத்து சொத்தை அழிய வைப்பார்கள். இவனுக்கு வந்திருப்பது ‘ஸ்பெஷல் சாதா’ ஆயிற்றே? புதிது புதிதாக பரிசோதனைகள் எடுக்க வைத்தார். மாற்றி மாற்றி வேறு வேறு மாத்திரை, மருந்துகள் எடுத்துக் கொள்ளச் சொன்னார். அவனும் அவர் மீது எந்த சந்தேகமும் இல்லாமல் அவர் சொன்னவைகள் அனைத்துமே செய்தான்.

மொபைல் ஃபோன் நிறுவனங்கள் எல்லாம் போட்டி போட்டுக் கொண்டு அவனிடம் ஒப்பந்தம் போட்டுக் கொள்ள துடித்தார்கள். பின்னே சும்மாவா? பெரிய வியாபாரம் ஆகுமே அவனால். சிம் கார்ட் விற்கும் நிறுவனங்கள் எல்லோரும் போட்டி போட்டுக் கொண்டார்கள். அவனும் சாமர்த்தியமாக ஒவ்வொரு நிறுவனத்துடனும் ஒவ்வொரு மாதம் என்று ஒப்பந்தம் போட்டுக் கொண்டான். அந்த ஒப்பந்தத்திற்காக அவர்கள் கொடுத்த காசை வைத்தே மொபைல் ஃபோனும்/சிம் கார்டும் வாங்கினான்.

ஆறு மாதங்கள் கழிந்தன. கொஞ்சமே கொஞ்சம் முன்னேற்றம் இருந்தது. முன்பெல்லாம் தினந்தினம் புதுப்புது ஃபோன்கள் வாங்கிக் கொண்டு இருந்தான். இப்போது அது இரண்டு நாட்களுக்கு ஒரு முறை என்று குறைந்தது. எல்லா மொபைல் ஃபோன் நிறுவன ஆட்களும் டாக்டரிடம் சென்று சண்டை போட்டார்கள், ‘எதுக்கு அவன் பிரச்சனையைத் தீர்க்கறீங்க? அதனால எங்க வியாபாரம் பாதிக்குது’ என்று, டாக்டர் எல்லோரையும் திட்டி அனுப்பி விட்டார்.

முகநூல், டிவிட்டர், வாட்ஸ்அப் மற்றும் பிற இணைய/அலைபேசி செயலிகளின் நிர்வாகிகள் பாரதியை சந்தித்து “உங்களுக்காகவே எங்கள் செயலியில் ஒரு புது விருப்பத் தேர்வைக் கொடுக்கிறோம். நீங்கள் எந்த மொபைல் ஃபோன், சிம் கார்ட் வாங்கினாலும், அதில் உங்களது கைரேகையைப் பதித்தாலே போதும் (ஃபிங்கர் சென்சார்), உங்களுடைய பழைய கணக்குகளே இந்தப் புது எண்ணிலும் உபயோகிக்கலாம். புதிதாக கணக்கு எதுவும் உருவாக்க வேண்டாம்” என்று சொல்லவே, அவனுக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது.

அவனது நண்பர்கள் எல்லோரும் சேர்ந்து, அவனுக்கு ஒரு பையனை உதவியாளனாக ஏற்பாடு செய்தார்கள். அந்தப் பையனுக்கு ஒரே வேலைதான், பாரதியின் மொபைல் ஃபோனை அவனுக்குத் தேவைப்படும்போது எல்லாம் தேடிக் கொடுக்க வேண்டும். அதனால் அவன் புதிதாக ஃபோன் வாங்காமல் தடுக்கலாமே?

இவ்வளவு செய்ததற்குப் பிறகு பாரதியின் மாத மொபைல் ஃபோன் செலவு கணிசமாகக் குறைந்தது.

மொபைல் ஃபோன் தவிர வேறு பிரச்சனை எதுவும் இல்லாததால் பாரதிக்கு ஆறுதலாக இருந்தது. ஆனால் எப்பொழுதும் ஒரு பையன் தன் கூடவே இருப்பது அவனுக்கு அசௌகரியமாக இருந்தது, சுதந்திரமாக இருக்கவே அவனுக்கு எப்போதும் பிடிக்கும். பல்லைக் கடித்துக் கொண்டு பொறுத்தான்.

டாக்டரைப் பற்றி குறை எதுவும் சொல்லக் கூடாது, உண்மையாக அல்லும் பகலும் பரிசோதனை செய்து கொண்டே இருந்தார், அவனது பிரச்சனையைப் போக்க. ஒரு நாள் புது விதமாக ஒரு மருந்து கண்டுபிடித்தார். உடனே அவனைக் கூப்பிட்டு, அந்த மருந்தை தினமும் இருவேளை சாப்பிட்டு வரச் சொன்னார்.

அந்த உதவியாளன் விஜி ஒரு நல்ல காரியம் செய்தான். அதுவரை பாரதி வாங்கி வைத்திருந்த மொபைல் ஃபோன்களை எல்லாம் அவனது வரவேற்பறை அலமாரியில் ஒழுங்காக அடுக்கி வைத்தான். பழைய சிம் கார்ட் எல்லாவற்றின் மீதமுள்ள அழைப்பு நேரத்தை பாரதியை உபயோகிக்க வைத்து, அவற்றையெல்லாம் ஒழித்துக் கட்டினான். இதைப் பார்த்த பாரதி, தன் பிரச்சனை சரியானாலும் விஜியைத் தன்னுடனே வைத்துக் கொள்ள முடிவு செய்தான்.

டாக்டர் கடைசியாகக் கொடுத்த புது மருந்து நன்றாகவே வேலை செய்தது. கிட்டத்தட்ட அவனது பிரச்சனை முழுதாக குணமானது. பாரதி கடைசியாக புது மொபைல் ஃபோன் வாங்கியது இரண்டு மாதங்களுக்கு முன்பு. ரொம்ப சந்தோஷப்பட்டான், டாக்டருக்கு மனப்பூர்வமாக நன்றி சொன்னான். மொபைல் ஃபோன் நிறுவனங்கள் அவனது ஒப்பந்தத்தை ரத்து செய்து வேறு அப்பாவியைத் தேட ஆரம்பித்தார்கள். அவனது நண்பர்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டார்கள். பத்திரிக்கைகளுக்கு வேற செய்தி கிடைத்து அங்கே போய்விட்டார்கள்.

பாரதியின் பெற்றோர் முழுமூச்சாக பெண் தேடி, ஒரு பெண்ணை முடிவு செய்தார்கள். அவள் பேர் ஜானகி. பாரதிக்கும் அந்தப் பெண்ணை ரொம்பப் பிடித்தது. கல்யாணம் முடிவாயிற்று.

இன்னும் மூன்று வாரத்தில் கல்யாணம். சில தடவைதான் பாரதியும் ஜானகியும் சந்தித்தார்கள். அதற்குள்ளேயே ஜானகிக்கு பாரதியை ரொம்பப் பிடித்துப் போனது. அவன் என்ன சொன்னாலும் கண்ணை மூடிக்கொண்டு கேட்க ஆரம்பித்தாள். அவன் நண்பர்களுக்கு ஆச்சர்யமாகவும் சந்தோஷமாகவும் இருந்தது. எப்படியோ அவன் நல்லவிதமாக வாழ்க்கையில் நிலைகொண்டானே என்று குதூகலமானார்கள்.

கல்யாணம் நல்லபடியாக நடந்தது. சில மாதங்களில் அகில இந்திய அளவில் ‘சிறந்த தம்பதி யார்?’ என்று ஒரு போட்டி நடந்தது. நீங்கள் நம்பினாலும் நம்பவில்லை என்றாலும் நடந்தது இதுதான் – பாரதி/ஜானகிதான் இந்தியாவிலேயே மிகச்சிறந்த தம்பதி என்று தேர்வானார்கள். அடுத்த வாரம் அமெரிக்கா போகிறார்கள், உலக அளவில் நல்ல தம்பதி யார் என்று நடக்கும் போட்டியில் (இந்தியா சார்பாக) கலந்து கொள்ள.

ஒரு முக்கியமான விஷயத்தைச் சொல்லவேண்டும். மொபைல் ஃபோன் சம்பந்தமான பிரச்சனை தீர்ந்ததும், அவனுக்கு வேறொரு புதிய பிரச்சனை வந்தது. முன்பு புதிது புதிதாக மொபைல் ஃபோன் வாங்கிக் கொண்டிருந்தவன், இப்போது புதிது புதிதாக ஆடைகளை வாங்கத் தொடங்கியிருந்தான். நிச்சயதார்த்தம் ஆன பிறகு, ஜானகிக்கும் சேர்த்து வாங்க ஆரம்பித்தான். அவர்கள் ஏன் ஆதர்ஷ தம்பதி ஆனார்கள் என்று இப்போது புரிந்திருக்குமே? ரெண்டு நாளைக்கு ஒரு தடவை புதுப்புது ஆடைகளை வாங்கிக் கொடுக்கற புருஷனை எந்தப் பெண்டாட்டிக்குதான் ஸார் பிடிக்காது? 

தொடர்புடைய சிறுகதைகள்
"ஸார்! வெய்ட் குறைக்கணும், என்ன பண்ணலாம்?" சரவணன் வழக்கமாக யாரைப் பார்த்தாலும் கேட்பது இதுதான். அவன் அப்படி ஒன்றும் குண்டு இல்லை, வெறும் நூறு கிலோ தான். அவன் உயரத்துக்கு, வயதுக்கு சரியான எடை என்றால், அறுபது கிலோ தான் இருக்கணும். சின்ன வயசுல அவன் ...
மேலும் கதையை படிக்க...
"ஹாய்டா! உன்னைப் பார்த்தே ரொம்ப நாள் ஆச்சு. நல்லா இருக்கியா?" "ஹாய்டி! உன்னைப் பார்க்காமல் சூப்பரா இருக்கேன், நீ எப்படி இருக்கே?" ஏதோ பலநாள் கழித்து சந்திக்கும் நண்பன்/நண்பியின் ஜாலியான உரையாடல் இது என்று நினைத்தீர்களா? அதுதான் இல்லை. ஒரே வீட்டில் இருக்கும் கணவன், ...
மேலும் கதையை படிக்க...
"நான் எந்த கார் வாங்கணும்னு முடிவு பண்ணிட்டேன்" - வீட்டில் எல்லோரிடமும் அறிவித்தேன். "அப்பாடா. கடைசியா முடிவு பண்ணீங்களா? இனிமே சோதனை ஓட்டம் போகலாம்னு படுத்தமாட்டீங்களே?" தர்மபத்தினி லாவண்யா. "வாழ்த்துக்கள் சுந்தர்! எவ்ளோ காசு ஆகும்டா?" அப்பா கிருஷ்ணன். "கண்ணு! உனக்கு திருப்தியா இருக்கா? எல்லாரும் ...
மேலும் கதையை படிக்க...
மாதவன் ஸாரைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? எங்கள் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கிறார். ரொம்ப சுவாரஸியமான ஆள். நிறைய அறிவு. நல்லா பழகுவார். ரொம்ப பேசுவார். பிறருக்கு உதவிகள் செய்ய தயங்கமாட்டார். சாயந்திரம் ஆனால் போதும், எங்கள் குடியிருப்பில் உள்ள சிறு பூங்காவின் இருக்கையில் ...
மேலும் கதையை படிக்க...
1 <<காதல் என்பது தன்னுயிரை வாடகைக்கு அமர்த்துவது, இன்னோர் உடலில்>> "ப்ப்ப்ப்பா. என்னமா எழுதறாரு!! அவரோட கவிதைகள் படிக்கும்போது எனக்கு ஒரு காதலி இல்லையேன்னு ஏக்கமா இருக்குடி" "நீ வேற, அவரு கவிதைகள விட கதைகள் இன்னும் சூப்பர் தெரியுமா? நீ கவிதய விட்டு வெளிய ...
மேலும் கதையை படிக்க...
நாற்பது கிலோ குறைக்கணும் ஸார்!!
சேர்ந்தும் சேராமலும்
கார் வாங்கப் போறேன்
எங்க காலத்துல…
நிஜமான கற்பனைக் காதல்

மறந்து போச்சு மீது 2 கருத்துக்கள்

  1. தருண் says:

    அருமையான கோர்வை, எளிமையான வாக்கியம், ஆழமான கருத்து. நன்றி.

    • சத்யஸ்ரீ says:

      பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி நண்பரே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)