Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/content/42/10186442/html/index.php:2) in /home/content/42/10186442/html/wp-content/themes/Clipso/functions.php on line 189
Sirukathaigal - Sirukathai - Short Stories in Tamil

மன்மதனுக்கு அம்னீஷியா!

 

மன்மதன் அவன் உடலைக் குத்தகைக்கு எடுத்திருந்தான். கல்யாணம் கட்டி ஆறேழு வருடங்கள் கழிந்து விட்ட இந்த வயதிலும் அவன் மட்டும் ஜெமினி கணேசனைப் போல [கமலைப்போல/சூர்யாவைப்போல என உங்கள் வயதுக் கேற்ப உவமையை மாற்றிக் கொள்ளுங்கள்] கன்னியரைக் கவர்ந்திழுக்கும் வசீகரத்துடன் இன்னும் இளமையாகவே இருக்கிறான்.

அவன் மனைவியோ காற்றடித்த பலூன் போல தொக்கையாக, கண்ணராவி யாக மாறிவிட்டாள். அவனுக்குச் சலிப்புத் தட்டிவிட்டது. திரும்பத் திரும்பப் பார்க்கிற ஒரே முகங்கள், தெருக்கள், மனைவி, பிள்ளைகள் . சுற்றிச் சுற்றி ஒரே வட்டத்தில் ஓடிக் கொண்டிருக்கும் வாழ்க்கை. ஏதாவது மாற்றம் தேவை. உள்ளூரில் உழாத மாடு தான் அவன்.ஆனாலும் வெளி நாடு போய் என்றாலும் வெட்டிப் பிளக்கப் போகிறேன் என்ற வாய்ச் சவடாலுடன் கொழும்புக்கு வந்து சேர்ந்து விட்டான்.

இந்தியாவைக் கண்டு பிடிக்கப் புறப்பட்ட கொலம்பஸைப் போலக் கொழும்பு நகர வீதிகளின் நெரிசலுக்குள்ளே தடுமாறி, மலங்க மலங்க விழித்துக் கொண்டு நின்றவனின் வழியில் வழுக்கி வந்த அவளின் கார், அவனை மட்டுமல்லாது அவன் வாழ்க்கையையும் புரட்டிப் போட்டு விட்டது.

ஆஸ்பத்திரிக் கட்டிலில் அனாதரவாகப் படுத்திருந்த அவன் கண் விழித்துப் பார்த்தான். சொர்க்கம் பக்கத்தில் உரையாடிக் கொண்டு நின்றது – ஒரு டாக்டருடன் . அந்த அழகுக் குவியலை தன் கண்களால் அவன் அள்ளிப் பருகிக் கொண்டிருக்கும் இந்த Gap பில் அவளைக் கொஞ்சம் வர்ணித்து விடலாம். [ஆனால் எதை வெட்டலாம் என்று கத்தரிக் கோலைத் தீட்டி வைத்துக் கொண்டு 'இருக்கிற[ம்]‘ சஞ்சிகைக் கொம்பனிக்கு ‘வாசி’யாகப் போய் விடும் என்ற காரணத்தால் நாமே சென்சார் பண்ணி வர்ணிப்பை விட்டுவிடுவோம்]

ஆனாலும் இந்த இடத்திலாவது அந்தக் காதல் மன்னனுக்கும் அந்தக் காதலிக்கும் ஏதாவது பெயர் வைத்துத் தொலைத்தால்தான் சரி. வசதி கருதி அவனுக்கு ஜெமினி என்றே வைத்து விடுவோம். அவளுக்கு சரோஜாதேவி, தேவிகா, ராஜஸ்ரீ, பத்மினி, வைஜயந்திமாலா வகையறாக்களின் ஏதாவ தொன்றைச் சீட்டுக்கு குலுக்கி எடுத்ததில் தேறியவர் வைஜயந்திமாலா தான். அந்த ‘ஓஹோ எந்தன் பேபி’ யைக் கற்பனை செய்து கொண்டால் வர்ணிக்கிற ‘பஞ்சி’ இல்லை!

வைஜயந்திமாலா நல்ல வேளையாக டாக்டருடன் தமிழில்தான் கதைத்துக் கொண்டிருந்தாள். எங்கள் காதல் மன்னனுக்குச் சுட்டுக் போட்டாலும் (யாரை?) ஆங்கிலம் வராது. சிங்களமோ சொல்லத் தேவையில்லை – சிதம்பர சக்கரம்.

”24 மணி நேரத்துக்குப் பிறகுதான் சொல்லலாம்”

”சிலநேரம் நினைவு திரும்பாமலும் போகலாம்”

”அம்னீஷியாவா?”

சில வார்த்தைகளும் சொற்களும் ஒன்று பாதியாகக் காதில் வந்து விழுந்தன.

‘அம்னீஷியா!’ எத்தனை படங்களில் பார்த்திருக்கிறான். எத்தனை கதைகளில் வாசித்திருக்கிறான். எதிர்பாராத திருப்பம். ஆகா! என்ன ஒரு வாய்ப்பு! அந்தக் கணமே அவன் தீர்மானித்து விட்டான். தான் செல்ல வேண்டிய பாதை எதுவென்று. அந்த அழகு ரதத்தைச் சொந்தமாக்கி அவளுடன் ஆனந்த ஊர் வலம் வரும் காட்சி அவன் மனக்கண்ணில் விரிந்தது.

ஆமாம். நீங்கள் நினைப்பது போல மாலா பணக்கார வீட்டுப் பெண்தான். அவள் ஓட்டி வந்த காரில் தான் இந்த ஜெமினி அடிபட்டு இப்போ ஹாஸ் பிட்டலில் கிடக்கிறான் என்பதையும் நீங்கள் ஊகித்திருப்பீர்கள். நீங்களும் எத்தனை தமிழ்ப் படங்கள் பார்த்திருப்பீர்கள். உங்கள் கற்பனை மட்டும் என்ன சாமான்யமானதா?]

எனக்கு என்ன நடந்திச்சு? நான் எங்கே இருக்கேன்? நான் யாரு? என் பேர் என்ன ? ஐயோ! எனக்கு எல்லாமே மறந்திடுச்சே” – யாழ்ப்பாணத் தமிழைத் தவிர்த்து மாலா பேசிய தமிழிலேயே புகுந்து விளையாடினான் ஜெமினி. அவன் கல்லூரி மேடையில் பெற்ற ‘மிமிக்ரி’ அனுபவம் அவனுக்குக் கை கொடுத்தது Sorry வாய் கொடுத்தது.

அவனே எழுதி அவனே நடித்த நாடகத்தில் அவன் எதிர்பார்த்தது போலவே அந்தத் திருப்பமும் ஏற்பட்டது. மாலாவின் அனுதாபம் காலப் போக்கில் காதலாகக் கசிந்து, கனிந்து மாலாவும் அவளது தந்தையின் திரண்ட சொத்தும் [மொத்தமாக எவ்வளவு என்று இன்னும் சரியாகக் கணக்குப் பார்க்கப் படவில்லையாம்.] அவனுக்குச் சொந்தமாகப் போகின்றன. இனிப் பாலைக் குடித்துப் பழத்தை முழுங்க வேண்டியதுதான் பாக்கி.

ராஜபக்ஷவின் புண்ணியத்தில் நல்ல வேளையாக [?] த் திறந்திருந்த A-9 பாதை மீண்டும் மூடப்பட்டுவிட்டது. அவனது வேடம் இப்போதைக்குக் கலையப் போவதில்லை. வாழ்க ராஜபக்க்ஷ! அங்கு யாழ்ப்பாணத்தில் வழி மேல் விழி வைத்துக் காத்திருக்கும் அவன் மனைவி சாவித்திரி [பெயர் சரிதானே?] எந்த எமனிடம் போய் ஜெமினியை மீட்க மனுக் கொடுப்பது என்று தெரியாது முழிசிக் கொண்டிருக்கும் சங்கதி ஜெமினிக்கோ இந்தக் கதைக்கோ தேவையில்லாதது.

மண நாளும் குறித்து, மண்டபமும் ஒழுங்கு பண்ணி, அழைப்பிதழும் அடித் துக் கொடுத்து, கோட் சூட்டும் ஆர்டர் பண்ணித் தைப்பித்து எல்லாம் ‘ரெடி’. நாளை விடிந்தால் அவன் புது மாப்பிளை. அலுமாரியின் உள்ளிருந்து கண் சிமிட்டும் வெளி நாட்டு ‘விஸ்கி’யில் ஒரு ‘பெக்’ [வெறும் 30 ml தாங்க] அடித்து விட்டுக் குதியாட்டம் போடத் துடிக்கும் மனக் குரங்கைக் கஷ்டப் பட்டு அடக்கிவிட்டுக் காத்திருக்கிறான் ஜெமினி.

Facial செய்கிறேன் பேர்வழி என்று ‘பியூட்டிப் பார்லர்’க்குக் காரை எடுத்துக் கொண்டு போன மாலாவைத்தான் இன்னும் காணோம்.’டிக் டிக் டிக்’ கடிகார முள்ளைப் போல அவன் நெஞ்சமும் துடிக்க ஆரம்பித்து விட்டது. ‘கிர்ரீங்…’ டெலிபோன் அலறியது. ஓடிச் சென்று அதை எடுத்துக் காதில் ஒற்றிக் கொண்ட மாலாவின் தந்தை கலவரமானார். அடுத்த அரை மணி நேரத்தில் உறவினர் படை ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டது. அதே ஆஸ்பத்திரி; அதே கட்டில். என்ன ஒரு ஒற்றுமை! நல்ல வேளையாக மாலாவுக்கு அடி யொன்றும் பலமாகப் படவில்லை. ஆனாலும் மலங்க மலங்க விழித்துக் கொண்டிருந்த மாலாவின் இயல்பில் ஏதோ ஒன்று ;மிஸ்ஸிங்’ !

‘மாலா’ என்று உரிமையுடன் அவள் கையைப் பற்றப் போனான் ஜெமினி. அவன் சற்றும் எதிர்பாராத மாதிரி அவனுடைய கையை உதறித் தள்ளிய மாலா மிரட்சியுடன் கேட்ட ஒரே கேள்வி….

யார் நீங்கள்?!

- ‘இருக்கிறம்’- 15.05.2010இல் பிரசுரமானது 

தொடர்புடைய சிறுகதைகள்
நானும் ஒரு டிவி நடிகனாகத் தலை காட்டின 'சோகக் ' கதைய உங்களிட்ட சொல்லித்தான் ஆகவேணும். அதைத் தெரிஞ்சு கொள்ளட்டால் உங்களுக்கு ஒண்டும் ஆகப் போறேல்லை. ஆனால் அதைச் சொல்லாட்டில் எனக்குத் தான் தலை வெடிச்சுப் போயிரும். கொழும்பு வாழ் தமிழ் மக்களுக்கு, ...
மேலும் கதையை படிக்க...
ஹலோ...! உங்களைத் தாங்க.. உங்க கிட்ட நான் ஒரு ரகசியத்தை சொல்லப் போறேன்...உங்ககிட்ட மட்டும்தான்...ஆனா நான் சொல்றதக் கேக்க முன்னாடி உங்களைக் கொஞ்சம் தைரியப் படுத்திக்குங்க ..நீங்க ஒரு ‘ஹாட்' வீக்கான ஆளா இருந்து அப்புறம் நான் சொல்றதக் கேட்டு அதிர்ச்சியில ...
மேலும் கதையை படிக்க...
பாதர் பீட்டர் திடுக்கிட்டு விழித்தெழும்பினார்.மிக அருகில் எங்கோ கேட்ட துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்களால் அவர் தூக்கம் கலைந்திருந்தது. மறுநாள் பிரசாங்கத்துக்கான உரையை ஆயத்தப் படுத்தி விட்டு அவர் படுக்கைக்குச் சென்று அதிக நேரமாகி இருக்காது. ரோச் லைட்டை அடித்து நேரத்தைப் பார்த்தார். ...
மேலும் கதையை படிக்க...
குறள்: 'இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயஞ் செய்து விடல்' பாலாவைச் சிலவேளை உங்களுக்குத் தெரிந்திருக்கலாம் 70-80களில் இலங்கை வானொலியைக் கேட்பவராக நீங்கள் இருந்திருந் தால் பாலாவின் குரலையாவது நீங்கள் கட்டாயம் கேட்டிருப்பீர்கள். தொலைக் காட்சிகள் பரவலாக புழக்கத்துக்கு வருவதற்கு முன்னால், இலங்கை வானொலியும் ...
மேலும் கதையை படிக்க...
மான்குட்டி போல் அவள் துள்ளித்துள்ளி ஓடி வந்து கொண்டி ருந்தாள். அவளுக்கு ஆகக் கூடினால் ஆறு வயதுதான் இருக்கும். அவள் பின்னால் அவளை எட்டிப் பிடிப்பது போல, ஆனால் அவளின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாததால் சற்றுப் பின் தங்கியவனாக, அவளை ...
மேலும் கதையை படிக்க...
நான் TV நடிகனான கதை
ஒரு கொலைகாரனின் வாக்குமூலம்
இடறல்
தண்டனை
மனிதனைத் தேடி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)