மட்டைப்பந்து போர்

 

ரஜினி, கமல், விஜயகாந்த், விஜய் மற்றும் அஜித் எல்லோரும் உடன்பிறந்தவர்கள். சின்ன வயதிலிருந்தே ரொம்ப ஒட்டுதல். ரஜினிக்கு மட்டைப்பந்து விளையாட்டு ரொம்பவும் பிடிக்கும், ஆனால் அவர் தில்லுமுல்லு ஏதும் பண்ணாமல் நேர்மையாக விளையாடக்கூடியவர். கமல் ஒரு சகலகலா வல்லவர். பந்து போடுவது, மட்டையால் அடிப்பது, எதிரணியினர் அதிக ஓட்டங்கள் எடுக்காமல் தடுப்பது என ஆயகலைகளிலும் வல்லவர். இவரை எல்லாருக்கும் பிடிக்கும். விஜயகாந்த்தும் நன்றாகத்தான் விளையாடுவார், ஆனால் முன்கோபம் அதிகம். அடிக்கடி வாய்த்துடுக்காகப் பேசி எதிரணியை வம்புக்கு இழுத்து கைகலப்பில் ஈடுபட்டு நடுவரால் வெளியேற்றப்படுவார். பெரியண்ணன்கள் இருப்பதால் விஜய், அஜீத் இருவரும் அடக்கி வாசிப்பார்கள், இருவருமே மிக நல்ல விளையாட்டு வீரர்கள். இவர்கள் எல்லோரும் கோவை அணியில் விளையாடுபவர்கள். இவர்கள் அணியின் பயிற்சியாளர் சிவாஜி. ரொம்பவும் நிதானமாகவும் அதே சமயம் தந்திரமாகவும் விளையாட இவர்களுக்கு சொல்லிக்கொடுப்பார். அவருக்கு இவர்கள் ஐவரையும் மிகவும் பிடிக்கும். அதிலும் கமல் என்றால் தனிப்பிரியம். எப்போதும் சிவாஜியும், கமலும் மைதானத்திலேயே இருப்பார்கள். சிவாஜி சொல்லிக்கொடுப்பதுபோல கமல் நன்றாகப் பயிற்சி எடுத்த வண்ணம் இருப்பார். இவர்கள் அணி சென்ற இடமெல்லா வென்று தமிழ்நாட்டிலேயே புகழ்பெற்று விளங்கியது.

எல்லோருக்கும் பிடித்த ரஜினி அணியினரைப் பிடிக்காத ஒரே அணி திருச்சி அணிதான், ரகுவரன்தான் அதன் தலைவர். நாசர், ஆனந்தராஜ், பிரகாஷ்ராஜ், பசுபதி என்று அவரது பல தம்பிகள் அணியில் உண்டு. அதன் பயிற்சியாளர் நம்பியார். அவர் நாணயம் சுண்டுவதில் சூரர், எப்போதும் பூவோ தலையோ அவர் சொல்படியே விழும். தில்லுமுல்லு செய்வதில் தீரர், பந்தை லேசாக உரித்து சுற்றுப்பந்து சுழற்றுவது, ஆட்ட முடிவை மாற்ற முன்கூட்டியே எதிரணி வீரர்களை காசால் வளைப்பது, இப்படி பல. அந்த சூட்சுமங்கள் அனைத்தையும் ரகுவரனுக்குக் கற்றுக்கொடுத்தார். ஆனந்தராஜ் அண்ணனின் பரம விசுவாசி, அண்ணன் சொல்வதைவிட அதிகமாகவே செய்வார். ரகுவரன், அவரை, ஓவரின் ஒரே ஒரு பந்தை மட்டும் தந்திரமாக அகலப்பந்தாக போட்டு மட்டையைப் பிடித்திருக்கும் எதிரணி வீரரை ஏமாற்றச் சொன்னால், ஓவரின் எல்லாப் பந்துகளையுமே அவ்வாறு போடும் அளவுக்கு மகா புத்திசாலி.

ஒருமுறை ரஜினியின் கோவை அணி செங்கல்பட்டு அணியுடன் மோதும்போது, ஆணானப்பட்ட ஆல் ரவுண்டர் கமலையே முதல் பந்தில் மண்ணைக் கவ்வ வைத்த செங்கல்பட்டு அணியின் புதுவரவு விக்ரமை ரகுவரனுக்குப் பிடித்துப்போனதில் ஆச்சர்யம் இல்லை. விக்ரமைப்பற்றி ரகுவரன் விசாரித்ததில், கமல் அளவுக்கு எல்லாத் தகுதிகளும் இருந்தும் சரியான வாய்ப்பு இல்லாமல் தவிப்பதை உணர்ந்தார். அன்றே செங்கல்பட்டு அணித்தலைவருடன் பேசி விக்ரமைத் தன்னுடனே அழைத்துவந்து திருச்சி அணியின் முக்கிய இடத்தில் அமர்த்தினார். ரகுவரன் நம்பியாரிடம் போய், கோவை அணியுடன் இனிவரும் ஆட்டங்களில் கமலை வீழ்த்த விக்ரமுக்கு கொம்பு சீவி பயிற்சிகொடுக்கச் சொன்னார்.

ஒரு நாள் நம்பியார் ரஜினியை பந்தய ஆட்டத்துக்குக் கூப்பிட்டார். ரஜினிக்குதான் மட்டைப்பந்து விளையாட்டு என்றாலே ரொம்பப் பிடிக்குமே? சிவாஜியிடம்கூட தகவல் சொல்லாமல் தன் அணியைக் கூட்டிக்கொண்டு கிளம்பினார். ரகுவரன் நாணயம் சுண்டுவதில் வென்று, மட்டையை விளாச ஆரம்பித்தது திருச்சி அணி. இருபது ஓவர்களில் நூற்றைம்பது ஓட்டங்கள் எடுத்தனர். அடுத்து கோவை அணி ஓட்டங்கள் எடுக்க ஆரம்பித்தது. அவர்கள் பத்தே ஓவர்களில் நூறு ஓட்டங்கள் எடுக்கவே, ரகுவரன் நம்பியாரைத் திட்ட ஆரம்பித்தார். ஏதாவது செய்து ரஜினி அணியை தோற்கடிக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். வழக்கம்போல் தில்லுமுல்லு செய்து நடுவர்களை லஞ்சம் கொடுத்து கைக்குள் போட்டுக்கொண்டு கடைசியில் வென்றுவிட்டார்கள் திருச்சி அணியினர். ரஜினி அணியினரின் ராசியான மட்டைகள், பந்துகள் மற்றும் பல பொருட்களைக் கவர்ந்தனர். ரஜினிக்கு மேலும் மேலும் ஆசை காட்டி, அடுத்தடுத்த நாட்களில் மீண்டும் மீண்டும் பந்தயம் கட்டி, தில்லுமுல்லு செய்தே வென்று, அவர்கள் அனைவரின் மொத்தப் பொருட்களையும் கவர்ந்துகொண்டனர். கடைசியாக ஒரே ஒருமுறை ஆட அழைத்தனர். இதில் ரஜினி அணி வென்றால், இதுவரை இழந்த அனைத்தையும் திரும்பப்பெறலாம். தோற்றால் அவர்கள் இனி இரண்டு வருடங்களுக்கு மட்டைப்பந்து ஆட்டமே ஆடக்கூடாது என்பதுதான் நிபந்தனை. யார் சொல்வதையும் கேட்காமல் ரஜினி ஆட முடிவெடுத்து, தோற்றார்கள். ரகுவரன், விக்ரம், நம்பியார், நாசர், ஆனந்தராஜ் என எதிரணியில் அனைவரும் ஆட்டம் போட்டனர். ரகுவரன் ரஜினியிடம் “உன் மனைவி ஷ்ரேயாவை எங்கள் அணிக்கு பந்து பொறுக்கும் வேலைக்கு அனுப்பி வை” எனச் சூளுரைத்தார். ஆனந்தராஜோ அண்ணனை குஷிப்படுத்த ஷ்ரேயாவை அப்போதே கூட்டிவரப் புறப்பட்டார். எஸ்.வி.ரங்காராவ், பி.எஸ்.வீரப்பா, தியாகராஜ பாகவதர் போன்ற முன்னாள் வீரர்கள் தடுத்தனர்.

சிவாஜிக்கு இந்த விஷயங்கள் தாமதமாகத்தான் தெரியவந்தது. ரஜினி அணியினர் சிறு வயதிலிருந்தே மட்டைப்பந்து மட்டுமே விளையாடியதால் வேறு என்ன வேலை செய்து பிழைப்பது என வருந்தினார் ரஜினி. அதுவும் தமிழ்நாட்டில் புகழ்பெற்ற அணியின் வீரர்கள் ஆயிற்றே? எப்படி மறைமுகமாக வாழ்வது? எனப் பலவாறாக எண்ணி துக்கப்பட்டார். தம்பிகள் அனைவரும், ஷ்ரேயாவும், சிவாஜியும் ஆறுதல் சொன்னார்கள். அனைவரும் காரைக்குடியில் ஒரு தெருக்கூத்து நாடக நிறுவனத்தில் வேலைக்குச் செல்வதென முடிவெடுத்தனர், அதன் நிறுவனர் ரஜினி மீதும் அவரது அணியினர் அனைவர்மீதும் மிகுந்த மரியாதை வைத்திருப்பவர். ஆனால் யாருக்கும் அவர்களது உண்மை அடையாளம் தெரியக்கூடாது என்பதே நிபந்தனை. கமல் சொன்னார் “நான் நாடகங்களில் மாறு வேடம் பூண்டு வாழ்வேன்”. விஜயகாந்த் “என்னால் அகோரப்பசி பொறுக்க முடியாததால், நாடக ஊழியர்களுக்கு சமையல் செய்து பசியாறிக்கொண்டு மறைமுகமாக இருப்பேன்” என்றார். விஜய்யும் அஜீத்தும் மாறுவேடத்தில் முறையே நடன ஆசிரியராகவும், உடற்பயிற்சி ஆசிரியராகவும் இருப்பதாகச் சொன்னார்கள். ரஜினி நாடக நடிகர், நடிகைகளின் உடை/நடை/பாணி இவற்றை வடிவமைக்கும் பணியில் ஈடுபடப்போவதாகச் சொல்ல, ஷ்ரேயா அவருக்கு உதவியாளராக இருப்பதாகச் சொன்னார்.

கமலுக்கு நடிப்பும் நன்றாக வரும் என்பதால், நாடகத்தில் நல்ல வித்தியாசமான வேடங்களை ஏற்று நடித்து மக்களின் அபிமானத்தைப் பெற்றார். விஜயகாந்தின் சமையல் அனைவருக்கும் பிடித்தாலும், அவரது முன்கோபமும் பலமும் பயமூட்டியது. மற்றவர்களும் அவரவர் வேலையில் நற்பெயர் எடுத்தனர்.

ஒரு வருடம் ஓடியது. திருச்சி அணியில் எல்லோரும் பல திசைகளில் இவர்களைத் தேடிக்கொண்டிருந்தனர். ஆனால் வித்தியாசமாக வேடம் பூண்டு சிறு நகரத்தில், நிறுவனத்தில் ரஜினி அணியினர் இருந்ததால் ரகுவரன் ஆட்களால் அவர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

சில மாதங்களில் ஒரு சம்பவம் நடந்தது. அந்த நாடக நிறுவன முதலாளியின் மைத்துனனுக்கு ஷ்ரேயாமீது ஒரு கண், அவளை அடிக்கடி அவனது இச்சைக்கிணங்க தொல்லைப்படுத்தவே, அவள் விஜயகாந்த்திடம் சொன்னாள். அவர்கள் திட்டப்படி அந்தக் காமுகனை நள்ளிரவில் நாடகக் கொட்டடைக்கு வரவைத்து விஜயகாந்த் அவனை சுவற்றில் எகிறி எகிறி அடித்தே கொன்றார். இந்த விஷயம் தீயாய்ப் பரவ, ரகுவரனுக்கும் விக்ரமுக்கும் நம்பியாருக்கும் சந்தேகம் முளைத்தது, இவ்வாறு சுவற்றில் எகிறி அடிக்கும் பழக்கம் கொண்ட ஒரே மனிதர் உலகிலேயே விஜயகாந்த் மட்டும்தான், எனவே கோவை அணியினர் அந்த நாடகக்குழுவில்தான் மாறுவேடத்தில் பதுங்கி இருக்கவேண்டும் என்று சுலபமாகக் கணித்தனர். அவர்களை வெளியில் கொண்டுவந்து நிபந்தனையில் தோற்கடிக்க ஒரு யோசனை செய்தனர்.

காரைக்குடி அணியினருடன் மட்டைப்பந்து போட்டி விளையாட அழைத்தார் நம்பியார். பெரிய அணியினர், அதுவும் மகா கோபக்காரரான நம்பியாரின் அழைப்பை மறுத்து அவரது பகையைத் தேடிக்கொள்ள விருப்பம் இல்லாததால், காரைக்குடி அணியின் உரிமையாளரான நாடக நிறுவன முதலாளி விளையாட ஒப்புதல் சொன்னார். பிரச்சனை என்னவெனில், விஜயகாந்த் கொன்ற இவரின் மைத்துனர்தான் காரைக்குடி அணியின் தலைவன், மகா திறமைசாலி. முதலாளியின் மகனோ சிறியவன், திருச்சி அணியை எதிர்க்கும் அனுபவம் இல்லாதவன். அவரிடம் தனது தம்பிகளின் ஆட்டத் திறமையைப் பற்றிச் சொன்னார் ரஜினி, தாங்கள் யாரென்ற உண்மையைச் சொல்லாமல். முதலாளியின் மகன் விஜய் சேதுபதிக்கு தைரியம் சொல்லி கமலும் மற்றவர்களும் விளையாட ஆரம்பித்தனர். முதலில் களம் இறங்கிய விஜய் சேதுபதி ஐந்து ஓவர்கள்வரை நன்கு விளையாடியும், பிறகு பயந்துபோய் ஆட்டமிழந்தார். பின் கமல் களமிறங்கி விளாசித்தள்ள வெறும் பன்னிரண்டு ஓவர்களிலேயே காரைக்குடி அணி வென்றது.

இப்போது அனைவருக்கும் கோவை அணியினரின் உண்மை அடையாளம் தெரிந்தது, நாடகக் குழுவின் முதலாளிக்கு ஒரு பக்கம் துக்கமாக இருந்தது, பெரும் புகழ்பெற்ற ரஜினி அணியினரை தனது வேலையாட்களாக வைத்திருந்தோமே என. ஆனால் இவர்கள் மறைந்து வாழ தன்னால் உதவ முடிந்ததே என மகிழ்ச்சியடைந்தார்.

ரகுவரனும், நம்பியாரும், விக்ரமும் ரஜினி அணியினர்மீது பழிசுமத்தினர் – இரு வருட நிபந்தனை முடியும் முன்னரே அவர்கள் விளையாடியது விதிமீறல் என. ஆனால், சிவாஜியும், பிதாமகர் எஸ்.வி.ரங்காராவும், பெரியண்ணன் நாகையாவும், பி.எஸ்.வீரப்பாவும், இப்படி அணியின் முன்னாள் வீரர்கள் பலரும் ரஜினி அணிக்குச் சாதகமாகப் பேசினார்கள் – சரியாக நிபந்தனை முடிந்த மறுநாள்தான் கமல் விளையாட்டு மைதானத்தில் இறங்கினார் என. ரஜினி அணியினர் மீண்டும் மட்டைப்பந்து போட்டியில் கலந்துகொள்ள ரகுவரன் அணியினர் முட்டுக்கட்டை போட்டனர்.

எவ்வளவு சமாதானம் பேசியும் பயனில்லை. கடைசியில் மறுபடியும் இரு அணிகளுக்கும் போட்டி ஆட்டம் முடிவானது. சிவாஜி எந்த அணியுடன் இருக்கவேண்டும் என முடிவுசெய்ய கமலும் ரகுவரனும் அவர் இல்லத்துக்குச் சென்றார்கள். அவர் தூங்கி எழும்போது தன் காலருகில் பவ்யமாக உட்கார்ந்திருந்த கமலை முதலில் பார்த்ததால் அவர்தான் முதலில் கேட்கவேண்டும் என்றார். “கமல்! நன்றாகக் கேட்டுக்கொள். ஒரு புறம் நான் மட்டும் இருப்பேன், களம் இறங்காமல் வெறும் பயிற்சி மட்டும் கொடுப்பேன். மறுபுறம் பிரபு, ராம்குமார், விக்ரம் பிரபு போன்ற என் பரம்பரையே களத்தில் இறங்கி ஆடும்” என்று அவர் சொல்லி முடிப்பதற்குள் கமல் அவர்தான் தன் பக்கம் வேண்டும் என்றார்.

இதற்கிடையில், ரஜினியின் தாயார் ஸ்ரீவித்யா ரகசியமாக விக்ரமைச் சந்தித்து, அவரது பிறப்பு ரகசியத்தைச் சொன்னார். குழந்தையில்லா ஒரு தம்பதி வருந்தி கேட்டுக்கொண்டதால் விக்ரமை அவர்களுக்கு தாரை வார்த்துக்கொடுத்ததாக. விக்ரமோ தன்னை மதித்து அணியில் முக்கிய இடம் கொடுத்த ரகுவரனைவிட்டு வரமுடியாது என்றார். ஆனால் தன்னால் கமல் தவிர மற்ற நால்வரில் எவரும் ஆட்டமிழக்கமாட்டார்கள் என்று வாக்கு கொடுத்தார். அது போதும் என ஸ்ரீவித்யா திரும்பிவிட்டார்.

போட்டி ஆரம்பித்தது. எப்போதுமே யாருமே பார்த்திராத தில்லுமுல்லுகளும் ஏய்த்தல்களும் அரங்கேறின. இருபதைத் தாண்டியும் பல ஓவர்கள் ஆட்டம் நிற்காமல் நடந்தது. ஒவ்வொரு ஓவரிலும் ஆட்ட முடிவு மாறிக்கொண்டே இருந்தது. ரஜினியின் நேர்மை காற்றில் பறந்தது, அதனால் அதுவரை பூமியிலிருந்து சில அங்குலங்கள் மேலேயே நடக்கும் அவர் கால்கள் பூமியைத் தொட்டன. சிவாஜியின் ஆட்ட தந்திரங்கள் கமலை ஆட்டமிழக்காமல் வைத்திருந்தன. விஜயகாந்த் மைதானத்தில் சிம்ம சொப்பனமாக விளங்கினார், சுவர் இல்லாமல் எகிறி அடிக்க சிரமப்பட்டாலும் பாய்ந்து வந்த பந்துகளை விளாசித் தள்ளினார். திருச்சி அணியின் மூத்த தலைவர் எஸ்.வி.ரங்காராவ் அடிபட்டு வெளியேறியதும் விக்ரம் அணித்தலைவரானார். அவர் கமலை வீழ்த்தும் முயற்சிகள் அனைத்தும் சிவாஜியின் தந்திரங்களால் வீணானது. இறுதியில் விக்ரம், ரகுவரன், நாசர், ஆனந்தராஜ் என எல்லோரும் ரஜினி அணியினரால் வீழ்த்தப்பட்டு கோவை அணி வென்றது. திருச்சி அணியில் அனைவரும் மரண அடி வாங்கி இனி எப்போதும் மட்டைப்பந்து ஆட்டம் விளையாட முடியாத அளவுக்கு அவர்களின் நிலை மோசம் ஆனது.

அதன் பிறகு பல ஆண்டுகள் வெவ்வேறு ஆட்டங்களில் பங்குபெற்று கோவை அணி வென்றுகொண்டே இருந்தது.

ஹூம்…மகாபாரதக் கதை மாதிரியே இருக்குதுன்னுதானே யோசிக்கறீங்க? என்னங்க பண்றது? டி20 கிரிக்கெட் காலத்துல இப்படி மாத்தி யோசிச்சு கதை சொன்னாதான் மகாபாரதத்தையே இந்தக்காலப் பிள்ளைங்க காதுகொடுத்து கேக்கறாங்க… 

தொடர்புடைய சிறுகதைகள்
"இதனால் மேல்கலிங்கத்து சோழிங்க மக்களுக்குத் தெரிவிப்பது என்னவென்றால், நமது மாமன்னர், பாரெல்லாம் பெருவெற்றி கண்ட பேரரசர், உலகை உலுக்கிய உத்தமர், மக்கள் போற்றும் மகேசன், எதிரிகள் அஞ்சும் எழுபத்து நான்காம் எழுட்சிமான் எலிமாறன் அவர்களுக்கு நாள்பட தொல்லை கொடுத்துக் கொண்டிருக்கும் தீராத ...
மேலும் கதையை படிக்க...
"என்ன அருண்! இன்னைக்கு யாரைப் பார்த்து கதை சொல்லப் போற?" "தயாரிப்பாளர் ஏ. கே. தெரியுமா?" "தெரியுமா-வா? அவரைத் தெரியாம தமிழ்நாட்ல யாராவது இருப்பாங்களா? விஜய்காந்த் பாணியில புள்ளி விவரம் சொல்றேன், சரியான்னு சொல்லு. 125 படங்கள் தயாரிச்சிருக்கார், அதுல 50 படங்கள் 200 ...
மேலும் கதையை படிக்க...
ஷாலினி ஒரு இருட்டறையில் நாற்காலியில் உட்கார்ந்திருந்தாள், சரியாகச் சொன்னால் உட்கார்த்தி வைக்கப்பட்டிருந்தாள். அவளது உடை கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது. ஏதோ திரைச்சீலையை உடலில் சுற்றி வைத்ததுபோல. அது போதாதென அறை முழுக்க வெவ்வேறு இடங்களிலிருந்து திரைச்சீலை துணித் துண்டுகள் போன்றவைகள் அவள் ...
மேலும் கதையை படிக்க...
"நான் எந்த கார் வாங்கணும்னு முடிவு பண்ணிட்டேன்" - வீட்டில் எல்லோரிடமும் அறிவித்தேன். "அப்பாடா. கடைசியா முடிவு பண்ணீங்களா? இனிமே சோதனை ஓட்டம் போகலாம்னு படுத்தமாட்டீங்களே?" தர்மபத்தினி லாவண்யா. "வாழ்த்துக்கள் சுந்தர்! எவ்ளோ காசு ஆகும்டா?" அப்பா கிருஷ்ணன். "கண்ணு! உனக்கு திருப்தியா இருக்கா? எல்லாரும் ...
மேலும் கதையை படிக்க...
"ஸார்! வெய்ட் குறைக்கணும், என்ன பண்ணலாம்?" சரவணன் வழக்கமாக யாரைப் பார்த்தாலும் கேட்பது இதுதான். அவன் அப்படி ஒன்றும் குண்டு இல்லை, வெறும் நூறு கிலோ தான். அவன் உயரத்துக்கு, வயதுக்கு சரியான எடை என்றால், அறுபது கிலோ தான் இருக்கணும். சின்ன வயசுல அவன் ...
மேலும் கதையை படிக்க...
எழுபத்து நான்காம் எழுட்சிமான் எலிமாறன்
எண்ணம்போல் படம்
கனவில்லை, நிஜம்!
கார் வாங்கப் போறேன்
நாற்பது கிலோ குறைக்கணும் ஸார்!!

மட்டைப்பந்து போர் மீது 2 கருத்துக்கள்

  1. Kavya says:

    ஹாஹா… இப்படி ஒரு பரிணாமத்தில் மாகாபாரதத்தை எதிர்பாக்கவில்லை… தங்களது படைப்புகளை புத்தக வடிவில் படிக்க ஆவலாக உள்ளது… வாழ்த்துக்கள்… விரைவில் எதிர்பார்கிறோம்.. எழுதுவதை எக்காரணம் கொண்டும் நிறுத்த வேண்டாம்… நன்றி….

    • சத்யஸ்ரீ says:

      பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)