பெயர் போன எழுத்தாளர்

 

எழுத்தாளர் கார்மேக வண்ணன் எழுத்தாளர் ஆனதற்கு முக்கிய காரணம் அவரது பெற்றோர்கள்.

‘கருப்பண்ணசாமி’ என்று அவர்கள் வைத்த பெயரால் சிறுவயதில் நண்பர்கள் செய்த கேலியும், அதனால் தான் அடைந்த துயரும் பொறுக்காதுதானே அவர் வாழ்வில் உயர்ந்தார்?

இப்படியெல்லாம் சொன்னால் உங்களுக்குப் புரியாது. முப்பத்தைந்து ஆண்டுகள் பின்னோக்கிப் போவோம், வாருங்கள்.

அப்போது வெறும் கருப்பண்ணசாமியாக இருந்த நம் கதாநாயகனுக்கு ஆறு வயது. தன்னை ஒத்த நண்பர்கள், ஆறுமுகத்தை ‘ஆறு’ என்றும், ஏழுமலையை ‘ஏழு’ என்றும் அழைக்கும்போது, தன்னைக் ‘கருப்பு’ என்று விளித்ததை வித்தியாசமாக நினைக்கத் தோன்றாத பருவம்.

அவன் பள்ளியில் சேர்ந்த சில வருடங்களுக்குப்பின், இலக்கணப் பாடத்தை நடத்திய ஆசிரியர் ‘காரணப் பெயர்’, ‘இடுகுறிப் பெயர்’ என்ற பதங்களை விளக்க முயன்றபோதுதான் வினை பிறந்தது.

“ஊறும் காய் என்பது ஊறுகாய் ஆயிற்று,” என்று புத்தகத்திலிருந்த உதாரணத்தை விளக்கியதோடு நில்லாமல், தன் சொந்தக் கற்பனையையும் சிறிது கலந்துகொண்டார் அவர். “இதோ நம்ப கருப்பண்ணசாமியை எடுத்துக் கொண்டால், பிறந்தபோது இவன் கருப்பாக இருந்ததால், இந்தப் பெயரை இவனுக்குச் சூட்டி இருக்கிறார்கள். ஆக, இதுவும் ஒரு காரணப் பெயர்தான்!”

என்னமோ தானே நேரில் வந்து, அவனுடைய பெயர்சூட்டு விழாவை நடத்தி வைத்திருந்ததுபோல் அளந்தார் வாத்தியார். தனக்கே தெரியாமல் தன்னுள் இவ்வளவு நகைச்சுவை உணர்வு இருந்திருக்கிறதே என்ற பூரிப்பில் அவர் தொந்தி குலுங்கச் சிரித்தார்.

அவருடைய அடிவயிற்றை இறுக்கியிருந்த பெல்ட் எந்த வினாடியும் அறுந்து, நடக்கக்கூடாதது நடந்துவிடும் என்று பயந்தபடி இருந்த மாணவர்கள், அக்கற்பனையிலும், வாத்தியாரே சிரிக்கும்போது நாமும் சிரிக்காவிட்டால் மரியாதை இல்லை என்ற உசிதத்தாலும் பலக்கச் சிரித்துவைத்தார்கள்.

அவர்களில் பலரும் கறுப்புத்தான் என்பதால், ‘நல்லவேளை! நம்ப வீட்டில நமக்கு இப்படி ஒரு பேரை வெக்காம போனாங்களே!’ என்ற நிம்மதி அச்சிரிப்புடன் வெளிப்பட்டது.

கருப்பண்ணசாமிக்குள் வைராக்கியம் பிறந்தது அன்றுதான்.

‘நான் தோத்துட்டா, என் பேரை மாத்தி வெச்சுக்கறேண்டா!’ என்று எந்த ஒரு சிறு பந்தயமாக இருந்தாலும் நண்பர்கள் ஒருவருக்கொருவர் எப்போதும் சவால் விடுவதை உண்மை ஆக்கிவிட்டால் என்ன?

ஆனாலும், பணங்காசு செலவழித்து, உற்றார், உறவினர் முன்னிலையில் பெற்றோர் வைத்த பெயரை மாற்ற எண்ணுவதே அவர்களுக்குத் துரோகம் இழைப்பதைப்போல் பட்டது.

உடன்படித்தவர்கள் ‘டேய் கருப்பு!’ என்று விளித்தபோது, முன்போல் யதார்த்தமாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. உலகமெல்லாம் கூடி தன்னை மட்டம் தட்டுவதுபோல் இருந்தது.

பிறருடன் பேசிப் பழகினால், அவர்கள் தன்னை அந்த பாழாய்ப்போன பெயரால் கூப்பிட்டு விடுவார்களே என்று பயந்தவனாகத் தனிமையில் இருக்கத் தலைப்பட்டான்.

எதுவும் செய்யாமல் இருந்ததில் விசனம் அதிகமாகவே, அந்நேரங்களில் எல்லாம் கதைப் புத்தகங்கள் படிக்க ஆரம்பித்தான்.

அதிகம் படித்திராத அம்மா, “கண்ட புஸ்தகங்ககளைப் படிச்சுக் கெட்டுப் போகாதேடா!” என்று ஓயாது கண்டித்ததில், அவன் வயதுக்கு மீறிய புத்தகங்களைப் படிக்கும் ஆர்வம் வந்தது.

புத்தகத்தைக் கையில் எடுத்தாலே தூக்கம் வந்துவிடும், அல்லது கவனம் திசைமாறிவிடும் என்ற பொது நிலை அவன்வரை பொய்த்துப்போய், யாருமே எதிர்பாராதபடி, வகுப்பில் முதல் மாணவனாக வர ஆரம்பித்தான்.

சகமாணவர்கள் பொறாமை தாங்காது, “காரணப் பெயருன்னா என்னடா?” என்று அவன் காதுபட கேட்டபோதுதான் அவனுக்கு அந்த யோசனை உதித்தது.

தான் ஒரு எழுத்தாளனாகிவிட வேண்டும்!

அப்பா, அம்மா வைத்த பெயரை மாற்றி வைத்துக்கொள்ள இதைவிட வேறு சிறந்த வழி கிடையாது. யாரும், எந்தக் கேள்வியும் கேட்க மாட்டார்கள். தனக்கும் குற்ற உணர்வு தோன்றாது.

இந்த எண்ணம் எழுந்தவுடனேயே ஏதோ பெரிய பாவத்தைத் தொலைத்துவிட்டமாதிரி ஒரு நிம்மதி பிறந்தது அவனுக்குள்.

‘எதை எழுதுவது?’ என்று யோசித்து, ஒன்றும் பிடிபடாமல், அதைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம், இப்போதைக்கு முக்கியமான விஷயம் புனைப்பெயர்தான் என்று தீர்மானித்தான். புனைப்பெயரில் இன்னொரு சௌகரியம். எழுதுவது சற்று முன்னே பின்னே இருந்தாலும், தான்தான் அது என்று பிறருக்குத் தெரியாமல் போய்விடும்.

அடுத்த சில மாதங்களை வாசகசாலையில் கழித்தான் கருப்பண்ணசாமி. கேட்டவர்களிடம், ‘ஆராய்ச்சி,’ என்றான்.

எல்லாம் புனைப்பெயர் ஆராய்ச்சிதான். அந்தத் தேடுதலில் சில உண்மைகளைக் கண்டுபிடித்தான்.

சில எழுத்தாளர்கள் தம் மனைவியின் பெயரில் ஒளிந்திருந்தார்கள். ‘பாவம், பெண்!’ என்று பத்திரிகை ஆசிரியர்கள் சற்றே மட்டமான படைப்பையும் வெளியிட்டு விடுவார்கள் என்ற நம்பிக்கையோ, என்னவோ!

ஒருவேளை, மனைவியின் விருப்பு வெறுப்பில் அவ்வளவு தூரம் ஒன்றிப்போய், தாம் வேறு, அவள் வேறு என்ற வித்தியாசம் எல்லாம் இல்லை என்பதை உலகிற்கு உணர்த்தவோ என்னவோ என்றுகூட அவன் நினைத்தான்.

தன்னால் அப்படிச் செய்ய முடியாது, தனக்கு ஒரு மனைவி வருவதற்குப் பல வருடங்கள் இருக்கின்றன என்பதோடு, ‘மிஸஸ். கருப்பண்ணசாமி’ என்பதாகத் தன் பெயரை மாற்றிக்கொள்ள எவளும் வலிய வரமாட்டாள் என்று தோன்றியது. அப்படி வருபவள் அவனுக்கு வேண்டவும் வேண்டாம். சுயகௌரவம் உள்ளவளாக இருக்கவேண்டும் அவனுக்கு வாய்ப்பவள்.

இன்னும் சிலர், ‘நான் ஆண்மை பொருந்தியவன், என் மனைவியை நேசிப்பவன்’ என்று தங்கள் புனைப்பெயரால் விளம்பரப்படுத்திக் கொண்டார்கள். அதாவது, கொண்டவள் ஜானகியாக இருந்தால், இவன் ‘ஜானகிமணாளன்’ அல்லது ‘ஜானகிப்ரியா’ என்று மாறினான்.

இலக்கியத் துறையில் புகழ் வாய்ந்தவர்கள் மறைந்தபிறகு, பூவுடன் சேர்ந்த நாரும் மணம் பெறலாமே என்ற நப்பாசையுடன் தத்தம் பெயருடன் ‘தாசன்’ என்று இணைத்து, அந்த இரவல் சுகத்தில் புகழ் தேடியவர்கள் கண்ணில் பட்டார்கள். இப்படியாகத்தானே கருப்பண்ணசாமியின் ஆராய்ச்சி தொடர்ந்தது.

‘அது ஏன் ஒளவையாருடன் எந்தப் பெண் எழுத்தாளரும் ஒட்டிக்கொள்ளவில்லை?’ என்ற் சிலகாலம் யோசித்ததில், ‘தாசன்’ என்ற வார்த்தைக்குப் பெண்பால் ‘தாசி’. அது அவ்வளவு மரியாதைப்பட்டதாக இருக்காது என்பது புரிந்தது.

இந்த ரீதியில் எழுத்தாளர்களுடைய பெயர் வண்ணங்களை ஆராய்ச்சி செய்துவந்ததிலும், ஓயாது படித்ததிலும் கருப்பண்ணசாமியின் வயதும், அறிவும் கூடின. ஆனால், தன் பெயரைப்பற்றிய ஏக்கம் என்னவோ சற்றும் குறையவில்லை.

இயற்பெயர் பிடிக்காது போனாலும், கன்னத்தில் இருந்த மச்சத்தைப்போல் அதுவும் அவனுடைய ஒரு அங்கமாகிவிட்டது. ‘விரைவில் அதை இழக்கப் போகிறோம்’ என்ற நினைவு எழும்போது சற்று வருத்தம்கூட வந்தது.

பெயருக்குச் சம்பந்தம் இல்லாத இன்னெரு பெயரை எங்கேயாவது போய்த் தேடுவானேன் என்ற ஞானோதயம் அப்போதுதான் உதித்தது.

இந்தமாதிரி வேண்டாத ஆராய்ச்சியும், யோசனையும் செய்துகொண்டே இருந்தால், தன் பெயருக்கு ஒரு விமோசனமே கிட்டாது என்று ஒரு நாள் உறைக்க, அண்மையில் இறந்துவிட்ட அவனது அப்பாவின் ஆத்மா சாந்தியடைய, ‘கருப்பு’ என்ற பொருளில் ஏதாவது புனைப்பெயர் வைத்துக் கொள்வதுதான் நியாயம் என்று தோன்றிப் போயிற்று.

ஒரு விடுமுறை நாளன்று பகலில் அயர்ந்த தூக்கத்தில் இருந்தவன் திடுக்கிட்டு விழித்துக் கொண்டான்.

‘படபட’வென்று நிறையபேர் கைதட்ட, “நம்ப கார்மேகவண்ணன் இன்னும் அனேக எழுத்துப் படிவங்களைப் படைத்து நம்மை நீண்ட காலம் மகிழ்விக்க வேண்டும்!” என்று யாரோ ஒருவர் சொல்லி, பொன்னாடை போர்த்துகிறார். இன்னொருவர் முன்னால் வந்து, “நமது கார்மேகவண்ணனின் புகழில் பாதி அவருடைய மனைவிக்குச் சேரவேண்டும். இரவும், பகலுமாக அவர் இலக்கியச் சேவையில் ஈடுபட்டிருப்பது மனைவியின் புரிந்துணர்வால்தான்!” என்று மெச்சுகிறார்.

இம்மாதிரி பல பாராட்டு விழாக்களில் தான் பேசி இருப்பது நினைவுக்கு வந்தது. தன்னைப் போலவே, விழா நாயகன் தலைமறைந்ததும், ‘இவனெல்லாம் பெரிய எழுத்தாளனாம்! இவனுக்கு ஒரு விழா எடுக்கறாங்களாம், வேலையத்தவங்க!’ என்று அனேகமாகச் சொல்லக்கூடும் என்பதும் அவனுக்குத் தெரிந்துதான் இருந்தது.

பொன்னாடைமேல் ஒரு மலர்மாலை விழுகிறது. அதன் கனமானது எழுதி, எழுதி வலிகண்டிருக்கும் அவனுடைய கழுத்தை மேலும் அழுத்த, அந்தப் நோவைப் பெரிதாக மதிக்காது, ஒரு பெரிய எழுத்தாளனுக்கே உரிய அடக்கத்துடனும், கம்பீரத்துடனும், “உங்களைமாதிரி தரமான வாசகர்கள் அமையாவிட்டால் நான் ஏது!” என்று பற்கள் (அவை வெகு வெண்மை) தெரியப் புன்னகைத்து…

இந்த இடத்தில் கருப்பண்ணசாமி விழித்துக்கொண்டான். சற்றும் எதிர்பாராவிதமாக புனைப்பெயர் அமைந்ததில் அவனுக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை.

கார்மேகம். அதாவது கரிய மேகம். அந்த மேகத்தின் வண்ணத்தைக் கொண்டவன் கண்ணன்.

நினைவுதெரிந்த நாளாகத் தன்னை அவமானப்படுத்திவந்த பெயரை மாற்றினாற்போலவும் ஆயிற்று, கடவுள் பெயரை அடிக்கடி எழுதினால் புண்ணியத்திற்குப் புண்ணியமும் ஆயிற்று.

நிம்மதி பிறந்தவுடனேயே மறைந்தும் போயிற்று. புனைப்பெயரெல்லாம் சரிதான், அதை வைத்துக்கொண்டு ஏதாவது எழுதித் தொலைக்க வேண்டுமே!

தன் பெயர் மாற்றத்துக்காக செய்த ஆராய்ச்சிகள், கழித்த ஆண்டுகளையெல்லாம் நினைவில் கொண்டுவர முயற்சித்தான். நாற்பது, ஐம்பது கதைகளைப் படித்து, அதன்பின் அதில் கொஞ்சம், இதில் கொஞ்சம் என்று நிரவினால், ஒன்றாவது தேறாது!

இந்தக் கற்பனை அளித்த உற்சாகத்தில், ‘கருப்பண்ணசாமி’ விரைவில் மறைந்து, அந்த இடத்தை ‘கார்மேகவண்ணன்’ பிடித்துக் கொள்வதை மானசீகமாகக் கண்டு மகிழ்ந்தான் அவன்.

பி.கு: இக்கதையால் எவரையும் நோகடிக்க எண்ணமில்லை. நகைச்சுவைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து எழுதப்பட்டிருக்கிறது.

(தமிழ் நேசன், 1992, வலைத்தமிழ்.காம்)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)