பூமராங்

 

நடராஜன் என்றாலே அந்த வட்டாரத்தில எல்லாருக்கும் தெரியும். வயது என்னவோ நாற்பந்தைந்து தான் ஆகிறது ஆனாலும் சிறந்த பக்திமான் , பொது சேவை செய்வவர் என்று பெயரெடுத்து விட்டான். அந்த வார்டில் என்ன பிரச்சனை வந்தாலும் இவன் தான் முதல் ஆளாய் கவுன்சிலருக்கோ இல்லை சம்பந்தப் பட்ட அதிகாரிகளுக்கோ மனு எழுதுவான். எழுதுவதோடு நின்று விடாமல் கையெழுத்து வேட்டை நடத்தி , இன்னும் சிலரைச் சேர்த்துக் கொண்டு அந்தக் காரியம் முடியும் வரை சளைக்காமல் பாடு படுவான். அதனால் அவனுக்கு மிகவும் நல்ல பெயர்.

அவன் மனைவி சொர்ணா கூட அவ்வப்போது செல்லமாய்ச் சலித்துக் கொள்வது உண்டு. “எங்க வீட்டுக்கு ஏதாவது சாமான் வாங்கணும்னாக் கூட வெளி மனுசங்க வந்து சொன்னாதான் அவரு கேப்பாரு” என்று சொல்லுமளவு மக்களுக்காக உழைப்பவன். அதற்காக அவன் அரசியல் கட்சித் தொண்டன் என்றெல்லாம் நினைத்து விடாதீர்கள். சாதாரண ஒரு தனியார் க்லம்பெனியில் சாதாரண ஒரு வேலையில் இருக்கும் ஒரு நடுத்தர வர்க்கம் அவ்வளவு தான்.

காலை 6 மணிக்கெல்லாம் எழுந்து குளித்து அவர்கள் வீட்டுப் பக்கத்திலேயே இருக்கும் பிள்ளையார் கோயிலுக்குப் போய் விடுவான். அங்கு தான் மீனாட்சி சுந்தரம் அவனைப் பிடித்தார்.

“என்ன நடராஜன் சார்? எப்டி இருக்கீங்க? பெரிய பெரிய பிரச்சனைகளை எல்லாம் தலையில போட்டுக்கறீங்க? நம்ம கோயிலைக் கவனிக்க மாட்டேங்கறீங்களே?”

“என்ன சார் சொல்றீங்க? நம்ம கோயிலுக்கு என்ன? வருஷத்துக்கு ஒரு தரம் திருவிழாக்கூட நடத்தறோமே சார்?”

“அதெல்லாம் சரிதான்! ஆனா நம்ம கோயில் வாசலுக்குப் பக்கத்துல சுவரை ஒட்டி பெரிய குப்பைத் தொட்டி இருக்கே? அதைப் பக்கறதே இல்லியா நீங்க? அதுல எவ்ளோ பேரு குப்பையை கோயிலுக்குப் பக்கத்துலயே இல்ல வாசல்லயே வீசிட்டுப் போறாங்க? பாக்கறீங்கள்ல?”

“அதுக்கு நான் என்ன சார் செய்ய முடியும்? குப்பைத் தொட்டியுள் குப்பையைப் போடுங்கள்னு போர்டு வெச்சோம். ஆனாலும் அரை மணியில தொட்டி ரொம்பிடுது. வேற என்ன பண்ண முடியும்?”

“நீங்களே இப்டிச் சொல்லலாமா நடராஜன் சார்? கார்ப்பரேஷன்ல சொல்லி அந்த குப்பைத் தொட்டியை அங்கருந்து தூக்கிட்டா? எவ்வளவு நல்லாயிருக்கும்? முடிஞ்சா செய்ங்க சார்” என்று தூண்டி விட்டு விட்டுப் போய் விட்டார் அவர்.

சிந்தனையில் ஆழ்ந்தான் நடராஜன். “தனக்கு ஏன் இது இவ்வளவு நாள் தோன்றவில்லை? குப்பைத் தொட்டியை அகற்றுவது மிகப் பெரிய காரியம் தான். ஆனால் செய்து முடித்தால் அதனால் தனக்கு எத்தனை பெருமை? அந்த இடமே சுத்தமாகி விடுமே! ”

இது குறித்து தன் மனைவியுடன் கலந்தாலோசித்தான்.

“என்னங்க! நாமெல்லாம் சாதாரணமானவங்க! ஏதோ குடி நீர்க்குழாய்ல கழிவு நீர் கலந்து வருது , இந்த மாதிரின்னா ஒடனே செய்வாங்க. ஒரு எடத்துலருந்தே குப்பைத் தொட்டியைத் தூக்கணும்னா? பேசாம இருங்க!”

அவனுக்கு அனுமதி கிடைத்து விட்டது. சாதாரணமாக ஏதாவது ஒன்றை அவன் மனைவி செய்யக் கூடாது என்றால் அதை உடனே செயவது அவன் வழக்கம். அதன் படி உடனே இந்தக் குப்பைத் தொட்டி அகற்றும் பணியில் இறங்க வேண்டியது தான் என்று தீர்மானித்துக் கொண்டான். அவன் மனைவிக்கு எரிச்சலான எரிச்சல்.

முதலில் கோயிலுக்குப் பக்கத்தில் பூ விற்பனை செய்யும் வயதான பெண்மணியைப் பிடித்தான். நாள் தோறும் குப்பை நாற்றத்தை நுகர்ந்து கொண்டு பூ விற்பவளுக்கு இந்த யோசனை மிகவும் பிடித்தது. அடுத்து கோயில் அறங்காவலர் மாணிக்கம். அவர் கண்டிப்பாக வேண்டும். ஏனென்றால் இந்த ஏரியா கவுன்சிலரும் அவரும் தூரத்து உறவு. அவரை மட்டும் பிடித்துப் போட்டு விட்டால் காரியம் 50% நடந்த மாதிரி தான்.

ஆனால் பெரிய மனிதர் மாணிக்கத்தின் தரிசனம் அவ்வளவு சீக்கிரம் சாதாரணமானவர்களுக்குக் கிடைத்து விடுமா? முதல் முறை நடராஜன் போன போது அவர் வெளியூர் போயிருந்தார் , மறு முறை அவருக்கு உடம்பு சரியில்லை மூன்றாம் முறை அவருக்குப் பல்வலி பேசவே முடியாமல் கிடந்தார் என்றார்கள் ஆனால் அவர் தோசையை சட்னி சாம்பாரோடு ஒரு ஹோட்டலில் உள்ளே தள்ளிக் கொண்டிருந்ததைப் பார்த்ததாக நடராஜனின் மகன் வந்து சொன்னான். கடைசியாக நாலாம் முறை தரிசனம் கிடைத்தது.

நடராஜனை உட்காரக் கூடச்சொல்லவில்லை. பொது சேவை என்று வந்த பிறகு இதெல்லாம் பார்த்தால் முடியுமா? விஷயத்தைச் சொன்னான் நடராஜன். அவருக்கும் இதில் சம்மதம் தான் என்று தோன்றியது. ஆனால் அதை அவர் லேசில் சொல்ல வில்லை. மோட்டு வளையைப் பார்த்தார் , ரோட்டில் போகும் வண்டிகளைப் பார்த்தார் , வானத்தில் பதிலைத் தேடினார். “என்னவோ இவரே குப்பைத்தொட்டியைத் தூக்கித் தள்ளி வெல்லப் போறா மதிரி மனுசன் என்ன அலட்டல் அலட்டுறாரு” என்று நியனைத்துக் கொண்டான் நடராஜன். வெளியில் சொல்ல முடியுமா? என்ன இருந்தாலும் கவுன்சிலரில் தூரத்துச் சொந்தக்காரர் இல்லையா?

“நடராஜா நீ சொல்றது நல்ல யோசனை தான். ஆனா கார்ப்பரேஷன்ல ஒத்துக்க மாட்டாங்களப்பா”

“இதைச் சொல்லத்தான் இவ்வளவு நேரமா?” என்று நினைத்தவன் ” அதெல்லாம் நாம எடுத்துச் சொல்லுவோம் சார்! நீங்க சொல்லிக் கேக்காம இருப்பாங்களா ?” என்று ஒரு ஐஸ் ஃபேக்டரியையே தூக்கித் தலையில் வைத்தான்.

பெரிய மனது பண்ணி முறுவலித்தவர் மீசையை முறுக்கியவாறே ” அது சரி தான் நடராஜா! ஆனா இது கொஞ்சம் ….”

“சார் நீங்க ஒண்ணும் செய்ய வேண்டாம் சார்! முத ஆளாப் பெட்டிஷன்ல கையெழுத்துப் போடுங்க! மத்ததை நான் பாத்துக்கறேன்” என்றான். அவ்வாறே ஒப்புக் கொள்ளப்பட்டு சபை கலைந்தது. அதாவது நடராஜன் வெளியே துரத்தப்பட்டான்.

விழாக்கமிட்டித் தலைவரும் இதே வகையில் , கிட்டத் தட்ட இதே பதிலைச் சொன்னார். அவரை இரண்டாவதாக கையெழுத்துப் போடுமாறு சம்மதிக்க வைத்து விட்டு வீடு திரும்பியவனின் எரிச்சலுக்கு ஆளானார்கள் மனைவியும் , மகனும். காரணமே இல்லாமல் மகன் அடி வாங்கி அழுது கொண்டே ஸ்கூலுக்குப் போனான். பின்னே நடராஜனன் தன் கோபத்தை , இயலாமையை யார் மீது காட்டுவானாம்?

எல்லா ஏற்பாடுகளும் செய்தாயிற்று. நிறையப் பேரிடம் கையெழுத்து வாங்கியாயிற்று. கவுன்சிலரைச் சென்று சந்திக்க வேண்டியது தான் பாக்கி. அது தான் பெரிய விஷயமும் கூட!.

ஒரு சனிக்கிழமை ஆபீசுக்கு லீவு எடுத்துக் கொண்டு அந்த வேலையைச் செய்யத் திட்டமிட்டான். ஒரே நாளில் முடிந்து விடுமா அரசு வேலைகள்? கவுன்சிலரைப் பார்ப்பதே ஒரு பெரிய விஷயம். பின்னர் அவர் நமக்கு சமயம் ஒதுக்க வேண்டும் , அந்த சமயத்துக்குள் அவருக்குக் கட்சிப் பணி ஏதாவது வராமல் இருக்க வேண்டும். டீ காபி குடிப்பது போன்ற முக்கிய வேலைகள் வராமல் இருக்க வேண்டும். இதில் எத்தனை தடங்கல்களோ? இதைல்லாம் நடராஜனுக்கு ஒரு பொருட்டில்லை. அவனுக்குத் தேவை எல்லாம் பிள்ளையார் கோயில் வாசலிலிருந்து அந்தக் குப்பைத் தொட்டி அவனால் அகற்றப் பட வேண்டும். அதற்கு என்ன தடைகள் எந்த ரூபத்தில் வந்தாலும் அவன் எதிர் நிற்கத் தயார்.

தொடர்ந்து நான்கு சனிக்கிழமைகள் கவுன்சிலர் ஆபீசின் முன்னால் தவமிருந்து , அவரது அள்ளக் கைகளிடம் அன்பாகப் பேசி டீ வாங்கிக் கொடுத்து , கவுன்சிலரை வானளாவப் புகழ்ந்து , அறங்காவலர் தனக்கு எவ்வளவு நெருக்கமானவர் என்றால் முதல் கையெழுத்துப் போட்டிருக்கிறார் என்பதை எடுத்துக்காட்டி கவுன்சிலரைப் பார்க்க அனுமதி வாங்கி விட்டான்.

அப்பாடா! முக்கால் கிணறு தாண்டியாச்சு. கொஞ்சம் தம் பிடித்தால் முழுக்கிணறையும் ஒரே தம்மில் தாண்டி விடலாம்.

அன்று கவுன்சிலர் நல்ல மூடில் இருந்தார். மேலிடம் வரையில் அவருடைய விசுவாசம் போய்ச் சேர்ந்து விட்டது என்ற தகவல் வந்திருந்தது. எல்லாம் அந்தப் பிள்ளையாரின் யோகம் தான். விஷயத்தைச் சொல்லி முடித்தது தான் தாமதம் , அதற்கான பெட்டிஷனைக் கொடுத்தது தான் தாமதம் கவுன்சிலர் உடனே சம்மதித்து வாய் மொழி உத்தரவு இட்டு விட்டார். திங்கட் கிழமை அதை அமல் படுத்தி விடுவார்கள்.

நடராஜனைப் பாராட்டாதவர்களே இல்லை. அவன் மனைவியே திருஷ்டி சுற்றிப் போட்டாள். அவனுக்குத் தலை தோளில் நிற்கவில்லை.

திங்கட் கிழமையும் லீவு போட்டு விட்டு கார்ப்பரேஷன் ஆபீசுக்கே போய் அந்த வண்டியை அழைத்து வந்து விட்டான் நடராஜன். எல்லாரும் கூடி விட்டனர். பூக்காரக் கிழவி தன் கடையைத் தூக்கி விட்டாள்.

கார்ப்பரேஷன் காரர்கள் வந்து அங்கிருந்த குப்பைத் தொட்டியை எடுத்த போது நடராஜனை கைதட்டிப் பார்ராட்டினர் கூடியிருந்தவர்கள். பெருமையாக நாலாபுறமும் சுற்றிப் பார்த்தவன் கண்ணில் மின்னல் வெட்டியது. திருடனுக்குத் தேள் கொட்டினாற் போல சொல்ல முடியாமல் தவித்தான் அவன். காரணம் ஒன்றுமில்லை கோயில் பக்கத்தில் இருந்த குப்பைத் தொட்டியைத் தூக்கி நடராஜன் வீட்ட்க்குப் பக்கத்தில் வைத்துக் கொண்டிருந்தனர் கார்ப்பரேஷன்காரர்கள்.

இப்போது குப்பைத் தொட்டியை மீண்டும் கோயில் அருகிலேயே திரும்ப வைக்கும் முயற்சியில் தீவிரமாக இருக்கிறானாம். தன் வீட்டாரும் பக்கத்து மூன்று வீட்டுக்காரர்களும் கையெழுத்துப் போட்ட பெட்டிஷனை வைத்துக் கொண்டு ஒவ்வொரு சனிக்கிழமை தோறும் கவுன்சிலர் ஆபீசில் மீண்டும் தவமிருக்கிறான்.

சூரியக்கதிர் ஜூலை 1-15 , 2012 

தொடர்புடைய சிறுகதைகள்
தாய்மை எனப்படுவது யாதெனின் . . .
மகள் வர்ஷினியின் பிறந்த நாள் ஃபோட்டோக்களை ஒவ்வொன்றாகப் ரசித்துப் பார்த்துக்க் கொண்டிருந்தாள் சாவித்திரி. எல்லா ஃபோட்டொக்களிலும் குதூகலமே உருவாக இவளும் வர்ஷினியும் சிரித்துக் கொண்டிருந்தனர். வர்ஷினி அவள் அப்பாவிற்கு கேக் ஊட்டும் ஃபொட்டோ வந்த போது சற்று தயங்கியது சாவித்திரியின் உள்ளம். ...
மேலும் கதையை படிக்க...
நான் இப்போது சொல்லப் போகும் கதை நடக்கும் காலகட்டம் 1970கள். எனவே வாசகர்கள் என்னுடன் டைம் மிஷினில் அமர்ந்து அந்த காலத்தை நோக்கி பயணிக்கத் தயாராகும்படி கேட்டுக் கொள்கிறேன். H.G.Wells எனக்கு மட்டும் தனியாக ஒரு கால வாகனம் செய்து கொடுத்திருக்கிறார். ...
மேலும் கதையை படிக்க...
இன்னும் இரண்டு நாள் தான் மாடமுத்துவின் மனம் கணக்குப் போட்டது. பத்து வருடக் காத்திருப்புக்குப் பின் வரப் போகும் திருநாள். மாடமுத்துவுக்கும் அவன் மனைவி பூவம்மாவுக்கும் கால் தரையில் பாவவில்லை. வருவோர் போவோரிடமெல்லாம் சொல்லிச் சொல்லி சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்தார்கள். விஷயம் வேறு ஒன்றுமில்லை ...
மேலும் கதையை படிக்க...
நிதின் ஷூட்டிங்கிற்குத் தயாராகிக்கொண்டிருந்தான். எட்டு வயதுச் சிறுவன் (குழந்தை?) , சினிமாவிலும் , விளம்பரங்களிலும் நடித்து இன்று நம்பர் ஒன் இடத்தில் இருப்பவன்.உடை அணிந்து சாப்பிடுவதற்காக வந்தவன் டேபிளைப் பார்த்தான். மெத்து மெத்தென்ற ஆப்பமும்,தேங்காய்ப்பாலும் எடுத்துவைக்கப்பட்டிருந்தது. தக்காளிச் சட்னி பக்கத்தில் இருந்தது ...
மேலும் கதையை படிக்க...
அவளை நான் முதன்முதலில் பார்த்தது ஒரு மார்கழி மாதத்தில் தான். உடல் பெருத்து உப்பி , வயிறு எது , இடுப்பு எது மார்பு எது என்றே இனம் பிரித்துச் சொல்ல முடியாத ஒரு பெண்ணை மார்கழிப் பனியில் பார்த்தால் என்ன ...
மேலும் கதையை படிக்க...
தாய்மை எனப்படுவது யாதெனின் . . .
நானாச்சு என்கிற நாணா
இன்னொரு ஆட்டக்காரன்
பணம் காய்க்கும் இளஞ்செடிகள்
காய சண்டிகை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)