புன்சிரிப்பு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: January 12, 2012
பார்வையிட்டோர்: 13,638 
 

கதை ஆசிரியர்: கி.ரா.

‘மைலாப்பூர், மைலாப்பூர்,’ – ‘அடையார், மைலாப்பூர்!’

‘மைலாப்பூர் நாசமாகப் போக!’ என்றார் ஸ்ரீமான் பவானந்தர், கோபத்துடன்.
எவ்வளவு நேரம்தான் காத்துக்கொண்டிருக்கிறார் அவரும். ஓர் அமிஞ்சக்கரை
பஸ்ஸூம் வரவில்லை. அதற்குள் இருபது மைலாப்பூர் பஸ்களும், முப்பது
திருவல்லிக்கேணி பஸ்களும் வந்து போயிருக்கும். ஓர் அமிஞ்சிக்கரைகூடக்
கிடையாது! ‘ என்ன, அந்தப் பக்கத்துப் பஸ் விடுவதையே நிறுத்திவிட்டார்களா?’
என்றுகூட நினைத்தார் பவானந்தர்.

அவருடைய அதிருப்தி, இனி அரை நிமிஷம்கூட பொறுத்திருக்க முடியாது என்ற
நிலைமைக்கு வந்துவிட்டது. கையிலிருந்த குடையை, ‘இந்தப் பாழைய்ப்போன
பசங்கள்!’ அவருடைய கோபத்துக்குப் பாத்திரமான அந்தப் ‘பசங்கள்’ அந்தச்
சமயம் அவருடைய எதிரிலிருந்திருந்தால், அவர்கள் கதி என்னவாயிருக்கும்
என்பதை, கீழே தரையில் ஆறங்குலம் ஆழம் தொளைத்திருந்த அந்தக் குடை
நிரூபித்தது.

திடீரென்று அவருடைய கோபம் மறைந்தது. பளிச்சென்று பூத்த புன்னகையால்
பிரகாசித்தது முகம். எதிரே ஒரு யுவதி, பதினான்கு, பதினைந்து வயதிருக்கும்.
நல்ல அழகிய முகம். அவள் அணிந்திருந்த ஆகாய நீலப் புடவை மனத்திற்கு ஒரு
ரம்யமான கிளர்ச்சியையும், கவர்ச்சியையும் உண்டுபண்ணிற்று. அவளுடைய
பாதங்களை அரைகுறையாய் மூடியிருந்த கான்பூர் சரிகைச் செருப்புகளும்,
அவளுடைய கையில் தொங்கிய ஸில்க் பையும் நவீன நாகரிக ஓட்டத்தில் அவள்
எவ்வளவு தூரம் முன்னேறியிருக்கிறாள் என்பதை நிரூபித்துக் காட்டின.

அவளுடைய இடது மணிக்கட்டை அலங்கரித்த, காலணா அளவைவிடச் சிறியதான தங்கக்
கடிகாரம் இவ்வளவிற்கும் ஒரு சிகரம் வைத்தாற்போல் இருந்தது.

ஒரு நிமிஷம் அப்படியே ஸ்தம்பித்து நின்றார் பவானந்தர். அவளுடைய அழகிலே,
அந்தக் கவர்ச்சியிலே அப்படியே லயித்துவிட்ட அவருடைய மனம், அவருடைய
கற்பனையோட்டத்தைக் கட்டவிழ்த்து விட்டுவிட்டது.

அந்தப் பெண்ணின் கூட வந்தவரை ஏறிட்டுப் பார்த்தார். வயோதிபர். அறுபது
வயதிருக்கும். ஒரு வேளை பாட்டனாரோ என்னவோ! தகப்பனாராகவும் இருக்கலாம்.

அந்த யுவதியும், ‘பாட்டனாரு’ம் இவருக்குப் பக்கத்தில் வந்து, பத்தடி
தூரத்தில் நின்றனர். அவர்களும் பஸ்ஸூக்காகத்தான் காத்துக்
கொண்டிருக்கிறார்கள். ஆனால் எந்த இடத்திற்கோ?

அன்று காலையில் வீட்டைவிட்டு வரும்போது அவருடைய சகோதரி சொன்னதை நினைத்தார்.

வழக்கம்போல் அவருடைய குழந்தையை எடுத்து முத்தமிட்டுக் கொண்டார்.
அப்பொழுதுதான் அவருடைய சகோதரி சொன்னாள். ‘எத்தனை நாள் இந்தத் தாயில்லாக்
குழந்தையை வச்சுக்கிட்டு நான் அவஸ்தைப்படுவேன்?’ என்று.

குழந்தைக்கு இரண்டு வயதாகிறது. குழந்தை பிறக்கும்போது தாயை விரட்டிவிட்டது.
உலகத்தில் பொறுமையைச் சோதிக்குமு; விஷயங்களில் தாயில்லாக் குழந்தையை
வளர்ப்பது எப்படிப்பட்டது என்பது அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும்.
அதுவும் தருமத்துக்காக, செய்துதான் ஆகவேண்டுமென்ற நியதியில்லாதவர்கள் அதை
எப்படி அனுபவிக்க முடியும்?

இதெல்லாம் ஒன்றன்மேல் ஒன்றாகத் தோன்றின அவருக்கு.

அப்பொழுது தூரத்தில் ஒரு பஸ் வந்த சத்தத்தைக் கேட்டுத் திரும்பினார்
பவானந்தர். அது ஒருவேளை அமிஞ்சக்கரை வண்டியாயிருந்தால் என்ன பண்ணுவது?
அல்லது அந்தக் கட்டழகி போகவேண்டியதாயிருந்தால்…? ஆவலோடு பஸ்ஸை
நிமிர்ந்து பார்த்தார்.

‘தில்லக்கேணி! தில்லக்கேணி!’

நல்லவேளை! ஒரு நீண்ட பெருமூச்சு விட்டார் பவானந்தர். பஸ்ஸூம் போய்விட்டது.
அந்த யுவதி போகவில்லை.

அந்தச் சமயம் அவள் பக்கம் திரும்பினார். அவருள்ளம் சடக்கென்று கர்வத்துடன்
ஓங்கியது. திருப்தியுடனும், ஆத்மாபிமானத்துடனும், தன்னுடைய ஜரிகை அங்க
வஸ்திரத்தில் ஒட்டிய தூசியைத் தட்டினார்.

அகஸ்மாத்தாகத் திரும்பிய அந்தப் பெண் இவரைக் கண்டு ஒரு புன்னகை வீசினாள்.
இவர் கர்வம் – ஆமாம், இவரைக் கண்டுதான் அவள் புன்சிரிப்புச் சிரித்தாள்!
அதில் சந்தேகமில்லை.

பவானந்தரின் கற்பனையோட்டம் வெகு தீவிரமாக ஓடிக் கனவு லோகத்தில் போய்க்
கலந்தது.

அவரும்தான் இவ்வளவு காலமாக – முப்பது வருஷமாக ஆடியோடிச் சம்பாதித்தாய்
விட்டது. கொஞ்சமாவது சுகப்பட வேண்டாமா! லட்சக்கணக்கில் சேர்த்து குவிந்து
கிடக்கிறது பாங்கியில். பட்டணத்திலேயே பத்துப் பங்களாக்கள். ஒவ்வொன்றும்
பதினாயிரக் கணக்கில் பெறும். இவ்வளவு நாள் சம்பாதித்துத் தான் அதை
அனுபவிக்க வேண்டாமா?

எல்லாம் ரொம்ப எளிதாக முடித்துவிடலாம். வியாபாரம் தானே, என்ன பிரமாதம்?
அவருக்குக் கீழ் இவ்வளவு காமலாக உழைத்த மானேஜர் மன்னார்சாமி இருக்கிறான்.
ரொம்ப நாணயஸ்தன். கொஞ்சங்கூடக் குறை சொல்ல இடமில்லை இத்தனை வருஷமாக. ஒரு
சின்ன ஏற்பாடு பண்ணிவிட்டால் அவன் பேருக்கே கடையை எழுதி வைத்துவிடலாம்.

குழந்தையிருக்கிறது. அதற்கும் ஒரு வழியிருக்கிறது. கிராமத்தில்
தம்பியிருக்கிறான். ரொம்ப நாளாகச் சொல்லிக்கொண்டிருக்கிறான். குழந்தையைத்
தன் வீட்டிலேயே வைத்துக்கொள்ள வேண்டுமென்று. அவனுக்குத்தான் பிள்ளையில்லை.
அவனுக்கும் சில ஆயிரத்தை எழுதி வைத்துவிட்டால் போகிறது. அந்தத் தொல்லையும்
ஒழிந்தது.

இனிமேல் பாக்கி சகோதரிதான். அவளும்தான் சில நாளாக முனகுகிறாள். ஏதோ
பதினாயிரம் ரூபாயையும் ஒரு பங்களாவையும் அவள் பேருக்கு வைத்துவிட்டால்
அவளுக்குத் திருப்தியாய் விடும். இனி வேறென்ன…?

‘மைலாப்பூர்! மைலாப்பூர்!’

இருபத்தைந்தாவது பஸ் மைலாப்பூருக்கு. ஆனால் அதைப்பற்றி கவலைப்படவில்லை
அவர். அவருடைய கவனமெல்லாம் அந்தப் பெண்ணின்மேல் இருந்தது.

அதோ காலையெடுத்து வைக்கிறாளே! அதில், மைலாப்பூர் போய்விடப் போகிறாளோ?
அவருடைய மனம் படபடவென்று அடித்துக்கொண்டது. அந்த ஒரு வினாடியும் அவருக்கு
ஒரு யுகமாய் இருந்தது.

நல்லவேளை! ‘அது இல்லையம்மா! இங்கே வா’ என்று வயோதிபர் அந்தப் பெண்ணை
நிறுத்தியதும்தான், பவானந்தருக்கு மீண்டும் உயிர் வந்தது.

‘அம்மா’ என்று கூப்பிட்டாரே, அதனால் அவருடைய ஹேஷ;யம் நிச்சயம்தான்.
பாட்டனார்தான்!

பவானந்தருக்கு அப்போது தேவலோகத்துக்குத் தூக்கிக் கொண்டு போவது
போலிருந்தது. தன்னை மறந்த இன்பத்தில் மயங்கித் திளைத்துத் தவித்தார்.

அந்தக் கிழவனுடன் உடனே பேசி எல்லாவற்றையும் முடித்துவிட வேண்டுமென்று
ஆவலுடன் துடித்தது அவருடைய நெஞ்சு.

ஒருவேளை மறுத்தால் என்ன? ஆனால், இரும்பு வியாபாரி பவானந்தரைத் தெரியாதவர்
யாரேனுமுண்டா? அவருடைய ஏராள ஆஸ்தியே உலகப் பிரசித்தியாயிற்றே! அவர் வாய்
திறந்து கேட்டால் பெண் கொடுக்க மறுப்பவர்; கூட உண்டா என்ன?

நிமிர்ந்து நின்று தன்னை ஒரு தடவை குனிந்து பார்த்துக் கொண்டார். மீசையில்
கை தானாகவே போயிற்று.

ஐம்பது வயது என்ன ஒரு பெரிய வயதா என்ன? காலையிலும் மாலையிலும் தினசரி
பீச்சுக்கரையில் நான்கு மைல் நடக்கவில்லையா, கொஞ்சங்கூடக் களைப்பின்றி?
பார்த்தால் என்ன ஐம்பது வயது என்றா சொல்ல முடியும்? அன்றியும் பணமல்லவா
இருக்கிறது….

அவருடைய பகற் கனவு உச்ச ஸ்தாயியை அடைந்தது.

உடனே, விவாகம் ஆனதும், பெங்களூரில் ஓர் அழகிய மாளிகை வாங்கிவிட வேண்டும்.
ஒரு புதிய அந்த வருஷத்திய மாடல் மோட்டார் வண்டி. பட்டணத்தில்
எல்லாவற்றையும் ஒரு வழியாக ஏற்பாடு பண்ணிவிட்டுப் பெங்களூரோடு, அந்தக்
கட்டழகியுடன் சுகவாசம். பாங்கியில் பணம், காலில் ஒட்டிய தூசியால் இட்டதைத்
தலையால் தாங்கிச் செய்ய வேலையாட்கள்! வேறு என்ன வேண்டும்?

கட்டாயம் அந்தப் பெண்ணிற்குச் சங்கீதம் தெரிந்திருக்கும். இவ்வளவு
நாகரிகத்துடன் இருப்பவர்களுக்கு வீணை தெரிந்திருக்க வேண்டும். அவருக்கும்
ரொம்ப நாளாக ஓர் ஆசை. யாருக்காவது வீணை கற்றுக் கொடுத்துத் தினசரி
மாலையில் பாடச் சொல்லிக் கேட்க வேண்டும் என்று. அதுவும்
பூர்த்தியாகிவிடும். அவருடைய அதிர்ஷ;டத்துக்குக் குறுக்கே பிறந்தவர் யார்…?

சடக்கென்று விழித்துக் கொண்டவர்போல் திரும்பினார் பவானந்தர். அந்தோ!
மாம்பலம் போகும் பஸ் அவருடைய ‘கட்டழகி’யைச் சுமந்துகொண்டு ‘புர்’ என்ற
சப்தத்துடன் கிளம்பிற்று. கனவில் லயித்திருந்த அவர் பஸ் வந்ததையும் அந்தப்
பெண் ஏறிக் கொண்டதையும் கவனிக்கவில்லை.

மறைந்து கொண்டிருக்கும் வண்டியிலிருந்து அந்த யுவதி மூன்றாவது முறையாக
அவரைப் பார்த்துச் சிரித்தாள்.

திடுக்கிட்டுத் திரும்பினார், பவானந்தர். பின்புறமிருந்த வெற்றிலை
பாக்குக் கடைக் கண்ணாடியில் பிரதிபலித்தது அவருடைய முகம். அவருடைய
நெற்றியில் வலது புருவத்துக்கு மேலும், முகத்தில் வலது கன்னத்திலும் ஒரு
தம்பிடியகலம் குங்குமப் பொட்டு!

அன்று காலையில் வழக்கம்போல் அவர் குழந்தையையெடுத்து முத்தமிட்டுக்
கொள்ளும்போது, அதன் நெற்றியிலிருந்த குங்குமத்தைக் கவனிக்கவில்லை என்பது
அப்போதுதான் நினைவு வந்தது. அதோடு அந்த யுவதி சிரித்த காரணமும் அவருக்கு
விளங்கி விட்டது!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *