பால் கணக்கு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: May 27, 2021
பார்வையிட்டோர்: 3,513 
 

“இந்த மாதம் பால் கணக்கு எவ்வளவு?” என்றேன். பால்காரன் பணத்துக்கு வருவதற்கு முன் எங்களுக்குள் கணக்கைச் சரிப்படுத்தி வைத்துக்கொள்ள வேண்டுமென்று என் எண்ணம்.

“என்ன கணக்கு! பார்த்துக் கொள்ளுங்களேன். பதிமூன்றாத் தேதி வரைக்கும் காலையில் அரைப்படி பசும் பால், மூன்றாழக்கு எருமைப் பால், சாயந்திரம் ஒன்றரை ஆழாக்கு பசும்பால். இதில் ஒரு நாள் மாடு உதைத்து விட்ட தென்று ஒரு கால் படி போட்டு விட்டுப் போய் விட்டான்.”

“பசும் பாலா, எருமைப் பாலா?”

“பசும்பால், ஒரு நாள் ஸினிமாவுக்குப் போனோமே, அன்றைய தினம் வந்து பார்த்து விட்டுப் போய் விட்டான். அன்றைக்குப் பால் வாங்கவில்லை. இதுபோக, போன மாதத்தில் அவன் நமக்கு ஏழு ஆழாக்குக் கொடுக்க வேண்டும். கணக்கென்ன, இதுதான் கணக்கு! பதிமூன்றாந் தேதி வரைக்கும் இந்தக் கணக்கு…”

“ஒவ்வொரு மாதமும் நான் சொல்லுகிறேனோ இல்லையோ அன்றன்றைக்கு வாங்கினதை ஒரு நோட்டுப் புஸ்தகத்தில் வரிசையாய் எழுதி வையென்று? எழுதி வைத்திருத்தால் சட்டென்று கூட்டிக் கணக்குபோட்டு விடலாமோடுல்லையோ?”

“எழுதி வைக்கிறதென்ன? நித்தியம் இவ்வளவென்று கணக்காய்த் தானே வாங்குகிறோம்?”

“என்ன கணக்காய் வாங்குகிறாய்? ஒரு நாளைக்கு இரண்டா ழாக்குக் குறைத்தல் என்கிறாய்; மற்றொரு நாள் மூன்றாழாக்கு அதிகம் என்கிறாய். உன் கணக்கை, இறந்து போனாரே ராமானுஜம், அவர் திரும்பி வந்தால் கூடப் போட முடியாது. சரி, என்ன ஆச்சுது இப்போ பதிமூன்றாந் தேதி வரைக்கும்?”

“அதுதான் சொன்னேனே, காலையில் அரைப்படி பசும் பால், மூன்றாழாக்கு எருமைப், பால். பதிமூன்று நாளைக்குப் பார்த்துக் கொள்ளுங்களேன். பதிமூன்றரை என்ன ஆச்சு? ஆறரை…”

“பசும்பால் தனியாய், எருமைப் பால் தனியாய்ச் சொல்லேன். பசும் பால் ரூபாய்க்கு ரெண்டரைப் படி; எருமைப் பால் இரண்டே முக்கால் படி: இரண்டையும் வெவ்வேறாய்க் கணக்குப் போட வேண்டாமா?”

“அப்படித்தான் போடுங்களேன்.”

“சரி, பசும்பாலை முன்னாடி சொல். காலையில் எவ்வளவு, சாயந்திரம் எவ்வளவு?”

“அதுதான் சொன்னேனே. காலையில் மூன்றாழாக்கு. சாயந்திரம் ஒன்றரையாழாக்கு. மொத்தம் நாலரையாழாக்கு. பதிமூன்று நாளைக்கு. இதில் சினிமா போன தினத்திற்கு ஒன்றரையாழாக்குக் கழித்து விடுங்கள். போன மாதத்தில் ஏழாழாக்கு தமக்கு கொடுக்க வேண்டும்…”

“கழிக்கிறதையும் கூட்டுகிற மயும். அப்புறம் பார்க்கலாமே! முன்னே இந்தக் கணக்கு அற்றுபடி பாகட்டும். பதிமூன்று நாலரை யாழாக்கா? பதிமூன்று நான்கு எழுபத்திரண்டு…”

“பதிமூன்று நான்கு எழுபத்திரண்டா? கணக்கில் ரொம்ப கெட்டிக் தாரி! ஐம்பத்திரண்டு.”

“ஆமாம், ஆமாம், ஐம்பத்திரண்டு. உன் கணக்குப் போடுவதற்குள் மூளை சிதறிப் போய் விடுகிறது. பதிமூன்று நான்கு ஐம்பத் திரண்டு…”

“பதிமூன்று அரை ஆறு.”

“ஆறரை.”

“ஆமாம், ஆறரை. முன்னே எவ்வளவு கணக்குப் போட்டோம்? ஜம்பத்திரண்டா? ஐம்பத்திரண்டும் ஆறரையும் ஐம்பத்தெட்டரை. ஐம்பத் தெட்டரைக்கு என்ன ஆச்சுது?”

“ஐம்பத்தெட்டரையில், சினிமா போனோமே. அந்த ஒன்றரை பாழாக்கைக் கழிக்க வேண்டாமா?”

“ஐம்பத்தெட்டரையில் ஒன்றரை போனால் ஐம்பத்தேழு.”

“போன மாதம் ஏழாழாக்கு அவன் நமக்கு கொடுக்க வேண்டுமே. அதையும் கழித்து விடுங்கள்.”

“சரி, அதையும் கழித்தால் பதிமூன்றாம் தேதி வரைக்கும் பசும்பால் ஐம்பது ஆழாக்கு என்று வைத்துக் கொள்ளலாம். இரண்டரைப் படி வீதம் ஐம்பதாழாக்கு என்ன ஆச்சுது?”

“ஐம்பதாழாக்கைப் படியாக் குங்கோள். எண்ணைந்து நாற்பது. இல்லை. எண்ணாறு தாற்பத்தெட்டு. எட்டுப் படியும் இரண்டாழாக்கு மாகிறது.”

“எட்டு படியா! ஆறு படி என்று சொல்லு. படிக்கு எட்டாழாக்கு இல்லையோ?”

“ஆமாம், ஆறுபடி இரண்டாழாக்கு. ஆறே கால் படி. என்ன ரூபாயாச்சு? ஐந்து படிக்கு இரண்டு ரூபாய் போச்சு. அப்புறம் ஒன்றேகால் படியிருக்கிறது. அதற்கு அரை ரூபாய். மொத்தம் இரண்டரை ரூபாய்.”

“அது அப்படியிருக்கட்டும். எருமைப் பால் கணக்குச் சொல்லு.”

“எருமைப் பால் கணக்கென்ன, தெரித்துதானேயிருக்கிறது? காலையில் மூன்றாழாக்கு, இராத்திரி இரண்டரையாழாக்கு. இதில் இரண்டு நாள் பால் ஒரே தண்ணீராயிருந்தது. நான் அதைக் கணக்கில் வைத்துக் கொள்ள மாட்டேன். அதற்குப் பணம் கிடையாது என்று அப்பொழுதே அவன்கிட்ட சொல்லியிருக்கிறேன். அதைக் கழித்துவிட வேண்டும்.”

“அது கிடக்கட்டும். கணக்கைச் சொல். எருமைப்பால் எவ்வளவு என்றாய்?”

“காலையில் மூன்றாழாக்கு. இராத்திரி இரண்டாழாக்கு. இல்லை, இரண்டரை.”

“ரெண்டையும் சேர்த்துச் சொல்லித் தொலையேன், நித்தியம் எவ்வளவென்று”.

“சேர்த்துத்தான் பாருங்களேன். மூன்றும் இரண்டரையும் ஐந்தரை”.

“பதிமூன்று நாளைக்கு என்ன ஆச்சுது? பதிமூன்றைத்து அறுபத்தைந்து; பதிமூன்றரை ஆறரை. அறுபத்தைந்தும் ஆறரையும் எழுபத் தொன்றரை.”

“அதில் ரெண்டு நாள் தண்ணிப் பாலுக்குக் கழித்து விடுங்கள்.”

“நீ கழித்து விடச் சொன்னால் அவன் ஒத்துக் கொள்ளுகிறான் போலிருக்கிறது?”

“ஒத்துக்கொள்ளாமல் என்ன பண்றதுகிறது? அன்றைக்கேதான் அந்த பாலுக்குக் காசு கொடுக்க மாட்டேனென்று கண்டிப்பாய்ச் சொல்லியிருக்கிறேன்.”

“இருக்கட்டும்; மேலே சொல்.”

“இருக்கட்டுமாவது! அந்தப் பாலுக்குக் கண்டிப்பாய்க் காசு கொடுக்கக் கூடாது. நீங்கள் இப்படிக் கொடுத்துக் கொடுத்துதான் அவன் வசம் கண்டிருக்கிறான். இன்றைக்குக் கொடுத்து விட்டீர்களானால் நாளைய முதல் அடத்துக்குத் தண்ணீர்ப் பால்தான் கொண்டு வந்து கொடுப்பான்.”

“சரி சரி, ஆகட்டும் அதைக் கடைசியில் கழித்துக் கொள்ளலாம். மொத்தம் எத்தனை படி எருமைப் பாலென்றோம்? எழுபத்தினாலரை ஆழாக்கா?”

“எழுபத்தினாலரையாவது? எழுபத்தி ஒன்றரை என்று சொல்ல வில்லை?”

“எப்படி எழுபத்தொன்றரை?”

“பதிமூன்று நாளைக்கு ஐந்தரை ஆழாக்கு வீதம் கணக்குப் போட்டீர்களே?”

“ஆமாம், எழுபத்தொன்றரை. எத்தனை ரூபாய் ஆச்சுது? ரூபாய்க்கு இரண்டே முக்கால்படி. எழுபத் தொண்ணரைக்கு…”

“ஆழாக்கையெல்லாம் முன்னே படியாக்குங்கள். எண்ணொம்பது எழுபத்திரண்டு. அரையாழாக்குக் குறைய எண்பது படி…”

“அரையாழாக்கு இருக்கட்டும். ஒன்பது படிக்குக் கணக்குப் பார்ப்போம். மூவிரண்டாறு. மும்முக்கால் இரண்டேகால், எட்டேகால்படி போனால் முக்கால் படி மிச்சம்.”

“அதில் அந்த அரை ஆழாக்கைக் கழிக்க வேண்டாமா? முக்கால் படிக்கு ஆறு ஆழாக்கு. அரை ஆழாக்கு போனால் ஐந்தரை ஆழாக்கு. மூன்று ரூபாயும் ஐந்தரை ஆழாக்கும். பசும்பால் எவ்வளவு கணக்குப் போட்டோம்? இரண்டு ரூபாயா, இரண்டரையா?”

“இரண்டரை. மூன்றும் இரண்ட ரையும் ஐந்தரை ரூபாய், மேலே ஐந்தரையாழாக்கு இருக்கிறது. ஒன்று விட்டு விட்டோமே! மாடு உதைத்த அன்று கால்படிதானே கொடுத்தான்? அன்றையக் கணக்குக் கழிக்க வேண்டாமா?”

“மேலே ஐந்தரையாழாக்கு இருக்கிறதே. அதில் கழித்துக் கொண்டால் போச்சுது.”

“அதில் என்னமாகக் கழிக்கிறது? அது பசும்பால், இது எருமைப் பால்.”

“நன்றாய்ப் பால் வாங்கினாய்! பால் வாங்கினாளாம் பால்!”

“உங்களுக்கென்னத்திற்கு அவ்வளவு கோபம் வருகிறது? பால் வாங்க வேண்டாமென்றால் நிறுத்தி விடுகிறேன். எனக்குத்தான் இப்பொழுது பால் வாங்குகிறேனா என்ன?”

“யார் பால் வாங்க வேண்டா மென்றார்கள்? பால் வாங்கினால் கணக்கெழுதி வைக்கக் கூடாதோ?”

“கணக்கு எழுதினால் என்ன, வாயால் சொன்னாலென்ன? எல்லாம் கணக்குத்தானே? கணக்கு எங்கேயாவது ஓடிப் போய்விடுமா?”

“எங்கேயும் ஓடாது. பதினாலாந் தேதி பிடித்து என்ன கணக்கு?”

‘செல்லமாளும் அவள் புருஷனும் இங்கே ஐந்து தினங்களிருந்தார்களா, ஆறு தினங்களிருந்தார்களா? அவர்களிருக்கிற வரைக்கும் காலையில் கால்படி எருமைப் பால் அதிகம். ராத்திரி ஒன்றரை ஆழாக்கு பசும்பால் அதிகம்.”

“எத்தனை நாளைக்கு?”

“அவர்கள் எத்தனை தினங்சுளிருந்தார்களோ பார்த்துக் கொள்ளுங்களேன்.”

“நான் பார்த்துப் பாழாய்ப் போனேன்.”

“அப்புறம் குஞ்சு சுரமாய்ப் படுத்துக் கொண்டிருக்கும் பொழுது கஞ்சிக்கு என்றும் காடிக்கு என்றும் நித்தியம் ஆழாக்குப் பால் அதிகமாய் வாங்கிக் கொண்டிருந்தேன். அவன் நாலு நாள் சுரமாய்ப் படுத்துக் கொண்டிருக்கவில்லையா? அது போனால் நாம் மூன்று நாட்கள் ஊருக்குப் போயிருந்தோமே, அப்பொழுது பாலே வாங்கவில்லை. மூன்றாம் நாள் சாயங்காலந்தானே வத்தோம்? அதற்கு முன்னேயே மங்களத்தினிடம் சொல்லி விட்டுப் போயிருந்தேன். ‘நாங்கள் சாயந்திரமே வந்து விடுவோம் பால் வாங்கி வை’ என்று சொல்லியிருந்தேன். அவள் முக்கால்படி பால் வாங்கி வைத்திருந்தாள். எல்லாம் என்ன கணக்காச்சு, பாருங்களேன்?”

“பார்த்துக் குட்டிச்சுவராய்ப் போனேன். பால்காரன் கணக்கெழுதி வைத்திருப்பானோ இல்லையா?”

“எழுதித்தான் வைத்திருப்பான். அவன் எழுதி வைத்திருந்தால் தாம் கணக்குப் பார்க்க வேண்டிய தில்லையா, என்ன? அவன் சொன்ன படியே கொடுத்து விடுகிறதா?”

“இல்லை, இல்லை. நம்ம கணக்குப் படியே கொடுக்கலாம். முன்னே நம்ம கணக்கு அற்றுபடியாகட்டும்.”

“அற்றுபடிக்கு என்ன இருக்கிறது? நான் சொன்ன கணக்குத் தான்.”

“நீ சொன்ன கணக்குத்தான். இப்போ எனக்கு ஒழிவில்லை. சாயந்திரம் வரும்பொழுது என்னாபீஸில் ஒரு அகௌண்டெண்டிருக்கிறான். கணக்கில் ரொம்பக் கெட்டிக்காரன். அவனை அழைத்துக் கொண்டு வருகிறேன், கணக்கையெல்லாம் பார்த்து விடலாம்” என்று ஆபீஸுக்குப் போய்விட்டேன்.

– இக்கதையை அவர் மகன் எஸ்.வி.பார்த்தசாரதி வெளியிட்ட ‘வாழ்க்கை வாழ்வதற்கே’ என்ற தொகுப்பிலிருந்து வெளியிடுகிறோம்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *