பழையன கழிதலும்…

 

வீரணம்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையம் அன்று அமர்க்களப்பட்டுக் கொண்டிருந்தது. புது மெடிகல் ஆபீசர் வந்து டியூட்டியில் சேரப் போகிறார்.

தாராபுரம், திருப்பூர், காங்கேயம் – மூன்று ஊர்களுக்கு நடுவில் சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்தில் அந்தக் கிராமம் அமைந்திருந்தது. சுற்று வட்டாரக் கிராமங்களுக்கு அந்தக் குட்டி ஆஸ்பத்திரியை விட்டால் வேறு நாதி கிடையாது. இருந்தும், பஸ் போக்குவரத்து வசதி ரொம்பக் கம்மி. மேட்டூரிலிருந்து கிளம்பி, ஈரோடு, சென்னிமலை காங்கயம் நகர்களைத் தாண்டி பழநிக்கு வீரணம்பாளையம் வழியே ஒரு பஸ் காலை ஒன்பது மணிக்கு வரும். மாலையில் அதே பஸ் திரும்பிப் போகும்!

புது டாக்டர் எந்த பஸ்சில், எப்போது வருவார் என்று தெரியவில்லை. ஆனால், அன்றைக்கு வருவதாக ஹெல்த் இன்ஸ்பெக்டர் ராமசாமிக்குப் பொதுவாக ஒரு கடிதம் எழுதியிருந்தார், மெடிகல் ஆபிஸர் பதவியேற்கவிருக்கும் டாக்டர் தங்கராஜு.

அந்தக் கடிதத்தைப் பார்த்துவிட்டு, வீரணம்பாளையத்தில், முந்தின நாள் தாராபுரத்தில் வாங்கிய ரோஜாப்பூ மாலையுடன் ஹெல்த் இன்ஸ்பெக்டர் ராமசாமி தலைமையில் ஒரு கூட்டம் காலை ஆறு மணி முதலே தார்ச்சாலையில் நின்று கொண்டிருந்தது.

அம்மை குத்தி இன்ஸ்பெக்டர் என்று அழைக்கப்படும் வாக்ஸினேட்டர் தர்மலிங்கம், “ஸார், புது மெடிகல் ஆபீஸர் ஒருவேளை தாராபுரத்துலேர்ந்து திருப்பூர் பஸ்ஸில் ஏறி, குறுக்கு ரோட்டில் வந்து இறங்கியிருந்தால்..?” என்று ஹெல்த் இன்ஸ்பெக்டர் ராமசாமியிடம் ஒரு சந்தேகத்தைக் கிளப்பினார். ஐந்து கிலோ மீட்டர் தூரம் உள்ள அந்தக் குறுக்கு ரோட்டில் இறங்கி, உப்பாறு அணைக்கட்டில் இருந்து எப்போதோ வரும் பஸ்சுக்கு மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டும். உப்பாறு அணைக்கட்டு பஸ், நினைத்தால் வரும், இல்லையேல் லீவு போட்டு விடும்!

ராமசாமி துள்ளினார். அடடா! அப்படியும் நேர்ந்து விடக்கூடிய வாய்ப்பு உண்டோ..!

வந்ததும் வராததுமாக மெடிகல் ஆபீஸர்,“ என்னய்யா ஹெல்த் இன்ஸ்பெக்டர் நீங்க? ஒரு வண்டி ஏற்பாடு பண்ணத் துப்பு இல்லையே… முன்கூட்டி லெட்டர் வேறு போட்டிருந்தேனே…” என்று தன்னைக் கடிந்து கொண்டால்..?

ராமசாமி தன் புல்லட்டில் ஏறி மாலையை சைடு பாக்ஸில் ஜாக்கிரதையாக வைத்துக் கொண்டார். “இன்னும் ஒரு மணி நேரத்துக்கு இந்த ரோட்டில் பஸ் கிடையாது. நான் திருப்பூர் குறுக்கு ரோட்டுக்குப் போறேன். அங்கே மெடிகல் ஆபீஸர் வந்து இறங்கியிருந்தாரானால் பைக்கில் கூட்டி வந்துடறேன். பாவம், அவர் அஞ்சு கிலோ மீட்டர் தூரம் நடக்கணும்… இல்லாட்டி, அணைக்கட்டு பஸ்சுக்குக் காத்துக்கிட்டிருக்கணும்!..” என்று கூறியபடி, மோட்டார் சைக்கிளை ஸ்டார்ட் செய்து ராமசாமி கிளம்பினார்.

வாக்ஸினேட்டர்கள், சுகாதார உதவியாளர்கள், கம்பவுண்டர், உதவி நர்ஸ்கள் என்று ஒரு கூட்டமே அங்கு பரபரப்போடு நின்று, ராமசாமி போவதைப் பார்த்துக் கொண்டிருந்தது.

போகும்போதே ராமசாமி நினைத்துக் கொண்டார். தாம் இப்படித் தனியாக வந்ததே நல்லதாயிற்று. முதன்முதலில் மெடிகல் ஆபீசரைச் சந்தித்து, மாலை போட்டு மரியாதை செய்து அறிமுகப் படுத்திக் கொண்டால், அவர் மனசில் நம்மைப் பற்றி நல்ல அபிப்ராயம் வரும்.. பின்னால் உதவும். ஆரம்பத்திலேயே குடும்பக் கட்டுப்பாடுப் பிரிவு ஹெல்த் இன்ஸ்பெக்டர்களைப் பற்றிக் கோள் சொல்லி அவர்கள் கொட்டத்தை அடக்கணும். புதுசா வர்ற மெடிக்கல் ஆபீஸரை முன்னாடியே கையில் போட்டுக்கிட்டாத்தான் பலதுக்கும் நல்லது.

குறுக்கு ரோடு, தண்ணீர்ப் பந்தல் அருகே பாண்ட், ஷர்ட், ஷூ சகிதம் கையில் ஒரு சூட் கேஸுடன் நின்ற ஆசாமியைப் பார்த்து ராமசாமிக்குப் பதைப்பு அதிகமாயிற்று. அவர்தானா புது மெடிகல் ஆபீஸர்? எவ்வளவு நேரமாய்க் காத்திருக்கிறாரோ..?

“ஸார், நீங்க… வீரணம்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்குப் புதுசா ஜாயின் பண்ண வந்திருக்கிற…” என்று ராமசாமி இழுக்கவும், “அப்பாடா! ஹெல்த் இன்ஸ்பெக்டர் ராமசாமி நீங்கதானா? நல்ல காலம், வந்தீங்க! நான் தான் தங்கராஜு, மெடிகல் ஆபீஸர். இருபது நிமிஷமாக் காத்திட்டிருக்கேன்…வீரணம்பாளயத்துக்கு டைரக்ட் பஸ்சே கிடைக்கலை. சரியான குக்கிராமமோ..? சேச்சே!..” என்று சலித்துக் கொண்டார்.

ராமசாமி பைக்கை நிறுத்தி ஸ்டாண்ட் போட்டார். சைடு பாக்ஸிலிருந்து மாலையை எடுத்துப் பெருமிதத்துடன் மெடிகல் ஆபீஸரின் கழுத்தில் போட்டார். அவரே படபடவென்று கைதட்டி, அசட்டுச் சிரிப்பும் சிரித்தார். “அடடே, இதெல்லாம் எதுக்கு? நீங்க இந்த நேரத்துல வந்ததே பெரிய உபகாரம்…” என்றார் தங்கராஜு.

“நாங்க காலைலே ஆறு மணியிலேர்ந்து வீரணம்பாளைய ரோட்டுக்கு வந்து பஸ் வர்ற வழியையே பாத்துகிட்டு நின்னோம். ஸார் திடீர்னு நீங்க குறுக்கு ரோட்டுல வந்து காத்துகிட்டு இருப்பீங்களோன்னு எனக்கு ஒரு சந்தேகம் வந்துச்சு. கிளம்பி வந்தேன். வந்தது நல்லதாச்சு. வாங்க போகலாம், நம்ப சுகாதார நிலைய ஸ்டாஃபுக எல்லாரும் ஆவலோட காத்துகிட்டிருக்காங்க, உங்களை வரவேற்கறதுக்காக!”

மெடிகல் ஆபீஸர் மோட்டார் சைக்கிளின் பின்னால் உட்காரச் சம்மதிக்கவில்லை. “மிஸ்டர் ராமசாமி, நீங்க பின்னால் உட்காருங்க, நான் பைக்கை ஓட்டறேன்!”

“ஓகே ஸார்!” என்றார் ராமசாமி.

கழுத்தில் போட்ட மாலையைக் கழற்றாமல் மோட்டார் சைக்கிளில் ஏறி அமர்ந்து, மெடிகல் ஆபீஸர் வண்டியை ஸ்டார்ட் செய்தார். அவருடைய சூட்கேஸை எடுத்துக்கொண்டு பின்னால் ஏறிக்கொண்டார் ராமசாமி.

“ஸார், நான் வந்த வழி ஒற்றையடிப் பாதை. மேடும் பள்ளமுமாய் இருக்கும். நேர் ரோட்டிலேயே சீக்கிரம் போய் விடலாம். இப்படிப் போங்க!” என்று ராமசாமி வழிகாட்டினார்.

“மிஸ்டர் ஹெல்த் இன்ஸ்பெக்டர், பிரைமரி ஹெல்த் செண்டர் ஸ்டாஃப் எல்லாம் எப்படிய்யா..? ஒண்ணும் பிரச்னை இருக்காதே..?”

“எல்லோரும் சுத்தத் தங்கம் ஸார்… ஆனா, குடும்பக் கட்டுப்பாடுப் பிரிவில் இருக்கிற ஹெல்த் இன்ஸ்பெக்டர்கள் மட்டும் ஒரு மாதிரி ஸார். என் வாயால் சொல்ல விரும்பலை… நீங்களே போகப் போகத் தெரிஞ்சுக்குவீங்க! ஃபீல்டுக்கே அவங்க போறதில்லை ஸார், கம்பவுண்டர் கூட ரொம்ப மோசம். ஆஸ்பத்திரி மாத்திரைகள், இஞ்சக்ஷன் மருந்தை எடுத்து, ஊருக்குள்ளாற டாக்டர் மாதிரி, பிராக்டீஸ் பண்றாருன்னாப் பார்த்துக்குங்களேன்.. என் வாயால் சொல்லக்கூடாது!”

“அப்பிடியா, எல்லாம் நான் கவனிச்சு அவங்களை ஒரு வழி பண்ணிடறேன். எனக்கு டிஸிப்ளின்தான் முக்கியம்!” என்று டாக்டர் தங்கராஜு உறுமலாகக் கூறியதும், ராமசாமிக்கு மனதில் இருந்த பாரம் குறைந்தது. “அப்பாடா, அஸ்திவாரம் போட்டு விட்டோம்!” என்று மகிழ்ச்சி அடைந்தார்.. இப்படி மற்றவர்களுக்கு முன்னதாகத் தனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்த அதிர்ஷ்டத்தை எண்ணி அவர் சிலாகித்துக் கொண்டார். அப்போது திடீரென்று…

“டமார்” என்று ஒரு சத்தம்.

கிலோ மீட்டர் எழுதியிருந்த சாலையோரக் கல்லில் மோட்டார் சைக்கிள் வளைந்து மோதி, மெடிகல் ஆபீஸர் பத்தடி தூரத்தில் போய் விழுந்தார். மாலையும் கழுத்துமாக அலங்கோலமாகக் கிடந்த அவர் தன்னைப் பெற்ற தாயைப் பலமுறை அழைத்தார், வலி பொறுக்காமல்.

பைக் சாயும்போதே தாவிக் குதித்து விட்டதால், தடுமாறிக் கீழே விழுந்தார் ராமசாமி. பலமான அடி ஏதுமில்லை, ஒரு விநாடி பதறியதைத் தவிர.

அந்தச் சமயம், சாலையில் தன்னந்தனியாக ஒரு சின்ன ப்ரீஃப் கேஸுடன் முன்னே போய்க் கொண்டிருந்த ஒருவர் இந்த விபத்தைப் பார்த்துவிட்டு வேகமாகத் திரும்பி வந்தார். “ஐயையோ, பார்த்து வரக்கூடாதா..?” என்று கேட்டுக்கொண்டே ராமசாமியைத் தூக்கி விட்டார்.

“யார் ஸார் நீங்க? இந்த நேரத்துல அத்துவான ரோட்டுல நடந்து போறீங்களே, வீரணம்பாளையத்துக்கா..?” என்று அவரை விசாரித்தார் ராமசாமி.

“ஆமாம் மிஸ்டர், வீரணம்பாளயத்து ஆரம்ப சுகாதார நிலையத்துக்குப் புதுசா மாற்றல் ஆகியிருக்கும் மெடிகல் ஆபீஸர் நான். என் பெயர் குமார்! ”

“என்னது, மெடிகல் ஆபீஸரா?” வாயைப் பிளந்தார் ராமசாமி.

“நான்தான் ஸார், அங்கே வேலை பார்க்கிற ஹெல்த் இன்ஸ்பெக்டர் ராமசாமி. மெடிகல் ஆபீஸர் பெயர் தங்கராஜுன்னு போட்டுத்தானே ஆர்டர் வந்திருக்கு?.. நீங்க குமார் என்கிறீங்களே..?” தன் சந்தேகத்தை உடைத்தார்.

“ஆமாம். முதல்ல தங்கராஜுன்னு ஒர்த்தரைப் போட்டாங்க. அந்த ஆர்டர் கேன்சலாயிடுச்சு. அதுக்கப்புறம் போட்ட ஆர்டரில் என்னை வீரணம்பாளையத்துக்கு மெடிகல் ஆபீஸரா டிரான்ஸ்ஃபர் பண்ணியிருக்காங்க. அந்த ஆர்டரை என் கையிலேயே கொடுத்து உடனே ஜாயின் பண்ணச் சொல்லி அனுப்பிச்சுட்டாங்க. வீரணம்பாலயம் பிரைமரி ஹெல்த் செண்டருக்கு நான்தான் இப்ப புது மெடிகல் ஆபீஸர்! தங்கராஜு வந்தால் அவருடைய ஆர்டர் கேன்சல் ஆயிடுச்சுன்னு சொல்லி அவரைத் திருப்பி அனுப்பிடணும்…”

சாலையோரம் தரையில் சரிந்து கிடந்த தன் மோட்டார் சைக்கிளைத் தூக்கி நிறுத்தினார் ராமசாமி. கீழே விழுந்து அம்மா என்று வலியுடன் முனகிக் கொண்டிருந்த தங்கராஜுவின் அருகில் சென்று அவருடைய சூட்கேஸை வைத்தார். அவர் கழுத்திலிருந்த மாலையை உரிமையோடு வெடுக்கென்று கழற்றிக் கொண்டு, “உங்க ஆர்டர் கேன்சல் ஆயிடுச்சாம். புது மெடிகல் ஆபீஸர் வந்தாச்சு… இங்கேயே உட்காந்திருங்க. ரெண்டு மணி நேரத்துல இந்தப் பக்கம் பஸ் வரும். வந்த வழியே திரும்பிப் போயிடுங்க!” என்று சொல்லிவிட்டுத் திரும்பி வந்தார்.

ராமசாமி புது மெடிகல் ஆபீஸார் குமாரின் கழுத்தில் மாலையைப் போட்டுவிட்டு, படபடவென்று அவரே கைதட்டினார்.

“மோட்டார் சைக்கிளில் ஏறி உட்காருங்க ஸார். அங்கே வீரணம்பாளையம் ரோட்டில் உங்களை வரவேற்க ஒரு பட்டாளமே காலை ஆறு மணியிலேர்ந்து காத்துகிட்டிருக்கு. வாங்க, சீக்கிரம் போகலாம்!”

“என்னப்பா இது? அந்த ஆசாமி யார்? அவரை அப்படியே விட்டுட்டுக் கிளம்பறியே, அடி பலமாப் பட்டிருக்கும் போலிருக்கே?”

“அதெல்லாம் ஒண்ணுமில்லை ஸார். அவர் யாரோ வழியோட போறவர். சும்மா ஏத்திகிட்டு வந்தேன். ரெண்டு மணி நேரத்துல பஸ் வந்ததும் போயிடுவார். நாம் போகலாம். சீக்கிரம் வாங்க ஸார்!”

புது மெடிகல் ஆபீஸரை மோட்டார் சைக்கிளின் பின்னால் ஏற்றிக்கொண்டு ராமசாமி கிளம்பும்போது, குமார் கேட்டார்: “ஏன் மிஸ்டர் ராமசாமி, நம்ம பி.ஹெச்.சி. ஸ்டாஃப் எல்லாம் எப்படி? நல்ல டைப் தானா, ஏதும் பிரச்னை இருக்காதே..?”

ராமசாமி சந்தோஷத்துடன் அவருக்குப் பதில் சொல்லத் தொடங்கினான்…

(ஆனந்த விகடன் வார இதழ்) 

தொடர்புடைய சிறுகதைகள்
ஏங்க, ஆசாரி வந்திருக்கார்.. ``இவன் வாசலுக்குப் போனான். என்னங்க கண்ணாயிரம், என்ன விஷயம்?'' ``பெரிய ஐயா ஒங்ககிட்டே ஒண்ணும் சொல்லலீங்களா தம்பி? நம்ப புஸ்தகக் கடை மாடியில் புதுசாக் கட்டப்போற ரூமுக்குக் கதவு செய்யணும். மரவாடிக்குப் போய் பலகை வாங்கியாரணும், புதன்கெழமை வந்துடு கண்ணாயிரம்னு ...
மேலும் கதையை படிக்க...
அப்பா கஞ்சித் தொட்டி முனை, போஸ் புக் ஸ்டாலில் இருக்கும் காயின் பாக்ஸ் டெலிபோனில் இருந்து பேசினார். ``ரங்கா! எப்பிடிப்பா இருக்கே? எனக்குப் பஞ்சு மில் வேலை போனதிலிருந்து, நீ அனுப்பும் ரூபாயிலிருந்துதான் இந்தப் பெரிய குடும்பம் ரெண்டு வேளைக் கஞ்சியாவது ...
மேலும் கதையை படிக்க...
இடி இடித்தது; காற்று சுழன்றடித்தது; ஈரமண்ணின் வாசனை..இதோ, சற்று நேரத்தில் மழைவரப் போகிறது... அட, வந்தேவிட்டது!. விண்ணிலிருந்து சடசடவென்று இறங்கிய மழை நீர் பூமியை நனைக்கஆரம்பித்தது. சின்னப்பையன் ஓடிவந்து மூச்சிரைக்க நின்றான். அண்ணே!அண்ணே! ``என்னடா சின்னு, என்ன ஆச்சு?'' காபி பார் அருள் கேட்டான். ``அண்ணே!அம்மினியக்காகிட்டே பாபுப் ...
மேலும் கதையை படிக்க...
என் வீடு இருக்கும் தெருவுக்கு அடுத்த தெருவில் ஓரமாக இருந்தது அந்த மரம்! என் அலுவலக நண்பர் விக்ரம் தினம் காரில் அந்த வழியாக வருவார். ஓசி லிஃப்ட் தருவார். அவருக்காக மர நிழலில் காத்திருந்தபோது, செருப்பு தைக்கும் தொழிலாளி எதிர்ச்சாரி டீக்கடையிலிருந்து ...
மேலும் கதையை படிக்க...
சட்டிகள், பானைகள், கரி பிடித்து ஒடுக்கு விழுந்திருந்த பெரிதும் சிறிதுமான அலுமினியப் பாத்திரங்கள் சகிதம் தாமரைப் பாளையம் மற்றும் அக்கம் பக்கத்து ஊர்க்கோடி வளவுகளில் இருந்து நண்டும் குஞ்சுகளுமாகக் குடும்பங்கள் மலைக் கன்னியாத்தா கோயிலை நோக்கி நடக்கத் தொடங்கி விட்டன. ``வவுத்துப் புள்ளக்காரி, ...
மேலும் கதையை படிக்க...
அம்மா கேன்சரில் போனபிறகு என் நலன் பற்றி வீட்டில் யாருக்கும் அக்கறை கிடையாது. பதிலாக, என்னிடமிருந்து எல்லா உதவிகளையும் எதிர் பார்க்கிறார்கள். நீங்கள் வேலைபார்க்கும் ஆரம்ப சுகாதார நிலையம் இருக்கும் கிராமத்துக்கு வர விரும்புகிறேன். உங்கள் காலடியில் விழுந்து கதற வேண்டும்போல் ...
மேலும் கதையை படிக்க...
அதிர்ஷ்டம் என்பது சில அடிகள் வித்தியாசத்தில்தான் தவறி விடுகிறது.. அல்லது கிடைத்து விடுகிறது. அழகேசனால் நம்பவே முடியவில்லை. உண்மைதானா? உண்மைதானா? கண்ணில் படுகிற ஒவ்வொருவரையும் வலுவில் அழைத்து, அதுபற்றிக் கூற வேண்டுமெனற பெருமிதத்துடன் கூடிய ஆவல், பரபரப்பு, மகிழ்வுத் துடிப்பு..! தமிழில் வெளிவரும் ...
மேலும் கதையை படிக்க...
அந்த விரைவுப் பேருந்து கோயமுத்தூரிலிருந்து கிளம்பிக் காங்கயத்தில் டிபனுக்கு நின்று மீண்டும் கிளம்பியபோது எனக்கு முந்திய ஆசனத்திலிருந்த நபர் எழுந்து, சன்னல் வழியே பார்வை எட்டுமட்டும் கழுத்தை வளைத்து யாரையோ தேடினார். ``இந்தாப்பா கண்டக்டர், கொஞ்சம் வெயிட் பண்ணு! எனக்குப் பக்கத்து சீட்காரர் ...
மேலும் கதையை படிக்க...
``நீட்டு கையை!'' பாலா பயந்தபடி கையை நீட்ட, படீரென்று பிரம்பால் ஒரு அடி. இடது கையை நீட்டச் சொல்லி இன்னொரு அடி. பாலாவின் கண்களில் மளுக்கென்று நீர் கோர்த்துக் கொள்ள, தான் ஏன் இப்படி நடந்து கொள்கிறோம் என்று தன் மீதே ஆத்திரம் எழுந்தது ...
மேலும் கதையை படிக்க...
வளைவு வளைவாகச் சில கோடுகள்; மேலே வைணவர்கள் நெற்றியில் கானப்படும் பட்டை நாமம். இப்படி ஒரு ஓவியம். சுமார் பத்துப் பேர் ஓவியத்தின் முன் நின்று ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள். ஒருவர் ``ஹா!''என்றார்; இன்னொருவர், ``அடடா!'' என்று பிரமித்த பாவனையில் முகத்தில் வியப்பு ...
மேலும் கதையை படிக்க...
படிச்சவன் பார்த்த பார்வை
தேவைகள்
தேவை, ஒரு உதவி!
ஒரு நாள்… மறு நாள்!
விருந்து
நான் இன்னும் குழந்தையாம்…
சத்தியங்கள் ஊசலாடுகின்றன…
மனிதன் என்பவன்…
நெஞ்சில் ஒரு முள்
மனிதனும் ஒரு மாடர்ன் ஆர்ட்தான்!

பழையன கழிதலும்… மீது ஒரு கருத்து

  1. Narayanan Thandavarayan says:

    பழையன கழிதலும் புதியன புகுதலும் இன்றைக்கு அரசு அலுவலகங்களில் மட்டுமில்லை, அரசியலிலும் சக்கைபோடு போடுகிறதைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.நிதர்சனத்தை வெளிப்படுத்தும் சிறப்பான கதை. ஆசிரியருக்கு ஒரு ஷொட்டு.
    செய்யாறு தி.தா.நாராயணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)