பரதனும் பாதுகையும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: January 11, 2022
பார்வையிட்டோர்: 8,231 
 

(1964ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

வாசகர்களுக்கு

இருபத்தைந்து ஆண்டுகளுக்குமுன் நான் எழுத் துலகில் ஈடுபட்ட காலத்தில் எழுதிய கதைகள் சில மெளனப் பிள்ளையார் என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிடப்பட்டது. இப்போது அதையே திரு.கோபுலுவின் அற்புதமான சித்திரங்களுடன் இரண்டாம் பதிப்பாக மங்கள நூலகத்தார் கொண்டு வந்துள்ளார்கள். திரு. கோபுலுவுக்கும் மங்கள நூலகத்தாருக்கும் என் நன்றி. இந்தப் புத்தகத்தில் அடங்கியுள்ள கதைகளைச் சமீபத்தில் ஒரு முறை படித்துப் பார்த்தேன். சில இடங்களில் இவ்வளவு நன்றாக எழுதியிருக்கிறோமே ? என்றும், சில இடங்களில் இந்தக் கதையை இப்போது எழுதியிருந்தால் இன்னும் நன்றாக எழுதியிருக்கலாம் என்றும் தோன்றியது. இப்புத்தகம் முதன் முறை வெளியானபோது இதைப் படித்த ரசிகமணி டி. கே. சி. அவர்கள் என் எழுத்துத் திறமையைப் பாராட்டி மிக அருமையான கடிதம் ஒன்று எழுதியிருந்தார்கள். எதிர் காலத்தில் நான் ஒரு சிறந்த நகைச்சுவை ஆசிரியராக விளங்குவேன் என்றும் அந்தக் கடிதத்தில் அவர்கள் என்னே வாழ்த்தியிருந்தார்கள். இச்சமயம் அவரை நினைவு கூர்ந்து அஞ்சவி செலுத்துகிறேன்.
மயிலாப்பூர்
சாவி
14-4-1964

பரதனும் பாதுகையும்

ஸ்ரீ ராமருடைய பாத தூளிபட்ட மாத்திரத்தில், கல்லர்கச் சபிக்கப்பட்டுக் கிடந்த அகல்யை சாப விமோசனம் பெற்றுப் பழைய சொரூபத்துடன் உயிர் பெற்றெழுந்தாளாம்.

ராமருடைய பாத தூளிக்கு அத்தனை மகிமை. இந்தக் காலத்தில் அப்பேர்ப்பட்ட மகா புருஷனைக் காண்பதரிது.

கல்மேல் பாத தூளி பட்ட மாத்திரத்தில் கல்லுக்கு உயிர் வரும் காலமல்ல இது. வேண்டுமானால் கல்லில் கால் தடுக்கிக் கீழே விழுந்து உயிர் போகலாம். அவ்வளவுதான்!

orr-5596_Bharathanum-Padhukaiyum_0001-picஅவ்வளவு மகிமை வாய்ந்த ஸ்ரீராமருடைய பாதத்தைக் காத்து ரட்சித்த ஒரு ஜோடிப் பாதரட்சையும் உண்டு.

பாதரட்சை என்பதாக ஒரு ஜோடி வஸ்து இருக்கிறதே! அந்த வஸ்துவை நான் வெகு நாள்வரை லட்சியம் செய்யாம லிருந்தேன். இயற்கையோடு கலந்த வாழ்க்கையை நடத்த வேண்டும் என்ற கட்சியைச் சேர்ந்தவன் நான்.

வெகு நாள்வரை நான் குடை, செருப்பு இந்த இரண்டு வஸ்துக்களையும் உபயோகிக்காமல் தான் இருந்தேன். கொஞ்ச நாட்களுக்கெல்லாம் குடை இரவல் கொடுக்கும் நண்பர்கள் இரவல் கொடுப்பதற்கு மறுக்க ஆரம்பித்துவிட்டதால் சென்ற வருஷம் துணிந்து ஒரு குடை வாங்கிவிட்டேன்.

ஆனால் பாதரட்சை விஷயத்தில் நான் காத்துக்கொண்டிருக்கவில்லை. ‘அகல்யா சாப விமோசனம்’ கதையைக் காலஞ்சென்ற மாங்குடி சிதம்பர பாகவதர் காலக்ஷேபத் தொடர்ச்சியில் கேட்ட மறுதினமே ஒரு ஜோடி செருப்பு வாங்கிவிட்டேன்.

அகல்யையினுடைய சாப விமோசனம் ஏற்படும்போது ஸ்ரீராமருடைய காலில் பாதரட்சை இருந்ததா இல்லையா என்று எனக்கு நிச்சயமாய்த் தெரியாது.

‘பாத தூளி பட்டு’ என்று சொல்லுவதால் அநேகமாய்ப் பாத தூளியாய்த்தானிருக்கவேண்டும். பாதரட்சையின் தூளியாக இருக்க நியாயமில்லை.

எனவே, எங்காவது தப்பித் தவறி என்னுடைய பாத தூளி ஏதாவது ஒரு கல்லின் மேல் பட்டு, அந்தக் கல் உடனே ஸ்திரி ரூபம் பெற்று…ஐயோ ! அப்படிப்பட்ட ஆபத்து நமக்கு நேரிடக் கூடாது என்று தோன்றியதால் பாகவதர் காலட் சேபம் கேட்ட மறுதினமே பாதரட்சையை வாங்கிவிட்டேன்,

அன்று முதல் நான் வெளிக் கிளம்புவதா யிருந்தால் பாத ரட்சையின்றிப் புறப்படுவதே கிடையாது.

என் மனைவி நேற்றைய முன் தினம் என்னிடம் ஒரு சந்தேக நிவர்த்தி செய்து கொண்டாள்.

“ஆமாம்; நீங்கள் செருப்பு வாங்கி வருஷம் எட்டாகிறது. ஆனால் அது அப்படியே புத்தம் புதிசாக இருக்கே, ஏன் அப்படி?” என்று கேட்டாள்.

எட்டு வருஷ காலத்திற்குள் நான் எத்தனை டீ பார்ட்டிகள். எத்தனை கலியாணங்கள், எத்தனை பாட்டுக் கச்சேரிகள் சென்றிருக்கிறேன் என்பது அவளுக்குத் தெரியாது.

“ஆமாம்; கலியாணத்திற்கும் கச்சேரிக்கும் போனால் செருப்பு புதிசாயிருக்குமா என்ன?” என்று கேட்டாள்.

ஒவ்வொரு கச்சேரிகளிலும், ஒவ்வொரு கலியாணத்திலும் – நான் என்னுடைய செருப்பை மறந்து வைத்துவிட்டு வேறு செருப்பு வாங்கிக்கொண்டு வருவதை அவளுக்கு ஸ்பஷ்டமாகச் சொன்ன பிறகுதான் தெரிந்தது. குடை விஷயமும் அப்படியே என்பதை நேயர்களுக்கு ரகசியமாகச் சொல்லி வைக்கிறேன்.

எத்தனையோ நண்பர்கள் செருப்பு குடை முதலிய வைகளை வாங்கிய மறுநாளே போகிற இடத்தில் மறந்து வைத்துவிட்டு வருவதும் எனக்குத் தெரியும். அவர்களெல் லாம் என் கட்சியைச் சேர்ந்தவர்கள். இருக்கட்டும்; ஆரம்பித்த கதைக்கு வருவோம்.

ஸ்ரீ ராமருடைய பாதரட்சையைப் பற்றி ஒரு கதை உண்டு. ரொம்பவும் சுவாரசியமானது.

ஸ்ரீராமர் பதினாலு வருஷம் வனவாசம் செய்வதற்காகக் காட்டுக்குச் சென்றாரல்லவா? அப்போது பரதன் அயோத்தியில் இல்லை. திரும்பி வந்து கைகேயியிடம், “அம்மா, என் அண்ணன் எங்கே?” என்று கேட்டான்.

கைகேயி நடந்த விஷயத்தைச் சொல்லி, “பரதா, நீதான் இனி ராஜ்யத்தை ஆளவேண்டும்” என்றாள்.

உடனே பரதன் அண்ணன் ராமனைத் தேடிக்கொண்டு, காட்டை நோக்கி விரைந்தான். ஸ்ரீராமனை அயோத்திக்கு அழைத்து வந்து மகுடாபிஷேகம் செய்து வைக்க வேண்டுமென்று? ஒரு நாளுமில்லை.

அயோத்தி பரதனுடைய நாடாகி விட்டது. இனி ராமனைப்பற்றி என்ன கவலை?

ஸ்ரீராமர் காட்டுக்குப் போகும்போது, தன் காலிலே பாதரட்சையை அணிந்து கொண்டு போய்விட்டார். அந்தப் பாதரட்சை வெறும் மரத்தினால் செய்யப்பட்டதா? அல்லது சப்பாத்திக் கட்டையா?

பத்தரை மாற்றுத் தங்கத்தினால் செய்யப்பட்ட பாதுகை அது. அந்தத் தங்கப் பாதுகை அயோத்திக்குச் சொந்தம். அயோத்திமா நகரம் பரதனுடையது. பார்த்தான் பரதன். தன்னுடைய அயோத்தியிலிருந்து போன அந்தப் பொன் பாதுகையை ராமனிடமிருந்து தந்திரமாக அடித்துக்கொண்டு வந்துவிட வேண்டும். பிறகு ராமன் எக்கேடு கெட்டால் என்ன?

பரதன் இதற்கு ஓர் உபாயம் செய்தான். ராமரைப் போய், “அண்ணா! தாங்கள் அவசியம் அயோத்திக்குத் திரும்பி வந்து ராஜ்ய பாரம் ஏற்க வேண்டும்” என்றான்.

ராமர் கண்டிப்பாய் முடியாது என்று தலையசைத்து விட்டார். பரதன் ஒரு பாட்டுக்கூடப் பாடிப் பார்த்தான். ராமர் பதில் பாட்டுப்பாடி “வர முடியாது” என்று சொல்லி விட்டார்.

பரதன், “அண்ணா” என்றான்.

ராமர், “தம்பி” என்றார்.

“வர முடியாதா?”

“முடியாது!”

பரதன் ஒரு சொட்டுக் கண்ணீர் விட்டான். இராமர் இரண்டு துளி நீர் வடித்தார்.

பரதன், “அண்ணா, அயோத்திக்குத்தான் வரமாட்டேன் என்று சொல்லிவிட்டீர்கள், தங்கள் பாதுகையையாவது கொடுங்கள், அதைக் கொண்டுபோய்ப் பட்டாபிஷேகம் செய்து நாட்டை ஆள்கிறேன்” என்றான். பரதனுடைய பேச்சில் மயங்கிப்போன ராமர் ஏமாந்து போய் விட்டார். பாதுகையைப் பரதனிடம் கொடுத்துவிட்டார்.

பரதன் அதை வாங்கிக்கொண்டு அளவில்லாத ஆனந்தம் கொண்டான். கண்ணிலே ஒத்திக்கொண்டான். தலைமேல் தூக்கி வைத்துக்கொண்டு கூத்தாடினான். பொற்பாதுகை கிடைத்துவிட்டதே என்ற சந்தோஷத்தினால்! பொற் பாதுகையை அடித்துக்கொண்டே வந்துவிட்டான் கடைசியாக!

– மௌனப் பிள்ளையார், இரண்டாம் பதிப்பு: ஏப்ரல், 1964, மங்கள நூலகம், சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *