நீங்க தான் ஜட்ஜ் !

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: February 3, 2012
பார்வையிட்டோர்: 7,496 
 

அடித்துப் பிடித்து வந்து, அந்தக் கடிதத்தைத் தன் கணவன் ராஜுவிடம் காண்பித்தாள் ரேவதி …

உலகமே வியக்கும் தொலைக்காட்சியில் இருந்து, உலகமே பார்க்கும் ஒரு நிகழ்ச்சிக்கு, சிறப்பு விருந்தினராக வருமாறு எழுதியிருந்தார்கள் அக்கடிதத்தில்.

“ஏங்க, எத்தனை நாள் அவரு வர்றாரு, இவரு வர்றாரு, நம்மள ஒரு பய கூப்பிட மாட்டேங்கிறான்னு பொலம்பனீங்க ! அந்த ஆத்தா கண்ணத் தொறந்துட்டா …” என்று கன்னத்திலும் போட்டுக் கொண்டாள் ரேவதி.

என்னது ஒரு கெஸ்ட் அப்பியரன்ஸுக்கே இந்த அலப்பரையானு பாக்காதீங்க, ப்ளீஸ் கோ அஹெட்…. 🙂

***

“சார், நீங்க ஒரு ரெண்டு மூணு படத்தில, நாலஞ்சு ஷாட்ல வந்திருக்கீங்க. உத்து கவனிச்சா தெரியும், அது நீங்க தான்னு. எல்லோரும் கரெக்டா சொல்லிடுவாங்க !!! அந்த‌ அனுப‌வ‌ம் போதும் இந்த‌ நிக‌ழ்ச்சிக்கு வ‌ர்ற‌துக்கு” என்றார் நிகழ்ச்சியின் த‌யாரிப்பாள‌ர் ச‌பாப‌தி.

“ஆமாமா, உங்க நிகழ்ச்சி கூட தான் தமிழ்நாடே பாக்குது. சோறு தண்ணி இல்லாம (போட்டா தானே !) பாக்குற நிகழ்ச்சினா அது இது ஒன்னு தான். இப்ப‌டிப்ப‌ட்ட‌ நிக‌ழ்ச்சிக்கு என்னை அழைத்த‌தில் ரொம்ப‌ பெருமையா இருக்கு !” என்றான் ராஜு.

அந்த நேரம் பார்த்து, சபாபதியின் உதவியாளர் மைக்கேல் வந்து, “சார், ஒரு முக்கியமான விஷயம்” என்று சபாபதியின் காதுகளில் கிசுகிசுத்தான்.

“கொஞ்சம் இருங்க ராஜு… இதோ வர்றேன்” என்று எழுந்து சென்றார் சபாபதி.

“அப்ப‌டி என்னைய்யா த‌ல‌ போற‌ அவ‌ச‌ர‌ம்…” என்று இழுத்தார் ச‌பாப‌தி.

“த‌ல போற‌து தான் சார் அவசரமே ! ந‌ம்ம ‘மாமா மாமி’ நிக‌ழ்ச்சிக்கு ரெண்டு ஜ‌ட்ஜ்ல ஒருத்த‌ர் திடீர்னு வ‌ர‌முடியாதுனு ப்ர‌ச்ச‌னை ப‌ன்றாரு. இன்னும் நாலு எப்பிசோட் பென்டிங் இருக்கு. அது வேணும், இது வேணும்னு ஒரே அடாவ‌டி ப‌ண்றார் சார். உங்க கிட்ட பேசணுமாம்” என்று, உள்ளங்கையில் அழுத்திப் பொத்திய‌ ரீசீவ‌ரை ரிலீஸ் செய்து, சபாபதியிடம் நீட்டினான் மைக்கேல்.

‘மொத‌ல்ல‌ ஜ‌ட்ஜ‌ மாத்த‌ற‌னோ இல்லியோ, இவன மாத்தணும் !’ என்று நினைத்து, ரிசீவரைத் திரும்பவும் அடைக்குமாறு சைகையில் தெரிவித்தார்.

“ஏய்யா, நான் வீட்டுல இருக்கேனு சொன்னியா ? சரியான …. சரி, சரி, அவசர வேலையா இப்ப தான் கெளம்பினாரு, வர ரெண்டு மணி நேரம் ஆகும். அப்புறம் பேசுங்கனு சொல்லித் தொலை”.

“சார், நான் மறக்கறதுக்கு முன்னே சொல்லிடறேன். இதே போல ‘போடா போடி’ நிகழ்ச்சியிலயும் ஜட்ஜ் ப்ரச்சனை சார்” என்றான் மைக்கேல்.’சரியான நேரங்காலம் தெரியாதவன் !’ என்று திட்டி “சரி அப்புறம் பேசறேன்” என்று ராஜுவிடம் வந்தார் சபாபதி.

பணிவாய் அமர்ந்திருந்தான் ராஜு. பார்த்த கணமே யோசனையிலும் ஆழ்ந்தார் சபாபதி.

“ராஜு, நீங்க ‘அமெரிக்கன் ஐடல்’ ப்ரோக்ராம் பாத்திருக்கீங்களா ?”

“பார்த்திருக்கேன் சார். உலகமே பார்த்த ப்ரோக்ராம் ஆச்சே. நான் பார்க்காமல் இருப்பேனா ?!” என்றான் ராஜு.

“நல்லதா போச்சு. அதுல ஜட்ஜ் சைமன் பத்தி என்ன நினைக்கறீங்க ?”

“அத்த‌னை போட்டியாள‌ர்க‌ளுடைய‌ வெறுப்பையும், பார்வையாள‌ர்க‌ள் வெறுப்பையும் சேர்த்து ச‌ம்பாதித்தவ‌ர் சார்” என்றான்.

“ஆனா, உல‌க‌மே அவ‌ர‌ப் ப‌த்தியும், அந்த‌ நிக‌ழ்ச்சி ப‌த்தியும் பேசுது. இது எவ்வ‌ள‌வு பெரிய‌ ச‌ம்பாத்திய‌ம் ந‌ம்மைப் போன்றோருக்கு !” என்றார் ச‌பாப‌தி.

“சார், நீங்க‌ என்ன‌ சொல்ல‌ வ‌ர்றீங்க‌னு புரிஞ்ச‌ மாதிரியும் இருக்கு, புரியாத‌ மாதிரியும் இருக்கு !”

“அதே தான் ராஜு. ‘மாமா மாமி’ நிக‌ழ்ச்சிக்கு அடுத்த‌ ஜ‌ட்ஜ் நீங்க‌ தான் ! ‘டி.வி.ஜட்ஜ் இன்டென்ஸிவ் ட்ரெய்னிங்’ ஒரு ரெண்டு நாள் எடுத்துக்க‌ங்க‌. ட்ரெய்னிங் என்றவுடன் பயந்துறாதீங்க. ரொம்ப சிம்பிள். சைமனோட அனுகுமுறை, சினிமாவில் நீங்க பட்ட அவமானங்கள், உங்கள் நண்பர்களின் வளர்ச்சி, உங்களது இயலாமை, இது போல இன்னும் பல‌ தான் உங்க ட்ரெயினிங். இதை நினைவில் வைத்து போட்டியாளர்களை போட்டுத் தாக்குங்க…. மைக்கேல் இங்க‌ வா, அந்த‌ கான்ட்ராக்ட் பேப்ப‌ர்ஸ் எடுத்து வ‌ந்து சார் கிட்ட‌ கையெழுத்து வாங்கிக்கோ.” என்றுவிட்டு அடுத்த‌ நிக‌ழ்ச்சியின் ஜ‌ட்ஜ் வேட்டைக்கு ஆய‌த்த‌மானார் ச‌பாப‌தி !

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *