நம்பிக்கை

 

அந்த அறையின் கால்வாசி அளவுக்கு ஆக்ரமித்திருந்த பெரிய டேபிளின் அந்தப்புறம் டாக்டர் சடகோபன் அமர்ந்திருந்தார். வெளிர் நீல நிற டி ஷர்ட் அணிந்திருந்தார். 40+ வயது இருக்கக்கூடும். வலது கையில் ஒரு வாட்ச். கழுத்திலோ, கையிலோ ஆபரணங்கள் ஏதும் இருக்கவில்லை. நிமிடத்திற்கொரு முறை மூக்கைச் சுருக்கி சுவாசித்துக் கொண்டிருந்தார். அது அவரது மேனரிசமாக இருக்க வேண்டும்.

அவரது டேபிளின் இடதுபுறமிருந்த வித்தியாசமான கடிகாரத்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் அஷோக். குளிரூட்டப்பட்ட அந்த அறையின் அமைதியில் அதன் டிக்-டிக் துல்லியமாகக் கேட்டது.

“ஸோ.. நீங்க சொல்ல வர்றது யாரும் உங்களை நம்ப மாட்டீங்கறாங்க. இல்லையா?”

“எஸ் டாக்டர்” என்ற அஷோக் ஜீன்ஸிற்குள் தனது ஆலன் சோலியை செலுத்தியிருந்தான். 25 வயது. பிரபல மென்பொருள் நிறுவனத்தில் சாஃப்ட்வேர் டெவலப்பராக பணிபுரியும் திறமையான இளைஞன். ஒரே அக்காவுக்கு திருமணமாகிவிட்டது. அம்மா ஹவுஸ் வைஃப். அப்பா வங்கி அதிகாரி.

”எப்போலேர்ந்து உங்களுக்கு இப்படி தோண ஆரம்பிச்சது?”

“ஒரு பத்து பதினஞ்சு நாளாவே இப்படித்தான் டாக்டர்”

“சரி.. இப்ப நான் சில கேள்விகள் கேட்கறேன். பதில் சொல்லுங்க”

அஷோக் டாக்டரை நேருக்கு நேராய்ப் பார்த்து ‘கேன் ஐ ஹாவ் சம் வாட்டர்?” எனக் கேட்டான். டாக்டர் அவர் டேபிள் பக்கவாட்டில் இருந்த காலி டம்ளரை நிமிர்த்தி, அருகிலிருந்த தண்ணீர் பாட்டிலிலிருந்து நீரை நிரப்பி அவனிடம் நீட்டினார்.

வாங்கிக் குடித்ததும் ‘கேளுங்க டாக்டர்’ என்றான்.

“எங்க வேலை செய்யறீங்க?”

சொன்னான்.

“உங்க பிறந்த தேதி என்ன?”

சொன்னான்.

“பிறந்த கிழமை?”

தாமதிக்காமல் உடனே சொன்னான்.

“உங்க அப்பா அம்மா திருமண நாள் ஞாபகமிருக்கா”

சொன்னான்.

“உங்க அக்கா திருமண நாள்?”

சொன்னான்.

“வெரிகுட். ஞாபக சக்தியெல்லாம் நல்லாவே இருக்கு. நீங்க நார்மலா இருக்கீங்க.. என்ற டாக்டர் தொடர்ந்தார்: “எந்த விஷயத்துல – யார் – உங்கள நம்பமாட்டீங்கறாங்கன்னு நீங்க ஃபீல் பண்றீங்க அஷோக்?”

“எந்த விஷயத்துலயும் யாரும் என்னை நம்பமாட்டீங்கறாங்க டாக்டர்”

“ஏதாவது உதாரணம் சொல்ல முடியுமா?”

அஷோக் ஏதோ ஒரு மூலையை சில நிமிடங்களுக்கு வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். டாக்டர் அமைதியாக அவனையே பார்த்தவாறு இருந்தார். இரண்டு மூன்று நிமிடங்களுக்குப் பிறகு தொண்டையைக் கனைத்துக் கொண்டு சொன்னான்.

“என் மேனேஜர் எனக்கு ஒரு டாஸ்க் கொடுத்திருந்தார் ரெண்டு வாரம் முந்தி. ஆக்சுவலா அதை முடிக்க பத்து நாளாகும். ஒரு வாரத்துல முடிச்சுத் தரணும். க்ளையண்ட் அவசரப்படுத்தறாருன்னு சொன்னார். ஒரு வேகத்துல நான் சின்சியரா இருந்து அஞ்சே நாள்ல அதை முடிச்சுக் குடுத்தேன்”

“குட்.. இதுல என்ன.. “டாக்டர் எதோ கேட்க முயல அஷோக் தொடர்ந்தான்.

“நான் அவ்ளோ சீக்கிரம் முடிச்சத அவர் நம்பலை. வேறொரு டீம் லீட்கிட்ட அதை குடுத்து வெரிஃபை பண்ணீட்டு அப்பறம்தான் க்ளையண்ட்கிட்ட சப்மிட் பண்ணினார்”

“இட்ஸ் ஓகே அஷோக். உங்க ஃபீல்ட்ல இது நார்மல்தானே?”

“இல்ல டாக்டர். அது என் திறமையை சந்தேகப்படறமாதிரி. அதுவும் அந்த டீம் லீட் எனக்கு அல்மோஸ்ட் எனிமி மாதிரி. அவன்கிட்ட குடுத்து… ச்சே.. ஐ காண்ட் டாலரேட் இட் டாக்டர்”

அவன் முகம் மாறியது. டாக்டர் அவனை வேறெதுவும் கேட்காமல் கொஞ்ச நேரம் அமைதி காத்தார். அவன் அமைதியான பிறகு கேட்டார்.

“மிஸ்டர் அஷோக்.. அலுவலக சூழல்ல இது மாதிரி நடக்கறது சகஜம். வீட்லயும் உங்களை நம்பலைன்னு ஃபீல் பண்றதா சொன்னீங்களே..”

“யெஸ் டாக்டர். எங்க அக்காவுக்கு கல்யாணமாகி, ஒரு சில குடும்பப் பிரச்சினைகள்ல இருக்கா. மாமா ரொம்ப நல்லவரு. எனக்குத் தெரியும். அக்காவோட சில பிடிவாதங்களால அவங்களுக்குள்ள ஆறேழு மாசமாவே சண்டை வருது. சமீப காலமா இந்த விஷயத்தைப் பத்தி பேசறப்ப என்கிட்ட கலந்துக்கறதில்லை. உதாசீனப்படுத்தறாங்க. நான் சின்னவன், என்னோட கருத்து சரிப்படாதுன்னு அவங்க ஃபீல் பண்றாங்க. நான் எது சொன்னாலும் நம்பறதில்லை. அதும் என்னை ரொம்ப பாதிக்குது டாக்டர்”

“சரி.. உங்க பொழுதுபோக்கு என்ன? ஃப்ரண்ட்ஸ், கேம்ஸ்..”

“நான் ஆஃபீஸ்ல டெய்லி ஈவ்னிங் கேரம் விளையாடுவேன் டாக்டர்”

“குட்..”

“நானும் என் கொலீக் கேசவ்-வும் எப்பவும் ஜோடியா ஆடுவோம். ஒரு வாரமாவே நாங்க ஜெயிக்கல. நேத்து அவன் ’நீ வேணும்னுட்டு மோசமா ஆடறடா.. எதிர் டீமுக்கு விட்டுக் குடுக்கற’ன்னு பேசறான்”

”ஆக.. அவனும் உங்களை நம்பலைங்கறீங்க..”

“ஆமா டாக்டர்..”

டாக்டர் சிறிது நேரம் அவனை வேறு சில கேள்விகள் கேட்டார். அவனுக்கு சில மாத்திரைகள் பரிந்துரை செய்தார்.

“உங்களுக்கு ஒரு பிரச்சினையும் இல்லை. அடுத்தவங்க உங்களை நம்பறாங்களா இல்லையான்னு பார்க்காம உங்க வேலைகளை நீங்க செஞ்சுட்டே இருங்க.. தட்ஸ் ஆல். ஒரு விதமான டிப்ரஷன்தான். கொஞ்சம் டேப்லட்ஸ் குடுத்திருக்கேன். ஒரு வீக் எண்ட் ஃப்ரெண்ட்ஸ் கூட டூர் போய்ட்டு வாங்க. மைண்ட் சேஞ்ச் ஆகிடும். ஆல் த பெஸ்ட்”

அஷோக் ப்ரிஸ்க்ரிப்ஷனை வாங்கிக் கொண்டு எழுந்தான். அறையை விட்டு வெளியே வந்தான். அந்த பில்டிங்கை விட்டு வெளியே வந்து பைக்கை எடுத்துக் கொண்டு கொஞ்ச தூரம் மெதுவாக ஓட்டினான். இடப்புறமும் வலப்புறமும் எதையோ தேடிக் கொண்டே வந்தான். நூறு அடிகள் கடந்தவன், ஒரு மெடிகல் ஷாப்பின் முன்புறம் பைக்கை நிறுத்தினான்.

மெடிகல் ஷாப்பில் இருந்த இளைஞன் ஒருவரிடம் கேட்டான்:

“சார்.. இந்த ஏரியால நல்ல சைக்காட்ரிஸ்ட் யார் இருக்காங்க. டாக்டர் சடகோபன் வேணாம்.. வேற யாராவது?”

- ஜனவரி 10th, 2012 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)