நண்பேண்டா!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: February 14, 2013
பார்வையிட்டோர்: 13,662 
 

இல்லை என்பவன்
வாழத்தெரிந்தவன்
காலம் அப்படி!
– கலியுகன்நண்பேண்டா

காலிங்பெல் இரண்டாவது முறை அடிக்கவும், மனோகர் கதவைத் திறக்கவும் சரியாக இருந்தது.. எதிரில் அவனது கல்லூரி நண்பன் வேலு. ஒடுங்கிய கன்னங்களில், சவரம் பார்க்காத சில நாள் தாடியில் ‘கஷ்டம் டா’ என்று சொல்லாமல் சொல்லி நின்று கொண்டிருந்தான்.

“டேய் வேலு.. எங்கடா இங்க? உள்ள வா..” மனோகர் நிஜமான உற்சாகத்துடன் அழைத்தான்.

“உன் அட்ரஸ் குரு கொடுத்தான், நம்பரும் கொடுத்தான், நான் அடிக்கலை!”
“எப்படிரா இருக்க? ஊர்ல எல்லாரும் செளக்யமா?”

“நல்லா இருக்காங்கடா…சென்னை வந்து ரெண்டு மாசம் ஆகுதுடா… வேலை கிடைக்காம அலைஞ்சுட்டு இருக்கேன். ” விரக்தியுடன் சொன்ன வேலுவிடம்,

“அட… ரெண்டு மாசத்துல வேலை வாங்கிடலாம்னு யார் சொன்னா? வெயிட் பண்ணுடா… அரியர்ஸ் கிளியர் பண்ணிட்டியா?”

பி.இ. கம்ப்யூட்டர் சைன்ஸில் சில பேப்பர்களில் அவனுக்கு அரியர்ஸ் இருந்தது. கேம்பஸ் இண்டர்வியூவில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் மனோகர் சேர்ந்த போது இவன் மாங்கு மாங்கென்று படித்து கொண்டிருந்தான். ஒரு வழியாக முடித்துவிட்டு ஆறு மாதம் கழித்து வேலை தேடி சென்னை வந்திருக்கிறான்.

“கைல காசு இல்லடா… வீட்ல இதுக்கு மேல கேக்க முடியாது. ரூம் வாடகை, சாப்பாடு, பஸ்… எல்லாம் ரொம்ப கஷ்டமா இருக்கு. முழு சாப்பாடு மறந்து போச்சு” என்ற போது வேலு கண்களில் பசி இருந்தது.
“கவலைப் படாதேடா… இன்னிக்கு மத்தியானம் என் கூட சரவண பவன் வர்றியா…?” என்ற மனோகரிடம்,

“சண்டே அதுவுமா உன்னை டிஸ்டர்ப் பண்ணிட்டேனா?” என்றான் வேலு.
“நோ..சில்லி பாய்! கொஞ்ச நேரம் டி.வி பார்த்துட்டு இரு! குளிச்சுட்டு வர்றேன். ” – டி.வி ரிமோட்டை அவனிடம் கொடுத்துவிட்டு குளிக்கச் சென்றான் மனோகர்.

டி.வி, கம்ப்யூட்டர், மெத்தை, நாற்காலி, நாலைந்து ஷூக்கள், விதம் விதமான ஜீன்ஸ் டி. சர்ட்கள் இவற்றிலிருந்து மனோகரின் சம்பளத்தை அனுமானித்துக் கொண்டிருந்தான் வேலு.

மனோகர் கிளம்பியவுடன் இருவரும் பைக்கில் சரவண பவன் சென்றனர். வேலு ஒரே வேளையில் மூன்று நாளைக்கு சாப்பிடுபவன் போல் நெடுநாள் காய்ந்தப் பாட்டைத் தணித்துக் கொண்டான்.

“தேங்க்ஸ் டா மச்சான்!” என்றான் வேலு அடி வயிற்றிலிருந்து.

“உன் பயோ டேட்டா கொடு என் கம்பெனில கொடுத்துப் பார்க்கிறேன்” – என்றான் மனோகர்.

“தர்றேன்டா … அப்புறம்…”- வேலு தயங்க… அதைப் புரிந்து கொண்டு,
“சொல்லுடா மச்சி… பணம் எதுவும்?” என்ற மனோகரின் கையைப் பிடித்து…
“மாப்ளே.. நீ கிரேட் டா.. ஒரு பத்தாயிரம் கடனா கொடுத்தா.. ரெண்டு மாசம் சிரமமில்லாம ஓட்டுவேன். அதுக்குள்ள கண்டிப்பா ஒரு வேலை வாங்கிடுவேன். எனக்கு நம்பிக்கை இருக்கு. கண்டிப்பா ரெண்டு மாசத்துல திருப்பிக் கொடுத்துடுவேன். சத்தியம்!”

“உன் மேல எனக்கும் நம்பிக்கை இருக்குடா..! இரு வர்றேன்!”- மனோகர் பக்கத்து ஏ.டி.எம்மிலிருந்து இருபது ஐநூறு ரூபாய் தாள்களைக் கொண்டு வந்து அவன் பாக்கெட்டில் திணித்தான்.

வேலுவிற்கு உண்மையில் நம்ப முடியவில்லை. இவ்வளவு சீக்கரம் அவன் இதை எதிர்பார்க்கவில்லை. மிகுந்த பிரயத்தனமும், நெடுநேர கெஞ்சலும் தேவைப்படும் என்றே நினைத்தான்.

“பார்த்து செலவு பண்ணு. அடிக்கடி கால் பண்ணு. உன் நம்பர் கொடு.” -செல் நம்பர் வாங்கிக் கொண்டு அவனை திருவல்லிக்கேணி பஸ்ஸில் ஏற்றிவிட்டான்.

அதன் பிறகு வேலு ஒரு மாதம் வரை அடிக்கடிப் பேசிக் கொண்டிருந்தான். அடுத்த ஒரு மாதம் பார்வர்டு மெசேஜ்கள் வந்தன.
மூன்றாவது மாதம் …”நீங்கள் டயல் செய்த எண்ணைச் சரி பார்க்கவும்!” என்றது ஒரு பெண்ணின் பதிவொலி.

கொடுமை என்னவென்றால் மனோகர் இப்பொழுதெல்லாம் கவிதை எழுத ஆரம்பித்துவிட்டான். ஆரம்பத்தில் நீங்கள் சகித்துக்கொண்டு படிக்க நேர்ந்த கவிதை(?) அவன் எழுதியது தான். இதில் கலியுகன் என்று புனைப்பெயர் வேறு. இதெல்லாம் பத்திரிக்கைல வராது என்றால் முறைக்கிறான். இது சம்பந்தமாக ஒரு கதை கூட எழுதியிருக்கிறான்… படிக்கிறீர்களா?… நில்லுங்கள்….. ஓடாதீர்கள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *